சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 1

“ஏழு மணி நேரம் விமானத்தில் பயணிக்கணுமாக்கும்,” எனச் சீனப்பயணம் குறித்து கேட்பவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். விமானம் ஏறியவுடன்தான் ஐந்து மணி நேரப்பயணம் என்பதே உரைத்தது. இடையில் என் மூளைக்குள் ஏழு மணி நேரம் என யார் புகுத்தினார்கள் என்பது குறித்து அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. நானே எனக்கு அப்படி ஒரு சூனியத்தை வைத்துக்கொள்வது வழக்கம்.

பொதுவாகவே எனக்கு எண்களும் பெயர்களும் நினைவில் நிற்பதில்லை. ஐந்து மணி நேரப்பயணம் என்பது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. விமான இருக்கையில் இடப் பக்கம் முனைவர் ச்சாய் சியாவும் வலது பக்கம் எழுத்தாளர் அஸ்ரினும் அமர்ந்திருந்தனர்.   முன் இருக்கையில் ‘Literature Only’ என இருந்ததை இருவரிடமும் சுட்டிக்காட்டினேன். ச்சாய் சியா, “இதழ்களுக்கு மட்டும்” என்பதைதான் அப்படி மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் எனக் கூறி சிரித்தார்.

“இது இலக்கியவாதிகளுக்கான தனி விமானமோ என நினைத்துவிட்டேன்,” என்று நான் கூறவும் மீண்டும் சிரிப்பு.  

அஸ்ரினிடம் விமான நிலையத்திலேயே கைக்குலுக்கி பேசும் வாய்ப்புக் கிடைத்துவிட்டதால் இயல்பாக உரையாடியபடி பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. அஸ்ரின் என்னை வாசித்திருந்தது அவருடன் இணக்கமாகப் பேச உதவியது. ‘ஒலிப்பேழை’ சிறுகதை குறித்து சிலாகித்தபடி இருந்தார். அது ஒரு திரைப்படமாகக் கூடிய கதை என்றார். நானும் அவரது நேர்காணல் ஒன்றை வாசித்து வைத்திருந்தபடியால் அவரது சுவாரசியமான பதில்களை ஒட்டி பேசிக்கொண்டு வந்தேன்.

கொஞ்ச நேரத்தில் அவரிடம் பேசுவது அவ்வளவு இயல்பாக இருந்தது. இன்னும் சொல்வதானால் வாசிப்பு இல்லாத தமிழ் எழுத்தாளர்களிடம் உரையாடும்போது உருவாகும் அந்நியத்தன்மை அஸ்ரினிடம் பேசும்போது இல்லை. அவர் குறிப்பிடும் எழுத்தாளர்களை எனக்குத் தெரிந்திருந்தது. நான் குறிப்பிடும் எழுத்தாளர்களை அவரும் வாசித்திருந்தார். இருவருக்குமே இது முதல் சீனப்பயணம் என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்தோம். மூன்று மணி நேரத்திற்கு முன்னமே விமான நிலையத்தை அடைந்திருந்தோம்.

பேராசிரியர் ஃபான் மற்றும் முனைவர் ச்சாய் சியாவ் ஆகியோர் கொஞ்சம் தாமதமாக வந்து எங்களுடன் இணைந்துகொண்டனர். இந்தப் பயணத்திற்குத் தயாராகும் முன்னர் ச்சாய் சியாவிடமே பலவிதமான கேள்விகள் கேட்டுத் துருவியெடுத்தேன். அங்கு அதிகம் குளிருமா? அரங்கில் ஜீன்ஸ் அணியலாமா? சீனாவுக்குச் செல்ல விசா இல்லாவிட்டாலும் ஏதும் பாரங்களை முன்னமே பூர்த்தி செய்ய வேண்டியதில்லையா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள். எல்லாவற்றிற்கும் ச்சாய் சியாவ் இனிமையாகவே பதில் சொன்னார். ஆம்! இனிமைதான். இனிமைகளால் வார்க்கப்பட்ட பெண் அவர்.

ச்சாய் சியாவ் எப்போதும் மலர்ந்த முகத்துடனே இருந்தார். உற்சாகமும் குதூகலமும் எப்போதும் அவரிடம் குடியிருந்தது. எல்லா பதிலுக்குப் பின்னரும் அவரிடம் புன்னகை இருந்தது.

விமானத்தில் நான் அதிகம் அஸ்ரினிடம்தான் பேசிக்கொண்டு வந்தேன். இந்தச் சீனப்பயணத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் இருவருமே அறிந்திருந்தோம். சீனாவின் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சும் ஜெஜியாங் மாநிலமும் இணைந்து நடத்தும் லியாங்சு கலாசார கருத்தரங்குக்கு எங்களை அழைத்திருந்தது மகத்தான வாய்ப்பு என்பது புரிந்தது. நாங்கள் சீன அரசின் அதிகாரத்துவ அழைப்பில் செல்லும் விருந்தினர்கள்.  மலேசியாவைப் பிரதிநிதிக்கும் எழுத்தாளர்கள். எனவே அங்குப் பகிரக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது; வரலாற்றில் இணையக்கூடியது என்பதை நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள மலேசியாவில் இருந்து 20 எழுத்தாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதில் மூவர் தேர்வு பெற்றதாகவும் டச்சாய் சியாவ் தெரிவித்தார். என் பெயரையும் அஸ்ரின் பெயரையும் முனைவர் ஃபுலோரன்ஸ் பரிந்துரைத்திருந்தார். பேராசிரியர் ஃபான் எங்கள் குழுவின் தலைவர்.

