நடமாடும் பள்ளிக்கூடம்

cover 0113.5.2017- மலாயா பல்கலைக்கழகத்தில் வெளியீடுகாணும் ம.நவீனின் ‘மாணவர் சிறுகதை’ எனும் நூலுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி அவர்கள் எழுதிய அணிந்துரை. யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப்பட்டறையுடன் நடைபெறும் இந்த வெளியீட்டில் கலந்துகொள்ள மாணவர்களின் முன் பதிவு அவசியம். தொடர்புக்கு: தயாஜி 0164734794 / 0149005447

சிறுகதை என்கிற நவீன இலக்கியவடிவம் தமிழில் தோன்றிய நாள் முதலே அது நம் நாட்டிலும் நல்வரவுப்பெற்று சிறப்பாக வளர்ந்து வந்தது எனலாம். நல்ல பல சிறந்த தமிழ்ச்சிறுகதைகளை நம் எழுத்தாளர்களும் படைத்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், அவை அனைத்தும் முதிர்ந்தவர்களால் (adults)  முதிர்ந்தவர்களுக்காக எழுதப்பட்டதாகவும் அவர்கள் வாழ்வியலையும் (காதல்-கல்யாணம்-குடும்பம்) உணர்வுகளையும் உறவுகளையும் படம்பிடித்துக் காட்டுவதாகவும் அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையப் பொருளாகக் கொண்டுஎழுதப்பட்டதாகவும்தாம் அமைந்திருந்தன. எழுத்தாளர்களும் எழுத்தாளர் அமைப்புகளும் இந்த வட்டத்துக்குள்ளேயேதான் தங்களுடைய நாட்டத்தையும் செயல்திட்டங்களையும் (போட்டிகள், பரிசுகள், விருதுகள், பயிற்சிப்பட்டறைகள்) வைத்துக்கொண்டனர்.

ஆனால், பன்னெடுங்காலமாய் ஆங்கிலமொழியிலும் மலாய்மொழியிலும் ஆலமரமாய் வளர்ந்துவிட்ட வேறுசில சிறுகதை வகைகளான (genre) சிறுவர் சிறுகதை (Cerpen Kanak-Kanak) மற்றும் இளையோர் சிறுகதை (Cerpen Remaja) படைப்பதில் யாரும் ஆர்வம் காட்டியதாகவோ கால்பதித்ததாகவோ தெரியவில்லை. முதிர்வயதினருக்காக எழுதப்பட்ட அதே அமைப்பிலும் வடிவிலும் இலக்கணத்திலும் சிறுவர்களுக்காகவும்  இளையோர்களுக்காகவும் தமிழில் சிறுகதைகள் எழுதப்படாமல் இருந்தது.

இருந்ததும் அல்லது தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வாசிப்புக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம் சிறுவர் இலக்கியம் என்ற பேரில் பாட்டிக் கதைகளும், நீதிக்கதைகளும், நாடோடிக் கதைகளும், பழங்குடிமக்கள் அல்லது நமது முன்னோர்கள் வாய்மொழியாக தலைமுறைதோறும் சொல்லிவந்த பண்பாட்டுக் கலாச்சாரக் கதைகளும், பண்டைய நம் மன்னர்களின் மற்றும் மறவர்களின் வீரத்தீர-சாகச வரலாற்றுக் கதைகளும் புராண-இதிகாச-மாயாலோகக் கதைகளுமே ஆகும்!

இவ்வகைக் கதைகளின் பயன்பாட்டைக் குறைகூறுவதற்கில்லை. இவை அனைத்தும்IMG-20170505-WA0009 சிறுவர்கள் தங்கள் மொழியாற்றலை வளர்த்துக்கொள்ளவும் சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் வாசிப்புப் பழக்கத்தைப் வழக்கமாகிக் கொள்ளவும் துணைபுரிந்தன என்றால் அது மிகை இல்லைதான். ஆனால், இவ்வகை கதைகளினால் சிறுவர்கள் சுயமாகச் சிந்தித்து தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி தங்கள்  சொந்த படைப்புகளைப் (புனைவுகதைகளை) படைத்திட துணைபுரியாமல் போனது எனலாம். தலைமுறை தலைமுறையாகச் சொல்லி-எழுதிவைத்தவை நிகழ்கால வாழ்க்கைக்கு (contemporary) சம்மந்தமில்லாத தங்கள் நிஜ வாழ்வியலுக்கும் போராட்டத்துக்கும் வயதிற்கும் நேரிடைத் தொடர்பேதுமில்லாத கற்பனைக் கதைகளையே மீண்டும் மீண்டும் சொல்லியும் மீண்டும் மீண்டும் வாசித்தும் எழுதியும் வருவதற்குத்தான் அவை வழிவகுத்தனவே ஒழிய புதுப்புது கதைகளை – இளைய வயதினரின் நிஜக் கதைகளை, கற்பனைகலந்த உண்மைக் கதைகளை, நிகழ்காலக் கதைகளைக் கூறுவதற்கும் வாசிப்பதற்கும் பின்னர் சுயமாகப் கதைகளைப் புனைவதற்கும் வழிவகுக்காமல் போயின. இதனாலேயே மலேசியத் தமிழ்ச் சிறுவர்களுக்கு (அதாவது இளம்வயது மாணவர்களுக்கு) அவர்கள் முன்மாதிரியாகக் கொள்வதற்கு ஏற்ற சிறுவர் சிறுகதைகள் இல்லாதிருந்த ஒரு பெருங்குறை இருந்து வந்தது.

