திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்வு உடைந்து போகும் விளிம்பில் நிற்கும்போது அல்லது ஏற்கனவே உடைந்துகொண்டிருப்பதைக் கவனிக்கும்போது, அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் நீட்டிப்பதையே தங்கள் தேர்வாக வைத்திருக்கிறார்கள். சிலர் நிலையான பொருளாதார பலம் போன்ற சொகுசு வாழ்வு சார்ந்த காரணங்களாலும் மற்றும் சிலர் மணவிலக்கை சமூக மதிப்பீட்டில் வரும் களங்கமாகக் கருதுவதாலும் தொடர்ந்து அவ்வாழ்வை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். சிலர் குழந்தைகள் பொருட்டு மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வில் தொடர்ந்து இருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளை விவாகரத்து என்கிற அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள். உண்மையில் இது மிகத் தவறான கருத்துநிலையாகும்.
நீங்களே உதாரணமாகி வழிநடத்துகிறீர்கள்
விவாகரத்து நமது சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஓர் உண்மைதான் என்றாலும், மல்லுக்கட்டிக்கொண்டு தொடர்ந்து வாழ்தல் என்பது மீதமுள்ள வாழ்வை சேதப்படுத்துவதோடு குழந்தைகளையும் பாதிக்கும். முதலில் மனம் ஒவ்வாத ஓர் உறவை உங்கள் குழந்தைகளுக்குக் காட்டுவதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மிகத்தவறான முன்மாதிரி ஆகிறீர்கள். இணையருடன் அன்பில்லாமல் இருப்பது, வெறுப்பைக் காட்டுவது போன்றவை திருமண வாழ்வில் சகஜமானது என உங்களது சிறு குழந்தைகள் நம்பத் தொடங்குவார்கள். இதன்மூலம் எதிர்பார்ப்பதைவிட குறைந்த அளவே மகிழ்ச்சி இவ்வுலகில் சாத்தியப்படும் என அவர்களுக்கு மறைமுகமாக நீங்கள் கற்பிக்கிறீர்கள். உங்கள் இணையர்மீது நீங்கள் செலுத்தும் உடல், மனம் அல்லது உணர்வு ரீதியிலான எவ்வகை துன்புறுத்தலாக இருந்தாலும் சரி, அதைப்பார்க்கும் உங்கள் குழந்தைகள் எப்போதும் வன்முறைக்கு எதிராக எழுந்து நிற்கக்கூடாதென மறைமுகமாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இதன்மூலம் உறவுகள் சார்ந்தும் திருமண வாழ்வு சார்ந்தும் ஆரோக்கியமற்ற, நம்பிக்கையற்ற தன்மையையும் அவர்களுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள்.
நீங்கள் ஒரு கொடிய பெற்றோராக மாறுகிறீர்கள்
மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வில் இருப்பது உங்கள் மன அழுத்தத்தை உயர்த்தி, உங்கள் ஊக்கத்தைக் கொன்றுவிடும். காரணம் உங்கள் திருமண வாழ்வு இனியும் மகிழ்வளிப்பதாக இல்லாததுதான்.
பெரும்பாலானவர்கள் தங்களது மன அழுத்தத்தைச் சமாளிக்க குடும்பத்திலிருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள். அதிக நேரம் வேலை இடத்தில் இருப்பதன் மூலமாகவோ அல்லது வெளியில் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலமாகவோ – இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதன் மூலம் தங்களது இணையரைத் தவிர்க்கிறார்கள். இப்படியே படிப்படியாக தங்களது குடும்பப் பொறுப்புகளையும் இழக்கிறார்கள். இதில் பெரிதும் பாதிப்படைவது குழந்தைகளே. காரணம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களின் ஒன்றுசேர்ந்த கடமையாகும்.
