தமிழகத்தில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் இல்லத்தில் இருந்த ஒரு பகல் வேளையில் ‘காதல் இதழ் நிறுத்தப்பட்டது’ என்ற குறுந்தகவல் மணிமொழியிடமிருந்து வந்தது. மலேசியாவிலிருந்து புறப்படும்போதே ஒரு வசதிக்காக மொட்டை அடித்திருந்த மண்டையில் ‘நங்’ என யாரோ அடித்தது போல உணர்ந்தேன். உடனே தொலைப்பேசியில் அழைத்தபோது மௌனங்களாலான பெரும் இறுக்கத்தை, அழுகையை முடிந்துவிட்டதற்கான அடையாளத்தோடு மணிமொழி வெளிபடுத்தினார். ‘காதல்’ இதழ் உருவான காலங்கள் இன்பமானவை. மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள் நான், மணிமொழி, யுவராஜன், சந்துரு, தோழி, பூங்குழலி என விடிய விடிய இதழை உருவாக்கிய கணங்கள் இன்றும் நினைவில் உள்ளன.இரண்டு மணிநேரத்திற்கு ஒரு தரம் கடையில் இறங்கி தேநீர் பருகிவிட்டு காலை ஆறு மணிக்கு வீடு திரும்புவோம். படைப்புகளைச் சேகரிப்பது திருத்துவது போன்ற பணிகளை நானும், அவற்றை டைப் செய்து திருத்தம் பார்த்து வைப்பதை மணிமொழியும் செய்ய பொருளாதாரம் குறித்தான எந்தக் கவலையும் இல்லாமல் ‘காதல்’ இதழ் நகர்ந்து கொண்டிருந்தது. சந்துருவின் பங்களிப்பு இதில் முழுமையானது. காதல் இதழுக்கு அவர் அமைத்துக்கொடுத்த பக்கங்கள் தனித்துவமானவை.
ஏற்கனவே ‘மன்னன்’ மாத இதழில் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால் ‘காதல்’ இதழை பெரு.ஆ.தமிழ்மணி அவர்கள் நம்பி என்னிடம் ஒப்படைத்திருந்தார். ஏறக்குறைய அவரது அறுபதாயிரம் ரிங்கிட் நஷ்டமானப் பின்னர் ‘காதல்’ இதழ் நிறுத்தப்பட்டிருந்தது. காதல் இதழ் நிறுத்தப்பட்டபோது மனுஷ்ய புத்திரன்தான் எனக்கு முதல் ஆறுதல். மீண்டும் இதழைக் கொண்டுவர தான் உதவுவதாகக் கூறினார். நான் மீண்டும் மீண்டும் அவரிடம் ஒரே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். “எப்படி சார் புத்தகத்தைக் கொண்டு வரரது.”
மறுநாள் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்த புத்தக வெளியீட்டு விழாவில் மனுஷ்ய புத்திரனின் ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ கவிதை புத்தகத்தை வெளியீடு செய்துவைக்கும் போது ‘காதல் இதழ் ஆசிரியர் நவீன்’ என அறிவிக்கப்பட்டதும் ‘திக்’ என்றது. நின்று போன இதழுக்கு இன்னமும் ஆசிரியராக இருப்பது கூச்சத்தைக் கொடுத்தது. அங்கு வந்திருந்த எழுத்தாளர்கள் பிரம்மராஜன், சுகுமாரன், வண்ணநிலவன், இந்திரன் போன்றோரிடம் ‘காதல்’ இதழ் குறித்து பகிர்ந்து கொண்டபோதும் இதழ் நிறுத்தப்பட்ட விசயத்தை மறைத்தே வைத்தேன். மீண்டும் இதழைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தீவிரமாக இருந்தது.
0 0 0
ஓர் இரவு நானும் சிவமும் இணைந்து சிற்றிதழ் வெளியிடுவதென முடிவெடுத்தோம். சிவம் என்னுடன் இருப்பது மனதுக்குப் பெரும் ஆறுதல். இப்போது கூட மனம் சோர்வடையும் போதெல்லாம் சிவத்தை அழைத்து பேசுவதுண்டு. மஹாத்மனும் பக்கபலமாக இருந்தார். இதழ் பெயர் முடிவாகவில்லை. எப்போதும் போல சிவமும் மஹாத்மனும் ‘நீங்களே சொல்லுங்க’ என்றனர். உறங்கி விழித்த ஒரு காலையில் ‘வல்லினம்’ என்று தோன்றியது. இருவரிடமும் சொன்னேன். ஏற்றுக்கொண்டனர். லதாவிடம் கூறினேன். அப்பெயர் எவ்வகையான அர்த்தங்களைக் கொடுக்க வல்லது எனக்கூறி பாராட்டினார். தூங்கி விழித்தபோது தோன்றியது என்றேன். ஒன்றும் கூறாமல் மௌனமானார்.
‘வல்லினம்’ வெளிவர லதா மிக முக்கியக் காரணம். அவர் கொடுத்தத் திட்டங்களும் ஆறுதல்களும் தொடர்ந்து செயல்படும் தெம்பினைக்கொடுத்தது. ‘நீ கண்டிப்பாக இதழை ஆரம்பிக்க வேண்டும்’ என்று கூறிய நூலகவியலாளர் செல்வராஜா 300 ரிங்கிட் லண்டனிலிருந்து அனுப்பிவைத்தார். வல்லினத்திற்கு முதலில் கிடைத்தத் தொகை ரிங்கிட் 300.
