விண்மீன்களற்ற இரவு

மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை (மூலம் : . சமாட் சைட்  |  தமிழில் : சல்மா தினேசுவரி)

story - samad saidஅன்றைய இரவு, வானத்தில் விண்மீன்களே இல்லை. கரு மேகங்கள் சூழ்ந்திருந்தன. தொட்டு வருடியும் மூர்க்கமாகவும் மோதிச் சென்ற காற்று நிச்சயம் கனத்த மழை பெய்யும் என்பதை அடையாளப்படுத்தியது. பகலின் வெயில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. தகிக்கும் வெயிலால் தவித்தவர்கள் நிச்சயம் பெய்யவிருக்கும் மழையை வரவேற்பர்.

சம்சேர் பலகைகளால் ஆன சமமற்ற ஒரு வாங்கின் மீது படுத்திருந்தான். பல நாள்கள் தாமதமாக உறங்கிய காரணத்தால் அவனது கண்கள் குழி விழுந்து மிக விகாரமாகக் காணப்பட்டது. பார்வையைத் தகர கூரையின் மீது செலுத்தினான். தகரக்கூரையின் இடை இடையே மிக உயர்ந்த பொருளைத் தேடுவதைப்போல அவன் வீட்டுத் தகரக் கூரையையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நேரம் வருடியும் சில நேரம் மூர்க்கமாக மோதியும் சென்ற காற்று சட்டையணியாத அவனின் உடலை விறைக்கச் செய்தது. அவனின் விலா எலும்புகளைத் தோலின் பரப்பில் தெளிவாகக் காணமுடிந்தது.

ஓட்டைகள் குடிக்கொண்டுவிட்ட அவனின் வீட்டுத் தகரக்கூரையையே இன்னும் வெறித்துக்கொண்டிருந்தான். அவன் வீட்டுக்கூரையில் உள்ள பல ஓட்டைகள் நிச்சயம் மழைநீரைக் ஒழுகச்செய்யும் என்பது அவன் அறிந்ததே. அதற்கு அவன் தயாராக வேண்டும். அவனின் பிள்ளைகள் வீட்டின் படுக்கை அறையில் இருந்த இன்னொரு பலகை வாங்கில் உறக்கத்தில் இருந்தனர். அவனுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் கமாலுக்கு இப்பொழுதுதான் மூன்று வயது. இளையவன் ஹமீது, இப்போதுதான் இரண்டு வயதை எட்டிப்பிடித்தான்.

சமையலறையில் அசைந்துகொண்டிருக்கும் மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியுடன் அவனின் மனைவி சாடியா ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் எப்போதும் இப்படிதான். காலை தொடங்கி இரவு வரை அவளுக்கு வேலை ஓயாது .ஏதாவது வேலை இருந்து கொண்டேதான் இருக்கும். சாடியா வசதியான குடும்பத்தைச் சார்ந்த பெண். நான்கு ஆண்டுகளுக்கு முன் சம்சேரைக் கரம் பிடித்தாள். காதலினால் வசதியான வாழ்க்கையைத் துறந்து சம்சேரோடு துன்பத்தில் திளைக்க குடும்பத்தை விட்டு கணவனோடு வந்தவள்தான். சம்சீரோடு பயணப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில் ஒருநாள் கூட வருத்தப்பட்ட எந்த அறிகுறியும் அவளிடம் இருந்ததில்லை.

“வந்து சாப்பிடுங்க!”

சம்சேரின் எண்ணங்கள் கலைந்தது. பார்வையைக் குரல் வந்த திசைக்குச் செலுத்தினான். அவனின் மனைவி புன்னகையோடு நின்றிருந்தாள். அவள் அணிந்திருந்த உடை அழுக்காகவும் சீராற்று இருந்தாலும் கூட ஒளிரும் அவளின் கண்கள், அவள் அழகி என்பதை நிரூபித்தது.