பெற்றோர்களிடையே ஒத்துழைக்க மறுப்பு உண்டாகும்போது, சரியான பேச்சுவார்த்தை இல்லாதபோது தொடர்ந்து அவர்கள் நல்ல பெற்றோர்களாக இருப்பது எப்படி சாத்தியமாகும்?
நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமே அவர்கள் என்னவாக வளர்கிறார்கள் என்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அவர்கள் வளரும் சூழலே அவர்களை உருவாக்குகிறது. எனவே, உங்கள் இணையருக்கும் உங்களுக்கும் இடையே ஏற்படும் கடுமையான மோதல்களும் சண்டைச்சச்சரவுகளும் குழந்தை வளர்ப்பில் ஆரோக்கியமான சூழலை உருவாக்காது. மாறாக, குழந்தைகளின் வளர்ச்சியில் பாதகத்தையே உண்டுபண்ணும். வெளிப்படையாக சொல்வதென்றால் இம்மாதிரியான சூழலில் உங்கள் குழந்தை நம்பிக்கை, சுயமரியாதை குன்றியவராகவுமே வளருவர்.
வீடு என்பது இல்லமல்ல
தம்பதிகளுக்கு இடையில் காதல் வற்றிவிடும்போது அவர்கள் குடும்பத்தில் முழுமனிதராய் இருப்பதில்லை. பேச்சு, காதல், மரியாதை என அனைத்தும் குறைந்து விடுகிறது. குடும்பம் என்பதற்கான உண்மையான அர்த்தம் நீர்த்துப்போய் குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடமிருந்து இணக்கமான உறவை உணராமல் போகின்றனர். இது அவர்களுக்குள் குழப்பம், அழுத்தம் மற்றும் காயத்தை உண்டாக்கி உணர்வுக்குள் தீராத வடுக்களையும் கொடுத்துவிடும்.
உங்கள் திருமண வாழ்வின் தொடக்கத்தில் நிலையற்ற தன்மையை உணர்ந்தால், முதல் வேலையாக அதனை அபாயச் சூழலிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆனால், அதன் பாதிப்பு எல்லைமீறிப் போய்விடும் சூழலில், விவாகரத்து செய்துகொள்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவையற்ற வலிகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் எனும் உண்மையையும் மறக்க வேண்டாம்.
அப்படி என்றால் இதைத் தவிர்ப்பதற்கு வழியேதும் இல்லையா? கணவன் மனைவிக்கிடையே தோன்றும் சிக்கல்களுக்கு விவாகரத்துதான் தீர்வா என்றால், அப்படி இல்லை. உங்கள் மணவாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் இப்படிப்பட்ட சூழல்களைத் தவிர்க்க முடியும். பின்வரும் கருத்துகளைப் படியுங்கள்:
உங்கள் திருமண வாழ்வை வளமாக்குங்கள்:
ஒருவேளை உங்கள் திருமணவாழ்வு தோல்வியில் முடியக்கூடும் என்பதை நினைத்து நீங்கள் கலங்கலாம். அதேநேரம் சிலர் தங்கள் திருமண வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடலாம் இன்னும் சிலர் அதை பொருட்படுத்தாமல்கூட இருக்கலாம். நம்மில் பலரும் திருமண வாழ்வென்பது வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடப்பது என ஏற்றுக்கொள்வதால் உங்கள் முழுக் காதலையும் இணையருக்கானதாக அங்கீகரியுங்கள். வளமான திருமண வாழ்வுக்கு இதுமட்டும் போதாது. இதனுடன் சேர்த்து, கணவன் மனைவி இருவருக்குமே தொடர்ச்சியான முயற்சி, ஊக்கம் மற்றும் நிலைத்தன்மை போன்றவை தேவைப்படுகின்றது.