லதாவும் அடிக்கடி பண உதவி செய்தார். (இந்த எளிய வரியைக்கூட அவர் நிச்சயம் விரும்ப மாட்டார்)இன்று அதன் எண்ணிக்கையைக் கூட்டினால் நிச்சயம் நான் பெரிய கடன்காரன். என்னிடம் ஒரு பழைய கணினி மட்டும் இருந்தது. லதாவும் செல்வராஜாவும் கொடுத்தப்பணம் ஏற்படுத்திய நம்பிக்கையில் வேலையைத் துரிதப்படுத்தினேன். உடனடியாக சம்பளத்தை எதிர்ப்பார்க்காமல் ஜீவிதா எனும் தோழி டைப் செய்து கொடுத்தார். தெரிந்த நண்பர்களிடமெல்லாம் பணம் கேட்டேன். சிலரிடம் கிடைத்தது. மா.செ.மாயதேவன் 800.00 ரிங்கிட் அனுப்பிவைத்தார். சிவம் 500 ரிங்கிட் கொடுத்தார். பலர் என் அழைப்பை எடுக்க மறுத்தனர். ஸ்கேனர், பிரிண்ட்டர் போன்ற அடிப்படையான சில பொருட்கள் வாங்கவும் பணம் கரைந்து கொண்டிருந்தது. வல்லினம் வளர்ந்துகொண்டே வந்தது.
முதல் புத்தகம் தமிழகத்தில் அச்சானது. மனுஷ்ய புத்திரன்தான் அச்சிட்டுக் கொடுத்தார். அதற்கு முன் பணமாக 5000 ரூபாய் மட்டுமே செலுத்தினேன். மிச்ச பணத்தை ஒரு வருடம் கடந்தபின் தான் செலுத்த முடிந்தது. அதுவரை அவர் அந்தப் பணம் குறித்து ஒன்றும் கேட்கவில்லை. மறந்தும் போயிருந்தார். ஆனால் புத்தகத்தை இங்கே எடுத்துவருவதில் புதிதாகப் பெரும் சிக்கல் ஏற்பட்டது. 500 புத்தகங்களை அனுப்ப ஆயிரம் ரிங்கிட் வேண்டும் என்றனர். ஒரு வழியாக ஐநூறு ரிங்கிட் செலவு செய்து சிவகுரு நிறுவனம் மூலமாக புத்தகம் மலேசியா வந்திறங்கியது ஒரு பிரத்தியேக வாசத்தோடு. சில நாட்கள் காணாமல் போயிருந்த மஹாத்மன் சிறையிலிருந்து மீண்டு வந்து வல்லினத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார்.
ஆரம்பமானது எங்கள் பணி…
0 0 0
மஹாத்மன் வல்லினத்துடன் இணைந்தது பெரும் பலம். இலக்கிய நண்பர்கள் பலரிடம் ‘வல்லினம்’ உருவாகும் முன்னரே தொலைபேசியில் அழைத்து 100 ரிங்கிட்டுகள் வாங்கத் தொடங்கியிருந்தேன். என் பட்டியலில் 15 பேர் இருந்தனர். பிந்தைய நாட்களில் பலர் இணைந்து கொண்டனர். தொலைபேசியில் அழைத்து ‘நூறு ரிங்கிட் வேண்டும்’ எனக் கேட்பது பல சமயங்களில் அவமானமாக இருக்கும். பணம் தருபவரிடம் வெளிபடும் சிறிய முணகல்கூட தொடர்ந்து யாரையும் அழைக்க விட முடியாதபடிக்கு மனதை இறுக்கமாக்கிவிடும். இதை தவிர்க்க குறுந்தகவல் மூலம் பணம் கேட்கத் தொடங்கினேன். அதையும் சிலர் கிண்டலாக ‘உங்க தொல்லை தாங்க முடியல’ எனும் போது இரவுகள் தோறும் மனம் விழித்தே கிடக்கும். இது போன்ற தருணம் எல்லாம் எனக்கு ஆறுதலாக இருந்த ஒரே நபர் டாக்டர் சண்முகசிவா.
‘நீ பணத்தை வாங்கி உன் பாக்கெட்டுல போட்டுக்கல. மலேசிய இலக்கியத்துக்குன்னு தனி அடையாளம் வேணுமுன்னு நம்ப எல்லோரும் ஆசை படுறோம். அதுக்கான ஒவ்வொருவரின் பங்களிப்பு இது. இதில் கூச்சப்பட ஒன்றும் இல்லை. மலேசிய இலக்கியம் வளரணுமுன்னு பேசிட்டு உங்கிட்ட பணம் தராதவங்கதான் வெட்கப்படணும்’.
