கனவுப்பகடை

சமீபத்திய நீண்ட விடுமுறையில் சில புத்தகங்களை படிக்க எடுத்தேன். தொடர்ந்து வாசிப்பதை இயல்பாக கொண்டிருப்பதால் ஒரு புத்தகத்தை தொடர்ந்து அடுத்த புத்தகத்தை எடுப்பதென்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. படித்த முடித்த புத்தகத்தின் அலைகள் அப்போதைய எண்ணங்களை அழுத்திக் கொண்டிருக்கும். அப்படித்தான், எந்த புத்தகம் படிக்கலாம் என யோசனைக்கு பிறகு,‘பொம்மைகளோடு பேசிக் கொண்டிருக்கலாம்’, ‘பதினான்காவது அறை’, ‘கனவுகளுடன் பகடையாடுபவர்’ என்ற புத்தகங்களை விடுமுறை பயணத்தில் கொண்டு சென்றேன்.

படித்த அந்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்வதற்காக இதனை எழுதுகிறேன். நீங்களும் இந்த புத்தகத்தை வாசித்திருக்கலாம். உங்களின் பார்வை வேறானவையாக இருக்கலாம். பாதகமில்லை. குற்றமுமில்லை. எழுதுங்கள். எத்தனை கண்கள் பார்த்தாலென்ன அதன் நோக்கு ஒன்றைத்தானே குறிவைக்கிறது.

தொடக்கமாக, ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ பூங்குழலி வீரன் எழுதியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு. இது அவரது இரண்டாவது கவிதை தொகுப்பு. பூங்குழலி வீரன் செம்பருத்தி மாத இதழ், செம்பருத்தி.காம், இளந்தளிர் ஆசிரியர் குழுவிலும், மலேசிய இலக்கிய வளர்ச்சியில் ஈடுபட்டு வரும் வல்லினம் குழுவிலும் முக்கிய உந்து சக்தி இருக்கிறார். சமூக ஆர்வம் கொண்டு செயல்படுபவர். மலேசிய பெண் படைப்பாளிகளில் முக்கிய ஆளுமை கொண்டவர்.

தொகுப்பில் இருந்த குழந்தைகள் குறித்த கவிதைகளே என்னை கவர்ந்தன, பாதித்தன. சொல்லப்போனால் “கவிதையே புரியல, என்னதான் சொல்ல வராங்க…?” என தனது அறைகுறை வாசிப்பை மறைத்து பேசுகிறவர்கள் படித்தேயாகவேண்டிய கவிதைகள் அவை. படித்தும் அவர்கள் முந்தைய சிந்தனையிலேயே இருந்தால் இனி எந்த படைப்பும் அவர்களுக்கு புரியப்போவதில்லை. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ குழந்தைகளின் உலகத்தை காட்டும் அழைப்பிதழ். நாம் எல்லோரும் சந்தித்தவைதான் அவை ஆனால், அந்த சந்திப்புகளின் நொடியை உணர மறந்துவிட்டோம். குழந்தைகள் எதை பார்க்கிறார்கள். அவர்கள் மனம் எவ்வளவு மென்மையானது, எதை விரும்புகிறது என்பதனை எளிய மொழியில் சொல்லியுள்ளார். கவிதைகள் காட்சிகளாக நகர்கின்றன.

‘என் படுக்கையின் மீது
அவள் செய்து வைத்திருந்த களிமண் ரொட்டிகளில்
இன்றுவரை எறும்புகள் மொய்த்தபடியே இருக்கின்றன’

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள். குழந்தைகள் செய்தால் களிமண் ரொட்டியிலும் எறும்புகள் இனிப்பை ருசிக்கின்றன, மனிதர்கள்தான் குழந்தைகளில் குரூரத்தை விதைத்துவிட்டு போகிறார்கள்.

மௌனம் என்ற கவிதை இப்படியாக முடிகிறது;

‘குழந்தைகளின் மௌனத்திரைகளை
அவிழ்க்க முயல்வது உங்களுக்கும் களிப்பேற்படுத்தலாம்
அவை காயங்கள் ஏதுமின்றி இருக்க
வேண்டும் என்கிற வரையறை பின்பற்றப்படும் வரை’

சிறார் கொடுமையை புரிந்துக் கொள்ள முடிந்த இந்த கவிதையில் இன்னும் கூட சொல்லவேண்டியவை இருப்பதாகவே படுகிறது.

