கலை இலக்கியம்

இதழியல் முயற்சிகள் :

காதல் – இணை ஆசிரியர் (2005 – 2006)

முகவரி (2011)

வல்லினம்- இலக்கிய இதழ்

பறை – ஆய்விதழ்

யாழ் – சிறுவர் இதழ்

அவை குறித்த சுருக்கமான  அறிமுகம் :

வல்லினம் மாற்று இலக்கிய முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது. பொதுவில் பேசும் தயங்கும் தடுமாறும் விடயங்களை வல்லினம் இலக்கியம் வழி பேச முற்பட்டது. உலக இலக்கியப் போக்குடன் ஒத்து செயல்படும் வல்லினம் முதலில் ஒரு கலகம் செய்யும் இதழாகவே கருதப்பட்டது. உண்மையில் தமிழகத்தில் சிற்றிதழ் சூழலில் பெரும் மாற்றம் நிகழ்த்திய ‘கசடதபற’ எனும் இதழின் வீச்சே வல்லினத்தின் சாரம். எனவே வல்லினம் அதற்கு முந்தைய தலைமுறை இலக்கியத்துக்குச் செய்த தியாகங்களைப் பாராட்டிய அதே வேலையில் முரணான செயல்களை விமர்சிக்கவும் செய்தது. இதனால் பலரது கடும் புறக்கணிப்புக்கு வல்லினம் உள்ளானது. யாருடனும் சமரசம் செய்துக்கொள்ள விரும்பாத வல்லினம் ஆசிரியர் தனது கொள்கைக்கு முரணான யாரிடமும் பணம் பெற தயாராக இல்லை. இதன் காரணமாக வல்லினம் தொடர்ந்து அச்சு இதழாக வெளிவரமுடியாமல் இணைய இதழாக 2009ல் வெளிவரத்தொடங்கியது. எவ்வித பொருளாதார அவசியமும் இன்றி வல்லினம் தாராளமாக இணைய உலகில் விரிந்து பலரது ஆதரவைப் பெற்றது. அந்தச் சுதந்திரத்தில் எழுத்தில் நடக்கும் அரசியல், வணிகம் போன்றவற்றை கடுமையாக விமர்சித்தது. அதனால் விமர்சிக்கவும் பட்டது. பத்திரிகைகள் வல்லினம் செய்திகளைப் புரக்கணித்தன. ஆனாலும் வாசகர் பலத்தால் வல்லினம் நிகழ்வுகளில் கூட்டம் நிறைந்தது.

 

பறை 2014 தொடங்கி காலாண்டிதழாக வருகிறது.  மலேசியாவில் தமிழில் வரும் முதல் ஆய்விதழ். பல மாற்று கருத்துகளை ஆய்வு பூர்வமாக நிறுவும் இதழ். இதன் இலவச இணைப்பாகவே மாணவர்களுக்காக ‘யாழ்’ எனும் இதழ் வருகிறது. மலாய்/ சீன இலக்கியம், ஆற்றுகை , ஈழ இலக்கியம், குடிமை என ஒவ்வொரு தலைப்பின் கீழ் முழு ஆய்வுகளோடு இதழ் தயாரிக்கப்படுகிறது. இதனால் இது வருங்கால ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும். அதேபோல இன்று பதிவு செய்துக்கொண்டிருக்கும் எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்களும் இலக்கிய ஆய்வு மாணவர்களுக்கு துணைப்புரியும்.

 

நண்பர் சிவாவுடன் இணைந்து 2012ல் பாரதி எனும் பதிப்பகத்தைத் தொடங்கி மாணவர் இலக்கிய வளர்ச்சிக்கு, தேவதைகளின் காகிதக்கப்பல் எனும் கே.பாலமுருகன் எழுதிய படைப்பிலக்கிய நூலை வெளியிட்டு நாடுமுழுவதும் மாணவர் படைப்பிலக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்தோம். அதோடு 2014ல் யாழ் எனும் சிறுவர்களுக்கான இதழை உருவாக்கி அதன் மூலம் மாணவர்கள் படைப்பிலக்கிய ஆர்வத்தை வளர்க்க முனைந்துள்ளோம். 2015ல் யாழ் எனும் பெயரில் புதிய பதிப்பகம் உருவாக்கி வெற்றிகரமாக இன்று மாணவர் பதிப்பகமாகச் செயல்பட்டு வருகிறது.

