வல்லினம்: நேற்று – இன்று – நாளை

imagesவல்லினம் பதினோராவது ஆண்டில் நுழைகிறது. 115ஆவது இதழ். ஒருவகையில் மலேசிய நவீன தமிழ் இலக்கியத்துக்கான பெரும் தொகுப்பு என வல்லினம் அகப்பக்கத்தைச் சொல்லலாம். கலை இலக்கியப் பதிவுகள், விமர்சனங்கள், வரலாறு, அரசியல், ஆவணப்படங்கள், நிழற்படங்கள் என பல்வேறு ஆக்கங்கள் உள்ள இந்தத் தளம் மலேசியத் தமிழ்ச் சூழலின் கடந்த ஐம்பது ஆண்டுகாலச் சித்திரத்தை எளிதாக ஒரு புதிய வாசகனுக்கு வழங்கிவிடும். இனி மலேசியத் தமிழ் இலக்கியம் செல்லக்கூடிய பாதைகளையும்   உள்வாங்குவதற்கான தரவுகளின் தொகுப்பாக வல்லினம் உள்ளது.

வல்லினம் இலக்கியக் குழு என்பது பதிவு செய்யப்படாத அமைப்பு. மலேசிய இலக்கியத்தை முன்னெடுக்கும் ஊக்கத்துடன் செயல்பட இணைபவர்களுடன்  10 ஆண்டுகளாக தன் பயணத்தைத் தொடர்கிறது. அந்த எண்ணத்தில் இருந்து விலகுபவர்கள், வேறு வகையில் இலக்கியத்தை முன்னெடுக்க முயல்பவர்கள், இலக்கிய முன்னெடுப்பில் சோர்வடைபவர்கள் என வல்லினம் செயல்பாட்டில் இணைந்தவர்கள் விலகுவதும் ஒவ்வோர் ஆண்டும் நடந்துவருகிறது. வல்லினத்தைப் பொறுத்தவரையில் அதன் நோக்கம் மிகத் தெளிவானது. அதே சமயம் அதன் முன்னெடுப்புகள் குறுகியகாலத் தேவைக்கானதும் அல்ல.

வல்லினம் தொடங்கப்பட்ட காலத்தில் நான்கு அசைக்கமுடியாத கருத்தாக்கங்கள் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் நிலவின.

  1. இலக்கியத்தை அரசியல்வாதிகள் அல்லது புரவலர்கள் ஆதரவுடன்தான்03 முன்னெடுக்க முடியும்.
  2. இரண்டாவது மலேசியாவில் தமிழ்க் கல்வியின் தரம் தமிழகம் அல்லது இலங்கையைக் காட்டிலும் எளிமையானது என்பதால் தீவிர இலக்கியப் போக்கு ஒவ்வாது.
  3. மூன்றாவது, மலேசிய இலக்கியத்தை வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகள் (குறிப்பாகத் தமிழகம்) திட்டமிட்டே மறுக்கின்றனர்.
  4. நான்காவது நாளிதழ்களின் துணையில்லாமல் மலேசியாவில் ஒரு இலக்கியவாதி வளரமுடியாது.

கெடா தொடங்கி ஜொகூர் வரை இந்தக் கருத்து செல்லும் இடங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டன. பல மூத்த படைப்பாளிகளின் நேர்காணல் தொடங்கி இலக்கியங்களை ஒவ்வொரு காலத்திலும் முன்னெடுத்த தனிநபர் மற்றும் இயக்கங்கள் வரை இந்தக் கருத்தைத்தான் கூறினர். இதில் மாற்று கருத்து இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு தங்களால் முடிந்த எளிய முயற்சிகளைச் செய்தபடி இருந்தனர். இந்த நான்கு கருத்தாக்கங்களை அசைத்து, பிடுங்கி வீசியதுதான் வல்லினம் செய்த முதன்மையான பங்களிப்பு என்பேன்.

IMG-20171201-WA0023கடந்த பத்து ஆண்டுகளில் வல்லினம் பதிப்பித்த முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், இயக்கிய ஆவணப்படங்கள், சடக்கு எனும் புகைப்படத் தொகுப்பு முயற்சி, வல்லினம் பட்டறைகள், வெளிநாட்டு ஆளுமைகளுடன் கலந்துரையாடல்கள், கண்காட்சிகள், இலக்கியப் பயணங்கள் என அனைத்துமே அரசியல்வாதிகளின் ஆதரவு இன்றியே முன்னெடுக்கப்பட்டன. முதல் கலை இலக்கிய விழாவில் 35 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். பத்தாவது கலை இலக்கிய விழாவில் 320  வாசகர்கள் வரை திரண்டனர். சிறப்பு விருந்தினராக அரசியல்வாதிகள் தனவந்தர்கள் வந்தால் மட்டுமே அரங்கு நிறையும் எனச் சொல்லிக்கொண்டிருந்த சம்பிரதாயமான எண்ணங்களை இலக்கியம் எனும் ஒற்றை சக்தியைக் கொண்டே வல்லினம் தகர்த்தது.

