வல்லினம் குறுநாவல் பட்டறை : என் அனுபவம்

IMG-20170610-WA0009நவீன இலக்கிய படைப்பாளிகளில் என்னைப் பிரமிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் திரு.ஜெயமோகன். அவரின் ‘மாடன் மோட்சம்’ சிறுகதையைப் படித்தபோது அவரது அசாத்திய கற்பனையைக் கண்டு வியந்தேன். அவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடனோடு சேர்ந்து இருநாள் பட்டறை நடத்தப்போகிறார் என அறிந்ததும் விரைந்து பதிந்து கொண்டேன்.

ஏற்கனவே கடந்த ஆண்டு வெறும் மூன்று மணி நேர சந்திப்பிலேயே அவர் பகிர்ந்திருந்த விசயங்கள் யாவும் எனக்குப் பயனுள்ளவையாக இருந்ததால் இந்த இரு நாள் பட்டறையில் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள முடியும் என நம்பிக்கை இருந்தது.

குதூகலமான பள்ளி விடுமுறையோடு பட்டறைக்கான நாள் வந்து சேர்ந்தது. வல்லினம் நடத்தும் நிகழ்ச்சியில் ஏற்கனவே இரண்டு முறை பங்கு பெற்றிருந்தேன். குறித்த நேரத்தில் ஆரம்பித்து, குறித்த நேரத்தில் முடிப்பது அவர்களின் பாணி என்பதால் இரண்டு மணிக்கு முன்னரே அங்கு சென்றுவிட்டோம். என் இலக்கிய வளர்ச்சிக்கு முதல் தூண்டுகோலாய் விளங்கும் அன்பிற்கினியவனும் என்னோடு வந்ததில் பெரும் பூரிப்பு இருந்தது.

அறையைப் பார்வையிட்டுவிட்டு வரும்போது எதிரில் எழுத்தாளர் ஸ்ரீதர், நாஞ்சில் நாடனோடு வந்தார். அவரிடம் என்னை அறிமுகம் செய்தார். நாஞ்சில் நாடன் சிநேகமாக பேச ஆரம்பித்தார்.

பட்டறை ஆரம்பமானது. எந்தவித மேடைச்சம்பிரதாயங்களும் இன்றி நேரடியாகப் பட்டறை18699871_1567629689916770_7273487555918747846_n தொடங்கியது. நிகழ்ச்சியை வழிநடத்திய தயாஜி ஜெயமோகனுக்கு வழிவிட்டு சென்றார். ஒன்றரை மணி நேரம் இலக்கியம், படைப்புலகம், படைப்பாளிகள் என ஈர்க்கும் வகையில் பேச ஆரம்பித்தார் ஜெயமோகன்.

சிறுகதை, குறுநாவல், நாவல் ஆகிய மூன்றுக்குமான அடிப்படைக்கூறுகளைப் பற்றி தன் உரையில் குறிப்பிட்டார் ஜெயமோகன்.

சிறுகதையும், குறுநாவலும் ஏறத்தாழ ஒரே மாதிரி வடிவைக் கொண்டது; ஆனால் நாவல் முற்றிலும் வேறு வடிவம் கொண்டது. ஒரு மனிதனின் முழு வாழ்க்கையைப் பிரதிபலிக்கக்கூடியது என விளக்கம் தந்தார்.

சிறுகதை எப்படி இருக்கவேண்டும் என முதலில் வைத்த கருத்துகள் தெளிவாக இருக்கும் வகையில் பல படைப்புகளை மேற்கோள் காட்டி, சுவாரசியம் கூட்டினார்.

‘ஜோக்’ என்பதுதான் சிறந்த சிறுகதைக்கான அமைப்பு என்றார் அவர். முதல் வரியில் ஒரு தொடக்கம், அடுத்த வரியில் சிறு விரிவாக்கம், அடுத்த வரியில் ஒரு எதிர்ப்பாராத திருப்பத்தோடு முடியும் நகைச்சுவையை உணர்ந்து கொண்ட வாசகனால் சிரிக்கமுடியும். சிறுகதையும் அவ்வாறே இருந்தால்தான் வாசகனை ஈர்க்கும் என்றார்.

சிறுகதைகளை திரைப்படங்களோடு இணைத்து அவர் சொல்லிய விதம் சுவாரஸ்யமானதாகவும், எளிதில் புரிந்துகொள்ள கூடியதாகவும் இருந்தது. படைப்புலகில் ஈடுபடும் மாணவர்களிடம் நான் மேற்கொள்ளும் யுத்தியை ஒத்திருந்ததால் சினிமா வழி ஜெயமோகன் நல்ல சிறுகதைகளை அடையாளம் காட்டியது எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது.

