மாலதி மைத்ரிக்கு லீனா மணிமேகலையின் எதிர்வினை

leenaநவம்பர் மாத வல்லினம் கேள்வி – பதில் பகுதியில் கவிஞர் மாலதி மைத்ரி அவர்கள் தனது  கேள்வி பதில் பகுதியில் இவ்வாறு கூறியிருந்தார்:

கேள்வி :சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள்?

– கவிதாயினி, தமிழ்நாடு

லீனா மணிமேகலையின் பெருபான்மையான கவிதைகள் பெண்ணுடலைக் கொண்டாடும் கவிதைகளாக இயங்குகின்றன. புனித பிம்பங்களைக் கட்டவிழ்

ப்பு செய்கிறேன் என முற்போக்கு மார்க்ஸிய புனிதர்களைக் கட்டவிழிப்பு செய்தது போல் முதலாளித்துவ புனித மூலவர்களையும் கட்டவிழ்ப்பு செய்திருக்க வேண்டும். டாடா போன்ற பரமாத்மாக்களையும் கோடம்பாக்கத்து கடவுள்களையும் கட்டவிழிப்பு செய்யாமல் இருப்பது இவரின் படைப்பு அறம்.

மாலதி மைத்ரி எனது கவிதைகளைக் குறித்து திருவாய் மலர்ந்தருளியுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. லீனா மணிமேகலை கையழுத்திட்டால், கூடங்குளப் பிரச்சினை குறித்தான படைப்பாளர்களின் அறிக்கையில் கையெழுத்திட மாட்டேன். லீனா மணிமேகலையின் கவிதைகள் சேர்த்தால் எனது கவிதைகளை மலையாளத் தொகுப்பிற்கு தர மாட்டேன். லீனா மணிமேகலை பங்கு கொண்டால், ஆவணப்படத்திற்கு பேட்டி தர மாட்டேன். லீனா மணிமேகலை கவிதை வாசித்தால், நான் கவியரங்கத்திற்கு வர மாட்டேன் என்பது போன்ற அடாவடி அல்லது குழாயடி அரசியலில் இருந்து கொஞ்சம் நெகிழ்ந்து கருத்து சொல்லியிருப்பதில் ஆச்சர்யமே! ஆனால் எனது கவிதைகள் எவைக் குறித்து பேசவில்லை என மாலதி கண்டுபிடிக்கிறாரோ, அவைகளின் மீது அக்கறை கொண்ட கவிதைச் செயலை மாலதி மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் பெரும்பகுதியை கட்டவிழ்க்கும்போது, மாலதி போன்றவர்களும் கட்டவிழ்க்க எதையாவது விட்டுவைக்க வேண்டும் தானே என்றும் கூட பரிந்துரைக்க மாட்டேன். ஏனெனில் அல்லி அரசாணைகளில் எனக்கு சுவாரஸ்யம் இருப்பதில்லை

மேலும், எனக்கு கட்டவிழ்ப்புகளைப் பற்றிய அறிவுரைகளைக் கூறுவதற்குமுன், எனது படைப்பு அறத்தைப் பதம் பார்ப்பதற்குமுன், மாலதி மைத்ரி தனது கண்ணாடி கூண்டை சுற்றிப் பார்த்துக்கொள்வது நல்லது. மாலதி மைத்ரி பணி புரிந்த என்.ஜி. ஓக்களின் விவரப்பட்டியல் தெரிந்தது தான். என்.ஜி ஓக்கள் தரும் பணத்திலும் காந்தி தான் சிரிக்கிறார். டாட்டாவின் என்.ஜி.ஓ தரும் பணத்திலும் காந்திதான் சிரிக்கிறார். அவர் காந்தி மட்டும் எப்படி புனிதமாகிறார் என்று விளக்கினால் நல்லது.

”காலச்சுவடு எனது கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகிறது. நான் காலச்சுவடு மூலமாகவே அறிய வருகிறேன். இத்தொகுப்பை இந்த இலக்கிய நிறுவனமே வெளியிடுவதில் மகிழ்கிறேன்”

என்பதாக சங்கராபரணியின் முன்னுரையில் மாலதி மைத்ரி குறிப்பிடுகிறார். மாலதி பேசும் பெண்ணுரிமை, தலித் விடுதலை, ஈழத்தமிழர் பிரச்சினை, முஸ்லிம் பிரச்சினை எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கும்  தினமலர்/ஸ்ரீராம் சிட்ஸ் ஸ்பான்ஸர் கண்ணனின் மூலம் அறிய வருபவர் மாலதி மைத்ரி என்றாலும், நான் அவரை நிராகரிக்கப் போவதில்லை. ஏனெனில் எனக்குத் தீண்டாமையில் உடன்பாடில்லை.

கோடம்பாக்கத்தில் நான் வேலைசெய்யாமல் விட்டு பல வருடங்களாகின்றன. ஆனால் நமது சக தோழிகள் குட்டி ரேவதி, பிரேமா ரேவதி பிரியா தம்பி, சந்திரா போன்றவர்கள் இப்போதும் கோடம்பாக்கத்திற்குள் தான் இருக்கிறார்கள். அதற்காக அதை வைத்தா அவர்களை மதிப்பிடுவது. நான் கோடம்பாக்கத்து கடவுள்களை நிந்திப்பதால்தான் இதுவரை பன்னிரெண்டு சிறியதும் பெரியதுமாக மாற்றுத் திரைப்படங்களை செய்திருக்கிறேன். டாட்டா மட்டுமல்ல சன் டிவி, ஸ்டார் டிவி, ஜீ டிவி, என்று எல்லா முதலாளிகளிடமும் வேலை பார்த்திருக்கிறேன் . அது யாரிடமும் பிச்சை கேட்காமல் , திருடாமல் பொருளாதார ரீதியாக என் சொந்தக்காலில் நிற்பதற்கான என் பாடுகள். அதைக் கேள்வி கேட்க மூலதனம் எழுதிய கார்ல் மார்க்சுக்கே உரிமையில்லை. ஏனெனில் நான் பெறுவது கூலி, உபரியல்ல.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...