சௌந்தரை எனக்கு இலக்கிய வாசகராகவே அறிமுகம். ‘அசடன்’ நாவல் குறித்து ஜெயமோகன் தளத்தில் கட்டுரை எழுதியுள்ளார். நானும் அப்போதுதான் அசடனை வாசித்து முடித்திருந்ததால் அக்கட்டுரையை உடனடியாக வாசித்தேன். ஆழமான வாசிப்பு. தான் அதை புரிந்துகொண்ட வகையில் எளிமையாக எழுதியிருந்தார். எளிமையின் மேல் எனக்கு எப்போதும் ஈர்ப்புண்டு. ஒன்றை ஆழமாகப் புரிந்துகொண்டவரால் மட்டுமே எவ்வளவு சிரமமானதையும் எளிமையாகச் சொல்லிவிட முடியும் என நம்புபவன் நான். அதேசமயம் அவர்களால் மட்டுமே தேவையானபோது அதன் உச்சமான சாத்தியங்களுக்கும் சென்றுதொட இயலும்.
அசடனுக்குப் பின்னர் ஓரிரு முறை சௌந்தரின் பெயரை ஜெயமோகன் தளத்தில் பார்த்ததோடு சரி. ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவல் குறித்த அவர் கட்டுரை அடுத்து அவர் எழுதியதில் நினைவிருக்கும் பதிவு. பொதுவாகவே நான் எதை வாசிக்கிறேனோ அதைப் பிறர் எப்படி அணுகியுள்ளனர் என அறியும் ஆர்வம் இருப்பதால் இவ்விரு கட்டுரைகளும் மனதில் பதிந்திருக்கக் கூடும். பின்னர் சிறிது காலம் சென்ற பிறகே அவர் ஒரு யோகா ஆசிரியர் எனக் கூடுதலாக அறிமுகம் கிடைத்தது. யோகா என்றாலே கால்களை மடக்கி காது மடலைப் பிடிக்கும் சாகச வகைகள் மனதில் இருந்ததால் ‘சரி அவர் பாட்டுக்கு தெக்கால போகட்டும் நாம வடக்கால வண்டிய கட்டலாம்’ என இருந்துவிட்டேன்.
யோகாவுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். நான் சிலம்பம் கற்றுக்கொண்ட காலத்தில் எங்கள் மாஸ்டர் யோகாவை அதிகம் வலியுறுத்துவார். அவர் சிலம்பம் தவிர யோகக்கலையைக் கொண்டு பொது மேடைகளில் சாகசம் செய்பவராகவும் இருந்தார். அதன் மூலம் மலேசிய சாதனைகளும் செய்திருந்தார். ஒருமுறை எங்களுக்கு மயூராசனத்தைச் செய்து காண்பித்து அதுபோல செய்யச் சொல்லி பயிற்றுவித்தார். நான் சிறுத்த உடலோடு இருப்பதால் என்னால் அதை சர்வ நிச்சயமாகச் செய்ய முடியும் என அவராக நம்பி கட்டளையிடவும் மாரியம்மன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு செய்தேன். பயிற்சி வெல்லஸ்லி மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடப்பதால் அவள்தானே உயிருக்குப் பொறுப்பு.
பயிற்சியைத் தொடங்கிய சில நொடிகளில் உடலை சமப்படுத்த இயலாமல் முன்புறம் சரிந்து முகம் அடிபட்டதோடு வலது கையின் நடுவிரல் பிசகிவிட்டது. இனி சிலம்பம் பழகவே வரமாட்டேன் என வீட்டை நோக்கி ஓட்டம் எடுத்தவனைப் பிடித்து நிறுத்த எந்த யோகப் பயிற்சி பெற்றவர்களாலும் முடியவில்லை.
அதன் பின்னர் கல்லூரி முடிந்த காலத்தில் பத்துமலையில் இருந்த The divine life society-யில் இளம் துறவியாக இருந்த குமுக்ஜியிடம் யோகா பயிலச் சென்றேன். அவ்வயதில் எப்படியும் துறவியாகிவிட வேண்டும் எனும் வேட்கை மட்டுமே என்னிடம் இருந்தது. அதற்கு தியானமும் யோகமும் அடிப்படை என நானாக ஒரு பாடத்திட்டத்தை மனதில் உருவாக்கி அதை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தேன். எனவே அதிகாலை நான்கு மணிக்கு குகபக்தானந்தாவிடம் தியானமும் மாலையில் அவரது சீடர் குமுக்ஜியிடம் யோகமும் கற்க எத்தனித்தேன்.