சண்முக சிவாவின் வார்த்தைகள் என்னை தொடர்ந்து பயணிக்க உதவியது. சீ.முத்துசாமி, கோ.முனியான்டி, கோ.புண்ணியவான், சை.பீர்முகம்மது முதலான மூத்தப் படைப்பாளிகள் முதல் தேவராஜன், பச்சைபாலன், மணிஜெகதீசன், அருண், யுவராஜன், மணிமொழி, ராஜேஸ்வரி வரை பலரின் ஆதரவில் வல்லினம் விரைவாக வளர்ந்தது. (சிலர் பெயர் விடுபட்டிருக்கலாம். வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு நபர்கள் இந்தக் குழுவில் இணைந்துள்ளனர்.)
எழுத்தாளர் சங்கத்தை விமர்சித்ததற்காக பினாங்கு மாநில ஜனரஞ்சக எழுத்தாளர் ‘உங்க கூட்டமே ஒரு மாதியானதா இருக்கு… அதில் நான் இருக்க விரும்பல’ என விலகிக்கொண்டார். எழுத்தாளர் சங்கத்துக்கு 10000 ரிங்கிட் கொடுத்த மற்றுமொரு செர்டாங் எழுத்தாளர் வல்லினத்திற்கு நூறு ரிங்கிட் கொடுப்பதற்கு ‘சின்ன ஓட்டைதான் கப்பல கவிழ்க்கும்’ என விலகினார். தன்னை நவீன எழுத்தாளனாக அடையாளம் காட்டிக்கொள்ளும் சுங்கைப்பட்டாணி இளம் எழுத்தாளர் நான் எழுத்தாளர்களிடம் பணம் கேட்டு பிச்சை எடுப்பதாக நகைத்தார். எல்லாவற்றையும் தாண்டி ஒரு சங்கத்தின் தலைவர் ‘வல்லினத்தை’ தானே நடத்துவதாகவும் எனக்கு 1000 ரிங்கிட் சம்பளம் கொடுத்துவிடுவதாகவும் கூறி முகப்பு அட்டையின் ஓரத்தில் சங்கத்தின் சின்னம் இருந்தால் போதுமானது என விலை பேசினார். மலேசிய இலக்கியம் வளர வேண்டும் என மேடையில் முழக்கமிட்ட பலர் நேரில் என்னைக் கண்டவுடன் ஓடத்தொடங்கினர். பலர் தொலைபேசியை எடுக்க மறுத்தனர். சிலர் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு பணம் போட்டுவிட்டதாக பொய்யும் கூறினர். படைப்புகள் கேட்டும் பணம் கேட்டும் மலேசிய எழுத்தாளர்களை துரத்திய தினங்களில் என் எழுத்துக்கான நிமிடங்கள் குறைந்துகொண்டே வந்தது. படைப்பிற்கான மனதை நான் இழந்து கொண்டிருப்பதை அறிந்தே அனுமதித்தேன்.
அப்போதைய கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த சீ.முத்துசாமி, முதல் வல்லினம் இதழை கெடா மாநிலத்தில் வெளியீடு செய்து கொடுத்து உதவினார். எழுத்தாளர் கோ.முனியாண்டி சித்தியவான் நகரில் கலந்துரையாடல் நடத்தினார். இவர்கள் இருவரிடமும் நான் கண்ட நேர்மையும் ஒரு படைப்பாளிக்கான சமரசமின்மையும் வாழ்வு குறித்தான பல்வேறு கேள்விகளையும் அதற்கான அர்த்தம் பொதிந்த பதில்களையும் எனக்குக் கொடுத்து கொண்டிருந்தது. எழுத்து மற்றும் வாழ்வுக்குண்டான நுண்ணிய முடிச்சு சில எழுத்தாளர்களின் மூலம் கண்டடைய முடிகிறது.அதை பணம் கிடைத்தால் ‘சண்டைகோழிக்கு’ சப்புக்கொட்டிகொண்டு வசனம் எழுதும் எந்த தமிழக எழுத்தாளனும் எனக்குக் காட்டவில்லை. எந்த சக்திக்கு முன்னும் கூன் விழாமல் நின்ற சீ.முத்துசாமி கோ.முனியாண்டியின், ஆளுமைகள் வல்லினம் தனக்கான பாதையில் செல்லும் வல்லமையைக் கொடுத்தது.
மற்றுமொரு முக்கியமான ஆளுமை சண்முகசிவா. நடுகாட்டில் அமர்ந்துகொண்டு நான் மதுவைத் தொடுவதில்லை என்பவனைவிட பாரில் அமர்ந்துகொண்டு தெளிந்த அறிவுடன் இருப்பவன் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பான். சண்முகசிவா இருக்கும் இடம் மிக முக்கியமானது. அவரின் குரலுக்கு பல இடங்களில் மதிப்புண்டு. அவரைத் தேடி வந்த விருதுகளையும் அவற்றை அவர் நிராகரித்த விதத்தையும் நான் நன்கு அறிவேன். தனக்கிருக்கும் தொடர்புகளை தனது சுய நலத்திற்காகவும் இதுவரை பயன்படுத்தியதில்லை என்பதையும் என்னால் உறுதியாகக் கூற முடியும். மருத்துவம் தவிர்த்து அவரை நாடிப்போபவர்கள் கொண்டிருக்கும் காரணங்கள் அதிர்ச்சியைக் கொடுக்கும். வேலை வேண்டும் என்பது முதல் விமானம் ஏற டிக்கெட் வேண்டும் என்பது வரை அந்தப் பட்டியல் நீண்டிருக்கும். அவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் டாக்டர் சண்முக சிவாவினால் உதவி கிட்டியதை அருகில் இருந்து பார்த்தவன் நான். சண்முக சிவா அடிக்கடி சொல்வார், ‘பலரோடு நான் முரண் படுகிறேன். ஆனால் இவர்களுக்கு உதவ இந்த முரண்படுபவர்கள் தேவைப்படுகிறார்கள். இது சமரசம் இல்லை. ஒருவன் பணத்தை பதுக்கிவைத்துள்ளான். மற்றவனிடம் தேவை இருக்கிறது. நான் இவர்கள் இருவரையும் இணைத்து வைக்கிறேன்.’
