
அறையை நோக்கி நடக்கவே அரைநாள் பிடிக்கும்போலத் தோன்றியது. விடுதியின் வரவேற்பறை திடல்போல விரிந்து கிடந்தது. பல இடங்களில் ‘லியாங்சூ கருத்தரங்கின்’ (Liangzhu Forum) அடையாளங்களைப் பார்க்க முடிந்தது. அக்கருத்தரங்கை ஜெஜியாங் பல்கலைக்கழகம் (Zhejiang University) முன்னெடுப்பதால் அப்பல்கலைக்கழக மாணவிகள் ஆங்காங்கு நின்றுக்கொண்டு “தோ இப்படிக்கா போ!” என வழிகாட்டினர். சீன யுவதிகளைப் பார்க்க பொம்மைபோல இருந்தனர். எவ்வளவு நேரமாக அப்படி நிற்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் முகத்தில் சோர்வைக்காட்டாமல் சிரித்து வைத்தனர்.
எனக்கும் அஸ்ரினுக்கும் வெவ்வேறு திசையில் அறைகள் வழங்கப்பட்டன. மறுநாள் சந்திக்கலாம் என இரவு வணக்கம் கூறி அவரவர் திக்கை நோக்கி நடந்தோம்.
எனது அறை இரண்டாவது மாடியில் இருந்தது. அறையைத் திறந்தவுடன் விடுமுறைக்கு உல்லாசப் பயணம் வந்துள்ள மனநிலை தொற்றிக்கொண்டது. பொதுவாக தங்கும் விடுதிக்கும் ரிசாட்டுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். ரிசாட் பொதுவாகவே நகரிலிருந்து சற்று தள்ளி, பொழுதுபோக்கு அம்சங்களோடு சுற்றுலாவுக்கான மனநிலையை வழங்கிவிடுகிறது. அதன் நோக்கம் தங்கிச் செல்வதற்காக மட்டுமல்ல.
என் அறையில் சிறிய வரவேற்பறை ஒன்று இருந்தது. நான்கு பேர் அமர்ந்து அரட்டை அடிக்கும் வகையில் கதிரைகள் போடப்பட்டிருந்தன. அடுத்து கழிப்பறையும் குளியல் அறையும் விசாலத்துடன் இருந்தது. (விசாலம் என்பதை ‘விரிந்த’ எனும் பொருளில் சொல்கிறேன். பெண்ணின் பெயரல்ல) உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சியடைந்தேன். கழிப்பறையின் மூடி சுயமாகத் திறந்தது. கொஞ்ச நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எட்டி நகர்ந்தபோது சுயமாக மூடிக்கொண்டது. கொஞ்ச நேரம் நெருங்கியும் விலகியும் அதனுடன் விளையாடிப்பார்த்தேன். அதுவும் திறந்து மூடி எதிர்வினையாற்றியது. பின்னர் அங்கிருந்த இயக்கியை எடுத்து வாசித்தேன். நமக்கு ஏற்றதுபோல அமரும் இடத்தை சூடாகவோ குளிர்ச்சியாகவோ வைத்துக்கொள்ளலாம். மூடியைத் திறக்கவும் மூடவும் விசையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆச்சரியமாக இருந்தது. பயன்படுத்தியவுடன் கழுவி விடவும் வருங்காலத்தில் ஏதும் கணினிக்கரங்களை சீனர்கள் உருவாக்கக் கூடும்.

படுக்கை வசதியாக இருந்தது. இரண்டு கட்டில்களைத் தனித்தனியாகப் போட்டிருந்தார்கள். இன்னொரு கட்டில் சும்மாதான் கிடந்தது. வெளியே கால்வலியுடன் நின்றுக்கொண்டிருக்கும் பொம்மை மாணவிகளை இரக்கத்துடன் நினைத்துக்கொண்டேன். ஆனால் என் இரக்கம் தவறாகக் கருதப்படும் என்பதால் குளிர்போக வெந்நீரில் குளித்துவிட்டு வந்தபோது பசித்தது.
கருத்தரங்கு குழுவினர் அறையிலேயே பலவிதமான பிஸ்கட்டுகளையும் பழங்களையும் வைத்திருந்தனர். காப்பி தயாரிக்கும் கருவி ஒன்றும் இருந்தது. அப்படி ஒரு கருவியை நான் வீட்டிலேயே வைத்திருப்பதால் அதை இயக்கி சூடாக காப்பி போட்டு பிஸ்கட்டை அதில் தொட்டு சாப்பிட்டபோது சீன தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்த அமிர்தம் போல இருந்தது.
அப்படியே கையில் எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தேன். குளிர் அத்தனை கரங்களையும் நீட்டி அணைத்துக்கொண்டது. பத்துபேர் தாராளமாக அமரும் வகையில் இருந்தது பால்கனி. குளிரில் உடல் வெடவெடத்தது. ஆனால் வெளியில் நிற்க ஆசையாக இருந்தது. கையில் இருந்த சூடான காப்பி ஒருவித இன்பத்தை ஊட்டியது. தூரத்தில் மர இலைகளினூடே கருநிறத் திப்பிகள் தெரிந்தன. குளம் என ஊகிக்க முடிந்தது. குளத்தின் மனத்தை நான் அறிவேன். சற்றுத்தள்ளி எரிந்துகொண்டிருந்த சாலை விளக்கின் இலைகள் தங்கமாக ஒளிர்ந்தன.
ஹாங்சொ (Hangzhou) நகரமே அவ்வேளையில் அமைதியில் மூழ்கியிருந்தது. இந்நகரம்தான் ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகர். வரலாறு, பாரம்பரியத்தைத் தக்க வைத்துள்ள பெரு நகரம். சீனாவின் தேநீருக்கான தலைநகரம் என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு. Long Jing Green Tea க்குப் புகழ்பெற்ற பகுதி. சீனப்பட்டுக்கும் இவ்வூர் பிரபலமானதுதான். மேலும் சீனாவின் ஏழு பண்டைய தலைநகரங்களில் ஹாங்சொவும் ஒன்று. சுற்றுலா, இந்நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக உள்ளது. மார்கோ போலோ (Marco Polo) சீனாவில் உள்ள சூஜோ (Suzhou) குறித்து ‘பூமியின் நகரம்’ என்றும் ஹாங்சோ குறித்து ‘வானத்தின் நகரம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே நான் வானத்தின் நகரில் இருந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எவ்வளவு நேரம் அப்படிப் பார்த்துக்கொண்டிருந்தேன் எனத் தெரியாது அதிகம் குளிரெடுக்கவே மீண்டும் அறைக்குள் சென்றேன். பிஸ்கட் சுவையாக இருந்ததால் சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை. தூரத்தில் இரண்டு ஆரஞ்சுப் பழங்களை வைத்திருந்தார்கள்.
சீனர்களுக்கு ஆரஞ்சு அதிஷ்டத்தின் அடையாளம். அது பொன் நிறத்தை ஒத்து இருப்பதால் அதை அன்பளிப்பாகக் கொடுக்கும்போது செல்வம் பெருக வேண்டும் என்பதைக் குறியீடாகச் சொல்கிறார்கள். வீட்டின் முன்பும் சிறிய ஆரஞ்சு மரங்களை சீனர்கள் நட்டுவைப்பதுண்டு. பொன்னை கைகளில் வைத்து உருட்டிக்கொண்டிருந்தேன். எந்த விளக்கையும் அணைக்காமல் அப்படியே தூங்கிப்போயிருந்தேன்.
- தொடரும்