மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் 31.07.1982ல் பிறந்தேன். ஆரம்பப் பள்ளி வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இடைநிலைப்பள்ளியும் லுனாஸில்தான். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஒரு சகோதரி. லுனாஸில் இருக்கும் போதே பத்திரிகைகளுக்கும் இதழ்களுக்கும் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதினேன்.
16 வயதில் எம்.ஏ.இளஞ்செல்வன் நட்பு கிடைக்க வாசிக்கும் பழக்கம் உருவானது. என் இலக்கிய பயணத்துக்கு அவர்தான் தூண்டுகோளாக இருந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் கோ.புண்ணியவான் வழிக்காட்டினார். கோ.புண்ணியவானிடம் இலக்கியம் பேசவே அவர் தலைமை ஆசிரியராக இருந்த பள்ளியில் சம்பளம் இல்லாமல் ஒரு மாதம் வேலை செய்தேன்.
17 வயதிலெல்லாம் பத்திரிகை ஆசிரியர்கள் அறிமுகமானார்கள். அப்பாதான் கோலாலம்பூருக்கு அழைத்து வந்து ஒவ்வொரு பத்திரிகைக்கும் அழைத்துச் சென்றார். உடன் அப்பாவின் தாய்மாமா ஓவியர் ராஜா இருந்தார். எழுத்து, பத்திரிகை ஆசையால் தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லாமல் 18 வயதில் கோலாலம்பூருகே வந்துவிட்டேன். ‘மன்னன்’ மாத இதழ் ஆசிரியர் எஸ்.பி.அருண் அவர்களின் நட்பாலும் வழிகாட்டுதலாலும் இதழியல் துறையில் முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டேன். பின்னர் எதிர்க்காலம் மீதான கேள்விகளுடன் 2002ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்தேன். 3 வருட ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி படிப்புக்குப் பின் அத்துறையில் டிப்ளோமா கிடைத்தது.
தொடர்ந்து பல கவிதை போட்டிகளில் முதல் பரிசு கிடைத்தது. மலாயா பல்கலைக்கழக சிறுகதை போட்டியில் 2005ஆம் ஆண்டு இரண்டாவது பரிசும் (கோணக்கழுத்து சேவல்) மற்றும் ஆஸ்ட்ரோ நாவல் போட்டிகளில் 2005ஆம் இரண்டாவது பரிசும் (ஞானத்தில் வாசலிலே) பெற்றதுண்டு. அதற்குப்பின் எந்தப் போட்டியிலும் கலந்துகொண்டதில்லை. மலேசிய பத்திரிகைச் சூழலின் மாய தோற்றமும் இலக்கிய இயக்கங்களின் பொய்முகமும் புரிந்த காலம் அது.
மா.சண்முகசிவாவை நான் சந்தித்தபோது எனக்கு வயது 22. மிக நெருக்கமாக அவரிடம் பேசத்தொடங்கியதும் இலக்கியத்தின் எழுத்தின் மீதான பார்வை மாறியது. என்னை தீவிர இலக்கியம் நோக்கி கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் மா.சண்முகசிவா. விளைவு 2005 ல் ‘காதல்’ எனும் நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் இதழை பெரு.அ.தமிழ்மணி அவர்களின் ஆதரவுடன் உருவாக்கினேன். பொருளாதாரப் பிரச்சனையால் அது நின்று போக 2007 இல் எனது சொந்த நிறுவனத்தின் கீழ் ‘வல்லினம்’ இதழ் உருவானது. இன்று அது www.vallinam.com.my எனும் முகவரியில் அகப்பக்கமாக வருகிறது.
இதுவரை எனது ஒரு நாவல், மூன்று கவிதை நூல்கள், இரு சிறுகதை நூல்கள், மூன்று பத்தி நூல்கள், இரு இலக்கிய விமர்சன நூல்கள், ஒரு நேர்காணல் தொகுப்பு மற்றும் ஒரு ஆசிரியர் அனுபவம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு என 10 நூல்கள் வெளிவந்துள்ளன. வல்லினம் பதிப்பகத்தின் மூலம் 35க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பதிப்பித்துள்ளேன்.
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக (2009- 2018) நண்பர்களின் ஒத்துழைப்புடன் கலை இலக்கிய விழா எனும் நிகழ்வின் வழி மலேசிய சிங்கை ஆளுமைகளை அறிமுகம் செய்து வந்திருக்கிறேன். சந்துருவின் ஓவிய கண்காட்சி, ஸ்டார் கணேசனின் நிழல்படக் கண்காட்சி, மேடை நாடகம், புத்தக வெளியீடுகள் என அதில் அடங்கும். மேலும் ‘காதல்’ மற்றும் ‘வல்லினம்’ இதழ் சார்பாக மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், எம்.ஏ.நுஃமான், ஷோபா சக்தி, அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, லீனா மணிமேகலை, யூமா வாசுகி, பவா செல்லதுரை, சு.வேணுகோபால், கோணங்கி போன்ற ஆளுமைகளுடனான சந்திப்புகளை ஏற்படுத்தியதுண்டு. 2010 இளம் கவிஞருக்கான விருதினை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியது. தமிழ் நேசன் நிர்வாகத்தின் கீழ் இரண்டு மாதங்கள் முகவரி எனும் வார இதழின் ஆசிரியராக இருந்து பணியாற்றினேன். இதுவரை 14 மலேசிய சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப்படங்களை இயக்கியுள்ளேன்.
பத்துமலை தமிழ்ப்பள்ளி, மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி எனத் தொடர்ந்து தற்போது (2019) சுங்கை ரம்பை எனும் தோட்டப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். கூடுதலாக யாழ் எனும் மாணவர்களுக்கான பதிப்பகத்தையும் நடத்தி வருகிறேன்.
மலேசியத் திரைப்படங்களான ‘ஜெராந்துட் நினைவுகள், மௌனம்’ ஆகியவற்றில் வசனகர்த்தாவாகவும், ‘வெண்ணிர இரவுகள்’ (மலேசியா) , ஜகாட் (மலேசியா), கபாலி (தமிழகம்) போன்ற திரைப்படங்களில் திரைக்கதையை ஒட்டிய பங்களிப்பும் வழங்கியுள்ளேன்.
ஆசிரியர் பணியை வாழ்க்கைத் தொழிலாகவும் வாண்மைத் தொழிலாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நீங்கள் உங்கள் பக்கத்தில் பதிவு செய்திருக்கின்ற கல்விசார்கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கத்தக்கவை. பணிசார் அதிகாரங்களுக்கு அப்பால் நின்று பணி புரிய நினைக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், மெல்லக்கற்போரும் பின்தங்கியோரும்தான் எனும் உங்கள் கருத்து நிறையவே நெருடுகிறது. நிறைந்த விடயங்கள் (கல்வி) தொடர்பாக பகிரவேண்டியுள்ளது. இது ஓர் புள்ளி ஆரம்பம். தொடர்கிறேன்……
நான் இலங்கையிலிருந்து ச.இந்திரகுமார் (அகவிழி எனும் ஆசிரியர்களுக்கான சஞ்சிகையின் ஆசிரியர் )