
இருளைச் சாம்பல் நிறமாகக் காட்டும் பனிப்படலத்தைக் கிழித்தபடி எங்கள் கார் சென்றுகொண்டிருந்தது. நான் சீனர்களுடன் கலந்திருந்த என் பாலியப் பருவம் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் பதினேழு வயது வரை சீனக்கம்பத்தில்தான் வாழ்ந்து வந்தேன். பெரும்பாலும் சீனர்களின் பண்டிகைகளை அவர்களுடன் இணைந்தே கொண்டாடியுள்ளேன். சீனர்களின் உணவுகளே எனக்குப் பிடித்தமானவையாகவும் இருந்துள்ளன. எப்போதுமே சீனர்கள் சூழவே என் இளமை பருவம் கழிந்துள்ளது.
ஒன்பது வயது வரை நான் வசித்த ‘கம்போங் லாமா’ வீட்டின் முன்னால் ‘சாமியாடி’ என அழைக்கப்பட்ட சீன மாந்திரீகன் ஒருவன் இருந்தான். அவன் பரம்பரையே சாமி ஆடக்கூடியவர்கள்தான். வீட்டின் வரவேற்பறையிலேயே ஏராளமான சீனத் தேவதைகளின் சிலைகள் இருக்கும். பெரும்பாலும் ஆண் தெய்வங்கள். நீண்ட வெள்ளை மீசையும் புருவமுமாக மிரட்டுவார்கள். நோய்மை, பேய்களின் தொல்லை என ஒவ்வொரு இரவும் அவன் வீட்டில் கூட்டம் சேரும். எனவே சூரியன் மறையும்போது அம்மா என்னை வெளியே சென்று விளையாட அனுமதித்ததில்லை
சாமியாடி அந்தக் கம்பத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தான். அங்குப் பத்து குடும்பங்கள் வரை இருந்தன. வீடுகள் ‘U’ வடிவில் அமைந்திருக்கும். எனவே மையத்தில் விசாலமான வெளி இருந்தது. ஆகஸ்ட்டு அல்லது செப்டம்பர் மாதங்களில் குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த இடத்தில் மேடை அமைக்கப்படும். தொடர்ந்து ஒரு வாரம் சீனக்கூத்து நடக்கும். கூத்தில் சீனப்பாடல், சீனர்களின் பாரம்பரிய நடனம் ஆகியவற்றோடு சீன ஓபராவும் இடம்பெறும்.
அந்த வயதில் எனக்கு அது பேய் மாதத்தின் கொண்டாட்டம் என்பதெல்லாம் தெரியாது. சீன நாள்காட்டியின் அடிப்படையில் பேய்த் திருவிழா ஏழாவது மாதத்தில் 15வது இரவில் நடைபெறும். இது Zhongyuan Festival அல்லது Hungry Ghost Festival என்று அழைக்கப்படுகிறது. சீனர்களின் நம்பிக்கையின்படி அப்போதுதான் இறந்தவர்கள் வாழும் உலகின் வாசல் திறக்கிறது. எனவே, பேய்கள் மனிதர்கள் வாழும் உலகில் உலாவ அனுமதிக்கப்படுகின்றன. அவ்வனுமதியைப் பயன்படுத்திக்கொண்டு இறந்த மூதாதையர்கள் உட்பட பேய்கள், ஆவிகள் பூமிக்கு உணவருந்த வரும் என்பது நம்பிக்கை. அமைதியற்ற ஆவிகளை ஆண்டுதோறும் சாந்தப்படுத்தும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அப்போது செய்யப்படும் சடங்குகளால் அவற்றின் நிறைவேறாத ஆசைகள், பசி, தாகம் என அனைத்தும் தணிகிறது. பின்னர் பேய் மாதத்தின் கடைசி நாள் சொர்க்க நரக வாயில்கள் மூடப்படும்போது பேய்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த மாதத்தை பேய்களுக்கான சுற்றுலா மாதம் எனச் சொல்லலாம். பன்றிக்குட்டிகள் முழுமையாக வாட்டப்பட்டு படையலுக்கு வைக்கப்பட்டிருக்கும். பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், தேநீர், சாக்கே வைன் என பல வகையான உணவுகள் அடுக்கியிருக்கும். பொன்நிறச் சாயம் பூசப்பட்ட மஞ்சள் நிற காகிதங்கள் எரிக்கப்பட்டு எப்போதுமே காற்றில் சாம்பல் மணம் கலந்திருக்கும். பிரமாண்ட ஊதுவத்திகள் எரிந்துகொண்டே இருக்கும்.
