அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 4

cc10b930-d228-4cc7-a788-ffe64b563cf8_S_secvpf.gifகடந்த தொடரில் பெண்ணும் அவநம்பிக்கையும் எப்படி ஒன்றோடு ஒன்று செர்த்து பிணைக்கப்படிருக்கின்றன என்பதை பற்றி பார்த்தோம். இத்தொடரும் பெண்ணைப் பற்றியதுதான். ஆனால் பெண்ணுக்கு மட்டுமே ஏற்படும் இயற்கை உபாதை எப்படி சில நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது என்பதை பார்ப்போம்.
உலகை ஒரு பெண் தாய்மை அடைய வேண்டுமாயின் அவளுக்கு மாதவிடாய் கண்டிப்பாக எற்பட்டிருக்க வேண்டும். தாய்மையுடைய முதல் தகுதியே அவளுக்கு மாதாமாதம் கண்டிப்பாக விந்து புணரா கருமுட்டை உடைந்து உதிரமாக வெளியேற வேண்டும். இதுதான் அவள் ஆரோக்கியமான பெண் என்பதற்கு அடையாளம். அப்படியிருக்க, மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தீண்ட தகாதவளாகவும் கறை கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். அதுவும் மாதவிடாய் குறித்து பொது இடத்தில் கண்டிப்பாகப் பேசவே கூடாது. அதுவும் மாற்று பெயரிலில்தான் அதை குறியிட வேண்டும். ஏன், நானும் இந்த சந்தர்ப்பங்களுக்குள் உந்தபட்டிருக்கிறேன். இன்னொரு விஷயம். ஆண்கள் இருக்கும் போது இது பற்றி பேசுதல் கூடவே கூடாது. இப்படி பல கட்டுப்பாடுகள். இது எல்லா சமுதாயத்திலும் நாட்டிலும் கலாச்சாரத்திலும் உண்டு என்பதுதான் நிஜம்.
எனவே பெண் சம்பந்த பட்ட நம்பிக்கைகள் குறித்து தேடலில் ஈடுப்பட்ட போது மாத விடாய் பற்றிய பல நம்பிக்கைகள் அகப்பட்டன. அவற்றை இதற்கு முந்தைய தொடரில் மேலோட்டமாக சொல்லியிருந்தேன். இந்த தொடரில் கொஞ்சம் ஆழமாக அலசலாம் என்பதுதான் என் நோக்கம். ஏன் மாதவிடாய் என்பது அசூசையாக கருதப்படுகிறது? அது உதிரம் என்பதாலா? ஆண்கள் அதை அனுபவிக்காததாலா? பேய் என்னும் பிம்பம் உதிரத்தை உறியும் என்று நம்பிக்கை இருப்பதாலா? இல்லை அதன் உருவாக்கத்தின் கூறு புரியாததாலா?
மாதவிடாய் என்பது என்பது பெரும்பாலான பெண்களுக்கு ஒரு கஷ்ட காலம் என்னையும் சேர்த்து. இந்நாள்  வலிகள் நிறைந்தது. மனோரீதியாக குண மாற்றங்களை ஏற்படுத்த கூடியது. எனவே இந்த நேரத்தில்தான் ஒரு பெண்ணுக்கு அரவணைப்பும் ஆறுதலும் அதிகம் வேண்டும். தீட்டு என்று ஒதுக்க கூடாது. சரி, இப்போது முதல் நம்பிக்கையை பார்ப்போம்.
1.   மாதவிடாய் காலத்தில் வெளியிலோ அல்லது இரவு நேரத்திலோ வெளியே செல்ல நேரிட்டால் கொண்டையிலோ அல்லது சடையிலோ இரும்பு ஆணி ஒன்றை வைத்து கொள்ள வேண்டும்.
என் அம்மா அடிக்கடி சொல்லுவார். மாதவிடாய் காலத்தில் இரவில் எங்கேயும் வெளியே செல்ல கூடாது. பேய்களும் ஆவிகளும் பெண்ணை துரத்துமாம். இதை விரட்ட கொண்டையிலோ அல்லது பையிலோ இரும்பு ஆணியை வைத்து கொள்ள வேண்டும் என்பதை பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். நானும் ரொம்ப நாள் இதை பின்பற்றி இருக்கிறேன். ஆனால் இதற்கான காரணம் ஆணியில் அல்ல இரும்பில் என்பதுதான் என்பதுதான்.