இப்போதைய வாசகன் நிறைய திரைப்படங்களைப் பார்க்கிறான். பல படங்களின் கதையோட்டத்தையும், முடிவையும் பார்த்து பழகிவிட்டவனால் சில திரைப்படங்கள் தொடங்கும்போதே இப்படிதான் நகரும், இப்படிதான் முடியும் என சொல்லிவிடமுடியும். அவ்வாறான ரசிகனை ஈர்க்கவேண்டுமென்றால் அவனது ஊகத்திற்கும், கற்பனைக்கும் மிஞ்சிய அளவிலான படைப்பைக் கொடுக்கவேண்டும். சிறுகதையும் அப்படிதான் என்றார் ஜெயமோகன்.

IMG-20170610-WA0031

கட்டுரையாளர்: கி.இ.உதயகுமாரி

வாசகர்களும் பல தரத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆரம்பகட்டத்தில் இருக்கும் வாசகன் வேண்டுமானால் எல்லாவற்றையும் புதிதாக உணரலாம். ஆனால் வாசிப்பில் கைதேர்ந்த வாசகனுக்கு எழுதப்படும் சிறுகதைகள் எத்தகைய சவாலானதாக இருக்கவேண்டும். அவனது யூகத்திற்கு தாண்டி நிற்கும் கதையைதான் அவன் கொண்டாடுவான் என சில கதைகளை மேற்கோள் காட்டி சொன்னார்.

சிறந்த சிறுகதை என்பது அதன் முடிவுக்கு நெருக்கமாக தொடங்கப்படவேண்டும். நிறைய வார்த்தைகளைக் கொண்டு விளக்காது திரைப்படத்தைப் பார்ப்பது போன்று வாசகன் உணரும் வகையில் அவனுக்கு கதையோட்டத்தைக் காட்சிப்படுத்தவேண்டும். கதைக்குள் அவனை இழுத்துக்கொள்வதற்கு சுவாரஸ்யமான தொடக்கம் தேவை. அதே போன்று முடிவும் நச்சென்று ஒரு திருப்பத்தோடு இருந்தால் அது சிறந்த கதைக்கான அங்கீகாரத்தைப் பெறுகிறது என்றார். அவர் சொன்ன பல கதைகளில் என்னைப் பெரிதும் ஈர்த்தது ‘பாம்பு’ கதைதான்.

ஒரு பேருந்தில் நிறைய ஆட்கள், பொருள்கள், வியர்வை நாற்றத்தோடு முண்டியடித்து நின்ற பயணிகள் கூட்டம்.அவசரமாக சென்று கொண்டிருக்கும் பேருந்து ஓட்டுனர் இப்படி சில காட்சிகளைச் சொல்லி கடைசியில் கர்ப்பமாய் இருக்கும் ஒரு மலைப்பாம்பு சாலையின் குறுக்கே வருவதைச் சொல்லும் இடத்தில் ஆர்வம் அதிகமாகியது.

“பார்த்து போ மோளே” என ஓட்டுனர் அந்த மலைப்பாம்பைப் பார்த்து சொல்வதாய் கதையை முடித்த ஜெயமோகன், அந்த ஒரு வசனத்தில் கதை சட்டென வேறொரு தடத்தில் பயணிப்பதைச் சுட்டினார்.

அதன் பின்னர் தேநீருக்கான இடைவேளை விட்டபிறகும் கூட என் மனதில் அந்தIMG-20170610-WA0040 மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் காட்சி தோன்றிகொண்டே இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு நாஞ்சில் நாடன் ஐயா உரையாற்றினார். தன் வாழ்வியல் அனுபவங்களை இணைத்து அவர் பேசியவிதம் சிறப்பாக இருந்தது. அவரது பேச்சில் நிறைய அன்பு இருந்தது.கதை எழுதுபவர்களுக்கு குழந்தையின் மனநிலை இருந்தால் எத்தகைய அருமையான கதைகள் கிடைக்கும் என சொன்னார் அவர்.

தன் நான்கு வயது பேரனுடனான உரையாடலின் வழி,சிறு விசயத்தையும் தனக்கே உரிய சுவாரஸ்யத்தோடு சொல்லும் குழந்தைகளின் மனநிலை சிறந்த கதைசொல்லியின் அம்சத்தைக் கொண்டிருப்பதை உணர்த்தினார் அவர்.

