விவாதங்கள் தொடர வேண்டும்

Geetha

வ.கீதா

தமிழ்மொழியில் வெளியாகும் படைப்புகள் இன்று பல தேசங்களில் வாழும் தமிழர்கள் படிக்க ஏதுவாய் வினியோகிக்கப்படுகின்றன. இணையம் மூலமாகவும் பலரை சென்றடைகின்றன. இந்தஒரு சூழ்நிலையில், படைப்பு என்பதன் தன்மையும் அடையாளமும் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளன. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான உறவும் வெளியும் மாறியமைந்துள்ளன.

குறிப்பிட்ட படைப்பானது, அது உருவான சமூக, பண்பாட்டு வெளிக்கு அப்பாற்பட்ட வாசகர்களை அடைகிற அதேநேரத்தில் அது தோன்றிய சூழலுடனான அதன் உறவு இந்த அயல் வாசகர்களுக்கு பிடிபடாத, அவர்களின் வாசிப்பு அனுபவத்துக்கு தேவையற்றதாகி விடுகிறது. மறுபுறமோ சமூக வலைத்தளங்களினூடாக படைப்பாளி வாசகருடன் நேரடியாக உரையாடவும் விவாதிக்கவும் முடிகிறது. இதனால் படைப்பானது அது உருவான சூழலிலிருந்து விலக்கப்பட்டு படைப்பாளி, வாசகர் ஆகிய இருவருக்குமிடையே தொழிற்படும் அந்நியோன்யமான உறவினூடாக  ஒரு “பொது”த்தன்மையைப் பெற்றுவிடுகிறது – அதனுள் உறைந்துள்ள நிஜம், நிஜமின்மை ஆகியவற்றை தீர்மானிக்கவல்ல அளவுகோல் என்னவாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தச்சூழலில் படைப்பின் மெய்மை, அசல்தன்மை, இவற்றை உத்திரவாதம் செய்யவல்ல சட்டரீதியான ஏற்பாடுகள் ஆகியன பற்றித் தெரிந்து கொள்வதும் இவை குறித்துச் சிந்திப்பதும் அவசியமாகிறது.

படைப்பு, பதிப்புத்துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் பற்றிய செய்திகளையும், குறிப்பாக, பதிப்புரிமை, காப்புரிமை, சார்புரிமை, உரிமம்  தொடர்பான தகவல்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் இந்நூலில் விசயலட்சுமி விவரிக்கிறார்.  படைப்பாளிக்கு அவரது படைப்பின் மீதுள்ள உரிமை, படைப்பாளருக்கு இருக்கவேண்டிய அறிவு நேர்மை, பிறரது படைப்புகளை வாசித்து அவற்றின் தாக்கத்தில் எழுதப்படும் எழுத்தில் படைப்பாளி பாவிக்க வேண்டிய முறைமை, தனது எழுத்துகளைப் பெருக்க அவர் செய்யும் முயற்சிகளில் அவர் கடைபிடிக்க வேண்டிய கண்ணியம் ஆகியனவற்றை இந்நூல் தெளிவாகவும் யாவருக்கும் புரியக்கூடிய மொழியிலும் எடுத்துரைக்கிறது.

குறிப்பிட்ட படைப்புக்கான உரிமை படைப்பாளியிடம்தான் உள்ளது என்ற போதிலும் அந்த உரிமையின் உள்ளீடு, வரம்பு ஆகியன யாவை? அவ்வுரிமையை பிறருக்கு வழங்குவது என்றால் என்ன? என்பன போன்ற விஷயங்களையும் இந்நூல் பேசுகிறது. படைப்பாளி தனது நூலை வாசகருடன் இலவசமாகப் பகிர்ந்துகொள்ள விரும்பினால், அதாவது காப்புரிமையை முன்நிறுத்தாது நூலை பொதுவுடைமையாக்க முன்வந்தால், அத்தகைய பகிர்வுக்கான சூழலை தமிழ் சமுதாய, பண்பாட்டு வெளியில் உருவாக்க முடியுமா, தமிழ்ச் சமுதாயம் அறிவுப் பகிர்வுக்கான செயல்களை வரலாற்றுரீதியாக மேற்கொண்டுள்ளதா என்றரீதியில் பல முக்கியமான கேள்விகளை விசயலட்சுமி எழுப்புகிறார்.

