துவந்த யுத்தம்

001கர்த்தரின் எல்லையிலா கருணைக்கு வாழ்வின் முழுமையையும் அளித்த டயசிஸ் தலைவர் அளப்பரிய அன்புக்குரிய பாதிரி அல்பர்டோ க்ளோடன் அவர்களுக்கு, சுதந்திரம் சமத்துவம் சகோதரதத்துவம் ஆகியவற்றை உலகுக்குப் போதிக்க அமைந்த பிரெஞ்சு தேசத்துக்கு சேவகம் செய்ய பாத்தியாக்கப்பட்ட மேஜர் ழீன் சிரம் தாழ்த்தி எழுதும் கடிதம்:-

நமது பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் அல்ஜீரியா காலனியிலிருந்து விருப்ப ஓய்வில் லூர்த்துக்குத் திரும்பியபோது சேன் லூர்த்து கதீட்ரலின் அரசாணைக்கு உட்பட்டு அடியேன் தங்களைச் சந்தித்தது நினைவிருக்கலாம். மண்ணில் அளப்பரிய செய்தியாம் கிறிஸ்துவின் தியாகத்தை போதிக்க புற வடிவம் எடுத்து வானின் தேவதைகளின் ஆசியை வேண்டி எழும்பி நிற்கும் சேன் லூர்த்து தேவாலயத்தின் மகத்துவத்தை கடந்த ஐநூறு வருடங்களுக்கும் மேலாக ஆப்ரிக்க நாடுகளில் பரப்பி வரும் தங்கள் ஜான் கிறிஸ்டியன் சோசையிதே மூலம் நமது முன்னோர்கள் ஸ்தாபித்த நிலமான மொரிஸியஸ் ரீயூனியன் மற்றும் சீசெல்ஸ் தீவுகளில் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்ப வேண்டும்படியான இறைதிட்டம் இன்று அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதை மகிழ்வோடு தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

புனித வெள்ளியை ஒட்டி கடந்த வாரம் மொரீஷியஸின் போர்ட் லூயி நகரில் இங்கிலாந்து நாட்டவர்களின் தேவாலயம் தவிர நமது பிரெஞ்சு அரசாணைக்கு உட்பட்ட பன்னிரெண்டு ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை கடவுளின் கிருபையால் விமரிசையாக நடத்தப்பட்டது. மலபாரிகளும், க்றேயோல் தேசத்து கருப்பு அடிமைகளும் அவர்தம் குழந்தைகளும் பூச்சூடி கிறிஸ்துவின் ஆப்பத்தையும் புனித நீரையும் உண்டு மகிழ்ந்தனர். அவர்களில் இருநூறு குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் செய்துவைக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூச்சூடுவதும், சிறு கருப்பங்கட்டி பிரசாதங்கள் வழங்குவது இங்குள்ள மலபாரி ஆலயங்களின் வழக்கம். மேதகு தவச்சீலர் புனித செபாஸ்டியன் ஆக்னஸ் கடந்த முறை இங்கு வந்திருந்தபோது மலபாரிகள் மற்றும் க்றேயோல் நில மக்களின் பழக்கங்களை நாமும் ஆலயத்தில் தொடர்வது யேசுவின் அன்பின் நிழலை அவர்கள் அனுபவிக்க ஏதுவாக இருக்குமென வரைவு எழுதினார்.

மலபாரிகளின் மலைப்பகுதியான சேன் க்ளோத், காபி விளைச்சல்களும், வாழைத் தோட்டங்களும் செழுமையாக விளையும் பகுதி. சேன் க்ளோத் தேவாலயம் இருக்கும் இடம் கடந்த நூறு ஆண்டுகளாக பாழும் கல்லறைத் தோட்டமாக மாறிவிட்டதை கடந்த முறை பார்த்தீர்கள். 1845 ஆம் ஆண்டு கடைசியாகக் கூட்டுச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டு ராணியின் ராயல் என்கொயரி கமிஷன் அமைப்பு கல்லறைத் தோட்டத்தின் பிரெஞ்சு உரிமைக்கு எதிராக தடை போட்டிருந்ததைப் பற்றிப் பேசியதும் தங்கள் நினைவில் இருக்கலாம். முப்பத்தைந்து வருடங்களாக கேட்பாரற்று பாழ் மலையாக விட்டுவைத்தது மட்டுமே ராணி முடியாட்சியின் ஒரே சாதனை! கிழக்கு இந்திய கம்பனியின் வர்த்தகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து நாம் மூச்சுவிடும் வேளையில் நமது ராஜ்ஜியங்களுக்கு உட்பட்டிருந்த நிலங்களையும் வர்த்தகங்களையும் ஒப்பந்த முறைப்படி நமக்குத் தரவேண்டிய கெடு முடிந்துவிட்ட நேரத்தில் மறு சீரமைப்புக்காக மலபாரிகளின் மலைப்பகுதியை கிறிஸ்துவின் செய்தியைப் பரப்பிய புனித போதகர் கருணையுள்ளம் கொண்ட நமது அன்னையின் நினைவுக்காக அர்ப்பணிக்கும்படி நமது ராஜ்ஜியம் முடிவு செய்திருக்கிறது. வெர்சயில் மாளிகை குளிர்காலக் கூட்டத்தின் முதல் ஒப்புதலாக இதை வரவேற்றிருப்பதை நம் வாழும் காலத்தின் அளப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறோம்.

ஐநூறு அடிமைகள் கொண்ட மிகப்பெரிய மலபாரிய கூட்டத்தை கல்லறை சுத்தம் செய்யும் முதல்கட்ட வேலைக்காக அமர்த்தியிருக்கிறேன். இந்தப் பணிகளை மேற்பார்வையிட லூர்து தேவாலயத்தின் ஊழியர் ஒருவரை நியமிக்கும்படி அரசு உத்தரவு வந்துள்ளது. தங்கள் ஊழியத்தில் நம்பகமாக அமைந்திருக்கும் கிறிஸ்து சேவைக்கு உகந்தவரை தேர்ந்தெடுத்து அனுப்பக்கோரும் கடிதமாகவும் இதனை வாசிக்கவும்.

போர்ட் லூயி பகுதியில் நமது நிருவாகத்துக்காக ஊழியம் செய்ய வந்திருக்கும் தொழிலாளிகளுக்குப் படிக்கும் வசதி செய்து கொடுக்கும்படியும் நியமனம் ஆகியுள்ளது. மலபாரிகள் வாசிப்பிலும் கணக்கிலும் காட்டும் ஆர்வம் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தும். இந்தியாவிலிருந்தபோது அவர்கள் தெலுங்கு, துளு, தமிழ் போன்ற தென்னக மொழிகளைப் பேசிக்கொண்டிருந்தாலும் இங்கு வந்ததும் மிக வேகமாக பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டுவிட்டனர். அல்ஜீரியாவில் கழித்த எட்டு வருடங்களில் நூல் வாசிக்கும் ஆர்வத்தோடு வந்த கருப்பின மற்றும் ஆட்டமான் முஸல்மானின் அடிமைகளையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். மலபாரிகள் தங்களது கலாச்சாரத்தைக் கைவிடாது அதே சமயம் ஐரோப்பிய நவீன மறுமலர்ச்சி வசதிகளை கைக்கொள்ள நினைக்கிறார்கள். மிக இயல்பாக அவர்களால் இந்த இரு நிலைகளையும் இணைத்துப்பார்க்க முடிகிறது. இது என்னை மேலும் ஆச்சர்யப்படுத்துகிறது. ஏவ்ரில் மாதம் மலபாரிகளுக்கு ஆடிமாதம். இவர்களது ஆலயத்தில் ஆடிப்பெருக்கு எனும் கொண்டாட்டம் நடக்கும் பெருமாதம். காவடி எடுப்பது, கரகம் ஆடுவது என விநோதப்பொருட்களை தோளில் தூக்கிக்கொண்டு அவர்களது தேவதைகளை வேண்டி நடனம் ஆடுவது ஷாமன் ஆட்டக்கரார்களை மிஞ்சிவிடும். அதே சமயம் நூல் வாசிப்பில் அவர்கள் காட்டும் ஆர்வம் எந்த ஒரு நகர ஐரோப்பியனின் அறிவுத்தாகத்துக்குக் குறைவில்லை. அடிமட்டத்தில் பாமரர்களாக மேலான இறைசக்தியின் மீது பயமுள்ளவர்களாக வாழ்பவர்கள். மொரீஷியஸ் தீவுக்கு வந்த மூன்று வருடங்களாக இவர்களோடு இணைந்து பழகியும் இந்த முரண்பாடு எனக்கு விளங்கவில்லை.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் கடந்த ஒரு மாதமாக கல்லறைத் திட்டப்பணிகளுக்கு வேலையாட்களை மலபாரிகளின் கூட்டத்திலிருந்து பெற்றுக்கொடுக்கும் வேலுச்சாமி பூங்காவனத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லலாம்.

பிரெஞ்சு கலப்பட மலபார மொழி, அடிமைத்தனம் ஒழிந்ததும் ஆங்கிலேயப்பள்ளி மூலம் கல்வி எனும் கலப்படமாக உருவானவன் வேலுச்சாமி. ஒரு மாதமாக அவனோடு இருந்தும் எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறான். மலபாரிகளின் பிரத்யேகக் குணம் போல சேவகம் செய்வதை பிறப்பியல்பாகக் கொண்டிருந்தாலும் படிப்பு அவனை தன் நிலை கடந்து யோசிக்க வைக்கிறது. ஏதோ ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவன்போல இருந்தாலும் திடீரென நம்மில் ஒருவனாகத் தன்னைப் பொருந்திப்பார்க்கிறான். அந்த நிலையில் இயல்பாகவும் இருக்கிறான். அவனது இயல்பை மீறி நடப்பதற்கு அனுமதிப்பதாக எனது பட்டாலியன் என்னைத் தவறாக நினைக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. தேவாலயத் திருப்பணியில் என்னை இணைத்துக்கொள்ளும் பெருவாய்ப்பை மாதாவின் பெருங்கருணையாகக் காண்கிறேன். இன்னும் ஐந்து வருடங்களில் பணி ஓய்வு பெற்றுவிடுவேன் அல்லது அதற்கு முன்னதாக உடல் என்னைக் கைவிடும். அதற்குள் இவன் ஒருவனது இயல்பு பிடிகிட்டினால் என்னால் நம் நாட்டுக்கும் அதன் சுதந்திர சமத்துவம் மீது பற்றுள்ள காலனி மலபாரிகளுக்கும் உபயோகமாக இருந்திருக்கிறேன் எனத் திருப்தியாவேன்.

அதுவே எனது பணியென விதிக்கப்பட்டதாகக் கொள்கிறேன். ஆசிர்வதியுங்கள்.

உங்கள் பயணத்திட்டங்களைத் தொடங்குகள்.

நவம்பரு, 1871.

மேஜர் ழீன் ஸ்டெஃபன்

மொரீஷியஸ்

***

அந்தச் சிறிய மர அறையில் நெடுநேரம் காத்திருந்தேன். அந்தோ இந்தோ முடிந்திடுவேன் என மெழுகு போக்குக்காட்டியது. மரத்திருந்த காலை நீட்டி முறித்துவிட்டு யாரேனும் வருவதற்குள் சட்டென பின்னுக்கு இழுத்தேன். கிட்டத்தட்ட பத்து மணிநேரப் பயணத்தில் நகரத்துக்கு வந்திருந்தேன்.

தனியனாக இல்லை. மூவர் உட்கார்ந்தால் கூட்டமாகும் அறையில் நால்வர் மறுபுற வாசற்கதவு திறப்பதற்காக நெரிசலையும் மீறி காத்திருந்தோம். பிரெஞ்சுக்காரன ஒருவனும் காத்திருந்தான். அவனைப்பார்த்ததும் பத்து மணிநேரப்பயணம் வீணாகிடுமோ என என் வயிறு கலங்கியது.

மேஜர் ழீல் ஸ்டெஃபன் மேஜை மீதிருந்த கோப்பை படித்துக்கொண்டிருந்தார்.

நாற்காலியை முரட்டுத்தனமாகப் பின்னுக்குத் தள்ளி கூடாரத்தின் மூலையிலிருந்து சீனக் குடுவையை எட்டினார். நீரை மடமடவென்று குடித்துவிட்டு வாயில் மிச்சமிருக்கும்போது என்னை அரைக்கண் கீழே பார்த்து வேணுமா என்பது போல கேட்டார். நான் அவசரமாக தலையாட்டி மறுத்தேன்.

“மிஷைல் காகட்டோ பற்றி உனக்கு என்ன தெரியும்?”, தெரியாது எனும் முன்முடிவோடே கேட்டார்.