உங்களுக்குள்ளேயே முதலீடு செய்துகொள்ளுங்கள்
உங்கள் திருமண வாழ்வை வலுவாக்குவதற்கு முன்பு உங்களை நீங்கள் அங்கீகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் இணையரிடம் காதலையும் மரியாதையையும் பொழியும் முன்னர் உங்களை நீங்களே மதிக்கவும் நேசிக்கவும் செய்யுங்கள். உங்களை நீங்களாய் ஏற்றுக்கொள்ளுங்கள். ‘உங்களுக்கான நேரம்’ என்பதை தினமும் உருவாக்கிச் செலவிடுங்கள். உங்கள் பொழுதை நல்ல வழியில் கடைப்பிடிப்பது, பிடித்த வேலைகளைச் செய்வது என உங்களை நீங்களே முழுமையாய் உணர வாய்ப்பளியுங்கள். காரணம், உங்களுக்குள் உங்கள் மீதான நேசம் அதிகமாக இருக்கும்போதே அதை உங்களால் இணையருக்கும் வழங்க முடியும்.
ஒருவருக்கொருவர் சரி என அங்கீகரியுங்கள்:
சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் நல்லவையாக வைத்துக் கொள்ளுங்கள். காதலே திருமண வாழ்வின் சாரமாகின்றது. பேரன்பையும் இரக்கத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். மனிதர்களான நாம் தவறுகள் செய்வது இயல்பே. நீங்கள் தவறு செய்துவிடும்போது உங்கள் இணையரிடம் அதனை ஒப்புக்கொள்வது முக்கியம். உடனடியாக உங்கள் மன்னிப்பையும் அவரிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் இணையர் தவறு செய்தால் உடனடியாக மன்னித்து அத்தவறை அத்துடன் மறந்தும் விடுங்கள். உங்கள் இணையரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்களோ நாளை உங்கள் குழந்தைகளும் அவர்தம் இணையரை அப்படியே நடத்துவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் எல்லை எது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
எதிர்ப்பாலினருடன் நட்பு கொள்வது தவறில்லை, ஆனால் அவர்களுடன் எவ்வாறு உறவாடுகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. உங்கள் இணையருடன் பகிர்ந்துக்கொள்ளாத ஒரு விடயத்தை எதிர்பாலின நண்பருடன் பகிர்கிறீர்கள் என்றால் அவர் பார்வையில் நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்பது தெளிவு. சொன்ன விடயம் சாதாரணமானது அல்லது சில நிமிட உரையாடல்தானே என்று நாம் நினைத்துவிடலாம். ஆனால், இதுமாதிரியான விடயங்களே தவறான உறவுக்கு கொண்டு செல்லும் எனும் அச்சம் நிகழ்வதால் உங்கள் திருமண வாழ்வை இதுபோன்ற சம்பவங்கள் பாதிக்கலாம்.
காதலின் திறவுகோல் முழுமையாக ஏற்றுக்கொள்வதே
ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தனித்தன்மை மிக்கவன், புத்தாக்க சிந்தனையாளன். உங்கள் இணையரின் இவ்வேறுபாடுகளுக்கு மதிப்பளியுங்கள், அவர் தனித்தன்மை மிக்கவர் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இணையரை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அவர்களது குறைகளை வெளியிலிழுத்துக் கொண்டே இருக்காதீர்கள். அவரது ஆளுமையைப் பாராட்டுங்கள். எப்போதெல்லாம் பாராட்டுகள் குறைவதாக தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்து பாராட்டுங்கள். உங்களது பலவீனங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாகவும் அவரை அவராகவும் இருக்க விடுங்கள்.
உங்கள் திருமண வாழ்வில் முழுமையாக இருங்கள்
உங்கள் உடல் உங்கள் இணையரின் அருகில் இருப்பதைக் காரணம் காட்டி நீங்கள் திருமண வாழ்வில் முழுமையாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. கணவன் மனைவி ஆகியோருக்கு இடையேயான தொடர்பாடல் அவசியம். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுங்கள். உங்கள் இணையர் பேசுவதை முழுவதும் செவிமடுப்பவராக இருங்கள். உங்கள் இணையருக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவருக்காக இருங்கள். திருமணத்திற்குப் பின்பு தம்பதிகள் செய்யும் மிகப்பெரிய தவறு ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்ளாமல் இருப்பதுதான். உங்கள் இணையர்மீது இருக்கும் காதலையும் ஈர்ப்பையும் காட்டப் பயன்படும் சக்தி மிகுந்த ஒரே ஆயுதம் தொடுதல்தான். தொடுவது எப்போதும் காமத்தால்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்ளுங்கள். அடிக்கடி முத்தமிட்டுக் கொள்ளுங்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் நீண்டு செல்லும்.
உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான சமநிலையை நிலைநிறுத்துங்கள்
குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட பின்பு கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புறக்கணிக்க முயல்வது இயல்பாகிவிட்டிருக்கிறது. குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க நேரத்தையும் ஆற்றலையும் முதலீடாக்குவது நல்லதே. ஆனால், உங்களது மொத்த ஆற்றலையும் அதிலேயே விரயம் செய்துவிடாதீர்கள். குழந்தைகளுடன் கூடியிருப்பதனால் உங்கள் இணையருக்குக் கொடுக்கவேண்டிய காதலையும் அன்பையும் தவறவிட்டு விடாதீர்கள். ஒரு பூச்செடியைப் போல உங்கள் திருமண வாழ்வுக்கும் அன்றாடம் நீர் ஊற்றுங்கள். இல்லையேல் அது கருகி மடிந்துபோகும்.
அன்புத் தீ உங்களுக்குள் எரிந்து கொண்டே இருக்கட்டும்
ஒவ்வொரு சிறு இடைவெளிக்குப் பின்னரும், இணையரிடம் உங்களது அன்பையும் கனிவையும் கொடுத்துக்கொண்டே இருங்கள். வெளியே உணவுக்கு அழைத்துச் செல்லுங்கள்; பூக்களை வாங்கிக் கொடுங்கள்; அவர்களுக்கு கடிதங்கள் எழுதுங்கள். எளிமையான முறையில் உங்கள் தீராத அன்பை காட்டிக்கொண்டே இருங்கள். இந்தச் சின்ன சின்ன விடயங்களே கவனத்திற்கு உரியனவாகின்றன.
உங்கள் வாழ்க்கையை இன்னொருவருடன் பகிர்ந்துக்கொள்ள முடிவது அவ்வளவு அழகானது. திருமணம் உங்கள் வாழ்க்கைக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. அதனை ஆரத் தழுவிக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் என இன்னமும்கூட தொடர்ந்து வாழமுடிவதால், உங்கள் இணையை அங்கீகரியுங்கள்.
மூலம்: டத்தோ டாக்டர் அருணன் செல்வராஜ்
தமிழில் : விஜயலட்சுமி
“ஆதலினால் காதல் செய்வீர்”
இந்தப் பிரபஞ்சத்தில் அழகான பூமி, அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது ஒரு அபூர்வமான விடயம். இவ்வுலகில் இனிய வாழ்வு என்பது ஓர் வரம். வாழ்க்கை சிறப்பாய் வாழ்வதற்கு அன்பு, காதல் மிக அவசியம்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம்புலப்பெயல் நீர்போல
அன்புடைநெஞ்சம் தாம் கலந்தனவே
என்று குறுந்தொகையில் உள்ள 40வது பாடலான குறிஞ்சித்திணைப் பாடலில் கூறியுள்ளவாறு பல்லாயிரம் ஆண்டுகளாக எங்கள் மத்தியில் இருந்த காதல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகி, காதல் கசப்பானதொன்றாக மாறி, இன்று திரைகடல் ஓடி திரவியம் தேடுவதில் வல்லவர்களான நாம், இதயத்தில் என்றும் உயிர்த்திருக்கும் காதல் என்பது எதுவென்றே அறியாது, புரியாது வாழ்கின்றோம்.
