மாலதி மைத்ரி தன்னெஞ்சறிய பொய்யுரைக்கிறார்!

நவம்பர் மாத வல்லினம் கேள்வி – பதில் பகுதியில் கவிஞர் மாலதி மைத்ரி அவர்கள் தனது பதிலொன்றில் இவ்வாறு கூறியிருந்தார்:

“ஷோபாசக்தி அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர். இலங்கையில் புலிகளால் தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றை திரித்துக் கொண்டிருப்பவர். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும் காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் இவர்களின் அரசியல் நிலைப்பாடு என்றால் இவர்களின் அரசியல் பிழைப்புவாத அரசியலாகத்தான் இருக்க முடியும். தமிழச்சி பிரச்சினையில் ஷோபாசக்தியின் புரட்சியாளர் வேடம் கலைந்துவிட்டது.”

மாலதி மைத்ரியின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் கடுமையாக மறுக்கின்றேன். அவரது வார்த்தைகள் எவ்வித உண்மைகளும் அரசியல் அடிப்படையுமற்றவை மட்டுமல்லமால் அவர் தன்னெஞ்சறிய உரைக்கும் கள்ளச் சொற்களவை.

எவ்வளவு எளிதாக அடிப்படையில் நான் ஈழ விடுதலைக்கு எதிரானவன் என அவர் தீர்ப்பிட்டுவிட்டார்! நான் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்த காலம், எனது செயற்பாடுகள், நான் இணைந்திருந்த இயக்கத்திற்குள் நடந்த பிரச்சினைகள் எல்லாம் மாலதி மைத்ரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான், நான்கு வருடங்களிற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் பெற்றெடுத்த ‘கண்ணீர்’ போராளியல்ல, ‘சோசலிஸ தமிழீழம்’ என்ற புலிகளின் அழைப்பைக் கேட்டு முப்பது வருடங்களிற்கு முன்பாக அவர்களோடு இணைந்த களப் போராளி.

நான் புலிகள் இயக்கத்திலிருந்து 1986 இறுதிப்பகுதியில் வெளியேறிய பின்பாக எனக்கு முன்னால் இருந்தது அரசியல் சூன்யம். அதன்பிறகு இந்திய அமைதிப்படையின் துரத்துதல், கொழும்பு, சிறை, தூர கிழக்கு ஆசிய நாடுகளில் தஞ்சம் என ஏழு வருடங்கள் அலைவுற்ற வாழ்வும் அரசியல் அஞ்ஞாதவாசமுமாகவே எனது நாட்கள் பயனற்றுக் கழிந்துபோயின. 1993ல் நான் பிரான்ஸுக்கு வந்ததன் பின்பாக ‘நான்காம் அகிலம்’ என்ற சர்வதேச ட்ராஸ்கியக் கட்சியினால் என்னுடைய இரண்டாவது அரசியல் வாழ்க்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அவர்களோடு செயற்பட்டேன். இந்தக் காலப்பகுதிதான் என்னுடைய கடந்தகால அரசியல் நம்பிக்கைகளையும் விசுவாசங்களையும் கோட்பாடுத் தளத்தில் கலைத்துப்போட்டது. 1998ல் சிற்றிதழ்களில் அரசியல் கட்டுரைகளும் கதைகளும் எழுதத் தொடங்கினேன். இலங்கை அரசை மட்டுமல்லாமல் புலிகளின் அரசியலையும் எதிர்த்து எழுதினேன். அதாவது புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிப் பன்னிரெண்டு வருடங்களுக்குப் பின்புதான் நான் புலிகளை விமர்சித்து செயற்படத் தொடங்கினேன். எனது புலி எதிர்ப்பு ஒரேநாளில் வந்ததல்ல. அது ஈழத்து அரசியலுடன் எனக்கிருந்த ஆழமான பிணைப்பாலும் ஓயாத தேடல்களாலும் அரசியல் உரையாடல்களாலும் வாசிப்பாலும் மெல்ல மெல்ல முகிழ்த்து வந்த ஒன்று.