அந்த விழாவின்போது நான் படு உற்சாகமாக இருப்பேன். வகை வகையாக வாங்கித் தின்பேன். முகத்தில் வண்ணம் பூசிக்கொண்டு நடக்கும் சீன நாடகத்தை ரசித்துப் பார்ப்பேன். பிற சீன நண்பர்களோடு சேர்ந்துகொண்டு அந்த நடிகர்களில் அலங்கார அறைகளுக்குச் சென்று எட்டிப் பார்ப்பேன்.
அதுபோலவே சீனப்பெருநாள் காலங்களில் சிங்க நடனம் என் வீட்டின் முன்னால் ஆடப்படுவதுண்டு. என் வயதையொத்த பள்ளி நண்பர்கள் பலரும் அப்போது தாமான்களில் குடியேறிவிட்டதால் என் அனுபவத்தை சுவாரசியமாகச் சொல்ல சீனக் கம்பத்து வாழ்க்கை நல் வாய்ப்பாக அமைந்தது.
நண்பர்கள் பெரும்பாலும் ”பயமா இல்லையாடா?” என்பார்கள். நான் எந்தப் பேயும் என்னை நெருங்கமுடியாது எனும் பாவனையில் முகத்தை வைத்துக்கொள்வேன்.
இப்படி எந்தச் சீனப் பேய்க்கும் அஞ்சாத என்னை ஒருமுறை சீனச்சாமி பிடித்துக்கொண்டதுதான் நகைமுரண்.
பத்து வயதில் நான் கம்போங் லாமாவில் இருந்து செட்டிக்கம்பத்திற்கு மாறியிருந்தேன். கஷ்டப்பட்டு பணம் சேர்த்து அப்பா வாங்கிய சொந்த வீடு அது. காடுகள் சூழ்ந்த கம்பத்து வீடு. சீனக் கம்பம்தான். ஆனால் கம்போங் லாமாபோல இல்லாமல் அங்கு வீடுகள் எல்லாம் தனித்தனியாக வெகு தூரத்தில் இருந்தன. அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து ‘ஓ’வென வலியில் கத்தினால் சங்கீத ஒலிபோல சன்னமாக கேட்கும் தூரத்தில் அண்டை வீட்டுக்காரர்கள் தூரமாக வசித்தார்கள். எனவே கம்போங் லாமாபோல எனக்கு நண்பர்கள் அமையவில்லை. அதனால் நானே தனியாக விளையாடுவதென ஒருநாள் முடிவெடுத்து அமுல்படுத்தி வந்தேன்.
அப்படித்தான் அதற்கு முன் அந்த வீட்டில் வசித்த சீனர்கள் விட்டுச்சென்ற சிவப்பு நிற தகரம் எனக்கு விளையாட்டுப் பொருளானது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் அதை உதைத்து விளையாடத் தொடங்கினேன். வீட்டு வாசலில் உதைக்கத் தொடங்கி தூரத்தில் இருந்து ஜம்புக்காய் மரம் வரை உதைத்தபடி சென்று அங்கேயே மூலையில் கிடத்திவிட்டு வந்தேன்.
மறுநாளில் இருந்து வினை ஆரம்பித்தது. முதலில் வினோதமான துர்வாடை வீசத் தொடங்கியது. வீட்டில் சொன்னபோது சுற்றியுள்ள புதர்களை அழிக்க தீ மூட்டியதால் எழுந்துள்ள வீச்சம் எனக்கூறினர். இரண்டு நாள்களில் காய்ச்சல் அடித்தது. என் கைகளில் தோல்கள் உரியத் தொடங்கின. வீட்டில் காட்டியபோது ஏதோ அலர்ஜி என்றனர். அடுத்த நாளில் இருந்து கைகளில் எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்துபோகத் தொடங்கின. அதை வீட்டில் சொன்னபோது என்னை வினோதமாகப் பார்த்தனர்.
காய்ச்சல் ஒவ்வொருநாளும் அதிகரித்தது. காடெரிப்பை நிறுத்தியும் துர்வாடை அதிகரித்தபடி இருந்தது. உடம்பில் பூச்சிகள் மேய்வது ஓயவில்லை. வீட்டில் எனக்கு ஏதோ விசித்திரமாக நடப்பதைப் புரிந்துகொண்டனர். அந்தக் கம்பத்தில் இருந்த இன்னொரு சீனச் சாமியாடியிடம் அழைத்துச் சென்றபோது நான் டத்தோ சாமி குடிகொண்டுள்ள கோயிலை உதைத்து விளையாடியதால் ஏற்பட்ட பாதிப்பு என்றார். மஞ்சள் நிற காகிதம் ஒன்றை மந்திரித்துக் கொடுத்தார் சாமியாடி. அதை தீயில் கொழுத்தி, அதன் சாம்பலை நீரில் கலந்து குடித்தால் குணமாகும் என்றார்.
ஒரே நாளில் குணமானது.