“மொரீஷியஸின் கட்டுமானத் துறையில் இங்கிலாந்து துரைகளோடு இணைந்து வேலை செய்யும் பிரெஞ்சு கும்பனி. புது சிற்றூர்களை வடிவமைப்பதில் நூறு ஆண்டுகளாக அனுபவப்பட்டவர்கள். இங்கு அவர்கள் வடிவமைத்த புது லூயி ஆலயத்தை நான் கண்டிருக்கிறேன். அது போல வேறொன்றைக் கண்டதில்லை”

இதை எதிர்ப்பாராதவர், “உன்னைப் போல ஹிந்துக்களுக்கு இதில் ஆர்வம் இருப்பது எனக்குத் தெரியாது”, என்றார்.

“உண்மைதான் மேஜர். முறையாகப் படிக்காவிட்டாலும் நான் இத்துறையில் சில காலம் வேலை செய்திருக்கிறேன். என் பதின்ம வயதில் போர்ட் லூயி நகரம் சூறாவளியிலிருந்து மீளும் முயற்சியில் என்னாலான கட்டுமானங்களைச் செய்து தொழில் கற்றுக்கொண்டேன்.”, என்றேன்.

என் கண்ணை ஒரு கணம் சந்தித்துவிட்டு மீண்டும் கையிலிருந்த கடிதத்தைப் படித்தார்.

“வேலு…ச்சாமி…வேலுச்சாமி?”, என என்னைப் பார்த்தார்.

“நீங்கள் என்னை வேலு என்றே கூப்பிடலாம்”

“சரி..நோத்ரு தாம் கல்லறைத்தோட்டம் இங்கிலாந்து அரசின் கீழிருக்கும் பகுதி. சுற்றி இருக்கிற ஆப்ரவாசி ‘காட்’டை விரிவுபடுத்தவேணும். கல்லறைத் தோட்டம்தான் அதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிற இடம் என்பது தெரியுமா? அதை சுத்தம் செய்து தோண்டி எடுப்பது இங்கிலாந்து கான்ட்ராக்ட். ஹிந்துக்கள் ஒத்துழைக்கணும். கல்லறைத் தோட்டத்தினுள் நுழைய முடியாதபடி துர்நாற்றம். உடலுக்கு வியாதி இதனாலேயே பரவுது, தெரியுமா?”

“உள்ளே அழுகிக்கிடப்பது மலேரியா காய்ச்சலில் மடிந்த ஹிந்துக்கள்”, அவசரமாகச் சொன்னேன்.

“உங்கள் முன்னோர்…”

நான் பதில் சொல்லாமல் தலையை ஆட்டினேன். மேஜர் ழீல் வேறெங்கும் கவனம் சிதறாது தொடர்ந்தார்.

“இன்னும் ஒன்பது மாதங்களில் கல்லறை இடிக்கப்பட்டு புது கதீட்ரல் தொடங்கும் வேலை ஆரம்பமாகிவிடும்.

“பாரிஸ் நோத்ரு தாம் கதீட்ரல் போல ஒன்று மொரீஷியஸ் போர்ட் லூயியில் ஒன்று கட்டப்போகிறது எனும் செய்தியைக் கேட்டு வருத்தப்படுபவர்கள் பிரான்ஸில் உண்டு.  அதை விட பிரமாதமான ஆலயம் வேறொன்றும் இருக்க முடியாது எனும் எண்ணம் கொண்ட அறிவிலிகள். ரெண்டு காரணங்களுக்காக நான் உன்னைப் போல ஹிந்துவைத் தேடினேன். “

“முதலாவது. கல்லறைத் தோட்டத்தை உங்க ஆட்கள்தான் சுத்தம் செய்யவேண்டும்”, எனஅழுத்தமாகச் சொன்னான்.

“அது வெறும் நோயும், அழுக்கும் நிறைந்த இடம்…ஹிந்துக்கள் வருவார்களான்னு…”, என இழுத்தேன்.

“அதற்கானச் செலவை கம்பனி ஆட்கள் ஏற்றுக்கொள்வார்கள்”, என முடித்தார் ழீல்.

“ரெண்டாவது காரணத்தை சொல்லவில்லையே?”

“நீ ஒரு பிரெஞ்சு தெரிந்த தமிழன்”, என்றார். மூன்றாவதாக ஒரு காரணம் இருக்கும் என இருவருமே அறிந்திருந்தோம்.

***

“உன் முன்னோர்கள்”, என மேஜர் ழீல் சொல் காதில் மீண்டும் கேட்டது.

எருமைக்குழியை விட்டு ரெண்டு பர்லாங் கடந்ததும் சாமிச்சேவியர் மாலுமியின் தேக்கு சட்டமிடப்பட்ட தூண்களான வீட்டை அடையலாம். அதைத் தாண்டி கல்லறை தொடங்கும்.

மாலை வெயில் விடுப்பெடுத்து இரவின் மென்மையான காற்று கந்தக மண்ணின் வீச்சைக் குறைத்தது. காரை பெயர்ந்து கிடக்கும் மதில் சுவரைக் கடக்கும்போதெல்லாம் எனக்கு சிறுவயதில் நண்பர்களுடன் விளையாடிய நாட்கள் நினைவுக்கு வரும். இப்போது போல வீடு இடிபாடுகளோடு இல்லை. யோசித்துப்பார்த்தால் நிலையற்ற அலைச்சலில் பழுத்த உடல் போல குடும்ப வாழ்வின் சரிவுகளைத் தாங்கியதன் சுவடுகள் அப்போதே தெரியத் தொடங்கியிருந்தன. உள் நுழையும்போது வெனிஸ் நகரின் வர்த்தகச் சாவடியை ஒற்றி வரையப்பட்ட மிகப்பெரிய வண்ணப்படம் முன் அறையை அலங்கரிக்கும். அருகில் சிறு மூளி பொம்மைகள் மணிக்கொருதரம் வெளிவந்து நடனமாடி நேரத்தைக் காட்டும் மரச்சுதை கடிகாரம் காலத்தை நகர்த்தப் பிரயத்தனப்படும்.

இந்தியாவிலிருந்து வரும் ஹிந்து வேலையாட்களை கண்டாலே எரிச்சல்\தான். நான் இவர்களில் ஒருவனல்ல. பிரெஞ்சுக்காரன். ஆங்கிலேயன். ஹிந்து அல்ல என்பதில் ஒருவித வெறியோடு அலைந்திருக்கிறேன்.

அந்த இருளில் வீட்டைச் சுற்றி வந்து பின்வாசக்கதவை அசைத்துப்பார்த்தேன். இரண்டு எலிகள் கதவின் பின்புற பொந்திலிருந்து விடுபட்டு இருளில் ஒளிந்தன. புதருக்குளிலிருந்து கோட்டான்கள் சிதறின. வீட்டைக் கடக்க மனம் ஒப்பவில்லை. இரும்புக்கதவை மூடிவிட்டு வெளியே வந்ததும் போர்ட் லூயியின் கல்லறைத் தோட்டம் தொடங்கிவிடும் என்பதே கால்களைப் பின்னுக்குத் தள்ளியது. முன்பு கல்லறைத்தோட்டம் தூரத் தெரியும். மணல் வெளியைத் தாண்டி சின்னதாகத் தெரியும். இரவில் மட்டுமல்ல பகலிலும் ரோமங்கள் சிலிர்த்துக்கொள்ளும் – சேவியர் வீட்டுக்கு வரும்போதும் யாரும் அந்தப்பக்கம் திரும்புவதில்லை.

பாறைகளில் ஏறி மூன்றடி உயர்ந்திருந்த மேட்டுப்பகுதியைத் தாண்டும்போது நிலவு கைக்கெட்டும் தூரத்தில் தெரிந்தது. நான் அதையே ஒரு கணம் முழுமையைப் பார்த்து நின்றேன். நினைப்பு மீண்டும் வந்தபோது பெரிய பாறை மீது நின்றிருப்பதை உணர்ந்தேன். காலை உயர்த்திவிட்டு மெல்ல வைத்தபோது வழுக்கியது. பாறை பிளவுகளில் கால் ஊன்றி ஏறி உச்சியை அடைந்தபோது நெடு நேரம் ஏறி வந்த களைப்பு குடிகொண்டது. சற்று ஆசுவாசப்படுத்திவிட்டு வந்த வழியைத் திரும்பிப் பார்த்தேன். பாம்புப்பாதை போல வளைந்திருந்தது. பாறைகள் மீது சிறிய ஆறு போல. தாவரங்கள் முளைக்காத நிலப்பகுதி மொரீஷியஸில் இது மட்டுமே.

சிறு சலசலப்பில் காலாதீத மெளனத்தைக் கலைத்து தனது சொரூபத்தைக் காட்டிவிடும் வல்லமை இந்த நிலத்துக்கு உண்டு. சிறு பூச்சிகளும், தட்டான்களும் பாறை இடுக்குகளின் நீர்மையில் துளிர்க்கின்றன. அதைத் தவிர காட்டுவிலங்குகளின் மூச்சொலி இல்லாத பிரதேசம். முப்பது வருடங்களாக வராதவன் இன்று தன்னை உந்தி அழைத்துச் செல்லும் சக்தி எதுவெனத் தெரியாது முந்திக்கொண்டிருந்தேன். பூத்துக்குலுங்கும் காடுகளும், வானைத் துழாவும் மரக்கிளைகளும், வெயில் தாவரங்களும் அபிரிதமாக விளையும் இத்தீவில் கல்லறைத் தோட்டம் மட்டும் தனிமையிலிருந்து பிறந்த தீவாகக் கிடக்கிறது. இங்கு எந்த ஒன்றும் மற்றொன்றுக்குத் தொடர்பில்லை. பச்சையம் படர்ந்த பாறைகளும் காய்ந்திருந்தன. யாருடைய தடத்தையும் அறிய முடியாத வெளி. கல்லறைப் பகுதிகளுக்கே உரிய நரிகளின் தடத்தைத் தேடியபடி நடந்தேன்.

பிரம்மாண்டமான வேர்களுக்கு இடையே கரும்பாறைகள் சிக்கிக்கிடந்தன. பல வருடங்களாக மனித நடமாட்டம் இல்லாத பகுதி. எவ்விதமான வருமானமும் அற்ற நிலம். அதையும் மீறி பிரெஞ்சுக் கம்பனிக்கு கண்ணை உறுத்தியது எதுவென எனக்குப் பிடி கிட்டவில்லை. கல்லறை ஆவதற்கு முன்னர் இது ஆப்ரவாஸி எனும் இந்திய குடியிருப்புகளாக இருந்ததற்கான அடையாளம் எதுவும் எஞ்சவில்லை. என் அப்பா தங்கியிருந்த இடம். ஒதுக்குப்புறமான உலகம். வேகமாகக் கிளம்பி மத்தியில் மெலிந்த மரங்கள் உச்சியில் கிளைகளாக எஞ்சியிருந்தன. இறுகிய மண் நிலத்தில் ஏதோ ஒரு சக்தி உறிந்தெடுத்ததுபோல மரங்கள் குட்டையாயிருந்தன. நெருக்கமாயிருந்த கிளைகளிலிருந்து யாரேனும் எட்டிப்பார்க்க முடியும் என்பதான தோற்ற மயக்கத்தினூடாக மரங்களை ஊடறுத்த பாதையில் நடந்தேன்.

இவ்வழியே கடந்து நகரமைத்து காட்டு விலங்குகளைத் தவிர்க்க அரணமைத்து குடியிருப்பு கட்டி கிட்டத்தட்ட நூறு வருடங்கள் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கும் எனக்குமான உறவு இந்தப் பாழ்நிலத்துக்கு மொரீஷியஸ் நகருக்குமானது. இங்கிருந்து கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவில் போர்ட் லூயியின் பிரதான லே பிரான்சுவா கரும்பு தோட்டமும் ஆலையும் உள்ளது. கூட்டங்கூட்டமாக வேலை செய்தவர்கள் தினம் கடந்து வந்த பாதை இது  எனும் எண்ணம் வந்ததும் திடுமென மனம் விம்மியது. மலேரியாவும் கொள்ளை நோயும் தாக்கியதில் ஆயிரக்கணக்கான விவசாயக்கூலிகளை உயிரோடு புதைத்த கல்லறையை அடையப்போகிறோம் எனத் தோன்றியதும் காலை முன்வைத்து நடப்பது சிரமமானது. கூலிவேலையாட்களின் மொத்த சுமையையும் தோளில் சுமந்து வந்த அயர்ச்சி. இருள் பிரிய நேரமிருந்தாலும் காட்டுக்கென தனி நேரக்கணக்கு உண்டென்பதை உணர்ந்து பாதையில் வேகமாக நடந்தேன்.