குமுக்ஜி சில அடிப்படை யோகக் கலைகளை எனக்குச் சொல்லிக்கொடுத்தார். ஆனால் எனக்கென தனியாக ஒதுக்க அவருக்கு போதிய நேரம் இல்லாமல் இருந்தது. சூரிய நமஸ்காரத்தைப் போடச்சொல்லிவிட்டு அவன் தன் பணிகளுக்குச் சென்றுவிடுவார். அவர் திரும்பும் வரையில் கணக்கில்லாத சூரிய நமஸ்காரம் செய்துச் செய்து சோர்ந்திருப்பேன். கால்கள் எல்லாம் கடுகடுக்கும். வேறு வழியில்லாமல் மெல்ல மெல்ல அவரிடமிருந்து விலகிக்கொண்டேன். துறவு வாழ்க்கையில் இத்தகைய சவால்கள் எல்லாம் சாதாரணம் என இருந்துவிட்டேன். இந்த இளம் விவேகானந்தரை அறிய ஒரு ராமகிருஷ்ணர் தோன்றாமலா போவார் எனக் காத்திருக்கத் தொடங்கினேன்.
பொதுவாகவே யோகா செய்யும் போஸ்டர்களைப் பார்த்தால் ஆசை வரத்தான் செய்யும். சூரிய உதயத்தில் இயற்கை சூழ்ந்த பகுதியில் அவ்வளவு இலகுவாக உடலை வளைத்து புன்முறுவல் பூக்கும் பெண்களைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆசை வராது. ஆனால் அது என்னவோ நமக்கு வாய்க்கும் யோகா ஆசிரியர்கள் மட்டும் கொடுமைக்காரர்களாக மாறி விடுகிறார்கள் என எரிச்சலாக இருக்கும்.
***
கோவிட் தொற்றுக் காலத்தில் சௌந்தருடன் நேரடித் தொடர்பு உருவானது. அவர் என் பேய்ச்சி நாவலை வாசித்திருந்ததால் உரையாடல் இலகுவானது. இணையம் வழியாக யோகப் பயிற்சி எடுக்கலாம் எனும் எண்ணம் உருவானபோது என்னுடன் இரு நண்பர்களையும் இணைத்துக்கொண்டேன்.
சௌந்தர் போதிக்கும் யோகம் எளிமையாக இருந்தது. என் உடலுக்கு என்ன தேவையோ அதை அறிந்து அதற்கேற்ற பயிற்சிகளை வழங்குபவராக இருந்தார். அது மரபான யோகாவின் தன்மை. ஆசிரியரின் ஆலோசனைப்படி உடலைப் பழக்கப்படுத்தும் நிலை. ஆனால் அந்த எளிய பயிற்சிகளே என் உடலை களைப்படைய வைத்தன. ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு மணிக்கணக்காக எழுதிக்கொண்டிருக்கும் என் உடலில் பாகங்கள் எங்கெல்லாம் துருப்பிடித்துள்ளது என ஓரளவு அறிய சௌந்தரின் பயிற்சிகள் உதவின.
எப்போதும்போலத்தான்! சில மாதங்களில் பயிற்சிகளைத் தொடர்வதை விட்டுவிட்டேன். பணிகளும் செயல் தீவிரமும் என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்றுகொண்டிருந்தன. முதுகெலும்பில் கடினமான வலிகள் ஏற்படும்போது மட்டும் சில பயிற்சிகள் செய்வேன். அவ்வப்போது ஏற்படும் உடல் உபாதைகளின்போது மட்டும் சௌந்தரை அழைத்து ஆலோசனைக் கேட்பதுண்டு. அவரும் உடனடியாகச் சிலப் பயிற்சிகளை அனுப்பி உடலை பழைய நிலைக்கு மீட்க உதவுவார்.
இந்நிலையில்தான் சௌந்தர் இந்தோனேசியாவில் உள்ள பாத்தாமுக்கு வருகின்றார் எனும் தகவல் தெரிந்தவுடன் மலேசியாவில் மரபான யோகம் குறித்த அறிமுகம் ஒன்றை உருவாக்கினால் என்ன எனத் தோன்றியது. சௌந்தரும் அதற்கு உற்சாகமாகச் சம்மதித்தார்.