மாற்று முயற்சிகள்

இதற்கு முன் அரசியல் மற்றும் வணிகர்கள் தயவில் இயங்கிய மலேசியத் தமிழ் இலக்கிய உலகை எழுத்தாளன் வாசகன் பலம் கொண்டு நிர்க்க வைக்க முனைந்தது. எனவே வல்லினம் பதிப்பகம் மூலம் தொடர்ந்து இளம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து அவர்களுக்கு ராயல்டி வழங்கினேன். மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் இந்த ராயல்டி வழங்கும் முறை அரிதாக நடப்பது. அதேபோல இலக்கியம் மட்டும் இல்லாமல் நிழல்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி போன்றவற்றையும் 2009ல் நடத்தினேன். தொடர்ந்து இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கம் மேலோங்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் இலவச நூல் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தேன். 2014 வரை பத்துக்கும் மேற்பட்ட அயல்நாட்டு எழுத்தாளர்கள்/ அறிஞர்களை மலேசிய இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களுடன் கலந்துரையாட வாய்ப்பளித்தேன். இளம் ஆசிரியர் மத்தியில் சிந்திக்கும் போக்கு மாற வேண்டும் என , மார்க்ஸிய, தலித்திய, பெண்ணிய, சிந்தனைக்கொண்ட படைப்பாளர்களை வைத்து இலவச பட்டறைகளை பயிற்சி ஆசிரியர்களுக்கு ஏற்பாடுசெய்தேன். மை ஸ்கீல் அரவாறியத்துடன் வல்லினத்தை இணைந்து முதன் முறையாக நவீன வீதி நாடகத்தை தமிழக வீதி நாடகக் கலைஞர் பிரளயன் துணையுடன் மலேசியாவில் 2013ல் நடத்தினேன். எழுத்து ஆளுமைகளின் வாழ்வை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல எழுத்தாளர்களையும் நேர்காணல் செய்து அதை ஆவணப்படங்களாக தயாரித்து வருகிறேன். முத்தம்மாள் பழனிசாமி போன்ற முக்கியமான ஆளுமைகள் மலேசிய இலக்கிய கவனத்தில் இல்லாமல் இருந்த சூழலில் அவரின் நூலை மறுவெளியீடு செய்து அதன் இலக்கியத்தரத்தை வெளிப்படுத்தினேன். இது போன்ற முயற்சிகள் அனைத்துக்குமே வல்லினம் நண்பர்கள் துணை முக்கியமானதாகவும் உற்சாகம் ஊட்டக்கூடியதாகவும் இருந்துவந்துள்ளது.

படைப்பிலக்கியத்தில்:

மலேசியாவில் புதுக்கவிதை திழைத்திருந்த சூழலில் நவீன கவிதை வகை குறித்த அறிமுகத்தை மலேசியாவில் ஏற்படுத்திய  முதல் தலைமுறை எனலாம். பின்நவீனத்துவம் குறித்த உரையாடலை இன்று தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறேன். இதுவரை என் நூல்கள் 4 வெளிவந்துள்ளன. அதில் இரண்டு நவீன கவிதை தொகுப்புகள். அதோடு வல்லினம் பதிப்பகம் மூலம் இதுவரை 13 நூல்களைப் பதிப்பித்து அது பரவலாகச்செல்லவும் உழைத்துள்ளேன். தமிழகத்தின் கருப்பு பிரதி பதிப்பகத்துடன் இணைந்து 2012 ல் தமிழக புத்தகச் சந்தைக்கு மலேசிய இளம் எழுத்தாளர்களின் 4 நூல்களை அறிமுகம் செய்தேன். புதிய எழுத்தாளர்கள் பலரையும் வல்லினம் மூலம் அறிமுகம் செய்துள்ளேன். மேலும் மலேசிய இலக்கியம் குறித்து எனது வெளிநாட்டு பயணங்களில் விரிவாகப் பேசியும் அங்குள்ள ஊடகங்களில் நேர்காணல் கொடுத்தும் வருகிறார். எனது நேர்காணல் இதுவரை, தமிழகம், இலங்கை, லண்டன் , ஃபிரான்ஸ், சிங்கப்பூர், போன்ற நாடுகளில் வெளிவந்துள்ளது. அவை விரிவாக மலேசிய அரசியல், சமூகம், இலக்கியம் என பேசுகிறது.

வல்லினம் விருது:

2014ல் ‘வல்லினம் விருது’ எனும் விருதினை உருவாக்கி அதில் 5000 ரிங்கிட் வழங்குவதுடன் விருது பெரும் எழுத்தாளரின் ஆவணப்படம் மற்றும் வாழ்க்கை வரலாறையும் வல்லினம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளேன். வல்லினம் விருது இனி தொடர்ந்து வழங்கப்படும்.

இதுவரை எழுதிய நூல்கள்:

  1. சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்)
  2. கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு)
  3. விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு)
  4. வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல்)
  5. மண்டை ஓடி – 2015 (சிறுகதை தொகுப்பு)
  6. வகுப்பறையின் கடைசி நாற்காலி – 2015 (கட்டுரைத் தொகுப்பு)
(Visited 615 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *