பப்பிகள்

நாய் வளர்ப்பது பற்றி எங்கள் குடும்பத்தினர் யோசித்தது முதன் முதலாக செட்டிக்கம்பத்துக்கு வீடு மாற்றலாகி போனப்போதுதான். ஏற்கனவே இருந்த கம்பத்துவீடு பக்கத்து வீடுகளோடு ஒட்டி இருக்கும். உலக நடப்புகள் அனைத்தையுமே அவரவர் வீட்டில் இருந்தபடி கொஞ்சம் வேகமாகக் கத்தி பேசியே பகிர்ந்துகொள்ள வசதி இருந்தது. திட்டுவதென்றாலும் அப்படித்தான். நேரிடையாகச் சென்று வரிந்துகட்டி வருவதெல்லாம் அப்பகுதியில் குறைவுதான். இன்று ஒரு நாட்டில் இருந்தபடியே மற்றொரு நாட்டை ஏவுகணைகள் மூலம் தாக்க முடியும் என்கிறார்கள். அந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்ததே எங்கள் கம்பம்தான். வீட்டில் இருந்தபடியே திட்டித்தீர்க்கலாம். பாதுகாப்பும் கூட.

புதிதாக வந்த கம்பத்தில் அந்த வசதியெல்லாம் இல்லை. சுற்றிலும் பழமரங்கள் சூழ்ந்த பெரும் காடு. விசித்திரமான பறவைகளை காலை நேரங்களில் பார்க்கலாம். பழங்களைத் தின்ன வரும். பறவைகளைத் தின்ன பாம்புகள், உடும்புகள் வரும். வீட்டிலின் இடமும் வலமும் 50 மீட்டர் தொலைவில் சில வீடுகள் இருந்தன. ஆனால் நாம் எழுப்பும் குரல் காட்டு மரங்களைத் தாண்டி அங்குச் சென்று சேர்வது சாத்தியமாகாது. மனிதன் தனிமையில் வாழ்பவனல்ல. தனிமை அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்துடன் வாழ்வதையே பாதுகாப்பானதாக உணர்கிறான்.

அப்பா அப்போது சிங்கப்பூரில் வேலை செய்துக்கொண்டிருந்ததால் எங்கள் பாதுகாப்பு குறித்து கொஞ்சம் வருத்தப்படவே செய்தார். விடுமுறை முடிந்து சிங்கை செல்லும் முன் முடிந்தமட்டும் காடுகளை அழித்து திறந்த வெளியை ஏற்படுத்தினார். கடைசியாக எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என அவர் நம்பி, தன் நண்பர் மூலம் வீட்டில் மூன்று நாய்க்குட்டிகளை விட்டபோதுதான் நான் அவற்றை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

அதற்கு முன் நான் நாய்க்குட்டியைத் தொட்டதில்லை. நாய்கள் கடிக்கும் என சொல்லப்பட்டிருந்ததால் கம்பத்தில் ஓரடி தள்ளியே நடப்பேன். கம்பத்து சாலைகளில் நாய்கள் ஏராளமாகப் படுத்துக்கிடக்கும். அவற்றைக் கடந்து செல்லும் போது படுத்தபடியே ‘வள்’ என மெல்லிய குரலெழுப்பும். பின்னர் ‘உனக்கு இது போதும்’ என்பதுபோல முகத்தைத் திருப்பி படுத்துக்கொள்ளும். நாய்கள் மத்தியில் என் பெயர் பழுதுப்பட்டிருந்தது போல. ஆனால் ஒரே நேரத்தில் மூன்று நாய்க்குட்டி என்பதெல்லாம் நான் கனவிலும் நினைக்காதது. ஒன்று வெள்ளை நிறத்தில் இருந்தது. மற்றது உடல் வெள்ளையாகவும் கண்பகுதி மட்டும் சாக்லெட் நிறத்திலும் இருந்தது. மூன்றாவது ஆரஞ்சு நிறத்தில் மொட்டை வால். நெற்றிக்கு நடுவில் நாமம் போல ஒரு வெள்ளைக் கோடு இருக்கும். இனி அவற்றுக்குப் பெயர் வைக்க வேண்டும் என முடிவானபோது அக்காதான் பெயர்களை முடிவெடுத்தார். பப்பி, குட்டி, டைகர் என அவற்றுக்கு முறையே பெயரிடப்பட்டது.
அம்மாதான் எப்போதும் அவற்றுக்குப் பால் கலக்கி வைப்பார். வயிற் ரொம்பியவுடன் அவை படுத்துவிடும். பின்னர் விளையாடும். ஆனால் எப்போதும் அவற்றின் மேல் ஒரு பால் மணம் வீசிக்கொண்டே இருக்கும். மூன்று நாய்களில் ‘குட்டி’ பெயருக்கு ஏற்றது போல மிக சாது. விளையாட்டு புத்தியுடனே சுற்றும். டைகர் கொஞ்சம் மூர்க்கமானவன். குரைக்கத்தொடங்கினால் நிறுத்தமாட்டான். பப்பி அப்படியல்ல. அது குரைப்பது குறைவு. ஆனால் ஆபத்தென வந்துவிட்டால் அவன்தான் முதலில் ஆஜராவான்.

