இந்த மண்ணில் பிறப்பெடுத்து வாழும் எந்த உயிரும் இந்த உலகில் வாழத் தகுதியுடையதே. ஒருவனின் செயல்களைக் கொண்டு, ஒருவன் வாழத் தகுதியற்றவன் என்று நம்மால் தீர்ப்பளித்துவிட இயலாது. அவ்வாறு இந்த மண்ணில் ஜனனம் கொண்டு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டவனாகவும், ஒழுக்கமற்றவன் என அழைக்கப்படுபவனாகவும் உருமாறும் ஒருவனின் அகத்தை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பை புனைவுகள் நமக்கு அளிக்கின்றன. அவ்வகையில், ‘லீகாட்’ நாவலும் அப்படிப்பட்ட ஓர் ஆணின் அகத்தை, அவன் அகத்தில் தேங்கிக் கொண்டிருக்கும் இருளை, உளவியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
நாவலின் மையப்பாத்திரமான தீபனின் பால்ய காலம் தொடங்கி அவனின் முதுமை காலம் வரை நாவலில் முழுமையாகக் காட்டப்பட்டுள்ளது. நாவலின் தொடக்கத்தையும் அதன் இறுதியிலும் தாத்தாவாகிவிட்ட தீபனின் கடித்தத்தை வாசிக்காமல் கடப்பவர்களுக்கு அந்த முழுமை புலப்படாது. தீபனின் வாழ்க்கையை அவனின் அகத்தை விரிவாக உணர்வதன் வழி, அவனின் ஏக்கத்தை, வேட்கையை, இச்சையை, இருளை, உளவியல் சிக்கலை நன்றாகவே உள்ளுணர்ந்துகொள்ள முடிகின்றது. எழுத்தாளர் தீபனின் வாழ்க்கையை விரிவாகக் காட்டிருப்பதே ‘லீகாட்’ நாவலின் பலமாக அமைகின்றது. அந்த விரிவான பார்வையே வாசிப்பின் இறுதியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுகின்றது.
உடல் மாற்றம் என்பது உணர்வுகளோடு சேர்ந்து வரக்கூடியது. அதில் பாலியல் உணர்வும் அடங்கும். இளமை பருவத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் உடல் செய்யும் மாற்றங்களையும் அதனால் உண்டாகக்கூடிய உணர்வுகளையும் கற்பிக்கப் பலர் இருந்து கொண்டே இருப்பர். இந்தச் சமூகமே அவர்களுக்கு அதனை நொடிக்கு நொடிக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். ஆனால், ஓர் ஆண் அவனின் உடல் மாற்றத்தையும் அதனோடு எழக் கூடிய உணர்ச்சிகளையும் அறிவது அவ்வளவு எளிதல்ல. உடல் செய்யும் வித்தைகளையும் அதனோடு எழும் வேகத்தையும் உணர்ச்சிகளையும் சரியாக அடக்கத் தெரியாதவன் மன உளைச்சளுக்கு ஆளாகி காமம் அவனை ஒரு பேயாகத் துரத்தி வருகின்றது. நாவலில் தீபனின் நிலையும் அவ்வாறுதான் அமைகின்றது.
தீபன், அவனது பால்யக் காலம் முழுவதும் அம்மாவின் அன்பும் அப்பாவின் கண்டிப்பும் மாமாவின் அரவணைப்பும் நிரம்பி இருக்கின்றது. அவனின் இடைநிலைப்பள்ளி காலக்கட்டத்தில் அப்பாவின் இறப்பும் மாமாவின் விலகலும் ஏற்படுகின்றது. அதனோடு, பள்ளி மாணவர்களுக்கு மத்தியிலும் அவன் தோற்றத்திற்காக கேலிக்குள்ளாகின்றான். தனது இடைநிலைப்பள்ளி காலக்கட்டத்தில் தீபனுக்கு அவன் தோற்றத்தின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகின்றது. //ஒவ்வொருநாளும் என் முகத்தையும் தோற்றத்தையும் கண்ணாடியில் பார்த்து அழுவேன். கன்னங்கரிய உருவம். கழிப்பறையின் விளக்கை அணைத்துவிட்டால் கண்ணாடியில் விழிப்படலம் மட்டுமே தெரிந்தது. சுமாரான உயரம். எந்தக் கூட்டத்திலும் எளிதாகக் காணாமல் போகும் தோற்றம். என்னைப் பார்க்க எனக்கே வெறுப்பாக இருந்தது.// எனத் தீபன் கூறும் வரிகளின் வழி அவனின் தாழ்வு மனப்பான்மையோடு அவன் சிறுவயதிலே ஏந்திக் கொண்டிருக்கும் வலியையும் எனக்குள் கடத்திச் சென்றது. தன் ஓட்டப்பந்தயத் திறனையும் தாழ்வு மனப்பான்மையால் அவன் பறிகொடுக்கின்றான். இப்படித் தாழ்வு மனப்பான்மையால் தன்னைத் தொடர்ந்து முடக்கிக் கொண்டிருக்கும், தன் உடல் மீதான ஒவ்வாமையைச் சுமந்து சென்று கொண்டிருக்கும் தீபனுக்கு வழிகாட்ட அவனின் மாமாவோ அப்பாவோ வேறொரு ஆணோ உடன் இருக்கவில்லை.