2024ஆம் ஆண்டு உடல் ஆரோக்கியத்தை மீட்க வேண்டும் என்பதே என் முதன்மை நோக்கம். இவ்வாண்டு எழுதிய முதல் கட்டுரையிலும் அதையே குறிப்பிட்டிருந்தேன். எனவே சௌந்தர் வருவது எனக்கு தனிப்பட்ட வகையில் நல்ல தொடக்கமாக இருக்கும் எனக் கருதினேன்.
நண்பர்களிடம் இது குறித்துப் பகிர்ந்தபோது சிலர் ஆர்வம் காட்டினர். இறுதியாக 25 பேர் பூரண யோகா அறிமுக வகுப்புக்கு வருவதாக உறுதியளித்தனர். அதன்படி ஜனவரி 13, சௌந்தருடனான இரண்டு மணி நேர யோக அறிமுகம் திட்டமிடப்பட்டது.
***
சௌந்தர் ஜனவரி 13 மதியம் சுபாங் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். என்னுடன் சாலினியும் இருந்தார். விமானத்தில் இருந்து இறங்கியவரை அடையாளம் கண்டுக்கொண்ட நாங்கள் இருவருமாக அவரை துரத்திப் பிடிப்பதற்குள் கிடுகிடுவென நடந்து விமான நிலைய வாயிலுக்கே வந்துவிட்டார். வழக்கமான அன்புப் பரிமாறல்களுக்குப் பின்னர் நேராக ரவாங் நோக்கி பயணமானோம். வழிநெடுகிலும் யோகம் குறித்து உரையாடல்கள். உடலுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் உள்ளத்தை எப்படிக் கையாள்வது என்றும் அகச்சிக்கலில் இருந்து எவ்வாறு விடுபடுவதும் என்றும் உரையாடிக்கொண்டே வந்தோம். ரவாங் நகரில் அவருக்கு ஒரு விடுதியில் அறை ஏற்பாடு செய்திருந்தேன். சௌந்தர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வந்தார். ஒரு சைவ உணவத்தில் மதிய உணவை சற்று தாமதமாக முடித்துக்கொண்டு புறப்பட்டோம்.
தினேசுவரி சல்மா யோகப் பயிற்சிக்கான இடத்தைத் தயார் செய்துகொடுத்தார். சரியாக ஐந்து மணிக்கு பயிற்சிகள் தொடங்கின. சென்னையில் சத்யானந்த யோக மையம் எனும் அமைப்பை நடத்தி வரும் சௌந்தர் மரபான யோக முறை என்றால் என்னவென்று விளக்கி எளிமையான ஆறு பயிற்சிகளை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர் கேள்வி பதில் என சந்திப்பு எட்டு மணி வரை நீண்டது. அனைவருக்கும் கனிவுடன் பதில்களைக் கொடுத்தார். அவரவரின் உடலுக்கான பயிற்சிகள் குறித்து பொறுமையாக விளக்கினார்.
நண்பர்கள் முகங்களில் உற்சாகத்தைக் காண முடிந்தது. அது எளிமையான பயிற்சி வழி கிடைத்த உடனடியான மாற்றங்கள் குறித்த வியப்பாக இருக்கலாம். சௌந்தரை அடுத்தடுத்து மலேசியாவுக்கு வரவழைக்க வேண்டும் என நண்பர்களிடம் தொலைப்பேசி வழி பரிந்துரைகள் வந்துகொண்டே இருந்தன. அவரை இத்தனை காலம் தங்கள் கண்களில் காட்டாமல் இருந்த என்னை ‘கறுப்பு ஆடு’ என நண்பர்கள் சிலேடையில் திட்டினர். அவர்கள் சௌந்தரை அறிந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சௌந்தர் வருகையை நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். சௌந்தர் யோக பரம்பரையில் ஒன்றான பிஹார் யோக பள்ளியில் ஏழு ஆண்டுகள் பயின்றவர். தொடர் போதனைகள் பயிற்சிகள் மூலம் மிகச்சிறந்த யோக ஆசிரியராக உருவாகியுள்ளவர். நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப யோகக் கலையை வடிவமைப்பவர். நம்மைச் சுற்றி நல்லவைகளை வழங்க பலரும் தயாராக உள்ளனர். அவை நல்லவகைகள் என வலியுறுத்திச் சொல்ல சில குரல்கள் அவசியமாக உள்ளன. உண்மையில் அப்பணி எழுத்தாளனுக்கு உரியது. எழுத்தாளன் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகள் மீது கவனம் உள்ளவன். எனவே தன் கண்ணில்படும் உன்னதங்கள் குறித்து ஓயாமல் பேசிக்கொண்டிருக்க வேண்டியதும் அதனை விரிந்த தளத்திற்கு எடுத்துச் செல்வதும் அவன் கடமையே. அது போலவே வணிகத்தை சேவை என முன் வைக்கும் முயற்சிகள் மீது விமர்சனங்களை முன்வைப்பதும் அவன் கடமைதான்.
