இன்றைய அறிவியல் காலத்தில், உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு நவீனத் தொழில்நுட்பம் உடனே உலகம் முழுவதும் பரவிப் புகழ்பெற்று மக்கள் மனதில் நிலைபெறுகிறது. அடுத்த கட்டமாக, உலகநாடுகள் போட்டியிட்டுக் கொண்டு அதே தொழில்நுட்பத்தை மென்மேலும் ஆய்வு செய்யவும் செம்மைப்படுத்தவும் முனைகின்றன. அதோடு, மேலும் பல சிறப்பம்சங்களை இணைத்து அதிநவீன தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தொடக்ககட்டத் தொழில்நுட்ப அறிவு ஒரு நாட்டவருக்குச் சொந்தம் என்றாலும் அதன் வளர்ச்சியில் உலகமே பங்கெடுத்துக் கொள்வதைக் காணமுடிகிறது. காமிரா முதல் கைபேசிவரை, விண்வெளி ஆய்வு முதல் மனித குளோனிங் (படியாக்கம்) வரை இதுவே நிகழ்கிறது.
உலக இலக்கிய வளர்ச்சியைக் கூர்ந்து நோக்கினால், நவீன இலக்கியம், ஒரு தொழில்நுட்பம் போன்றே எங்கும் வளர்ந்து வந்திருப்பதை நவீன இலக்கிய வரலாறு காட்டுகிறது. நவீன இலக்கியத்தின் முக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் மற்றும் புதுக்கவிதை ஆகியவற்றின் தொடக்கம் என்பது ஒரு நாட்டில், ஒரு மொழியில் தோன்றினாலும் (பொதுவாக ஐரோப்பா) அது வளரவும் மெருகேறவும் உலக மொழிகள் அனைத்தும் ஒன்றாகவே பாடுபட்டு வந்துள்ளன. புதுக்கவிதை வளர்ச்சியில் ஜப்பானியக் கவிதைகளின் ஆளுமையும் நவீன இலக்கியக் கோட்பாடுகளில் ரஷ்ய, லத்தின் அமெரிக்க நாடுகளின் கைச்சரக்கும் அதிகம் உள்ளதை ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
ஒரு தொழில்நுட்பம் உலகநாடுகளால் பரபரப்பாகப் பேசப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுவது போலவே, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கிலிருந்து வந்த நவீன இலக்கியம் என்னும் ‘இலக்கியத் தொழில்நுட்பமும்’ ஆசிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷாரின் கை, உலகில் ஓங்கியிருந்ததால் இந்த இலக்கிய ஏற்பு சுலபமாக நடைபெற முடிந்தது.
தமிழ் உட்பட ஆசிய மொழிகள் அனைத்திலுமே பாரம்பரிய இலக்கியம் என்ற ஒன்று மரபாக பன்னெடுங்காலமாக போற்றப்பட்டு வந்துள்ளது. கதை கூறுதல் அதில் முக்கியமானது. கவிதை வடிவிலோ, வசன வடிவிலோ ஒரு கதையை மையப்படுத்தி மக்களுக்குக் கூறப்பட்டது. சிறுகதை என்கிற தனிக் கட்டமைப்பு
இல்லாவிடினும் பொதுவாக ஒரு புனைவுக் கதையாகக் கூறப்பட்டு வந்துள்ளது. ராமாயணமும் மகாபாரதமும், அவற்றின் தழுவலாக வந்த பிற காவியங்களும் ஆசிய மொழிகள் அனைத்திலும் பரவியிருந்ததைக் காணமுடிகிறது. ஆகவே, மேற்கிலிருந்து வந்த நவீன இலக்கியமானது கதைகளைப் படைக்கும் இலக்கியப்பணியை, ஆசிய இலக்கிய உலகுக்குப் புதிதாக அறிமுகப்படுத்தியது என்று கூறமுடியாது. ஆனால் உரைநடை இலக்கியத்தில் கலை நயத்தையும் சமூகப் பிரக்ஞையையும் எதார்த்தத்தையும் சேர்க்கும் நுணுக்கத்தைச் சொல்லித்தந்தது என்று கூறலாம். ஆகவே, மேற்கத்திய இலக்கியம் காட்டிய கலைநயத்தோடும் பாங்கோடும் படைக்கப்பட்ட கதைகள் ‘சிறுகதைகள்’ ஆயின.
