அடுத்த முறையாவது…

kulalyஆளும் அரசாங்கத்தின் மீது நமக்கிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்த நமக்கே நமக்கென கிடைத்த ஒரு சிறந்த களம் தேர்தலாகும். நம்மைப் பகடைக் காய்களாக்கி ஆட்டமாய் ஆடிய அரசியல்வாதிகளை இந்தக் களத்தில்தான் வேரறுக்க முடியும்… நமது ஓட்டுகளை அரிவாளாகக் கொண்டு இரத்தம் சிந்தாமல் இங்குதான் வெட்டி வீழ்த்துகின்ற பணியியை செய்ய வேண்டும். மீண்டும் முளைக்க விடாமல் வேரோடு களையெடுக்க வேண்டும். இம்முறை வேரோடு களை எடுக்காவிட்டால் வரும் ஐந்தாண்டுகளில் களைகள் நம்மை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். கவனம் … இம்முறையாவது…

தேர்தலுக்கு முன்பு நான் எழுதிய வரிகள் இவை. வெறும் களைகள் என நான் கணக்கில் எடுந்திருந்தவை விருட்சங்கள் என தேர்தல் முடிவு மீண்டும் நிருபித்திருக்கிறது. ஒரு ஆபத்தான நிலையில் நாடு போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் இப்போது நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தேர்தலுக்கு முன்பதாக சில அற்புதப் பொழுதுகளை நான் சந்திருக்கிறேன். நாம் மலேசியர்களாக மட்டும் அந்த பொழுதுகளில் வாழ்ந்திருந்தோம். அந்த பொழுதுகளைத் அதிகாரப்பூர்வமாக தொடர முடியாத நிலைக்கு நம்மிடம் வழங்கப்பட்ட தேர்தல் முடிவுகள் நம்மை நிறுத்தியிருக்கிறது.

எதற்காக இந்த தேர்தலில் நாம் மாற்றத்தை எதிர்பார்த்திருந்தோம் என்பதற்கு நம்மிடம் வலுவான காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக இந்த நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான சில அடிப்படை செய்திகளை முன்னிறுத்தி மக்கள் கூட்டணி விவாதிக்கத் தொடங்கியிருந்தது. அதுவே, இளைய சமுதாயத்தை அதன்பக்கம் ஈர்ப்பதற்கான முக்கிய காரணிகளாக அமைந்திருந்தன.

  • பாகுபாட்டை அகற்றுவது 
  • தேசிய கல்வி முறையை உருவாக்கி அனைத்து வகை கல்வியையும் அதில் உள்ளடக்குவது 
  • மக்களுக்காக வேலை வாய்ப்புகள் 
  • பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்காக தொழில்திறன் பயிற்சி வாய்ப்புகள் 
  • கல்விச் சீர்திருத்தத்தின் வழி பொருளாதாரத்திற்கு உத்வேகம்
  • சிறு-நடுத்தரத் தொழில்துறை மற்றும் புத்தாக்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு அடித்தளங்கள் 
  • சமநிலையை உறுதி செய்வதற்கு வரி விதிப்பு முறையை ஒருமுகப்படுத்துவது 
  • பொருளாதார நிலைத்தன்மை 
  • ஆதிக்கப்போக்கை அகற்றி விலைவாசியைக் குறைப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பது 
  • மக்களின் சுமையைக் குறைக்க வாகனத் தொழில்துறையை மறுசீரமைப்புச் செய்வது 
  • அனைவரும் வாங்கக்கூடிய விலையிலான தரமான வீடுகள் 
  • அனைவருக்கும் இலவசக் கல்வி- PTPTN நீக்கம் 
  • இலவச அடிப்படை சுகாதார வசதி உறுதி செய்யப்படும் 
  • மக்கள் சமூக பாதுகாப்பு ஒருங்கமைப்பு உருவாக்கம் 
  • இஸ்லாம் மற்றும் சமயம் சார்ந்த அமைப்புகள் சீர்திருத்தம் 
  • அரசாங்க ஊழியர்களுக்கு புதிய சம்பள-சேவை முறை 
  • துய்மையான, நேர்மையான, வெளிப்படையான தேர்தல் 
  • நீதித்துறை, சட்டத்துறை தலைவர் அலுவலகம், SPRM, PDRM மறுசீரமைப்பு 
  • பத்திரிகைச் சுதந்திரம்- ஊடகவியளாளர்களின் அதிகாரத்தை மீண்டும் வழங்குவது 
  • AUKU அகற்றி கல்விச் சுதந்திரத்தை உறுதி செய்வது 
  • அனைத்து மக்கள் எதிர்ப்புச் சட்டங்களையும் அகற்றுவது 
  • தேசிய ஊழல் தடுப்புக் கொள்கை (DEBARAN)

விவாதிக்கப்பட்ட இந்த கூறுகளே கல்வியாளர்களையும் நாட்டின் போக்கைத் தொடர்ந்து அவதானித்து வரும் இளைய தலைமுறையினரையும் மாற்றத்தை நோக்கி நகர்த்தியது என்பதை மறுக்க முடியாது.

ஆனால், இது எதனையும் கூட்டரசு அரசாங்க நிலையில் நம்மால் செயல்படுத்த முடியாது. அதற்கான வாய்ப்பு நமக்கு வழங்கப்படவில்லை. இவை எல்லாம் நல்ல திட்டங்கள்தானே என ஆளும் அரசாங்கம் அதைச் செயல்படுத்த போவதில்லை.