எனவே ஜனவரி 14, சௌந்தருக்கு அடுத்தடுத்து அறிமுக சில கூட்டங்களை உருவாக்கினேன். முதலாவதாக காலை 8.30 மணிக்கு மை ஸ்கில்ஸ் அறவாரிய மாணவர்களுக்காக இரண்டு மணி நேரம் பயிற்சிகள் திட்டமிடப்பட்டது. நான் சௌந்தரை காலை 6.30க்கே ரவாங்கில் ஏற்றிக்கொண்டு பசியாறப் புறப்பட்டேன். நாசி லெம்மாக்கை அறிமுகம் செய்துவைத்தேன். இவ்வளவு காலையில் பசியாறுவதா என முதலில் தயங்கியவர் பின்னர் நாசி லெம்மாக்கை சுவைத்துச் சாப்பிட்டார். ஒரு மணி நேரப் பயணத்தில் மை ஸ்கில்ஸை அடைந்தோம். காலையில் மலைகள் சூழ்ந்த அப்பகுதி ரம்மியமாக இருக்கும். அவ்விடத்தைச் சுற்றி வந்து மை ஸ்கில்ஸ் அறவாரிய செயல்பாடுகளை ஓரளவு விளக்கினேன். மாணவர்கள் காலை 8 மணிக்கே தயாராகிக் காத்திருந்ததால் கொஞ்சம் தூக்கக் கலக்கத்தில் இருந்தனர். வழக்கறிஞர் பசுபதி, மருத்துவர் மா. சண்முகசிவா, தேவா என சிலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டு உப்ஸி பல்கலைக்கழகம் சென்றோம். முனைவர் கார்த்திகேசு என் வேண்டுகோளை ஏற்று மாணவர்களைத் தயார்ப்படுத்தியிருந்தார். அவரும் அந்த ஞாயிறு பொழுதில் எங்களுடன் இணைந்தது உற்சாகமாக இருந்தது. சௌந்தர் பயிற்சிகளை என்னிடம் தனிப்பட்ட முறையில் சிலாகித்துப் பேசினார். உண்மையில் ஞாயிறு பொழுதுகளை அப்படி விட்டுக்கொடுப்பவர்கள் மிகக் குறைவு. அவரது அருகாமை மகிழ்ச்சியைக் கொடுத்தது. மாணவர்கள் பயிற்சியில் தீவிரமாகப் பங்கெடுத்தனர். கேள்விகள் கேட்டனர். முனைவர் கார்த்திகேசு எங்களை உபசரித்து விடைகொடுத்தார்.
ஞாயிறு முழுவதும் சௌந்தருக்கு கோலாலம்பூர் நகரைச் சுற்றிக்காட்ட வேண்டும் என்றே திட்டங்கள் இருந்தன. ஆனால் அடுத்தடுத்து அறிமுகக் கூட்டங்கள் இருந்ததால் சுற்றுலா சாத்தியப்படாமல் ஆனது. அக்குறையைப் போக்க பத்துமலை முருகனை மட்டும் அருகில் சென்று காட்டிவிட்டு வந்தேன். தைப்பூச ஏற்பாடுகளால் கோயிலில் கூட்டம் அலைமோதியது. பின்னர் நேராக வீட்டுக்கு அழைத்து வந்து மகளை அறிமுகம் செய்து வைத்தேன். அஞ்சனை அந்நியர்கள் யாரிடமும் அவ்வளவு எளிதாக நெருங்கிச் செல்பவள் அல்ல. சௌந்தரிடம் மிக இயல்பாகச் சென்றாள். முத்தமெல்லாம் கொடுத்து ஆச்சரியப்படுத்தினாள்.