இன்று, தமிழ் இலக்கிய வடிவங்களில் சிறுகதை இலக்கியம் என்பது பலரையும் கவர்ந்த ஒன்றாக வளர்ந்துள்ளது. தமிழில் சிறுகதைகள் எழுதத்தொடங்கி ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். வ. வே. சு ஐயரின் படைப்பையும் (குளத்தங்கரை அரசமரம்) பாரதியாரின் படைப்பையும் (துளஸீபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்) மேற்கோள்காட்டி இக்கருத்தை நிறுவுகிறார்கள்.
மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் தோன்றி வளர்ந்தது 1930- களில் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதற்கு முன்பும் இங்கே சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கலாம். எனினும் போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை, அதேபோல் மலேசிய முதல் தமிழ்ச் சிறுகதையை எழுதியவர் யார் என்பதையும் அறியப் போதுமான ஆவணங்கள் இல்லை. ஆனாலும் தமிழ்நாட்டு இலக்கியத் தாக்கத்திற்கேற்ப இங்கும் சிறுகதைகளில் பல பரிணாமங்களும் புது முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
உலக மொழிகளில் எல்லாம் பிரவேசித்து மாளிகை கட்டி அமர்ந்திருக்கும் சிறுகதை இலக்கியம், தமிழுக்குள் வாழ்வது போலவே மலேசியத் தேசிய மொழியான மலாய் மொழியிலும் வாழ்கிறது. மலாய்மொழியில் சிறுகதை வளர்ச்சி, மலேசியத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியோடு ஒத்தே அமைந்துள்ளது. முதல் மலாய் சிறுகதை 1920-ல் எழுதப்பட்டதாக அஷிம் அவாங் (Hashim Awang) கூறுகிறார். நோர் பின் இப்ராஹிம் (Nor bin Ibrahim) என்பவர் எழுதிய ‘சோம்பலின் தீமை’ (kecelakaan Pemalas) என்னும் சிறுகதையே மலாய் மொழியின் முதல் சிறுகதையாக அவர் குறிப்பிடுகிறார். ஆக, மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளும் மலாய் சிறுகதைகளும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோன்றி வளர்ந்தன என்று கொள்ளலாம்.
ஆயினும், கிருஷ்ணன் மணியம் தனது தமிழ்-மலாய் சிறுகதைகள் (1957-1970) ஒப்பீட்டு ஆய்வில் மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் மலாய் சிறுகதைகளை விடப் பத்துஆண்டுகள் பின் தங்கியன என்பதை முக்கிய விஷயமாகக் குறிப்பிடுகிறார். மலாய் சிறுகதைகள் 1920-ல் தோன்றி, 1930களில் திடமான நிலையை அடைந்த பின்னரே தமிழ்ச் சிறுகதைகள் இங்கு எழுதப்பட்டன என்றும் இச்சூழலே பின்னைய ஆண்டுகளில் மலாய் சிறுகதைகளின் வேகத்தை தமிழ்ச்சிறுகதைகள் விரட்டிப்பிடிக்க முடியாமல் போனதற்கு முக்கியக் காரணமானது என்றும் குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தொடக்ககால மலேசியத் தமிழ்ச்சிறுகதைகள் தமிழ்நாட்டுச் சிறுகதைகளின் தாக்கத்தில் பிறந்தது போலவே, ஆரம்பகால மலாய் சிறுகதைகள் இந்தோனேசிய இலக்கியத் தாக்கத்தில் இருந்து பிறந்துள்ளன. ஆயினும் இரு மொழிகளிலும் அப்போதைய சிறுகதைகள் வடிவ அடிப்படையிலும் கருத்து அடிப்படையிலும் தெளிவற்ற நிலையிலேயே இருந்துள்ளதாக அறியமுடிகிறது.
அன்றுதொடங்கி, மலாய் சிறுகதைகள் பல்வேறு மாற்றங்களையும் வளர்ச்சியையும் கண்டு வந்துள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகெங்கும் ஏற்பட்ட பல்வேறு சிந்தனை அலைகளும் சுதந்திர வேட்கையும் மலாய் சமூகத்தையும் தாக்கி, அவற்றை இலக்கியத்தில் வெளிப்படுத்தின. பாக் சாக்கோ( Pak Sako), அமினு ரஷிட் (Aminu rashid) போன்றோர் எழுத்தை சுதந்திரப் போராட்டக் கருவியாகவே பயன்படுத்தினர். அவர்களின் சிறுகதைகள் மக்களிடையே சுதந்திரச் சிந்தனையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றின.