டத்தோ கொங் அல்லது நா து கொங் (Ná Dū Gōng) என்பது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியாவில் (குறிப்பாக சுமத்ராவில்) சீனர்களால் வழிபடப்படும் ஒரு காவல் தெய்வமாகும். டத்தோ என்பது மலாய் மொழியில் தாத்தா என்ற சொல்லிலிருந்து வந்த மரியாதைச் சொல். இது ஒரு மரியாதைக்குரிய பட்டமாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொங் சீனச் சொல். அதுவும் ஒரு மரியாதைப் பெயர். தாவோயிஸ்ட் பாரம்பரியத்தின்படி, நா துக் கொங் என்பது மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய உன்னதமான மன்னர் எனப் பொருள்படும்.

மலாய் உள்ளூர் புராணங்களின்படி, அனைத்து டத்தோகளும் ஒரு காலத்தில் ஒரு முக்கியமான தலைவர்தான். அவர்கள் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய மருத்துவராகவோ ஒரு சிலாட் வீரராகவோ ஒரு ஆன்மிக குருவாகவோ ஒரு மந்திரவாதியாகவோ இருந்திருக்கலாம். அவர்களின் மரணத்திற்குப் பிறகு, உள்ளூர்வாசிகளும் அவர்களின் சீடர்களும் அவர்களுக்கு வழிபாடு செய்வார்கள். மரணித்த உன்னத மனிதர்கள் அசாதாரணமான இயற்கை வடிவமாக மாறுகிறார்கள்.
மூதாதையர் வழிபாடு பற்றிய கன்பூசிய நம்பிக்கையை தங்களுடன் எடுத்து வந்த சீனக் குடியேறிகளின் நம்பிக்கையுடன், உள்ளூர் நடைமுறைகளும் ஒன்றிணைந்து புதிய கலாசாரம் உருவாகியது. நா து கொங் (பூமி ஆவிகள்) அப்படித்தான் உள்ளூர் கடவுளாகக் கருதப்படுகிறது.
நான் குணமடைந்தாலும் கைவிடப்பட்ட டத்தோ சாமியை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. கைவிடப்பட்ட சாமி கோபமாக இருக்கும். அதை முறையாக வணங்குவதுதான் கோபத்தை அடக்க ஒரே வழி என்றார் சாமியாடி. எங்கள் வீட்டு வாசலில் சீன சாமியின் புதிய சிவப்பு நிற கோயில் வந்தது. நாங்கள் குடும்பத்துடன் டத்தோ சாமியை வழிபடத் தொடங்கினோம்.
பொன்னிறம் பூசிய மஞ்சள் தாளை அதற்குறிய முறையில் மடித்து எரிப்பது, பிடித்த பலகாரங்களைப் படைப்பது, தேநீர் கலக்கி வைப்பது என மாதம் ஒருமுறை சிறப்பு வழிபாடு நடக்கும்.
உண்மையில் என் பாலியப் பருவத்தைச் சீன சாமிதான் சுவாரசியமாக்கியது. பேய்களும் ஆச்சரியங்களும் அச்சங்களும் சூழும்போது உருவாகும் மிகு கற்பனை உலகம் என்பது புனைவுக்கான விளைநிலம். அப்படி ஒரு சீன சாமியின் ஆசியால் என் இளமை பருவம் அதீத கற்பனைகளால் நிறைந்திருந்தது.
இன்று பகுத்தறிவால் அந்த அனுபவத்தை கவனமாகப் பிரித்தறியலாம்தான். அனைத்துமே அப்போது ஏற்பட்ட கடும் காய்ச்சலால் உண்டான மனக்கற்பனைகள் என காரண காரியங்களுடன் அலசலாம். ஆனால் வானில் நோக்கிப் பறக்கும் இறக்கைகளைக் கத்தரிப்பதன்றி அதனால் வேறெதுவும் நடக்கப் போவதில்லை.
வண்டி தங்கும் விடுதி முன் வந்து நின்ற போது அவசரம் இல்லாமல் வெளியே வந்தோம்.
பசித்தது. ஆனால், அந்த வேளையில் யாரிடம் உணவு கேட்பது. புகைப்படக்காரர்கள் சூழ்ந்துகொண்டு படம் எடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் அறை எண் வழங்கப்பட்டது. ஏற்பாட்டுக்குழுவில் உள்ளவர் ஒரு அட்டையை வழங்கி நாளை முதல் இது கழுத்திலேயே இருக்க வேண்டும் எனக் கூறினார்.
களைப்பாக இருந்தது. நாளை காலை 7.45க்கு பயணத்திற்குத் தயாராக இருக்க வேண்டுமென கட்டளையிடப்பட்டது. நான் தூக்கமும் பசியுமாக அறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
- தொடரும்