குழந்தைகளின் பார்க்கும் திரைப்படக்காட்சிகள் அவர்களை எந்த அளவுக்கு பாதிக்கின்றன என்பதை, ‘நீ பறக்கலாம்’ என்ற கவிதையில் காண முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நாளிதழ் செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. சுப்பர்மேன் திரைப்படத்தை பார்த்த சில சிறுவர்கள், கழுத்தில் போர்வை துணிகளை கட்டிக் கொண்டு வீட்டு கூரையில் இருந்து குதித்து கைகாள் முறித்து சில இறந்தும் போயிருக்கிறார்கள். குழந்தைகளை மட்டுமல்ல, அவர்களுக்காக நான் செய்யும் ஒவ்வொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. அழும் குழந்தைகளுக்கு டி.வி-யை காட்டி சமாதானம் செய்யும் பெற்றோர்கள் புரிந்துக் கொள்வதில்லை அதன் விளைவுகளை.

காதல் , நில அரசியல் போன்றவற்றை சில கவிதைகள் தொட்டிருந்தாலும் இத்தொகுப்பில் இடம்பெற்ற குழந்தைகள் குறித்த கவிதைகளே என்னை அதிகமாய் கவர்ந்திருக்கின்றன. எனக்கு குழந்தைகளை பிடிக்கும். இந்த கவிதைகள் மூலம் எனக்கு குழந்தைகளை இன்னமும் அதிகமாய் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும்.

அடுத்ததாய் படித்தது, ‘கனவுகளுடன் பகடையாடுபவர்’ என்ற சர்வதேச சிறுகதைகள், நோபல் உரைகள் மற்றும் கட்டுரைகள். ஜீ.குப்புசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.

ரோமண்ட் கார்வெர், கெவின் பிராக்மைர்,டோபியாஸ் உல்ஃப், சீமமாண்டா என்கோஸி அடீச்சி ஆகியோரின் சிறுகதைகள் புத்தகத்தின் முதல் பகுதியில் இருக்கிறது. மொழிபெயர்ப்பு சிறுகதைகள் என்பதாலும் வேறு கலாச்சாரத்தை சார்த்தவர்களின் புனைவு என்பதாலும் படிக்கும் போது குழப்பம் ஏற்பட்டது. பின்னர் திரும்ப திரும்ப படிக்கையில் புரிந்தது. ஆனால் இந்த சிறுகதைகளில் சீமாண்டா அடீச்சியின் கதை சட்டென மனதில் பதிந்தது. மிகவும் நெருக்கமாகன கதையாக இருந்தது.

சீமாண்டா அடீச்சி குறித்து சிலவற்றை சொல்ல நினைக்கிறேன்.

நைஜீரியாவில் பிறந்தவர் அடீச்சி உலக எழுத்தாளர்களில் ஒருவராக குறிப்பிடும்படியாக இருக்கிறார். அவரின் ‘Purple Hibiscus’ என்ற நாவல் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கின்றன. அடீச்சி பிறப்பதற்கு முன்பு நைஜீரியாவின் இக்போ இன மக்கள் பெருன்பான்மையாக இருக்கும் பயாஃப்ரா பகுதி தனி நாடு கோரி மாபெறும் உள்நாட்டு போரில் ஈடுபட்டதும், பயாஃப்ரா தனி நாடாக உருவெடுத்த சில வருடங்களில் உலக வல்லரசுகளின் பக்கபலத்தோடு நைஜீரியா எண்ணெய் வளமிக்க பயாஃப்ராவை மீண்டும் கைபற்றியதில் நேர்ந்த ரத்த விரயங்களும் வலியும் அடீச்சியின் கதைகளில் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. இவரின் இரண்டாவது நாவல் ‘HALF OF A YELLOW SUN’, பயாஃப்ராவின் யுத்தம் குறித்துதான். இவரின் சிறுகதை தொகுப்பு, ‘THE THING AROUND YOUR NECK’.

இந்த தொகுப்பில் அடீச்சியின் ‘அமேரிக்கத் தூதரகம்’ என்ற மொழிபெயர்ப்பு கதை இருக்கிறது. பெண்ணொருத்தி அமேரிக்க தூதரம் முன் கூட்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார். அரசியல் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமேரிக்கா புதிய வாழ்க்கையை அமைப்பதற்கான நிரூபணச்சான்றுக்கான தேர்வை ஏற்பாடு செய்திருக்கிறது. முந்தியடித்துக் கொண்டிருக்கிறது கூட்டம். பெண்ணொருத்தியும் முகத்தில் விரக்தியும் குழப்பமும் சேர அங்கே காத்திருக்கிறாள் . வரிசை ஒவ்வொன்றாக நகர நகர , அவளின் வாழ்வில் நடந்த அந்த சம்பவம் நிழலாடுகிறது.

அரசியல் ஊழல்களை எழுதிய தனது பத்திரிக்கையாள கணவன் உயிருக்கு ஆபத்து வருவதை உணர்ந்து அவனை வெளியேற்றுகிறார்கள் நண்பர்கள். அவனை தேடி வந்த இராணுவத்தினர் அவளை வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள். அவள் கண்முன்னே அவளில் குழந்தையை சுடுகிறான் ஒரு இராணுவன். பிரம்மை பிடித்தவள் மாடிக்கு ஓடி கீழே குதிக்கிறாள். ஒவ்வொன்றாக அவளுக்கு நினைவுக்கு வந்துக் கொண்டே இருக்கிறது. வரிசையும் நகர்கிறது. பலதரபட்டவர்கள் அங்கே ஆளுக்கொரு கதையோடும் எதிர்ப்பார்போடும் இருக்கிறார்கள்.

