போகன் சங்கர் கவிதைகள்

bogan-111

மனப்பதற்றத்தின் பழுப்பு தேவதைகள்

மரங்களின் மேல் தயக்கமின்றி பறக்கின்றன

மலைமேல் இரவுகளில் தெரியும் ஏக்கத்தின் வனத் தீ

இனிப்புப்பெட்டிகளைத் திறக்க மறுக்கும் விரல்களோடு

நீங்கள் எழுதும் கசப்புக் கவிதைகள்

உடல்கள், உடல்களின்  சிறிய வாசல்களுடன்

தேவாலயங்கள், கல்லறைகளின் தழும்பு மாறாத வரிசையுடன்

நீங்கள் உங்கள் ஆரஞ்சுச் சாறுகளை  வெப்ப காலத்துக்காக வைத்திருங்கள்

குளிர்காலங்களில் நான் பெரும்பாலும் இறந்துவிடுகிறேன்

அப்போது நீங்கள் என்னை எனது மாத்திரைகள் மூலமாகவே அணுக முடியும்

எனது ரயில் அப்போது ஒரு நீண்ட குகைக்குள் நுழைகிறது

ஒவ்வொரு குளிர்காலத்துக்கும் அந்தக் குகை வளர்கிறது

ஒரு நாள் நீங்கள் காத்திருப்பீர்கள்

ஒரு நாள் ஒரு மாலை

அல்லது அடுத்த குளிர்காலம் வரை

 

2

பழைய கால்களையே எடுத்துகொண்டுவரும்

லாயக்காரனை

புதிய குதிரை சலிப்புடன் பார்க்கிறது

லாயக்காரனின் தர்க்கம் என்ன ?

அவன் பழக்கத்தினால் அதைச் செய்கிறான்

அவனது வேதங்கள் இரண்டாயிரம் வருடப் பழமையானவை

அவன் கைகளைப் பாருங்கள்

எத்தனை ரேகைகள்

அவனது ரேகைகள் வளர்ந்து நதிகளாகின

தேசங்களின்  எல்லைகளாகின

ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் வேறு தேசங்களின் நபர்கள்  வந்து

தேசங்களின் பெயர்களை மாற்றினார்கள்

அவை அவர்கள் மொழியில் இருந்தன

அவர்களது மொழியில் மாற்றானுக்கு மட்டும் ஆயிரம் சொற்கள்  இருந்தன

நம்மவர் என்பதற்க்கு ஒரே ஒரு சொல்தான் இருந்தது

நதிகள் தங்கள் பழைய பெயர்களை மாற்ற விரும்பாமல்

மணலடியில் மறைந்தன

கோடைகாலங்களில் கிழிந்த உடைகளுடன் சிறிய இடைகளின் மீது வண்ணக்குடங்களோடு

சிறுமிகள் மட்டுமே இப்போது

அதன் பெயர்களைத் தேடி வருகிறார்கள்

கைகளால் அள்ளிக் கொண்டுபோகின்றார்கள்

ஒரே ஒரு வேள்வியில் கொல்லப்பட்ட குதிரைகளின் ஆயிரமாயிரம் கால்களை.

1 comment for “போகன் சங்கர் கவிதைகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...