கறுப்பு ரத்தம்

நர்மதா லிப்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு கார்களுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அந்தக் கிழவர் தன் பேத்தியுடன் நிற்பதைக் காணமுடிந்தது. 

மூன்று நாட்கள் முன்பாக அந்தக் கிழவர் அவள் வேலை செய்யும் சேனலிற்கு வந்து தன்னுடைய பேத்தியின் கல்லூரிப் படிப்பிற்குத் தேவையான பண உதவி வேண்டி டிவி செய்தியில் ஒளிபரப்பும்படி கேட்டார். 

அப்படிச் செய்யமுடியாது என அவர்கள் மறுத்துப் பேசியதை அவர் கேட்டுக்கொள்ளவேயில்லை.

கிழவருக்கு எழுபது வயதிருக்கும். தோளைவிட இறங்கிய கைகள் கொண்ட பெரிய சட்டை. அது மிக அழுக்காக இருந்தது. தோளில் வெளிறிய துண்டு ஒன்றைப் போட்டிருந்தார். கைகளில் வயதின் சுருக்கம். பேத்திக்கு பதினாறு வயதிருக்கும். இளமஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். பொருத்தமில்லாத ரோஸ் வண்ண துப்பட்டா. காலில் ரப்பர் செருப்பு. கையில் ரப்பர் வளையல்கள். அவள் கையில் ஒரு செல்போன் இருந்தது.

கிழவர் பிடிவாதமான குரலில் சொன்னார்

“என் பேத்தி முகத்தை டிவியில பாத்தா கட்டாயம் உதவி செய்வாங்க.”

செய்திப் பிரிவில் வேலை செய்யும் ஆனந்த் அது இயலாத விஷயம் என்று சொல்லி அவரை வெளியே அழைத்துக்கொண்டு போனான். வேண்டுமானால் ஆபீஸில் வேலை செய்கிறவர்கள் முடிந்த பணத்தை அவருக்குக் கொடுத்து உதவலாம் என்று சொன்னார் நியூஸ் எடிட்டர் சாரதி.

கிழவர் அன்று முழுவதும் சேனலின் வாசல்படிக்கட்டை ஒட்டி நின்றுகொண்டிருந்தார். இரவில் அவள் கிளம்பும் போதும் பார்த்தாள். தலைகவிழ்ந்து நின்றிருந்தார்கள். இருவரும் சாப்பிட்டார்களா என்று கூடத்தெரியாது. அதன் மறுநாளும் அவர்கள் காலையிலே சேனல் வாசலில் வந்து நின்றிருந்தார்கள். ஒருவேளை பக்கத்து பிளாட்பாரத்திலே தங்கிவிட்டார்களோ என்னவோ.

இந்த முறை அவர்களை உள்ளே காவலாளி விடவேயில்லை. கிழவர் சேனல் செயல்பட்டு வந்த அடுக்குமாடி அலுவலகத்தின் வாசல்படியை ஒட்டி நாள் முழுவதும் நின்றிருந்தார். அவரது பேத்தி நிமிர்ந்துகூட எவரையும் பார்க்கவில்லை.

நர்மதாவிற்கு அவர்களுக்கு எப்படி உதவி செய்வது எனத்தெரியவில்லை. ஒருமுறை அவர்களிடம் பேசிப் பார்த்தபோதும் டிவி நியூஸ்ல காட்டுனா உதவி செய்வார்கள் என்று திரும்பத் திரும்பக் கிழவர் சொல்லிக்கொண்டேயிருந்தார். அது நர்மதாவால் இயலாத காரியம். மூன்றாம் நாளில் அந்தக் கிழவரை சேனலில் ஒருவரும் பொருட்டாக நினைக்கவேயில்லை. ஆயிரம் பரபரப்புகளுக்குள் அவரை யார் கண்டுகொள்ளப்போகிறார்கள்.

நர்மதா சேனலின் செய்திப்பிரிவில் வேலை செய்துகொண்டிருந்தாள். வாரம் புதன்கிழமை இரவு ஒளிபரப்பாகும் “உண்மையின் குரல்“ என்ற நிகழ்ச்சியை அவள்தான் தயாரித்து வந்தாள். சமூகப்பிரச்சனைகளைப் பேசும் அந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டு முறை அந்த நிகழ்ச்சிக்காக அவள் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டது. பலமுறை போனில் முகம் தெரியாத ஆட்கள் மிரட்டியிருக்கிறார்கள். இந்த மிரட்டலும் வழக்கும் அவளது செயல்பாட்டினை மிகவும் வேகமாக்கியது. அவளும் அவளது குழுவினர்களும் மிகுந்த போர்குணத்துடன் மறைக்கபட்ட விஷயங்களை வெளிப்படுத்தினார்கள்.

புதன்கிழமை இரவு ஒன்பது மணிக்கு அவளது நிகழ்ச்சி ஒளிபரப்பானவுடன் போனை அணைத்து வைத்துவிடுவாள். இல்லாவிட்டால் இரவெல்லாம் வசைகளைக் கேட்க நேரிடும். ஆரம்பத்தில் அவளும் பதிலுக்குப் பதில் சண்டையிட்டாள். இப்போது அது வீண் வேலை என்று புரிந்திருந்தது. தான் நிறையப் பேரின் கோபத்தை, பகையைச் சம்பாதித்து வருவதைப் பற்றி அவள் கவலைப்படவேயில்லை.

கேண்டினில் சாப்பிடச் செல்லும் சில நேரம் கணேஷ் கேலியாக “இந்த வாரம் பாம்பு யாரைக் கொத்தப்போகிறது” என்று கேட்பான். நர்மதா சிரித்தபடியே “இந்த விஷம் எல்லாம் அவங்களை ஒண்ணும் பண்ணாது. பாம்புக்கு நாக்கு மட்டும்தான் விஷம். அவங்களுக்கு உடம்பு பூராமே விஷம் தான்,” என்பாள்.

அதைக் கேட்டு கணேஷ் சிரிப்பான். அந்த அலுவலகத்தில் அவளுக்கு இரண்டே நண்பர்கள் இருந்தார்கள். பலருக்கும் அவளைப் பிடிக்கவில்லை. அவளும் விலகியே இருந்தாள். வேலையில் காட்டும் ஆர்வத்தை விடவும் வம்பளப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவர்களுடன் எப்படி நட்புப் பாராட்ட முடியும்.

