கழிவறைக் குறிப்புகள்

பச்சைபாலன் 01தலைப்பைப் பார்த்ததும் மூக்கைப் பிடித்துக்கொள்ளாதீர்கள். அருவருத்து முகஞ்சுழிக்கும்படி அப்படியொன்றும் இக்கட்டுரையில் எழுதப்போவதில்லை. எல்லாம் நம் இயற்கை உபாதையைப் பற்றித்தான் கொஞ்சம் சிந்திக்கப்போகிறேன். மனிதக் கழிவுகளைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள அரசியலைக் கொஞ்சம் அலச எண்ணுகிறேன். நீங்கள் வேண்டுமானால் செண்டு அல்லது வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு என்னோடு வாருங்கள். கழிவறைகளை நோக்கித் துணிவோடு பயணப்படுவோம்.

என் பால்யத்தின் நினைவுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அவற்றில் கழிவறை பற்றிய குறிப்புகள் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தோட்டத்தில் வாழ்ந்த பதினெட்டு ஆண்டுகளிலும் கழிவறை என்பது எனக்குக் கெட்ட சொப்பனமாக இருந்திருக்கிறது. ஐந்நூறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் வாழ்ந்த தோட்டத்தில் போதுமான கழிவறைகள் இருக்கவில்லை. எல்லாம் மிகப் பழமையான கழிவறைகள். கொட்டகை போன்ற கழிவறைக்குள் சுவரால் ஆன தடுப்புகள் வரிசையாக அமரும்படி அமைந்திருக்கும். அவரவர் தம் வேலை முடித்துவிட்டுத் தண்ணீர் ஊற்றித் தம் பகுதியைத் தூய்மை செய்துவிட்டுப் போக வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அடுத்து வந்து அமர்பவர் முகஞ் சுழிப்பார் அல்லது கண்டுங் காணாமல் அமர்ந்துவிட்டுப் போவார். சுத்தத்தைக் கொண்டாடும் சூழலுக்காக இதயம் தவிக்கும் எனக்கு இந்த ஏற்பாடெல்லாம் ஒத்துவரவில்லை. என்னைப் போன்ற பலருக்கு அருகிலிருக்கும் ரப்பர், செம்பனைக் காடுகளே அவரசத் தேவைகளுக்கு அபயக்கரம் நீட்டின.

தோட்டக் கழிவறைகளைக் குத்தகை அடிப்படையில் சுத்தம் செய்வோர் இலாபத்திலேயே குறியாக இருந்து சுகாதார நிலையைக் கவனிப்பதில் கோட்டைவிடும் அவலநிலை நிலவியபோது, அது குறித்து வானம்பாடி இதழுக்கு,‘மலக்கூடங்களின் நிலை’ என்ற தலைப்பில் ஒரு மொட்டைக் கடிதம் எழுதினேன். தோட்டப் பிரச்சினையை நாட்டு மக்களுக்குத் தெரிவித்ததால் பலருக்கும் கோபம். ஆயினும், அப்பிரச்சினைக்கு உடனே தீர்வு பிறந்தது. இது குறித்து, முன்னமே ஒரு கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்.

ஒரு முறை தோட்டத்தில் கழிவறையைச் சுற்றிப் பெருங்கூட்டம் கூடிவிட்டது. நானும் என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலில் அங்கு ஓடினேன். கொஞ்ச நேரத்தில் போலீஸ் வாகனமும் வந்துவிட்டது. மணமாகாத இளம்பெண் ஒருவர் தான் ஈன்ற குழந்தையைக் கழிவறையில் வீசிவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். கழிவறைக்கு அருகிலேயே இருந்த வீட்டிலுள்ள பெண்தான் அவர்தான் எனத் தெரிந்துவிட்டது. போலீசார் குழந்தையைப் மீட்டாலும் அது இறந்துபோனது. அன்றிலிருந்து தோட்டத்துக் கழிவறைகளை மரணத்தோடு தொடர்புபடுத்தி எண்ணிப்பார்க்கும் நிலை எனக்கு ஏற்பட்டது.