நான் பயின்ற இடது அரசியற் கோட்பாடுகளும், எனது கடந்தகால புலிகள் இயக்கக் கசப்பான அனுபவங்களும், முக்கியமாக அப்பாவி மக்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் மாற்று அரசியல் கருத்துள்ளவர்களையும் இஸ்லாமியர்களையும் இடையறாது கொன்று குவிக்கும் கொடிய பயங்கரவாத இராணுவ நிறுவனமாகப் புலிகள் உருவெடுத்திருந்ததும், அவர்களது அதிதீவிர வலதுசாரியமும் என்னை அவர்களது விமர்சகனாகவும் மறுப்பாளனாகவும் மாற்றியது. “புலிகள் இயக்கத்திடம் ஒரு விடுதலை இயக்கத்திற்குரிய பண்புகள் கிடையாது, எந்த மக்களிற்கு விடுதலையைப் பெற்றுத்தருவதாகச் சொன்னோமோ அந்த மக்களையே ஆயுத முனையில் அரசியல் அடிமைகளாக நடத்தும் பிரபாகரன் இப்போது கொடூரமான யுத்தப்பிரபுவே தவிர விடுதலைப் போராளி கிடையாது” எனச் சிற்றிதழ்களில் மட்டுமல்லாமல் தமிழக வணிக இதழ்களிலும் பிறமொழிப் பத்திரிகைகளிலும் பகிரங்கமாகச் சொன்னேன். புலிகள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தைக்குச் செல்லவேண்டும், என்றெல்லாம் திரும்பத் திரும்ப எழுதினேன் (பார்க்க எனது தீராநதி நேர்காணல்: ‘இன்றெமக்கு வேண்டியது சமாதானமே’ – ஒக்டோபர் 2008). பாஸிசப் புலிகளிற்கு எதிரான எனது இத்தகைய செயற்பாடுகளை ஈழ விடுதலைக்கு எதிரானது என்று மாலதி நிறுவ எத்தனிப்பது கபட அரசியல்.

ஈழ மக்களிற்கான விடுதலை என்பதுதான் ஈழவிடுதலை. புலிகளின் நலன்கள் வேறு, ஈழமக்களின் நலன்கள் வேறு என்பதே எனது நிலைப்பாடு. தலைமையின் நலன்களுக்காகவும் தலைமையின் முட்டாள்தனமான நம்பிக்கைகளிற்காகவும் புலிகள் ஈழமக்களைப் பலியிட ஒருபோதும் தயங்கியதில்லை. இதற்குப் பெயரா ஈழவிடுதலை? ‘மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் ‘ எனக் கண்ணை மூடிக்கொண்டு வாயை மட்டும் அகலத் திறந்து கோஷம் போடுவதற்கு நானொன்றும் புலிகளின் புகழ் வெளிச்சத்தில் என்னை நிறுத்திக்கொள்ள முயலும் சொரணை கெட்ட எழுத்தாளன் கிடையாது . மாலதி மைத்ரியென்ன எவர் என் எழுத்துமீது தீண்டாமையைக் கடைப்பிடித்தாலும் நான் உண்மையை எழுதிக்கொண்டுதானிருப்பேன்.

துணுக்காய் வதைமுகாம், கந்தன் கருணைப் படுகொலை, யாழ்ப்பாணக் கட்டாய இடப்பெயர்வு, முஸ்லீம் மக்களைத் துரத்தியது, குழந்தைகளைத் துப்பாக்கி முனையில் இயக்கத்தில் இணைத்தது, முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சம் மனிதக் கேடயங்கள் என்பவை எல்லாம் ஒன்றும் கதையல்ல, புலிகள் வேறு மக்கள் வேறு என்பதற்கான துயரமான ஆனால் வலுவான வரலாற்றுச் சான்றுகள் இவை. “பிரபாகரன் தனது நம்பிக்கைகளுக்காகத் தனது உயிரை இழந்தார், ஆனால் இத்தனை ஆயிரம் உயிர்களையும் தன்னோடு சேர்த்து மரணக்குழிக்குள் வீழ்த்த அவருக்கு உரிமையில்லை” என முள்ளிவாய்கால் சாட்சியங்களுள் ஒருவரான நிலாந்தன் எழுதியது கல்வெட்டு.