ஒவ்வொரு வாரமும் வியாழன் காலையில் அவள் நிகழ்ச்சி குறித்த எதிர்வினைகளைப் பற்றிக் குழு விவாதம் நடைபெறும். அன்று அதன் நிறைகுறைகளைப் பற்றி விரிவாகப் பேசுவார்கள். அடுத்த நிகழ்ச்சி பற்றி விவாதிப்பார்கள். ஆகவே வியாழக்கிழமை காலை எட்டுமணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவாள். அன்று மதியச் சாப்பாட்டில்கூட அக்கறை காட்டமாட்டாள். ஆகவே இரவுச் சாப்பாட்டிற்காக அவளுக்கு விருப்பமான தாபா எக்ஸ்பிரஸிற்குப் போவது வழக்கம்.

இன்றும் வியாழன் என்பதால் வழக்கம்போலவே நாள்முழுவதும் கூட்டம், விவாதம் என்று களைத்துப் போயிருந்தாள். தாபா எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு முன்பு அவளது தோழி ஷிவானிக்கு போன் பண்ணி ஏழு மணிக்கு அவளை வந்துவிடும் படி சொல்லியிருந்தாள். வழியில் பேக்கரியில் பிரட் பாக்கெட் வாங்கிக்கொள்ள வேண்டும். அதுதான் அவளது தினசரி காலை உணவு. தனியறையில் வசிக்கும் அவளுக்குச் சமைக்க நேரமிருப்பதில்லை. ஆகவே மெக்ரெனட் பேக்கரி கடையில் பிரெட் வாங்கிக்கொண்டு தாபா எக்ஸ்பிரஸ் போக வேண்டும் என நினைத்தபடியே லிப்டிலிருந்து வெளியே வந்தாள்.

அந்தக் கிழவரைக் கடந்து போகையில் அவர் ஏதோ கேட்க நினைப்பவர்போல அவளைத் திரும்பி பார்த்தார். ஒரு நிமிஷம் அவளும் நின்றாள். கிழவர் பரிதாபமான முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நர்மதா அவரைப் பார்த்து தலையசைத்தபடியே படியை விட்டுக் கீழே இறங்கி நடந்தாள்.

அவளது ஸ்கூட்டி பின்பக்கமிருந்த பார்க்கிங்கில் நின்றிருந்தது. அதை நோக்கி நடந்தபோது முதுகு தெரிய ஒரு ஆள் நிற்பது தெரிந்தது. அந்த ஆள் அணிந்திருந்த சட்டையின் முதுகில் H எனப் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. அந்த ஆளைக் கடந்து நர்மதா நடந்தபோது அவன் திரும்பி நர்மதாவைப் பார்த்தான். இருபத்தைந்து வயதிருக்கும். கோரையான தாடி. மஞ்சள் படிந்த கண்கள். தலையில் அடர்பச்சை வண்ண தொப்பி.

“நர்மதா” என அவன் சப்தமாக அழைப்பது கேட்டது.

நடந்துகொண்டிருந்த அவள் நின்று திரும்பி பார்த்தாள். அவன் வேகமாக அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். நர்மதா அவன் தன்னுடைய கையில் எதையோ வைத்திருப்பதைக் கவனித்தாள். என்ன செய்யப்போகிறான் என்று அவளுக்குப் புரிவதற்குள் அவன் தான் வைத்திருந்த மைப்புட்டியை அப்படியே அவள் முகத்தின் மீது அடித்தான்.

கறுப்பு மை அவளது முகத்தில் வழிந்தோடியது. தலைமயிரில், காதுநுனியில் கழுத்தில் மை வழிந்தோடியது. தன் மீது ஆசிட் அடித்துவிட்டானோ என நினைத்து நர்மதா அலறினாள். ஆனால் அது ஆசிட் இல்லை மை என அவள் உணர்வதற்குள் அவன் மிக ஆபாசமான வசையொன்றை உதிர்த்தபடியே நடந்து சென்று தன் பைக்கை எடுத்து வெளியே சென்றுவிட்டான்.

நர்மதா முகத்தில் மை வழிய நின்று கொண்டிருந்தாள். அவள் உடல் நடுங்கியது. இப்போது என்ன செய்வது. இதே கோலத்தில் சேனலில் போய் நின்று தன் மீதான தாக்குதலைப் பற்றிச் செய்தி ஒளிரப்ப வேண்டும் போலிருந்தது.

அந்த ஆள் யார். எதற்காக தன் மீது கறுப்பு மையை அடித்திருக்கிறான். நேற்றைய நிகழ்ச்சியின் விளைவுதானா. இல்லை. யாரோ தூண்டிவிட்டு வந்தவனா. எதுவும் தெரியவில்லை. மை வழிந்து அவளது உடைக்குள் இறங்கியது.

அப்படியே அவள் வேகமாக லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். படியோரம் நின்றிருந்த கிழவர் அவளது கோலத்தைக் கண்டு அதிர்ந்தவராக “என்ன பாப்பா ஆச்சு. ரத்தம் வருதா,” என்று கேட்டார். நர்மதா பதில் பேசவில்லை. அவள் சேனல் அலுவலகத்தினுள் சென்றபோது செய்திப் பிரிவில் வேலை செய்தவர்கள் அவளுக்கு ஏதோ விபத்து நடந்துவிட்டது போலப் பதற்றமானார்கள்.

ஒரு கேமிராமேனை அழைத்து அவளைப் படமாக்கும்படி சொன்னார் செய்தி ஆசிரியர். வாசலில் இருந்த செக்யூரிட்டிகள் அழைக்கப்பட்டார்கள். கேமிராவில் அந்த ஆள் உருவம் பதிவாகியிருக்கும் என்பதால் கேமிராவை ஆராய ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

மை வழியும் முகத்துடன் நர்மதா நின்றுகொண்டிருந்தாள். அந்த அதிர்ச்சி உள்ளூற நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சேனல் வரலாற்றில் இதுவரை யார் மீதும் இப்படி மையை வீசியதில்லை. என்ன கோபம். எதற்காக இந்தத் தாக்குதல் என ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டார்கள்.

யாராவது மை அடிக்கும்போது வீடியோ எடுத்திருக்கிறார்களா என்று கேட்பதற்காக ஆனந்த் வேகமாகக் கீழே சென்றான்.

