சுயகௌரவம் இழக்கும் எழுத்தாளர்கள்…

02எனக்கு தமிழில் கெட்ட (கொச்சை) வார்த்தைகள் தெரியும். நான் பேசதான் மாட்டேன். நேரடியாக ஒருவர் மீது எனக்கு கோபம் வரும் போது, நான் பேசும் வசனம்இது. கோபம் மேலும் தலைக்குமேல் ஏறும் போது நான் பேசும் வசனம்தான் இது. என் கோபத்தை மேலும் அதிகப்படுத்தினால் பேசிவிடுவேன் மிகச்சிறந்த கொச்சையை. இப்படியான ஒரு கோபம்தான் எனக்கு ஏற்பட்டது கடந்த 12.7.2013 வெள்ளிக்கிழமை, கலாமண்டபத்தில் நடந்த மலேசிய தமிழ் இலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில். இந்த நிகழ்ச்சிக்கு நான் தனிப்பட்ட முறையில் அழைக்கப்படவில்லை. ஆனால் அது ஒரு பொது நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு 4 காரணங்கள் இருந்தன.

ஒன்று, ஒரு பொது நிகழ்ச்சியில் பொது மக்கள்யாரும் கலந்துகொள்ளலாம்.

இரண்டு, மூத்த பெண் எழுத்தாளர்களை தெரிந்துகொள்வதற்காக.

மூன்று,முன்பே வெளியீடு கண்ட இந்த புத்தகத்தின் தார்மீகத்தன்மையை நவீன் மற்றும் பாலமுருகன் எழுதியிருந்ததால், இந்த நிகழ்ச்சியில் அதைப் பற்றி பாக்கியம் பேசக்கூடும் என்ற நம்பிக்கையிலும் அதை அறிய வேண்டும் என்ற வேட்கையிலும்.

நான்கு, நான் ஒரு பெண் படைப்பாளர் என்றமுறையிலும் பத்திரிகையாளர் என்ற முறையிலும் பெண்கள் சம்மந்தப்பட்ட அந்த நிகழ்வுக்கு போக வேண்டும் என்ற கொஞ்சம் அக்கறையும் இருந்தது.

குறிப்பிட்ட நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு நடக்கவிருந்தது. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது இரவு மணி 7-க்  கடந்திருந்தது. இது நமக்கு பழகிவிட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் 50 பேர்கூட நிரம்பாத அந்த நிகழ்ச்சியில் பெண்களைவிட ஆண்களே அதிகம் இருந்தனர். இரவு 9 மணியைக் கடந்தும் புத்தகம் வெளியீடு காணவில்லை, பாக்கியத்தின் பேசும் முறையும் வரவில்லை. ஆனால் எழுத்தாளர் சங்கத்தலைவர் வந்தார். எப்படி பேசுவார் என்பதை ஓர் இரு நிகழ்ச்சிகளில் கேட்டிருக்கிறேன். அவர்மீது வைத்திருந்த மதிப்பும் மரியாதையையும் வீழ்ந்து போனதற்கு இந்த நிகழ்ச்சிகளே  காரணமாக இருந்தன.  எனக்கும் அவருக்கும் நடந்த ஒரு சந்திப்பைப் பற்றியும் நான் முன்பே வல்லினத்தில் எழுதியும் இருக்கிறேன். இரண்டாவதாக கோ.சு.கியின் புத்தக வெளியீடு. அந்த புத்தக வெளியீட்டில் “கிடைக்கும் பணத்தில், கோ.சு.கி பாதி எனக்கு கொடுத்து விடலாம். அதற்கான எல்லாத் தகுதியும் உரிமையும் எனக்கு உண்டு. காரணம் அந்த  கட்டுரையை நான்தான் தொடராக ஞாயிறு ஓசையில்வெளியிட்டேன்.” இதை எழுத்தாளர் சங்கத்தலைவர் நகைச்சுவையாகத்தான் சொன்னார். ஆனால் அது நகைச்சுவை அல்ல என்பது தன்மானம் உள்ளவனுக்குத் தெரியும். இரண்டாவதாக பா.ஆ.சிவத்தின் இரங்கல் கூட்டம்.  நான் அந்த நிகழ்வுக்கு போகவில்லை எனினும்  பலர் செய்திருந்த  அந்த நிகழ்ச்சிப் பற்றிய பதிவில் தெரிந்துக்கொண்டேன்.