புலிகளின் மீதுள்ள எதிர்ப்பால் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நான் சாய்ந்ததில்லை. புலிகளை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கும்போதும் நான் ஒருபோதுமே இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒற்றைச்சொல் எழுதியது கிடையாது. அவ்வாறான ஒரு சொல்லை மாலதி மைத்ரியோ அல்லது இன்னொருவரோ எனது பதினைந்து வருடகால தொடர் எழுத்துகளிலிருந்தோ செயற்பாடுகளிலிருந்தோ காட்டிவிடவும் முடியாது. இலங்கை அரசுக்கு எதிரான எனது எழுத்துச் செயற்பாடு என்பது வெறுமனே தமிழ்வழி இணையச் செயற்பாடு மட்டுமல்ல. எனது புனைகதைகள் வழியாகவும் நேர்காணல்கள் வழியாகவும் திரைப்படப் பங்களிப்புகள் மூலமாகவும் கருத்தரங்குகள் வழியாகவும் அனைத்துலக வாசகர்களிடமும் பார்வையாளர்களிடமும் நான் உரையாடுபவன். புலிகளை விமர்சித்தால் அது இலங்கை அரசின் ஆதரவு நிலையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருபவர்கள் அழுகிய மூளை உடையவர்களாக மட்டுமே இருக்க முடியும். எங்கள் தேசத்தில் ராஜினி திரணகமவும், செல்வியும், கோவிந்தனும், தில்லையும் தங்களது இறுதி நிமிடம் வரை புலிகளை எதிர்த்துக்கொண்டே புலிகளது கைகளால் கொலையுண்டார்கள். புலிகளை எதிர்த்ததற்காக அவர்களை ஈழ மக்களின் விடுதலைக்கு எதிரானவர்கள் என்பீர்களா என்ன!

இலங்கையில் புலிகளால் தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றை நான் திரித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் மாலதி. அவர் அறிவுநாணயமுள்ளவராக இருந்தால் அவ்வாறு எங்கே திரித்திருக்கிறேன் என்பதை அவர் ஆதாரத்துடன் வல்லினத்தில் நிறுவ வேண்டும். அது முடியாவிட்டால் தனது கருத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் ஆயுதம் தூக்குவதற்கு இருபது வருடங்களுக்கு முன்னமே எவ்வாறு ஆயுத வன்முறை தமிழர்கள்மீது இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதை நான் இந்தக் கட்டுரையில் விரிவான தரவுகளோடு எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்: http://www.shobasakthi.com/shobasakthi/?p=634

தமிழர்களின் தரப்பில்கூட புலிகளே ஆயுதப் போராட்டத்தை அல்லது ஆயுதக்கலாசாரத்தை தொடக்கி வைத்தவர்கள் என நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதைப் புலிகள் சார்பு வரலாற்றாசிரியர்களே செய்கிறார்கள். பிரபாகரனே ஆயுதப் போராட்டத்தை தொடக்கினார் என்ற ரீதியல் அவர்கள் வரலாற்றை திரிக்கிறார்கள் என்பதும் எனது ஆதங்கங்களிலொன்று.