தோட்டத்தை விட்டு நகருக்கு இடம்பெயர்ந்து வந்தபோது கழிவறைக் கண்டத்திலிருந்து நான் மீண்டேன். ஆயினும், முதன் முறையாக நவீன கழிவறையைப் பயன்படுத்தத் தெரியாமல் நான் பட்ட அவஸ்தைகள் தனிக்கதை. அமரும் வசதிகொண்ட கழிவறையின் பீங்கான் மீது ஏறிநின்று தவித்ததும் நினைவுக்கு வருகிறது. அண்மையில் இணையத்தில் நான் பார்த்த படங்கள் திகிலூட்டின. கழிவறையின் பீங்கான் மீது ஏறி நின்றதாலோ அதன் மீது உட்கார்ந்து இருப்பவரின் எடை காரணமாகவோ பீங்கானின் ஏற்பட்ட விரிசல் காரணமாகவோ அது பல துண்டுகளாக உடைந்திருந்தது. இன்னொரு படத்தில் உடைந்த பீங்கானால் ஒருவருக்கு நடந்த விபத்தைக் காட்டும் கொடூரக் காட்சியைக் கண்டேன். நான் கழிவறைக் கண்டத்திலிருந்து மீண்ட உணர்வைப் பெற்றேன்.

உலகம் முழுதும் மனிதனின் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை 2.5 பில்லியன் என இணையத்தில் கணக்குச் சொல்கிறார்கள். ‘தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மார்க் கடைகள் பத்தடிக்கு ஒன்று எனத் திறக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கிலோமீட்டர் இடைவெளியில்கூட பொதுக் கழிவறைகள் இருப்பதில்லை. சென்னையில் மக்கள் நெருக்கடியான பகுதிகளில் அவசரத் தேவைகளுக்கு மக்கள் எங்கே போவார்கள்? ஆண்களுக்குக் கவலையில்லை. பொது இடம் என்றும் பாராமல் சுவரில் படம் வரைவார்கள். ஆனால், பெண்கள் நிலையோ பரிதாபகரமானது’ என ஒரு படைப்பாளர் இணையத்தில் மனம் நொந்து எழுதியிருக்கிறார். இந்தியாவில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைவிட திறந்தவெளி கழிவறைதான் அதிகமானோரை ஈர்க்கும் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்த வகையில் மலேசியர்கள் கொடுத்து வைத்தவர்கள். தோட்டப்புறங்கள், கிராமப்புறங்களைத் தவிர்த்துப்பெரும்பாலும் நகர்ப்புறங்களில் இருப்போர் கழிவறைக்காக அல்லலுறுவதில்லை என்றே கூறலாம். நெடுஞ்சாலையில் பயணம் போவோரின் வசதிக்காகத் தூய்மையான கழிவறைகளைக் கட்டிவைத்திருக்கிறார்கள். கழிவறையின் தூய்மையைப் பேண வேண்டியதின் விழிப்புணர்ச்சி பெரும்பான்மை மலேசியருக்கு இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

2001 முதல் நவம்பர் 19, உலகக் கழிவறை தினமாக (world toilet day) அனுசரிக்கப்படுவது நம்மில் பலருக்குத் தெரியாது. உலகம் முழுதும் இருக்கும் 2.5 பில்லியன் மக்கள் எதிர்நோக்கும் கழிவறைப் பிரச்சினை மீது உலகின் கவனத்தை ஈர்க்கவும் தூய்மையான கழிவறையின் அவசியம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதே நோக்கத்திற்காக உலகக் கழிவறை அமைப்பு (world toilet organization) தோற்றம் கண்டது. ஆண்டுதோறும் உலகக் கழிவறை உச்சநிலை மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்தோனேசியாவில் மாநாடு நடைபெறுகிறது. சிங்கப்பூரில் உலகக் கழிவறைக் கல்லூரி (world toilet college) 2005 முதல் இயங்கி வருகிறது. கழிவறை வடிவமைப்பு, அதனை நிர்வகிப்பது, தூய்மையைப் பேணுதல் தொடர்பான பாடங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ‘Sanishop’ என்ற சமூக நிறுவனம் உலக அறநிறுவனங்களின் பண உதவியோடு மலிவான கழிவறையை உருவாக்கி விற்பனை செய்ய ஏழைகளுக்குப் பயிற்சி வழங்கி வருகிறது.