மலாய்மொழியில் அமைந்திருந்தது போன்று, மலேசியச் சூழலுக்கேற்ற கதைக்கருவும் கதைக்களமும் கதைமாந்தர்களும் மண்வாசனையோடு கூடிய சிறுவர் சிறுகதைகள் வெளிவராமல் இருந்தன; மலேசியத் தமிழ் எழுத்தாளர்களும் இந்தவகை கதைகள்மீது ஆர்வம் காட்டாமலேயே கதைகளைப் புனையாமலேயே ஏனோ விட்டுவிட்டனர். அதனால், சிறுவர் சிறுகதைகளைச் சிறப்பாக  எழுதும் எழுத்தாளர்களும் உருவாகாமல் போனார்கள்; இளம்வயது  மாணவர்களும் சிறுகதைகளை எழுதும் ஆர்வத்தையும் வாய்ப்பையும் திறனையும் இழந்துபோனார்கள்.

இந்தக் குறைபாட்டினைத் தீர்க்க – இரண்டு அணுகுமுறைகள் அல்லது வியூகங்கள் அவசரமான அவசியமாகக் கருதப்பட்டது. ஒன்று, சிறுவர் சிறுகதைகளை எழுத நிறைய எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும். மற்றொன்று உள்நாட்டிலேயே நிறைய சிறுவர் சிறுகதைகள் வெளியிடப்பட அல்லது பதிப்பிக்கப்பட வேண்டும். இவற்றை எங்கிருந்து தொடங்கலாம் என்று யோசித்த போது, அடிப்படையிலிருந்து அதாவது தொடக்கப்பள்ளி சிறுவர்களிடமிருந்தும் இடைநிலைப்பள்ளி இளையோரிடமிருந்தும் தொடங்கினால்தான் சாத்தியமாகும் என்று தோன்றியது. அப்படித் தொடங்கும்போது ஒரு வரையறுக்கப்பட்ட நீண்டகால திட்டத்தின் அடிபடையிலும் படிப்படியான அணுகுமுறையினாலும் முறையான கற்றல்-கற்பித்தலினாலும் தொடர்பயிற்சியினாலும்தான் செய்துமுடிக்க இயலும் என்றும் பட்டது.

இதனைத் தமிழ்மொழியின் ஊற்றுக்கண்ணாகவும் நாற்றங்காலாகவும் திகழும் தமிழ்ப்பள்ளியிலிருந்தே தொடங்கினால்தான் வெற்றிப்பெற முடியும் என்ற உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டியதாக இருந்தது. இப்படி ஒரு தேவை தோன்றிய காலக்கட்டத்தில்தான் ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக்கான கலைத்திட்டம் சீரமைக்கப்பட்டு புதிய கலைத்திட்டங்கள் அறிமுகம் கண்டன. அதில் கேட்டல்-பேச்சு, வாசிப்பு, எழுத்து எனவரும் மொழித்திறன்களில் கதைப்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய கலைத்திட்டத்தைக் காட்டிலும் இது முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆக்கச்சிந்தனையாக புனைவுத் திறனையும் படைப்பாற்றலையும் மாணவர் மத்தியில் வளர்த்துவிடும் பாடத்திட்டமாக அமைந்திருந்தது.