கலாச்சாரத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக விட்டது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறியதையடுத்து இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமானதாக உருவாகி, சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல், இதயங்கள் இணையாது ஏதோ அவசரகோலத்து சம்பிரதாய சடங்குபோல வெறும் உடல்கள் மட்டும் இணைந்த ஒரு உடலுறவு மட்டுமே. இதனால்தான் “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவினான் பாரதி.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.
கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், கல்யாணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப் பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.
எங்களுடன் ஒத்துப் போகின்ற நண்பர்களோடு மட்டும்தான் நாங்கள் மனம்விட்டு பேசுவோம். எங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகாத, எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப்பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி ஒத்துப்போகாத, இணைவு இல்லாத ஒருவரைக் கல்யாணம் செய்து எப்படி வருடக்கணக்கில் உறவைத் தொடர முடியும்?
பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் சம்பிரதாயங்களுக்கும் கடமைக்கும் கணவன் மனைவி எனக் குறுகி, இறுதி வரை தொடர்கின்றன. இயந்திரமயமான வாழ்க்கை முறை தம்பதிகளிடையேயான மனோரீதியான நெருக்கத்தை வெகுவாகக் குறைப்பதால், ஏதாவதொரு பொதுவான விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை சேர்ந்து ரசிக்கும் பழக்கத்தை தம்பதிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்யாணத் தரகர்களால் தீர்மானிக்கப்பட்ட திருமணத்தில், திருமணம் முடியும்வரை ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசியிருக்க வாய்ப்பிருக்காது. ஆனால் காலத்தின் கட்டாயமாக வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டிய ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டு, சமுதாயத்தின் கட்டாயத்திற்காக சேர்ந்து வாழும் பெரும்பாலான தம்பதியர்கள், கடமைக்காக கணவன்-மனைவியாக வாழ்கின்றனர். கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் கணவன் மனைவிக்கிடையில் பில் கட்டினதா? பால் வாங்கினதா? என சில சொற்களுக்கு மேல் கணவன்-மனைவிக்கிடையில் உரையாடும் குடும்பங்கள், எங்கள் மத்தியில் மிக மிக அரிது.
கருத்து வேறுபாடுகளும், தவறாக புரிந்துகொள்ளுதலும், கணவன் மனைவிக்கிடையில் நாளடைவில் அதிக வெறுப்பை உருவாக்குவதால், கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டுப் பேசி காதல் வளராது, வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதைப் புத்தகங்களிலும், வெறும் கற்பனையில் காதலைப் பார்த்துவிட்டு, எங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.
காதல் என்பது ஒருநாள் விடயமல்ல. ஒவ்வொரு நாளும் காதல் உயிர்ப்போடு இருக்கவேண்டும். ஒருபோதும் வற்றாத ஜீவநதி அன்பு மட்டும்தான். உண்மையான காதலில்தான் அன்பு இருக்கும். மனம்விட்டுப் பேசுவதை வழக்கப்படுத்திக் கொள்ளாத கணவன் மனைவிக்கிடையில் நெருக்கமிராது. கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால், மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கி விபரீதமான விளைவுகளுக்கு வழி சமைக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும், குத்திக்காட்டுவதும், அன்பு இல்லாத போலியான உறவுகளில்தான் இருக்க முடியும். நறுமணமான அழகான பூக்கள் கூட காதலிக்கத் தெரியாதவரின் கையிலோ, கழுத்திலோ, கூந்தலிலோ இருப்பதை விட காதலிக்கத் தெரிந்தவரின் கல்லறைமேல் இருப்பதே மேல்.