மலாய் சிறுகதை வளர்ச்சியை, பத்துப் பத்து ஆண்டுகளாகப் பிரித்து ஆய்வு செய்வது வழக்கமாக உள்ளது. இதன்வழி, மலாய் சிறுகதைகள் அடைந்துள்ள பரிணாம மாற்றங்களை நன்கு அறியமுடிகிறது. எதார்த்தவியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், இருத்தலியல் என, பல கோட்பாடுகளில் மலாய் சிறுகதைகள் படைக்கப்பட்டுள்ளன.
தமிழக, தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் ‘மணிக்கொடி காலம்’ குறிப்பிட்டு பேசப்படுவது போன்று மலாய் சிறுகதை வரலாற்றில் ‘அசாஸ் 50’ (ASAS 50) பேசப்படுகிறது. முற்போக்குப் படைப்பாளர்களை, மலாய் இலக்கிய உலகம் வெளிப்படுத்திய காலம் அது. தொடக்ககாலத்தில், ஆரம்ப மலாய்மொழிக் கல்வி கற்றவர்களே மலாய் சிறுகதைகளை எழுதி வந்தார்கள். ஆனால் 60-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மலாய் இலக்கியப்பட்டதாரிகள் பலரும் எழுத்துத்துறையில் தீவிரமாக இயங்கத்தொடங்கினர். ஆங்கில அறிவு கொண்ட இவர்களால் மலாய் சிறுகதைகள் மேலும் வலுப்பெற்றன. மலாய் சிறுகதைகள் தீவிர வாசிப்புக்கு உட்பட்ட காலமாக இதைக் குறிப்பிடலாம்.
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் அசாஸ் 50 ( ASAS 50) போன்ற தீவிரமான இலக்கியவாதிகளுக்கான இயக்கம் அமையாதது நமக்கு நடந்த கெடுவினையே. மலாய் இலக்கிய உலகம் செழித்து வளர அசாஸ் 50 மிக முக்கியப் பங்காற்றி உள்ளது. “1950-களில் தமிழ்ச்சிறுகதை உலகில் ‘கதை வகுப்புகள்’ நடத்திக் கொண்டிருந்த காலத்தில், மலாய் சிறுகதையாளர்கள் இயக்கம் காணத் தொடங்கிவிட்டிருந்தனர். மலேசியத் தமிழ்ச்சிறுகதைகள் தரத்தில், மலாய் சிறுகதைகளை விடப் பின்தங்கியதற்கு இவ்வகையான திடமான, தீவிரப்போக்குடைய அமைப்புகள் எதுவும் இங்கு தோன்றாது போனதும் ஒரு காரணம்” என்றே கிருஷ்ணன் மணியம் எழுதுகிறார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1960-ல் தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு உருவான சமுதாயச் சூழல், எல்லா இனங்களையும் சென்றடைந்தது. இலக்கிய படைப்புகளில் இத்தாக்கம் அதிகமாகவே இருந்தது. மே-13 இனக்கலவரத்திற்குப் பிறகு மலேசிய இனங்களுக்குள் தீவிரமான இனம்சார்ந்த சிந்தனைகள் வேரூன்றத் தொடங்கின. 1969 மே 13 ஆம் திகதி மலேசியப் பெரும்பான்மைக் குடிமக்களான மலாய்காரர்களுக்கும் சிறுபான்மை மக்களான சீன சமூகத்துக்கும் இடையில் புகைந்து கொண்டிருந்த கசப்புகள் முற்றி இனக்கலவரமாக மாறிய நாளாகும். இந்த இனக்கலவரத்துக்குப் பின்னணியில் இனங்களுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அரசியல் சதிகளும் நிறைந்துள்ளன. மலாய் மக்கள், சீனர்களையும் இந்தியர்களையும் வந்தேறிகளாக அடையாளப்படுத்தி தங்கள் மேலாண்மையை நிலைநிறுத்த இக்கலவரம் நன்முறையில் பயன்படுத்தப்பட்டது. தங்கள் இனம், மொழி, சமயத்தின்பால் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்திப் பலரும் சிந்திக்கத் தொடங்கியிருந்த காலம் அது. மலாய்காரர்களுக்கும் சபா சரவாக் பழங்குடிகளுக்கும் பூமிபுத்ரா தகுதி கொடுக்கப்பட்டதோடு சிறப்புச் சலுகைகளும் அரசால் ஆவணப்படுத்தப்பட்டன.
