ஓநாயிடம் மாட்டிக்கொள்ளும் ஆட்டுக்குட்டிகள்

வீ.அரசு

வீ.அரசு

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ எனும் நண்பர் நவீன் அவர்களின் ஆசிரியப் பணி அநுபவப் பதிவுகளை வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள, கீழ்க்காணும் குறிப்புகளை உங்கள் முன் வைக்கிறேன். இந்தப் பதிவுகள் பல அடிப்படையான நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அதனைச் சுருக்கமாக தொகுத்துச் கொள்ள முயல்கிறேன்.

  • தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்நிலையும் அதன் வழி அவர்களது அடுத்த சந்ததி உருவாக்கச் சூழலும் எவ்வகையில் தொழிற்படுகிறது என்பது குறித்த விவரணங்கள்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான காலனியக் கல்விமுறை குறிப்பாகப் பயிற்றுமுறை கொஞ்சம் கூட மாற்றமின்றி தொடரும் அவலம்.
  • குரு-சீடன் மரபில் கல்வியைப் போதித்த மரபு, வேறொரு வடிவத்தில், அத்தன்மை மாறாமல் ஆசிரியனை முதன்மைப்படுத்தும் கல்வியே பள்ளிக் கல்வியாக உள்ளது. இதன் வடிவம் மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  • சிறார் உளவியல் குறித்த அடிப்படைப் புரிதல் அற்ற கல்வி.
    மேலே குறித்த விவரணங்கள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றன என்பதை நவீன் பதிவுகள் எள்ளல் மொழியில் வெளிப்படுத்துகின்றன. கோபம் எள்ளல் மொழியில் வெளிப்படுவதே சரி. அந்த மொழி வளமாகக் கைவந்திருக்கிறது நவீன் அவர்களுக்கு. இந்தப் பதிவுகள் எதார்த்தம். இதற்கு என்ன மாற்று என்ற உரையாடல் நமக்குத் தேவை.

பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட தோட்ட வேலைகளுக்காகக் குடிபெயர்ந்த மூன்றாம் தலைமுறை இப்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இவர்கள் வாழும் நாடுகளில் பெரும்பாலோர் இரண்டாம் தர குடிமக்களாகவே இன்றும் நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கான சலுகை எதுவும் வழங்கப்படுவதில்லை, அப்படி வழங்கப்படும் சிறிய அளவிலான சலுகைகளும் அவர்களைச் சென்றடைவது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. எனவே, தோட்டத் தொழிலாளர்களாக வாழும் மக்களுக்கு தமிழகத்தில் இருப்பதைப் போல இடஒதுக்கீட்டு முறையை கல்விகூடத்தில் முதலில் வழங்க வேண்டும். காலப்போக்கில் வேலை வாய்ப்புகளுக்கும் அது நீட்டிக்கப்பட வேண்டும். சமூக நீதி என்பது இந்தியச்  சூழலில் பிற்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்நிலை மாற்றத்திற்கு உதவியுள்ளது. இத்தன்மை மலேசியா போன்ற நாடுகளின் ஒடுக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு சமூகநீதி வழங்கும் நோக்கத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு முறையை அங்குள்ள மக்கள் போராடி பெறவேண்டும்; ஆனால் எதார்த்தத்தில் அங்குள்ள பெரும்பான்மை தொழிலாளர்களின் குழந்தைகள் ‘மெதுநிலை’ (Slow Learners) மாணவர்களாகக் கட்டமைக்கப்படுவது சாதியத்தைவிட, கொடூரமான கொடுமை நடைமுறைப்படுத்தப்படுகிறது. ‘மெதுநிலை’ எனும் பிரிவு நவீன சாதிய மற்றும் பொருளாதாரப் பிரிவாகவே புரிந்து கொள்ள வேண்டும். ஏன் அவர்கள் ‘மெதுநிலை’ மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்த உரையாடல் மேற்கொள்வது அவசியம். அதுவே அப்பிரிவை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளை உணர வழிகாட்டும். இதற்கான வெகுசன கருத்தியல் சார்ந்த பரப்புரைகளை நண்பர் நவீன் போன்றவர்கள் இவ்வகையான ஆக்கங்கள் மூலம் சாத்தியப்படுத்துவதை வெகுவாகக் கவனத்தில் கொள்வது அவசியம். இவ்வகை முயற்சிகளில் ஈடுபடுவோர்க்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவது சமூக உணர்வுள்ளவர்களின் கடமை.