தனது 14,15 வயதில் அனைத்து அவமானங்களையும் கடந்து, பள்ளியில் பிணமாக உலாவிக் கொண்டிருக்கும் தீபனின் வாழ்க்கையில் கனகா நுழைகிறாள். கனகாவின் வருகைக்குப் பிறகுதான், தீபன் மெல்ல அவமானம், சுயமாரியதை என்பதெல்லாம் அறிந்து தன்னை மாற்றிக்கொள்ள முயல்கின்றான். கனகாவின் நட்பினால் தீபன் பள்ளியில் பரீட்சயமாகின்றான். ஆனால், அந்த வசந்தமும் சில நாட்களுக்கு மட்டுமே அவன் வாழ்க்கையில் நீடிக்கின்றது. கனகா அவள் உடலையும் காம உணர்ச்சியையும் அறிந்துகொண்டிருக்கும் அளவிற்குத் தீபனால் அவனின் உடலையும் உணர்ச்சியையும் அறிந்துகொண்டிருக்க இயலவில்லை. இதனால், கனகா தீபனைவிட்டு விலகிச் செல்கின்றாள். அந்த விலகலுக்குப் பிறகுதான் தீபனின் வாழ்க்கை முற்றிலும் மாறுகின்றது.
சிறுவனாகச் சுற்றித் திரிந்த தீபன் முறுக்கேறிய, அடங்காத இளைஞனாக உறுமாகின்றான். மாறன் தீபனின் வழிகாட்டியாகின்றான். மாறன் வழியே தீபன் அவன் தோற்றத்தையும் பழக்கத்தையும் மாற்றத் தொடங்குகின்றான். தொடக்கத்தில் கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டு அருவருப்படைந்த தீபனுக்கு மெல்ல அவன் உடல் மீது கொண்டிருந்த அருவருப்பு விலகுகின்றது. // கைகளை முறுக்கியும் நிமிர்த்தியும் மடக்கியும் பார்த்தேன். கண்ணாடியில் திடகாத்திரமாகவே காட்சியளித்தேன். அதுவரை நான் என்னை அப்படி ரசித்ததில்லை.// தீபன் அவன் உடலை ரசிக்கத் தொடங்கிகுறான். இதற்கிடையில் அம்மாவை எதிர்த்துப் பேசவும் ஆரம்பித்திருந்தான். ஒரு சிறுவன் இளைஞனாகும்போது உருவாகும் மாற்றங்களைத் தீபனின் வழி நன்றாகவே உணர முடிந்தது.
நண்பனின் சொல் பேச்சைக் கேட்டு அதன் வழி நடந்து கொண்டிருந்த தீபனுக்குள் உறைந்திருக்கும் காமத்தை வெளிக்கோணர வைத்ததும் மாறன்தான். தீபனின் உடல் வேகத்தை, தன் உடல் செய்யத் துடிக்கும் வித்தைகளை அனுபவிக்க அவன் படாதபாடுபடுகின்றான். காமம் கொள்ள துடித்தாலும் அதனைச் செய்ய இயலாமல் தீபன் சோர்வடைந்து கொண்டே இருக்கின்றான். அவன் காமம் கொள்ள தேர்ந்தெடுக்கும் முதல் பெண்தான் விலைமாதுவான நிஷா. அவனிடம் போதிய பணமில்லாததால் நிஷா தீபனை அவமானப்படுத்தி விரட்டுகின்றாள். அவனுக்கு அனைத்துமாக இருந்த மாறனும் துரோகம் செய்து அவனைவிட்டு விலகுகின்றான். இந்த வலிகளுக்கு மத்தியிலும் தீபனின் உடலும் மனமும் காமத்திற்கு ஏங்கிக் கொண்டே இருக்கின்றது. அதன் விளைவாக கம்பத்தில் உள்ள அக்காள் குளிப்பதை எட்டிப் பார்க்க முயன்று அம்மாவும் அவனை விரட்டியடித்து பினாங்கில் உள்ள மாமாவிடம் அனுப்புகிறார்.
17 வயதில் அவமானம், உடல் வலி, காம வேட்கையுடன் பினாங்கிற்கு வந்து சேரும் தீபனுக்குச் சிறு வயதில் மாமாவிடமிருந்து கிடைத்த அரவணைப்பு கிடக்கவில்லை. மாமாவை அந்நியமாக உணர்கின்றான். கிச்சா, கலைவாணி, ரத்னா ஆண்டி எனப் பலரிடம் தீபனுக்குப் பழக்கம் ஏற்படுகின்றது. நாட்கள் வேலை சுமைகளால் கடந்தாலும் அவன் உடல் காமத்திற்கு ஏங்கிக் கொண்டே இருக்கின்றது. அந்த உணர்வை மேலும் தூண்டியது விச்சுவின் செயல்தான். காம வேட்கையினால், அதனைக் கையாளத் தெரியாதவனான தீபன் ரத்னா ஆண்டியுடன் உடலுறவுக் கொண்டு மீண்டும் தன் தாயிடம் ஒரு சிறுவனாகவே திரும்புகின்றான்.