புதிய கம்பத்தில் ஆபத்துகள் நிறைய இருக்கவே செய்தன. மாதம் ஒருமுறையாவது ஏதாவது ஒரு மலைப்பாம்பு வீட்டில் முன் இளைப்பாறும். காலை நேரங்களில் கீரிப்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் சாலையில் குறுக்கிடும். செங்கல்லில் உள்ள துளையில் கூட சின்னஞ்சிறிய பாம்புகள் சுருண்டு கிடைக்கும். ஓரிரு முறை கருநாகங்களும் மலாய் மலைப்பாம்பும் கூட வந்ததுண்டு. மிக அரிதாக லாலான் புலி கண்ணில் தட்டுப்படும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக திருடர்களின் தொல்லை அங்கு அதிகம் இருந்தது. இந்த பயங்கள் இல்லாமல் இரவு நிம்மதியாகத் தூங்க நாய்கள் உதவின.

நாய்கள் சுயமாக வளர்ந்தனவே தவிர எப்படி வளர்க்க வேண்டும் என எங்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. முறையாகப் பராமரிக்காமல் போனால், நாய்களுக்கு ஈரலில் எளிதாக நோய் தாக்கும். இருதயத்தில் புழு வைக்கும் என யாரும் சொல்லித்தரவில்லை. ஒரு வருடம் நிறைவடைவதற்குள்ளாகவே குட்டி இறந்தே போனான். எங்களுக்கு என்ன காரணம் என தெரியவில்லை. முதலில் குட்டி சாப்பிடாமல் சோர்ந்துபோய் படுத்திருந்தது. உடலில் துற்வாடை வீசிக்கொண்டே இருந்தது. காலில் ஒரு ஆழமான காயம் . மிருக மருத்துவர் வந்து பார்த்து தேராது என்பது போல சொன்னார். ஏதோ ஒரு மருந்தை குட்டியின் காயம்பட்ட காலில் ஊற்றியவுடன் உள்ளிருந்து புழுக்கள் குவிந்துவந்து விழுந்தன. குட்டி வலியால் துடித்தான். சில நாள்களில் இறந்தான். அவன் இறந்து சரியாக இரண்டு மாதம் முடிவதற்குள் டைகரும் இறந்தான். அவன் வாயில் நுரை தள்ளியிருந்தது. விஷ ஜந்து ஏதும் தாக்கியிருக்கும் என நாங்களே முடிவெடுத்துக்கொண்டோம். எனக்குப் பெரிதாக வருத்தமெல்லாம் இல்லை. அவற்றைக் குளிப்பாட்டும் வேலை குறைந்தது என்று மட்டுமே அப்போது நினைத்துக்கொண்டேன்.