பொருளாதார நெருக்கடிகளில் வாழும் மக்களிடம் மன நோய்களும் மூடநம்பிக்கைகளும் நீக்கமற நிறைந்திருப்பது தவிர்க்க முடியாத துன்பம். நவீன் பதிவுகளில், மனப்பிறழ்வு நோய், திக்குவாய் போன்ற உடற்குறைவுகள், தங்களது விருப்பம் நிறைவேறாமையால் உருவாகும் மனச்சிக்கல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் குழந்தைகள் பெறும் இன்னல்கள் பதிவாகியுள்ளன. இவற்றைக் குறித்த புரிதல் இல்லாமல் ஏழைப் பெற்றோர்கள் வாழ்வர். ஆனால், அதனைக் கண்டுபிடித்து, ஆவண செய்ய வேண்டிய இடங்களில் ஒன்றாகக் கல்விக்கூடங்கள் அமைய வேண்டும். ஆனால், கல்விக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் சமூக கண்ணோட்டங்கள் என்பவை மரபுவழிப்பட்ட, நிலவுடைமைப் பண்பாடு சார்ந்த, பல்வேறு மூடநம்பிக்கைகளை கைக்கொண்டிருக்கும் தன்மையதாகவே இருப்பதைக் காண்கிறோம். ஓநாயிடம் மாட்டிக்கொள்ளும் ஆட்டுக் குட்டிகளாகவே குழந்தைகள் ஆகிப்போகிறார்கள். போலித்தனங்கள், வறட்டுத்தனங்கள், மூடநம்பிக்கைகள் ஆகிய அனைத்தின் கொள்கலமாக இருக்கும் பெரும்பான்மை ஆசிரியச் சமூகத்திடம், எவ்வகையில் புரிதலை அல்லது விழிப்புணர்வைக் கட்டமைப்பது என்ற மாற்று சிந்தனை குறித்த உரையாடலை முன்னெடுக்கும் பணியை நவீன் கட்டுரைகள் அடிநாதமாகக் கொண்டுள்ளன. நவீன் போன்ற ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இவ்வகையான உரையாடலை முன்னெடுக்க, நவீன் கட்டுரைகள் உந்துதலைத் தரும் என்று நம்புகிறேன்.