கழிவறைக்காக அதிக இழப்பை எதிர்நோக்கியவர் யார் தெரியுமா? வேறு யாராக இருக்க முடியும்? மரங்கள்தாம்! ஆண்டுதோறும் கழிவறையில் பயன்படுத்தும் காகிதங்களுக்காக 93 மில்லியன் மரங்கள் வெட்டப்படுகிறதாம்! கணக்குக் கொஞ்சம் அநியாயமாகத் தெரியலாம். அதில் உள்ள உண்மை திகைப்பைத் தருகிறது.

பள்ளியில் உள்ள கழிவறைகளின் தூய்மையைப் பேணுவது பெரும் சிக்கலாகவே இருக்கிறது. மாணவர்கள் கையில் உள்ள எதையாவது கழிவறைக் குழியில் கடாசி விடுவதால் மற்றவர்களுக்கு அதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால்தான் சில பள்ளிகளில் கட்டணக் கழிவறைகளை ஏற்படுத்தி அங்குத் தூய்மையைப் பேண வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறார்கள். கழிவறைக்குக் கட்டணமா எனப் பெற்றோர்களின் எதிர்ப்புக்குரல்கள் கேட்கின்றன.

கழிவறைகள் உடலின் கழிவுகளை மட்டுமல்ல. மனத்தின் கழிவுகளையும் இறக்கி வைக்கும் இடமாக இருக்கிறது. காதல், கோபம், குரோதம், பழிவாங்கல் என மனத்தில் பொங்கும் உணர்வுகளைக் கழிவறைச் சுவர்களில் பலர் பதிவுசெய்கிறார்கள். பெரும்பாலும் கொச்சை வார்த்தைகளுக்கே அங்கே முதல் மரியாதை! பொதுக் கழிவறைகளில் கைப்பேசி எண்களைக் கிறுக்கி விட்டுப்போகும் போக்கைக் காண முடிகிறது.

‘தோட்டியின் மகன்’ நாவலைப் படித்திருக்கிறீர்களா? தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளத்தில் எழுதி சுந்தர ராமசாமி தமிழில் இந்நாவலை மொழிபெயர்த்துள்ளார். மனிதக் கழிவை அள்ளும் வேலையைச் செய்யும் தோட்டிகளின் கொடுமையான வாழ்க்கையை நேர்த்தியாகத் தகழி இதனில் பதிவுசெய்துள்ளார். இசக்கிமுத்துக்குப் பிறகு, மகன் சுடலைமுத்து தோட்டி வேலையை மேற்கொள்கிறான். ஆனால், தனக்குப் பிறகு தன் மகன் அந்த வேலைக்குப் போகாமல் சமூகத்தில் மதிப்புள்ளவனாக வாழவேண்டும் என்பதற்காகச் சுடலைமுத்து படாதபாடு படுகிறான். அவனின் எல்லா முயற்சிகளும் தோல்வியடைகின்றன. சமூகத்தில் மேல்தட்டை நோக்கி நகர முயலும் விளிம்பு மனிதர்கள் மீதான அடக்குமுறைகளை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மனத்தை உலுக்கும் வகையில் தகழி படம் பிடித்துள்ளார். நாவல் முழுதும் மனிதக் கழிவுகள் ஊடாக நாம் பயணிக்க வேண்டும்.

மனிதக் கழிவையே மையமாகக் கொண்டு பெருமாள் முருகன் எழுதிய ‘பீக்கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. மற்றவர்கள் எழுதத் தயங்குவதைக் கருப்பொருளாகக் கொண்டு எல்லாக் கதைகளும் எழுதித் தொகுத்திருக்கிறார். தலைப்பைக் கண்டு முகஞ்சுழிப்பவர்கள் இந்தக் கதைகளைப் படித்தால் இந்தக் கழிவறைச் சிக்கல்களால் மனிதர்கள் படும் வேதனையின் தாக்கத்தை உணர்வார்கள்.