பப்பி தனியனானது. ஏற்கனவே அமைதி காக்கும் அது இன்னும் சோர்ந்திருந்தது. அதனிடம் விளையாட நண்பர்கள் இல்லை. அப்போதுதான் நான் பப்பியிடம் நெருங்கி செல்ல ஆரம்பித்தேன். நான் நாயிடம் நெருங்கிச் சென்றது அதுவே முதன்முறை என நினைக்கிறேன். அதனுடன் விளையாடத் தொடங்கினேன். அது என் பேச்சைக் கேட்டது. நாய்கள் மனிதனின் பேச்சைக் கேட்கும் என அப்போதுதான் புரிந்தது. ஆனால் பப்பி மூர்க்கமானால் அதன் பேச்சை அதுவே கேட்காது. குறிப்பாக தெருநாய்களிடம் சண்டையிடும் போது அதை தடுக்க வாலி நிறைய தண்ணீரைக் கொண்டு ஊற்ற வேண்டும். அந்த அதிர்ச்சி சண்டையை விலக்கும். எப்படியும் கடியைப் பெற்றோ கொடுத்தோ வந்து சேரும்.

பப்பியும் நோய்க்கண்டுதான் இறந்தது . ஒரு விளையாட்டுப் பொருள் காணாமல் போன கவலையுடன் மட்டும்தான் என்னால் அவன் மரணத்தை எதிர்க்கொள்ள முடிந்தது. வீட்டுக்கு உடனடியாக நாய் தேவைப்பட்டது. ஏற்கனவே மூன்று நாய்க்குட்டிகளைக் கொடுத்த அப்பாவின் நண்பர் இம்முறை ஒரு பொசு பொசு நாயைக் கொடுத்தார். சாம்பலும் பழுப்பும் கலந்த நாய் அது. முகத்தில் ஒரு குழந்தைதனம் இருக்கும். யார் வந்தாலும் அதற்கு நண்பர்களாகிவிடுவர். நான் அருகில் சென்றால் மல்லாக்கா படுத்து அதன் வயிற்றைத் தடவச் சொல்லும். அதிகம் குறைக்காது. பாம்பு கூட அதற்கு விளையாட்டு தோழன்தான். முன்னங்கால்களை தரையோடு தரையாக்கி பின்னங்கால்கள் இரண்டையும் தூக்கியபடி போகவும் விடாமல் இருக்கவும் விடாமல் விளையாட அழைத்தே பாம்பை டென்ஷனாக்கிவிடும். இப்படிப்பட்ட ஒரு நாய் வீட்டில் இருப்பதால் எந்தவிட பயனும் இல்லை என எங்கள் எல்லோருக்கும் தெரிந்தாலும் அதன் துருதுருப்பு அத்தனை எளிதாக அதை வெறுக்க வைக்கவில்லை. எல்லோருக்கும் அது ஒரு செல்லப்பிள்ளையானது. செல்லப்பிள்ளைகள் யாரையும் மிரட்டுவதில்லை. காலையில் கண்விழித்தது தொடங்கி அதி உற்சாகாமாக அவர்களால் விளையாட மட்டுமே முடியும். எவ்வளவு கொஞ்சினாலும் கொஞ்சம் கூட சலித்துப்போகாமல் இன்னும் இன்னுன் என ஏற்றுக்கொள்ளவே முடியும். அவன் செல்லப்பிள்ளைதான். அவனால் அன்பை தரவும் பெறவும் மட்டுமே முடிந்திருந்தது. யாரையும் மிரட்ட அவன் தயாரில்லை.

