தமிழ்ப் பத்திரிகை நிருபரை ஐந்தடிக்காரன் என்று அழைப்பதில் மலாக்கா மாநில ம.இகா தலைவர் டத்தோ இரா பெருமாளுக்கு ( முன்னாள் மாண்புமிகு மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர்) ஆனந்தம் தருகிறதென்றால் அவர் அப்படியே அழைப்பதில் எனக்கு வருத்தமும் கோபமும் கிடையாது.
ஐந்தடிக்காரன் ( அஞ்சடிக்காரன்), கொடுக்கும் செய்தி எல்லாவற்றையும் பத்திரிகையில் எழுதி விடுவாயா?
என்று ஒருமுறை அவர் என்னை தொலைபேசியின் உரையாடலின்போது கேட்டதுண்டு. மலாக்கா இந்தியர் வர்த்தகர் சங்கத்தினர் கொடுத்த செய்தியைக் குறித்து விவாதிக்கையில் அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். கேள்விப்பட்ட சங்கத்தினர் சிலர் டத்தோ பெருமாள் அப்படிப் பேசியதாகக் கூறும் சத்தியப் பிரமாணக் கடிதத்தை என்னிடமிருந்து பெற முயற்சித்தனர். ஆனால் அப்படிச் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. காரணம் நான் செய்தியாளன் மட்டுமே, காரியவாதி அல்ல . எனக்கும் டத்தோ பெருமாளுக்கும் எந்தவொரு தனிப்பட்டப் பகையும் கிடையாது.
“அஞ்சடிக்காரன்” எழுதிய செய்தி என்று டத்தோ பெருமாள் ம.இ.கா கூட்டத்தில் என்னைக் குறிப்பிட்டு பேசினார் எனும் தகவல் என் காதுகளுக்கு எட்டவைத்த ஆங்கிலப் பத்திரிகை நிருபர் எனக்கு ஆறுதலை தெரிவித்தார். இதுபோன்ற வார்த்தைகளை ஒரு முன்னாள் ஆசிரியரும், ஆட்சிக் குழு உறுப்பினரும் பேசுவது நாகரிகம் இல்லை என்று அவர் என்னிடம் தெரிவித்தார். பெருமாள் அப்படி பேசவில்லை என்று நீங்கள் கூறியிருந்தால் நான் ஆச்சரியப் பட்டிருப்பேன். அவர் அப்படித்தான் பேசுவார். ஆசிரியர்களும் சாதாரண மனிதன்தானே. மனிதனுக்குள் இருக்கும் பல விலங்குகள் இதுபோன்ற வார்த்தைகளால் வெளிப்படுவது சகஜம்தானே என்று நான் அந்த நிருபரிடம் கூறினேன்.
ஐந்தடியில் படுத்து உறங்கும் அனுபவம் பெறாதவராக பெருமாள் இருந்திருக்கலாம். அதனால் அவர் அந்த ஐந்தடியை கேவலமாக பார்க்கக் கூடும். ஐயங்கார் வீட்டிலோ அல்லது பண்ணையார்களின் வீட்டிலோ இருக்கும் திண்ணையைக் காட்டிலும் அடித்தட்டு மக்களுக்கு நான் ஐந்தடியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்தாலும் அவனின் இறுதிக் காலச் சடங்கு ஐந்தடியில்தான் மிஞ்சுகிறது.
முதலாளியுடன் படுக்கையில் சேர்ந்து உறங்கும் நாயைவிட அறிமுகம் இல்லாதவர்களை வீட்டை நெருங்கவிடாமல் பாதுகாப்பது ஐந்தடி நாய்தான் எனும் சாமானிய கல்வியை பெருமாள் கற்காமல் இருந்திருக்கலாம். பணக்காரக் காரில் வருபவர் கூட ஐந்தடியில் போடப்பட்டிருக்கும் கடைகளில்தான் விரும்பி உண்கிறார்கள். பண்டிகை நாட்களில் போடப்படும் கோலமும் ஐந்தடியில்தான் வரையப்படுகிறது.