புதிதாக எழுத வரும் இளைஞன்கூட தமிழின் சிறந்த ஆக்கங்களை வாசித்து அறிந்துகொள்ளஉதயா வைத்தது வல்லினத்தின் இரண்டாவது சாதனை எனலாம். தொடர் பட்டறைகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள் என மு.வ, ந.பா, அகிலன் எனத் தொடங்கி ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன் வரை மட்டுமே பேசப்பட்டுக்கொண்டிருந்த மலேசிய நவீன இலக்கியச் சூழலை மாற்றியமைத்து, தமிழின் சிந்தனையாளர்கள், விமர்சகர்கள், படைப்பாளிகள் என பல ஆளுமைகளை வெகுமக்கள் மத்தியில் விரிவாக அறிமுகப்படுத்தியதில் வல்லினத்தின் பங்கு முக்கியமானது. இலக்கியத்தைத் தீவிரமாக முன்னெடுக்க முடியாத சோம்பேறிகள், அல்லது புனைவின் புதிய சாத்தியங்களைத் தொடமுடியாத ஆளுமையற்ற படைப்பாளிகள் வாசகர்களின் நிலையைக் காட்டித் தப்பித்துக்கொண்டிருந்த சூழலில் வல்லினம் புதிய வாசகர்களை உருவாக்கி தரமான படைப்புகளுக்கான களங்களை விரிவாக்கியது. அங்கிருந்து புறப்பட்டு மேலும் சில சிற்றிதழ்களும் இணைய இதழ்களும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மலரவும் தொடங்கின.

coverவானம்பாடி போன்ற நாளிதழ்கள், எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள், ரெ.கார்த்திகேசு , சை.பீர்முகம்மது போன்ற வசதி, வாய்ப்புகள்கொண்ட மூத்த படைப்பாளிகள் மூலம் மட்டுமே குறிப்பிட்ட காலம் வரை மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முகம் வெளிநாடுகளில் அறிமுகமானது. தமிழகம் மற்றும் இலங்கை கல்வி சூழலிலும் மலேசியாவின் மீடியக்கர் படைப்புகள் மட்டுமே  அறிமுகம் கண்டன. விளைவாக இவர்கள் அங்குள்ள கல்விக்கூட நூலகம் அல்லது ஒரு சில தனியார் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இணைய முடிந்தது. தமிழ் எனும் மொழியில் இயங்குவதால் எந்த நாட்டின் தமிழ்ப் படைப்பையும் சில தொடர்புகள் மூலமாக இன்னொரு தேசத்தின் பாடத்திட்டத்தில் அயலக இலக்கியமாகச் சேர்க்க இயலும்; ஆனால் தேர்ந்த வாசகர்களால் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு பரவலான கவனத்துக்குச் செல்வதே அதற்கான அங்கீகாரம் என்பது இன்று வரை அறியப்படாமல் இருப்பது ஆச்சரியம். எல்லா காலத்திலும் அவ்வாறான வாசகர்களால்தான் ஒரு படைப்பு முன்னெடுக்கப்படுகிறதே தவிர. கல்விக்கூடங்களால் அல்ல. சுந்தர ராமசாமியின் மலேசியப் பயணம் குறித்த வானொலி நேர்காணல் தொடங்கி 2005இல் மலேசியாவுக்கு வந்து சென்ற ஜெயமோகன் வரை மலேசிய இலக்கியம் என்பது தமிழகத்தின் கல்விக்கூடங்களில் கருத்தரங்குகள் நடத்தும் கூட்டம் மட்டுமே எனும் எண்ணமே இருந்து வந்துள்ளது. 2007இல் வல்லினம் அச்சு இதழ் உருவானபின் ஆங்காங்கு தனித்தனியாகத் தீவிரமாக தமிழ் இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த மூத்த – இளம் படைப்பாளிகளை ஒன்றிணைத்துச் செயல்பட்டதன் வழி அவ்வெண்ணம் இன்று மொத்தத் தமிழ் இலக்கியச் சூழலை மாற்றியுள்ளது.

வல்லினத்தில் இணைந்த நண்பர்கள் முதலில் நாளிதழைப் புறக்கணித்தனர். இது யாருடைய25 கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாய் நிகழ்ந்தது. சமகால இலக்கிய வாசிப்பு அற்ற நாளிதழ்களின் ஆசிரியர்கள் தங்கள் படைப்பைப் பிரசுரிப்பதையும் அதன் தரத்தைப் பற்றி பேசி செறிவாக்கம் செய்வதும்  நகைமுரண் என புதிதாக எழுந்து வந்த படைப்பாளிகள் அறிந்தே வைத்திருந்தனர். பல இளம் தலைமுறை படைப்பாளிகள் தங்களுக்கான தனித்த வலைத்தளங்களை உருவாக்கிக்கொண்டனர். வல்லினம் அகப்பக்கம் அவர்களை பரந்த வாசகர் பரப்புக்கு அழைத்துச்சென்றது.