இங்கே நேரம் என்பது முக்கியமில்லை. ஆனால் இரும்பு ரொம்பவும் முக்கியம். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதிர போக்கு அதிகம் இருக்கும். இரத்தத்தின் அடிப்படை பொருள் ஹீம் (Haem). இது இரும்பு சக்தியை அடிப்படியாக கொண்டுதான் உருவாகும். எனவேதான் உங்கள் இரத்தத்தை நீங்களே ருசித்து பாருங்கள். அது இரும்பு போன்ற ஒரு சுவையை தரும். ஆதலால் குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் உட்கொள்ளும் உணவில் இரும்பு சக்தி கொண்ட பிட்ரூட், கீரைகள் என பலவற்றை உண்ண வேண்டும். இதனால் அளவுக்கு அதிகமாக வெளியேறும் குருதி இவ்வாறாக உட்கொள்ளும் உணவினால் ஈடுச்செய்யப்படும். ஆனால் இது இரும்பு துண்டு ஆணி என பல்வேறாக பொருள் சொல்லப்பட்டு ஆவிகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டு ஒரு புதிய நம்பிக்கையாக உருவாக்கம் பெற்று விட்டது.
ஒரு உயிரில்லாத ஆணியா அவளை பேய் பிசாசிடமிருந்து காப்பாற்றிவிட போகிறது? நானும்தான் மாதவிடாய் காலத்தில் காட்டிலும் மேட்டிலும் மலையுச்சியிலும் இரவு நேரங்களில் முகாமிட்டு தங்கியிருக்கிறேன். இங்கே இரும்பு சத்துள்ள உணவுதான் முக்கியமே தவிர இரும்பு ஆணியல்ல.
2.   மாதவிடாய் காலத்தில் பூஜை அறையில் புழங்க கூடாது. (சாமி கும்பிட கூடாது)
அடுத்து மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடவுளுக்கு தூரமானவள். எனவே அவள் சாமி கும்பிட கூடாது, விளக்கு ஏற்ற கூடாது, தெய்வ சம்பந்தப்பட்ட எங்கும் செல்ல கூடாது என பல நம்பிக்கைகள். இது மிகவும் சர்ச்சையான விஷயம். (எல்லா சமயங்களுக்கும் பொதுவான கருத்துதான் இது. எந்த சமயத்தையும் குறிப்பிட்டு சொல்ல கிடையாது). இங்கே என் கருத்து என்னவென்றால் மாதவிடாய் என்பது சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது, வியர்வை வெளியேறுவது போன்ற இயற்கையான ஓர் உடல் கழிவுதான். பின்பு ஏன் இறைவனுக்கும் பெண்ணுக்குமான தொடர்பு மாதாமாதம் துண்டிக்கப்படவேண்டும்? இதனால் எந்த விதத்தில் குற்றம் ஏற்பட போகிறது? உலகில் எதுவுமே புனிதம் அற்ற நிலையில் மாதவிடாய் எந்த விதத்தில் இல்லாத புனிதத்தை கெடுத்து விடும்? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தானே.
மலம் கழிப்பதை வியர்வை வருவதை சிறுநீர் கழிப்பதை நாம் யாருக்கும் அறிவிப்பதில்லை. பின்னர் இறைவனுடனான ஆத்மார்த்தமான உரையாடல் நிறுத்தப்படுவது மாதவிடாயினால்தான் என அதிகாரபூர்வமாக அறிவிப்பதுப்போல் அல்லவா இந்த நிகழ்வு இருக்கிறது. ஒரு பெண் தனக்கு மாதவிடாய் என்று சொன்னால்தான் பிறருக்கு தெரியும். சொல்லாவிட்டால் தெரியாது. அதற்கு எந்த முக்கியதுவமும் கிடையாது தாய்மைக்கான நேரம் வரும் வரை. எனவே தெய்வக்காரியங்களிலிருந்து பெண்களை முடக்கி வைப்பது முறையல்ல என்றே தான் தோன்றுகிறது.
இது அக்காலத்தின் பெண்ணடிமை கூறு. அதுவே காலப்போக்கில் கடைப்பிடிக்கப்பட்டு நம்பிக்கையாக உருவெடுத்திருக்கிறது.
3.   மாதவிடாய் குருதியும் மாதவிடாய் கண்ட பெண்ணும் தீண்டதகாதவர்கள்.