தம்பதிகள் தமக்கிடையில் கோபப்படும்போது, அவர்களின் இதயங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து விடுவதால், அந்த இடைவெளியினில் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காக, இருவரும் சத்தமாக உரத்த குரலில் பேசுவர். எவ்வளுக்கெவ்வளவு கோபம் கூடுகின்றதோ, அவ்வளவு அதிகமாகச் சத்தம் தேவைப்படுகிறது. அன்பு வயப்பட்ட காதலர்கள் பேசும் போது, உரக்க சத்தம் போட்டு பேசவேண்டிய தேவை இல்லை, ஏனெனில் அவர்களின் இதயங்களுக்கு இடையேயான இடைவெளி மிகவும் குறைந்து விடுகிறது. மனமொத்த இணைபிரியா காதலர்கள் தமக்குள் பேசவேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை, ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடைவெளியே இருக்காது. இதயங்கள் இடமாறிவிட்ட காதலர்களுக்கு வார்த்தைப் பரிமாற்றமே தேவைப்படுவதில்லை,
இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாக அருகில் பழக நேர்ந்தாலே எங்களில் பலர் அதனைக் காதல் என எண்ணி, கல்யாணம் செய்து கொள்கின்றார்கள். இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.
எங்கள் பிள்ளைகள் தங்கள் சூழலை மிகவும் கூர்மையாகக் கிரகித்துக் கொள்வதால் எங்கள் பழக்க வழக்கங்கள், பண்புகளிலிருந்து அவர்கள் நிறையக் கற்றுக் கொள்கின்றனர். தமது தாயும் தகப்பனும் ஒருவரை ஒருவர் பாசத்துடன் நேசிப்பதில்லை என்பதையும் அவர்கள் மத்தியில் வெறும் சண்டையும் கோபமும்தான் இருக்கின்றன என்பதையும் பிள்ளைகள் வெகு இலகுவாகத் தெரிந்து கொள்கின்றார்கள். தமது தாய் தந்தையரின் வாழ்க்கையில் அவர்களுக்கிடையில் அன்பும் பாசமும் இருந்திடாத நிலையில், எதிர்காலத்தில் தமது திருமணவாழ்வில் எவ்வாறு அன்பு பாசம் இருக்க முடியும் என நம்பாத சூழ்நிலை எங்கள் பிள்ளைகள் மத்தியில் உருவாகின்றது. தம் பெற்றோர்களுக்கிடையில் காதலும் அன்பும் பாசமும் இல்லை என்று கண்டு கொள்ளும்போது, தமது திருமண வாழ்விலும் காதலும் அன்பும் பாசமும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று எம் பிள்ளைகள் எண்ணத் தொடங்குவர்.
தமது தாயும் தந்தையும் ஆழ்ந்த அன்பில் ஆழமான காதலில் ஒருவர் மீது ஒருவர் அக்கறையும் மரியாதையும் செலுத்தி வாழ்வதை தமது கண்கூடாகப் பார்க்கும்போதுதான் தமது திருமண வாழ்விலும் காதலும் அன்பும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எங்கள் பிள்ளைகள் மத்தியில் உருவாகும்.
எமது உணர்வுகளில் ஒன்றான “கோபம்” அன்பின் காரணமாக வெளிப்படும்போது அக்கோபத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். ஆனால் ஆணவத்தின் காரணமாக கோபம் வெளிப்படும்போது, அதன் தாக்கமும் விளைவுகளும் படுமோசமாக அமைந்து விடுகின்றன.
அன்பு நிறைவான ஒரு அறக்கட்டளை. உண்மையான அன்பு ஒருபோதும் தன்னலம் நாடாது. சினம் கொள்ளாது.
மற்றவர்களுக்கு பயன்கருதாது. உதவி செய்யும்போது, மற்றவர்களுக்கு சுகத்தை அளிக்க முடியும்போது, சந்தோஷப்படுவதுதான் உண்மையான அன்பு. அன்பு எப்போதுமே கொடுத்துக்கொண்டேயிருக்கும். அன்பு மலருமிடத்தில், பாசம் மிளிருமிடத்தில் ஆணவத்திற்கும், அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் இடமில்லை. அன்பாக இருப்பதே மனிதரில் இயற்கையாகவே இருக்கின்ற இயல்பான தன்மை. பரிவு, இரக்கம், கருணை, நட்பு என்று பலவகையான குணங்களின் ஒட்டு மொத்தமான அன்பை வளர அனுமதித்தால் போதும். அதுவாகவே பொங்கி வழியும்.