“வாங்க சாப்பிடலாம்!”, என்று மீண்டும் வார்த்தைகள் மரியாதையுடன் அவள் வாயிலிருந்து உதிர்ந்தன.

“கமாலும் ஹமீதும் சாப்பிட்டார்களா, சடியா?”

“சாப்பிட்டாங்க, முன்னமே அவங்களுக்குச் சாப்பாடு கொடுத்துட்டேன்.”

பானை அடிவரை வழித்தெடுத்த சோறும், பொரித்த மூன்று சிறு மீனும் பிலாச்சான் சம்பலும் மட்டுமே உணவாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாகவே உண்டனர்.

“கேட்ட வேலை கிடைச்சதாங்க?” சாடியா கணவனைக் கேட்டாள்.

நல்ல பதிலாக இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் அவளின் நெஞ்சம் படபடத்தது. சம்சேர் துவண்டு போனான். தலையை மெதுவாக இல்லை என்ற பொருள்பட ஆட்டினான். சாடியா தலையைக் குனிந்து கொண்டாள். ஏமாற்றம் அவளின் கண்களில் கண்ணீரை நிரம்பச் செய்தது. இன்னும் வேலையும் வருமானமும் இல்லை என்பது அவளுக்கு புரிந்தது.

“இன்னைக்கு மூனு அலுவலகத்துக்குப் போனேன், மூனு எடத்தலயும் ஆளு தேவப்படலையாம்,” சம்சேர் சில நொடிகள் ஊமையானான்.

“சமைப்பதற்கு அரிசி இருக்கா சாடியா?”

“முடிஞ்சிருச்சிங்க…நேத்தே  முடிஞ்சிருச்சி…!”,என்று வாய்க்குக் கொண்டுச் செல்ல எத்தனித்த கையை நிறுத்தி விளக்கம் சொன்னாள்.

“அப்ப இன்னிக்கு எப்படி சமைச்ச சாடியா?”

“பேடா அம்மாவிடமிருந்து கடன் வாங்கினேங்க.”

“அவங்களும் நம் மாதிரி கஷ்டப்படுறவங்க தானே, அவங்ககிட்ட ஏன் வாங்கின?”

“நான் வேணாம்னுதான் சொன்னேன், அவங்கதான் எடுத்துக்கச் சொல்லி வற்புறுத்துனாங்க..”

சம்சேர் தலையை எதிரும் புதிருமாக அசைத்தான். நல்ல மனம் படைத்த தன் அண்டைவீட்டுக்காரரான பேடா அம்மாவை நினைத்து அவனுக்கு என்னவோ போலிருந்தது. இருவருமே மௌனமாயினர். சாடியா மீடும் கணவனை ஏறிட்டாள், வேறு வழியில்லாமல் கணவனை நோக்கி, “என்னங்க..”, என்று அழைத்தாள். சம்சேர் மனைவியை நோக்கினான்.

“இன்னிக்கு கோப்பி கடை சீனன் மறுபடியும் கொடுத்த கடனை கேட்டு வந்தான். கடனை இன்னும் கொடுக்கலைனு என்னை ஏசிட்டு போனாங்க.” எனக்கூறி சாடியா அமைதியானாள்.

மனைவி முன்வைக்கும் புகார்களைக் கவனமாகக் கேட்ட சம்சேருக்கு மனம் பாரமாகிப் போனது.

“நான் இன்னும் வேலை நிறுத்த போராட்டத்தில்தான் இருக்கேன்னு நீ சொல்லலையா?”

“நான் சொன்னேங்க, ஆனால் அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவே இல்லை.”

உணவை முடிக்காமலே சம்சீர் கையைக் கழுவினான். சாடியாவின் மனம் கனத்தது.

“ஏங்க கொஞ்சம்தானா…?”

“இல்ல சாடியா, எனக்கு அவ்வளவா பசிக்கல.”