நான் சண்முகசிவாவிடம் கற்றுக்கொண்டது நிரைய. ஆயினும் அவர் இலக்கியம் சார்ந்த விமர்சனங்கள் வெளிப்படையாக இல்லை என்பதிலிருந்து விரிகிறது அவர் மீதான என் விமர்சனம். எனக்கு மட்டுமே தெரிந்த சண்முகசிவா விமர்சனம் செய்யத் தொடங்கினால் பலர் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். அவரை நண்பராக நினைப்பவர்களும்…
0 0 0
ஐரோப்பா நாடுகளுக்கு வல்லினம் செல்ல நூலகவியலாளர் செல்வராஜா பெரும் பங்காற்றினார். அதிகம் பயணம் செய்யும் அவருடன் எப்போதும் வல்லினம் இருக்கும். அதை அவர் மலேசிய இலக்கிய வளர்ச்சிக்காகச் செய்தார் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் மலேசிய இலக்கியம் அதன் எல்லைகளைக் கடக்க பெரும் பங்காற்றியவர் செல்வராஜா. அவருடன் நான் லண்டனில் இருந்த 7 நாட்களும் ஒரு தீவிரமான படைப்பாளியின் மனோநிலையில் இருந்தார். (அவர் எழுத்தாளர் அல்ல) மார்க்ஸியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் பேச அவரிடம் விசயங்கள் நிறையவே இருந்தன. மிக முக்கியமான பிரதிகளை வாசித்திருந்தார். அது குறித்து பேசவும் செய்தார். ஒரு செயலையும் அதன் பின் பொதிந்துள்ள அரசியலையும் அவரால் உணர முடிந்திருந்தது. அவர் அறிமுகம் செய்து வைத்த ஐ.தி.சம்பந்தன் அவர்களும் தன் பங்கிற்கு ஒரு மாத இதழ் நடத்திக்கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்த இரண்டு தினங்களும் தன் மகனைப்போலவே நடத்தினார். செல்வராஜாவின் மூலம் கிடைத்த மற்றுமொரு நட்பு இளைய அப்துல்லாவினுடையது. தீபம் தொலைக்காட்சிக்காக அவர்தான் 1 மணிநேரம் என்னை நேர்காணல் செய்தார். நேர்காணலுக்குப்பின் மிக இயல்பாகி நெருங்கிய நட்பாக மலர்ந்தது.
இலங்கை வாழ்வு சூழல் கொடுத்தப் படிமங்கள் பொதுவாகவே இலங்கைத் தமிழர்களை நுட்பமாகச் சிந்திப்பவர்களாக மாற்றியிருந்தது. ஏறக்குறைய இதே போன்ற காத்திரமான போக்கு உள்ளவராக ‘தேசம்’ ஜெயபாலன் இருந்தார். ஒரு வங்கியின் உயர் அதிகாரியாக இருந்த அவர் நான்கு இதழ்களை நடத்திக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. நான் சென்றிருந்த போது ‘இன்மை’ எனும் சிற்றிதழை ஜெயபாலன் வெளியிட்டிருந்தார். ஜெயபாலன் மூலமாக யமுனா ராஜேந்திரனைச் சந்தித்தேன். உரையாடல் முடிவில் தனது எழுத்துகள் குறித்து கேட்டார். நான் ஏற்கனவே அறிந்த விசயமெல்லாம் அவர் எழுத்தில் குழம்பிவிடும் உண்மையைக் கூறினேன். எளிய தகவல்களையும் அவர் குழப்பி எழுதுவது வாசிக்க சிரமமாக உள்ளது என்றேன். பலரும் அப்படிதான் கூறுவதாக அவர் குறை பட்டார்.
இதே போன்று பிரான்ஸ் நகரில் லஷ்மி மற்றும் பிரதீபன் உயிர்நிழல் தயாரிப்பில் தீவிரமாக இருந்தனர். சுமாரான வருவாய் கொண்டிருந்த சூழலிலும் இதழை அவர்கள் தொடர்ந்து கொண்டு வருவதில் முனைப்பாக இருந்தனர். ஷோபா சக்தி தனி இயக்கமாகவே செயல்பட்டார்.