இக்காலகட்டத்தில் மலாய் சிறுகதைகளின் கருப்பொருளிலும் உத்தியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத்துவங்கின. இங்கு தமிழில் எதார்த்தவியல் படைப்புகள் வரத்துவங்கிய 70-ம் ஆண்டுகளில், மலாய் மொழியில் பல்வேறு பரிசோதனைப் படைப்புகளும் தீவிர எழுத்துகளும் தோன்ற ஆரம்பித்தன.
இன்றைக்கு, மலாய் சிறுகதைகள் வலுவான தளத்தில் நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது. தமிழ்ச்சிறுகதைகளில் அவ்வப்போது நல்ல படைப்புகள் உருவாகிறது என்றாலும் மலாய் இலக்கியத்துக்குக் கிடைக்கும் வாய்ப்புகளும் அங்கீகாரங்களும் தமிழ்ச்சூழலில் இல்லை என்பதை மறுக்கமுடியாது. இச்சூழலே தமிழ் படைப்பாளிகளுக்கு, சோர்வையும் சலிப்பையும் தந்து பின்வாங்க வைத்துவிடுகிறது. தங்களுக்குள் அளவுக்கு அதிகமான ஊக்கத்தையும், முயற்சிகளையும் ஆற்றலையும் அள்ளித் திணித்துக்கொண்டு செயல்படும் தமிழ் இலக்கியவாதிகளே ஓரளவேனும் தரமான படைப்புகளை விட்டுச் செல்கிறார்கள்.
முன்பே கூறியதுபோல, சிறுகதை இலக்கியம் ஒரே மூலத்திலிருந்து வந்தாலும் அது வெவ்வேறு தளங்களில் சமுதாயப் பின்னணி, போராட்டம், வாழ்க்கைத் தத்துவம், சமயக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கேற்ப மாறுபட்டும் கிளைவிட்டும் வளர்ந்துள்ளது. மலாய் சிறுகதைகளின் வளர்ச்சியில் மலாய் சமுதாயத்தின் பல்வேறு காலகட்டப் போராட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமயக்கொள்கைகளில் தீவிர ஈடுபாடும், மறுமையில் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டு வாழப்பழகிக் கொண்ட மலாய் சமுதாயம், எந்த அளவு மேற்கத்திய நவீன இலக்கியக் கோட்பாடுகளை ஏற்றுத் தங்கள் சிறுகதைகளில் வெளிப்படுத்தி வந்துள்ளது என்பதையும் ஆராய முடியும்
கதை கூறுதலில் தமிழுக்கு மிகத்தொன்மையான பாரம்பரியம் உண்டென்பதை யாரும் மறுக்கமுடியாது. நாம் மொழியாலும் இலக்கியத்தாலும் மூத்தவர்கள் என்பதும் உண்மை. ஆனாலும் சிறுகதை இலக்கியத்தை நாம் நவீன கதைசொல்லலாகக் கொண்டால், அதை மலாய் சிறுகதை இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது ஆக்ககரமான தேடலாகவே அமையும். கதைக்கரு, உத்திகள், கோட்பாடுகள் போன்ற பல்வேறு கோணங்களில் நாம் மலாய் சிறுகதைகளை அணுகி ஆராய முடியும். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் நாம் கொண்டுள்ள பரிச்சயமும் அனுபவமும் நமக்கு மலாய் சிறுகதைகளின் தன்மைகளை ஆராய உதவியாக இருக்கும்.