பொசு பொசுவென்றிருந்த அதற்கு நாங்கள் பப்பி எனதான் பெயரிட்டோம். பப்பியின் முடி அடர்த்தி என்பதால் அதிகம் உன்னிகள் மொய்க்கத்தொடங்கின. விடுமுறைக்கு வந்திருந்த அப்பா அதற்கு ஒரு உபயம் கண்டுப்பிடித்தார். பேனை விரட்டும் ஒரு திரவத்தை பப்பியின் மீது தெளித்தார். வித்தியாசமான ஒரு திரவம் தன் மீது தெளிக்கப்பட்டதால் பப்பி பயந்து ஓடியது. நாங்கள் புக முடியாத ஒரு சந்தினுள் சென்று மறைந்து கொண்டது. திரவம் தெளிக்கப்பட்ட சில நிமிடங்களில் அதை குளிப்பாட்ட வேண்டும் என எவ்வளவு முயன்றும் அது எங்கள் வசம் வரவில்லை. நாங்களும் அது குறித்து மறந்து போனோம். ஆனால் அங்கிருந்துதான் அதன் அவலம் தொடங்கியது. பொசு பொசு வென இருந்த முடி கொட்டி பப்பி நிர்வாணமாக எங்கள் முன் வந்து நின்றது.கண்ணில் மட்டும் அதே குழந்தைதனம். முடி இல்லாத அதன் உடலில் சிரங்கு பிடித்தது. உடல் முழுவதும் புண். கொஞ்ச நாள்களில் அது தெருநாயாகி தெருவிலேயே இறந்தும் போனது.
நோய் வந்தால் வைத்தியம் பார்க்கவே ஒரு வெள்ளி அரசு கிளினிக்குகளுக்கு போகும் எங்களால் நாய்க்கான நோயைத் தீர்க்க மருத்துவர்களை நாட பணம் இல்லை. எங்கள் இயலாமயை நொந்துகொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. நிலை சமாதானம் ஆனப்பின் அப்பாவின் நண்பர் மூன்றாவது முறையாக ஒரு நாயைக் கொண்டு வந்தார். கருப்பு நிறத்தில் மொட்டைவாலுடன் இருந்தது. அம்மாவுக்கு கறுப்பு வண்ண நாய் பிடிக்கவில்லை. ஏதோ இருக்கட்டும் என விட்டுவிட்டார்.

அக்கா பெயரை மாற்றலாம் என்றார். பப்பி என்ற பெயர் அதிஷ்டம் இல்லை என்றார். நான் பப்பியிலேயே உறுதியாக நின்றேன். வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள்களிலேயே பப்பி சூழலைப் புரிந்துகொண்டு இயங்கியது. வீட்டின் முன் இருந்த நிலத்தில் நாங்கள் நட்டு வைத்திருந்த பயிர்களை மேய மாடு , ஆடுகள் வரும்போது அவற்றை மிகத்திறமையாக விரட்டிவிடும் ஆற்றலைப் பப்பி பெற்றிருந்தது. அது ஓடும் விதம் ஆச்சரியமானது. இரண்டு பின்னங்கால்களை முன்னங்கால் நடுவில் விட்டு ஒரு தள்ளு தள்ளும். அந்த வேகத்தில் ஒரே பாய்ச்சல். உயரத்தில் சற்று குறைச்சல் இருந்தாலும் அதன் வேகத்தைப் பார்த்தால் யாரும் கொஞ்சம் தயங்கியே நிர்ப்பார்கள்.

பப்பி எனக்கு மிக நெருக்கமானவன் ஆனான். என்னுடன் ‘அச்சிக்கா’ விளையாடுவான். நான் எங்கு சென்று ஒளிந்தாலும் சரியாகக் கண்டுப்பிடித்துவிடுவான். நான் சென்று ஒளிந்து குரல் எழுப்பும் வரை ஆர்வத்துடன் காத்திருப்பான். பப்பியைக் கட்டிப்போட வேண்டியதில்லை. அதை அழைத்துக்கொண்டு காடு மேடெல்லாம் சுற்றினாலும் ஒரு நிழல் போலவே பின்னால் வருவான். அவனுக்கென்று தனியான ஆசைகள் இருந்ததில்லை. எனதாசைதான் அவனதும். பயணம் தோறும் அடையாளத்துக்காக மூத்திரம் பெய்துவைப்பான். சோர்ந்துபோய் நான் அமரும் மரநிழல்களில் அவனும் இளைப்பாருவான். காலடியிலேயே கிடப்பான். அவனது உடலில் ஏதாவது ஒரு பாகம் என் உடலில் உரசியிருப்பதை உறுதி செய்துக்கொள்வான்.