வந்தவன் எப்படியிருந்தான். என்ன சொன்னான் என ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பித்தார் சாரதி. அவளால் பேசமுடியவில்லை. நாக்கு உலர்ந்துபோனது போலிருந்தது. இது என்ன எச்சரிக்கையா, அல்லது தண்டனையா. இத்தனை வருஷ பத்திரிகையாளர் வேலையில் இப்படி ஒரு சம்பவத்தை அவள் எதிர்கொண்டதில்லை.

நர்மதா கேமிரா முன்பு நின்றபடியே வெளியே நடந்த விஷயங்களை வரிசையாகச் சொன்னாள். பிறகு தன் முகத்தைக் கழுவிக்கொண்டு வருவதற்காக ரெஸ்ட்ரூமை நோக்கிச் சென்றாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது அழுகை வருவது போலிருந்தது. கண்விழிக்குள்கூட மை கலந்திருந்தது. ஆகவே கண் எரிச்சலாக வந்தது. எவ்வளவு தண்ணீரை ஊற்றி முகத்தைக் கழுவினாலும் மைக்கறை போகவில்லை.

ஒருவேளை மையோடு வேறு எதையாவது கலந்துவிட்டார்களா. அவளுக்குக் குழப்பமாக இருந்தது. முகத்தை அழுத்தித் துடைத்தாள்.

அவளது உடையில் இருந்த மைக்கறையை என்ன செய்வது. இது தான் உண்மையைக் கண்டறிய முயன்றதன் பரிசா. அவள் கண்ணாடியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். தன் முகத்தைப் பார்க்க அவளுக்கே வேதனையாக இருந்தது.

அவளுக்கு நடந்த தாக்குதலை அலுவலகத்தில் சிலர் கேலி செய்து சிரித்துக்கொண்டிருப்பார்கள் என்று மனதில் தோன்றியது. அற்ப ஜந்துகள் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள். திடீரெனக் கண்ணைக் கட்டிக்கொண்டு மயக்கம் வருவது போலிருந்தது. தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டாள். தலைமயிரில் படிந்திருந்த மை வழிந்தது.

கோழை. எதற்காக இப்படி மை அடிக்கிறான் என தாக்கியவனைத் திட்டினாள் நர்மதா

அவள் மீது நடந்த தாக்குதலை டிவியில் ஒளிபரப்பப் போகிறார்களா எனத் தெரியவில்லை. ஒளிபரப்பினால் ஊரிலிருக்கும் அப்பா, அம்மா பயந்து போவார்கள். அவளது அண்ணனுக்கு இந்தப் பத்திரிகையாளர் வேலை பிடிக்கவேயில்லை. எதற்காக இப்படிக் கோவில்மாடு போலத் திரிகிறாள் என்று சண்டையிட்டிருக்கிறான். அவனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்தால் வீட்டை ரெண்டு பண்ணிவிடுவான்.

செய்தி தெரிந்தால் ஒருவேளை இரவோடு கிளம்பி அப்பா, அம்மா வந்துவிடவும் கூடும். அடுத்து நடக்கப்போகும் விஷயங்களை நினைத்தால் தலை சுற்றியது.

அவள் ரெஸ்ட்ரூமை விட்டு வெளியே வருவதற்குள் செக்யூரிட்டி கேமிராவில் இருந்த அந்த இளைஞனின் உருவத்தைக் கண்டறிந்திருந்தார்கள். அவன் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவன் பைக் நம்பர் நன்றாகத் தெரிந்தது. அவன் தானா என உறுதிபடுத்தும்படி நியூஸ் எடிட்டர் கேட்டுக்கொண்டார். அவள் அந்த உருவத்தை உற்று நோக்கிப் பார்த்து தலையாட்டினாள்.

அவன் சத்தமாக நர்மதா எனக்கூப்பிட்ட குரல் அவள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அவன் இன்றைக்குத்தான் முதன்முறையாக வந்திருப்பவன் போலத் தெரியவில்லை. ஒருவேளை பல நாட்கள் அவளைப் பின்தொடர்ந்து வந்தவனாக இருக்கக்கூடும்.

எதற்காக அலுவலக வாசலில் தாக்குதலில் ஈடுபட்டான். தனியாகத்தான் வந்தானா. அல்லது வெளியே வேறு யாரும் நின்றிருந்தார்களா. எதுவும் அவளுக்குப் புரியவில்லை.

இதற்குள் அவள் தாக்கபட்ட விஷயம் பற்றிய செய்தியை ஒளிபரப்புச் செய்ய வேண்டாம் என்றும் தாக்குதல் குறித்துப் போலீஸில் புகார் செய்தால் போதும் என்றும் நிர்வாகத்திலிருந்து பதில் வந்ததாகப் பேசிக்கொண்டார்கள். அது நர்மதாவிற்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.

எடிட்டர் அவளிடம் “பத்திரிகையாளர் சங்கத்தில் அவள் உறுப்பினராக இருக்கிறாளா” எனக்கேட்டார்.

“இல்லை,” என்றாள் நர்மதா

“மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துவிட்டு அப்படியே காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துவிடலாம்,” என்று சொன்னார் எடிட்டர்.

“டாக்டரைப் பார்க்கத் தேவையில்லை,” என்றாள் நர்மதா

“இல்லை. நாளைக்குக் கோர்ட்டுக்குப் போனா தேவைப்படும். நம்ம மோகன் டாக்டர்கிட்ட போகலாம். நான் பேசிட்டேன்,” என்றார்

அவள் வேறுவழியின்றி ஒத்துக்கொண்டாள். அவளுடன் நிவாஸை அனுப்பி வைத்தார்கள். அவன் காரில் நர்மதா ஏறிக்கொண்டபோது வாசலில் காத்துகிடந்த கிழவரை யாரோ திட்டி துரத்திக் கொண்டிருந்தார்கள். இனி அலுவலக வளாகத்திற்கு எவரையும் எளிதாக நுழைய விடமாட்டார்கள்.

கார் சாலையில் செல்லும்போது திடீரென அந்த நகரம் அந்நியமாகிப் போனதைப்போல உணர்ந்தாள். அவளுக்கென யாருமில்லையோ என்று தோன்றியது. ஷிவானிக்கு போன் செய்து தாபா எக்ஸ்பிரஸ் வரவேண்டாம் எனச் சொல்லிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டாள். நிவாஸ் யாரிடமோ போனில் நடந்த தாக்குதல் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தான்.

டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துவிட்டு பின்பு காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தார்கள். அவளுக்குப் பசி மிக அதிகமாக இருந்தது. வழியில் எங்காவது சாப்பிடலாமா என நினைத்தாள். ஆனால் இந்தக் கோலத்தில் எப்படிச் சாப்பிடுவது. அவர்கள் அலுவலகம் திரும்பிய போது எடிட்டர் அவளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிப்பதாகவும் இந்த வாரத்தின் நிகழ்ச்சியைப் பிரதீப் பார்த்துக்கொள்வான் என்றும் சொன்னார்.

“இல்லை நானே பாத்துகிடுறேன்,” என்றாள் நர்மதா

“உனக்குப் போலீஸ் என்கொயரி இருக்கும். ஷோவை பிரதீப் பாத்துகிடுவான்,” என்றார்.

அவளால் மறுக்கமுடியவில்லை. அறைக்குப் போய்க் குளித்துவிட்டு வேறு உடைகளை மாற்றிக் கொண்டு சாப்பிடப் போக வேண்டும் போலிருந்தது.

“நான் கிளம்பவா சார்,” என்று கேட்டாள்

“வெயிட் பண்ணு. இன்ஸ்பெக்டர் என்கொயரிக்கு வர்றேனு சொல்லியிருக்காரு,” என்றார் எடிட்டர்.

அவள் தன் இருக்கையில் அமர்ந்தபடியே நடந்த விஷயங்களை நினைவுகொள்ள ஆரம்பித்தாள். நினைக்க நினைக்கப் பயமும் குழப்பமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நிர்வாகம் ஏன் இதனை ஒளிபரப்பவில்லை. தன் மீது நடந்த தாக்குதலை ஏன் அற்ப விஷயமாக நினைக்கிறது. இவர்கள் சம்பாதிக்கத் தான் ஏன் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இது அபத்தமானதில்லையா என்று யோசித்தாள்.

ஷிவானி போன் செய்து அவளுக்கு உடல்நலமில்லையா என விசாரித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் உண்மையைச் சொல்லவா, வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது. ஷிவானியிடம் தனக்குத் தலைவலி என்று மட்டும் சொன்னாள்.

ஊரிலிருந்த அப்பா, அம்மாவிடம் பேசலாமா என்றும் தோன்றியது. என்ன பேசுவது. எதற்காகப் பேசுவது. இந்தப் பயத்தை வளரவிட்டால் இந்த நகரில் வேலை செய்ய முடியாது. என்ன நடந்தாலும் சந்திக்க வேண்டும். பயந்து ஓடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.

நீண்ட காத்திருப்பின் பிறகு இன்ஸ்பெக்டர் இரண்டு காவலர்களுடன் விசாரணைக்காக வந்திருந்தார். அவர்களிடம் லிப்டை விட்டு இறங்கி நடந்த நிமிஷம் முதல் நடந்தவற்றைச் சொல்லி வந்தாள்.

“மைபாட்டிலை அவன் கையில் வைத்திருந்தானா,” என ஒரு காவலர் கேட்டார். ஆமாம் எனத் தலையாட்டினாள்.

“இதுக்கு முன்னாடி அந்த ஆளை எங்காவது பார்த்திருக்கிறாளா” என இன்னொரு காவலர் கேட்டார்.

“இல்லை,” என்றாள்.

“யார் மேலயாவது சந்தேகமிருக்கா,” எனக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

யாரைச் சொல்வது எனத்தெரியவில்லை. ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர்கள் கிளம்பிப் போனார்கள். நைட் ஷிப்டிற்கு வருபவர்கள் ஒவ்வொருவராக அலுவலகம் வரத் துவங்கியிருந்தார்கள். காலியான இருக்கைகளைக் கடந்து தன் கேபினுக்குள் சென்றாள் நர்மதா. எடிட்டர் அலுவலகம் விட்டுப் போவதற்குப் பதினோரு மணியாகிவிடும். அதுவரை காத்திருக்கமுடியாது. ஆகவே அவரிடம் சொல்லிக்கொண்டு லிப்டை நோக்கி நடந்தபோது திடீரெனப் பசி காதை அடைத்தது.

அறைக்குத் திரும்பியபோது உடையை மாற்றத் தோன்றவில்லை. அப்படியே படுக்கையில் விழுந்தாள். பெரும்பாரம் தன்னுடைய உடல் மீது இறங்குவதுபோல உணர்ந்தாள். குளிக்க வேண்டும் போலவும் இருந்தது. கால்களில் சக்தியில்லாமல் முடங்கிவிட்டது போலவும் உணர்ந்தாள். கண்களை மூடிக்கொண்டாள். குழப்பமான சிந்தனைகள். தன்னை அறியாமல் அவள் உறங்கிப்போனாள்.

விழிப்பு வந்தபோது மணி மூன்றைக் கடந்திருந்தது. உடைகளைக் களைந்துவிட்டு குளிர்ந்த தண்ணீரில் குளித்தாள். மீதமிருந்த பிரெட்டை பிய்த்து சாப்பிட்டாள். ஒரு கோப்பைக் காபியை சூடாகக் கையில் எடுத்தபடியே டிவியை ஆன் செய்து தனது சேனலில் ஏதாவது செய்தி வருகிறதா எனப் பார்த்தாள். இப்படி ஒரு நிகழ்வு நடந்த சுவடேயில்லை. சேனலை மாற்றிக்கொண்டே வந்தாள். ஒரு சேனலில் ஆயிரக்கணக்கான வண்ண மீன்கள் கடலில் நீந்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்தபடியே இருந்தாள்.

குளித்துத் திரும்பிய போதும் மைக்கறை முற்றிலும் மறையவில்லை. அது மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. இனி என்ன நடக்கும். அந்த ஆளை கைது செய்வார்களா. நிச்சயம் அது நடக்காது என்றே தோன்றியது. அவன் இந்நேரம் தப்பிப் போயிருப்பான்.

இந்தக் கோபம் அவனுடையதில்லை. அவன் ஒரு அம்பு. ஒருவேளை அவனைக் கைது செய்தாலும் உடனே விடுவிக்கப்பட்டு விடுவான். நாளையே அவனை வழியில் எங்காவது சந்திக்கவும்கூடும். அதுதான் சூது நிரம்பிய இந்த மாநகரின் வாழ்க்கை.