லண்டன் மற்றும் பிரான்ஸ் பயணம் இலங்கை தமிழர்களின் கலை இலக்கியம் தொடர்பான தீவிரத்தை அவதாணிக்க உதவியது (யமுனா ராஜேந்திரன் தமிழ் நாட்டிலிருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்திருந்தார்). புலம்பெயர்ந்த சூழலிலும் அவர்கள் தங்களுக்கான அடையாளத்தைப் பெற்றிருந்ததையும் ஒவ்வொரு படைப்பாளியும் தான் சார்ந்த இலக்கியம் அல்லது கலைக்காக அக்கறையோடு சில மணிநேரங்களையும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியையும் ஒதுக்குவது அவர்கள் கொண்டிருந்த தீவிரத்தைக் காட்டியது. குறிப்பாக ‘தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை’ போன்ற அசட்டுத்தனமான புலம்பல்கள் அங்கு இல்லாமல் இருந்தது நிம்மதியாக இருந்தது. நான் சந்தித்த வரை இலங்கை படைப்பாளிகளில் பெரும்பாலோர் எதிர்ப்பார்ப்பில்லாமல் உதவுபவர்கள் உபசரிப்பவர்கள். நாம் எதிர்ப்பார்ப்பில்லாமல் நேர்மையாக நடந்துகொள்ளும் வரை.
வல்லினம் செல்லப்போகும் இலக்கை உறுதி செய்வதில் அந்தப் பயணம் மிக முக்கியப் பங்கை வகித்தது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வும் அவர்கள் மலேசிய இலக்கியத்தின்பால் கொண்ட அக்கரையும் அவர்கள் தனித்தன்மையும் வல்லினம் முற்றிலும் மலேசிய வாசத்தோடு வெளிவருவதை உறுதிபடுத்தியது. இதில் எம்.ஏ.நுக்மானின் மலேசிய வருகையும் அடங்கும். அவர் மலேசியாவில் இருந்த ஒரு வருடமும் வல்லினத்திற்கான நல்ல ஆலோசகராக இருந்தார் எனலாம். அவர் அறிமுகத்தில் வல்லினம் பலர் கைகளுக்குக் கிடைத்தது. லண்டன் மற்றும் இலங்கை பத்திரிகைகளில் வல்லினம் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஓரளவு வல்லினம் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு சூழலில் சிவா பெரியண்ணனுடன் ஏற்பட்ட நட்பு வல்லினத்திற்குப் புதிய வடிவம் கொடுத்தது.
சிவா பெரியண்ணனை எனக்கு 8 வருடங்களுக்கு முன்பே அறிமுகம். அதிகம் பேசியதில்லை. அவருக்கும் யுவராஜனுக்கும் எங்காவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு யாரையாவது முறைத்துப் பார்த்தபடி இருப்பதுதான் முழு நேர பணி. பகுதி நேரமாக இலக்கியம் படித்துக்கொண்டும் என்றாவது ஓய்வு கிடைத்தால் பல்கலைக்கழக புத்தகங்களைப் புரட்டிக்கொண்டும் இருப்பார்கள். வல்லினம் எங்களை இணைத்திருந்தது. சிவா வல்லினத்தை அகப்பக்கமாக்க உதவினார். அவரே வல்லினத்தின் பெயரை பதிவு செய்து அதற்கு பணமும் செலுத்தி அகப்பக்கத்தையும் வடிவமைத்துக் கொடுத்தபோது எளிதாக நன்றி மட்டுமே சொல்ல முடிந்தது. அகப்பக்கத்தில் வல்லினத்தை இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் படிப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது. இணையத்தின் பலம் எனக்கு ஓரளவு புரிந்தது.
இதே சமையத்தில் எனக்கும் எழுதுவதற்கான படிப்பதற்கான அவகாசம் தேவைபட்டது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை 100 ரிங்கிட் கொடுக்கும் சிலரின் முணகல்கள் கொஞ்சம் அதிகமாகவே கேட்கத்தொடங்கின. பணம் கொடுப்பதாலேயே சில சமயங்களில் சிலரை பொருத்துப் போகவேண்டியது படைப்பதற்கான மனதை மேலும் நசுக்கத்தொடங்கியது. இலக்கியம் கலை என்று கூறி மலேசிய இலக்கியத்தை அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்கும் சிலரின் உதவி வல்லினத்திற்குத் தேவையில்லை எனவும் தோன்றியது.
இந்தச் சமையத்தில் சிங்கை இளங்கோவன் மலேசியா வந்திருந்தார். நான்கு இரவுகள் அவருடனான (மஹாத்மன், யுவராஜன் மற்றும் சிவா பெரியண்ணன் அதில் இருந்தனர்) சந்திப்பில் ஒரு கணம் மனம் திறந்து முதன் முறையாகச் சொன்னேன்.
‘வல்லினத்திற்காக பலரிடம் சமரசம் செய்வது போல் உள்ளது சார். நிறுத்திடலாமுன்னு இருக்கேன்…’
0 0 0
ஏதோ ஒரு சக்தியின் முன் மண்டியிட மனிதன் தயாராக இருக்கிறான். மதத்தின் முன், மதம் முன்னிருத்தும் கடவுளின் முன், சாதியின் முன், பதவியின் முன், பணத்தின் முன், புகழின் முன், சமூக மதிப்பின் முன் என அதன் வளையங்கள் விரிகின்றன. இவை கண்ணுக்குத் தெரியாமல் வெவ்வேறு அளவுகளில் சதா மனிதனின் பாதங்களைத் தேடி அழைகின்றன. ஆச்சரியமாய் நாம் ஏதோ ஒரு வளையத்தில் கால்களை வைத்திருப்பது காலம் கடந்துதான் புரிகிறது.