இந்த கசப்பான அனுபவங்களே அவர் பேச மேடை ஏறும்போது, கவனமாக கேள் என்று சுத்தியல் மண்டையில் ஓங்கி அடித்து உஷார் செய்தது. மேலும் அவர் பெண்ணியம் பேசி நான் கேட்கப்போகும்  முதல் நிகழ்ச்சி எனும்படியால், உஷார் நிலை என்னை இன்னும் கொஞ்சம் துரிதப்படுத்த  என் கைபேசியையும் முடக்கிவிட்டேன். பதிவானது ஒரு பகுதி.தெளிவானது அவரின் பெண்ணியம் பற்றிய புரிதல். அதற்கு மேல் அங்கு இருப்பது மேலும் எனக்கு ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த புத்தகத்தை பெறாமலேயே நடையை கட்டினேன்.

பெண்ணியம் குறித்து அவர் பேசியதும், அதற்கு அங்கிருந்த பெண்கள் கையைத்தட்டி ஆதரித்ததும் அவர்களின் அறியாமையையே குறிக்கிறது. அந்த ஒளிப்பதிவை செவிமடுத்த எனக்கு எழுந்த முதல் கேள்வி, பெருந்தன்மையின் பேரில் பரிசு வழங்க இவர் யார்? “எழுத்தாளர்  சங்க தலைவரான பிறகு இதை  நான் கட்டாயம் ஆக்கியிருக்கிறேன். 8 பேர் பரிசு பெறுகிறவர்கள் என்றால், அதில் 5 பெண்களுக்குகூட பரிசு வழங்கப்பட்டுள்ளது.” இப்படிக்கூறும் இவர் எதைக்காப்பாற்றுவதற்காக இந்த முடிவை நிர்ணயித்திருக்கிறார்? பெண்களின் எழுத்துக்கு இந்த தலைவர் கொடுக்கும்அங்கீகாரம் என்ன? அவர் சொன்ன எழுதப்படாத சட்டம்  எந்த நியாயத்துக்கு வித்திட்டிருக்கிறது ? ஆணாதிக்க திமிரில் ஒரு தலைவர் பேசிக்கொண்டிருக்கையில், இந்த நாட்டில் மூத்த பெண் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பெண்கள் தங்கள் படைப்புகள் அடங்கிய புத்தகம் வெளியீடு காணவிருக்கிறது என்பதற்காகவும், தங்களுக்காக வந்திருக்கும் எழுத்தாளர் சங்கத்தலைவரிடம் சமரசமாகப் போய்விடலாம் என்பதற்காகவும் அமைதிக்காத்திருக்கலாம்?ஆனால் இதை ஜீரணித்துப்போவதற்கு எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. அதனாலேயே அந்த காணொலிப்பதிவை நான் பதிவேற்றம் செய்தேன்.

அதன் பிறகு பெண்களிடத்தில் எதிர்ப்புகுரல்கள் மேலோங்கும், பெண்ணியம் பற்றியும் பெண்களின் எழுத்தைப்பற்றியும் ஒரு தெளிவில்லாத கருத்தை வைத்திருக்கும் ராஜேந்திரன் போன்றவருக்கு பெண் எழுத்தாளர்கள் தங்கள் அதிருத்தியை வெளிப்படுத்துவார்கள் என்று நினைத்திருந்தேன். குறிப்பாக தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உள்ள பெண்கள், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் பரிசு வாங்கிய பெண்கள், நாங்களும் பெண் எழுத்தாளர்தான் என்றுகூறிப்கொள்ளும்பெண்கள் என்று  கண்டன எழுத்தை எழுதப்போகும் பெண்களின் எழுத்தில், தமிழ் எழுத்தாளர் சங்கப் தலைவர் தானே முன்வந்து, மன்னிப்பு கேட்டு அந்த கருத்தை மீட்டுக்கொள்வார் என்று நம்பிக்கை வைத்தேன்.   ஆனால் எனக்கு கிடைத்தது பெறும் ஏமாற்றமே….