சாவகாசமாக வீட்டில் ஒரு டீ குடித்துவிட்டு பூச்சோங் புறப்பட்டோம்.
பூச்சோங்கில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி பூரண யோக முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஏறக்குறைய நாற்பது பேர் பங்கெடுத்தனர். தொடர்ந்து சௌந்தருடன் பயணமானதால் அவர் விவரிப்பவை எனக்குத் தெளிவாகப் புரிந்தது. சௌந்தருடன் இருந்த அந்த நிமிடங்களை நினைத்துக்கொண்டேன். நான் மிகவும் மதிக்கக்கூடிய சண்முகசிவா, பசுபதி, பிரம்மானந்த சரஸ்வதி ஆகியோரை பொங்கலுக்கு முந்தைய நாள் பார்க்கக் கிடைத்தது தற்செயலானதல்ல எனத் தோன்றியது. செயலூக்கமும் நேர்மறை சிந்தனையும் கொண்ட அவர்களைச் சந்திக்க சௌந்தரின் வருகையே காரணமாக அமைந்தது. எந்த ஒரு முயற்சியும் உலகியல் பலன்களை எதிர்ப்பார்க்காமல் முன்னெடுக்கப்படும்போது அது இயல்பாக தன் இலக்குகளை அடைவதை நான் அனுபவிப்பது இது முதல்முறையல்ல. அதிகம் மெனக்கெடாமலேயே எங்களின் அத்தனை சந்திப்புகளும் நிறைவாக நடந்து முடிந்தது. சௌந்தரின் வருகை, எனக்கு புத்துணர்ச்சியோடு தொடங்கிய இவ்வருடம் அவ்வாறே தொடர்வதற்கான ஆசிர்வாதத்தைக் கொடுத்தது.
பொதுவாகவே நான் குரு பக்தி மிக்கவன். எனக்குக் கற்பித்த எந்த ஆசிரியரின் முன்னும் என்னால் பணிந்து மட்டுமே நிற்க முடியும். அதை பிற்போக்குத்தனம் என முன்பு நண்பர்கள் கேலி செய்துள்ளனர். நவீன இலக்கியம் பயில வந்த நாட்களில் குருவைப் பணிவது கிண்டலுக்கு உரியதாகவும் வர்ணிக்கப்பட்டதுண்டு. எப்படிச் சொன்னாலும் என்னால் ஆசிரியரிடம் பணிவதை மாற்றிக்கொள்ள முடிந்ததில்லை. என் இளம் தலைமுறைக்கு நான் கடத்த விரும்புவதும் அதைத்தான்.
நமது குருமார்கள் நம்முடன் விளையாடக்கூடியவர்கள். தொடர் வேடிக்கைகளால் தங்களின் ஆளுமையை துகள்களாக்கிக் காட்டுபவர்கள். நல்ல மாணவன் அந்தத் துகள்களின் வழியாகவே அவர்களின் பிரம்மாண்டத்தை அறிபவனாக இருப்பான். எல்லாம் முடிந்தபிறகு சௌந்தருக்கு விடை கொடுக்கும் நேரம் வந்தபோது நான் சுவாமியின் கால்களில் பணிந்து ஆசி பெற்றேன். அவர் தூக்கி அணைத்துக்கொண்டார். நான் வணங்கி நிற்கும் அத்தனை ஆசிரியர்களும் இணைந்து நிகழ்த்திய தழுவல் அது.
சௌந்தரிடம் விடைபெற்றேன். அவருடைய இருப்பே ஓர் இடத்தில் நேர்மறை அதிர்வுகளை உருவாக்கக் கூடியது எனத் தோன்றியது. அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் நேர்மறை அலைகள் மனதையும் உடலையும் சூழ்ந்துகொண்டே இருந்தன. அவரை நிச்சயமாக மீண்டும் மலேசியாவுக்கு அழைக்கும் திட்டம் மனதில் உருவாகியிருந்தது. செயலூக்கத்தையும் புத்துணர்வையும் ஏற்படுத்தும் அந்த அலை இன்னும் பலரையும் அரவணைக்க வேண்டும். அதற்கு நெடுநாட்கள் இல்லை.