காலடித்தடமற்ற மண்பாதையில் காய்ந்த இலைகளும் காணவில்லை. பாழ்நிலத்தின் கட்டளையை ஏற்றிப் பணிந்து கிடப்பவையாக மரங்கள் ஒடுங்கிக்கிடந்தன. அவற்றுக்கு இடையே ஒளிரேகைகள் உள்நுழைந்து சிதறி மறைந்தன. விரித்துக்கிடந்த மரக்கிளைகள் ரகசிய சிமிக்ஞைகள் மூலம் வெல்ல முடியாத பெரிய சக்தியாக பாழ்நிலம் மாறியிருந்தது. புகை படியும் கண்ணாடியைப் போல காட்டின் இமையை இருள் மூடியது.

காலை குடித்த கஞ்சி ஏப்பமாக வந்த வாசம் ஏக்கத்தைத் தந்தது. அப்படியே வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் பலப்படும்போதெல்லாம் மேஜர் ழீல் கொடுத்த வேலையின் சாத்தியங்களை நினைத்துக்கொண்டேன். இங்கிலாந்து துரைகளும், பிரெஞ்சு கட்டுமானக் கம்பனியும் சேர்ந்து துவங்கும் இந்த வேலை ஒரு நவநாகரிக ஊரைக் கட்டிஎழுப்பும் கனவைக் கொண்டது. போர்ட் லூயியின் பிரதான கதீட்ரல் சாலையைத் தவிர காடாகக் கிடந்த ஊரை செழுமைப்படுத்தி இந்திய கடலில் முக்கியமான ராணுவ தளவாடமாக மாற்றிய வெள்ளையர்கள் அடுத்த கட்டமாகத் தொழில் மையமாக மாற்றும் பணியின் முதல் கட்டம். ஐந்து வருடங்களுக்குள் வேலையாட்களை பணியில் அனுப்பும் நிரந்தரமான ஒரு ஸ்தாபகத்தை உருவாக்க முடியும் எனும் எண்ணம் என் வேகத்தை அதிகரித்தது. இதை மட்டுமே நினைக்க வேண்டும் என மனதில் பல முறை சொல்லிக்கொண்டேன்.

தனி வீடு எனும் நினைப்பு வந்ததும் அப்பா மீண்டும் நினைவில் எழுந்தார். வாழ்நாளில் சொந்த இடத்தில் வாழ வேண்டும் எனும் பெருங்கனவோடு இருந்தவர் என அம்மா சொல்லியிருக்கிறாள். புதுச்சேரி துய்ப்ளே வீடருகே புகையிலை மண்டி வைத்திருந்து பிரெஞ்சு துரைகளோடு சரிசமமாக அமர்ந்து சாப்பிடும் அப்பாவீட்டு குடும்பத்தை அவளே பார்த்திருக்கிறாள். கடல் தாண்டி வியாபாரத்தை பெருக்க வைக்கும் கனவு அவர்களை மொரீஷியஸுக்குத் துரத்தியது எனத் தூற்றியபடி இருக்கும் சித்திரமே என் சிறு வயது ஞாபகம். என் அப்பா தோற்ற இடம் எது? இன்று துளிர்க்கும் என் நம்பிக்கை எனது குடும்பத்தின் மனதில் அச்சாரம் போட்டு ஆசை காட்டி விலகிச்சென்ற கணம் எது?

கல்லறைத் தோட்டத்தைச் சுற்றி அமைந்த இடங்களில் உடைந்த செம்மண் எழும்பியிருந்தது. நகத்தளவு பெரிய எறும்புகள் கோட்டைச் சுவர்கள்போல முண்டியடித்து வாயிலின் குறுக்கே சென்றன. தோட்டத்துக்கு உள்ளே ஆச்சர்யமூட்டுமளவு ஒரு ஆலயத்தின் முகப்பு. இதை நான் எதிர்பார்க்கவில்லை. கிறிஸ்துவ கல்லறை போன்ற நெடுகற்களும், செங்கல் சூலைகளும் நிரம்பியிருந்தன. ஒழுங்கற்று அமைந்த கல்லறைகளைச் சுற்றி வட்டமான பாதையில் சிறு கற்களைக் கொண்டு நிரப்பியிருந்தனர்.

எவ்விதமான தடுப்புமில்லாமல் மண் பாதையிலிருந்து கல்லறைகளை எட்ட முடிந்தது. அவசரமாக மூடிக் கிடந்த பாதை புதியது. திறந்த வெளியாக இருந்தாலும் காற்றின் கனம் கூடியிருக்க ஆழ மூச்சிழுத்தேன். தாத்தன்களும் ஆயாக்களும் இங்கு கிடக்கூடும் எனும் எண்ணமே என்னை சமநிலை குலைக்கச் செய்தது. அவர்களுடன் வேறென்ன புதைந்துபோயிருந்தன? கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் இந்தியர்கள், ரெண்டு லட்சம் சாவுகள் ஒரு வருட இடைவெளிக்குள். போர்ட் லூயி கரும்புத் தோட்டம்வரை வரிசையாக பிணத்தை புதைக்க மக்கள் குழுமியிருந்ததாகப் பாடப்படும் பாடல்களில் எவ்விதமான கற்பனையும் இல்லை.

கடந்து வந்த பாழ்வெளியைக் காட்டிலும் கல்லறைத் தோட்டம் மிகவும் உயிர்ப்போடு இருப்பதாகத் தோன்றியது. “என்னவிதமான கோணல்நினைப்பு இது?” தோட்டம் முழுவதும் புன்னை, கருவேல மரங்கள் செழிப்பாக நிரம்பியிருந்தன. குறுக்கும் நெடுக்குமாக வீட்டுக் கூரை போல கிளைகள் ஒன்றோடு ஒன்று பின்னியிருந்ததில் வெயில் முழுமையாக மறைந்திருந்தது.

யாரோ கவனிப்பது போலத் தோன்ற கழுத்தை உயரத் தூக்கிப் பார்த்தேன். வெளுத்த பலாச்சுளைக் கண்களோடு ஆந்தை பார்த்திருந்தது. அத்தனை பெரிய ஆந்தையை நான் பார்த்ததில்லை. விரிவதும் சுருங்குவதுமாக இருந்த அதன் விழிகளில் செம்மஞ்சள் நிறம் நொடிக்கொரு முறை மாறியது. “நூறு வருடங்கள் கூட வாழும் ஆமைகள் இருக்கும்போது இது என் அய்யாவப் பார்த்திருக்குமோ?”, எனச் சத்தமாகக் கேட்டேன். சிறு கோணத்தில் ஆந்தை தனது கழுத்தை வெட்டித் திருப்பியதும் பார்வையை விலக்கினேன்.

ஆந்தைகளின் சத்தம், ஒரு குருவின் குரலும் கேட்டதில் வயிற்றில் ஒரு திடீர் உருட்டல். கல்லறையை முழுதாகச் சுற்றிப்பார்த்து தோராயமாகக் கணக்குப் போட்டதும் பிரெஞ்சு கம்பனிகாரனுடன் வந்து முழுமையாகப் பார்க்க வேண்டும் எனக் காரியத்தில் இறங்கினேன். வழியில் கிடைத்த முறிந்த கழி ஒன்றை கையில் எடுத்தபடி, இருள் படியாத வழியில் நடந்தேன். வெளிச்சம் இருந்தால் ஒரு மரத்தடியில் கண்மூடி உட்கார்ந்திருக்கலாம் என நினைத்து நடந்தபோது, பூந்தோட்டம் போன்ற ஒரு அகலமானக் குழியை அடைந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு கிணறு முழுவதுமாக மூடப்பட்டு முட் செடிகளும், காட்டுப்பூக்களும் முளைத்திருந்தன. மண் பாத்திகள் கட்டி பராமரித்து வருவது போலொரு வடிவில் இருந்தது. யாருமற்ற இடத்தில் முட்செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா?

கல்லறைகளால் சூழப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே முளைத்த செடிகளில் சிறு பழங்களும், வண்ணமயமான பூக்களும் பூத்திருந்தன. தோட்டத்துக்கு நடுவே கம்பஸ்தூபிபோல கல்லாலான தூண் ஒன்று நின்றிருந்தது. அதனருகே சென்று தொட்டுப்பார்த்தேன். விகாரமான உருவப்படம் பதிக்கப்பட்டிருக்கும் என நினைத்து அருகில் சென்றபோது மிக அழகாகப் பொறித்த பெண் உருவத்தைச் சுற்றி சுருள் முடியைப் போன்ற இரு இலச்சினைகளைக் கண்டேன். கீழே இருந்த பலகையில் “மலபாரிகள்” என புதிதாகப் பதிக்கப்பட்ட பிரெஞ்சுக் கல்லுக்குக்கீழே பல தமிழ் பெயர்கள் கற்களால் கிறுக்கப்பட்டிருந்தன. ஒன்றன் மீது ஒன்றாக நூற்றுக்கணக்கானப் பெயர்கள். பிரெஞ்சிலும் தமிழிலும் கலந்து எழுதப்பட்டிருக்க ஒரே ஆளின் கையெழுத்துபோலத் தெரிந்தது. Chalambron, Soucramanien என பிரெஞ்சில் காணப்பட்ட பெயர்களுக்கு இடையில் தமிழர்களின் மெல்லிய உடலைப் போல தாண்டவராயேன், கொருப்பன் என ஒன்றோடு ஒன்று ஒட்டி எழுதப்பட்டிருந்தது.

செதுக்கப்பட்ட கல் எழுத்துகள் மீது எனது விரலை ஓடவிட்டேன். தனக்குத்தானே ஒரு காயத்தை உருவாக்கிக்கொள்ளும் மனநிலையுடன் தலை மீது கத்தியோடு இருக்கும் ஒரு மனிதனின் குச்சி உருவம் செதுக்கப்பட்டிருந்தது. கையும் காலும் யானைக் கால் போல வெடித்திருப்பதாகக் காட்டப்பட்ட உருவத்தில் கண்கள் கெஞ்சும் பாவனையில் இருக்க, கூரான ஆயுதத்தை வைத்திருந்த கை உயிர்ப்பாக வரையப்பட்டிருந்தது. அங்கு நின்றிருந்த சிதிலமடைந்த தூண்களைச் சுற்றி வந்த போது என் கண்ணில் தெரிந்ததெல்லாம் இது போன்ற கிறுக்கல்களே. பூக்களும் செடிகளும் கிளை உடைந்து காற்றில் பறப்பது போன்ற குச்சிப்படங்களை மற்றொரு ஸ்தூபியில் கண்டேன். எல்லாவற்றையும் விட்டு பறந்து வெளியேறிவிடவேண்டும் எனும் வெறியில் வரைந்ததுபோல குழந்தைக் கிறுக்கல்களாகத் தொடர்ந்து அமைந்திருந்த தூண்கள்.

என்னால் தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. தோட்டத்தை விட்டு உடனடியாக அகன்றுவிடவேண்டும் எனும் வேகத்தில் எழுந்து நடக்கத் தொடங்கினேன். கொஞ்ச தூரம் நடப்பதற்குள் யாரோ தொடர்வது போலத் தோன்ற திரும்பிப்பார்த்தேன். திரும்பிப்பார்க்கும்போது குறையும் சத்தம் நடக்கத்தொடங்கியதும் அதிகரித்தது. கைகள் அநிச்சையாக கோர்த்துக்கொண்டன. தேவி கருமாரி, அப்பன் குமரா காப்பாத்துடா என வாய் தெரிந்த சாமி பெயர்களை முணுமுணுத்தன. அம்மா தலையில் அடித்துச் சொல்லிக்கொடுத்த எந்த மந்திரங்களும் என் நினைவுக்கு வரவில்லை. முட்டாள்தனமான பாடல்கள் என பதின்ம வயதில் ஏற்பட்ட எண்ணத்துக்குப் பிறகு அவற்றை இன்றுதான் நினைவு கூற முயல்கிறேன். கால் இடறியதும் கள்ளிச்செடி தெரிந்த திசை நோக்கி ஓடத்தொடங்கினேன். அதுதான் பாழ்வெளியின் தொடக்கமாக இருக்கவேண்டும். அதுதான் சரியான திசையா எனும் குழப்பமும் ஏற்பட ஒருகணம் சுற்றிப்பார்த்தேன். திசை பிடிகிட்டவில்லை. இதெல்லாம் பிரமை, என மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். சிறிது தூரத்தில் ஓட முடியாதபடி களைத்திருந்தேன். ஒரு கணம் கண்ணை மூடியபோது ஓலைப்பொட்டளங்களில் கட்டப்பட்ட பிணங்கள் அணிவகுப்பாக மலையடிவாரம் வரை நீண்டிருந்த காட்சி துல்லியமாகத் தெரிந்தது. ஆழமான உறக்கத்திலிருந்து எழுந்தவன்போல உதறலோடு மீண்டேன். மேலுடுப்பு நனைந்த பாயைப்போல கனத்திருந்தது. உடல் பல மடங்கு எடை அதிகமானது போலவும் மேலுடம்பு கற்கள் கட்டித்தொங்க வைத்திருந்த கால்களை கஷ்டப்பட்டு இழுத்துச் செல்வது போலவும் உணர்ந்தேன். கல்லிச்செடி இப்போது நெடுந்தொலையில் ஒரு புள்ளியாகத் தெரிந்தது. சட்டென எல்லாம் மறைந்தது.