தனது உடல் வேட்கைக்குத் தீனி போட்டுக் கொண்ட தீபன், தனது முதுமை காலத்தில், அவனின் பேத்தியான நிஷாவிடம் முறை தவறி நடப்பதற்கான காரணம் என்ன என்று ஆராயும்பொழுது அவன் கடந்து வந்த வாழ்க்கை முறையும் அவனுக்குள் உள்ள உளவியல் சிக்கலுமே பிரதானமாக முன் வந்து நிற்கின்றது. நாவல் முழுவதும் பால்யக் காலம் தொடங்கி தனது இளமைப்பருவம் வரை தீபனின் வேகமும் வேட்கையும் தொடர்ச்சியாக உணர்ந்துகொள்ள முடிந்த நிலையில் இருப்பதால், அவனது இளமைக்காலத்தில் அவன் காமம் கொள்ள விரும்பிய முதல் பெண்ணான நிஷாவுடன் ஏற்பட்ட அவமானமும் நிறைவேறாத ஏக்கமும் அவனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதை உணர முடிகின்றது.
உடல் வேட்கை, அவமானம், நிறைவேறாத ஆசை என அனைத்தும் உளவியல் சிக்கலாக அவனுக்குள் தேங்கியிருந்துள்ளது. தன்னைச் சீண்டிப்பார்த்ததாக அவன் கருதிய அந்த நிஷாவை அடைய முடியாத விரக்தியையும், தோல்வியுற்ற ஆண்மையின் அவமானத்தையும் அவன் அறியாமலேயே தனது பேத்தியான நிஷாவின் மீது ஏத்திச் செல்ல முயன்றுள்ளான். ஆனால், அந்தச் செயலுக்காக அவன் அவமானமும் குற்றவுணர்வும் அடைகின்றான்.
நாவலை வாசித்து முடித்த பிறகு தீபனின் செயலுக்காக தீபன் மீது கோபமும் அருவருப்பும் எழுந்தாலும் அவன் மீது பரிதாப உணர்வும் எழவே செய்கின்றது. அதற்காகத் தீபனின் செயலைப் புனிதப்படுத்தவோ நியாயப்படுத்தவோ தேவையில்லை. நாவலில் அவன் மீது பரிதாபம் கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவே நான் உணர்கின்றான்.
தீபன் அவனது காம வேட்கையினால், அதனைக் கையாள தெரியாதவனாய் அவன் அக இருளுக்குள் சிக்கிக்கொண்டவனாகவே எனக்குத் தெரிகின்றான். சிறுவயதிலே காம வேட்கையோடு போராடிக் கொண்டிருப்பவனாகவும் தெரிகின்றான். அதனை அவனுக்குப் புரிய வைக்க சரியான வழிகாட்டியும் அவனுக்கு வாய்க்கவில்லை. தன் உடலை அறிந்துகொள்பவனால்தால் தன் மனதையும் அறிந்துகொண்டு உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த இயலும். தீபனால் அவனின் உடலையே அறிந்துகொள்ள முடியாமல் இருக்கும்போது, எப்படி அவனால் அவனின் மனதையும் அதனோடு எழக்கூடிய உணர்ச்சி வேகத்தையும் கையாள முடியும் என்ற கேள்வியே எழச் செய்கின்றது.
‘லீகாட்’ நாவலின் வாசிப்பிறுதியில் ஓர் இளைஞனின் அலைகழிப்பும் அவஸ்தையும் வேகமும் சரியாக கையாளாத பொழுதும் வடிவமைக்கப்படாத பொழுதும் அவன் என்னவாக உறுமாறுகின்றான் என்பதனை உணரும்போது மனம் அதிர்கின்றது. தீபனின் வாழ்க்கை பாதையை உணரும்போது அவன் மீது இரக்கம் ஏற்பட்டாலும் அவன் தன் பேத்தியிடம் நடந்த முறையை நினைக்கையில் கோபமும் எழுகின்றது. பரிதாபம், கோபமும் என இந்த இரடு முரணான உணர்வுகளைத் தீபன் வழி ‘லீகாட்’ நாவல் எனக்கு ஒரே நேரத்தில் அளிக்கின்றது. எல்லா மனிதர்களின் அகத்தையும் நாம் உணர்ந்திடாத அந்தரங்கங்களையும் புனைவுலகம் வாசகனுக்கு உணர்த்த வேண்டும். அவ்வகையில் ‘லீகாட்’ நாவல் தனது காம வேட்கையைச் சரியாக கையாளத் தெரியாத ஓர் ஆணின் அகவுலகை, அவனின் வாழ்க்கையையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.