சம்சேர் எழுந்து நேரே முதலில் படுத்திருந்த பலகை வாங்கில் சென்று அமர்ந்தான். மீண்டும் அவன் கண்கள் வீட்டின் கூரை மீது படிந்தது. காற்று முன்பைவிட இன்னும் பலத்தைக் கூட்டி வீசத் தொடங்கியிருந்தது. வானத்தின் கருமையும் கூடிக் கொண்டே போனது.

சம்சேர் ஏழு ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தான். இப்போது நல்ல வேலைச் சூழலை ஏற்படுத்தித்தரக்கோரி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. பலமுறை சங்கத்தலைவர் பேச்சுவார்த்தை நடத்தியும் நிறுவனம் கல்லாய் வாய்மூடிதான் கிடக்கிறது.

இந்த இரண்டு மாதங்கள் சம்சேரும் அவனின் மனைவியும் பல துன்பங்களுக்கு ஆளாயினர். அத்தியாவசியப்பொருள்கள் கூட அவர்களுக்கு எட்டாக்கனியானது. இருப்பினும் இவ்வாழ்க்கையைத் தொடரும் இக்கட்டான சூழலில்தான் அவர்கள் இருக்கின்றனர்.

இந்த வாழ்க்கையைத் தொடர்வதற்காக அவனின் பொருள்களும் அவன் மனைவியின் பொருள்களும் அடமானம் வைக்கப்பட்டுவிட்டன. அதில் அவன் மனைவியின் பொருள்கள்தான் அதிகம். அவளின் இரண்டே ஜோடி வளையல்கள், ஒரு தங்க மோதிரம், ஆசையாய் வைத்திருந்த சில ‘பாத்தேக்’ துணிகளும் அடமானம் வைக்கப்பட்டு விட்டன. கை கடிகாரத்தையும் கூட அவன் இழக்க நேரிட்டது.

நாள்கள் செல்ல செல்ல வீட்டில் அடமானம் வைப்பதற்கான பொருள்களும் குறைந்துகொண்டே வந்தது. எந்த நிறுவனம் அவன் உடல் உழைப்பைச் சுரண்டியதோ, எந்த நிறுவனத்துக்காக உடம்பை வருத்தி உழைத்தானோ அங்கிருந்து எந்த அங்கீகாரமும் அவனுக்குக் கிடைக்கவில்லை.

இதோடு நான்கு முறை தொழிலாளர் சங்கம் பெரிய அளவில் கூட்டத்தை நடத்திவிட்டது. ஒவ்வொரு முறையும் நியாயமான கோரிக்கைகள் கொண்ட இந்த வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிப் பெற்று வேலைக்கு போய் விடுவோம் என்ற எதிப்பார்ப்புகளோடுதான் அவன் செல்வான். இருந்தும் அதே பதில்தான். உரிமையைப் பெறுவதற்கான வேகம் அவர்களுள் உரமிடப்பட்டது. வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்ந்தது. நிறுவனம் மட்டும் வாய் மூடிக் கல்லாய் கிடந்தது.

இறுதியாக நடந்த தொழிலாளர் சங்க கூட்டத்தில் எப்போதும் போல தொழிலாளர் சங்கத் தலைவர் சீனமொழி காட்டத்தோடு மலாய்மொழியில் தன்முனைப்பு ஊட்டும் வண்ணம் சில வாசகங்களை உரக்கக்கூறிக் கொண்டிருந்தார். “நாம் கஷ்டப்பட்டு உழைத்தோம். நம்மை சிறு பிள்ளைகளாய் நடத்த அவர்களை விடக்கூடாது. நியாயமான முடிவு வேண்டும். இறுதிவரை போராடுவோம். மெர்டேகா!” என்று கூறி முடித்தார்.