***

வேலைக்கான ஆட்கள் கிடைக்காமல் போகும் என்பதை நான் எண்ணியிருக்கவில்லை. வருடத்துக்கு ஐந்து ஷில்லிங்குக்கு கூலியாக வந்த தமிழர்களைக்கூட அமர்த்தமுடியவில்லை. ஆறு மாதத்துக்கு ரெண்டரை ஷில்லிங்கில் தொடங்கி நான்கு ஷில்லிங்க வரைக் கொடுக்க மேஜர் ழீனின் தலைமை கங்காணி ராய் கோர்ஹம் தயாராக இருந்தார். சில சீனர்கள் மட்டுமே கிடைத்தனர். கரும்புத் தோட்டத்து பிள்ளைமார் கங்காணிகள் திரும்பவும் வேலைக்கு எடுத்துக்கொள்ளமாட்டார்கள் எனச் சொல்லி கல்லறை வேலைக்கு வர பயந்தனர். போர்ட் லூயி முழுக்க கல்லறைத் தோட்டத்தைத்தோண்டுவதைப் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது.

“என்ன வேலுச்சாமி உன்னால் ஹிந்துக்களோடு பேச முடியும் என்பதால்தானே இந்த வேலையைக் கொடுத்தேன்? முடியாவிட்டால் சொல்லு க்றேயோல் ஆட்களை அடுத்த சந்தையில் வாங்கிவிடலாம். ஹிந்துக்களுக்கு மரண பயம் வந்ததில் பேதி வருதாமே?”, என்ஜினீயர் பணியாளராக வந்திருந்த லாரன்ஸ் புரையேறச் சிரித்தார்.

தொடக்கம் முதலே மேஜர் ழீல் எனக்குக் கொடுத்த சலுகைகள் பற்றிய எரிச்சல் பிரிட்டிஷ் ராணுவ பட்டாலியனில் பரவியிருந்ததால் கல்லறையை அகற்றும் குழுத்தலைவன் ராய் என்னை நடத்தியவிதத்தில் பலரும் சந்தோஷப்பட்டனர்.

அடுத்த ஆறு மாதத்திற்குள் தேவாலயத்தின் அடித்தளம் முடிந்துவிடுமென மேஜர் ழீல் ஒப்பந்தம் போட்டிருந்தார். லூர்த்து தேவாலயத்தின் கட்டிட அமைப்பும், வடிவங்களுக்குத் தேவையான வரைபடங்களுடன் லாரன்ஸ் காத்திருந்தார். போர்ட் லூயியிலிருந்து நூறு மைல்கள் தொலைவிலிருந்த சுண்ணாம்பு மலையான லா மராட்டிலில் வேலையாட்கள் சுரங்கங்களிலிருந்து தோண்டி பாளங்களை வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.

“கெய்ரோவிலிருந்து நாம் கேட்டிருந்த நிலக்கரிகளும், உயர்தர வெடிகுண்டு மருந்துகளும் கப்பலில் வந்துகொண்டிருக்கின்றன. தென்மேற்கு காற்று நன்முனை திசையிலிருந்து வீசுவதால் பத்து நாட்கள் தாமதம் இருக்கலாம் என கணித்திருக்கிறார்கள் “, என்றார் லாரன்ஸ்.

“நல்லது”, இனிப்பை சாப்பிட்டவன் போல நாக்கைச் சுழற்றினார் மேஜர் ழீல்.

தோலால் சுற்றப்பட்டிருந்த குறிப்பட்டையை எனது மேல் உடுப்புக்கு உள்ளே நுழைத்தேன். சுருட்டு வைப்பதற்கான மரக்கூட்டை கைமாற்றி வைத்துக்கொண்டு பவ்யமாகக் குனிந்து விடைபெற்றேன்.

“உனது பாவனைகள் எல்லாம் ஆக்ஸ்போர்ட் துரை போலத்தான் இருக்கு. காரியத்திலும் இதைக் காட்ட வேண்டும். நீ போகலாம்”, என ராய் கூறியபோது அவனது கண்களில் தெரிந்தது ஏளனமா, வெறுப்பா எனப்புரியாது நான் வெளியேறினேன்.

வெள்ளையர் டவுன் ஹால் விட்டு வெளியே மேஜர் ழீல் மீது கடுங் கோபத்தோடு வந்தேன். ராய், லாரென்ஸ் போன்ற சில்லறை ஆட்களெல்லாம் என்னளவு கூடப் படிக்காதவர்கள். அப்பா பேர் கூடத் தெரியாத வளர்ப்பு. இவர்களைக் கூட வைத்துக்கொண்டு என்னை தரக்குறைவாக நடத்துகிறான்.

கருப்பர் பகுதி நுழைவில் லெ சூக்ருத் தெருவிலிருந்த பந்தலுக்குள் நுழைந்தேன்.  பந்தலின் தொடக்கத்தின் அரைவெளிச்சத்தில் சில சீனர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சிறிய கண்கள் மேல்நோக்கி குத்தி நின்றிருந்தாலும் கால்முட்டிவரை மேலெழுந்த என் காலணியைக் கண்டதும் எழுந்து வெளியே வந்தார்கள். சில மலபாரிகள் கையிலிருந்து குடுவையை முழுவதுமாகக் கவிழ்த்துக்கொண்டு மேலெல்லாம் ஈரத்தோடு மண்ணில் சரிந்திருந்தனர். அரைமயக்கத்தில் இருந்தவர்கள் எனக்கு வழிவிட்டனர்.

பந்தலின் ஓரத்திலிருந்த சிறு மேஜையை எடுத்துத் தூசி தட்டினான் அங்கிருந்த க்றேயோல் சிறுவன். நான் உட்கார்ந்ததும் எனது காலணியை இறுக்கியிருந்த பிடிப்பைத் தளர்த்தினான்.

“வயிறு நிறையத்திண்ணுவோ, என்னமோ கோழி கிண்டுறாப்புல என்னத்தத் தடவி கொடுக்காவோ?”, அருகிலிருந்த குறட்டில் வாழையில் இருந்த கறிச்சோற்றைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தவனிடம் அவனது வயதை ஒத்த பெண் எரிச்சலாகக் கத்திவிட்டு வாழையிலையில் பொதிந்துவைத்த தீஞ்சமீன் துண்டுகளும் குடுவையில் சாராயமும் கொண்டுவந்து என் மேஜையில் வைத்தாள்.

பந்தலின் மூலையில் கொதிநிலையில் சுட்டமாவுக்கஞ்சி தெரிந்தது. மொச்சைக்கொட்டையோடு சேர்த்த கிழங்குத்தீயல் வாசனையும் வந்தது.

“கிழங்கும் புதுச்சோறும் உண்டு”, என பவ்யமாகச் சொன்னாள்.

அதைக் கேட்காததுபோல கூஜாவிலிருந்து குடுவையில் சாராயத்தை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தேன். ஒரு போத்தல் பத்தாது. கோபம் குறையும் வரை குடிக்க வேண்டும். கறித்துண்டைக் கடித்தபடி பந்தலைச் சுற்றிப் பார்த்தேன். என்னிடமிருந்து விலகிப்போயிருந்த மலபாரிக்கூட்டம் சிறு குழுக்களாக நெருக்கமாக மண்ணில் குந்தியிருந்தனர். ஒவ்வொருவரின் உடலும் உழைப்பில் நைந்துபோயிருந்தன. வயிறு ஒட்டிப்போயிருந்தவர்களது நெஞ்சுக்கூடு காய்ச்சியது போல கறுத்துத்திருந்தன. எல்லாருடைய கண்களிலும் முயல் மிரட்சி. ஆனால் ஆங்கிலேயரின் முழுமையான நம்பிக்கையை பெற முடிந்தவையா? துயரம் மிக்கக் கண்கள். அவர்கள் உறங்கும் கற்கோட்டைகளைக் கட்டிய கைகள் என மஹாராணிகளுக்கும் ராஜாக்களும் காட்டினால் முகம் சுளிப்பார்கள் என நினைத்தபடி, “இன்னும் ஒரு போத்தல்”, எனக் கத்தினேன்.

003

“ஆம் இது நாடோடிகள் எழுப்பிய நகரம். பிரெஞ்சு வீரனின் கனவில் இருந்துதான் இந்த நகரின் மண் மீது மனிதனின் மூச்சு படரத்தொடங்கியது. நூறு வருடங்களில் ஒரு மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக ஆங்கிலேயர்களின் மூக்கு வியர்த்துப்போவது போலொரு வர்த்தகக் களஞ்சியமாக இந்த ஊரை மாற்றுவது எத்தனை பெரிய கனவு”. மனம் என்னென்னவோ கணக்கு போட்டது.

ஒரு காலத்தில் பகலெல்லாம் இங்கு இருப்பேன். நட்புகளும் பிரிவுகளும் எதிராளிகளையும் அவன் கண்டுகொண்டு வாழ்ந்த இடம். இன்று இது வெறும் பந்தல். அந்தி மயங்கியதும் கூடுகை என்றிருந்த நாட்கள் போயின. காபித்தண்ணியும், ஏலக்காய் இஞ்சி இரண்டும் கலந்த பிரெஞ்சு காபி ரொம்பப் பிரசித்தம்.  வாழைத்தோட்டங்கள், தென்னந் தோட்டங்கள் என ரம்மியமான சூழல். இப்போது இரவு நேரத்தில் கூலிகளுக்கு சாராயமும் கொறிக்க மீனும் கறியுமென முடை நாற்றமானது. அன்றாடம் தோட்டங்களில் மனம் கூசும்படி நடத்தும் கங்காணிகளின் சொற்களை மறக்க, உடல் அசதியை போக்குவதற்கான இடமாக மாறிவிட்டது. வட்டிக்கடைக்காரர்களிடம் பாக்கியை தரமுடியாத ஹிந்துக்கள் செட்டிகளின் அடாவடித்தனங்களை ஆலோசித்து அவர்களது பரம்பரைக்குத் தீர்ப்பு அளிக்கும் இடம். சில வருடங்களுக்கு முன் வட்டிக்காசுக்காக பிள்ளையைக் கூட்டிப்போக வந்த ஆங்கிலேய அதிகாரியின் கையை வெட்டிய தமிழ்கூலி மடியில் வைத்தபடி பந்தல் மணலில் குந்தி உட்கார்ந்திருந்தான். எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஆனால் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. வெற்றிக்களிப்பாக பல தமிழர்களும் அவனோடு சாராயம் அருந்தினர். அவன் வெட்டிய கை விரல்களைக் கோர்த்தபடி சாமி வந்தவன் போல நடுவே குந்தியிருந்தான். போராட்டம் போல தமிழர்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். அன்றைய மலபாரிகளின் தலைவர் பெரியமுத்தையா பிள்ளையும், ‘கருப்பட்டி’ கணேசலிங்கப் பிள்ளையும், இலங்கைக்காரர் ‘ராவணப்பிள்ளை’ லிங்கைய்யா ராவும் கூட்டத்தைத் தாண்டி ஆங்கிலேய போலிஸ் அதிகாரிகள் அவனைக் கூட்டிச் சென்றதைப் பார்த்திருக்கிறேன். அன்றைய நிலையில் பந்தல் என்றாலே கொண்டாட்டமும் கேளிக்கையுமாக இருந்த இடம்.