நாங்கள் சொல்லாத பொய்க்கு எதிராக, “புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன” என்பது மாலதியின் கண்டுபிடிப்பு. புஸ்பராஜாவின் நூலை அடையாளம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட ஏற்படு செய்தவர் அ.மாரக்ஸ். அந்த நூலை எழுத்துப்பிழை திருத்தியதிலிருந்து “ஆய்வாளர்களுக்கெல்லாம் பயன்படப் போகிற முதன்மையான ஆவணம் இந்நூல்” என நூலில் குறிப்பை எழுதியவர் அ.மார்க்ஸ். அவரும் நானும் சேர்ந்துதான் புஸ்பராஜாவின் நூலுக்கு சென்னையில் சுயமரியாதை இயக்கத் தோழர்களின் உதவியுடன் விமர்சனக் கூட்டத்தை நடத்தினோம். புகலிடத்தில் புஸ்பராஜாவின் நூலுக்குப் பரவலாக எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த காலத்தில் நான் புஸ்பராஜாவின் நூலை முழுவதுமாக ஆதரித்து நின்று நீண்ட கட்டுரையை எழுதினேன். அது ‘அநிச்ச’ யில் வெளியானது. புஸ்பராணியின் நூலையும் எனக்கெதிராக மாலதி நிறுத்துவதுதான் இன்னும் வேடிக்கையானது. புஸ்பராணியின் நூலுக்கு நான்தான் பதிப்பாசிரியர். அதை நமது கருப்புப் பிரதிகள் பதிப்பகம்தான் வெளியிட்டது. இந்தத் தகவல்கள் எல்லாமே அந்த நூல்களிலேயே காணவும் கிடைக்கின்றன. ஆக, மாலதி அந்த நூல்களில் தரிசித்த உண்மையை வெளியே கொண்டுவர நானும் அ.மார்க்ஸும் புஸ்பராஜாவுக்கும் புஸ்பராணிக்கும் உறுதுணையாக இருந்திருக்கின்றோம். இதற்காக எங்களுக்கு நன்றி தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, அநியாயத்துக்குத் திட்டித் திகைப்பூட்டுகிறார் மாலதி.

காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடும் என்று மாலதி போன்ற ஒரு பொறுப்பான எழுத்தாளர் போகிறபோக்கில் ஒப்பிப்பதை என்னவென்பது. ஒரு குற்றச்சாட்டை வைக்கும்போது அதை ஆராய்ந்து ஆதாரபூர்வமாக வைக்க வேண்டாமா? புலிகளை பாஸிஸ்ட் என்று நான் சொன்னால் நான் சோ, சுப்பிரமணியசுவாமி வரிசையில் வந்துவிடுவேனா? நான் மட்டுமல்ல; சானல் 4, மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, நவிப்பிள்ளை, அய்.நா. அறிக்கை, பல்வேறு மனித உரிமைக் குழுக்கள், சர்வதேச ஊடகங்கள், ஈழத்தின் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் -கலைஞர்கள் எல்லோருமே புலிகளின் மனித உரிமை மீறல்களையும் கொலைகளையும் போர்க்குற்றங்களையும் பதிவு செய்துள்ளார்கள். அந்தக் குற்றங்கள் குறித்து விசாரணைகள் தேவையென இப்போதும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் எல்லோரையுமே சோ, சுப்பிரமணியசுவாமி வரிசையில் வைத்து பிழைப்புவாதிகள் எனப் பழிப்பாரா மாலதி?

மாலதி, இலங்கை அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிலதடவைகள் கலந்துகொண்டார் என்பதற்காக அவரை நான் பா.ஜ.க.வுடனும் இராமதாசுடனும் மன்னார்குடி மாபியா நடராசனுடனும் ஒப்பிட்டுச் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வாரா என்ன! என்னைப் பழித்து எழுதுவதால் புலம்பெயர்ந்த புலிகளிடமிருந்து பணம் கிடைக்கும் என்பதாலேயே மாலதி பிழைப்புக்காக இவ்வாறு எழுதுகிறார் என நானும் போகடிபோக்கில் சும்மா எழுதலாம். ஆனால் நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். ஆனால் மாலதி அத்தகையை அநீதியை எனக்கு இழைத்திருக்கின்றார்.

“முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும்…” என மாலதி சொல்வதற்கு அர்த்தமென்ன? ஏன் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகளின் பாஸிசம் குறித்துப் பேசினால் என்ன தவறு? நானென்ன பேசுவது, அதுதான் அவர்களோடு இறுதிநாள் வரையிலும் களத்தில் இருந்தவர்களே வாராவாரம் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொலைக்காட்சிகளிலும் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்கிறார்களே, ஒப்புதல் வாக்குமூலங்கள் அளிக்கிறார்களே!

மாலதி மைத்ரி ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். புலிகளின் கருத்தியல் என்பது எங்களுக்கு வெறுமனே கருத்தியல் மட்டுமல்ல. அந்தக் கருத்தியல் செயலாகமாறி எங்களது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று போட்டிருக்கின்றது. எங்களது மக்கள் மத்தியிலிருந்து சனநாயகக் கலாசாரத்தை முப்பது வருடங்கள் நீக்கி வைத்திருந்தது. எங்களது சகோதரர்களான முஸ்லீம்களையும் சிங்கள உழைக்கும் மக்களையும் எங்களது எதிரிகளாகக் கட்டமைத்தது. அனைத்து மாற்று அரசியற்செயற்பாடுகளிற்கும் தடைவிதித்து ‘ஏகபிரதிநிதித்துவம்’ எனச் சர்வாதிகாரமாக அந்தக் கருத்தியல் துப்பாக்கிச் சனியன்களின் பலத்தில் உச்சியில் வீற்றிருந்தது. அந்தப் பாஸிச அமைப்பு ஒழிந்தாலும் அந்தக் கருத்தியல் இன்னும் நம்மிடையே விட்டகுறை தொட்டகுறையாக எஞ்சியிருக்கின்றது. குறிப்பாக, புலம்பெயர் நாடுகளில் அந்தக் கருத்தியலை புலிகளின் பினாமி அமைப்புகள், ஊடகங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்றவை தாங்கி நிற்கின்றன. சென்ற வருடம்கூட பாரிஸில் ஒரு கொலை விழுந்தது.

ஹிட்லர் தான் அழிந்தார். ஆனால் அவரது சிந்தனை அழியாமல் அய்ரோப்பாவில் புதிய நாஸி இயக்கத்தை இன்னும் இயக்கி வருகின்றது. புலிகள் அமைப்பு ஒழிந்தாலும் அவர்கள் புதைக்காமல் விதைத்துவிட்டுப்போன பிற்போக்குக் கருத்தியலும் அவர்களது பாஸிசச் சிந்தனைகளும் எம்மிடையேயிருந்து வேரோடு அழியும்வரை நாங்கள் புலிகளின் பாஸிச அரசியலையும், அந்த அரசியலின் நீட்சியாக அவர்கள் எமது மக்களை வதைத்ததையும் ஓயாமல் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டவர்களாகயிருக்கின்றோம். ஈழத் தமிழ்ச் சமூகத்தில் மறுபடியும் புலிகளைப் போன்றதொரு பாஸிச சக்தி தலையெடுக்கவே கூடாது. இது எங்களுக்கு உணர்வு சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, எங்களது உயிர் சார்ந்த பிரச்சினை. எங்களது கருத்து – எழுத்துச் சுதந்திரம் சார்ந்த பிரச்சினை. எங்களது அடிப்படை மனிதவுரிமைகள் சார்ந்த பிரச்சினை. ‘மகிந்த சிந்தனை’ இல்லாமற் செய்யப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ அதேயளவிற்கு அவசியமானதே பிரபாகரன் சிந்தனையும் ஒழிக்கப்படுவது. எமது மக்களிடையே சனநாயகக் கலாசாரம் மீண்டும் மலர்வதற்கு இந்தச் சிந்தனைகளை அழித்தொழிப்பது அடிப்படை நிபந்தனையாகிவிடுகிறது.