மக்களை பல வகைகளில் பிரித்தாள்வதின் வழி சில அனுகூலங்களை ஆதிக்கவாதிக்கவாதிகள் எப்போதுமே பெற்று வருகின்றனர். மலாய்க்காரர்களை நகர்ப்புறவாசிகள், கிராம மக்கள், பெல்டா மக்கள் அல்லது அம்னோ விசுவாசிகள் என பிரித்தாள்வதின் வழி மலாய் சமூக ஆதரவு கிடைக்கிறது. அவரவருக்குத் தேவையான மீன்களை அவ்வப்போது தூக்கி வீசுவதன் வழி பிரித்து வைக்கப்பட்டுள்ள சமூகங்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

சீனர்களையும் இப்படித்தான் பிரித்தாள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைப்பெற்றன. ஆனால், எப்போதும் ஒட்டுமொத்த சீனர்களின் தேவை என்ன என்று யோசிக்கும் சீன சமூகத்தை அவ்வப்போது தூக்கி வீசப்படும் மீன்கள் பெரிதாய் கவரவில்லை.

இந்தியச் சமூகம் காலங் காலமாய் கவர்ச்சிகளுக்கு அடிமையானது என்பது நிருபிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், பஞ்சாபியர்கள், ஐபிஎப் அனுதாபிகள், மஇகா விசுவாசிகள், இன்ராப்ட் இயக்கவாதிகள் என பல கூறுகளாக பிரிக்கப்பட்டு வீசப்பட்ட மீன்களால் போடப்பட்ட தூண்டில்களால் நாம் சிக்கிகொண்டுவிட்டது கொஞ்சம் தெளிவாகவே தெரிகிறது.

பிரிதாள்கிறபோது ஒட்டுமொத்த இனத்திற்கான தேவை புறந்தள்ளப்பட்டு பிரிக்கப்பட்ட சிறு சமூக தேவை முன்வைக்கப்படுகிறது. இது ஆதிக்கவாதிகள் தங்கள் அரசியல் கடையை விரிப்பதற்கு ஏதுவான தளமாக அமைகிறது. இந்த அணுகுமுறையே இம்முறை ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொண்டால் அவர்களின் தேவைகள் மிக அதிகமானவை. சமூக உருமாற்றம் என்பது அவர்களுக்கு மிக அவசியமான தேவையாகிறது. தமிழ்ப்பள்ளிகள், பாலர்பள்ளிகள், உயர்க்கல்வி வாய்ப்பு, வறுமை, வன்முறை என ஏகப்பட்ட உடனடியாக சரி செய்ய வேண்டிய தேவைகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சரி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட செயல்திட்டத்தை யார் முன்னெடுப்பது? இப்போது அது கேள்விக் குறிதான். இந்திய சமூகத்தை யார் கரையேற்றுவது என்பதே இப்போது வரை முடிவு செய்யப்படவில்லை.

தேர்தல் முடிவுற்று ஒரு மாதமாகப் போகிறது. தேர்தலுக்கு முன்னிருந்த வீரியம் இப்போது இல்லை. பதவியேற்பதில் இருந்த வேகம் சொல்லியதைச் செயல்படுத்துவதில் இல்லை. மக்கள் கூட்டணி தேர்தல் முடிவுகளை ஏற்காத நிலையில் நாடு முழுவதும் கருப்பு பேரணிகள் நடத்தி வருகிறது. ஆளுங்கட்சி தன் பாணியில் அதை ஒடுக்குவதற்கான முன்னேற்பாடுகளையும் வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்குப் பிறகு பொருள்களில் விலையேற்றத்தை நாள்தோரும் பொருள்கள் வாங்கும் நீங்கள் உணர்ந்திருக்கலாம். வாரந்தோறும் சந்தைக்குச் செல்லும் எனக்கு அந்த நிலை உணரக் கூடியதாய் இருக்கிறது. ஒரு நல்ல வேலையில் இருக்கும் எனக்கே இந்த நிலை என்றால் 700-1000 வெள்ளிக்குள் மட்டுமே சம்பளம் வாங்கும் மக்களின் நிலை என்னவாக இருக்கும். அவர்களால் நல்ல காய்கறிகள், மீன்கள் வாங்கி தரமான உணவினை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க வாய்ப்பிருக்குமா!

வளத் திட்டமிடல்கள் ஏதுமின்றி தொடர்ந்து ஆட்சி செய்யும் இந்த அரசு மக்களின் தேவைகளைக் கவனிக்குமா! 30 நாட்களில் எதையும் முடிவெடுத்துவிட முடியாது. ஆனால், மக்கள் பலிகடாவாக்கப்பட்டுவிட்டார்கள் என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் இந்த நிலை என்றால் இன்னும் ஐந்தாண்டு கால கட்டத்தில் மிகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளைத் தூசு தட்டி எடுத்து அதை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் இருக்கிற ஐந்தாண்டுகளை எடுத்துக் கொள்ளும். எதை எதையெல்லாம் செயல்படுத்தவில்லை என்று கண்டுபிடித்து அதை செயல்படுத்தச் சொல்லி போராட்டம் நடத்தி நமது ஐந்தாண்டுகளும் ஓடிப் போகும்.

அடுத்த முறையாவது…

1 comment for “அடுத்த முறையாவது…

  1. ஸ்ரீவிஜி
    June 6, 2013 at 3:31 pm

    அற்புதமான எழுத்து நடை. சூப்பர் குழலி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...