இந்த நம்பிக்கையின் பின்புலனை நான் வேதாகமத்தில் ஆராய்ந்தேன். வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் லேவியராகமதில் 18-ஆம் அதிகாரத்தில் 19-ஆம் வசனத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது.
‘மாதவிடாயுள்ள பெண்ணோடு சேர்ந்து அவள் அசுத்தத்தை வெளிப்படுத்தலாகாது’
இந்த கூற்றுப்படி பார்த்தோமானால் மாதவிடாயின் போது பெண் ஆணால் தீண்டப்படகூடாது. உடலுறவு கூடாது. அப்போது வெளிப்படும் குருதி இருவருக்குமே அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆணானவன் பெண்ணை அந்நிலைக்கு கட்டாயப்படுத்தக்கூடாது என்றே சொல்லப்பட்டது. அதையும் மீறி உறவு கொண்டால் நோயும் கிருமிகளும் பரவ வாய்ப்புண்டு என்பதற்காகவும் சொல்லப்பட்டது. எல்லாராலும் பெண்ணானவள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. இதைப்பற்றி தொடர்ந்து ஆராயும் போதுதான் இது எல்லா மதங்களிலும் அக்காலத்தில் பின்பற்றப்பட்டது.  அதோடு மட்டுமின்றி அக்காலத்தில் பெரியவர்கள் மாதவிடாய் கொண்ட பெண் அதிகபடியான குருதி வெளியேற்றத்தால் வெகுவாக களைப்படைவாள் என உணர்ந்து அவளுக்கு கொஞ்சம் ஓய்வு தந்தார்களே தவிர இப்படி ஒரேயடியாக ஒதுக்க வேண்டும் என்பதற்காக இல்லை. ஆனால் இன்று என்ன நடக்கிறது? இதற்கு மாறாக அல்லவா நடக்கிறது. எனவே நாம் சரியான புரிதலை கொண்டுள்ளோமா என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியம்.
4.   மாதவிடாய் நேரத்தில் தலைக்கு குளிக்கக்கூடாது.
5.   மாதவிடாய் நேரத்தில் தண்ணீரில் நீந்தக்கூடாது.
இந்த இரு நம்பிக்கைகளும் தண்ணீரும் பெண்ணும் கொண்ட உறவு என சொல்லலாம். மாதவிடாய் காலத்தில் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அதிகம் அசதியாக இருக்கும். சிலருக்கு அதிகம் குளிராக இருக்கும். சில நேரங்களில் கால்களில் காலுரைகளை அணிந்து கொண்டு தான் நடமாட வேண்டி இருக்கும். உடலின் உஷ்ணம் பெரிதும் குறைந்து இருக்கும். ஆனாலும் மாதவிடாய் கண்ட பெண் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் பெண்ணின் பிறப்புறுப்பின் தூய்மை அதிகம் பாதுகாக்கப்படும். எனவே அவள் அதிகம் குளிப்பாள். பொதுவாகவே இரவில் தலையோடு குளித்தால் நுரையீரலில் நீர் கோர்த்து கொள்ளும் என்பதால் ஆணும் சரி பெண்ணும் சரி யாராயிருந்தாலும் குளிக்க கூடாது. அப்படியிருக்க உடல் அதிகபடியாக சோர்வான போது மட்டும் எப்படி குளிக்க முடியும்? இது தான் உண்மையான காரணம். (அனுபவ உண்மை: மாதவிடாயின் போது கடலிலோ அல்லது ஆற்றிலோ இறங்கினால், மாதவிடாய் நின்று விடுகிறது).
6.   மாதவிடாய் காலத்தில் பெண் பேய்களுக்கு விருப்பமானவள்.
இதை தொடர்ந்து மாத விடாய் காலத்தில் பெண் வித்தியாசமாக நடந்து கொள்வாள். பேய்கள் அவளோடு இருக்கும் என பலவாறாக நம்பப்படுகிறது. இது எதனால்? மீண்டும் நாம் மாதவிடாய் ஏற்ப்படுத்து மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டும். இதை தான் mirrorgirls.ik வலைபக்கத்தில் இவ்வாறாக கூறப்படுகிறது.
 