என்னைக் கருத்துரீதியாக எதிர்கொள்ள முடியாத போது ‘தமிழச்சி பிரச்சினை’ என்று ஒரு பூச்சாண்டியைக் காட்டி என்னை அச்சுறுத்த சிலர் முயன்றதுண்டு. அண்மையில் கூட தமிழகத்தின் தலைசிறந்த வதந்தியாளர் கிஷோர் கே. சுவாமி இந்தப் பூச்சாண்டியைக் காட்டினார். இப்போது மாலதி மைத்ரியும்அதைச் செய்திருப்பது வருந்தத்தக்கது. தமிழின் முதன்மைக் கவிகளில் ஒருவரான அவர் கிசுகிசு கலாசாரத்திற்குள் வீழ்ந்திருப்பது இரக்கத்திற்குரியது.

அந்தப் பிரச்சினையில் எனது தரப்பை அப்போதே பொதுவில் வைத்து ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நான் மறுத்திருந்தேன். என்னுடைய வாக்குமூலம் சந்தேகத்திற்குரியது, தமிழச்சியின் வார்த்தைகளே சத்தியமானது என மாலதி நம்புவாரானால் அவருக்குச் சொல்ல ஒன்றிருக்கின்றது.

மாலதி மைத்ரி கனடாவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் (2008) கலந்துகொண்டிருந்தார். அந்தச் சந்திப்புக் குறித்து தமிழச்சி எழுதிய இரண்டு பதிவுகளில் அவர் இப்படி எழுதியிருந்தார்:

“தமிழ்நாட்டில் இருந்து கனடா சென்று பெண்கள் சந்திப்பில் கலந்து விட்டு பிரான்சுக்கு வருகிறார் மாலதி மைத்ரி. லட்சக்கணக்கில் செலவுகள் புரளும் பெண்கள் சந்திப்பு! இவர்களுக்கு செலவுக்கு யார் பொறுப்பாளியாகிறார்கள்? ஈழத்து மக்கள் சாவில் இன்று இந்திய இலக்கியம் புலியெதிர்ப்பு கூட்டத்துடன் கும்மாளம் போடுவது எங்கேயோ இடிக்கிறதே!பெண்கள் சந்திப்பு உறுப்பினர்களுக்கு பேச வக்கில்லையா? இதுதான் கொள்கை, கோட்பாடு, பொறச்சி, மண்ணாங்கட்டி, மயிரு என்றால் அந்த புரட்சியை ரூம் போட்டு நீங்கள் மட்டும் செய்து கொள்ளுங்கள். ஒட்டு மொத்த பெண்களுக்காகவும் பெண்ணுரிமை பேசுவதாக சொல்லிக் கொண்டு உங்களுடைய பு** அரிப்புகளை தீர்த்துக் கொள்ளாதீர்கள்.” (tvpravi.blogspot.fr – 13 Oct 2008)

“இதற்கு மேலும் இப்பெண்கள் சந்திப்பு நிகழ்வு தொடருவது மிக ஆபத்தானது. பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் “காட்சி அரசியலில் பெண்ணின் உடல்” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கப்படுகிறது. உள்ளாடைகள் தொங்கவிடப்படுகின்றது. ஆணுறையால் பேணர்கள் அலங்கரிக்கப்படுகின்றன. அறிக்கைகள் பல விடப்படுகின்றன. பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்தவர்ககள் இன்னும் வீடு போய் சேரவில்லை. இலக்கியச்சேவையில் இன்னும் நாடுநாடாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். செலவுகளுக்கு கணக்கு வழக்கு கேட்டுவிடக் கூடாது. பெண்ணியத்தின் இறுதி தீர்வாக யோனி கட்டுடைப்பில் இருக்கின்றது என்ற புரட்சி வாக்கியம் வெடித்துவிட்டது. தீவிரவாதத்தை இணையம் மூலம் ஊக்குவிக்கிறார்கள் பெண்கள் சந்திப்பு நடத்துபவர்கள்”. (tamilcircle.net – 02 Oct 2008)