இணையம் உருவாக்கியுள்ள தகவல்தொடர்பு சாத்தியப்பாடுகள், இணையத்தில் குவிந்து கிடக்கும் செய்திகள், தகவல்கள், பிரதிகள் ஆகியனவற்றை எளிதாக இறக்கம் செய்ய உதவும் தொழில்நுட்பம் – இவற்றால் எழுத்து என்பதன் தன்மையே மாறியுள்ளதாகக் கொள்ளலாம். நமக்கு வேண்டிய தகவல்களையும் அவைகுறித்த கருத்துகளையும் விரைவாகவும் எளிதாகவும் தருவித்துக்கொள்ள முடிவதால், அவற்றைக் கையாள்வதில் நாம் கவனம் செலுத்துவதில்லை. மலிந்து கிடக்கும் செய்திகளை இலகுவாக நமது எழுத்துக்குள் நுழைத்து சொந்தக் கருத்துகளாகப் பாவிக்கும் பழக்கத்துக்கு நம்மை அறியாமலே அடிமையாகி விடுகிறோம். குறிப்பாக மாணவர்களிடம் இந்தப் போக்கை அதிகம் காணலாம், என்றாலும் படைப்பாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மேலும் குறிப்பிட்ட நூலையோ கவிதையையோ வாசிக்காமல் அதன் சுருக்கத்தையோ அது குறித்த விமர்சனங்களையோ இணையத்தில் படித்துவிட்டு குறிப்பிட்ட நூல்பற்றிப் பேசுவதும் எழுதுவதும் இன்று எளிதாகியுள்ளளது. இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்டு மேற்சொன்ன செய்திகளை நாம் உள்வாங்கிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

விசயலட்சுமி, மலேசியத் தமிழ்ச்சமுதாயத்தை முன்வைத்துதான் இத்தகைய விவாதங்களை முன்னெடுக்க விரும்புகிறார் என்ற போதிலும், அவரின் வாதங்களைப் பிற தமிழ்ச்சூழல்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். மேலும், படைப்பாளி, வாசகர் ஆகியோருக்கு மட்டுமின்றி, படைப்பை பகிர்வுக்கானதாக ஆக்குவது, சந்தையில் அதனை முறையாக விநியோகம் செய்வது, படைப்பின் தனித்தன்மையை நிர்ணயம் செய்யத்தேவையான மதிப்பீடுகளைக் குறித்த பகிரங்கமான விவாதத்தை உருவாக்குவது ஆகிய செயல்பாடுகளில் அக்கறையுடையவருக்கும் இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.

                                                           0 0 0

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

படைப்பாளியின் கற்பனைத்திறன் மட்டுமின்றி, அவருடைய அறிவு நேர்மை, அவர் எழுத்துடன் தொடர்புடைய, பிறரால் படைக்கப்பட்டுள்ள நூல்களுடன் அவருடைய குறிப்பிட்ட படைப்புக்கு உள்ள உறவு, தனது நூலுக்குப் பொருள் சேர்க்கக்கூடிய தரவுகள், வாதங்கள், எடுத்துக்காட்டுகள் முதலியவற்றை அவர் கையாண்டுள்ள விதம், தன் நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள், தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படைகளை ஆதாரபூர்வமாக அவர் நிறுவும் பாங்கு – இப்படிப் பல அளவுகோல்களை பயன்படுத்திதான் குறிப்பிட்ட படைப்பின் அசல்தன்மை தீர்மானிக்கப்படுகிறது என்பதை இந்நூலில் உள்ள செய்திகள் மிகத்தெளிவாக உணர்த்துகின்றன. என்றாலும் குறிப்பிட்ட நூலுக்கான அடையாளத்தை நாம் சம்பந்தப்பட்ட படைப்பாளியின் ஆற்றல், ஆளுமை ஆகியவற்றுடன் மட்டுமே அடையாளப்படுத்தப் பழக்கப்படுத்தப் பட்டுள்ளோம்.