பல்வேறு சமூகப் பின்புலங்களிலிருந்து வரும் குழந்தைகள் பல்வேறுபட்டArivippu 01.indd மரபார்ந்த திறன்களைப் பெற்றிருப்பர். எடுத்தக்காட்டாக, மீனவர் சமூகக் குழந்தைகள் பெற்றிருக்கும் கடல் சார்ந்த, மீன்கள் சார்ந்த அறிவுத்திறன் பிற குழந்தைகளிடம் காணமுடியாது. பழங்குடிப் பாரம்பரியப் பின்புலக் குழந்தைகளிடம் உள்ள விலங்கினங்கள், தாவரங்கள் குறித்த அறிவு பிற குழந்தைகளுக்குக் கிடைக்காது. புதிதாகக் கட்டமைக்கப்படும் புதிய சிறுநகரச் சூழலில், இவ்விதம் பல்வேறு பின்புலங்கள் உள்ள குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் இணைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தட்டையான, ஒரே வடிவில் அமைந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதில் துன்பமுறும் மரபுசார்ந்த அறிவுடைய குழந்தைகள் பலரை நவீன் தனது கட்டுரைகளில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சென்னை நகரில், வளமான நடுத்தர அறிவுஜீவிகள் வாழும், எலியட்ஸ் கடற்கரையில் பெசன்ட் நகர் உள்ளது. கடற்கரை ஓரங்களில் மீனவக் குடிகள் வாழ்கிறார்கள். அங்குள்ள பிரம்மஞானசபை (Theosophical Society) வளாகத்தில் பள்ளி ஒன்று உள்ளது. கர்னல் ஆல்காட் உருவாக்கிய பள்ளியில் மிகுதியான மீனவக் குடி குழந்தைகள் படிக்கிறார்கள். இங்கு பாடம் நடத்துவோர் பெரும்பான்மையினர் பார்ப்பனக் குடியில் பிறந்த ஆசிரியர்கள். நண்பகலில் மீனவக் குழந்தைகள் எடுத்துவரும் நெத்திலிமீன் வறுவலை ஆசையோடு ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா?  இங்கு உருவாகும் இடைவெளி, குழந்தைகள் இயல்பான கல்வியைப் பெறும் மனநிலையை இழக்கிறார்கள். இத்தன்மை மலேசியப் பள்ளிக்கூடங்களில் வேறு வேறு வடிவங்களில் நடைமுறையில் இருப்பதை நவீன் பதிவுகள் மண்டையில் அடிக்கும் மொழியாக வடிவம் பெற்றுள்ளது. அடிப்படைச் சமூகப் புரிதல் இல்லாதவர்கள் ஆசிரியத் தொழிலில் இடம்பெறுகிறார்கள். அவர்களுக்கு அப்புரிதல் குறித்த பயிற்சி அளிக்கப்படுவதாக கூறமுடியாது. அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆசிரியப் பயிற்சி என்பது எந்திரத்தனமான வறட்டுப் பாங்கில் அமைந்தவை. எனவே ஆசிரியர்களுக்கான பயிற்சி முறைகளையும், ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிச் சூழல் சார்ந்து தனிப்பட்ட புத்தொளிப் பயிற்சிகளையும் (Refresher Course) வழங்குவது புதிய மாற்றுக்கல்வியைக் கட்டமைக்க உதவும். இதற்கான அடிப்படைப் புரிதல் கூட மலேசியா போன்ற நாடுகளில் செயல்படும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் சாத்தியமா? என்று உரையாடலை முன்னெடுக்க வேண்டும். இந்த நூலில், “தனக்கும் இந்த சமூகத்துக்கும் என்ன தொடர்பு என யோசிக்க எவ்வகையான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது? ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டங்களுக்கு, தீர்மானங்களுக்கு, நம்பிக்கைகளுக்கு, அதிகாரக் கட்டமைப்புகளுக்கு மாற்றாகச் சிந்திக்க எவ்வகையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது?” (ப.82) என்று நவீன் எழுப்பும் கேள்வி மிகச்சரியானது.

கல்வி குறித்துப் பேசும்போது, பல்வேறு கோட்பாடுகளை உதிர்ப்பதைவிட, எங்கு, எப்படி, யாருக்கு, எப்படியான கல்வியைக் கொடுப்பது என்ற புரிதல் முக்கியம். அது அநுபவம் சார்ந்த நடைமுறைக் கல்வியாக அமைதல் வேண்டும். வெறும் பயிற்சி அன்று கல்வி; மாறாக குழந்தைகள் புதிய புதிய உலகங்களில் பயணிக்க வாயில்களைத் திறப்பது கல்வி. அத்தன்மையற்ற மலேசியத் தமிழ்ப்பள்ளிக் கல்வி குறித்த புரிதலையும் அத்தன்மை சார்ந்த கோபத்தையும் உருவாக்க வல்லவையாக நவீன் கட்டுரைகள் உள்ளன. மொழியும் பொருளும் ஒன்றோடு ஒன்று இணைந்த அவரது பத்தி எழுத்து (Column) தமிழுக்கு வளம் சேர்க்கிறது.

வீ.அரசு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...