எந்தக் குறிப்பும் எடுத்துக்கொள்ள தோன்றாது முன் வரிசையில் அமர்ந்து அவர்கள் இருவரின் உரையையும் கேட்டு இன்புற்றிருந்தோம். இரவு உணவுக்குப் பின்னர் மீண்டும் பட்டறை தொடங்கியது.

ஜெயமோகன் குறுநாவலுக்கான வடிவம் குறித்து பேசத்தொடங்கினார். ஆரம்பம், கதையோட்டம், முடிவு ஆகிய மூன்று கூறுகளை உள்ளடக்கியவைதாம் குறுநாவல் என அவர் அளித்த விளக்கம் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் இருந்தது.

சிறுகதைக்கும் இதே மூன்று வடிவம்தான்.ஆனால் குறுநாவலில் ‘plot’ எனப்படும் வயிற்றுப்பாகத்தில் நிறைய விசயங்களைச் சொல்லமுடியும் என்றார்.

குறுநாவலுக்கு முதலில் தேவை ‘theme’. கதையில் எந்த விசயத்தை மையமாக வைக்கப்போகிறோம் என்பதே இது.கதையின் கரு.

 அடுத்து ‘plot’ எனப்படும் கதைக்கட்டு.எந்தச் சம்பவங்களை இணைக்கப்போகிறோம் என்பது.

இறுதியாக ‘treatment’ அதாவது இந்தக் கதையை எப்படி ஆரம்பித்து,எப்படி கொண்டு செல்லப்போகிறீர்கள் என்பது.

IMG-20170610-WA0043அடுத்ததாக நான் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அங்கம் வந்தது.குறுநாவல் எழுத விரும்புபவர்கள் தாங்கள் எழுதவிருக்கும் குறுநாவலின் சுருக்கத்தை இரண்டு பக்கங்களுக்குள் எழுதிக்கொண்டு வருமாறும், அங்கு தேர்ந்தெடுக்கப்படும் கதைச்சுருக்கம் விரிவாக்கப்படும் என்றும் சொல்லியிருந்தார்கள். அந்த அங்கம்தான் அது.

முதலில் விருப்பப்பட்டவர்கள் எழுந்து தாங்கள் எழுதிய கதையின் சுருக்கத்தைச் சொல்ல,அக்கதையை எப்படியெல்லாம் கொண்டு செல்லலாம்,வேறு என்ன மாதிரியான முடிவைக் கொடுக்கலாம் என பிற வாசகர்கள் தங்கள் பார்வையை முன்வைப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த அங்கம் வெகு சுவாரஸ்யமானதாக இருந்தது. பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்திய பார்வையையொட்டி அப்படி எழுதுதல் சரிவருமா என விளக்கினார் ஜெயமோகன்.

உரையின்போது சற்றே இறுக்கமாய் உணர்ந்த பலரும் இவ்வங்கத்தின் வழி சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு இலகுவாய் அமர்ந்திருந்ததை உணரமுடிந்தது.

ஒரு கதையை எப்படி எழுதவேண்டும் என்பது மட்டுமல்லாது,எப்படி எழுதக்கூடாது என்பதையும் இவ்வங்கத்தின் வழி நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

மறுநாள் காலை சிற்றுண்டிக்குப் பிறகும் தொடரப்பட்ட இந்த அங்கம் நண்பகல் 12 மணி வரையிலும் இடம்பெற்றது.மற்றவர்களின் கதை குறித்து பேசப்பட்ட விசயங்களும்,பெறப்பட்ட விளக்கங்களும் எங்கள் கதையை எப்படி எழுதவேண்டும் என்ற தெளிவையும் தந்தது.

சில கதைகளை இப்படி எழுதுவது பழங்கால பாணி,தேவையற்றது,ஏற்புடையது அல்ல இப்படி நேர்மையாக,தைரியமாக ஜெயமோகன் சொல்லியவிதம் அவரது இலக்கிய ஆளுமையை நன்கு வெளிக்காட்டியது. எல்லா அமர்வுக்குப் பிறகும் விவாதத்துக்கான நேரம் ஒதுக்கியது இருவழி உரையாடலுக்கு உதவியது.

பட்டறை முடிந்ததும், மதிய உணவுக்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்விலும் இணைந்திருந்தோம். பல எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். ம.நவீன் வரவேற்புரையாற்ற சிங்கை எழுத்தாளர் ஷாநவாஸ் ஆவணப்படம் உருவான சூழலை விளக்கினார்.