மட்டுமின்றி குறிப்பிட்ட படைப்பை உருவாக்குதல் என்பது ஒரு கூட்டுச்செயல் என்பதையும் மறந்து விடுகிறோம். படைப்பு படைப்பாளியை விட்டு நீங்கியபிறகு அதன் பயணம் அவரது விருப்பு வெறுப்புகளைச் சார்ந்து நிகழ்வதில்லை. தட்டச்சு செய்பவர், படைப்பை நெறிப்படுத்துபவர் (எடிட்டர்), படைப்பின் மொழியை செம்மைப்படுத்தும் வகையில் பிழைகளைக் கண்டறிந்து திருத்துபவர், குறிப்பிட்ட படைப்புக்கான ஓவியங்களைத் தீட்டுபவர், அட்டைப்படத்தை உருவாக்குபவர், தட்டச்சு நிபுணர், வடிவமைப்பாளர் என்று பலரும் இணைந்துதான் அந்தப் படைப்புக்கு உயிர் கொடுக்கின்றனர். அவரவருக்குரிய பணிகளைத் துல்லியமாகப் பிரித்துக்கொடுத்து, இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, படைப்பை  வெளியுலகத்துக்கு பதிப்பாளர் அறிமுகப்படுத்துகிறார்.

எழுத்து, படைப்பு ஆகியவற்றை கூட்டுச்செயலாக நாம் பார்க்கப் பழகுவோமேயானால், காப்புரிமை குறித்தும் வேறுபட்ட முறையில் யோசிப்போம். குறிப்பிட்ட ஒருவரோ சிலரோ உருவாக்கிய படைப்பு என்ற போதிலும் அதன் ஆக்கம் என்பதை நாம் விரிந்த பொருளில் புரிந்துகொண்டு பலரின் உழைப்பில் உருவான ஒன்றை முழுமையாக நமது தனியுரிமைக்கானதாகக் காணாது, பொதுச்சொத்தாகப் பாவிக்க முற்படுவோம். சந்தை விற்பனைக்கென மட்டும் அக்குறிப்பிட்ட படைப்பை விட்டுவிடாமல், குறிப்பிட்ட வாசிப்பு வட்டாரங்களுக்காவது அது இலவசமாகச் சென்றடைய ஏற்பாடு செய்வோம்.  விசயலட்சுமி சுட்டும் பகிர் உரிமம் தொடர்பானவற்றை பரிசீலித்து குறிப்பிட்ட படைப்பை சந்தைப்படுத்தாமல்  யார், எவ்வளவு காலத்துக்கு, பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்கத் தொடங்குவோம். பகிர் உரிமையின் பயன்கள் பற்றிப் பேசுகையில் அறிவுப் பெருக்கத்துக்கும் தடையற்ற கருத்துப் பரிமாற்றங்களுக்கும் பகிர் உரிமையானது வழிவகுக்கும் என்று நூலாசிரியர் வாதிடுகிறார். இவையும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கவையே.

                                                                     0 0 0
அறிவுப்பெருக்கம், அறிவு மரபுகளை வளர்த்தெடுத்தல் பற்றி இந்நூல் கூறும் செய்திகளை மையமிட்டு நாம் மேலும் விவாதிக்க வேண்டும். அறிவு மரபுகளை குறிப்பிட்ட நபர்களோ, அல்லது இதழியல் பண்பாடோ உருவாக்குவதில்லை. காலத்தின் கட்டாயத்துக்கு இணங்க ஒரு சமுதாயத்தில் தொழிற்படும் மாற்றங்களைப் புரிந்துணர்ந்து அவற்றுக்குப் பொருள் கோடல் செய்யும் அறிவாளர்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் போராளிகள் ஆகியோர்  காலத்தின் கட்டளைகளை, தேவைகளைக் கைக்கொள்ளும் விதம், காலவோட்டத்தில் வரலாற்றுத் தருணங்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கு உகந்த வகையில் தமது, பிறரது செயல்பாடுகளை, சிந்தனையை வடிவமைக்கும் முறை – இவைதான் பழைய அறிவு மரபுகளை புரட்டிப் போட்டு புதிய மரபுகளை கட்டமைக்க உதவுகின்றன. இத்தகைய மரபுகள் பொதுவில் வைத்து அலசப்படும்போது அறிவு இயக்கம் சாத்தியப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் அறிவு மரபுகளே அறிவுப்பகிர்வுக்கு வித்திட முடியும்.