மேலும், தமிழைப்போல் அல்லாமல், மலாய்மொழி ஒரு நாட்டின் தேசிய மொழி என்கிற உயர் தகுதியோடு உலா வருகிற ஒரு மொழியாகும். அரசாங்க நிலையில் மலாய்மொழி வளர்ச்சிக்குப் பல்வேறு ஊக்கங்கள் அளிக்கப்படுகின்றன. மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் மலாய் இலக்கியத்தைக் கட்டாயப் பாடமாகப் பயில்கின்றனர். மலாய் இலக்கிய படைப்பாளர்கள் வாய்ப்பும் வசதியும் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா – DBP (மலாய் மொழி மேம்பாட்டுக் கழகம்) என்னும் அரசாங்க அமைப்பு – ஏறக்குறைய நமது மன்னர்கள் வளர்த்த தமிழ்ச்சங்கங்கள் போன்றது – மலாய் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக்கொணர முழுப்பொறுப்பெடுத்துக் கொள்கிறது. அதோடு மலாய் இலக்கியங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்வதும் பிறமொழி இலக்கியங்களை மலாயில் மொழிபெயர்த்து வெளியிடுவதும் இக்கழகத்தின் பணியாக இருக்கிறது. மேலும் ‘டேவான் சாஸ்தெரா’, ‘டேவான் புடாயா’ போன்ற இலக்கிய இதழ்களையும் DBP வெளியிடுகிறது. அரசாங்கச் சார்பாக பல்வேறு இலக்கியப் போட்டிகளை நடத்தி, படைப்பாளர்களை மேலும் ஊக்குவிக்கிறது. சுருங்கச்சொன்னால், பாரதி கண்ட கனவுகளை டி.பி.பி மலாய் மொழிக்காக செயல்படுத்துகிறது!.
ஆகவே மலாய் இலக்கியவாதிகள் தங்கள் இலக்கிய முயற்சிகளில் எந்தத் தடையும் இன்றித் தைரியமாக இயங்கமுடிகிறது. பல்வேறு இலக்கியப் பரிசோதனைகள் அங்கு நிகழ்த்தப்படுகின்றன. பலர் முழுநேர எழுத்தாளர்களாக இலக்கியத்துறையில் ஈடுபடுகிறார்கள். ஜனரஞ்சகப் படைப்புகள் ஒருபக்கம் படையெடுத்தாலும் ( நமது தினசரிகள், வார மாத இதழ்கள் போன்று ) சில தீவிர இலக்கிய முயற்சிகள் தொடர்ந்து பலராலும் எடுக்கப்படுகிறது.
இவ்வளவு ‘ஆயுதங்களோடும் கேடயங்களோடும்’ மலாய் இலக்கியத்தளம் இயங்கினாலும் அவை மதவட்டத்தைத் தாண்டாத வெள்ளெலிகளாக இருப்பதையும் நாம் கவனப்படுத்தவேண்டியது அவசியம். இஸ்லாத்தை விமர்சிக்கும் அல்லது கேள்விக்குட்படுத்தும் படைப்புகளுக்கு அங்கு இடம் இல்லை. உதாரணமாக அண்மையில் Faisal Tehrani என்னும் எழுத்தாளரின் நூல்கள் சில உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டதைக் கூறலாம். அவை ஷியா மார்க்க வழி ஆதரவு நூல்கள் என்பதை இஸ்லாமிய மன்றம் முடிவு செய்ததால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழமைவாதப் போக்குகளையும் மதத்தின் பெயரால் நடக்கும் அரசியல், சமூகக் குளறுபடிகளை வெளிப்படையாக எழுதும் பக்குவத்தை அவர்கள் பெற்றுள்ளனர்.
இறுதியாக, ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன் வழி, அம்மொழியைப் புழங்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாட்டு அறிவுத் தளத்தையும் அறிய முடியும் என்பதால் மலாய் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் பற்றி / குறித்து நாம் அறிந்திருக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதுவே ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ எழுதப்பட்டதற்கு அடிப்படைக் காரணமாகும்.
இந்த நூல் ‘கலை இலக்கிய விழா 7’ல் வெளியீடு காணும்.