“தண்ணி குடிங்க” சாடியா ஒரு குவளைத் தேநீரை அவன் அருகில் வைத்தாள். பிறகு அறையினுள் சென்று தன் தையல் கூடையோடு வெளிவந்தாள். கணவனுக்கு எதிர்புறமாக அமர்ந்து தன் தையல் வேலையைத் தொடங்கினாள். ஹமீதின் இருமல் சத்தம் மீண்டும் அவளை அறையினுள் இட்டுச் சென்றது. மகனைத் தட்டி உறங்க வைத்து மீண்டும் தையல் வேலையில் ஈடுபட்டாள்.

“அவனுக்குக் காய்ச்சல் சரியாயிருச்சா, சாடியா?”

“சரியாயிருச்சிங்க, இன்னும் இருமல்தான் நிக்கல”

“இருமல் மருந்து இன்னும் இருக்கா?’

“இன்னும் கொஞ்சம் இருக்குங்க, மூனு வேளை கொடுக்குற அளவு இருக்கு, போதும்னு நெனைக்கிறேன்”

சம்சேர் தேநீரை உறிஞ்சினான். அவன் பார்வை சாடியா தைத்துக் கொண்டிருக்கும் ஜோகூர் மாஜூ கூரோங் மீது படிந்தது.

“யாருடைய சட்டையைத் தைக்கிற சாடியா?”

“சோம் அக்காவுடையது”

“அன்னிக்கு தைச்சது…?”

“அது ரொஸ்னா அக்காவின் சட்டை. இந்த சட்டையை இன்னிக்கே முடிச்சிறலாம்னு நெனைக்கிறேன். முடிச்சா இத நாளைக்கே அனுப்பிடலாம்னு இருக்கேன்…”

களைப்பறியாத தன் மனைவி மீது சம்சேர் இரக்கப்பட்டான். இந்த வாழ்க்கையைக் கடந்து செல்ல இப்படி பொறுப்பான கடமையுணர்ந்த மனைவி கிடைத்ததற்கு அவன் கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்.

“ஒருநாள் முழுதும் வேலை செய்யுற… களைப்பா இல்லையா சாடியா?…நான் பாக்கறேன் நிக்காம வேலை செஞ்சிட்டுதான் இருக்கே”

“களைப்பாதான் இருக்குங்க, இருந்தாலும் இது என் கடமை இல்லையா? நம்ம குடும்ப வேலைகளை பார்க்கறத்துல எனக்கு சந்தோசம்தான். அதுமட்டுமில்லாம உங்களுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும்ல.”

சம்சேர் அப்படியே பலகை வாங்கில் உடலைச் சரித்தான்.

“நாளைக்கு எத்தனை மணிக்கு எழுந்திரிக்கனுங்க?”

“வெள்ளனையாவே எழுப்பிடு. ஒரு அஞ்சு மணி போல. நாளைக்கு லேமான் மாமாவை பார்க்கனும். அவர் வேலை செய்ற இடத்துல வேலைக்கி ஆள் எடுக்கறாங்கலாம்..”

“சரிங்க..”

வானம் மழையை வாரி இறைத்துக்கொண்டிருந்தது. சாடியா அவசர அவசரமாகப் பிள்ளைகளில் படுக்கையை இடம் மாற்றினாள். வீட்டில் அத்தனை ஓட்டைகள்… சம்சேர் அவசரமாக ஓட்டைகளை அடைக்கத் தடிமனான அட்டைகளைத் தேடினான்.

“இந்த ஓட்டையான தகரக் கூரையிலிருந்து பணம் கொட்டினால் எப்படி இருக்கும்…” அவன் மனம் சொல்லிக்கொண்டது.

வானம் முன்பு இருந்ததை விட மிகக் கருமையாகி விட்டதை தகர கூரையின் ஓர் ஓட்டை வழியே அவனால் காண முடிந்தது. அந்த வானம் இன்னும் விண்மீன்களற்றுதான் இருந்தது…

—————–

Utusan Zaman (11 Mac 1956) வெளியிடப்பட்டது.

Hati Muda Bulan Muda (page 98-104) என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...