கந்தர்வனின் ‘பூவுக்கு கீழே’

ராஜம் ரஞ்சனிமுந்தைய நாள் பேருந்து பயணத்தின்போது கண்ணில் கண்ட பூச்செடியைத் தேடி விரைகின்றான். அச்செடியை வீட்டுக்கு எடுத்து வந்து நட்டு வைத்து அதன் ஒவ்வொரு நொடி நேர வளர்ச்சியையும் கண்டு பூரிக்கின்றான். இவனை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய் மனைவி, ‘அடுத்த விருந்தாளி வந்தாச்சாக்கும்?’ என கேலி பேசுகின்றாள். இவனது செய்கையைக் கண்டு வியப்பவர்களுக்குப் பின்வரும் குறிப்புகள் உதவி செய்யக்கூடும்.

1. ஆங்கில சினிமாக்களைக் கண்டுகளிக்கும்போது, இங்கு இல்லாத செடிகள், மரங்கள், பூக்களைப் பார்க்க எண்ணி சாலைகள் ஆற்றங்கரைகள் என வரும் காட்சிகளுக்காக காத்திருப்பான்.
2. சிறுவயதில் பாடங்களை மனனம் செய்ய ஏரிக்கரை, காடு மரத்தடி என சென்றவனுக்கு வரிகள் ஏதும் படிக்க முடியாமல் சுற்றியிருக்கும் இயற்கையில் மனம் மூழ்கி போவான்.
3. மரங்கள், செடிகள் என அவற்றிடம் உரையாடிய அனுபவமும் அவனுக்கு நிறைய இருந்தன.
4. தன்னுடைய ஒருதலைக்காதலுக்குக்கூட தன்னை ரிஷியாகவும் அவளை ரிஷி பத்தினியாகவும் எண்ணிக்கொண்டு, அடர்ந்த காட்டில் நதியையும் கனவில் காண்பான்.
5. பி.எஸ்.ஸி பாட்டனியில் இடம் கிடைத்தாலும் இலைகளை வெட்டி அதனைக் கற்க சகிக்க முடியாத காரணத்தால் பி.ஏ.வரலாறு எடுத்து படித்தான்.

எழுத்தாளர் கந்தர்வனின் ‘பூவுக்குக் கீழே’ கதையைத் தொடர்வோம். நட்டு வைத்த செடியின் மீதான பராமரிப்பு அவன் எதிர்ப்பார்த்த தருணத்தை அவனுக்குத் தருகின்றது. மஞ்சளும் சிவப்பும் சம அளவைக் கொண்ட பூ. வெகுநேரம் பார்த்துக் கொண்டு நிற்கின்றான். அடுத்ததாய் ஒரு வாரத்திற்கு முன்பு தஞ்சாவூரில் பார்த்த வெள்ளை பூச்செடியை தேடி எடுத்து வருகின்றான். மனைவியின் அதே கேலி மீண்டும் வருகின்றது.

கதையில் வருபவனின் சுபாவம் சற்று வித்தியாசமென தோன்றலாம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் இயற்கை மீதான அன்பு. இது அனைவருக்கும் தோன்றிவிடுவதில்லை. இயற்கையை ரசிப்பதற்கும் நன்றி செலுத்துவதற்கும் நேரங்கள் தீர்ந்து போய் இன்றைய நவீன வாழ்க்கையை இயந்திரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இக்காலத்தில் அவன் ஒரு அதிசயமான மனிதனாகதான் தோன்றுவான். ஆனாலும் இன்றளவில் இன்னும் பலரது வீடுகளில் பூக்களும் பலவகையான செடிகளையும் காண முடிவது மகிழ்ச்சியைத் தருகின்றது.

இவனுக்குச் செடிகள், மரங்கள், பூக்கள் மீதான ஆர்வம் மனதளவில் ஆழ்ந்து நிற்கின்றது. நாட்கள் கடந்து செல்ல அதன் ஆழம் இன்னும் பரந்து விரிகின்றது. ஒவ்வொருவருக்கும் இதே போன்றதொரு ஆர்வம் ஏதாவது பொருளிலோ அல்லது செயலிலோ இருக்கதான் செய்கின்றது. அதற்கான தீவிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதில் இருக்கும் ஆழ்ந்த திருப்தி பிற எல்லாவற்றையும் தோற்கடித்துவிடும். ஆர்வமில்லா ஒன்றை செய்யும்போது ஏற்படும் சலிப்புத்தன்மையும் வெறுப்பும் இதை உணர்த்தும் பொழுதுகளாய் அமைந்துவிடுகின்றன.

அனைவருக்கும் அனைத்தும் பிடித்து போய்விடுவதில்லை. ஒருவருக்கு இயற்கை, மற்றொருவருக்கு எழுத்து, இன்னொருவருக்குப் பணம் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். மனித மனங்கள் ஒவ்வொன்றும் மாறுப்பட்டவை. எதையும் வலிந்து திணிப்பதலோ வற்புறுத்தல்களினாலோ மாற்றங்களை உருவாக்க முடியாது. அது மனதால் மட்டுமே முடியும். மனம் மட்டுமே மாற்றங்களை உருவாக்கி அதன் வழியில் பயணிக்க தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வல்லமை படைத்தது.

கதையில், ‘இவ்வளவு நேரம் பார்த்தும் செடி கண்ணில் படவில்லை. பூதான் கண்ணுக்குத் தெரிந்தது; கண்ணில் நின்றது. பூவுக்குக் கீழே செடியும், செடிக்குக் கீழே நானும் திடீரென்று காணாமற்போனோம்’ என்ற வரிகள் உணர்வுகளின் எல்லையற்ற இன்பத்தைப் புரிய வைக்கின்றன. வாழ்க்கையின் தேடல்கள் இத்தகைய இன்பத்தைத் தேடி தேடியே மறைகின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...