என்மீது தமிழச்சி வைத்த குற்றச்சாட்டை மாலதி மைத்ரி அப்படியே ஏற்றுக்கொண்டு என்மீது குற்றம் சுமத்துவதுபோல, 27வது பெண்கள் சந்திப்புக் குறித்தும் மாலதி மைத்ரி குறித்தும் தமிழச்சி மேலே எழுதியிருப்பவற்றை சத்திய வார்த்தைகளாக மாலதி ஏற்றுக்கொள்ளத்தயாரா? “ஈழத்து மக்கள் சாவில் மாலதி மைத்ரி கும்மாளம் போடுகிறார் ” என யாராவது தமிழச்சியின் உளறலை சாட்சியாக வைத்து எழுதினால் மாலதி ஏற்றுக்கொள்வாரா? மாலதி பிரான்சுக்கு வந்திருக்கிறார் அவரது செலவுக்கு யார் பொறுப்பாளி என்றெல்லாம் தமிழச்சி எழுதுவதன் அபத்தம் மாலதிக்கே தெரிந்திருக்கும். (பிரான்ஸில், மாலதி மைத்ரி எனது வீட்டில் தங்கியிருந்த நாட்களிலேயே தமிழச்சி இந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தார். அப்போதும் நான் புலிகளின் தீவிரமான எதிர்ப்பாளனாகவே இருந்தேன். எனினும் அப்போது மாலதி மைத்ரி எனது எழுத்துகளைப் படிப்பவராகவும் எனது நண்பராகவும் நான் அவரைச் செய்த நேர்காணலைத் தனது தொகுப்பு நூலில் வெளியிடக் கூடியவராகவுமிருந்தார். என்மீது எழுத்துத் தீண்டாமையை அவர் கடைப்பிடிக்காத காலமது). 27வது பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழகப் பெண்கள் மீது தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய அரசைக்கோரி ஒரு புகார் மனுவைத் தயாரித்து அதைத் தனது இணையத்திலும் வெளியிட்டு மலிவான பரபரப்பையும் தமிழச்சி கிளப்பிவிட்டார்.

மாலதி எனது வலைப்பதிவான ‘சத்தியக் கடதாசி’க்கு வழங்கிய நேர்காணலைத் தொடர்ந்து, அதுகுறித்து தமிழச்சி மாலதி மீது அவதூறுகளை இணைய வெளிகளெங்கும் கொட்டி வைத்திருந்தார். இத்தகைய அவதூறுகளை அவர் மாலதி மைத்ரி முதல் மீனா கந்தசாமி வரை பல பெண்ணியச் செயற்பாட்டார்கள் மீது கூடை கூடையாகக் கொட்டியிருக்கிறார். ‘குடிகாரிகள்’, ‘கூட்டுக்கலவியாளர்கள்’ என அவர் ஏவாத வசையில்லை, கிளப்பாத வதந்தியில்லை.

இவ்வகையானதுதான் என்மீதான தமிழச்சியின் கற்பனைக் குற்றச்சாட்டும். அதையெல்லாம் ஓர் ஆதாரமாக வைத்துக்கொண்டு எனது வேடம் கலைந்துவிட்டதாக மாலதி தீர்ப்பிடுவது கயமைத்தனம்.

இந்த எதிர்வினையை, எனது வழமைக்கு மாறாக மிகவும் மென்மையான தொனியிலேயே எழுதியிருக்கின்றேன். மிகச் சிறந்த எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான மாலதி மைத்ரியை எக்காரணம் கொண்டும் தேவையில்லாமல் புண்படுத்திவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடனேயே ஒவ்வொரு சொற்களையும் கவனமாகக் கையாண்டுள்ளேன். அதையும் மீறி மாலதி மைத்ரி அவர்களது மனம் புண்படுமானால் அதற்கு ‘பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ என்பது மட்டுமே காரணமாயிருக்க முடியும்.

நன்றி, வணக்கம்.

1 comment for “மாலதி மைத்ரி தன்னெஞ்சறிய பொய்யுரைக்கிறார்!

  1. December 3, 2013 at 6:15 pm

    Excellent article sir…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...