திகதி: 1.11.2015 (ஞாயிறு)
நேரம்: 1.00pm
இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur
அழகான அருமையான ஆய்வு. ஆய்வுத் தளமாக எங்கோ கண்ணுக்கு அப்பால் உள்ள இலக்கியங்களை உதாரணம் காட்டாமல் நமது பக்கத்தில் அல்லது நம்மோடு இயைந்நுள்ள மலாய் இலக்கியத்தை தெரிவு செய்தமைக்கு ஆய்வாளரை பாராட்டியே ஆக வேண்டும். ஆய்வாளரே குறிப்பிட்டுள்ளது போல ஆட்சி மொழி அதிகாரத்துவ மொழி மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட மொழி காப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்ற பல் வகையினும் மேம்பட்டு மேல் தட்டு மொழியாக விளங்கும் மலாய் மொழி மற்றும் அது சார்ந்த இலக்கியமும் குறிப்பாக சிறுகதை இலக்கியமும் பல படிகள் முன்னனியில் இருப்பது இயற்கையான சூழல் போல் காணப்படினும் உண்மையில் பல்லாயிரம் காலம் இலக்கிய அனுபவம் கொண்ட பெரும்வாரி மக்கள் வாழ்வின் கொதிநிலை சமூகமாக அல்லது விளிம்பு நிலை மக்களாக வாழும் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து வாழ்க்கை வலிகளையும் அதன் காரணங்களையும் தடைகளையும் தோலுரித்துக் காட்டும் படைப்புகள் போற்றத் தக்க வகையில் தோன்றாமைக்குக் காரணம் என்ன என்பது உண்மையாகவே ஆய்வுக்கு உரிய கருதான். இங்கு நமது சம கால குடியேறிகளான சீன இலக்கிய ஆய்வும் நடத்தப் படுதல் மிக அவசியமாக கருதுகிறேன். உண்மையில் இந்நாட்டில் முழுமையான தமிழ் இலக்கிய ஆய்வுக்கு மலாய் இலக்கிய ஆய்வோடு இந்த சீன இலக்கிய ஆய்வும் முக்கியம் என்று கருதுகிறேன். இத்தகு ஆய்வுகள் மூலமே ஆட்சி மொழிக்கு வெளியில் இயங்கும் தமிழ் மொழி அடைய வேண்டிய இலக்கிய வளர்ச்சியை அடைந்துள்ளது இல்லை உண்மையாகவே பின் தங்கி நிற்கின்றதா என்பதை அளவிட முடியும்.மலாய் நாட்டின தேசிய மொழியாக இருப்பதால் அஃது அனைவரும் அறிந்த மொழியாகவும் தேர்வுக்கேனும் அதன் இலக்கிய நுகர்ச்சி பெற்றதாயும் உள்ளது. அதன் கண் சற்று இலகுவாக அதன் இலக்கியம் புக்காயும் நிலை உள்ளது. சீன மொழியும் (மென்ரின்) அதன் இலக்கியமும் அவ்வாறானதாய் இல்லை. சீனம் அறிந்தார்க்கு தமிழ் அறிதிற் மொழியாயும் தமிழ் அறிந்தாற்கு சீனம் அஃதேயும் அமைவது இத்தகு மும்மொழி இலக்கிய ஆய்வு இந்நாட்டில் வேர் கொள்ளாமைக்கு காரணமாக இருக்கலாம். இங்கு அறிதிற் கிடைக்கும் சீன தமிழ் இலக்கிய ஒப்பாய்வும் தமிழ் அன்றி சீன மொழி இலக்கிய மொழி பெயர்ப்பை வைத்து செய்யப்பட்ட ஆய்வுகளே. இத்தகு ஆய்வுகள் முழுமையான ஆய்வுகளாக கொள்ள முடியாது. ஆயினும் மூன்று மொழி இலக்கி புலத்தாரும் ஒருங்கு அமர்ந்து ஆய்ந்து ஒரு முழுமையான இந்நாட்டில் புலங்கும் மும்மொழிகளின் இலக்கிய வளர்ச்சி காட்டும் ஆய்வு நூல் கண்டால் அஃது ஒரு வகையில் முழுமை பெற்ற இலக்கிய ஆய்வாக அமையும் என்று நம்புகிறேன். ஆய்வாளர் அத்தகு முயற்சியை மேற்கொள்ள தக்க ஆற்றலும் தகுதியும் உடையவர் என்றும் நம்புகிறேன். நன்றி. தங்கள் இலக்கியப் பணி மென் மேலும் வளர வாழ்த்துகள்.
இந்த கட்டுரையின் நோக்கத்தை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. மலேசிய நாட்டின் மலாய் சிறுகதை வளர்ச்சியையும் தமிழ் சிறுகதை வளர்ச்சியையும் கட்டுரை ஆசிரியர் ஒப்பீடு செய்ய முயலுகிறார் என்றே தோன்றுகிறது. ஆயினும் அந்த ஒப்பீடு எந்த வகையிலும் நியாயமற்ற ஒன்றாகவே எனக்குப் படுகிறது. முதலாவதாக, இலக்கிய வளர்ச்சியை இரு வேறு மொழி துணை கொண்டு பார்ப்பது அபத்தம். காரணம் அதற்கான அக புற சுழல்கள் முற்றிலும் வெவ்வேறானவை. அது ஆப்பிளையும் ஆரஞ்சு பழத்தையும் ஒப்பிடுவதற்கு சமம். அந்த வளர்ச்சியை ஒரு எம்பீரிக்கள் முறையில் செய்ய விரும்பினால், இரண்டு சிறுகதைத் துறைகளின் வளர்ச்சியையும் தனித் தனியே செய்வது சரியான முறையாகும்.
