“நீ மனிதர்களை உண்மையாக வழிநடத்த விரும்பினால் அவர்களின் ஆழங்களின் ஆழத்திற்குள் மூழ்கிச் செல். மனிதர்கள் வெறும் நுரைத்தெழும் அலைகள் அல்ல. மனிதர்களின் ஆழங்களின் ஆழத்திற்குள் நீ மூழ்கிச் செல்ல வேண்டுமெனில், முதலில் உனது ஆழத்தின் ஆழத்திற்குள் நீ மூழ்கிச் செல்ல வேண்டும்.”
மிக்கேல் நெய்மியின் “தி புக் ஆஃப் மிர்தாத்” ல் வரும் இவ்வரிகளைக் கொண்டு ம. நவீனின் படைப்புலகை வரையறுக்கலாம்.
மனிதர்கள் வகுத்தும் பெருக்கியும் வரையறுத்து வைத்துள்ள உறவுச் சிக்கல்களில் முறையாக வழிநடத்தத் துணை இல்லாமல் அகலமான வாயில்களை தேடிச் சென்றதன் விளைவாக தீபனின் வாழ்க்கை சிதறிப்போன விதங்கள் தான் ‘லீகாட்’ நாவலின் மையக்கதை.
கரிய தோற்றம் கொண்டதன் விளைவாக பள்ளியில் சக மாணவ மாணவியர்களால் ஒதுக்கப்பட்ட தீபனுக்கு கனகாவின் நட்பு கிடைக்கின்றது. தாழ்வுணர்ச்சியில் இருந்து தன்னை மீட்டெடுத்தவள் மீது காதல் அரும்பும் பொழுது அவள் அவனை விட்டு ஒரு நாள் மாயமாக மறைகிறாள். அந்த ஏமாற்றத்தின் வலியும் அவள் இல்லாத வெறுமையும் அவனது உள்ளத்திலும் உடலிலும் இனம் புரியாத மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
என்னவென்று அவன் ஆராய்ந்து புரிந்து கொள்ளும் முன்னரே மாறனின் நட்பு வழி மறிக்கின்றது. அதுவரை தீபனின் மரபணுவில் புதைந்து கிடந்த மிருகங்களை ஒவ்வொன்றாகத் தட்டி உயிர்த்து எழுப்ப மாறன் அவனால் ஆன அனைத்து தீய வழிகளிலும் தீபனை இழுத்துச் செல்கிறான். மாறனின் கையில் சிக்கிக் கொண்ட பட்டம் போல அவன் இழுத்த திசைகளில் எல்லாம் பயணித்த தீபன் ஒரு கட்டத்தில் நிஷா என்ற விலைமகளிடம் பேரம் பேசி தன் ஆண்மையைப் பணயம் வைத்து விட்டதாக எண்ணி மேலும் இருண்ட பாதையை நோக்கி அவனது பயணம் ஆழம் காண்கின்றது.
அதன் விளைவாக பெற்ற தாயையும், அன்பான கருப்பனையும், கம்பத்து மக்களையும், தம்பியாக தன்னை அரவணைத்த சாரதா அக்காவையும் அவ்வாழத்தில் தொலைக்க நேர்கின்றது. அவமானத்தின் அத்தனை அடுக்குகளிலும் கூனிக்குறுகி கம்பத்தை விட்டு வெளியேறி தன் மாமாவிடம் அடைக்கலம் சேர்கிறான். மாமாவின் உணவகத்தில் பணிபுரிகையில் தன் ஆணவங்கள் ஒவ்வொன்றாக அவனை விட்டு உடைகின்றன. விச்சு உடன் முட்டி மோதி சரியும் பொழுது அவனைத் தனக்குப் பெரும் போட்டியாக எண்ணுகிறான். இறுதியில் விச்சு ஊரைவிட்டுச் சென்ற பிறகு அவன் தனக்கும் தன்னை சுற்றி இருந்தவருக்கும் செய்த நன்மைகள் அனைத்தையும் அறிந்த கணம் தீபனின் மனம் கனிகிறது. இவ்வுலகில் சில மனிதர்கள் கொடுக்க மட்டுமே பிறந்தவர்கள். அவர்களுக்கு நாம் என்றுமே எதையுமே கொடுத்து ஈடு செய்துவிட இயலாது. அப்படிப்பட்ட மனிதன் விச்சு.