//உடலியல் சுழற்சி முறையால் மாதவிலக்கான பெண்ணின் உடலுக்குள் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகிறது. குருதியானது சிறிது சிறிதாக தொடர்ந்து வெளியேறும்போது அவள் பலவிதமான சக்திகளை இழக்கிறாள், இதனால் அவள் களைப்படைகிறாள். இந்த நேரங்களில் சிலருக்கு தலைவலி கூட கடுமையாக இருக்கும். இந்த மாற்றங்களால் அருவருப்புத் தன்மை தோன்றுகிறது. சில நேரங்களில் அடி வயிற்றில் பலமான வலியும் உண்டாகும். இந்த மாற்றங்களால் அழுகை, விரக்தி, கோபம், எரிச்சல், படபடப்பு,சோர்வு, ஒருவித மயக்கம் போன்றன உண்டாகும். இதன் காரணங்களால் அவள் தன் வேதணைகளை சினத்தில் காட்டலாம், சில நேரங்களில் சில பேரிடம் எரிச்சல் கொள்வாள் அல்லது எரிந்து விழுவாள்! எந்தப் பெண்ணானவளும் இவையனைத்தையும் உடனே வெளிக்காட்டமாட்டாள். தன் ஆழமான மனதிற்குள் புதைத்து விடுவாள்! சில நேரங்களில் மிகவும் முடியாமல் போகவே…. தன் எல்லாவிதமான வேதனைகளையும் சேர்த்து கோபத்தில் வெளிப்படுத்துவாள்//
 
இறுதியாக, நாம் யோசித்தோமானல், மாதவிடாய் என்பது ஓர் இயற்கை உபாதையே. அதை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்குவது சரியாகாது. யோசிப்போம் இது தகுமா தகாதா என்று. அவசியத்தை புரிந்து நடந்து கொள்வது தான் உச்சிதம். மாதவிடாய் பற்றிய தெளிவு எல்லாருக்கும் வேண்டும். இன்னும் ஒதுக்கு முறை கூடாது என்பதே என் கருத்து. மாதவிடாயின் போதும் பெண் தெம்போடு நடமாட இது ஒரு உத்வேகமாக இருக்கும். மாற்று கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.
 
பின் குறிப்பு: இக்கருத்து ஒரு சிலரோடு உரையாடியும் பின்வரும் அகப்பக்கத்திலிருந்தும் பெறப்பட்டது.

1 கருத்து for “அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 4

  1. August 14, 2015 at 3:43 pm

    ஒரு நாள் மட்டுமே உயிர்வாழ்ந்து இறந்த முட்டையை வெளியேற்றும் வழி/வலி ! இயற்கை உபாதை அல்ல ! இயற்கையின் பாதை ! அருமையான கட்டுரை !

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...