கடவுளை நம்புவதும் நான்கு இலக்க நம்பரை நம்புவதும் என்னளவில் ஒன்றுதான். இரண்டையும் நம்புவது ‘கஷ்டத்துக்கு உதவும்’ என்ற அடிப்படை சித்தாந்தத்தில்தான். அந்த நம்பிக்கைகாகக் காலம் முழுவதும் ‘விரயம்’ செய்ய தயாராக இருக்கிறோம். சாதி அடையாளத்தை விட முடியாததும் சிகரெட், மதுவை விட முடியாததும் அடிப்படையில் பேதங்கள் இல்லாததாகவே எனக்குப் படுகிறது. இரண்டும் இறுதியில் கொடுப்பது பல்வேறு நியாயங்கள் சொல்லும் அர்த்தங்கள் அற்ற போதையைத்தான். இதில் சரி தவறுகள் இல்லை. ஆனால் அனைத்தும் வளையங்கள். வெளியிலிருந்தும் நமக்குள்ளிருந்தும் வீசப்படும் வளையங்கள்.
என் கால்களைச் சுற்றிலும் நிறைய வளையங்கள் இருந்தன. கடவுள் வளையம், புகழ் வளையம், பெண்கள் வளையம் என வளையங்கள் பல என் கால்களை இறுக்கிக் கிடந்த காலங்கள் உண்டு. ஒன்றை எடுத்து வீசினால் மற்றதில் கால்கள் இருக்கும். கால்களை வளையங்களிலிருந்து மீட்க முடியாதது சோர்வினைக் கொடுக்கும். எல்லா வளையங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடொன்று தொடர்பு வைத்திருப்பது ஆச்சரியத்தைக்கொடுக்கும். வளையங்களை விடுவிப்பது மிக சிரமம் அவை வளையங்கள் என அறிந்து கொள்ளாதவரை. வளையங்களிலிருந்து விடுபதுவதற்கான பெரிய காரணங்கள் எப்போதும் இருந்ததில்லை. வளையங்களிலிருந்து கால்களை எடுக்கையில் கிடைக்கும் சுதந்திரம் படைப்புக்கான ஜீவன். ஒரு கட்டத்தில் வல்லினமும் ஒரு வளையமாக உருமாறியிருப்பதைக் கண்டேன்.
வல்லினம் அதன் பொருளாதாரா தேவைக்குப் பலரையும் நம்பியே உருவாக்கப்பட்டிருந்தது. அதன் விரிவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பலரின் உதவி அவசியமாக இருந்தது. இதற்காக நான் முரண்படும் பலரிடமும் சமரசம் செய்துகொண்டு கை குலுக்குவது மன உளைச்சலைக் கொடுத்தது. ஒரு படைப்பாளன் இயக்கவாதியாக மாறும்போது இயல்பாகவே சில உபரிகள் அவனைத் தொற்றிக்கொள்கின்றன. எழுத்தாளனாக இருக்கையில் உள்ள சுயம் மெல்லக் கெடுவதாக உணர்ந்தேன். எழுதுவதை மட்டும் பணியாகக் கொண்டிருந்தால் இத்தகைய கைகுலுக்களுக்கு அவசியம் இருக்காது எனத் தோன்றியது. தனிமை ஏற்படுத்தும் சுதந்திரமும் எதிர்ப்புணர்வும் இன்னும் வீரியம் மிக்கவை. வல்லினத்தை முழுமையாக நிறுத்திவிட்டு வாசிப்பிலும் எழுத்திலும் இன்னும் தீவிரம் கொள்ளவேண்டும் என முடிவெடித்திருந்த போது அந்த எண்ணத்தை தகர்க்கும் படி இருந்தது இளங்கோனுடனான சந்திப்பு.
ஓர் எழுத்தாளராக, மேடை நாடக இயக்குனராக, தீவிர விமர்சகராக பெரும் ஆளுமையுடனும் தெளிந்த அறிவுடனும் இளங்கோவன் எங்கள் முன் வீற்றிருந்தார். சமரசம் செய்துகொள்ளாமல் காலம் முழுதும் அவர் கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வு ஒரு பெரும் தீயாய் அவர் சொற்களில் தெரித்து வெளிபட்டபடி இருந்தது. ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஆளுமை அவரிடம் நிரைந்திருந்தது. இளங்கோவன் எந்த இயக்கத்துக்காகவும் தன்னை சமரசம் செய்துக் கொள்ளாதவாராக இருந்தார். அவரே ஓர் இயக்கமாகவும் தெரிந்தார். நள்ளிரவைத் தாண்டியும் எங்களுடன் பேசிக்கொண்டே இருந்தார். அரசியல், சமூகம், இலக்கியம் என அவர் பேச்சு பல தளங்களில் விரிந்தாலும் இறுதியில் அது எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய நேர்மையில் வந்து அடங்கியது.