எந்த பெண்களும் எதிர்வினையை முன் வைக்கவில்லை. நவீன், பாலமுருகன், தயாஜி, கங்காதுரை கணேசன், பாண்டியன் போன்றவர்கள் ராஜேந்திரனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, அதை மீட்டுக்கொள்ளவும் குரல் எழுப்பினர். ஆண்கள் எங்களுக்காக வாதாடும்போது பெண்களே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று முனைவர் முல்லை ராமையா, வாணி ஜெயம், பாவை, மங்கள கௌரி, கே.எஸ்.செண்பகவள்ளி, பாக்கியம், மகேஸ்வரி போன்றவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவரின் கருத்தோடு உடன் படுகிறார்களா என்பதை விளக்கம் கொடுத்தால் தெளிவாக இருக்கும். இல்லையேல்,  இவர்களிடம் மிகப்பெரிய மௌனம் மட்டுமே எஞ்சியிருக்குமாயின்,  சுரணையில்லாமல் இருப்பதும் ஒரு தந்திரமே என்று பாலமுருகன் சொல்வதைப்போல நடந்துக்கொள்வீர்களா என்று முகநூலின் இடுகையில் போட்டிருந்தேன். அதற்கும் சில பெண்கள் என்னிடம் கண்டனம் தெரிவித்தனர்.

1.    நான்  எழுத்தாளர் சங்கத்தில் இல்லை. ஏன் என் பெயரை நீங்கள் உபயோகப்படுத்தினீர்கள்?
2.    நான் எழுத்தாளர் சங்கத்தில் இருக்கிறேன். ஆனால் நல்ல கனிவு தரும் வார்த்தை இருக்கும் போது நீங்கள் ஏன் கடுஞ்சொற்களை உபயோகப்படுத்துகிறீர்கள். மல்லாக்க படுத்து எச்சில் துப்பிக்கொள்ளாதீர்கள். 15 வருட நட்பு முறிந்துபோக உங்களுக்கு ஆசையா?
3.    அந்த காணோலியையும், பதிவையும்மீட்டுக்கொள்ள வேண்டும். இல்லையேல் எங்கு பார்த்துக்கொள்ளனுமோ அங்கே உன்னை பார்த்துக்கொள்கிறேன்.
4.    நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்சியில் எங்கள் அனுமதி இல்லாமல், நீங்கள் எப்படி காணொலி பதிவு செய்யலாம். உங்கள்வீட்டில் அத்துமீறி நுழைந்தால் நீங்கள்சும்மா இருப்பீர்களா?

என்னை அழைத்தவர்கள் அனைவரும் பெண்கள். மிரட்டியவர்கள் பெண்கள். அவர்களுக்காகவும் அவர்கள் எழுத்துக்காகவும் பிச்சை போடும் மடமை கொண்ட மனிதனின் சுயரூபத்தை வெட்ட வெளிச்சமாக்கியதற்காக என்னை கடிந்துக்கொண்டார்கள். இருந்துவிட்டு போகட்டும் ஆனால் மருந்துக்கும் ராஜேந்திரனின் இந்த விமர்சனத்தை அவர்கள் கண்டிக்காமல் ஆதரிக்கும் வண்ணம் மௌனமாக இருப்பது எந்த தார்மீகத்தைக் கொடுக்கிறது என்றுவிளங்கவில்லை. கதையில் கவிதையில், கட்டுரையில் தனது பெண்ணிய சிந்தனையை வெளிப்படுத்தும் பெண்கள் உண்மையில் என்னவாக வாழ்கிறார்கள் என்று எனக்குவிளங்கவில்லை? என்னை சொல்லவில்லை, நான் அந்த நிகழ்சிக்கு போகவில்லை, எனக்கு அந்த காணொலி காணக்கிடைக்கவில்லை, முகநூலில் இடுகையை பார்க்கவில்லை, நான் எழுத்தாளர் சங்கத்தில் இல்லை, நான் எழுத்தாளர் சங்கத்தில் எந்த ஒரு பரிசையும் இதுவரை பெறவில்லை; நான் குரல் எழுப்பினால் சரியாக வராது  என்பதெல்லாம் யாருக்கும் வலிக்காமல் தப்பித்துக்கொள்ள போடும்குள்ளநரி வேஷம்.