தீபனின் மனம் கனிந்ததே அன்றி, அவனது உடலின் வேட்கையை மட்டும் இன்னதென்று அவனுக்குச் சொல்ல எவரும் இல்லை. எதை வெல்லத் துடிக்கின்றான் என்று அவனுக்கு விளங்கவில்லை. நிஷாவின் நினைவு வருகிறது. தீபாவளிப் பணத்தை திரட்டிக்கொண்டு அவளிடம் செல்கிறான். ஆண் என்ற ஆணவமும், ஆண்மையின் திமிரையும் காட்டி அவளை அழைக்கிறான். எந்நிலையிலும் பெண்மை கோரி நிற்பது பரஸ்பர மரியாதையை மட்டுமே என்று அவள் சொல்லாமல் சொன்னது அவனுக்குப் புரியவில்லை. ஏமாற்றமும் கோபமுமாக திரும்பி வந்தவன் தன் அறையில் கண்மூடிக் கிடக்கிறான். கலைவாணியை நினைக்கிறான். கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்விழித்தவன் முன் ரத்னா ஆண்ட்டி நிற்கிறாள்.
தீபனின் வெறுமையின் குழிகளைத் தன் தாய்மையால் இட்டு நிரப்பியவள், சோறு ஊட்டி வயிற்றுப் பசியை ஆற்றியவள் அவனது உடலின் வேட்கையைத் தணிக்க தன்னையே அளிக்க வந்து நிற்பாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. யட்சியாக உருமாறி தீபனையே பலி கேட்டு, பசியாறிய வண்ணம் பசியாற்றிவிட்டு அவள் நித்திரையில் ஆழ்கையில், அவளது உறக்கம் என்னை அலைக்கழித்தது. ரத்னா ஆண்ட்டியின் பெண்மையின் அத்தனை உருவங்களில் அவள் எது என்று நான் குழம்பிப்போன பொழுது, தீபன் அவனது கையிரண்டையும் கோர்த்து அவளைக் கும்பிட்டு பெண்மையின் மொத்தமும் அவளே என்று எனக்குக் காண்பித்து சத்தம் எழுப்பாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான். இனி ஒருபோதும் அவளை எதிர்கொள்ள முடியாது என்று அங்கிருந்து தன் வீடு நோக்கிப் பயணிக்கிறான். வீட்டினை அடையும் பொழுது குற்ற உணர்ச்சி மேலும் அழுத்துகிறது. முதல் இறுக்கத்தைத் தளர்த்த வாலையாட்டிக்கொண்டு கருப்பன் ஓடி வருகிறான். மிகச் சாதாரணமாக சாரதா அக்காவும் அவளது கணவனும் ‘வாடா தம்பி’ என்று இயல்பாக ஏற்றுக் கொண்ட தருணம் இந்நாவலின் அடுத்த உச்சகட்டம். மன்னிக்கும் மனிதர்களின் கனிந்த உள்ளம் என்றுமே நான் என்னுள் இட்டு நிரப்பிக் கொள்ள முடியாத தரிசனம்.
பிறகு இருளுக்குள் முடங்கிக் கிடந்த தாயின் காலடியில் தஞ்சம் கேட்டவனுக்கு தலைகோதி ஆசீர்வதித்து ஏற்றுக்கொண்ட அவள் என்றும் அன்னை வடிவமே!
நாவலினூடான பயணத்தில் பல இடங்களில் வந்த நிகழ்வுகளைக் கடக்கும் பொழுது இந்த சொல்லை உபயோகித்திருக்க வேண்டாம், இந்த காட்சிகள் இருந்திருக்க வேண்டாம், இந்த நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டாம் என எண்ணற்ற ‘வேண்டாம்’ கள் இயல்பாகவே தோன்றுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் வேண்டாம் என்று கவனிக்காமல் தப்பிச்செல்லும் ஒவ்வொன்றும் நம் கைமீறி நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றது. இதையும் கவனி என்று ஒரு வாசகனை இழுத்துப் பிடித்து நிறுத்துவது தானே ஒரு எழுத்தாளன் செய்ய வேண்டியது.