மற்றவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்போது மட்டுமே சந்தோஷப்படுவதுதான் ஆணவம். எப்பொழுதும் சுயநலத்தில் குறிகொண்டதாகவே இருக்கும். ஆணவம், தமக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டுமே மற்றவர்களைத் தேடி வரும். ஆணவத்திற்கு மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் மற்றவர்களைக் கெடுத்துக் கொள்ளவும் மட்டும்தான் தெரியும். ஆணவம் எங்கெல்லாம் ஆதிக்கம் செய்கிறதோ அங்கெல்லாம் குழப்பமும், வெறுப்பும், உருவாகி வன்முறை தலைவிரித்தாடி இறுதியில் அழிவே மிஞ்சும்.
அன்பும் காதலும் இல்லாத கணவன் மனைவிக்கிடையில் பேச்சிலும், எண்ணத்திலும், செயலிலும் மோசமான எதிர்மறையே ஏகோபித்திருப்பதால், தமது பிள்ளைகளிடம் எதை எப்படிச் செய், எது நல்லது, எதுசிறந்தது என்று இனிமையாகச் சொல்லி சரியாக வழிகாட்டாது, “அடி வாங்குவாய்,” “வந்தனென்றால் தெரியமா வாங்கிக் கட்டுவாய்,” “போய்த் தொலை,” “அப்பா வந்து சாத்துவார்” என்றெல்லாம் கடுமையான கொதியிலும் கோபத்திலும் ஆவேசமாகப் பேசுகின்றார்கள்.
‘ஓத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்” என்று திருவள்ளுவர் கூறினார்.
அன்பு கணவன் மனைவிக்கிடையில் இருந்தால் எதையும் ஆணவத்தின் நோக்கத்தோடு பார்க்க மாட்டார்கள். .அன்பு வற்றும்போது போது அங்கு ஆணவம் மேலோங்குகின்றது. .அன்பு வளரும் போது “தான், தன்” என்ற நிலைமாறி “நாம்” என்ற நிலை வரும். ஆனால் கணவன் மனைவிக்கிடையில் ஆணவம் வளரும் போது “நாம், நம்மில்” என்ற நிலை மாறி “தான்” மட்டும் என்ற நிலை உருவாகி இறுதியில் தவிர்க்க முடியாதவாறு பிரிந்து விடுகின்றார்கள்.
பெரும்பாலான கணவன் மனைவியர் தங்களை மிக நியாயமானவர்களாக நினைத்துக் கொள்வதோடு கொண்டிருக்கிறார்கள். கணவன் மனைவியர் ஒவ்வொருவரினதும் பெரிய வருத்தமும் குறையும் மற்றவர் தம்முடன் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதுதான். நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று யாரை குறை சொல்கிறார்களோ அவர்களும் தங்களை மிக நியாயமானவர்களாகவே நினைத்து மற்றவர் தம்முடன் நியாயமாக நடந்து கொள்வதில்லை என வருந்துவதுதான் ஆச்சரியம். இதில் எவர் சரி, எவர் தவறு? என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் மாறுபட்ட அளவுகோல்கள் தான் காரணம் என்பது புரியும்.
எங்கள் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றின் மீது எங்களுக்கு இருக்கும் அபரிமிதமான பற்றிற்குப் நாம் வைக்கும் பெயர் பக்தி. ஆனால் மற்றவர் அவர் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றில் வைக்கும் அபரிமிதமான பற்றிற்கு நாம் வைக்கும் பெயர் வெறி.