ஆகையால் …
பெருமாள் என் செய்திகளை ஐந்தடிக்காரன் எழுதியது என்று கூறியிருப்பது என்னைப் புகழ்வதற்காக அப்படி சொல்லியிருக்கலாம். அதனால் நானும் ஒரு துளியும் வருத்தப்பட்டதில்லை. காரணம் சாமானிய மக்களின் செய்தியாளனாக நான் இருப்பதில் பெருமைக் கொள்கிறேன். என் செய்தி அவர்களின் குடியைக் கெடுத்து விட்டது என்று அவர்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல. கனியன் பூங்குன்றனார்தான் பொறுப்பு.காரணம் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று அவர்தான் 500 வருடங்களுக்கு முன் சொல்லி விட்டுச் சென்றார். பெருமாள் இதனைப் படித்திருந்தால் விளங்கியிருக்கும்.
என் செய்தி அவர் மானத்தை வாங்கி விட்டதாக கூட்டத்தில் குறைப்பட்டுக் கொண்டாராம் . ஐயா, தமிழ் பத்திரிகை நிருபராக இருக்கும் எனக்கு புதிய சட்டையை கூட வாங்கி போட்டுக் கொள்ள வருமானப் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது, முன்னாள் ஆட்சிக் குழுவின் மானத்தை வாங்குவதற்கு எனக்கு சக்தி உண்டா? நான் எழுதி அவரை கவிழ்த்து விட்டேன் என்று அவரது ஆதரவாளர்கள் முறைத்துக் கொண்டு இருப்பதாக ஒரு செய்தி. அதுவும் டத்தோ மகாதேவனிடம் 500 வெள்ளியை வாங்கிக் கொண்டு டத்தோ பெருமாளைப் பற்றி அவதூறாக எழுதியதால் அவர் கவிழ்ந்து விட்டாராம். ஒரு கேள்வி என்னுள்.. 500 வெள்ளி எழுத்துக்குக் கவிழும் அவ்வளவு பலவீனமானத் தலைவனா பெருமாள்? அப்படி அவர் இந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறார் என்றால் அப்படிப்பட்டத் தலைவரை வீழ்த்த எழுத்து தேவையில்லை ஒரு எறும்பு போதும்.
பலவீனங்களை மடியில் சுமந்து கொண்டு, தோல்விக்கான காரணக்களை பிறர் மீது சுமத்துபவர் ஒரு மனநோயாளி. மனநோயாளியிடம் கருத்து மோதல் செய்யமுடியாது. அதனை அந்த நோயாளியும் ஏற்கமாட்டான். அவனைப் பார்த்து பைத்தியம் என்று கூறினால், ” யார் பைத்தியம்? நீதான் பைத்தியம்” என்று நம்மைத் திருப்பி அடிப்பான். குணமாவதற்கு வைத்தியம் கொடுத்தாலும் அதனை கையால் தட்டி எறிவான்.
அவன் கொலை செய்தாலும் கூட அவனுக்கு மருத்துவம்தான் தண்டனை. இப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவனின் செயலைக் கண்டு கோபமடைந்தால் நான்தான் பைத்தியக்காரன். ஆகவே அவரவர் குணம் அறிந்து நடந்து கொள்ளவதானால் யாரும் எனக்கு எதிரி கிடையாது. என் எழுத்து அல்லது செய்தி அவரவர் குணங்களைப் பிரதிபலிக்கிறது என்று என்னை கோபித்துக் கொள்பவர்கள் முதலில் உங்களின் கோபத்துக்கு நல்ல வைத்தியரைக் காணுங்கள். நோயைப் பற்றி எழுதியவன் மேல் பாயாமல், நோய் முற்றாமலும், அதனை சரி செய்யவும் முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியாவிட்டால் அருகில் உள்ள உங்கள் ஆலோசகரிடம் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவரும் உங்களைப்போல் நோயாளி என்றால் உங்களின் பிரச்சினைகளைக் குணப்படுத்தக் கூடிய நல்ல மருத்துவரை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி உங்களை நோய் அண்டுகிறதென்றால் மனிதனை அந்த மகனே இந்த மகனே என்று திட்டாதீர்கள். நீங்கள் திட்டவேண்டியது பார்க்கமுடியாத கடவுளை.