நவீன் மனோகரன் கவிதை

 வெறி நாய்களுடன் விளையாடுதல்

 

வெறி நாயுடன் விளையாட

முடிவெடுத்தான்

வாசகனின்றி திரிந்த

ஒரு நகரத்து கவிஞன்

 

வெறிநாய்கள்

எதையாவது பார்த்து குரைத்துக்கொண்டே இருக்கும்

இடபேதம் தெரியாமல் கால்தூக்கி நனைக்கும்

நகரத்து இரைச்சல் எல்லாம்

தனக்கான வசையென்று

தறிகெட்டு ஓடும்

தாய் மகள் தெரியாமல் கடிக்கும் கலவி கொள்ளும்

 

வாசகர்களில்லாதவர்கள்

வாழும் நகரத்தில்

கவிஞனுக்கு

வெறிநாய் தேவைப்பட்டது

அது தன்

இரு கோரப்பல்லைக் காட்டிய பின்பும்

 

ஒரு சிறு கல்லை எடுத்து அடித்ததும்

வெறி நாய்

வெடுக்கென நின்றது

 

ஆர்வமான கவிஞன்

அருகில் இருந்த ஒரு செடியை கிள்ளினான்

நாய் குரைத்தது

கைகளைத் தட்டினான்

நாய் குரைத்தது

வேகமாகச் சிரித்தான்

நாய் குரைத்தது

ஒரு பாடலைப் பாடியபோது

நாய் குரைப்பு அச்சுறுத்தியது

கவிஞனின் குசு

நாயை திமிர வைத்தது

 

கவிதைகள் வாசிக்காத நகரத்தில்

பிறழாத மனதை பெற்றுவிட வேண்டி

ஓயாத விளையாட்டை வடிவமைத்தான்

கவிஞன்

 

நாயின் வாலில்

ஒரு குண்டுமணியை மாட்டியபோது

தடையில்லாத விளையாட்டு

தொடங்கியது

 

வெறிகொண்ட நாய்

மணியோசையைத் தேடி அலைந்துகொண்டே இருந்தது

வாலில் மணி கட்டப்பட்டதை

கண்டுப்பிடிக்கும் நிமிடம்…

 

அது தனது குருதியைச் சுவைப்பார்க்கலாம்

அப்போது கவிஞன்

தனக்காக

ஒரு கவிதை எழுதுவான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...