அதிகாரம் எல்லாவற்றையும் ஒடுக்கி முடக்கப் பார்க்கிறது. விலை போகமுடியாத விஷயங்களை அது அனுமதிப்பதில்லை. உண்மையும் இங்கே ஒரு விற்பனைப் பொருள். அதை எப்படி வியாபாரம் ஆக்குகிறார்கள் என்பது முக்கியம்.

நர்மதாவிற்குக் களைப்பாக இருந்தது. அவள் டிவியை அணைத்துவிட்டுப் பால்கனியில் வந்து நின்று வீதியைப் பார்க்க ஆரம்பித்தாள். ஆள் நடமாட்டமில்லாத வீதியில் சோடியம் விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் அலுவலகம் போகவேண்டியதில்லை. அறையில் அடைந்து என்ன செய்வது. ஊருக்குப் போய் வரலாமா. அல்லது வேறு ஏதாவது வெளியூர் போகலாமா.

அவள் மீது தாக்குதல் நடத்தியவன் இந்நேரம் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பான். அவன் நிச்சயம் குடித்திருப்பான். நிறையச் சாப்பிட்டிருப்பான். அவனுக்கு ஒரு குற்றவுணர்வும் கிடையாது.

நர்மதா கண்ணாடி முன்பாக நின்று தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். நர்மதா என அவன் அழைப்பது போலவே கேட்டது.

திரும்பிப் பார்த்தாள். அவன் வீசிய மை முகத்தில் மட்டுமில்லை. ரத்தத்தினுள் கலந்துவிட்டிருக்கிறது. தன் உடம்பில் கறுப்பு ரத்தம் ஒடுகிறது. அதைத் துடைத்தெறிவது எளிதானதில்லை.

திடீரென அந்தக் கிழவர் பற்றி நினைப்பு வந்தது. அந்தக் கிழவர் ஊருக்கு திரும்பி போயிருப்பாரா. அவரது வேண்டுகோளை ஏன் ஒருவரும் புரிந்துகொள்ளவேயில்லை. எத்தனையோ கோடி ரூபாய்களைப் பொழுதுபோக்கிற்காக வீணடிக்கிறார்கள். ஆனால் நியாயமான தேவைகளுக்குக் கூட உதவ மறுக்கிறார்கள். அவளுக்குத் தன் மீதும் கோபமாக வந்தது.

மறுபடியும் டிவியைப் போட்டு ஏதோ பாடல்காட்சியைப் பார்த்தாள். மனது அதில் கவியவில்லை. விடிகாலை வரை அவள் நாற்காலியில் சாய்ந்தபடியே கிடந்தாள். நீண்டகாலத்தின் பின்பு தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றாள்.

கடற்கரையில் வாக்கிங் போகிறவர்களின் உற்சாகமாக நடை அவளையும் இணைந்து கொள்ளச் செய்தது. தன் மீது நடந்த தாக்குதலை இப்படியே விட்டுவிடக்கூடாது. சேனல் செய்தி ஒளிபரப்பாமல் இருக்கலாம். அதற்காக நாம் பின்வாங்ககூடாது. பிரஸ் கிளப்பிற்குப் போய்ப் பத்திரிகையாளர் முன்பு நடந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஒருவேளை இதற்காக சேனல் நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை. இந்த மைக்கறை நிறைய விஷயங்களைப் புரிய வைத்துவிட்டது. தோற்றுப் பின்வாங்கினால் தாக்குதல் செய்தவன் ஜெயித்து விடுவான். அதை அனுமதிக்ககூடாது. அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். மூச்சு வாங்கியது. வியர்த்து வழிய நின்றபோது அவள் புத்துணர்வாக உணர்ந்தாள்.

கடற்கரை மணலில் பந்து விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் அக்கா பந்து என்று சப்தமிட்டார்கள்.

தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த கால்பந்தை அவள் ஒங்கி ஒரு உதைவிட்டாள். அது காற்றில் பறந்து கொண்டிருந்தது.

***

பிரஸ் கிளப்பிற்குப் போன் செய்து விக்டரைப் பிடித்தாள். அவன் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னான். அதற்கு முன்பு அவள் மீது நடந்த தாக்குதல் பற்றிய புகைப்படங்களை அவள் ஐம்பது பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளவேண்டும். சிறிய அறிக்கை ஒன்றை எழுதி அதையும் ஐம்பது பிரதிகள் கொண்டு வர வேண்டும் என்றான்.

செல்போனிலிருந்த அவளது மை வழியும் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டாள். அது அவளில்லை. யாரோ ஒரு ஒருத்தி. ஸ்கூட்டியில் ரத்னா ஸ்டுடியோவிற்குச் சென்று தன் செல்போனிலுள்ள புகைப்படத்தைப் பிரிண்ட் போட்டு தர வேண்டும் என்றாள். அவளது போனில் உள்ள புகைப்படத்தை மெயிலில் அனுப்பி வைக்கும்படி சொன்னான் அங்கிருந்த இளைஞன். அவள் புகைப்படத்தை அனுப்பி வைத்தாள்.

அவன் புகைப்படத்தைக் கம்ப்யூட்டர் திரையில் பார்த்தபடியே ஆக்சிடெண்டா எனக்கேட்டான்.

அவனிடம் நர்மதா பதில் சொல்லவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து வரும்படி சொல்லியபடியே அவள் புகைப்படத்தைப் போட்டோ ஷாப்பில் சரிசெய்ய ஆரம்பித்தான்.

எங்கே உட்கார்ந்து நடந்த விஷயத்தை அறிக்கையாக எழுதுவது என யோசித்தபடியே காபிடேக்கு சென்றாள். மூலையில் இருந்த மேஜைக்குப் போய் உட்கார்ந்து கொண்டபடியே செல்போனில் எழுத ஆரம்பித்தாள். இடையில் எழுந்து போய் ஒரு காபி வாங்கிக்கொண்டு வந்தாள். கோர்வையாக எழுத இயலவில்லை. எழுதியதை திருத்தி மாற்றி எழுதினாள். காபியை ஒரு வாய் கூடக் குடிக்கவில்லை. எழுதிய விஷயத்தை நேரில் சொல்லப்போகிறோம் தானே என்று தோன்றியது. அதையும் பிரிண்ட் அவுட் எடுக்க ஜெராக்ஸ் கடை ஒன்றுக்குச் சென்றாள்.