மலைப்பாம்பு மனநிலை கொண்ட ஹிந்துக்கள் தமிழர்கள், வங்காளிகள் என்றும் பிரியத்தொடங்கிய கடந்த பத்து வருடங்களாக பந்தலில் ஆட்கள் குறைந்து வருவதோடு குடிக்கும் மனநிலையில் மட்டும் வருபவர்களது எண்ணிக்கை அதிகரித்திருந்தது. ரெண்டு வருடங்களுக்கு முன்னர் வட்டிக்காசைத் தராத காரணத்தால் ஆடிபூச விழாவுக்கு வந்திருந்த கூலிக்காரனின் பெண்குழந்தைகள் இருவரை கடத்திச் சென்று லூர்து மேரி தேவாலையத்தில் காணிக்கை கொடுத்த சம்பவத்திலிருந்து தமிழர்களும் வங்காளிகளும் கிட்டத்தட்ட நிரந்தரப்பகை.

நான் மூன்றாவது போத்தலை முடித்தபோது வாழையிலை தோட்டத்தைப் பராமரித்துவரும் அமலோர்ப்பவம் ராணித்தாயின் கங்காணி மத்தேன் நரசப்பா இடுப்பிலிருந்து இறங்கியிருந்த தோள் பட்டையை இறுக்கி பானை போன்ற வயிறை உள்ளிழுத்தபடி பந்தலுக்குள் நுழைந்தான். வெண்கல உடுப்பும் மேலுடையோடு சேர்ந்திருந்த பிடிப்புவாரும் பிற தமிழர் கூலிகளை எட்டி நிற்க வைத்தன.

“அட, நரசப்பா”, மேஜையிலிருந்து எழப்போனவன் தடுமாறி நரசப்பாவின் கையைப் பற்றினேன். சொரசொரவென இருந்த நரசப்பாவின் கையை நெடு நேரம் பிடித்திருக்க முடியவில்லை. ஆனால் அவர் விடுவதாக இல்லை.

“வந்த வேலை முடிந்து இதோ அடுத்த ரெண்டு வாரத்தில் கப்பலேறப்போறேன். உன்னை கர்னலாகப் பார்க்கும் நாள் வரையாவது இருப்பேன் என நினைத்தேன்.” வெடித்துச்சிரித்தான் நரசய்யா.

அடிப்பது போல பாவனை செய்து, “இதோ இந்தத் தோலை வாழைக்காய் சீவுவது போலச் சீவிய பின்னர் வெள்ளை நிறப்பன்றியின் தோலைப் போர்த்திக்கொண்டால் கர்னலென்ன வைஸ்ராயா ஆகிடலாம்”, சிரித்தபடி சொன்னாலும் என் குரலில் ஏமாற்றம் தொனித்தது.

“அட என்ன வேலு, போன வாரம் டவுன்ஹால் கூட்டத்தில் மேஜர் ழீன் உன் சேவையை ரொம்பப் பாராட்டினார். எனக்கே பொறாமையாக இருந்தது. பெரிய சாதனை செய்வதற்கான விதை உன்னுள் இருக்குதுவாமே”, மீண்டும் கணீர் சிரிப்போடு ரெண்டு போத்தலுக்கான கட்டளையைப் பிறப்பித்தான்.

“நாணயக்காரர். அவரிடம் மட்டும் முழுவதாக அதிகாரம் இருந்தால் நான் ஏன் பந்தலுக்கு வந்து உட்கார்ந்திருக்கப் போகிறேன். அவரும் அடுத்த ரெண்டு மாதங்களில் கப்பலேறி போர்ட்ஸ்மெளத் நகரத்து நீரில் மீன்பிடித்தும் மான் வேட்டை நடத்தியும் தனது மிச்ச நாட்களைக் கழிக்கப்போய்விடுவார்.”

“போனால் என்னவோ?”

“ராய் போன்ற ஓநாய்களின் நிழலிலல்லவா என்னை வைத்துவிட்டுப்போகிறாவோ.”

தனது கோப்பையை நிரப்பும்போது சாராயத்தைப் ஊற்றி என் கோப்பையிலும் நிரப்பினான். இருவரும் கோப்பையை வாயில் கவிழ்க்கும்வரை பேச்சு சத்தமே இல்லை. மானைப்போல நரசய்யாவின் பார்வை அலைபாய்ந்தது.

“மதிநுட்பம் நிறைந்தவர் மேஜர் ழீன். என்ன, தோமையர் அவருக்கு இதயத்தில் ஈரத்தை அதிகப்படுத்திவிட்டார்.  மலபாரிகளின் கழுத்தை மேலும் இறுக்கிப் பிடித்து கட்டுப்பாடோடு வைக்க அவரால் முடியவில்லை. தூக்கிவிட்டனர்.”

நான் உதட்டை ஈரப்படுத்தி தலையாட்டினேன்.

“ஆம் நல்ல மனசுக்காரர். நல்ல மனசுக்காரர், சுத்தமான மனசுக்காரர்”, என் நாக்கு குழறியது.

“அவரே கூட முதலாளி ஓநாய்களின் இரைதான்,”எனச் சொன்ன நரசைய்யா புன்முறுவலோடு என்னைப் பார்த்தான். மலபாரிகள் பற்றிய எனது மனநிலை அவனுக்குப் புரிந்த ஒன்றுதான். புலியை ஈர்க்க ஆட்டுக்குட்டியை பலிகடாவாக முன் நகர்த்தும் பாவனை அவனது முகத்தில்.

“மூட நம்பிக்கைகளின் அடிமைகள். எவ்விதமான நாகரிகத்துக்கும் தயாராகாத கூட்டம்.”

“நண்பா, சத்தம் போடவேண்டாம். அமைதி, அமைதி! பந்தல் இப்போதிருக்கும் நிலைமை வேறு. இங்கிலாந்திலிருந்து அருளுரைக்கு வந்திருந்த பெந்தகோஸ்த் பிரச்சாரகரை தேவாலயம் எனப்பாராது உள்ளேயே பொளந்திருக்கிறார்கள்”

என் கண்கள் நிலையாக இல்லை. வாய் எதையோ முணுமுணுத்தபடி இருந்தது.

“என் வேலையைப் பற்றிக் கேட்கமாட்டாயா?”, எனப் பேச்சை மாற்றினான் நரசய்யா.

“அடேய், உன் வீர சூரத்தனமெல்லாம் பள்ளிக்கூடத்திலிருந்து பார்க்கிறேனே. உன் வேலை என்ன – எந்நேரமும் பொம்பளை, தண்ணி, சின்ன பிள்ளைகள் – அதானே”

“அதிகம் பேசவேண்டாம் வேலு. நமது தனிப்பட்ட விவகாரத்தை இங்கு பேச நான் வரவில்லை. என்னோடு மர வியாபாரமும், தேயிலை ஏற்றுமதியும் செய்ய சம்மதமா?”

“ஆஹா, சின்ன டிஸ்ரேலி என உன்னை எல்லாரும் சொல்வதற்கான காரணம் இப்பதானே புரிந்தது.”

பந்தலில் இரவு நேர கூலிகளின் கூட்டம் கூடியது. எங்களது மேஜைக்கு அருகே வராது பந்தலின் வாசலில் அவர்கள் குந்தியிருந்தனர்.

நரசய்யாவின் எரிச்சல் முகத்தில் தெரிந்தது. அவன் மேற்கொண்டு பேசாது முள்கரண்டியால் வாழையிலையில் இருந்த வறுத்த மீனை எடுத்துத் தின்றான்.

“டேய் நரசய்யா, செட்டியாரே, கோவிச்சிக்காதே அய்யா. உன்னைக் கூட நம்பாமல் எப்படி? சொல்லு…ம்ம்”, என கையைப் பிடித்துக்கொண்டேன்.

“ரெண்டு வாரத்தில் கிளம்பிவிட்டால் நான் வருவதற்கு ஒரு வருடம் கூட ஆகிவிடலாம். கிரானடாவில் திராட்சை தோட்டங்களும், சாராயத் தொழிற்சாலையும் வாங்கி நிர்வாகம் செய்யச்சொல்லி ராணித்தாயி கம்பனிக்கு உத்தரவு வந்திருக்கு.”

“அடி சக்கை. உன் காட்டில் மழை பெய்யுதே.”

“ஆம். ஆனால், நான் தனிப்பட்ட உதவி கேட்டு வந்துள்ளேன். கம்பெனி சார்பில் அல்ல. இந்தத் தொழிலில் கூட்டாளிகளே எதிரிதான். ‘ராவணப்பிள்ளை’ மகன் சிங்கய்யா நம்ம கூட்டாளிதான்”

“தெரியும். பெருச்சாளி”

“ஆம். ராவணப்பிள்ளை இறந்ததும் மூத்த அண்ணனை முடமாக்கி பைத்தியம் எனப் பிரகடனப்படுத்தி தொழிலில் ஒத்தை ஆளாக நிற்கிறான். அவன் இல்லாமல் எனது மரத்தொழிலும் நிலைக்காது”

“உதவி என்றாயே? நான் என்ன செய்ய முடியும்?”

நரசய்யா மரப்பெட்டியைத் திறந்து சுருட்டைப் பற்றவைத்தான்.

“அவசரப்படாதே. மேஜர் ழீன் தலைமையில் கல்லறைத் தோட்டத்தை சுத்தம் பண்ணும் வேலையோடு இதையும் நீ செய்யலாம்.”

என் முகம் கறுத்தது.

“லூர்த்து தேவாலயத்திலிருந்து நான்கு சாமியார்கள் அடுத்த மாதம் வருகிறார்களாமே? இதென்ன ஈடன் தோட்டம் என நினைச்சாவோ? “, எனச் சிரித்தான்.

“வெளியாள் யார் வேண்டுமானாலும் வரட்டும். நம் காட்டுக்கு நாம் மந்திரியாக இருக்க வேண்டாமா?”, என்றேன்.

“அதையேத்தான் நானும் சொல்கிறேன். அமலோர்பவம் அதிகாரக்குழுவும் அதேதான் நினைக்கிறது. அதனால்தான் இன்னும் இங்கிலாந்து அரசு பக்கம் போகாத பிரெஞ்சு தோட்டங்களை செப்பனிடும் பணியில் நாம் ஈடுபடுத்தப்படுவது ஒருவிதத்தில் நல்லதுக்குத்தான்.”

நரசய்யாவின் பேச்சு போகும் திசையைக் கணித்திருந்து போதை முழுவதுமாகத் தெளிந்ததைப் போலானேன்.

“இன்னும் சில மாதங்களில் அமலோர்பவம் தோட்டமும் நிலங்களும் கிழக்கிந்திய கம்பனியின் முன்னாள் தலைமையான கார்ன்வால் துரை அவர்கள் வாங்கிடப்போவதாகப் பேச்சு இருக்கு. லிங்கைய்யா இதைத்தனியே வாங்க முடியாது. இலங்கைக்காரனுக்குப் போதிய ஹிந்து வாக்கு கிடையாது. என்ன கேட்கிறாயா? “

“அடி சக்கை, பிரெஞ்சுக்காரனிடமிருந்து மீண்டும் இங்கிலாந்து ராணி அங்கிக்குள் செல்லப்போகுதா?”

கல்லறைத் தோட்டம் பற்றிய நினைப்பு பாறாங்கல்லாக இறங்கியிருந்தாலும் நரசய்யாவின் திட்டத்தில் என் சிக்கலுக்கு ஒரு விடிவு இருக்கும் என நம்பினேன்.

நரசய்யா எதுவும் பதில் சொல்லவில்லை. “கேட்காதவன் மாதிரியா இருக்கிறேன். இதோ பார் குடிப்பதைக் கூட நிறுத்திவிட்டு கவனமாகக் கேட்கிறேன்”, என நாடகீயமாக நாற்காலியை நகர்த்தி நரசய்யா அருகே வந்தேன். நான் எழுவதைப் பார்த்து பந்தலின் சிறுவன் அருகே வந்து பவ்யமாக நின்றான்.

“என்னடா பார்க்கிறாய்? இன்னும் ரெண்டு குடுவை நாட்டுச்சாராயத்தை எடுத்துவா”, என நரசய்யா சிறுவனிடன் உத்தரவு கொடுத்தான்.

“சிங்கையா விஷம் தான். ஆனால் புத்தியுள்ளவன். ஏற்கனவே ரஷ்யாவும் இங்கிலாந்தும் போட்ட ஒப்பந்தத்தை எப்படி மீறலாம் என ஆஸ்திரய அரசு யோசித்துவருகிறது. நாற்புறமும் எதிரிகளை எத்தனை காலம் தான் தாங்கும். இங்கிலாந்துக்கும் பிரெஞ்சு ராணுவத்துக்கும் இடையே சண்டை மூட்டிவிட சந்திரநாகூர், சீசல்ஸ் போன்ற அருமையான வாய்ப்பு இங்கும் இருக்கு.”

“போதை இறங்கியிருந்தாலும், உம்மைப் போல உடம்பு முழுக்க வோல்டைரின் மதிநுட்பத்தோடு துரதிஷ்டவசமாக நான் இல்லை நண்பா. என் எலிப்புழுக்கை அறிவுக்குப் புரிவதுபோல எளிமையாகச் சொல்லு.”