அடுத்த சந்திப்பு வழக்கறிஞர் பசுபதியுடனானது. இந்தச் சந்திப்பில் யுவராஜன் மற்றும் தோழி உடன் இருந்தனர். ஆரம்பத்திலிருந்தே பசுபதி வல்லினம் இதழுக்கு நிறைய உதவியுள்ளார். அவருக்கு வல்லினத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் இருந்தது. அன்றைய உரையாடலில் நாங்கள் வல்லினம் குறித்து பேசவில்லை. ஆனால் பசுபதி உருவாக்கியுள்ள தனி சாம்பிராஜியம் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கியே அவரது ஒவ்வொரு சிந்தனையும் இருப்பதும் அதற்கான எல்லா சக்திகளையும் அவர் பெற்றிருப்பதும் நிரைவாக இருந்தது. அவரைச் சுற்றியுள்ள மனிதர்களும் எந்த அரசியல் சகதிகளுடனும் கைகுலுக்காதவர்கள். கல்விமான்கள். தமிழ் ஆர்வளர்களாக இருந்தனர்.
சமூகத்தின் நன்மைகாக அரசியல்வாதிகளுடன் கைகுலுக்கிக்கொண்டேன் எனக் கூறிக்கொள்ளும் கூட்டத்திற்கு மத்தியில் தங்கள் தனிப்பாதையில் எவ்வித சமரசமும் இன்றி பெரும் இயக்கமாக பயணிக்கும் இவர்கள் வல்லினத்தின் அடுத்த பரிமாணத்தை நான் கண்டடைய உதவினார்கள்.
பெரிய பணச்செலவின்றி யாரையும் நம்பாமல் எவற்றோடும் சமரசம் செய்துகொள்ளாமல் எழுத்தையும் சிந்தனையையும் சுதந்திரமாகச் செயல்படவைக்க தகுந்த சக்திமிக்க ஊடகம் இணையம் என முடிவெடுத்தேன். உதவ சிவா பெரியண்ணன் தயாராக இருந்தார். எப்போதுமே படைப்புக்காக என்னைக் கெஞ்ச வைக்கும் யுவராஜன் ஆச்சரியமாய் இரண்டு கட்டுரைகள் கொடுத்துள்ளார். சிவம் தொடர்ந்து உடன் வருவேன் என்றார். மஹாத்மன் பிழைத்திருத்தம் பார்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, டாக்டர் சண்முகசிவா என மூத்த இலக்கியவாதிகள் பலரும் வல்லினம் இணைய இதழுக்காகக் ஆர்வத்துடன் காத்திருக்கத் தொடங்கினர்.
வல்லினம் எதை கொடுத்ததோ இல்லையோ ஆன்மாவுக்கு நெருக்கமான சில நட்பைக் கொடுத்திருக்கிறது. நல்ல படைப்பாளிகளைக் கொடுத்திருப்பது போலவே…
29.08.09 முதல் வல்லினம் மாத இதழாக இணையத்தில் மலர்ந்திருக்கிறது. அதற்கே உரிய காத்திரத்தோடும் சில ஆயுதங்களோடும்.
Unggall uzaippu veen pohgaathu.. 🙂
பட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல நவீன். இன்னும் வரவேண்டும். எழுத்தாளர் சங்க தலைவராக வரவேண்டும்.. என் வாழ்த்துகள்
பத்திரிக்கை ஆரம்பிப்பது என்பது எளிதல்ல.அதைத் தொடர்ந்து நடத்துவது எளிதான செயலும் அல்ல.அதில் ஏச்சுக்கள், பேச்சுக்கள் சாதாரணம்.அனைத்தையும் சீர்ணித்துக்கொண்டால் மட்டுமே வெற்றி பெறுவது சாத்தியம்.போராட்டக் களத்தில் தாங்கள் வென்றீர்கள்.அந்த சாதனையை வெற்றிக்குப்பினார் நினைக்கும் போது வலி மறந்து போகும்.தொடரட்டும் இலக்கிய பணி.நல்லவர்கள் வல்லவர்கள் என்றும் துணை நிற்பர்.
வாழ்துக்களுடன், மதிவாணன், சென்னை
பயணங்கள் முடிவதில்லை…போராட்டங்கள் என்றுமே ஓய்வதில்லை.தொடரட்டும்..
welldone Navin…. padittatum oru nimidam piramicchu poyidden… thodarattum unggal pani….
இலக்கியம் எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் உள்ள நெருக்கத்தை அப்படியே நூலாக்கும்போதுதான் நமக்கு மிகப்பெரிய கடினமான பணி துவங்கிவிடும். ஏனென்றால் இலக்கியம் படைப்பது தனி நபரைச் சார்ந்தது. அதுவே பத்திரிகை என்று வடிவெடுக்கும்போது உருவாக்கத்தில் துவங்கி வாசகர் வரை துணை நிற்கவேண்டும். ஒரு இடம் விடாமல் நம்முடன் இணைந்திருப்பவர்களை நாம் தக்கவைக்கவேண்டுமென்றால் நாம் சமரசம் செய்ய வேண்டியது இருக்கும், இல்லையென்றால் எழுத்தின் தரம் வாசகனை வசிகரீக்கவேண்டும். இந்த இடைப்பட்ட நிலையில் ஆசிரியராக பணியாற்றி முழுமையாக தன்னுடைய உழைப்பினால் பொருளாதார ரீதியில் உருவாக்கும்போது ஒவ்வொரு மாதமும் நிறைமா வலியை ஏற்படுத்தி பிரசவித்தால்தான் பத்திரிக்கை குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.