புகைப்படமும் அறிக்கையும் அவள் கைக்கு வந்தபோது மணி இரண்டாகியிருந்தது. யாரையும் உடன் அழைத்துக் கொண்டு போகவேண்டாம் என முடிவு செய்தவளாகப் பிரஸ் கிளப் நோக்கி சென்றாள். நான்கு மணிக்கு இன்னும் நேரமிருந்தது. வழியில் இருந்த ஹோட்டலில் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டாள். நாக்குக் கசந்தது. தண்ணீர் கூட ருசியற்றுப் போனது போலிருந்தது.

ஆறு பத்திரிகையாளர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். விக்டர் மற்றவர்கள் வரும் வரை காத்திருப்போம் என்றான். ஐந்து மணிக்குச் சந்திப்புத் துவங்கியபோது எட்டுப் பேர் இருந்திருந்தார்கள். நடந்த விஷயத்தை நர்மதா சுருக்கமாகச் சொன்னாள். ஒருவரும் குறிப்பு எடுத்தது போலவே தோன்றவில்லை.

ஒரு நிருபர் மட்டும் அவளிடம் “எந்தக் கட்சி மேல சந்தேகம்?” எனக்கேட்டான்.

அவள் “தெரியவில்லை,” என்றாள்.

இதற்குள் பின்வரிசையில் இருந்த சந்தன நிற ஜிப்பா அணிந்த பத்திரிகையாளர் எழுந்து “இது உங்க லவ் மேட்டர்னு கேள்விபட்டேன். அதை ஏன் அரசியலாக்குறீங்க?” என்றார்.

அவளுக்குச் சுரீரெனக் கோபம் வந்தது.

“யார் சொன்னது லவ் மேட்டர்னு. லவ் மேட்டர்ல இப்படி முகத்துல மை அடிப்பாங்களா?”

“அதான்மா கேட்குறேன். ஆசிட் அடிச்சா. அது பொலிடிக்கல் அட்டாக். இது மையைத்தானே ஊற்றியிருக்கான். அதுவும் நீங்களே சொல்லுறீங்க இளைஞன்னு. உங்க ஆபீஸ்ல விசாரிச்சா உங்களுக்கு நிறையப் பாய்பிரண்ட் உண்டுனு சொல்றாங்க.”

“என் வேலை அப்படி சார். கூட வேலை செய்றவங்ககூடப் பேசினா அது பாய்பிரண்டுனு அர்த்தமா. இது யாரோ ஒரு கிரிமினல் என் மேல மையை அடிச்சிருக்கான்.”

“அவன் உங்க லவ்வரா இல்லையானு நீங்கதான் சொல்லணும்,“ என நமுட்டு சிரிப்புடன் சொன்னார் ஜிப்பா ஆள்.

“உங்க பொண்ணா இருந்தா இப்படிக் கேட்பீங்களா சார்?” என்று கோபமாகக் கேட்டாள் நர்மதா.

“என் பொண்ணு இப்படி இத்தனை பசங்ககூட சுத்துனா நான் சும்மா இருக்கமாட்டேன்லே?” என்றார் ஜிப்பா அணிந்த ஆள்.

அவளால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பேசினால் வெடித்துவிடுவோம் என்பதால் அமைதியாக அவரை முறைத்தபடியே இருந்தாள்.

வேறு ஒரு பத்திரிகையாளர் அவளிடம் கேட்டார்.

“நாலு வருசத்துல ஆறு இடத்துல வேல பாத்து இருக்கீங்க. இதுல நீங்க சண்டை போடாத ஆளே இல்லே. நீங்க குடியிருந்த வீட்டு ஹவுஸ் ஒனர்கூட உங்க மேலே போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கார். இதுல யார் வேணும்னாலும் உங்க மேல இங்க் அடிச்சிருக்கலாம்லே?”

“வீட்டு ஒனர் நைட் பத்து மணிக்கு மேல லைட் போடக்கூடாதுன்னு சொன்னார். நான் வேலைவிட்டு வீட்டுக்கு பதினோரு மணிக்குதான் வருவேன். அதான் சண்டைபோட்டேன். அந்த ஆள் தப்பா பேசினான். நானும் கெட்டவார்த்தையில திட்டுனேன். போலிஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்தான். அதுக்கு இந்த அட்டாக்கிற்கும் என்ன சார் சம்பந்தம். ஏன் தேவையில்லாமல் பிரச்சனையை திசை திருப்புறீங்க?”

“மேடம் நாங்க எல்லாத்தையும் விசாரிச்சி பாத்துதான் நியூஸ் போடுவோம்.”

“நானும் பத்திரிகையாளர்தான். அதை மறந்துராதீங்க.”

ஜிப்பா அணிந்த ஆள் இன்னும் கேலியாகக்கேட்டார்

“சினிமா ஸ்டார் மாதிரி அழகா இருக்கீங்க. உங்களை ஆபீஸ்ல நாலு பசங்க லவ் பண்ணியிருப்பாங்க.  இந்த இங்க் அடிச்சவன் உங்களுக்கு எத்தனாவது லவ்வர்?”

“அப்படி ஒரு மயிரும் கிடையாது. அந்த நாயி என்மேல இங்கை அடிச்சிருக்கான். அதைப் புரிஞ்கிடாமல் கேள்விகேட்டா எப்படிச் சார். கிசுகிசு எழுதுற உங்களை எல்லாம் கூப்பிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலே அடிக்கணும்.”

“மரியாதையா பேசும்மா. நான் ஒண்ணும் பொய் சொல்லலை. உன் ஆபீஸ்ல விசாரிச்சிட்டு தான் சொல்றேன்.”

“யாரு சொன்னானு ஆளை சொல்லுங்க சார். இப்போவே கேட்ருவோம்,” எனக் கோபமாகக் கத்தினாள்.

“அதை எப்படிச் சொல்லமுடியும். பப்ளிசிட்டிக்காக நீ போடுற டிராமா தானேம்மா இது.”

“எனக்கு எதுக்கு சார் ப்பளிசிட்டி. சும்மா உளறாதீங்க.”

விக்டர் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். இதற்குள் நாலைந்து பத்திரிகையாளர்கள் வெளியேறியிருந்தார்கள். அவள் எடுத்து வந்த பிரிண்ட் அவுட் மற்றும் புகைப்படங்களைத் தரையில் வீசி எறிந்தாள்.

அவர்கள் வெளியேறி போனபிறகு விக்டர் “உனக்குப் பேசத் தெரியலை நர்மதா. உன் கோபத்தைக் காட்ட இவங்கதான் கிடைச்சாங்களா,” எனக்கேட்டான்.

