எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கருத்துகள்

இலக்கியம் புனிதங்களை உடைக்கலாமா?

இருப்பதை மாற்றுவது (change the status quo) என்பதும் இலக்கியத்தின் நோக்கங்களில் ஒன்றுதான் என்பதால் விமர்சனமே தவறாகாது. ஆனால் இலக்கியம் என்பது கருத்து மட்டுமல்ல, மொழியும்தான். பண்பட்ட மொழியைப் புறக்கணிக்கும் எதுவும் இலக்கியமாகிவிடாது. இலக்கியம் என்பது வக்கரங்களுக்கான வடிகால் அல்ல. அது மாற்றத்திற்கான போர் வாள்.

மாலன்

———————–

மதம், புனிதம், கலாச்சர கற்பிதம் இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்ததில்லை. சர்ச்சைக்குரிய இக்கதையை நான் வாசிக்கவில்லை. இருந்தாலும், படைப்பிலக்கியத்திலும் இக்கலாச்சார காவலர்கள் தணிக்கை செய்ய நினைப்பது எரிச்சலையே தருகிறது.

லிவிங் ஸ்மைல் வித்யா

———————–

மாற்றுச்சிந்தனைக்குத் தண்டனையா?

வல்லினம்! தற்போதைய அனல் பறக்கும் விவாதம். நேரம் கிடைத்தால், அல்லது அரசியல் கட்டுரைகளுக்கு வல்லினத்தை அலசியுள்ளேன். தற்போதைய சர்ச்சைகூறிய கட்டுரையை, தோழர் இளங்கோவின் மின்னஞ்சல் வழி படித்தேன். கலாச்சாரத்திற்கும் ஏதர்த்திற்கும் இடையில் ஒரு சர்ச்சை! படித்தவுடன், பள்ளி பருவமும், இயக்குனர் வேலு பிரபாகரனின் “காதல் அரங்கம்” திரைபடமும் தான் நினைவிற்க்கு வந்தது. ஆபாசத்திற்கும் பெண்ணின் உடலமைப்பைப் பற்றி வெளிபடையாக அவருக்கே உரிய பாணியில் சொல்லிருந்தார். அந்த படத்தை எத்தனை நண்பர்கள் பார்த்தீர்கள்? குடும்பத்தோடு? பள்ளி பருவத்தில், ஆசிரியர்களின் காதல் லீலையை நுலாகத்தில் பார்த்த நினைவுகள் மீண்டும் மனதில் தற்போது…,இந்த சர்ச்சைக்கு எனது தனிப்பட்ட கருத்து, sex education விவாதிக்கப்பட வேண்டியக் காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். வல்லினத்தில் எத்தனையோ நல்ல கட்டுரைகள் வந்துள்ளன, நேர்காணல்கள் உள்ளன, அவற்றைப் பற்றி நாம், (என்னையும் சேர்த்து) பேசியது இல்லை! சில விஷயங்கள் பார்க்கின்றப் பொழுது, இங்கு எழுத்தாளர்களிடம் EGO தென்படுகிறது! சில அமைப்புகளில் காணப்படும் juniar/ seniar இங்கும் தெரிகிறது. தாயாஜியின் எழுத்து ஆபாசம் இருக்கும் பட்சத்தில் வல்லினம் குழுவை சந்தித்து கருத்துக்களைப் பறிமாறி இருக்கலாம்! பிரச்சனை தற்பொது எங்கோ போய் கொண்டிருகிறது. பணி நிறுத்தம், ஒரு பழி வாங்கும் படலம்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

வள்ளுவன் சொன்னது! தூக்கு தண்டனை கைதிக்கும், குரல் கூடும் காலக்கட்டதில், மாற்று சிந்தனையை ஏற்றுகொள்ளவிட்டாலும், தவறை உணர்த்துங்கள்.

நாகேன்

———————–

சில கேள்விகள்

தயாஜியின் சிறுகதையை முழுமையாகப் படித்தேன். இதுவரை வல்லினம் தரப்பிலிருந்து கூறப்பட்டுக்கொண்டிருக்கும் விளக்கங்களையும் அதற்கான சான்றுகளையும்கூட படித்தேன். அதற்காக எழுந்த எதிர்வினைகளயும்கூட முழுமையாகப் படித்தேன். இலக்கிய விமர்சனம் இலக்கியப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும் என்பது என் கருத்து. இப்போது என்னுள் எழுந்திருக்கும் சில கேள்விகள்:

1. தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று கூறும்போது இப்போது பின்பற்றப்படும் கலாச்சார ஒழுங்கின் தொடக்கம் எது? அப்படியே இதுதான் கலாச்சார மற்றும் பண்பாட்டு மீறல் என்றால் பண்டை இலக்கியத்தில் இதைவிட மோசமான ஒழுங்கு மீறல்கள் நடந்துள்ளனவே. இதற்கு யாரை நோவது?
2. இலக்கியம் மனித வாழ்வின் புனிதத்தை மட்டும்தாம் காட்ட வேண்டுமா?
3.  இலக்கியம் மனிதனை பண்படுத்தும் நெறிபடுத்தும் சாதனமா?
4. இச்சிறுகதை படைப்பாளர் ஒழுக்கமான சொல்லாடலைப் பயன்படுத்தி இச்சிறுகதையைப் படைத்திருக்கலாமோ?தூய்மையான மொழிநடையைப் பயன்படுத்தியிந்தால் இக்கதாபாத்திரத்தின் இயல்பை கண்முன் கொண்டுவர சாத்தியமில்லை.
5. படைப்பாளனையே “நீ இக்கதை மூலம் என்ன சொல்ல வருகிறாய்? இதன்மூலம் உன் கற்பிதம் என்ன?” என்று கேட்பது சரியா? ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொருவனுக்கும் வெவ்வேறு அனுபவங்களையும் புரிதல்களையும் கொடுக்கும் அல்லவா?
6. படைப்பாளன் தன் படைப்பின்வழி பகிரும் அனைத்தும் அவன் தனிப்பட்ட வாழ்வில் அனுபவித்தவை என்று கூறுவது சரியா? தனிமனித தாக்குதல்கள் இலக்கியப்பூர்வமானதா?
எனக்கு நவீனத்துவம் பின்நவீனத்துவம் என்பதுபற்றி எதுவும் தெரியாது. இக்கதை எதை சார்ந்தது என்றும் தெரியாது. ஆனால், என்னுடைய முதல் வாசிப்பில் இக்கதையின் மீதான புரிதல் வேறுமாதியாகவே இருந்தது. மீள்வாசிப்பின் பிறகு வேறுவிதமான புரிதலை கொடுக்கிறது. நாளை வேறொரு புரிதலைக் கொடுக்கலாம்.

விஜயா

———————–

ஒழுக்கமும் புனிதமும்

பெண் உடலை தெய்வம் எனவும், புனிதம் எனவும், தன் தாயையும் தமக்கையையும் நினைத்து பார்த்து ஒரு பெண்ணை பார்த்து பேசும் ஆம்பளைங்க உலகத்திலேயே ரொம்ப குறைவு… மலேசியாவிலுள்ள மனோ தத்துவ நிபுணரிடம் விசாரித்தால், இந்திய சமூதாயம் கட்டி காத்து வரும், ஒழுக்கமும் புனிதமும் சிரிப்பா சிரிப்பது தெரியும். இதை பார்த்து பேசும் போது் அடக்கடவுளேனு இருக்கு சேதிய படிக்கும் போது, வெறும் சேதியா இருக்கு.. அதையே ஒருத்தன் கதையா எழுதுவது… சீர்கேடா..

ரிஷிமூலம் கதைக்கு முன்னாடியும், ஜிரோ டிகிடி கதைக்கு முன்னாடியும், ஏன் சை.பீரின் பெண் குதிரை கதைக்கு முன்னாடியும் தயா ஜி- யின் கதை ரொம்ப சாதாரணம்.

யோகி

———————–

தெளிவான சிந்தனை

தயாஜி எழுதிய கதை உலகத்தில் ஒன்றும் புதிதல்ல. ஏன் இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்? பெரும்பாலோர் மனதுக்குள் ரகசியமாக நடத்தும் நாடகத்தை இவர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். தெரியாதவர்களுக்கு இப்படியும் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம். தெரிந்தவர்களுக்கு வருங்காலத்தில் இதைவிட மோசமாக நடக்கும் என்பதற்கான அறிகுறி. இதையே சிட்னி ஷெல்டன் தன் நாவலின் அப்பட்டமாக எழுதி இருக்கிறாரே. அது ‘#1 BEST SELLER’ புத்தகம். (தலைப்பு: IF TOMMOROW COMES, NOTHING LAST FOREVER, ARE YOU AFRAID OF DARK?). தமிழில் எழுத பட்டதால் தான் இத்தனை பிரச்சனையா? படைப்புக்கு எல்லை கிடையாதே. இது எந்த எல்லையை தாண்டியும் நகரும். எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் இருக்கும் பட்சத்தில் அன்னத்தை போல நடந்ந்து கொள்ளுதலே தகும். கலவி கொள்ளும்போது சுறா தன் ஜோடியை கடிக்கிறது என்பதற்காக அது கலவி கொள்ள கூடாது என சட்டம் போட முடியுமா என்ன? இது தான் உலக நியதி. வெளிபடையாக பகிர படும் விஷயத்தை விட பூசி மழுப்பப்படும் விஷயத்தை நோக்கிதான் ஆர்வம் நீளும் எல்லா தரப்பினருக்கும். எதை வாசிக்க வேண்டும் என்று இந்த உலகத்தில் எதாவது சட்டத்திட்டங்கள் உள்ளனவா? பிறகு ஏன் கண்டதை கற்பவன் பண்டிதனாவான் என சொல்ல படுகிறது? மனிதன் விலங்கினத்தை சார்ந்தவன் (Kingdom Animalia). எந்த நேரத்திலும் விலகினத்துக்கே உரிமையான ஒரு சில அடிப்படை குணங்கள் வெளிகாட்டப்படும் என்பது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே. இது மனோதுவ அறிதல் தானே. இது ஏன் எதிர்க்க படுகிறது? இது தானே இந்த கதையின் உட்பொருள். சராசரி மனிதனின் உண்மை மனநிலை என்ன என்பதை மனோத்துவ அறிஞர்கள் தெளிவாக அறிந்திருப்பார்கள். இன்றைய பெரும்பான்மை இளைஞர்களும் (நம் நாட்டு மக்களும் இதில் சேர்த்தி தான்) இப்பேர்ப்பட்ட மனநிலையில்தான் இருக்கிறார்கள். வெளிப்படையாக இருத்தல் தெளிவான சிந்தனையை மேம்படுத்தும். இது தான் என் கருத்து.

நோவா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...