நம்முடைய கற்பனைக்கும், கனவுகளுக்கும் எதிர்நிலைப்பாடு உள்ளவர்களோடு ஒன்ற முடியாத நிலை ஏற்படும்போது நமக்கான ஆதரவு கைகளும் சுருங்கிக்கொண்டிருக்கும் இதையும் மீறி நாம் வெற்றி பெற்றிருக்கோமென்றால் நம்முடைய எழுத்துக்கள் நமக்கான ஜீவனாகவும், அதை வாசிக்கின்ற வாசகனை நம்முடைய ஏட்டினை எதிர்பார்க்கின்ற நிலைக்கு நாம் இலக்கியத்தையும், இதழையும் தரம் உயர்த்தி பிடிக்க வேண்டும்.
கடுமையான போராட்டங்களோடுதான் ஒவ்வொரு பத்திரிகையும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இதழின் போராட்டங்களும் லட்சிய தாகமும் ஊக்கத்தையும் இதில் காணும்போது இன்னும் கூடுதலான இலக்கை நோக்கி நீங்கள் பயணிப்பீர்கள். அதுவரையில் கடினமான பணியாகத்தான் இருக்கும். வாழ்த்துக்கள் தொடர் முயற்சி வெற்றிக்கு.
வல்லின வளர்ச்சி மலேசிய இலக்கியத்தின் அஸ்திவாரம். ஓர் உதாரணம். வீழ்ந்தாலும் விதைகளாய் மலரும்.
Thangal pani sevvane thodaravum vetriperavum manamaarntha vaalthukkal. Thodarbukku anjal mugavari undaa? Batu Gajah Na.Sinnappan. sinnappannadason@yahoo.com.
valllinamm@gmail.com
நான் ஜெயமோகனின் வலைத்தளத்தை தவறாமல் படிப்பவன். அதன் வழியேதான் நவீனையும், வல்லினம் இதழ் பற்றியும் அறிய வந்தேன். இன்றுதான், சிறிது நேரம் ஒதுக்கி, வல்லினம் வளர்ந்த கதை படித்தேன். இனிமேல், இதுவும் நான் வார இறுதியில் படிக்கும் ஒரு இதழாக இருக்கும். வல்லினம் தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி. வல்லினம் மாத இதழாக வெளிவருகிறது.
‘‘கடவுளை நம்புவதும் நான்கு இலக்க நம்பரை நம்புவதும் என்னளவில் ஒன்றுதான். இரண்டையும் நம்புவது ‘கஷ்டத்துக்கு உதவும்’ என்ற அடிப்படை சித்தாந்தத்தில்தான். அந்த நம்பிக்கைகாகக் காலம் முழுவதும் ‘விரயம்’ செய்ய தயாராக இருக்கிறோம். சாதி அடையாளத்தை விட முடியாததும் சிகரெட், மதுவை விட முடியாததும் அடிப்படையில் பேதங்கள் இல்லாததாகவே எனக்குப் படுகிறது. இரண்டும் இறுதியில் கொடுப்பது பல்வேறு நியாயங்கள் சொல்லும் அர்த்தங்கள் அற்ற போதையைத்தான். இதில் சரி தவறுகள் இல்லை. ஆனால் அனைத்தும் வளையங்கள். வெளியிலிருந்தும் நமக்குள்ளிருந்தும் வீசப்படும் வளையங்கள்’’
உங்கள் சொற்கள் நேர்மையானது..
இனிய கால வழிப்பயணம் வென்றெடுத்த நவீனுக்கு இனிய வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி ஆழமானதும் திறனுடையும் ஆகும் வாழ்க இன்னும் பல ஆண்டுகள் இலக்கியம் தொடர்ந்து இயங்கிட என் அன்பு வாழ்த்துக்கள்
அன்புடையீர், வணக்கம். வல்லினம் இதழுக்கு நான் படைப்புகளை அனுப்புவதற்கு விரும்புகிறேன். அவ்வாறு அனுப்ப வேண்டுமெனில் எந்த தேதிக்குள் ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்ற விபரத்தினை அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் மின்னஞ்சல் முகவரியையும் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றியுடன்
பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
ம.நவீன் பற்றிய ஏற்கெனவே நண்பர் இராம கண்ணபிரான்வழி அறிந்திருந்தேன். ‘சிகண்டி’ புதினம் குறித்த கலந்துரையாடலின்போது அண்மையில்தான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அளவிடற்பகரிய ஆற்றலுடன் பல்திறன் கொண்ட படைப்பாளர் என்று உவந்தேன்.
வல்லினம் வளர்ந்த கதையைப் படித்தபோது ஓர் இதழாசிரியர் அதனை உயிர்ப்புடன் இயங்க வைக்கப் பட்ட சிரமங்களை உணர்ந்தேன். சிங்கப்பூர் சூழலைவிட மலேசியாவில் தமிழ் இலக்கிய இதழைப் படிப்போரின் பரப்பு விரிந்தது.
வேதனை இல்லையெனில் சாதனையும் இல்லைதானே! நான் சந்தா செலுத்தி வல்லினத்தைப் படிக்க முடிவெடுத்து விட்டேன். தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி!