வகுப்பறையின் கடைசி நாற்காலி

cover new‘வல்லினம்’ இணைய இதழின் ஆசிரியர், ‘பறை’ எனும் ஆய்விதழின் ஆசிரியர், ‘யாழ்’ எனும் மாணவர் இதழின் ஆசிரியர், கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்,திறனாய்வாளர், சினிமா வசனகர்த்தா, பதிப்பாளர் என பன்முகம் கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் நவீன், தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிற கட்டுரைகளே இவை.

‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் கட்டுரைத்தொகுப்பின் மூலம் ஏற்கனவே நமது கவனத்தைப்பெற்றவர் நவீன். சமகால புனைவெழுத்துகளை அலசி ஆய்வு செய்து அதன் உள்ளார்ந்த அரசியலை மதிப்பீடு செய்கிற அந்நூல், தமிழில் அரிதாகி வருகிற விமர்சன இலக்கியத்திற்குப் புதிய வரவாய் அமைந்தது.

இப்படி அவ்வகையினல்லாது தனது ஆசிரியப்பணியில் ஏற்பட்ட தனது வகுப்பறை அனுபவங்களை இங்கே நூலாக்கித்தந்திருக்கிறார்.

இவற்றை முழுமையாக வாசித்தபின் இதனை கட்டுரைகள் என்று சொல்லலாமா அல்லது அவரது நாட்குறிப்புகள் என்று சொல்லலாமா என்றெல்லாம் எனக்கு யோசனைகள் மேலிட்டன. ஆனால் இவற்றை வகைப்படுத்தி எந்த சட்டகத்தினுள்ளும் என்னால் அடைக்க முடியவில்லை.

இது புனைவல்ல; நவீன் எனும் பள்ளி ஆசிரியரின் ரத்தமும் சதையுமான அனுபவம். தான் வாழும் சமூகம் மீதான நேசமும் அக்கறையும் அதன் கரடுதட்டிப்போன மூடத்தனங்களின் மீது சீற்றமும் கைத்துப் புளித்துப்போன பழம்பெருமைகள் மீதான வன்மமும் இவையெல்லாம் தெறித்து விழுகிற முதற்கை அறிக்கை யிது.

மலேசியாவின் கல்விச்சூழலில் அவருக்கு நேர்ந்த அனுபவங்களிவை. தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு இது எந்த அளவுக்கு பொருந்துமென கேள்வியெழுப்பலாம்.

ஏனெனில் மலேசியக் கல்விச்சூழலும், தமிழ்நாட்டுக்கல்விச்சூழலும் ஒன்றல்ல.
எனினும் ஒன்றை என்னால் சொல்லவியலும் . எழுத்தறிவு இயக்கத்திலிருந்து இன்றைய ‘அனைவருக்கும் ஆரம்பக்கல்வி’ [‘சர்வ சிக்‌ஷா அபியான்’] இயக்கம் வரை பலவிதமான ‘கல்வி’ செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு சிறிய அளவிலாவது ஈடுபட்டிருந்த எனக்கு ,நவீன் என்ற பள்ளியாசிரியரின் அனுபவங்கள் மிக முக்கியமானவையாகப்படுகின்றன.

மலேசியக் கல்வித்திட்டமோ,கல்விச்சூழலோ தமிழ்நாட்டைப் போன்றதல்லவெனினும் மாணவர்களைத் தேர்வுக்கு தயார்செய்வதிலும் மதிப்பெண்களை அள்ளிக்குவிக்க அவர்களை கடும் ஆயத்தங்களுக்கு உட்படுத்துவதிலும் எல்லாம் ஒன்றுதானென இவரது அனுபவங்கள் நமக்குச்சொல்கின்றன.

‘திருட்டுத்தனம் செய்தாவது தேர்வில் தேறிவிடு!’ என்பதுதான் இன்று நாம் வந்து சேர்ந்திருக்கிற ‘ கற்றல் முறை ’

ஒரு பள்ளியில் எண்பது சதவீதம் மாணவர்கள் தேர்வில் வெற்றியென்றாலே போதுமானதுதான். ஆசிரியர்கள் அதனைக் கொண்டாடத்தான் செய்வார்கள். தோல்வியடைந்தவர்கள் பற்றி அவர்களுக்கு எந்த கவலையுமிருப்பதில்லை. அதற்குச்சூழல் அவர்களை அனுமதிப்பதுமில்லை. இவரது கட்டுரைகள் நமக்கு சொல்வது இதைத்தான்.

இன்றைக்கு நமது கல்விச்சூழல் ஆசிரியரை மையம் கொண்டதாக அமைந்திருக்கவில்லை என்பது உண்மையே. கல்வித்திட்டம்[Educational system],கல்வி நோக்கு [Curriculum],பாடத்திட்டம் [Syllabus],தேர்வுமுறை [Exams and assessments] இவற்றினைச் செயலாக்கும் ஒரு கருவிதான் இன்றைய ஆசிரியர்.

கல்வித்திட்டமும்,கல்வி நோக்கும்,பாடத்திட்டமும்,தேர்வுமுறைகளும் ஒரு மாணவருக்கு சிநேகமானதாக , அம்மாணவரின் சூழமைவுக்கு உகந்ததாக நட்பு பாராட்டுவதாக,அண்மையானதாக இல்லாதிருப்பினும் அவரைத் தேர்வில் வெற்றிபெறச்செய்வதையே ஓர் ஆசிரியர் தன் கடமையாகக் கருதிடல்வேண்டும். ஓர் ஆசிரியரின் பணிக்கடன் இங்கே இவ்வாறேவரையறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் ஓர் ஆசிரியர் , அவர் தனித்து சுயேச்சையாக என்ன செய்துவிடவியலும்.?ஒன்றும் செய்துவிடவியலாது! இப்படியொரு எதார்த்தமிருப்பதும் உண்மைதான்.

இந்த பின்னணியில்தான் நவீனின் அனுபவங்கள் நமக்கு முக்கியமாகவையாகப்படுகின்றன.

மதிப்புமிக்க கல்வியாளர் பாவ்லோ ஃபிரெயர் சொல்கிறார், “ 1000 ரூபாயை

பிரளயன்

பிரளயன்

அல்லது 1000 வெள்ளியை 3% வட்டிக்கு வங்கியில் இருப்பு வைத்திருந்தால் 6மாதத்திற்குப் பிறகு உனக்கு எவ்வளவு கிடைக்கும்? எனும் சாதாரண எண்கணிதத்தைக் [arithmetic] இன்றைய நமது பள்ளியில் ஒரு மாணவன் கற்றுக்கொள்கிறான். பலரைப் பொருத்தவரை இது ஒரு சாதாரண கணிதப்பாடம்தான். ஆனால் இதில் ஒரு கருத்தியல் இருக்கிறது. முதலாளித்துவ பொருளாதார சிந்தனை பொதிந்திருக்கிறது. சந்தடியில்லாமல் அம்மாணவனது சிந்தனைக்குள் முதலாளித்துவ பொருளாதார மதிப்பீடுகளை இப்பாடம் புகுத்திவிடுகிறது. நான் கேட்கிறேன் ,அப்படியெனில் நாம் சொல்லிக்கொடுக்கிற கணிதப் பாடம் நடுநிலையானதா?.!?” [page 40,Reading Writing Reality- Paulo Freire,Published by Indian University Press,Chennai -600018,May 2012]

கணிதப் பாடம் மட்டுமல்ல கல்வியே நடுநிலையானதல்ல என்பதைத்தான் ஃபிரெயர் இங்கே சொல்லவருகிறார்.

வழங்கப்படுகிற நமது கல்வியைப்பற்றி இத்தகைய கருத்துக்கள் ஒருபுறமிருந்தாலும் இன்றைய நமது கல்வி , நிலவுகிற எதார்த்தத்தை மாற்றியமைக்க உதவுவதில்லை. மாறாக அதனை நியாயப்படுத்தவே செய்கிறது. முதலாளித்துவம் பிரகடனம் செய்கிற ‘சமத்துவம்’ எனும் மதிப்பீட்டைக் கூட சில சமயம் அது கேலிக்கூத்தாக்கி விடுகிறது.

‘நத்தையில் முத்து’ , ‘சேற்றில் செந்தாமரை’ இவற்றை வாக்கியத்தில் அமைத்து எழுது என்கிற மொழிப்பாடம் மலேசியாவில் மட்டுமல்ல நமது தமிழ் நாட்டுப் பள்ளிகளும் அறிந்த ஒன்றுதான்.

இந்நூலில் “தமிழ் இலக்கியங்கள் உதவாக்கரை” எனும் ஒரு கட்டுரை, அதில் நவீன் தனது அனுபவத்தை எழுதுகிறார்.

“ ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரைபோல‘
பொருள் : தாழ்ந்த இடத்திலும் உயர்ந்தோர் தோன்றுவர்.

என்று ஒரு பாடம்.

இது குறித்து ஒரு மாணவன் கேள்வியெழுப்புகிறான்.. ‘சார்! தாழ்ந்த இடத்திலும் உயர்ந்தோர் பிறப்பாங்கன்னு சொல்லியிருக்காங்க… என்னமோ அது ரொம்போ ஆச்சரியம் மாதிரி சொல்லியிருக்காங்க. உயர்ந்த இடத்திலும் தாழ்ந்தோர் பிறப்பாங்கன்னு சொல்லலயே” என்று .

அதற்கு நவீன் இவ்வாறு பதிலளிக்கிறார்.
“இலக்கியம் என்பது கல்வெட்டு அல்ல. காலத்திற்கு உதவாதவற்றை தூக்கி எறிந்துவிட வேண்டும். அதுவும் தமிழ் இலக்கியங்கள் பாகுபாடுகளை விதைப்பவை. இலக்கியம் மட்டுமல்ல தமிழ் இலக்கணமும் அவ்வாறுதான்”.

“அந்த மாதிரி தூக்கி எறியலாமா சார்… தமிழ் சார்…” என்கிறான் ஒரு மாணவன்.

“தமிழ்தான். அது நெடுங்காலம் வாழனும்னா தேவையற்றத வீசியாகனும்.” இது நவீனின் பதில்.

கல்வியின் நோக்கமோ தேர்வுமுறைகளோ வகுப்பறையில் அங்கே நடந்த இவ்விவாதங்களைப் பொருட்படுத்தப்போவதில்லை. ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல’ என்பதை வாக்கியத்தில் அமைத்து எழுதும்போதே ஒரு மாணவருக்கு மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த பாடத்தை எப்படிவேண்டுமானாலும் ஓர் ஆசிரியர் சொல்லித்தரவியலும்.எனினும் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் சமூக உளவியலை, மனக்கட்டமைவை, விவாதிக்கிற இடமாக இங்கே வகுப்பறையினை மாற்றிவிடுவதில்தான் ஓர் ஆசிரியர் முக்கியத்துவம் பெறுகிறார். பள்ளிக்கூடமென்பதும் வகுப்பறை என்பதும் சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிற ஒன்று அல்ல. இச்சமூகத்தின் ஓர் அங்கம். நமது கல்வி, அதன் நோக்குகளையெல்லாம் தாண்டி ஓரு மாணவருக்கு இதனை உணர்த்துமாயின் நல்லதுதான். இதனை யார் செய்வது? அது ஆசிரியர்களால் மட்டுமே முடியும் என்பதே நாம் அறிய வேண்டிய பேருண்மை.

நவீனின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

இளஞ்சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அத்துமீறல்கள் இவை குறித்த விழிப்புணர்வை உருவாக்க தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்களிடத்தில் பயிலரங்குகளை தமிழ்நாடு அரசு நடத்தியது. தங்களிடம் நெருங்கிப் பழகும் பெரியோர்களை, எந்த அளவுக்கு தங்களைத் தொட்டுப் பழக சிறார்கள் அனுமதிக்கலாம் ,அவற்றில் ‘சிறந்த தொடுதல்’ எது , ‘மோசமான தொடுதல்’ எது, எவை பாலியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை மாணவர்களுக்கு உணர்த்துகிற பயிலரங்குகள் அவை. மேலும் பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறார்களை இனங்கண்டு கொள்ளவும்,அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவைப்படுகிற ‘மனவளத்துணைகளை’ [counselling] நல்க ஆசிரியர்களை ஆயத்தம் செய்யவும் இப்பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

இப்பயிலரங்குகள் நடத்தப்படும்போது இது குறித்து முணுமுணுக்காத ஆசிரியர்கள் மிகவும் குறைவே. “இப்ப எதுக்குங்க இதெல்லாம்.? இந்த காலத்துப்பசங்களுக்கு இதெல்லாம் தெரியாதுன்னா நினைக்கிறீங்க.? இல்லாத பிரச்சினையை நாமே கிளப்பிவிடறோம்!” என்றெல்லாம் சில ஆசிரிய நண்பர்கள் சொன்னதை நானே கேள்வியுற்றிருக்கிறேன்.

இப்படிப் பேசுகிற ஆசிரியர்கள் ‘பழைய பஞ்சாங்கங்களாக’ இருக்கிறார்களென்பது மட்டுமல்ல ,மாணவர்களுக்கு இளஞ்சிறார்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று தீர்மானிக்கிற அதிகாரத்தை தாங்களே கையிலெடுத்துக் கொள்கிறவர்களாக , ‘குழந்தைகளின், சிறார்களின் உரிமை’ பற்றிப்பேசும் புதிய சகாப்தத்தில் ஓர் அடி தூரம் கூட உள்நுழையாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.

ஒன்றிய அளவில் அமைக்கப்பட்டுள்ள ‘வட்டார வள மையங்களில்’ [cluster resource centre] , இத்தகைய பயிற்சிகள் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படுகிறதாக சொல்லப்படுகிறது. எனினும் இத்தகைய பிரச்சினைகளை இனங்கண்டு சிறார்களை மீட்டதாகவோ, பாதிப்புக்குள்ளான சிறார்களுக்கு மனவளத்துணை அளிக்கப்பட்டதாகவோ நமக்கு எந்த செய்திகளுமில்லை.

நவீன், தனது வகுப்பறையில் இப்படி பாதிப்புக்குள்ளான ஒரு சிறுமியை இனம் காண்கிறார். அது குறித்து குறுக்கீடு செய்கிறார். பள்ளியிலுள்ள நெறிவுரைஞரிடம் பிரச்சினையை கொண்டு செல்கிறார். தனது குடும்ப உறுப்பினரால் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் அச்சிறுமி அதிலிருந்து மீட்கப்படுகிறாள். இது போன்ற விஷயங்களைக் கண்காணிக்க, தலையிட ‘நெறிவுரைஞர்’ எனும் அலுவலர் ஒவ்வொரு மலேசியப்பள்ளியிலும் பணிபுரிகிறார் என்பது தமிழ்நாட்டினர் அறிந்து கொள்ள வேண்டியவொன்று.

’திரு நங்கையர்’ , ‘திருநம்பியர்’ குறித்த விழிப்புணர்வு ,புரிதல், பரவலாகி வருகிற, அவர்களது வாழ்வுரிமையை உரத்துப்பேசுகிற காலமிது. ‘மாற்றுப்பாலினத்தவராக’ மாறிக்கொண்டு வருகிற ஒரு மாணவரை மாணவியை நமது வகுப்பறைச்சூழல் எவ்வாறு பார்க்கிறது ,ஓர் ஆசிரியர் எவ்வாறு பார்க்கிறார்..?அவர்களுக்கு நேசமான,பாதுகாப்பான சூழலை நமது பள்ளிகளும் வகுப்பறைகளும் உருவாக்கித்தருகிறதா.? நாம் கேட்கவேண்டிய பெரிய கேள்விகளிவை.!

‘அவள் பெயர் அம்பிகா’ எனும் கட்டுரையில் இத்தகைய நிலையில் உள்ள ஒரு மாணவர் தொடர்பாக நவீன் தனது அனுபவங்களைப்பகிர்கிறார். இவருக்கு இவ்விஷயத்தில் புரிதலை ஏற்படுத்தியது ,‘லிவிங் ஸ்மைல் வித்யா’ எழுதிய “நான் வித்யா’ எனும் நூல்தான் என்பதனையும் குறிப்பிடுகிறார்.

பத்தி எழுத்துக்களாக ஒரு பத்திரிகையில் தொடர்ந்து எழுதப்பட்டுவந்த 24 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கைகளிலே கயிறுகள் கட்டிக்கொண்டுவரும் மாணவன், கடவுள் ஆசாமிகளை ,திடீர் சாமியார்களை சிலாகிக்கும் மாணவன், திக்குவாயுள்ள மாணவன், அடிக்கடி சிரித்துக்கொண்டிருக்கும் மாணவி, கால்பந்தை அடித்து உதைக்க ஆசைப்படும் மாணவன்,சித்திரம் வரைய வாய்ப்பில்லையென்றதும் கல்வியையே துறக்கத்துணிகின்ற ஒரு மாணவி, தன்னைக் கேலி செய்யும் ஒரு ஆசிரியருக்கு ஞானம் புகட்டும் ‘ஆடு மேய்க்கும்’ குடும்பத்திலிருந்த வந்த மாணவன், இப்படி நவீன் சித்தரிக்கிற வகுப்பறை அனுபவங்கள் பன்முகப்பரிமாணம் கொண்ட மாணவ சமூகத்தை மட்டுமல்ல, ஒரு புதிய ஆசிரியரை அவர் முன் நிறுத்தப்படும் புதிய சவால்களையும் நமக்கு அறிமுகம் செய்கின்றன.

இறுதியாக ஒன்று , மேற்குலகத்தின் குறிப்பாக அமெரிக்காவின் மாற்றுக்கல்விச் சிந்தனைகளில்,“விசாரணைக்கல்வி அல்லது ஆய்வாராய்வுக்கல்வி” [Inquiry education] எனும் அணுகுமுறையை அறிமுகம் செய்துவைத்த நீல் போஸ்ட்மேன்,சார்லஸ் வெய்ன்கார்ட்னெர் என்ற இரு அமெரிக்கக்கல்வியாளர்கள், “கற்பித்தலென்பது கலகஞ்செய்வதே” [Teaching as a subversive activity] எனும் ஒரு நூலை எழுதியுள்ளனர்.

ஒரு மாணவரை பதிலளிக்க தயார் செய்வதை விட கேள்விகேட்க வைப்பதிலே முனைப்பு கொண்டது இக்கல்வி முறை. இந்த ஒரு கருத்தைக்கொண்டே இவ்வணுகுமுறையை மேலோட்டமாகவோ எளிமைப்படுத்தியோ புரிந்து கொள்வதில் மிகப்பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. அது மேலும் ஆழமானது; விசாலமானது.எனினும் கற்பித்தலென்பதை கலகச்செயல்பாடாகவே இவ்வணுகுமுறை பார்க்கிறது.

‘கலகம்’ என்பதனை ‘ஆட்சியதிகாரத்தை அல்லது அரசியல் அதிகாரத்தை’ கைப்பற்ற முயலும் ஒரு செயல்பாடாக மட்டுமே நாம் இங்கே பார்க்கத்தேவையில்லை. நிலவுகிற அனைத்தையும் நியாயப்படுத்திகொண்டிருக்கிற நமது ‘பொதுப்புத்தியோடு’ மல்லுக்கு நிற்பதும், அதில் புதிய திறப்புகளை ஏற்படுத்த முயல்வதும் கூட ஒரு கலகச்செயல்பாடுதான்.

நவீனின் வகுப்பறை அனுபவங்களை நான் இவற்றோடே பொருத்திப்பார்க்க விரும்புகிறேன்.

அவ்வகையில் நமது ஆசிரிய சமூகத்தினர் மட்டுமல்ல பள்ளிக்கல்வியில் அக்கறை கொண்ட அனைவரும் அவசியம் படித்து விவாதிக்க வேண்டிய நூலாகவே நான் இதனைக்கருதுகிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கும் இது போன்ற அனுபவங்களிருக்கலாம். அவையும் பதிவு செய்யப்படவேண்டும்; நூலாக்கம் பெற்று ஆசிரிய சமூகத்தினரிடையே விவாதிக்கப்படவேண்டும். உண்மையில் ,இச்செயல்பாடுகள் ,நமது கல்விச்சூழலை செழுமையாக்க ஒரு சிறிய அளவிலாவது உதவிடும் என நான் நம்புகிறேன்.

இந்நூலை வெளியிடுகிற புலம் பதிப்பகத்திற்கும் நண்பர் லோகநாதனுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

                                                                   0 0 0
பின்குறிப்பு: இந்நூலில் சில சொற்கள் கையாளப்படுகின்றன. அவை தமிழ்நாட்டுச் சூழலில் முறையாக புரிந்து கொள்ளப்படவேண்டும்

மெது நிலை மாணவர் : அங்கே வகுப்பறையை இரண்டாகப்பிரிக்கின்றனர். ஆசிரியர் அதிக கவனமெடுத்துச் செயல்படவேண்டிய மாணவர்களை, ‘மெது நிலை மாணவர்’ எனத் தனி வகுப்பாகப் பிரித்துக் கற்பிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இத்தகைய மாணவர்கள் கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள் அல்லது அமரவைக்கப்பட்டிருப்பார்கள்.

கட்டொழுங்கு ஆசிரியர் : தார்மீகக்கல்வி அல்லது விழுமியக்கல்வி[moral education or value education] இவற்றை பள்ளியில் நிலைநாட்ட பொறுப்பேற்றுள்ள ஆசிரியர்.

யூபிஎஸ் ஆர் தேர்வு : மலேசியாவில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு.

நெறிவுரைஞர் : மாணவர்களுக்கு மனவளத்துணை[counselling] அளிப்பவர்.

 

நூல் வெளியிடப்படும் விபரங்கள் :

 

மைஸ்கீல்ஸ் அறவாரியம் மற்றும் வல்லினம் இலக்கியக் குழு 

ஏற்பாட்டில்

 ‘மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும்’

இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலும்பூர் 

திகதி: 11.10.2015 (ஞாயிறு)

நேரம்: மாலை 3.30 – 5.30 வரை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...