இவ்வாறு அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு இளம் படைப்பாளியும் எவ்வித அதிகாரத்தின் பின்னும் செல்லாமல் இலக்கியம் எனும் கலை வடிவத்தை மட்டுமே நம்பி தனது முயற்சியை முன்னெடுக்க இயலும் எனும் நம்பிக்கையை வல்லினம் மலேசிய நிலத்தில் விதைத்துள்ளது. அவ்வாறு மலேசியாவின் ஐம்பது ஆண்டுகால இலக்கிய வரலாற்றுச்சூழலில் வல்லினம் தொடங்கி வைத்த முயற்சிகள் ஐந்து.

முதவாவது வல்லினம் இணைய இதழ். – வல்லினத்திற்கு முன்பே சில இலக்கிய அச்சு ஏடுகள் மலேசியாவில் தோன்றியுள்ளன. குறைந்த ஆயுளுடன் முடிந்துவிட்ட அவை பெரும் தாக்கத்தை தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்படுத்தவில்லை. வல்லினம் இணைய இதழ் உருவாவதற்கு முன்பு தனிநபர்கள் வலைப்பூக்களை எழுதி வந்தனர்.  இத்தகைய சிறுசிறு முயற்சிகளுக்கிடையே, காத்திரமான இலக்கிய இதழாக மலேசியாவில் உருவாகி 10 ஆண்டுகளாக வல்லினம் நிலைத்துள்ளது.

cover-issue2இரண்டாவது, வல்லினம் பதிப்பக முயற்சியில் வெளிவரும் நூல்களுக்கு 20% ராயல்டி தொகை வழங்கும் போக்கை முதன்முதலில் தொடங்கியது. மலேசிய அரசு ஆதரவில் இயங்கும் மலாய் பதிப்பகம் (DBP)12% ராயல்டி வழங்கும் சூழலில் வல்லினம் 20% ராயல்டி தொகையை நூல் முழுமையாக விற்பனையாகும் முன்பே எழுத்தாளர்களுக்கு வழங்கியது. எழுத்தாளன் சமூகத்தால் மதிக்கப்பட வேண்டியவன். அவன் நாளிதழுக்கும் பதிப்பகத்துக்கும் வளைந்து கொடுக்கவோ விசுவாசியாகவோ இருக்கவோ வேண்டியதில்லை என்பதை நிறுவும் நோக்கில் பதிப்பகத்துறையை நிபுணத்துவத்துடன் வல்லினம் நடத்தியது.

மூன்றாவது, மலேசியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஸ்டார் கணேசனின் முதல் நிழல்படக் கண்காட்சியை வல்லினம் ஏற்பாடு செய்தது. அதேபோல ஓவியர் சந்துருவின் முதல் ஓவியக் கண்காட்சியும் வல்லினம் மூலம் முன்னெடுக்கப்பட்டது. மலேசியாவின் முதல் வீதி நாடகமும் வல்லினம் மூலம் உருவாக்கம் கண்டது. இலக்கியம் மட்டுமின்றி பல்வேறு கலைத்துறை சார்ந்த இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வல்லினம் தனது திட்டங்களை வகுத்தது.

நான்காவது, சடக்கு எனும் இணையத்தளத்தை உருவாக்கி 50 ஆண்டுகால மலேசியத் தமிழ்ச் சூழலை ஆவணப்படுத்தும் வகையில் நிழல்படங்களும் ஆவணப்படங்களும் தொகுக்கப்பட்டன. வல்லினம் குழுவில் இயங்கும் விஜயலட்சுமியின் மூலம் இப்பெரும் முயற்சி உருவாக்கம் கண்டது குறிப்பிடத்தக்கது.

index

ஐந்தாவது, பறை எனும் ஆய்விதழ். பல்கலைக்கழகச் சூழலில் சில ஆய்விதழ் முயற்சி நிகழ்ந்திருந்தாலும் வல்லினம் வெகுமக்கள் மத்தியில் மாற்றுக் கருத்துகளை ஆய்வுகள் அடிப்படையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இவ்விதழ் தொடங்கப்பட்டு ஆறு இதழ்கள் வெளியீடு கண்டன. ஒவ்வொரு இதழும் பத்தாயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு கல்லூரி மற்றும் பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டன.

coverஇவை மலேசிய நவீன இலக்கியச் சூழலில் வல்லினம் தொடக்கிவைத்த முன்னெடுப்புகள். இவையல்லாமல் சம்பிரதாயமான சில திட்டங்களை வல்லினம் வகுத்து கடந்த 10 ஆண்டுகளில் வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது. சிறுகதைப் போட்டிகள், நாவல் பதிப்புத்திட்டம், வல்லினம் விருது, பட்டறைகள், நூல் வெளியீடுகள், படைப்பாளுமைகளுடனான சந்திப்புகள், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, மலாய் மற்றும் சீன இலக்கியங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள், ஆங்கில மொழிகளில் எழுதப்படும் இலக்கியத்தை தமிழ்ச் சமூகத்திற்கும் வழங்கும் நோக்கில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு முயற்சிகள் என அது ஒரு நீண்ட பட்டியல்.