நர்மதாவிற்கு விக்டர் மீதும் கோபம் வந்தது. அவள் முறைத்தபடியே ஒரு வார்த்தை பதில் பேசாமல் வெளியே வந்தாள். ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கடற்கரைச் சாலையில் சென்ற போது அவளுக்கு இந்த நகரம் தன்னைப் பெருங்கரத்தால் இறுக்கி மூச்சுமுட்டச் செய்வதைப் போல உணர்ந்தாள்.

இரவு பத்தரை வரை அவள் வீதி விதியாகச் சுற்றினாள். எதற்காக இப்படி அலைகிறோம் என்று புரியவேயில்லை. அறைக்குத் திரும்பியபோது ஊருக்கே திரும்பிப் போய்விடலாமா என்றும் தோன்றியது.

பதினோரு மணிக்கு அவளது சேனலின் எடிட்டர் போன் பண்ணி பிரஸ் கிளப்பிற்குப் போன விஷயம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

“நான்தான் போலீஸ் விசாரிச்சிகிட்டு இருக்குனு சொன்னனே. அதுக்குள்ளே நீதி கேட்டுப் பிரஸ் கிளப் போயிட்டயாக்கும்.”

“நம்ம சேனல்ல என் மேல நடந்த தாக்குதல பற்றி ஒரு வார்த்தை வரலையே சார்,” என்றாள் நர்மதா.

“இது சின்ன விஷயம் நர்மதா. இதை ஏன் பெருசு பண்றே?”

“எது சார் சின்ன விஷயம். அவன் ஆசிட் அடிச்சிருக்கணுமா, இல்லை கொலை பண்ணியிருக்கணுமா?”

“இது உன்னோட லவ் மேட்டர்னு பசங்க சொல்றாங்க. நிஜமா?”

“நம்ம ஆபீஸ்ல எந்த நாயோ இப்படிக் கிளப்பிவிட்டுகிட்டு இருக்கான்.”

“உன் நல்லதுக்காகச் சொல்றேன் நர்மதா. நடந்ததை இப்படியே விட்ரு.”

“ஏன் சார். விடச்சொல்லி யாராவது மிரட்டுறாங்களா?”

“என் மேலயே சந்தேகப்படுறயா?”

“எல்லோர் மேலேயும் சந்தேகப்படுவேன். என் வலி எனக்குத்தானே தெரியும்.”

“விசாரிச்சா உண்மை எதுனு தெரியப்போகுது.”

“அப்போ நான் பொய் சொல்றேனு சொல்றீங்க.”

“பொய்யோ, உண்மையோ. நீ இதோட விட்டுட்டா பிரச்சனை இல்லே. பெரிசு பண்ணினா. விளைவுகளை நீதான் சந்திக்கணும். உன் வேலைகூடப் போயிடும் பாத்துக்கோ.”

“வேலை போனா போகட்டும். சேனலுக்கு இத்தனை நாள் உழைச்சதுக்குக் கிடைச்ச பலனை பாத்துகிட்டுதானே இருக்கேன்.”

“பெரிய சம்பளத்தோட வேற சேனலுக்கு வேலைக்குப் போக இதெல்லாம் நீ போடுற டிராமாவா இருக்குமோனு எனக்கே சந்தேகமா இருக்கு.”

“ஆமா. டிராமாதான். போதுமா. இந்தச் சேனல் மயிரு இல்லேன்னா… நான் செத்துப்போயிற மாட்டேன் சார்.”

மறுமுனையில் எடிட்டர் போனை வைத்துவிட்டதை உணர்ந்தாள். தான் பேசியது சரியா, தவறா என அவளால் உணரமுடியவில்லை. ஆனால் ஏன் தன்னைச் சந்தேகப்படுகிறார்கள். தன்னை மறுபடியும் அவமானப்படுத்துகிறார்கள். இந்த வேலையைவிட்டு அவர்கள் நீக்குவதற்கு முன்பு நாமே விலகிக்கொண்டாள் என்ன.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி அவ்வளவுதானா. அதற்கு நியாயம் கிடைக்காதா. இந்தத் தாக்குதலே ஒரு நாடகம்தானா. சேனலின் உள்ளே இருக்கும் யாரோ தான் இதை நடத்துகிறார்களா. யோசிக்க யோசிக்கத் தலைவலிக்க ஆரம்பித்தது.

அவள் ஷிவானிக்கு போன் செய்தாள். ஷிவானி போனை எடுக்கவில்லை. வேலையை விட்டுவிடலாம் என முடிவு செய்தபடியே அவள் ஒரு தூக்க மாத்திரையைப் போட்டுக்கொண்டு உறங்கினாள்.

கனவில் H என்ற எழுத்துப் பொறித்த சட்டை மிகப்பெரியதாக வானில் பறந்து கொண்டிருந்தது. அந்தச் சட்டை அவளைத் துரத்தி வருவதாகக் கனவுகண்டாள்.

மறுநாள் காலை இரண்டு பத்திரிகைகளில் காதல் விவகாரத்தில் அவள் மீது மைஊற்றப்பட்டதாகச் செய்தி வெளியாகியிருந்தது. எடிட்டர் கணேஷ் அதை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தான். பேப்பரில் அவளது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் கோபம் பொங்கியது. இனி சண்டையிட்டு ஒன்றும் ஆகிவிடாது. அவள் ஷிவானியை போனில் அழைத்தாள்.

போனை எடுத்த ஷிவானியின் அம்மா இனி அவள் ஷிவானியை அழைக்கவேண்டாம். அவளைத் தேடி வீட்டுக்கு வரவேண்டாம் என்று கடுமையான குரலில் சொன்னாள். எரிச்சலுடன் போனை வீசி எறிந்தாள் நர்மதா.

ஒவ்வொன்றாகத் தன்னை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. திடீரென அந்த நகரம் அவளைத் துரத்தி அடிக்க முயற்சிப்பதாக உணர்ந்தாள். அறைக்கதவை மூடிக்கொண்டு படுக்கையிலே நாள் முழுவதும் கிடந்தாள். ஒருவர்கூட அவளுக்கு ஆறுதல் சொல்வதற்காகப் போன் செய்யவில்லை. நீண்ட பல வருஷங்களுக்குப் பிறகு தனியே இருப்பதாக வருத்தம் அடைந்த நர்மதா அதை நினைத்து அழுதாள்.

***

இரண்டு நாட்களுக்குப் பின்பு அலுவலகம் சென்ற நர்மதா வேலையை விட்டு நின்று கொள்வதாகக் கடிதம் கொடுத்தாள். எடிட்டர் அதை மேஜையில் வைத்துவிட்டு போகும்படி சொன்னார். தனக்கு வரவேண்டிய பணத்தை அடுத்த வாரம் வந்து பெற்றுக்கொள்வதாகச் சொல்லியபடியே வெளியே வந்தாள்.

டீக்கடையை ஒட்டி பைக்கை நிறுத்தியபடியே போன் பேசிக்கொண்டிருந்த கேமிராமேன் நிவாஸ் அவளைக் கண்டதும் போனைத் துண்டித்துவிட்டு அருகில் வந்தான்.

“என்ன நர்மதா, வேலையை விட்டு போறயாமே?”

“எடிட்டருக்கே என் மேல சந்தேகம். ரொம்ப கேவலமா பேசினார். இவ்வளவு மோசமா என்னை அட்டாக் பண்ணியிருக்காங்க. ஆனா ஒருத்தரும் உதவிக்கு வரலை. என் நியாயத்தைப் புரிஞ்சிகிடலே .”

“அதை விடு நர்மதா. ஊருக்கு உபதேசம் சொல்வாங்க. ஆனா அவங்க பிரச்சனைனு வந்துட்டா. வாயைத் திறக்கமாட்டாங்க. நிச்சயம் பொலிடிகல் பிரஷர் இருக்கும் நர்மதா. யாரோ பெரிய கை சம்பந்தப்பட்டு இருக்கு. இல்லாட்டி சேனல்ல இதை டெலிகாஸ்ட் பண்ணாம இருக்கமாட்டாங்க. சேனலுக்கு நல்ல டிஆர்பி கிடைக்கிற மேட்டர். இதை நிர்வாகம் வேண்டாம்னு சொல்றப்பவே எனக்குப் புரிஞ்சிருச்சி.”

“எனக்கும் தெரியுது. ஆனா நான் என்ன பண்ணமுடியும் சொல்லு.”

“என்ன பண்ணப்போற சொல்லு?”

“தெரியலை. ஆனா ரொம்ப டயர்டா இருக்கு.”

“இவங்களை நம்பியா நாம சென்னைக்கு வந்தோம். விடு. நர்மதா என் பிரண்டு ஒரு காமெடி யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கான். உனக்கு ஒகேன்னா நீ அதுல வேலை செய்யலாம். பெரிய சம்பளம் கிடைக்காது. ஆனால் ஜாலியான பசங்க.”

“என் லைப்பே காமெடியா ஆகிருச்சே நிவாஸ்.”

“அப்படி பேசாதே. இது சின்ன செட்பேக். ரொம்பக் கவலைப்பட்டா அப்புறம் இந்த ஊர்ல வாழமுடியாது. இங்க புதுசுபுதுசா பிரச்சனை முளைச்சிகிட்டேதான் இருக்கும். ஆனா அதைத் தூக்கிப் போட்டுட்டு போய்கிட்டே இருக்கணும். பயந்தோம். ஓடஓட விரட்டுவாங்க.”

“எனக்கும் புரியுது. ஒரு வாரம் வெளியூர் போயிட்டு வரலாம்னு இருக்கேன்.”

“போகாதே. போனா… இதையே நினைச்சிகிட்டு இருப்பே, நாளைக்கே வேற வேலையில சேர்ந்துரு. ரெஸ்ட் எப்போ வேணும்னாலும் எடுத்துக்கிடலாம். இங்க் அடிச்சவன் உன்னைக் கண்டு பயப்படுறான். அந்தப் பயத்தை நீதான் ஏற்படுத்தியிருக்கே. அதை விட்றாதே.”

“தேங்ஸ் நிவாஸ். உன் பிரண்டை எப்போ பாக்கணும்”

“ஈவினிங் நானே அழைச்சிட்டு போறேன். நீ என்ன செய்றே. ஜாலியா மாலுக்குப் போய்ச் சுத்து. சினிமா பாரு. நல்லா பிரியாணி சாப்பிடு. ஈவினிங் ஆறு மணிக்கு மாலுக்கு நானே வந்து கூட்டிகிட்டு போறேன். உன் மேல உனக்கு நம்பிக்கை போச்சுன்னா அப்புறம் இங்கே வாழமுடியாது. இங்க் அடிச்சவன் எங்க போகப்போறான்? அவனை லீகலா பாத்துக்கிடலாம். ஆனா நீ பயந்து ஒதுங்கிப் போனா அவன் ஜெயிச்சிகிடுவான். இந்த மைக்கறை வாழ்நாள்ல போகாது. அதைப் புரிஞ்சிக்கோ.”

அவன் பேசுவதைக் கேட்க கேட்க உடம்பில் வெயில் படுவது போலிருந்தது. சிரித்தபடியே அவள் பீனிக்ஸ் மாலுக்குப் போகப்போவதாகச் சொன்னாள்.

நிவாஸ் “ஈவினிங் மீட் பண்ணுவோம்” என்றபடியே பைக்கை எடுத்தான். திடீரெனப் பகல் மிகப் பிரகாசமாக இருப்பதுபோலத் தோன்றியது. நர்மதா ஸ்கூட்டியில் சிக்னலுக்கு வந்தபோது சேனலில் தனக்குக் கிடைக்கும் பணத்தை அப்படியே கிழவருக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

சிக்னல் விழுந்து இடதுபுறம் ஸ்கூட்டியில் திரும்பியபோது திடீரெனச் சாக்லேட் கேக் சாப்பிடலாம் என்று தோன்றியது. மெக்ரெனட் பேக்கரியை நோக்கி அவள் தன் ஸ்கூட்டியை திருப்ப ஆரம்பித்தாள்.

1 comment for “கறுப்பு ரத்தம்

  1. Jananesan
    March 3, 2021 at 2:28 am

    நியாயத்துக்கு போராட வேண்டிய ஊடகங்கள் சமூகக்குற்றவாளிக்கவேண்டிகளுக்கு அடிபணிந்து போன அவலத்தை கருப்புரத்தம் சொல்கிறது.நியாயத்திற்காகத் துடிக்கவேண்டிய ஊடகங்களின் ரத்தம் கருப்பாகிப் போனதை ஒரு குறீயீடாக சொல்கிறது கதைத்தலைப்பு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...