தற்கால பதிப்பு, படைப்புத் துறைகளை முன்வைத்து  அறிவுப்பகிர்வு குறித்த விவாதத்தை இந்நூல் தொடங்கி வைத்துள்ளது. இத்தகைய பகிர்தலில் பதிப்பாளருக்குள்ள பங்கு குறித்தும் நாம் பேசலாம். காரணம், நூல்கள் தாமாக வாசகரைச் சென்றடைவதில்லை. இன்னும் சொல்லப்போனால் குறிப்பிட்ட படைப்புக்குப் பொறுப்பேற்று படைப்பாளியின் மீது நம்பிக்கை வைத்து அவருடைய  நூலை வெளியிட முன்வரும் பதிப்பாளர்கள் நூல்களின் ஆக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றனர். பதிப்பித்தல் என்பது குறிப்பிட்ட பிரதியை அச்சேற ஏற்பாடு செய்து, அச்சிசேறிய பக்கங்களைப் பிழைத்திருத்தம் செய்து சரிப்படுத்தும் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ள போதிலும், இவற்றைக் கடந்தும் இயங்கும் பணியாகும். பதிப்பாளர்களின் அரசியல், பண்பாட்டு அடையாளங்கள், அவர்களின் இலக்கிய, அரசியல் புரிதல் – இவற்றை முன்னிட்டே தாம் பதிப்பிக்க விரும்பும் நூல்களை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் வெளியிடும் நூல்கள்பற்றிப் பிறர் பேசும்போதும், இவை பொதுப்பயன்பாட்டுக்கு வரும் போதும்தான் அறிவு மரபுகள் வளம் பெறுகின்றன.

காப்புரிமை, உரிமம், அறிவுப்பகிர்வு முதலானவற்றை படைப்பாளி மட்டுமே தீர்மானிக்க இயலாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட நூலுக்கான காப்புரிமையை அதாவது அது பெற்றுள்ள குறிப்பிட்ட நூல் வடிவத்துக்கு அவர் காப்புரிமை கோரலாம். நூலின் உள்ளீடு மீது படைப்பாளிக்கு முழுஉரிமையுண்டு என்ற போதிலும் பதிப்பிக்கப்பட்ட நூலுக்கான உரிமையை அவர் பதிப்பாளருக்கு வழங்கவும் செய்கிறார். பதிப்பாளர்களின் செயல்பாடுகளை வரிசைப்படுத்தி குறிப்பிட்ட படைப்புலகத்தின் வரலாற்றை நாம் எழுத முடியும் என்கிற அளவுக்கு அச்சுப் பண்பாடு உருவான காலக்கட்டத்துக்குப் பிறகு பதிப்பாளரின் தேவையும், முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.
0 0 0
மேற்கூறியன அனைத்தையும் குறித்து நாம் உரக்கச் சிந்திக்க வழிவகுத்துள்ள இந்நூல் தோற்றுவித்துள்ள விவாதங்கள் தொடரும் என்று நம்புகிறேன்.

வ.கீதா

இந்த நூல் ‘கலை இலக்கிய விழா 7’ல் வெளியீடு காணும்.

திகதி: 1.11.2015 (ஞாயிறு)

நேரம்:  1.00pm

இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur

1 கருத்து for “விவாதங்கள் தொடர வேண்டும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...