அதனையே ஒரு ‘சிறப்பு’ உரிமமாக எடுத்துக் கொண்டு மலேசியத் தேர்வு வாரியத்தில் நான் தமிழ்மொழிக்கான அதிகாரியாகப் பணிபுரிந்த காலத்தில் 2005ஆம் ஆண்டுத்  தொடங்கி யூ.பி.எஸ்.ஆர்.(UPSR) தேர்விலும், தொடர்ந்து பி.எம்.ஆர்.(PMR) தேர்விலும் அதன்பின் எஸ்.பி.எம்.(SPM) தேர்விலும் தமிழ்மொழித் தாள்களில் படைப்பிலக்கியப் பகுதியைக் கட்டாயப் பகுதியாகக் கொண்டு வந்தேன். கருத்துணர்த்தாள்களில் சிறுகதைப் பகுதிகளைக் கட்டாயமாக வாசிக்கச் செய்து மதிப்பீடு செய்த வேளையில் எழுத்துத்தாள்களில் சிறுகதைகளைக் கட்டாயமாக எழுதச் செய்து மதிப்பீடு செய்தோம். அப்படி, யூ.பி.எஸ்.ஆர்.(7-12 வயது மாணவர்கள்) தொடங்கி எஸ்.பி.எம்.(13-18 வயது மாணவர்கள்) வரை சிறுகதைப்பகுதியைக் கட்டாயமாக்கியதன் விளைவு, அதுவரையில் தமிழ்மொழிக் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளில் அங்கம் வகிக்காதிருந்த சிறுகதைகள் முக்கியத்துவம் பெற்று வகுப்பறைகளை அலங்கரித்தன. தேர்வில் கட்டாயம் சிறுகதை இடம்பெறும் என்று ஆனவுடன் பாடம் போதிக்கும் தமிழாசிரியர்கள் முதல் பாடம் கற்கும் மாணவர் வரை எல்லோருமே சிறுகதைகள் பக்கம் திரும்பினர். எல்லோருமே கட்டாயமாகச் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கினர்.

தேவை ஏற்பட்டதும் அதற்கான முனைப்பும் உற்பத்தியும் செயல்திட்டங்களும் அரங்கேறுவதும் இயல்புதானே. சிறுவர் – இளையோர் சிறுகதைகளைப் படைத்திட எழுத்தாளர்களும் முனைப்புக் காட்டத் தொடங்கினர். பதிப்பகங்களும் ஆசிரியர் அமைப்புகளும் (குறிப்பாகத் மாவட்ட, மாநில அளவிலான தமிழ்மொழிப் பணித்திய-பாடத்திட்டக் குழுக்கள்) நிறைய சிறுவர்-இளையோர் சிறுகதைகளைப் பதிப்பித்து வெளியிடத் தொடங்கின. இன்று நாடு தழுவிய நிலையில் சிறுவர் சிறுகதை பயிற்சிப்பட்டறைகளும் கதை வகுப்புகளும் நிறையவே நடந்தேறி வருகின்றன. நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் தற்பொழுது சிறுவர் சிறுகதைகளை எழுதி வருவதை எண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.  ம.நவீன், கே.பாலமுருகன், கோ.புண்ணியவான் போன்றோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களுள், ம.நவீன் ஒருபடி மேலாகச் சென்று மிக எளியமுறையில் சிறுகதை எழுதவிருக்கும் சிறுவர்களுக்கு சிறுகதை இலக்கணத்தையும் அதன் கூறுகளையும் விளக்கி நிறைய உதாரணக் கதைகளை அல்லது மாதிரி கதைகளைக் கொடுத்து ஒரு வழிகாட்டிநூலை வெளியிட்டிருக்கிறார். நம் நாட்டுச் சிறுவர் சிறுகதை வரலாற்றைப் பொருத்தளவில் இந்த அரிய முயற்சி ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாக இ•து ஒரு அசாத்தியமான உன்னதமான முயற்சி. இது வெறும் அச்சடிக்கப்பட்ட நூல் மட்டுமல்ல; சிறுவர் சிறுகதை எழுதப் பயில்வோர்க்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு நடமாடும் பள்ளிக்கூடமும் ஆகும். இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பயின்று ஆயிரமாயிரம் படைப்பாளிகள் உருவாவது நிச்சயம். இத்தகு அரிய முயற்சியை மேற்கொண்டு பலநாள் உழைத்த உழைப்பின் பேரில் 50 சிறுவர் சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு நூலை வெளியிடும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் இந்த முயற்சிக்குத் தமிழ்க்கூரு நல்லுலகம்,  குறிப்பாகத் தமிழ்ப்பள்ளித் தமிழாசிரியர்களும் மாணவர்களும் நல்லாதரவுத் தந்து மலேசியச் சிறுவர் சிறுகதைத் துறை வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டுமாய்ப் பணிவன்போடு விழைகின்றேன்.

இவண்,
பி.எம்.மூர்த்தி
மலேசியத் தேர்வு வாரியத்தின் மேனாள் உதவி இயக்குநர்
மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத் தோற்றுநர்
30.4.2017

1 கருத்து for “நடமாடும் பள்ளிக்கூடம்

  1. nanthini
    May 12, 2017 at 3:08 pm

    Congrats Mr. Navin hats off

Leave a Reply to nanthini Cancel reply