முதன்முதலில் லீகாட் நாவலை வாசித்த பொழுது நவீன் எழுதி இருக்க வேண்டிய முதல் நாவல் இது என்று தோன்றியது. சிகண்டிக்கு முன்பு எழுதி இருக்க வேண்டிய நாவல் என்றும் தோன்றியது. ஆனால் நாவலை வாசித்து முடித்த பின்பு அவ்வளவு எளிதாக என்னால் கடந்து விட முடியவில்லை. என் மனம் சிகண்டியின் தீபனுக்கும், லீகாட்டின் தீபனுக்கும் அலைபாய்ந்தது. முடிவில் நான் கண்டது தீபன் ஒரு தன்மை என. என் அளவில் நவீனுடைய எழுத்துக்களின் வாசகி என்ற நிலையில் தீபனுக்கு முடிவே இல்லை என்று தான் என் ஆழ்மனம் கூறுகிறது.
உடைந்து சிதறிய கண்ணாடிக் குவளையாகவே என்னால் தீபனைக் காண முடிகிறது. உடைந்த சில்லுகள் ஒவ்வொன்றுமே ‘ஒரு தீபன்’ தான். அதில் ஒரு சில்லின் பிம்பத்தை சிகண்டியில் கண்டேன். சராவின் கூட்டுக்குள் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆண்மையை தொலைத்தவன் ஆக அல்லாடிய தீபனை சிகண்டியில் உணர்ந்தேன். உடைந்த கண்ணாடிக் குவளையின் இன்னொரு சில்லின் பிம்பமாகவே லீகாட்டின் தீபனை என்னால் காண முடிகிறது. உடைந்த அத்தனை பிம்பங்களையும் வரிசைமாற்றமும் கூட்டுத்தேர்வுமாக இன்னும் பல பரிணாமங்கள் ஏற்று தீபன்கள் நவீனின் நாவல்களில் எழுந்து வந்து கொண்டே இருப்பார்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அத்தனைப் பரிணாமங்களின் இறுதியிலும் அவன் இவ்வுலகத்திடம் கரம் விரித்துக் கோரி நிற்பது மன்னிப்பும், கனிவும், அரவணைப்புமே!.. அவ்வகையில் சிகண்டியில் சராவும், லீகாட்டில் ரத்னா ஆண்ட்டியும், சாரதா அக்காவும் அவனது நம்பிக்கையை உடைக்காத மாந்தார்கள்.
தன் ஓர் பிம்பத்தைப் பல நூறாக தீபன் உடைத்து, ஒவ்வொரு பிம்பத்தையும் ஒரு பிறவியாக மாற்றி ஒவ்வொன்றிலும் வாழ்வின் வெவ்வேறு இருளின் ஆழங்களைக் கடந்து பார்க்கின்றான். என் ஆழம் கண்டு நான் மீளும் தரிசனத்தைத் தந்த சிகண்டி என்றும் எப்பொழுதும் அழியாத பெரும் மலையாகவே என்னுள் நீண்டு அகன்று ஆழ்ந்து வீற்றிருக்கிறாள். லீகாட்டை படித்து முடித்த பொழுது இயல்பாகவே நவீனுடைய மற்ற படைப்புகளோடு ஒப்பிடுவதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு மலையும் உயரத்தில் வேறுபட்டாலும் தன்னளவில் அது அடைந்தது அதன் உச்சம் தானே!. என் ஆழம் கடக்க எனக்கு பெரும் வெளிச்சமாக சிகண்டி இருந்தது. அவ்வரிசையில் லீகாட் இன்னும் ஒரு தரிசனம்!. நவீனின் நாவல்களில் நான் கண்ட பெண்மையின் பரிணாமங்கள் பற்பல. இலக்கிய வெளி தரும் எல்லைகளற்ற தளத்தில் நின்று தன்னை பல நூறு துண்டுகளாக உடைத்து ஒவ்வொரு துண்டையும் பலி கேட்கும் யட்சிகளுக்குத் தன்னையே சமர்ப்பிக்கும் தீபனை(தீபன்களை), அதே இலக்கியம் தரும் எல்லையற்ற சுதந்திரத்தைக் கொண்டு நானும் நேசிக்கிறேன்!.