பப்பிக்கு நான் பேசுவதெல்லாம் புரிந்தது. எனது உணர்வுகள் புரிந்தது. நாக்கை நீட்டி கேட்டுக்கொண்டே இருப்பான். எனது சோகங்களை அவன் நாக்கின் வழி உள்வாங்கிக்கொள்கிறானோ எனத்தோன்றும். அவன் கருப்பாக இருந்ததால்தான் நிழலாகிவிட்டானோ என்னவோ. நிழலின் வண்ணமும் கருப்புதானே.
கெடாவிலிருந்து கோலாலம்பூருக்கு வீடு மாற்றலாகி வந்தபோது பப்பியையும் லாரியில் ஏற்றி அழைத்துவந்தோம். புதிய இடம் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது. குரைத்துக்கொண்டே இருந்தான். கம்பத்தில் மிகப்பெரிய வெளியில் ஓடித்திரிந்தவனுக்கு அவ்விடம் அசூயை உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அவன் ஓயாத குரைப்பே அவனுக்குப் பகையானது. பொதுவாகவே மலாய்க்காரர்களுக்கு (இஸ்லாம் மதத்தினருக்கு) நாய்களைப் பிடிக்காது. அதை தொடுவதும் அதன் எச்சில் மேலே படுவதும் ‘ஹராம்’ என்பார்கள். அதிகம் மலாய்க்காரர்கள் வாழும் அந்த குடியிருப்பில் பப்பியின் குரல் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. நஞ்சு வைத்த உணவு யாரோ ஒரு குடியிருப்புவாசியால் அவனுக்கு வழங்கப்பட்டு , வந்த ஒரு வாரத்திற்குள்ளாக இறந்தான்.

முடிந்தது.

இனி நாய் வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது வனமல்ல. அப்பாவும் இப்போது உடன்தான் இருக்கிறார் என்பதால் இனி நாய் வளர்க்க வேண்டாம் என முடிவெடுத்தோம்.நாய் வளர்ப்பது கோலாலம்பூரில் கௌரவம் , அல்லது தகுதியைக் காட்டும் ஒன்றாக இருந்தது. தனது குழந்தைகளிடம் கூட நேரம் ஒதுக்க முடியாத பரபரப்பில் வாழ்பவர்கள் கூட விலை உயர்ந்த நாய்களை வீட்டின் முன் கட்டிப்போட்டு வைத்திருப்பர். அதுபோன்ற வெட்டி கௌரவம் இல்லாமல் நிச்சயம் ஒரு தெரு நாயை எடுத்துவந்து வளர்க்க வேண்டும் என்றே நான் திட்டமிட்டிருந்தேன். அதோடு ஒரு நாயை பராமரிக்கும் அளவுக்காவது வருமானம் வரும்போது மட்டுமே அதை வளர்க்க வேண்டும் என காலம் தாழ்த்தினேன். கோலாலம்பூர் வந்த பிறகு ஆசிரியர் பயிற்சி கல்லூரி, புதிய பள்ளி புதிய சூழல் என காலம் தவளையாகத் தாவியது.

ஆறாண்டுகளுக்குப் பிறகு ஒரு நண்பர் அவர் வேலை செய்யும் தொழிற்சாலையில் ஒரு நாய் குட்டிகளை ஈன்றிருப்பதாகவும் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம் என்றார். குறிப்பாக பழுப்பு நிறத்தில் உள்ள குட்டி மிக அழகந்து என்றார். எதற்கும் பார்ப்போமே என்று சென்றபோது மூன்று குட்டிகள் இருந்தன. அதில் பழுப்பு நிறத்தில் இருந்த குட்டி என்னை அதிகம் கவரவே அதை தூக்குவதற்காக அருகில் சென்றேன். அது பயந்துகொண்டு வேகமாக ஒரு பலகையில் தடுப்புக்குள் சென்று மறைந்துகொண்டது. எவ்வளவு கையைவிட்டு துலாவியும் அகப்படவில்லை. அப்போதுதான் தன் சகோதரனைக் காப்பாற்ற அதே ஈடுள்ள கறுப்புக் குட்டி ஒன்று தன் மழலைக் குரலில் குரைத்தபடி என்னை நோக்கி வந்தது. கால்களைப் பரப்பி என் முன் நின்றது. நான் இடுப்பில் கைவத்து அதை முறைத்தேன். என் முகத்தை அன்னாந்து பார்த்து மீண்டும் இரு முறை மழைலை குரலில் குரைத்தது.