முதல் ஐம்பது பேர்க்கான வாய்ப்புதான் அன்றைய தினம் என அறிவிக்கப்பட்டதும். அந்த பெண்ணும் அவளுக்கு பின்னால் உள்ளவரும் நேர்காணலுக்கு செல்கிறார்கள். தங்களுக்கு இராணுவத்தால் ஏற்பட்ட இழப்புகளையும் தங்கள் உயிருக்கே பாதகமான சூழலும் உறுதி செய்யப்பட்டால்தான் அவர்களுக்கு அடைக்களம் உண்டு. அவளின் அருகில் இருந்தவர் நம்பும்படியானவற்றை சொல்லாததால் அந்த தகுதியை இழக்கிறார். காவல் அதிகாரிகளால் அப்படிய தூக்கி வெளியேற்றப்படுகிறார். இப்போது அவளின் முறை, அதிகாரி கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லவேண்டும் என், அவளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறிதை நினைக்கிறாள். தன் மகன் சுட்டுக் கொல்லப்பட்டதை சொன்னாலே அவளுக்கு அடைக்களம் கிடைக்கும் ஆனால்; அதில், அவள் பேச்சில் கொஞ்சம் மிகை இருந்தாலும் அவளும் வெளியேற்றப்படுவாள்.

ஆனால் அவள் அங்கு செய்யும் காரியம் நம்பமுடியாதது. அண்டைநாடுகளில் நடந்த நிலயுத்தகங்கள் ஓரளவேனும் அறிந்திருந்ததால், அந்த பொண்ணின் முடிவை புரிந்துக் கொள்ள முடிகிறது. அவளில் செயல் வாசிப்பவர்களையும் என்னமோ செய்வதை தவிர்க்க முடியவில்லை.

புத்தகத்தில் இரண்டாவது பகுதியாக, ஹேஸோ ஸரமாகோ, ஓரான் பாமுக், குந்தர் கிராஸ், நாகிப் மாஃபௌஸ் ஆகியோரின் நோபல் உரைகளும் மூன்றாம் பகுதியாக சல்மான் ருஷ்டி மற்றும் ஓரான் பாமுக்கின் கட்டுரையும் இருக்கின்றன.

இந்த உரைகளும் கட்டுரைகளும் முக்கியமானவையாக இருக்கின்றன. குறிப்பாக ஓரான் பாமுக்கின் நோபல் உரையை சொல்லலாம்.

ஓரான் பாமுக். ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் பாலமாக இருக்கும் துருக்கியின் இஸ்தான்புல்தான் பாமுக்கின் பிறந்த ஊர். மேலை கலாச்சார தாக்கம் ஒட்டாமல் அரசாங்க காலத்திலிருந்தே துருக்கியின் இஸ்லாமியக் கலாச்சாரத்தின் மீது கவிந்து வந்திருக்கிறது அவரது படைப்பு. அவரின் ஆன்மா பிளவுப்பட்டிருப்பது அவரின் ‘MY NAME IS RED’ என் பெயர் சிவப்பு என்ற நாவல் மூதல்கொண்டு எல்லா படைப்புகளிலும் காணலாம் என்கிறார்கள் அவரின் வாசகர்கள்.

அவரின் நோபல் உரையில் இருந்து சிலவற்றை அப்படியே தருவதில் மகிழ்கிறேன்…

“உண்மையான இலக்கியத்தின் துவக்கப்புள்ளி என்பது, அவன் தனது புத்தகங்களோடு அறைக்குள் சென்று அடைத்துக் கொள்வதாகத்தான் இருக்க முடியும். அவனது சொந்தக்கதைகளை, அவை மற்றவர்களுடைய கதைகள் போலவும், மற்றவர்களின் கதைகளை தன் சொந்த கதைகளைப்போலவும் சொல்வதற்கு அவனிடம் கலைநயம் இருக்கவேண்டும். அதுதான் இலக்கியம் எனப்படுவதும். முதலில் நாம் புத்தகங்களுக்கு ஊடாகப் பயணம் செய்தாக வேண்டும்.

எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் தமக்குத் தெரியும் என்று தெரிந்திருக்காத விஷயங்களைப் பற்றி எழுத்தாளன் பேசுகிறான்.”

ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் கொடுத்திருக்கும் பதில் முக்கியமானது. நேர்மையானது.