மலேசியாவில் பல்வேறு மொழி இலக்கியங்களினூடாக உருவாக வேண்டிய உரையாடல் குறித்து நானும் அஸ்ரினும் பேசிக்கொண்டே வந்தோம். “தமிழகத்தில் இருந்து வரும் எழுத்தாளர்களிடம் உலக இலக்கியங்கள் குறித்து பேசும்போது அவர்கள் மலேசியாவில் பிற மொழி இலக்கியங்களின் போக்குக் குறித்து கேட்பதுண்டு. ஆழமான பதில்கள் இன்றி கொஞ்சம் அவமானம் அடைந்துள்ளேன்,” என்றேன்.

அஸ்ரின்

மலாய் இலக்கியவாதிகள் மத்தியிலும் அண்மையில்தான் மலேசியாவில் எழுதப்படும் பிற மொழி இலக்கியங்கள் குறித்த ஆர்வம் எழுந்துள்ளதை அஸ்ரின் கூறியபோது அதற்கான உரையாடலைத் தீவிரப்படுத்த வேண்டிய தேவையை அறிந்துகொண்டேன். மொழிபெயர்ப்புதான் அதற்கான சரியான வழி. சில மாதங்களுக்கு முன்னமே அதற்கான முயற்சியை வல்லினம் மூலம் தொடங்கியுள்ளதை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். மலேசியாவில் மலாய் இலக்கியங்கள் குறித்து ஒருவர் தமிழில் தொடர்ந்து முன்னெடுக்கிறார் என்றால் அவர் எழுத்தாளர் அ. பாண்டியன்தான் எனக்கூறி “அவரும் உன் ஊர் காரர்தான்,” என்றேன்.

மகிழ்ச்சியானார்.

பின்னர், அ. பாண்டியன் மொழியாக்கத்தில் வரப்போகும் எஸ்.எம். சாகீர் சிறுகதைகளின் தொகுப்புக் குறித்துப் பகிர்ந்துகொண்டேன்.

அஸ்ரின் ஒரு வடிவமைப்பாளர். பெரும்பாலும் இரவுகளில் விழித்திருப்பவர். சிறுகதைகள் எழுதியுள்ளார். மூன்று தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தேர்ந்த வாசகர். ஜெயமோகனை அறிந்து வைத்திருந்தார். வாழும் எழுத்தாளர்களில் மாபெரும் ஆளுமை என்பதை அறிந்திருந்தார்.

பேச்சினூடே, “ஒரு மலாய் எழுத்தாளர் மலேசியாவில் எழுதியே வாழ வாய்ப்புள்ளதா?” என்றேன்.

“மலாய் இலக்கியத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதலாவது வெகுசன இலக்கியம். மற்றது அசலான இலக்கியம். இந்த அசல் இலக்கியம் அதிக பட்சம் 500 பிரதிகள் விற்பனையாகும். வணிக எழுத்தாளர்கள் எழுதி மட்டுமே வாழ வாய்ப்புண்டு,” என்றார்.

மலாயில் சிறந்த இலக்கியங்கள் 500 பிரதிகள் மட்டுமே விற்பனையாவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலிலும் அதுதான் நிலை எனும்போது கொஞ்சம் தெம்பு ஏற்பட்டது.

விமானத்தில் அவ்வப்போது தூங்குவதும் எழுவதும் பேசுவதுமாகக் கழிந்தது. China Eastern Airlines இருக்கை ஏர் ஆசியாவைவிட பரவாயில்லை ரகம். ஒரு மணி நேரம் தாமதம் என்பதால் இரவு 9.30க்கு விமானம் தரை இறங்கியது. நகரம் விளக்கொளிகளால் ஜொலித்தது. “அதிகம் சிவப்பு நிற விளக்குகள் எரிகின்றன,” என்றார் அஸ்ரின். நன்றாகப் பா்த்தபோது ‘ஆம்’ என்றேன். காட்சி ஊடகத்தில் கலந்துள்ள கண்கள் அஸ்ரினுடையவை.

கைப்பேசியத் திறந்து நேரத்தைப் பார்த்தபோது ஆச்சரியம். ஹாங்சாவ் நகரிலும் அதே நேரம்தான். மலேசியாவும் ஹாங்சாவும் ஒரே நேர மண்டலத்தில் உள்ளது அப்போதுதான் தெரிந்தது.

விமான பரிசோதனைகள் எல்லாம் வேகமாகவே முடிந்தன. வெளியே எங்களுக்காகச் சிலர் காத்திருந்தனர். நாங்கள் நால்வரும் Narada Resort and Spa செல்ல வேண்டும் என்றாலும் எங்களுக்காக இரண்டு மிகப்பெரிய வண்டிகள் தயார் செய்யப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட நம்மூரில் பணக்காரர்கள் பயன்படுத்தும் Alphard போன்ற வண்டிகள்.

நானும் அஸ்ரினும் ஒரு வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் வாகன உதவியாளர் சீட்டை சாய்த்து எங்களை ஓய்வாகச் சாய்ந்துகொள்ளச் சொன்னார். அந்தப் பயணம் ஒரு மணி நேரம் தொடரக்கூடியது. சாய்ந்து படுத்தேன். வெளியே பனியின் அடர்த்தி பஞ்சு போர்வைபோல எங்கும் படர்ந்துகிடந்தது.

கண்கள் செருகின.

நான் சீனாவில் இருக்கிறேன். உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சீனாவில். கண்களை மேலும் இறுக்கிக்கொண்டேன்.

  • தொடரும்
(Visited 189 times, 1 visits today)