“இரவைப் பகலாக்கும் அமலோர்ப்பவம் அதிகாரக்கோட்டையில் சூது இல்லாது பிழைக்கமுடியாதப்பா. ஹிந்துக்கள் அதிகம் வேலை பார்க்கும் பிரெஞ்சு தோட்டங்களை இங்கிலாந்து அரசுக்கு விற்பதைக் காட்டிலும் மலபாரிகளுக்கே விற்பது இரு அரசுகளுக்கிடையே சிக்கலை உண்டாக்கும். ஆனால் இருவருக்கும் பொது எதிரிக்கு நல்லதாயிற்று. ஸ்விட்சர்லாந்து ஹேவ் நீதிமன்றத்தில் கூலிகளுக்கும், அடிமைகளுக்கும் சிறு உரிமைகள் வழங்கி அவர்களது வாழ்வுக்கு வளம் சேர்க்கும் தீர்மானம் ஒன்று போடப்பட்டிருக்கு. அதன்படி ஐம்பது வருடங்கள் கங்காணிகள் மூலம் கூலி வேலை செய்து வருபவர்கள் தங்களுக்குத் தேவையான சிறு நிலங்கள், தோட்டங்கள் வாங்கி வரும் வர்த்தகத்திலிருந்து கழித்துக்கொள்ளும் வரைவு ஒன்று நீதிமன்றம் இரு அரசுகளுக்கும் அனுப்பியிருக்கு.”

“அடி சக்கை”

“பொறு. கூத்தாட்டம் போடத்தொடங்கிடாதே. இதோ இங்க பந்தல் சமையக்காரனா அப்படிக் குத்தகைக்கு எடுக்க முடியும்? லிங்கைய்யா ஏற்கனவே தனது விண்ணப்பத்தை அமலோர்ப்பவம் அதிகாரக்குழுவுக்குக் கொடுத்தாயிற்று.”

“அவர் வாங்கட்டும். ஆனால் குழுவில் இருப்பது நீதானே?”

“அதிகாரக்குழு பழுத்த ஆட்களோடு பிரெஞ்சு அதிகாரிகளையும் கலந்து ஆலோசித்துவிட்டது. அவர்கள் ஆட்டம் வேறு வகை”

“நான் என்ன செய்யணும்னு சொல்லாமல் இது என்ன… மூன்று போத்தல் போதையும் வீண்!”

“விஷயம் உனக்கு ஏற்புடையதாக இருக்குமென லிங்கைய்யாவிடம் ஏற்கனவே பேசிட்டேன். மலபாரிகளில் வங்க ஆட்களை சுரேந்திர்நாத் பானர்ஜி குழு பார்த்துக்கொள்ளும். ஆனால் ஹிந்துக்களில் பிரதானம் தமிழ் கூலிகள் தான்.”

இந்த விவாதம் போகும் திசை எனக்கு மிக திட்டவட்டமாகப் புரிந்தது. ஏற்கனவே002 நரசைய்யாவின் தீர்மானத்துக்கு ஒரு முறை தலையசைத்து வம்பில் மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டென்றாலும் இந்த நேரத்தில் எவ்விதமான அணுகுமுறையேனும் தன்னைக் கல்லறைத் தோட்டத்தின் வேலையிலிருந்து விலக்க வைக்கும் என்றால் அதை எடுத்துக்கொள்வது எனும் முடிவு செய்திருந்தேன். ஆனால் இது முதுகில் குத்தும் பணி.

பந்தலின் சமையற்காரன் வாழையிலையில் வறுத்த மீனும் கறிச்சோறும் கொண்டுவந்திருந்தான். மலபாரிகளின் கூட்டம் குறைந்திருந்தாலும் இருந்த சிலரது சத்தம் அதிகரித்திருந்தது. கடற்காற்றில் ஈரப்பதம் அதிகரித்ததில் பந்தலுக்குள்ளே கூதல் அதிகரித்தது.

“என்னைப் பிடியாக வைத்துவிட்டு நீ உல்லாசப் பயணம் செல்லப்போகிறாய். சரிதானா?”

“முட்டாள் மாதிரி உளறாதே. நம் வளர்ச்சிக்காகத்தான் இதைச் சொல்கிறேன். வேண்டாமென்றால் நிறுத்திவிடலாம்”, உண்மையான எரிச்சலுடன் பேசினான் நரசய்யா.

“இது நேற்று இன்று வந்த தீ இல்லை நரசய்யா. எப்போதும் இதைச் செய்யத் துணிந்தவனாகவே வளர்ந்திருக்கிறேன். எதையாவது அதற்குத் தீனி போடவேண்டுமே எனும்படியாகவே எனது நாற்பது வயது வரை கடந்துவிட்டேன். கைகால் உதைத்து நீந்திக்கொண்டே இருக்கிறோம். இன்னும் அங்கேயே இருப்பது போலத் தோன்றுகிறது. சதுப்பில் கிடக்கும் சேற்றில் இருக்கும் அல்லி கூட மெதுவாகத்தான் நீரைக் கடக்கிறது.”

“பலே. வயதானால் ஞானம் வருமென்று நம் தாத்தன்கள் சொல்வது சரிதான். இதோ, இதே மேஜையில் வாழ்க்கை விசாரம் செய்துகொண்டு ஒருவன்”, எனப் பலமாகச் சிரித்தான்.

நான் சகஜ நிலைக்குத் திரும்பினேன். “வேலையை எடுத்துக்கொள்கிறேன். தமிழர்களின் வாக்குகளைச் சேகரிப்பது சிரமமானக் காரியம். நாம் ஒத்துமையாகத் தொழிலைத் தொடங்கினாலும், தொடர்வது சிரமமாக இருக்கும்…ஆனால் எலி வலைனாலும் நம்ம தனி வலையாச்சே…”

“அதுவும் சரிதான். நம்மாட்களுக்கு அடிபட்டாலும் புரியாத ஒன்று. ஐரோப்பிய தேசத்தவர்களைப் பார். காலனி ஆட்சிக்கு அடித்துக்கொண்ட அதே நேரத்தில், வெர்சயியில் ஆஸ்திரா ராஜாங்கத்தை ஒழித்துக்கட்ட ஒன்றாக ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். இதை மட்டும் செய்துமுடி வேலு. எப்படியும் நாம் தொண்டு கிழம் ஆகும்வரை ஆங்கிலேய ஆட்சி சுபிட்சமாக சல்லடை போட்டு உறிஞ்சும். அதில் நாமும் ஒரு பங்கு அள்ளிக்கொள்வோம்”

நான் பதில் கூறாது மீதிருந்த போத்தலை அப்படியே வாயில் கவிழ்த்தேன்.

*

“இந்த இடத்தில் தொடங்கி ரெண்டாள் நுழைவதற்கான மண்வாரியலை போட்டுடலாம்”, பனை ஓலையினால் பின்னப்பட்ட தொப்பியைத் தலையோடு சேர்த்து அழுத்தியபடி எழுந்து நின்றார். அவரது முகம் வட்டிலில் வாட்டி எடுத்த பழம்போல சிவந்திருந்தது. காது மடலில் சேரும் முகத்தோல் அலையலையாக மடித்த துணி போலிருந்தது. அதன் வழியே வழிந்த வியர்வையை அவர் துடைப்பதற்கு முயலவில்லை. கண்கள் அத்தோட்டத்தின் இடிபாடுகளைப் பார்த்து நின்றாலும் அவரது பார்வை காலத்தை ஊடுருவி வேறொரு இடத்தில் குத்தி நின்றது.

கறுப்பும் மஞ்சளுமாக வேலையாட்கள் சுறுசுறுப்பாக அக்காலை நேரத்தில் மண்வண்டிகளைத் தள்ளிக்கொண்டும், உடைந்த பெரிய கற்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர். செயிண்ட் நார்மண்டி என்ஞ்சினியரிங் வொர்க்ஸ் எனும் பெயர்ப்பலகை தாங்கிய வண்டிகள் அன்றைய தினத்தின் நிலவெடிப்புகளுக்காகத் தயாராக நின்றிருந்தன. தாமஸ் நின்றிருந்த சிறு குன்றிலிருந்து பார்த்தபோது பல நூறு எறும்புகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நிலத்தைக் கைமாற்றிக்கொடுத்துக்கொண்டிருந்தது போலத் தெரிந்தது. ஒட்டுமொத்தமாக எதுவுமே மாறாத தன்மை. ஆனால் அதே நேரத்தில் செம்மண்ணும் கலங்கல் நீரும் கலந்து புது நிலம் ஒன்று முளைத்து வருவது போலொரு தோற்றம்.

நார்மண்டி தேவாலயத்தின் இருள் கவிந்த அறைகளில் எழுதிவந்த பைபிள் குறிப்புகளைப் பிரதி எடுத்துச் செல்லும் தனது மாணவர்களின் கூர்மையை தாமஸ் இங்கு கூலிகளிடம் கண்டார். பழையவற்றை களைந்து, புது உருக்களை உருவாக்கும் நோக்கத்தோடு மேலும் பழையதுக்கு முலாம் பூசுவதைப் போன்றதொரு வேலை. வேலையாட்களில் சிலர் சத்தமாகப் பேசியபடி அவரைக் கடந்து சென்றனர். தாமஸைப் பார்த்ததும் குனிந்து கொண்டவர்களை பார்க்காமல் கைத்தடியால் ஊன்றியபடி அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.

சற்று தூரத்தில் இடிபடாத ஒற்றைச் சுவர் பக்கம் சென்றார். இரு பெரிய சமாதிகளைத் தாங்கி நின்றிருந்த சுவர். மரக்கொடி படர்ந்து உச்சிவரை தழுயிருந்ததைப் பார்த்தார். தடிமனானப் பாம்பு போல சுவரைச் சுற்றி மரக்கொடிகளும் அதன் கிளைகளும் சுருண்டிருந்தன. மெல்ல நடந்து சற்று இறக்கமான தரைக்குச் சுற்றி வந்தார். மேலே சுவரின் கற்சல்லிகள் பதித்து நான்கு ஜன்னல்கள் உடைந்த கண்ணாடியுடன் தெரிந்தன. வாயைப் பிளந்திருக்கும் மீன் தலை பொறித்திருந்த ஜன்னலுக்கு மேலிருந்த அலங்காரம் ஊதுகுழலைப் போல வான்நோக்கியிருந்தது. அந்த மீன் சின்னத்தை மட்டுமேனும் தனியே எடுத்து நார்மண்டி தேவாலையக்கல்லரைத் தோட்டத்தில் வைக்கவேண்டும் என மீண்டும் ஒரு முறை எண்ணிக்கொண்டார். கடைசியாக எப்போது அதைப் பற்றி யோசித்தம் என மண்டையைத் தேய்த்து யோசித்தார். மீண்டும் மேடேறி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறு கூடாரத்திலிருந்த நாற்காலியில் சாய்ந்துபடி கைத்தடியை கீழே நழுவவிட்டார்.

இன்றோடு அறுபத்து மூன்று முடிவடைவதை உடல் அறிந்த அளவு மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. மனம் பிரான்ஸுக்குத் திரும்பியது.

“தேவாலயத்தை கட்டும் திருப்பணிக்கு நார்மாண்டி பாதிரி சபை உங்களை மொரீஸியஸுக்கு அனுப்பத் தேர்ந்தெடுக்கிறது. நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்.”

கேன்பர்ரா மெழுகு வடிவமைக்கும் குழுவின் தலைவர் தாமஸின் அறைக்கு வந்து செய்தியைச் சொன்னபோது எதிரொலியின் கடைசி சிறு ஒலி கேட்பது போல அவருக்குத் தோன்றியது.

“மன்னிக்க வேண்டும்…”

“நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் எனச் சொன்னேன்”, கூன்முதுகு பக்கம் கட்டிய கைகளை இழுத்து தனது மார்புக்குக் குறுக்காக இணைத்தபடி தலைவர் தாமஸ் உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு அருகே வந்தார்.

“இந்த வயதில் ஒரு கடற்பயணத்தை என் உடல் தாங்குமா எனத் தெரியவில்லை.”, என தாமஸ் முடிப்பதற்குள்.

“நம் பாரத்தை அவனிடம் அளிக்கும்போது ஆண்டவன் அவனது சக்தியில் கொஞ்சம் அளிப்பான் “, என பிரசங்கம் செய்யும் தோரணையில் கூறினார்.