விற்பனை மையங்கள், பேரங்காடிகள் அமைந்துள்ள இடங்களில் உள்ள பொதுக் கழிவறைக்குப் போகும் பொழுது, அதன் முன் கட்டணம் வசூலித்தவாறு அமர்ந்திருப்பவர்களைக் கவனித்திருக்கிறீர்களா? இயற்கை உபாதையோடு வருபவர்களின் இன்னல் தீர்க்கும் நிவாரணியாய் கர்ம சிரத்தையோடு கடமையில் இருப்பவர்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். கழிவறை வாயிலேயே காவலுக்கு இருக்கும் வாழ்க்கை அமைந்தவர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும்? இப்படி எண்ணிப் பார்த்தேன் ஒரு கவிதையில்:

கட்டணக் கழிவறை முன்னே

நீங்களும் பார்த்திருப்பீர்கள்
பரபரப்புமிக்க பெருநகரத்தின்
கட்டடம் ஒன்றின் நுழைவாயிலில் இருக்கும்
அந்தக் கட்டணக் கழிவறையை

ஆண்களுக்கும் பெண்களுக்கும்
தனித்தனியான அறைகளுக்கு முன்னே
மேசையில் சில்லறை அடுக்கி
மெல்லிழைத் தாள்களை வைத்து
வருவோரின் முகங்களை எதிர்கொள்ளாமல்
தலைகுனிந்தபடி இருக்கும்
கழிவறைக் கட்டணம் வசூலிப்பவனை

நாசி நுழையும் சிறு நாற்றமும் தாளாமல்
முகஞ்சுழித்து
கொஞ்சம் அவசரமாக சில்லறை வீசி
உள்ளே போய் வந்து
இரக்கத்தோடு அவன் முகம் ஆராய்ந்தேன்

நீங்களும் கவனித்திருப்பீர்கள்
பக்கத்தில் சிறு உணவுப்பொட்டலம் இருக்க
வானொலியில் கசியும்
ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு
சிறு புன்னகையோடு
நாளிதழைப் பார்த்தவாறு
மேசையில் விழும் சில்லறைமீது
கவனமாயிருப்பவனை

நாட்டில் எரியும் பிரச்சினைகள் எத்தனையோ இருக்கும்பொழுது இந்தக் கழிவறை மீது உங்கள் கவனம் போனதேன்? என நீங்கள் வினவலாம். இதுவும் எரியும் பிரச்சினைதான். கொஞ்சம் கவனிக்காமல் விட்டு விட்டால் வீடு மட்டுமல்ல, நாடே நாறிப்போகும் அபாயமிருக்கிறது. எல்லாம் ‘இண்டா வாட்டர்’ கவனிப்பார்கள் என நாம் மூக்கைப் பிடித்துக்கொண்டு கண்டும் காணாமல் இருந்துவிட முடியுமா?

2 கருத்துகள் for “கழிவறைக் குறிப்புகள்

 1. ஸ்ரீவிஜி
  June 5, 2013 at 5:31 pm

  கட்டுரை நகைச்சுவையாக நகர்ந்து, உள்ளுணர்வைச் சொல்லி உளவிலை பேசியிருப்பது அருமை. ஆரம்பத்தில் வாய்விட்டுச்சிரித்தேன். முடிக்கும்போது யோசித்தேன். அருமை சார்.
  அடுத்தமுறை, இன்று பத்திரிகையில் (ஸ்டார்) வந்துள்ள முதல் பக்கத் தலைப்புச்செய்தியை மையமாக வைத்து ஓர் கட்டுரையை வடிக்கவேண்டும். எழுத்துநடை சுவாரஸ்யம். தொடருங்கள். வாழ்த்துகள்.

 2. yogi
  June 6, 2013 at 9:12 am

  இது ஒரு நல்ல பதிவு. எனக்கும் இது போன்ற அனுபவம் நேர்ந்திருக்கிறது. 7 வயதில் 4 வீட்டுக்கு ஒரு கழிப்பறையிலும், (அது கழிப்பறை அல்ல. அல்லூர்.) 8 முதல் 10 வயது வரை செம்பனை காடுகளிலும். மே மாத உயிர்மை புத்தகத்திலும் பேராசை என்ற ஒரு கதையை படித்தேன். மலஜல பற்றிய கதைதான். இந்த கட்டுரையோடும் அந்த கதையோடும் எனது அனுபவங்கள் ஒத்து போகிறன. கிராமம் மற்றும் தோட்டப்புறங்களில் வாழ்ந்தவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு கழிப்பறை கதை இருக்கும்தான் போலிருக்கிறது….

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...