அடுத்ததாக வாசித்தது, ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் தொகுத்த மர்மக்கதைகளான ‘பதினான்காவது அறை’ என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைகள். மொழிபெயர்த்தவர் யூமா வாசுகி.

ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக். அச்சத்தின் அழகைக் கண்டுபிடித்த ஒரே ஒரு திரைப்படக் கலைஞர் என்று வர்ணிக்கப்படுகின்றார். அவரின் திரைப்படங்கள் மர்மம் என்று சொல்லபடுபவையின் அடுத்த பரிணாமத்தை திரையில் காட்டியது எனலாம். திரைப்படங்களை தவிர்த்து, மர்மக்கதைகளை தொகுப்பதையும் தனது இயல்பாக வைத்திருக்கிறார். அப்படி ஒரு தொகுப்பைத்தான் இதில் மொழிபெயர்த்திருக்கிறார் யூமா வாசுகி.

ப்ளேச்சர் ப்ளோராவின் நேரடி காட்சி, தல்மக் பவ்வலின் பதினான்காவது அறை, மேரி.இ.நட்டின் கறுப்பு தொப்பி, ரிச்சாட் டெமிங்கின் வங்கி கொள்ளை, ஜாக் ரிச்சியின் கால எந்திரம், ஜான் லூதர்ஸ்ஸின் விலங்கு பயிற்சியாளர், ராபர்ட் கோல்வியின் மரண மணி என்ற ஏழு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.

ஒவ்வொரு கதையும் இதுவரை நாம் படித்திருந்த மர்மம் என்று சொல்லப்படும் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட உணர்வை நமக்கு கொடுக்கிறது.

ஒவ்வொரு கதையும் திரைப்படம் பார்ப்பது போல பயணிக்கிறது. மர்ம முடிச்சிகள் மட்டுமில்லாமல், மனிதனின் ஆழ்மனம் செய்யும் காரியங்களையும் கதைகளில் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக ‘விலங்குப்பயிற்சியாளர்’ கதையை சொல்லலாம். விலங்குகளுக்குப் பயிற்சி கொடுத்து நாம் சொல்வதையெல்லாம் செய்ய வைக்கும் பயிற்சியாளருக்கு பணம் சேர்கிறது. “ஒரு முறை அது விருப்பமற்ற ஒரு செயலை செய்யக்கற்றுக் கொண்டால், துன்பமளிக்கும் தண்டனையிலிருந்து தப்புவதற்காக அது அந்தச் செயலை எப்போது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும்” என்ற அவரின் கோட்பாட்டை விலங்குகளுக்கு பயன்படுத்தி புகழிபெற்று பணமும் பெற்ற அவர், அடுத்து செயல்படுவது திகிலைக் கொடுக்கிறது. கதைகளில் ஊடே கூட மர்ம முடிச்சிகள் அவிழ்ப்பதற்கான தருணங்கள் இருந்தாலும் நம்மால் அதனை கண்டுக்கொள்ள முடியவில்லை. சுஜாதாவின் கொலையுதிர் காலம் என்ற மர்ம நாவலில் கடைசி அத்தியாயத்தில் வரும் கதாப்பாத்திரம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என காட்டப்படும். ஆனால் இந்த கதைகளில் அப்படியில்லாமல் முன் யூகங்களுக்கு வாய்ப்பை கொடுத்திருப்பது சிறப்பு. அதோடு அதனை நம்மால் புரிந்துக் கொள்ள முடியாத விறுவிறுப்பை கொடுத்திருப்பது இன்னும் சிறப்பு.

‘வங்கி கொள்ளை’ என்ற கதையை குறும்படமாக கூட எடுக்கலாம். அவ்வளவு சுவாரஷ்யம். அதோடு பணத்திற்காக திருடுபவனும், சுகம் கண்டு திருடுபவனுக்கும் உள்ள மன வேறுபாடுகளை சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னும் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் இருக்கின்றன. பேய், பூதம், மந்திரம் , இருட்டு, சத்தம் போன்ற வழக்கமான எதையும் பயன்படுத்தாமல் காட்சிகள் மூலமே கதையின் மர்மங்கள் திகிலூட்டும்வகையில் நகர்த்தப்பட்டிடுக்கிறது. மர்மம் என்றால் பேய்தான் என மனம் நம்புவதை இக்கதைகள் மாற்றியமைக்கும்.

நான் வாசித்தவற்றில், என் புரிதலுக்கு ஏற்ற வகையில் எழுதியிருக்கிறேன். படிப்பதை போலவே, படித்ததை எழுதுவதும் ஒரு சுகம்தான். இது சரிதானா என நினைப்பதற்கு ஒன்றுமில்லை. இப்புத்தகங்களை வாசிக்கும் சமயத்தில் என் மனம் எவ்வாறு செயல்பட்டு எதனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது என மீண்டும் இக்கட்டுரைகளை வாசிக்கையில் நான் புரிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...