பதிலுக்காகக் காத்திருத்தலின்
வாட்சப் புள்ளிகளில் சேர்கிறது
இருவருக்குமான நினைவுகள்
வாசல் கடந்து நுழைந்த
மதிய வெயிலென
வீற்றிருக்கிறது மனதில்
அடுத்த பச்சைப் புள்ளி
தோன்றும் வரை
தவழ்ந்து கிடக்கிறது அன்பு
ஒரு குழந்தையின்
கதக்கல் வாசனையுடன்
ஒரு வயோதிகத் தம்பதிகளின்
கை பற்றுதலென
பச்சையாகிப்போய் இருத்தலே
ஆறுதலென்று ஆற்றிக் கொள்கிறது
உனக்கும் எனக்குமான
பச்சைப் புள்ளிகள்
++++++++++++++++
நகர்வின் வலி
நகர்வலமென வந்தமரும்
மைனாவின் சோடியொன்று
அவன் வெட்டிக் கொண்டிருக்கும்
புல்வெட்டு ஆயுதத்தில் மிரள்வது
திடுதிப்பென தளமுடைக்கும் சத்தத்தைக்
கேட்டு நடுங்கும் ஒரு முதியவரின்
நடுக்கத்தை ஒத்திருந்தது.
சூடுபட்ட பூனையென
சவ்வுக் காகிதத்தை முகர்ந்தபடி
கட்டிட கீழ்த்தளத்தில்
உலாவிக் கொண்டிருந்த
எலி மறந்த பூனையின் கண்கள்
ஊர்ப் பெயர்த் தெரிந்தும்
அதன் சாலைகளை மறந்த ஒரு
கடைநிலை ஊழியனின்
கண்களின் ஏக்கத்தை ஒத்திருந்தது.
காய்வண்டி தள்ளிக் கொண்டு
அங்காடியில் அடுக்கக் கடத்தும்
இளைஞனின் கவலை தோய்ந்த முகம்
கை நீட்டி ஒரு வெள்ளி கேட்டு
காப்பி குடிக்கும் முதியவரின் கோடுகளோடான
துயர்முகம் ஒத்திருந்தது.
இவையெதையும் அறியாமல்
ஒரே பி.எம்.டியில் மூன்று இளையர்கள்
மின்னலின் வேகத்தில் கடந்து
அதிர வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்
சுனாமி வரக் காத்திருக்கும் கடலினை
ஒத்த சாலை கலங்குகிறது
அடிவயிற்றின் பயத்தோடு..