நாங்கள் அடைந்த வெற்றிகள், தேடிக் கொண்ட சொத்துக்கள் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு பறைசாற்றத் துடிக்கிறோம். அடுத்தவர்கள் அதனைத் தெரிந்து புரிந்து கொண்டு எங்களை பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அதையே செய்தால் அது அவர்களின் தற்புகழ்ச்சியாகத் தெரிகிறது. மற்றவர்கள் எங்கள் அருமை பெருமைகளை அறிய மறுத்தால் அது அவர்களின் சின்ன புத்தியாகவோ, பொறாமையாகவோ எங்களுக்கு தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களுடைய அருமை பெருமைகளை அறிய எங்களுக்கு எதுவித ஆர்வமுமிருப்பதில்லை. எங்கள் சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் காரணம் எங்கள் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான் என நாங்கள் எண்ணும் அதேவேளை மற்றவர்களுடைய வெற்றிகளுக்குக் காரணம் அவர்களது அதிர்ஷ்டமும், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவும் என எண்ணுகின்றோம். அதுவே தோல்வியானால் அந்த அளவுகோல்கள் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. எங்கள் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டமும் சூழ்நிலையும். என்றும் மற்றவர் தோல்விக்குக் காரணம் அவர்களது முட்டாள்தனமும், முயற்சிகளில் உள்ள குறைபாடுகளும் என்று எண்ணுகின்றோம்.
எங்கள் சொந்த வீட்டு இரகசியங்களை படாதபாடுபட்டு மூடிவைத்து மற்றவர்கள் அறிந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் மற்றவர்களின் இரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாங்கள் தயங்குவதேயில்லை. அடுத்தவர்கள் தமது இரகசியங்களை மறைக்கச் செய்யும் முயற்சிகளைப் பெரிய குற்றமாக நாங்கள் விமரிசிக்கின்றோம்.
மற்றவர்கள் உதவ முடிந்த நிலையில் இருந்தாலும் எங்களுக்கு உதவுவதில்லை என்று மனம் குமுறும் நாங்கள் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் நிலையில் நாங்கள் இருக்கும் போது கண்டும் காணாமல் போய் விடுகிறோம். அந்த நேரத்தில் நாம் அதைப்பற்றி சிந்திப்பதேயில்லை.
தங்கள் பெற்றோரை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் சிறிதும் மன உறுத்தல் இல்லாமல் இருக்கும் நாங்கள் எங்கள் குழந்தைகள் அதையே செய்தால் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றோம். எங்களுக்கு தகுந்தாற்போல் எல்லாவற்றையும் அளப்பதும் எடைபோடுவதும் எங்களிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
எங்கள் மத்தியிலுள்ள பல பிரச்சனைகளுக்குக் காரணம் இந்த அளவுகோல் வித்தியாசங்களே. சுயநலம் மிக்க உலகாய் நாம் இந்த உலகத்தைக் காணும் அதேவேளை சின்னச் சின்ன விஷயங்களில் கூட நாங்களும் அதே போல் இருக்க முற்படுகிறோம் என்பதை உணரத் தவறுகிறோம். எங்களுக்குள் இரண்டு விதமான அளப்பீடுகளை நாம் நமக்குள் வைத்திருப்பதால்தான் நாங்கள் தவறுகள் செய்தாலும் அந்த உணர்வே இல்லாமல், அந்த உண்மையே நமக்கு உறைக்காமல் இருக்க முடிகின்றது.
தம்பதிகள் தமக்கிடையில் ஒரே அளவுகோல் வைத்திருந்தால் மட்டுமே உண்மையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதல் வளரும். பாசமான அன்பு, பரிசுத்தமான நேசம், ஆத்மார்த்தமான காதல் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்?
காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும் தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ளும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.
– நல்லையா தயாபரன்
திருமண வாழ்க்கை என்ற வண்டியின் இரண்டு சக்கரங்கள்தான் கணவனும் மனைவியும்.
பொருந்தாத சக்கரங்களுடனும் கோணலான சக்கரங்களுடனும் வண்டி நகரவே முடியாது.