தாமஸுக்கு காஸ்பலிலிருந்து எடுத்த வரி எனத் தெரிந்தாலும் அது எந்தப் பகுதி என்பது நினைவுக்கு வரவில்லை. தலைவர் பேசியபடி ஜன்னல் அருகே சென்று நிற்கும்வரை தாமஸ் காஸ்பல் பகுதியை முன்னும்பின்னும் நினைவில் ஓட்டிப்பார்த்தார். இப்போதுதான் சில மாதங்களாகத் தனது ஞாபக சக்தி சமயங்களில் நழுவிப்போவதை உணர்ந்திருக்கிறார். முன்னர் நூலை சத்தமாகப் படித்து மாணவர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டபின் பக்கத்தைத் திருப்புவதற்குள் மனம் அடுத்த பத்து பக்கங்களில் சொல்லவேண்டியவற்றை நினைவில் வரிசைப்படுத்திவிடும். இது வயதால் வந்ததில்லை என மீண்டும் நினைவூட்டிக்கொண்டார். தூக்கமின்மை கூட ஒரு காரணமாக இருக்கலாம். தனது பெண் தங்கியிருக்கும் போர்த்தியூவிலிருந்த கிராமத்துக்குச் சென்று ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என நம்பியிருக்கும் நேரத்தில் தலைவரின் செய்தி வந்தது.

கடுமையான காய்ச்சலுக்கு இடையே பயண ஏற்பாடுகள் நடந்தன. நெடுந்தூரப்பயணிகளின் ஆயுள் காப்பீட்டை கிழக்கிந்திய வர்த்தகம் மூலமாக பிரெஞ்சு நார்மண்டி எஞ்சினியரிங் வொர்க்ஸ் கழகம் அளித்திருந்தது. கடும் உபாதைக்கு இடையே இரு சிறு பயணங்களை மேற்கொண்டு பாரீஸின் நோத்ரு தாம் தேவாலயத்துக்குச் சென்றுவந்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு அங்கு சென்றதில் பெரு உயர கட்டுமானங்களையும் மனித கீழ்மைகளின் ஆழத்தையும் உள்ளகத்தே கொண்டிருந்த தலைநகரிலிருந்து விலகிச்செல்லும் அவசரத்தோடு பயணத்தை முடித்தார். பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தாலும் மொர்ரீஸியஸ் தீவுக்கு பிரெஞ்சு அரசுக்கும் இருந்த தொடர்பினால் நோத்ரு தாம் போன்ற ஒரு தேவாலயத்தை அங்கு நிறுவ இருக்கிறார்கள் என்ற செய்தி ஒரு சாராருக்கு சந்தோஷம் தந்தாலும் இது மத்தியகிழக்கு நாடுகளுக்குண்டான வர்த்தகத்தைத் தன்பக்கமாக வைத்திருக்க அரசு செய்யும் பசுவேஷம் என்பதை தாமஸ் உணர்ந்ததும் இங்குதான்.  கட்டிட அமைப்பின் கூட்டங்களில் நிலவிய கடுமையான கசப்பை அவர் உணர்ந்தபோது ஆண்டவன் பணித்திருக்கும் வேலைக்காகச் செல்வதைத் தவிர வேறொரு எண்ணமும் தன் மனதைத் தொடாதவாறு இருக்க பயின்றார்.

மொரீஷியஸ் வந்த முதல் நாளிலிருந்து கல்லறைத் தோட்டத்தின் சீன வேலையாட்களோடும் ஹிந்துக்களோடும் நிலவிய கூட்டங்களில் மன அமைதி இழந்தவரானார். தெய்வக்காரியம் செய்யத் தொடங்கும் மனிதர்களிடையே இருந்த மனகசப்பை அவரால் தாங்கமுடியாததாக இருந்தது. இரவு ஜபக்கூட்டத்தை நடத்த சிறு கூட்டத்தை உருவாக்கிய முதல் முறை வந்திருந்தவர்களின் அறியாமையை நினைத்து தனக்கு ஒரு சேவைக்கான வழி ஒன்று திறந்ததை உணர்ந்தார்.

நான் அருகே சென்றதும் தாமஸ் சட்டென நினைவு கலைந்தார்.

“…இவர்களில் பலரும் கடந்த ஒரு வருடமாக இந்தியாவிலிருந்து வந்தவர்கள். ஒரு சில சீனர்களும் உண்டு”, எனது வேலையாட்களைப் பற்றி தாமஸிடம் பிரெஞ்சில் சொன்னேன்.

“மன்னிக்கவும்…எதோ நினைவில் இருந்தேன்”, தாமஸ் சுதாரித்துக்கொண்டார்.

“பரவாயில்லை ஃபாதர்… எனக்கு நேரம் கம்மியாக உள்ளது. முதல் சில மாதங்கள் கல்லறையை சுத்தம் செய்வதில் செலவாகிவிடும். இப்போதே போர்ட் லூயி தோட்டக்காரர்களின் கூட்டத்தில் கல்லறையிலிருந்து வரும் துர்நாற்றத்தை எப்படி சரிசெய்யப்போகிறோம் எனக் கேட்டதாகத் தெரிகிறது. “

தாமஸ் பதில் சொல்லவில்லை.

“பிணங்களை நாஸ் மலைக்கு கிழக்கால் அமைத்திருக்கும் கல்லறைக்கு எடுத்துச் செல்ல திட்டம் இருக்கு. ஆனால் காலராவில் இறந்தவர்களை அப்புறப்படுத்த வேலையாட்கள் பயப்படுகிறார்கள். ஹிந்துக்களும் சீனர்களும் இறந்தவர்களுக்கு சாந்தி செய்து புதைப்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். “

“ஏன் உங்களில் பலரும் இந்தியர்கள் தானே?”

“ஆம் ஹிந்துக்களும் முஸல்மான்களும் உண்டுதான். ஆனால் இறந்தவர்களின் ஜாதி தெரியாது பிணங்களை அப்புறப்படுத்த மறுக்கிறார்கள்.”

தாமஸால் இதன் பின்னணியை விளங்கிக்கொள்ளமுடியாவிட்டாலும் அவர்களது நம்பிக்கையை குலைக்க விரும்பவில்லை.

“பிணத்துக்குக் கூட ஜாதி பார்ப்பார்கள் என்பது பொதுவாக ஐரோப்பியர்கள் ஹிந்துக்களைப் பற்றி சொல்லும் கூற்று. அதை கண்கூடாக இன்று கேள்விப்படுகிறேன். ஆனால் இதைக்கொண்டு அவர்கள் மீது கோபம் கொள்ள நான் விரும்பவில்லை”, மிகுந்த வருத்தத்தோடு அதை சொன்னார்.

முதல்முறையாக ஒரு வித்தியாசமான ஐரோப்பியரை சந்திப்பதை உணர்ந்தேன். கெட்ட  கனவுகளும் விசித்திர எண்ணங்களும் என்னைத் தூங்கவிடாமல் செய்தாலும் ஜாதி ஹிந்துக்கள் மீதிருந்த வெறுப்பினால் இப்பிரச்சனையை சற்று குரூர சந்தோஷத்தோடு எதிர்பார்த்திருந்தேன். காசு கொடுத்தால் இதை செய்துமுடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் தான் ஹிந்துக்கள் மீது கொண்ட அபிப்ராயம் ஊர்ஜிதமாவது ஒருவித சந்தோஷத்தை அளிப்பதாக இருந்தது. அப்படிப்பார்க்காத தாமஸ் மீது முதலில் எரிச்சல்தான் வந்தது. உள்ளுக்குள் ஏதோ ஒரு சிறு சந்தோஷம்.

ஒவ்வொரு நாள் வேலை முடிந்தபின் தாமஸ் பாதிரி வேலையாட்களுக்கு வேதக்கதைகள் சொன்னார். புழுதியும், மணலும் பூசிய மக்கள் அவரது கதைகள் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருப்பர். ஆரோக்கியமற்றவர்களுக்கு தொற்று நோய் பரவியது. சீனர்களிடையே பரவத் தொடங்கியது மெல்ல இந்தியர்களுக்கும் வந்து சேர்ந்தது. ழீன் வேலையாட்களுக்குப் பணத்தை அதிகரித்து புது ஆட்களை வரவழைத்தார். சோர்ந்துபோன கூலியாட்களுக்கு ஐரோப்பிய கதைகளையும், தேவகுமாரன் கதையையும் பாதிரி பகிர்ந்துகொண்டார்.

“நீ ஹிந்துதான். ஆனாலும் கேட்கிறேன். உனக்கு இந்தக் காரியத்தில் முழு சந்தோஷம் உள்ளதா?”

“எது பிணங்களை களைவதா?”, கிண்டலாகக் கேட்டேன்.

“இதைப் பாவப்பட்ட பூமியாக நான் நினைக்கவில்லை. கடும் உழைப்பாளிகளாக இந்தியாவிலிருந்து வந்தவர்களை ஏய்த்துப்பிழைத்த கூட்டத்தினரின் சிறு பதில் உபகாரம். அவர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது போல இங்கு ஆலயத்தை உருவாக்குகிறார்கள் என்பதாக இந்தச் செயலை நான் பார்க்கிறேன்.”

“நீங்கள் அப்படிச் சொல்லிக்கொள்ளலாம். இதையும் வியாபாரமாகப் பார்க்கும்படி சொல்லிக்கொடுத்த என் வாத்தியார்களும் பிரெஞ்சுக்காரர்கள்தான்”,  என்றேன்.

“இருக்கலாம். நம்பும் காரணம் மட்டுமே நான் என எனது ஆசிரியர் யேசு சொல்லியிருக்கிறார். கிறிஸ்து இங்கு எல்லாரை விடவும் பெரியவர்”, என்றார் தாமஸ்.

நான் பேசாமல் நின்றிருந்தேன்.

“அதை நீயும் அறிவாய். ஏனென்றால் இந்தக் கல்லறையில் இருக்கும் உனது மூத்தோர்களும் இதையே நம்பினார்கள். உன் மனம் அவர்களால் ஆனது”, என்றார்.

“நீ யாரென உனக்குத் தெரியாதது தவறில்லை. ஆனால் உன் காலடியில் அதற்கான சந்தர்ப்பம் இருக்கு. அதை ஒவ்வொரு நொடியும் நிராகரித்தபடி வாழ்கிறாய். ஆமாம், உன் வாழ்க்கையே உன்னைச் சுற்றி இருப்பதை நிராகரிப்பதிலேயே இருக்கு. இப்படி, இது நானில்லை, இது என்னுதல்ல, இவன் என் தந்தையல்லன்னு அணுகுவதெல்லாம் நிராகரித்தபடி இருப்பவன்.”

நான் ஒருகணம் திடுக்கிட்டேன். என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றிருந்தேன். நீதான் அவர்கள் எனச் சட்டென சொல்லிவிட்டதாக உணர்ந்ததும் வெலவெலத்துப்போனேன்.

“சிறுவயதிலிருந்து தேவாலயத்தின் சுவர்களில் படிந்திருந்த ஈரப்பசை மீது கன்னத்தை வைத்துப்பார்க்கும் சிறுவனின் சித்திரம் என் கனவில் வருவதுண்டு. அவனைப் பல இடங்களிலும் தேடியிருக்கிறேன். அந்தச் சிறுவனும் அரபிக்காரனைப் போல பழுப்பு நிறத்தோலும், நரம்புகளாலான கைகளையும் கொண்டவன். உன்னைச் சந்தித்த நாளில் நீதான் அது என ஒரு கணம் திகைத்தேன்.. இப்போது, கட்டாயப்படுத்தாமல் கௌரவம் மிகுந்த வேலையாட்கள் வேண்டும் எனச் சொன்னபோது மாறிய உன் கண்களை நான் கவனித்தேன்”, தாமஸ் என்னைப் பார்த்தபடி பேசினார். அவரது பார்வை வேறெங்கோ இருந்தது.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவரைவிட்டு விலகவும் முடியவில்லை. ஒவ்வொரு சொல்லையும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“நான் நாற்மண்டியிலிருந்து கிளம்பியதுபோது என் திருச்சபை சொன்னது என்ன தெரியுமா?”

“அந்தப் பிராந்தியத்திலேயே மிக உயரமான தேவாலயமாக இருக்கும். நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்”

“எனக்குச் சொல்லப்பட்ட இந்த வரிகளை கப்பலில் ஏறும்வரை பலமுறை கேட்டிருந்தேன். நான் சந்தித்த எல்லாருமே சொன்ன வரி இது”.

“ஆம். அவர் எல்லாரையும் விட உயரமானவர்”, என மீண்டும் சொல்லிக்கொண்டார்.