நான் அருகில் சென்ற போதும் குறைப்பதை நிறுத்தவில்லை. சரியாக 10 செ.மீட்டர் உயரம் மட்டுமே இருக்கும். கைகளில் தூக்கினேன். உன்னி. உறுமியது. கறுப்புக்குட்டியின் அசாத்திய துணிவு ஈர்த்தது. காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். மீண்டும் அது ‘பப்பி’ என அழைக்கப்பட்டது. ஒரு நாயை பராமரிக்கும் முறையை அதனிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறேன். பப்பி இப்போது வளர்ந்து இளைஞனாகிவிட்டான். அது வளரும் போதுதான் அதன் தகப்பன் ‘டாபர் மேன்’ வகை என தெரிந்தது. தலித் பெண்களை மேட்டுக்குடி இளைஞர்கள் வன்புணர்ச்சி செய்வது போல, சாதாரணம் தெரு நாயான பப்பியின் அம்மாவையும் டாபர் மேன் செய்திருக்க வேண்டும். யாரும் நெருங்க முடியாத உடல்வாகு அவனுக்கு. அவன் அப்பாவின் உடல். ஆனால் என்னிடம் குழந்தையாகிவிடுகிறான்.

வருடம்தோறும் ஊசி போடுவது தொடங்கி, காதுகளைத் தூய்மை படுத்துவது , பொறுத்தமான உணவைக் கொடுப்பது, நடை செல்வது என அவன் மேல் பலவேலைகளுக்கு நடுவில் கவனம் சென்றுக்கொண்டுதான் இருக்கிறது.

விலங்குகளில் நுட்பமான உணர்வை அவைகளிடம் பழகும் போதே புரிந்துகொள்ள முடியும். அவை எப்போது தன் அன்புக்குறியவருக்காக ஏங்கியே இருக்கின்றன. பல சமயங்களில் பப்பி என் முகத்தைப் பார்த்தப் பின்புதான் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். அது வரை வாசலையே பார்த்தபடி காத்திருக்கும். அது என் மீது அன்பு செலுத்துவதற்கு ஈடான ஒன்றையும் நான் இதுவரை செய்ததில்லை. கறுப்பு நாய்கள் மனிதனின் நிழலாகிவிடுகின்றன. அவை நமது அசைவுக்கு ஏற்பவே இயங்குகின்றன.

நாய்களில் ஆயுள் குறைவுதான். நன்றாகப் பராமரித்தால் 15 ஆண்டுவரை கூட உயிர் வாழும் என்கிறார்கள். ஆனால் இதெல்லாம் தெரிந்துதான் மனிதன் அதன் மீது அதிக அன்பு வைக்கிறான். நமது அன்பிற்குறியவர்களுக்கு, நமக்கு முன்பே நிகழப்போகும் திட்டவட்டமாக மரணத்தை மறப்பதால் மட்டுமே உற்சாகமான உறவுகள் சாத்தியப்படுகின்றன.

2 comments for “பப்பிகள்

  1. ஸ்ரீவிஜி
    December 2, 2013 at 4:05 pm

    கட்டுரையை ஆரம்பிக்கின்றபோதே, அதில் நுழைந்துவிடவேண்டும் என்று ஆவலைத்தூண்டிய அந்த நகைச்சுவையான அண்டைவீட்டு நிலவரம், பின்பு தொடரும் சுவாரஸ்யம்…. அப்பா இருந்ததால் நாய் தேவையில்லை என்கிற சிந்தனைச்சிதறலில் நகர்ந்து, பழைய வாழ்க்கைமுறையை கண்முன்னே நிறுத்தி, வளர்ப்புப்பிராணிகளைப் பாதுகாக்கின்ற பொறுப்பினை மனதில் நுழைத்த மண்மனங்கமழும் ஓர் நல்ல பதிவு. லேசாக அரசியல் வாடை வீசுகிறது.. நாய்களின் மீது அடிக்கின்ற வாடைதான் அது…!!! என் புரிதல் சரியா என்று தெரியவில்லை.

  2. Thavarajah Krishnamoorthy
    April 21, 2018 at 6:28 am

    நன்றியுள்ள நண்பனான நாயின் அனுபவம் எழுத்தில் அழகாக விரிந்திருக்கின்றது. மலேசிய கிராம வாழ்வை ஓரளவேனும் உங்கள் பதிவில் உணர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. எழுத்து நடை அபாரம் .வாழ்த்துக்கள்

Leave a Reply to Thavarajah Krishnamoorthy Cancel reply