இவ்வங்கத்திலும் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அவர்களின் உரை இடம்பெற்றது.நவீன இலக்கிய குறித்து பேசிய ஜெயமோகன் நெடுநாள் என் மனதில் இருந்த ஓர் ஆதங்கம் குறித்துப் பேசினார்.

பலரைப் பொறுத்தவரையில் நவீன கதை, சிறப்பான கதை என்பIMG-20170610-WA0041து கருவைக் கொண்டு மட்டுமே முடிவு செய்யப்படுகிறது,கதையில் ஒரு நீதியோ, போதனையோ இருந்துவிட்டால் அது சிறந்த கதை என சொல்லப்படுவதைக் கண்டு வருந்தியவள் நான். ஜெயமோகன் அதைத் தொட்டுப்பேசினார். கதையின் கருவில் மட்டும் புதுமை இருந்தால் போதாது,சொல்லப்படும் விதமும் பார்க்கப்படவேண்டும் என்றார் அவர். இல்லையென்றால் அவை நீதிக்கதைகளாகவோ, போதனைக்கதைகளாகவோ மாத்திரம் இருக்கும் என்ற அவரது கூற்றை ரசித்தேன்.

அடுத்து பழந்தமிழ் இலக்கியம் குறித்து பேசவந்த நாஞ்சில் நாடனின் வாசிப்பு அனுபவம் அவரது உரையில் நன்கு வெளிப்பட்டது.தினம் தினம் வாசிப்பின்போது நிறைய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டே வருவதாக அவர் சொன்னது போற்றத்தக்கதாக இருந்தது.

திருக்குறளையும், சங்க கால பாடல்களையும் சரளமாக ஒப்புவித்து அவர் பேசியது மலைப்பைத் தந்தது.

அடுத்து ஆவணப்பட வெளியீடு. இம்முறை சிங்கை எழுத்தாளர்கள் மூவரின் ஆவணப்படம் வெளியீடு கண்டது.எனக்குப் பிடித்த பேச்சாளர்களில் ஒருவரான டாக்டர் சண்முகசிவா வெளியீடு செய்து உரையாற்றினார்.வழக்கம்போல் தன் பாணியில் நகைச்சுவையாக பேசிய அவர் ஆவணப்படங்களை இன்னும் சிறப்பான பின்னணியில் எப்படி எடுக்கலாம் என்ற ஆலோசனையையும் வழங்கினார்.

அப்போது நவீன், “சரி காசு கொடுங்க,செய்திடலாம்,” என்றபோது, ”பரவால,வாபஸ் வாங்கிக்கறேன்,” என அவர் சொன்னதை பலரும் ரசித்து சிரித்தார்கள்.

இப்பட்டறையில் பங்கு கொண்டவர்கள் எழுதும் குறுநாவல்களில் சிறந்த 10 குறுநாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்படும் அதற்குரிய உரிமத்தொகையும் வழங்கப்படும் என இனிப்பான செய்தியை வழங்கினார் நவீன்.

சரியாக ஐந்து மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நிறைவுற்றது.நாஞ்சில் ஐயாவோடும், ஜெயமோகன் ஐயாவோடும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக ஆவணப்படம் வழங்கியது நன்று.

வளர்ந்து வIMG-20170610-WA0036ரும் இளம் படைப்பாளிகள் மட்டுமல்லாது, சை.பீர்முகம்மது, கோ.முனியாண்டி  போன்ற மூத்த படைப்பாளிகளும், பச்சைபாலன், ஜெயபாலன், எஸ்.பி.பாமா, ஆதிலட்சுமி போன்ற எழுத்தாளர்களும் இப்பட்டறையில் கலந்து கொண்டதைப் பார்க்கையில் தேடல் என்பது எப்போதும் இருந்துகொண்டே இருந்தால்தான் படைப்பாளியால் நன்கு இயங்கமுடியும் என்பதை உணர்ந்தேன்.

இம்முறை சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிலரின் அறிமுகமும் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. திருமதி ஆதிலட்சுமி அவர்கள் குறுநாவல் பட்டறை புலனக்குழுவில் சொன்னதுபோல் சிறப்பான முறையில் குறுநாவலை எழுதிமுடிப்பதே இப்பட்டறையின் வெற்றி என்பதை நன்கு உணர்ந்தோம்.

 

1 கருத்து for “வல்லினம் குறுநாவல் பட்டறை : என் அனுபவம்

  1. ஸ்ரீவிஜி
    July 4, 2017 at 4:44 pm

    அழகிய நடையில் எளிமையான எழுத்து சகோதரி உதயா.. நன்று.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...