*

நடக்கையிலே எழும் எண்ணங்களுக்கு அடிமையாகி வருகிறேன். திசை தெரியாத வழியில் காற்றை மட்டும் துணையாகக் கொண்டு சில நடப்பது குழப்பமான மனதுக்கு ஆறுதலாக இருந்தது. ஜனசந்தடியிலிருந்து நழுவி மலைப்பாதைக்குச் சென்றதும் மனம் இலகுவாகிறது. ஒரு திருப்பத்தில் கோரைப்புல் தடுப்பருகே சில ஆட்டுக்குட்டிகள் ஒன்றோடு ஒன்று மேலேறி உருண்டன.  சிறிது நொடிகள் நடையை நிறுத்திவிட்டு குட்டிகளின் விளையாட்டைப் பார்த்தான். அவற்றின் உடலில் தெரிந்த உயிர்ப்பு எங்கிருந்து வந்தது? மீண்டும் மீண்டும் முட்டி மோதி ஆடும் விளையாட்டு இங்கிருந்து பார்க்கும்போது எத்தனை அணுக்கமாகத் தெரிகிறது? எத்தனை முட்டி ஆடினாலும் கோரைப்புல் தடுப்பைத் தாண்டிவிடமுடியாது என்பது தனக்குத் தெரிந்தது போலவே அவற்றுக்கும் தெரியுமா?

ஆனால் இன்று மனம் ஒருநிலைப்படவில்லை. கடந்த ரெண்டு நாட்களாகவே ஹிந்துக்களும் நடக்கும் பேச்சுவார்த்தை எவ்விதமான தெளிவையும் கொடுக்கவில்லை. ஆனால் அது மட்டும் காரணமல்ல. ரெண்டாவது வாரமாக இடைவிடாமல் வரும் கனவு ஒரு துர்நிகழ்வின் தொடக்கமாகத் தோன்றியது.

ஏதோஒரு கண்காணா சரடு ஒன்று கனவையும் நினைவையும் இணைத்திருப்பதாகத் தோன்றியது.

ஜன குடியிருப்புகளைத் தாண்டி ஒரு நீண்ட மண் பாதையில் நடக்கத் தொடங்கியபோது வானம் முழுவதும் மஞ்சள் படர்ந்திருந்தது. சித்திரை மாதத்து வெயிலில் ஈரமான பின்னங்கழுத்தை கைக்குட்டையால் துடைத்தேன். கூழாங்கல் பரப்பிய ஆற்றுப்படுகையில் சிறிது குந்தி உட்கார்ந்து கற்களில் கையை அளைந்தேன். மறுகரையில் தெரிந்த பழைய கோயில் துறைப் படிக்கட்டுகள் நீரினுள் இறங்கிச் செல்வதைப் கவனித்தேன். கல்லறைத் தோட்டத்தில் தோண்டி எடுத்த சில முகங்கள் மீண்டும் கனவில் எழும்பி வருவது போல நீரிலிருந்தும் வருமா? சீன வேலையாட்கள் எடுத்துப்போட்ட சடலங்களின் குவியலை முதலில் ஏதோ ஒரு கருங்கற்குவியல் என நினைத்திருந்தேன். நீண்ட கால் எலும்புகள் சிதைந்த சதைத் துணுக்குகள் வழியாகத் தெரிந்தாலும் முப்பதாண்டுகளாக மூடியிருந்த மண் உடலின் ஒரு பகுதியாகியிருந்தது. இழுவை வண்டியில் இடத்தை நிரப்ப நெம்புகோலால் உடலைத் தள்ளி ஒதுக்கிய சீனனின் செயலை என்னால் பார்த்துக்கொண்டிருக்கமுடியவில்லை. சட்டென கண்களை அகற்றி வேறு பக்கம் ஒதுங்கிச் சென்றாலும் ஆழத்துள் எங்கோ அவை புதைந்துவிட்டன. ஈரக்கதுப்பு இலைச்சருகுகளும் இறுகிய கருமண் கட்டிகளும் உடல்களோடு புரண்டு ஒன்று சேர்ந்திருந்த சித்திரத்தை நினைவிலிருந்து அகற்ற முடிந்தாலும் கனவுக்குள் அவை நிரந்தமாக அப்பிக்கிடந்தன. மேலும் அதி உக்கிரமாக உயிர்ப்போடு அச்சித்திரம் தினமும் மாறி பயத்தோடு உணர்ந்தேன். அவ்வுடல்களில் கண்களைக் கண்டதும் உடல் அதிர எழுந்தபின் கருக்கலில் நடைக்குக் கிளம்பும்வரை பெரும் பதற்றம் குடிகொள்ளும்.

“என்னைக் கண்டு அடையாளம் அறிந்து கூப்பிடுவது போலத் தெரிகிறது”, எனச் சொன்னால் யாருமே பயந்துவிடக்கூடும். மரண பயம் என்பது இதுதானோ?

“என்னைப் பார்த்து ஓசையிடுங்கள், ஓசையிடுங்கள். மறந்த என் கதை வெளிவரட்டும்”, என சத்தமில்லாமல் கூக்குரல் இடுவது போல எனக்குத் தோன்றியது. இதுவரை என் அடையாளம் நான் செய்யும் வர்த்தகம் மட்டுமே எனும் மாயத்தோற்றத்தைக் கிழித்து வெளியே வந்தது போலிருந்தது. மெல்ல தானே உடைந்து மறு உருவடைவதை வேறொருவனுக்காகும் மாற்றமாகப் பார்த்தேன். எந்தப் பிம்பம் உண்மையானது? எந்தப் பிம்பம் உண்மையில் தனது? அல்லது இவை அனைத்தும் கற்பனையா? சொற்களும் சிந்தனையும் அமர்ந்துவிட்டுச் சென்ற இடத்தில் எஞ்சும் பெருஞ்சுமைகளா? மனசாட்சியின் காவலன் என பிரெஞ்சில் ஒரு சொற்றொடர் இருக்கிறதே அதன் கனப்பரிமாணமா இது?

கூடாரத்தை விட்டு வெளியே வந்தேன். கீழ்வானத்தின் வெளிச்சம் ஆசுவாசம் தந்தது. இரவு முழுவதும் இருந்த கால்குடைச்சல் இப்போது இல்லை. உள்ளூர ஒருவித பதற்றமும் எரிச்சலும் எஞ்சியிருந்தது. அதை விரட்டியடிப்பதைப் போல ஓங்கி காறித் துப்பினேன். கடந்த ஒருமாதமாக பெரும் பாரமாக அழுத்திக்கொண்டிருக்கும் வலியிலிருந்து விடுபடமுடியாத சோர்வுடன் தளர்நடை நடந்தேன். தூரத்தில் நாயின் குரைப்பு கேட்டது. எனக்கு மட்டுமே சொல்லிக்கொள்ளும் ஆறுதல் வார்த்தை போல ஹீனமாக குரைப்பு. புதுலிபியில் எழுதிய காகிதத்தைப் படிக்கத் திடீரெனத் தகுதி அடைந்தவன் போலொரு உணர்வு. ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும் இருக்கும் இடைவெளி இரு வெவ்வேறு கால எல்லையில் இருக்கமுடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக நடந்தேன்.

சற்று தடுமாறியதில் ஒரு ஓரமாக உட்கார்ந்தேன். படுத்திருந்தால் உடல் தூக்கிப்போடுவது போன்ற பதற்றம். திரும்பிவிடலாம் என்றாலும் ஆற்றைக்கடந்து ஜனகுடியிருப்புக்குச் சென்றடைய நான்கு மைல்கள் நடந்தாகவேண்டும். எழுந்து நின்றேன். தூரத்தை மனதில் நினைத்ததும் கால் வலுவிழந்தது போல நிலையற்றுப் போனதில் சம்மனம் போட்டு உட்கார்ந்தேன்.

தலை கிறுப்பு குறைந்து கண்ணுக்குள் சிறு வெளிச்ச வெடிப்புகள் தெரிந்தன. லாந்தர் விளக்கை வேகமாக ஆட்டுவது போலொரு சித்திரம் இமைக்குள். கண்ணைத் திறந்தால் முழு இருள். இறுக கண்ணை மூடி சுருண்டேன்.

வெயில் சூடு முகத்தில் அறைந்ததில் விழிப்பு தட்டியத. மலையில் வீசிய மென்காற்று குளிர்வித்தாலும் வெயில் படும் இடமெல்லாம் ஆசுவாசமாக உணர்ந்தேன். எவ்வளவு நேரமாக இப்படிக் கிடக்கிறேன் எனப் புரியாவிட்டாலும் விழுந்தபோது குழப்பிய எண்ணங்கள் இதற்காகவே காத்திருந்ததுபோல மீண்டும் வந்து உட்கார்ந்துகொண்டன. தலை கனத்தது. மெல்ல எழுந்து உடுப்பில் ஒட்டியிருந்த மண்ணை உதறிக்கொண்டேன். வெயில் அம்மலைப்பகுதி முழுவதும் பரவியிருந்தது.  கால்கள் அனிச்சையாக சரிவில் இறங்கி நடக்கத்தொடங்கின. பெருத்த பூசணியைத் தலைக்குள் நுழைத்துவிட்டதுபோன்ற பாரம் தலையில்.

வளவுவளைவான வழிகளில் இறங்கி சிறு கோபுரத்தைக் கடந்து ஆற்றுப்பாலத்துக்கு வந்தபோது அக்கரையில் ஆட்கள் தெரிந்தனர். மனதின் படபடப்பு சற்று குறைந்திருந்தது. சட்டெனக் குனிந்து கையளவு நீரை எடுத்து முகத்தில் அறைந்துகொண்டேன். வேறேதும் தெரியாதவன் போல பலமுறை மாறி மாறி அதே செயலை செய்தேன். மனதின் சலிப்பையும் சஞ்சலத்தை கரைத்துவிடக்கூடியது போன்ற வேகம். மீண்டும் ஒரு முறை நீரில் குனிந்தபோது என்னைப் போன்றொரு பார்வை நீருக்குள் தெரிந்தது. சலனமற்ற கண்கள். சுற்றிலும் மீன்கள். மண் கரைசல்கள். காய்ந்த சருகுகளின் அசைவுகள். ஒரு ஜோடிக்கண்கள் பன்மடங்காயின. பலவிதங்களில் இருந்தாலும் எல்லாமே என்னைப் பார்த்தன. என்னை ஊடுறுவிய பார்வை. இப்போது நான் பயப்படவில்லை. அவை என் பார்வைகள். முடியை நீரால் கோதிக்கொடுத்து பாலத்தின் மீது ஏறி நடக்கத்தொடங்கினேன். மீண்டும் ஒரு முறை அலைகுவியலான கரையைத் திரும்பப்பார்த்தேன். சலனமில்லை.

அக்கரையைத் தாண்டி வங்க முஸல்மான்களின் குடியிருப்பு தெரிந்தது. ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாகப் பெரும் கும்பல் எல்லாதிசையிலும் தத்தமது காரியத்தில் இருந்தனர். இவர்களது மூதாதையர்களில் சிலர் அக்கல்லறையில் காலுக்குக்கீழே மரணத்தின் அப்பக்கம் இருக்கலாம். ஆனாலும் தொட்டுவிடும் தூரம் தான். அருகே சென்றபோது பெரிய கூடைகளில் அரிசியும் காய்கறியும் திறந்து கிடப்பதைப் பார்த்தேன். அருகே செந்நெருப்பு தகரப்பாத்திரங்களில் உணவு கொப்பளித்துக்கொண்டிருந்தது. பாத்திரக்குவியலுக்கும் கருவேல மரச்சிமட்டிகள் விறகுக்குவியல்கள் இடையே குழந்தைகள் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தன.

மென்கற்றில் சுடர்கள் பலநிறத்தில் நடனம் புரிந்தன. ஏதோ ஒரு வகையில் இருப்பைத் தக்கவைக்கும் வேகம். நான் சற்று தொலைவில் நின்று அக்காலை நேர குடும்பக்கடமைகள் செய்பவர்களின் ஓட்டத்தைக் கவனித்தேன். ஒரு அற்புதமான ஒருமையை அவர்களது அசைவுகளில் கண்டேன். தாய்ப்பால் கோரும் குழந்தையின் பாவனையில் உயிர்சக்தியின் வேகம் முழுமையாகத் தெரிந்தது. இவர்கள் என் மூதாதையாக இருக்கலாம். என் தாத்தனும் அப்பாவும் இப்படி ஒரு வேகத்தோடு வந்திருந்தார்கள். அந்த வேகமே என் உடலின் குருதி. இந்த மண்ணின் வளம். பாத்திரங்களிலிருந்து ஆவி மேல்நோக்கிப்பரவியது.

**

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...