ஒருவகையில் இந்த மௌனம்,  மலேசிய பெண் எழுத்தாளர் என்று சொல்லக்கூடிய பெண்களின் மனபோக்கை  அறிந்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவர், பேசுவதற்கெல்லாம் தலையாட்டி ஆதரிப்பது, அல்லது வேறுவழியில்லாமல் இருக்கிறேன் என்று சொல்வது, என்னால் என்ன செய்யமுடியும் என்று எதிர்கேள்வி கேட்பது இப்படிதான் இவர்கள் தப்பிக்கமுயற்சி செய்கிறார்கள். என்னிடம் கைகோர்த்த சகதோழிகளான மணிமொழி, பூங்குழலி, ஸ்ரீவிஜி, புகனேஸ்வரி, தினேசுவரி போன்றவர்கள் தங்கள் எழுத்தின் மூலம் எழுத்தாளர் சங்க ராஜேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நாட்டில் பெண்கள் எழுத்தை இந்தளவுக்கு கேவலப்படுத்திய எழுத்தாளர் சங்க நிகழ்வை பரிசு பெரும் சிலர் மட்டுமே நிராகரித்துள்ளனர். தன்மானம் அற்ற எழுத்தாளர்கள், சுயகௌரவம் இல்லாத எழுத்தாளர்கள் யார்?யார்? என்ற பதிவு என்னிடம் இல்லை. அது வரும் சனிக்கிழமையும் எழுத்தாளர் சங்க பொன்விழாவிலும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

3 comments for “சுயகௌரவம் இழக்கும் எழுத்தாளர்கள்…

  1. yogeswaran a/l siva kumaran
    July 20, 2013 at 11:26 am

    great response fren………

  2. yogeswaran a/l siva kumaran
    July 20, 2013 at 11:30 am

    முகத்தில் எச்சில் துப்பும்போது …….. துடைத்து விட்டு…… பரவாயில்லை என சொல்லும் ஜென்மங்கள் இருக்கும் வரையில்…………. இப்படிதான்……………. கருத்தையும்……….. உண்மையைக் காக்க எதிர்ப்பையும் தெரிவிக்க தைரியம் வேண்டும்……….. உ ங்கள் குரல் இந்த செவிடர்களுக்கு……… விளங்காது……… வாழ்க உங்கள் பணி தோழியே…………..

  3. KODISVARAN
    July 24, 2013 at 7:44 pm

    ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எழுதுகின்ற பெரும் பாலான பெண்களுக்கு (ஆண்கள் உட்பட) பத்திரிக்கை ஆசிரியர்களின் உதவி தேவைப் படுகிறது. பலரின் எழுத்துக்கள் ஆசிரியரின் உதவியின்றி வெளி வர இயலாது. சரியான வழி காட்டல் இல்லாமல், எந்தத் தரமும் இல்லாமல், எழுத்துப் பிழைகளோடு எழுதப்படும் படைப்புக்கள் ஏராளம் பத்திரிக்கைத் துறையில் உள்ள உங்களுக்கே இது தெரியும். ஏதோ ஒரு ஆர்வக் கோளாரினால் படைக்கப்படும் படைப்புக்களே அதிகம். இவர்கள் ஆசிரியர்களைச் சார்ந்தே இருப்பதினால் இவர்கள் வாயைத் திறக்க முடிவதில்லை. அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவும் முயற்சி எடுப்பதில்லை. இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுவதுமில்லை. அப்புறம் எங்கே சுய கொளரவம்? அதற்கு வேலையே இல்லை!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...