இத்தகைய நெடிய முயற்சிகளுக்குப் பின் வல்லினம் தனது 10ஆவது  கலை இலக்கிய விழாவை நிறைவு விழாவாக இவ்வாண்டு கொண்டாடியது. கலை இலக்கிய விழாவை நிறைவுசெய்ய சில காரணங்கள் உள்ளன.

29கடந்த பத்து ஆண்டுகளில் வல்லினம் மலேசியாவில் நவீன தமிழ் இலக்கியம் வளர்வதற்கான, விளைவதற்கான நிலத்தைச்  செப்பனிட்டுவிட்டது. இனித் தரமான பயிர்களை அதில் பதியனிட வேண்டும். தரமான படைப்புகள் உருவாகத் தீவிரமான வாசிப்பு,  அதிகமான புனைவிலக்கிய முயற்சிகள், கறாரான விமர்சனங்கள் ஆகியவற்றை பன்மடங்கு வளர்க்க வேண்டியுள்ளது. அதற்குப் பெரும் விழாக்கள் அவசியமற்றவை. சிறு குழுக்கள் மத்தியில் தொடர் விவாதங்களை உருவாக்குவதுடன் படைப்பிலக்கிய ஊக்கத்தை வளர்க்க வேண்டிய சூழலை வல்லினம் இனி வரும் காலங்களில் உருவாக்க விளைகிறது. விழாக்களுக்கான நேரத்தையும் செலவுகளையும் குறைத்து அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் வல்லினத்தின் கவனம் முழுக்க படைப்பிலக்கியங்களை உருவாக்கும் முயற்சியில் மட்டுமே மையமிட்டிருக்கும். உலக இலக்கியங்கள் குறித்த உரையாடல்கள், சமகாலப் படைப்புகள் குறித்த விமர்சனங்கள் ஆகியவையும் அவ்வப்போது வல்லினம் குழுவின் மூலம் முன்னெடுக்கப்படும்.

அத்துடன், தரமான படைப்புகளை மட்டுமே வெளியிடுவதற்கு ஏதுவாக வல்லினம் இணைய இதழ் இருமாத இதழாகிறது.

வல்லினம் முன்னெடுத்துள்ள, முன்னெடுத்து வரும் மாற்றங்கள் யாவும் ஒட்டுமொத்த மலேசிய நவீன தமிழ் இலக்கியம் எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே. 2019ஆம் ஆண்டு அதற்கான புதிய உந்துதலை வழங்கும் என நம்புகிறோம். எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.

3 comments for “வல்லினம்: நேற்று – இன்று – நாளை

  1. ஸ்ரீவிஜி
    January 1, 2019 at 1:43 pm

    அனைத்து முயற்சிகளும் தொடந்து வெற்றிபெற எனது மனப்பூர்வ வாழ்த்துகள் வல்லினத்திற்கு..வல்லினத்தின் பக்கம் வந்தவர்கள் நாளிதழ்கள் பக்கம் செல்ல மறுத்ததை நானும் ஆமோதிக்கின்றேன். எழுத்து மற்றும் இலக்கியம் என்பது என்னவென்று தெரிந்த மறுநொடி பேனா பிடிக்க கைகள் நடுங்கும். வெட்கமாக இருக்கும் நாம் கிறுக்கி பத்திரிகைகளின் பிரசுரமான நமது எழுத்துகளை நினைத்தால்.. இதை ஒருவகை வளர்ச்சியாகவே நான் காண்கிறேன்.

  2. Siva Pillai
    January 2, 2019 at 1:41 am

    மிக உபயோகமான கருத்துகள் நன்றி

  3. Raj Sathya
    January 3, 2019 at 10:16 pm

    Allow me to congratulate you Navin. Yes its indeed a great contribution towards Malaysian Literature through Vallinam. You came through the trials and obstacles and we see the fruits after 10 years.Pre Modernism and Modernism thoughts were well shared in the articles,interviews and in the literature shows that was held in Grand Pacific hotel.One could see a Revival among the readers and the writers after reading Vallinam. Once again thanks for all the effort and hope we will enjoy more readings in the coming years. Happy 2019 my friend.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...