தவிர, சபா சரவாக் மாநில பூர்வீகக் குடிகளுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து நாடு 1963-லேயே அளிக்கப் பட்டு விட்டது. அதற்கும் மே-13 சம்பவத்திற்கும் முடிச்சு போடுவது ஏன்?
வல்லினம் அகப்பக்கத்தில் வெளிவந்த ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ எனும் எனது கட்டுரை
குறித்த தங்களின் கருத்துகளுக்கு நன்றி
தங்களின் வினாக்களுக்கு விடை தருவது எனது கடமை என்பதால் இக்குறிப்பை எழுதுகிறேன். முதலாவதாக
எனது இக்கட்டுரையின் நோக்கம் மலாய் சிறுகதையையும் தமிழ்ச் சிறுகதையையும் ஒப்பிட்டு எழுதுவது அன்று. நான் எழுதிய மலாய் சிறுகதைகள் தொடர்பான விமர்சன நூலுக்கு முன்னோட்ட அறிமுகத்தை ஏற்படுத்தும் நோக்கோடுதான் அக்கட்டுரையை எழுதினேன். என் நூல் சில சிறந்த மலாய் சிறுகதைகளின் உட்பொருளை ரசனைவிமர்சனத்தின் அடிப்படையில் விமர்சிக்கின்றது. இதை நீங்கள் அந்நூலை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்நூல் மலேசிய வாசகர்களை மட்டும் நோக்கமாக கொண்டதன்று. அது தமிழகத்திலும் விற்பனைக்கு உள்ளது. ஆகவே எல்லா தமிழ் வாசகர்களும் புரிந்து கொள்ளும் பொருட்டு மலேசிய மலாய் சிறுகதைகள் குறித்த ஒரு பொதுவான பார்வை மிக அவசியம். அதன் அடிப்படையில்தான் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நூலிலும் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, நான் மலேசிய தமிழ் சிறுகதைகள் தொடர்பாக முன்வைத்திருக்கும் ஒப்பீட்டு கருத்துகள் விரிவுறைஞர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் கண்டடைவுகள். ஆகவே, மலாய் சிறுகதைகளை எப்படி தமிழ் சிறுகதைளோடு ஒப்பிட முடியும் என்ற வினா பொருளற்றது. ஒரே நாட்டில் வாழும் இரண்டு சமூகங்களின் இலக்கிய பரப்பும் சிந்தனையும் வளர்ச்சியும் தேக்கமும் எவ்வகையில் இருக்கிறது என்பதை ஒப்பிட்டு நோக்குவது பிழையன்று. நிச்சயமாக மலாய் சிறுகதைகளின் கருத்து சாராம்சங்கள் தமிழ் சிறுகதை சாராம்சங்களோடு வேறுபட்டுதான் இருக்கும். ஆனால் அது ஒப்பீட்டு ஆய்வுக்கு தடையாகாது என்றே நினைக்கிறேன். இதை கிருஷணன் மணியம் வெற்றிகரமாக தன் ஆய்வில் கையாண்டுள்ளார்.
அடுத்து, கிழக்கு மலேசியா , சிங்கபூர் மற்றும் மேற்கு மலேசிய ஒருங்கினைப்பு நடந்தது 1963-ல் தான். அதற்கும் மே கலவரத்திற்கும் தொடர்பில்லைதான். ஆயினும் மலேசியாவில் பூமிபுத்திரா பெரும்பான்மையை நிறுவுவதில் மலேசிய உருவாக்கம் துணைபுரிந்தது என்பதை மறுக்க முடியாது. எனினும் கட்டுரையில் அந்த வாக்கியம் பிழையான இடத்தில் இருப்பதால் பொருள் மயக்கம் ஏற்படுவதற்கு காரணமாகின்றது என்பதை உணர்கின்றேன். அடுத்த பதிப்பில் திருத்தி விடுகிறேன்.
நன்றி
அ.பாண்டியன்