தமிழ் உதயா கவிதைகள்


கொலைக்காடு ஒன்றுquietmoment

வெவ்வேறு மர்மங்களால் ஆனது

முட்களால் ,

வாள்களால்,

துளைக்கும் ரவைகளால்,

விடமேறிய சொற்களாலும் கூட.

அவரவர் மனங்களின்

எடைகளைப் பொறுத்தது

சாவுக்கு சாவு மாறுபட்ட

வெகு நீண்ட நாளொன்றில்

நான் வரைபடத்தோடு

கொலைக்காட்டுக்குச் சென்றேன்

எட்ட நின்று அமிழ்தம்

கவிழ்ந்த விடத்தில் கை நனைத்தேன்

பருத்திச்சுளை தின்று

பாற்பற்கள் கொழுத்திருந்தன

ஆயிரம் நீர்ச்சுனைகள்

பருகிய கணங்களில்

பாலைச்சுரந்தன

வெவ்வேறு காலம் அக்காட்டை

கொலைத்தபடி எரிந்தது

கொலைக்காடு எப்போதும்

காடுகளுக்கு அப்பாற்பட்டது

வெவ்வேறு மர்ம மரங்களால் ஆனது

 

00

 

கொஞ்சம் கொஞ்சமாய்

கரைந்து கொண்டிருக்கும்

எஞ்சிய பனிப்பொதி

பலதிசைககளின் பரிமாணம் என்கிறேன்

 

குழலுக்குள் சஞ்சரித்து

விம்மும் குரலலைகளை

குமிழிகளில் அவ்வப்போது

உடைக்கிறது என்கிறாய்

 

ஒருவருக்கு ஒருவர்

முகம் திறக்கும் தருணம்

எப்போதும் ஓய்வதில்லை

இன்னும் ஒரு நாளுக்கு அல்லது

இன்னும் ஒரு கணத்திற்கு

 

அப்புறம் எப்படி

கிளைகளில் மாறி மாறி

தன்னை வரைகிறது பறவை

 

நெருப்பை எடையிட்டாலென்ன

நீரை அளந்தாலென்ன

பூத்தலும் உதிர்தலும்

மரத்தின் முகவரி

பறவை எச்சத்தில்

பரம்பியிருக்கும் மரத்திற்கு

முகவரி எதற்கு

முகம் மட்டும் போதும் தானே

 

00

 

வீசியெறிந்த

கனவுகளின் தாள்களை

ஒரு கறுத்த நிசியில்

மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன்

 

காலோடு ஒட்டிவந்த

ஒரு சிறங்கை மண்ணில்

முளைத்த அப்பா

பூத்துக் குலுங்கிய அம்மா

விளைந்த நான்

 

ஒரு தூற்றலில் திடுக்கிட்ட அந்திச்சுடரென

வான் தெருவுக்கு குறுக்காக

ஏழுவால் குருவியை

எங்ஙனம் பொறிப்பேன்

 

இப்போது தான்

நீட்டினாளா தாதி

ஞாபகப் பொட்டலத்தை

பிரித்துப் பார்க்கிறது ஊனமனம்

 

என் சிறு கிளையில் இருந்து

என்னுள் திறக்கும் இந்த விநாடி

வனத்தில் திரிந்தலைகிறது

 

விரல் ரேகைகளில்

துக்கத்தின் வரைகோடுகளோடு

குறித்து வைத்திருந்த

என் மகனின் நாட்குறிப்பை

அங்கு கண்டெடுத்தேன்

 

உயிர் பிரிய சிறைப்பட்டு

ஊருக்கு வெளியே

உயிரோடு மறுபடியும்

நான் இறந்து நெடு நாளாயிற்று

 

00

 

ஆதி வனத்தில் நுரைத்த

சுனையை அறிவேன்

நானும் காட்டுவாசி

 

ஆவாரம்பூ

இசைக்கிறது

அனாந்தரப் பாடலை

 

உச்சரிக்கும் கண்களில்

நீ சிறகுகளை பொருத்து

 

சூரியன் அறிவதில்லை

எந்தப் பறவையின்

இறக்கைகளின் நிழலையும்

 

00

 

கனமற்ற தினமொன்றில்

சிவிறும் பனிச்சீவலில்

மிதக்கும் கூளங்களாய்

காகித மனம்

புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தது

 

எட்டிப் பார்த்தபடி

அடிக்கடி வந்தமர்ந்த

இரண்டு மைனாக்கள்

தம்முள் ஒளித்து

வைத்துக் கொண்டிருந்தன என்னை

 

நேற்றைய காலையை விடவு‌ம்

இன்றைய காலை

உச்சரிக்காத மொழியில்

மூங்கில் நீளமாய் இருந்தது

 

பழுப்பேறிய பக்கங்களில்

ஒரு மனித வாசத்தை

நுகர்ந்து கொண்டிருந்தேன்

 

பூத்தலும் உதிர்தலும்

காய்த்தலும் கனிதலும்

தாங்கும் காம்புகள்

அறியாததா என்ன?

 

தமிழ் உதயா

லண்டன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *