திறவுகோல்8: சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை

coverஇந்த தன்வரலாறு நூல் மலேசிய எழுத்தாளர்அ.ரெங்கசாமி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வல்லினம் விருது அ.ரெங்கசாமி அவர்களுக்கு கொடுக்கப்பட்டதை முன்னிட்டு இந்நூல் வல்லினம் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி குறிச்சி என்ற கிராமத்திற்கு அருகே உள்ள உலகியூருணிப்பட்டி என்ற சிற்றூரிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிழைப்புத் தேடி மலாயாவுக்கு வந்த தன் தந்தையின் கதையிலிருந்து நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர்.

ஓர் அனுபவம் மிக்க புனைவு எழுத்தாளரான இவர் வாய்மொழியாக கேட்டு தனக்கே உரிய புனைவு மொழியில் எழுதியிருக்கும் இவரது தந்தையின் கதை,நூலின் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை எடுத்துக்கொண்டுள்ளது. தனது பிறப்பிற்கு முன்பான இக்கதையில் நிகழ்வுகள் நடைபெறும் ஆண்டுகளைக் குறிப்பாகச் சொல்லாவிட்டாலும் தான் பிறந்தவுடன் அதாவது 1930ஆம் ஆண்டிற்குப் பிறகான வாழ்வின் நிகழ்வுகளை கால அடிப்படையில் சரியாக வரிசைப்படுத்தி கோர்வையாக அளித்திருக்கிறார் நூலாசிரியர்.

கிராமத்தில் விவசாயம் செய்து வளமாக வாழ்ந்த குடும்பத்தின் பெரும் சொத்துக்களான பதினான்கு மாடுகளையும் மேய்க்கும் பொறுப்பை நூலாசிரியரின் தாத்தா செய்ததால் அவருக்கு ‘எருது மேய்க்கி’ என்ற பெயர் வருகிறது. இக்குடும்பம் வாழப் பொறுக்காத ஒருவன் கீழ்மையான எண்ணத்தோடு மாடுகளை நஞ்சூட்டிக் கொன்றுவிட குடும்பத்தின் பொருளாதார நிலை இறங்குமுகமாகிறது.செட்டியாரிடம் கடனை வாங்கி எப்படியோ மீளும் குடும்பம் பங்காளி பிரச்சனையால் மீண்டும் நிலைகுலைகிறது. கடன் வட்டியோடு பெரிதாக வளர்ந்து நிற்க சொந்த நிலத்தில் கூலிகளாக வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது. எவ்வளவு உழைத்தாலும் தீர்க்க முடியாத கடனை அடைக்க வேறு வழி இல்லாமல் கங்காணி மூலம் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்ய தனது பதினாறாவது வயதில் MAILகப்பலில் (தமிழ் பாட்டாளிகள் இதை ‘மயில் கப்பல்’ என்று அழைத்திருக்கிறார்கள்) மலாயாவுக்குப் பயணமாகிறார் நூலாசிரியரின் தந்தை அடைக்கன்.

இரப்பர் தோட்டத்தில் வேலை, மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்குப் பயணம், கடனை முற்றிலுமாக அடைத்தல்,மீண்டும் மலாயா பயணம், அலோர் காஜாவில் கம்பி சடக்கு (தம்பின் நகரில் இருந்து மலாக்காவுக்கு கிளை இருப்புப் பாதை) போடும் பணி, வாந்திபேதி நோய்க்கு அத்தை மகனைப் பறிகொடுத்தல், அங்கிருந்து தப்பித்து மீண்டும் தமிழ்நாட்டிற்குப் பயணம், கிள்ளான் P.W.D. பொது மராமத்து இலாக்கா வேலைக்காக ரொக்கப் பயணமாக மீண்டும் மலாயாவுக்கு வருகை,ஆறு வருடத்திற்குப் பிறகு தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு திருமணம் செய்துகொள்ளுதல், பெற்றோர் மறைவுக்குப் பிறகு குடும்பத்துடன் மலாயாவுக்குத் திரும்புதல் என்று தனது தந்தையின் வாழ்வை எழுதிச் செல்கிறார் ஆசிரியர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மலாயா வாழ்க்கையைப் பற்றிய சில சித்திரங்களை இந்நூலின் வழியாக அறிய முடிகிறது. தமிழ்நாட்டிலிருந்து பாட்டாளிகள் இலவசப் பயணம்,ரொக்கப் பயணம் (கங்காணி கணக்கு, ரொக்க ஆர்டர்) என்ற இரண்டு வகை பயணங்களை மேற்கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.இலவசப் பயணம் என்பது கங்காணிகளின் மூலம் செல்வது. இதில் செல்பவர்கள் தங்கள் சுதந்திரத்தை அடகு வைத்துவிட்டு அடிமை வாழ்க்கைதான் வாழவேண்டும். ரொக்கப் பயணம் என்பது தங்கள் சொந்த செலவில் பயணம் செய்வது. இப்படி செல்கிறவர்களுக்கு மலாயாவில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

சீனாவிலிருந்து பிழைப்புத் தேடி வருபவர்களுக்கும் பாட்டாளி தமிழர்களுக்கும் பொது மொழியாக மலாய் இருந்துள்ளது.  சீன ஆண்கள் பெண்களைப் போலவே நீண்ட சடை பின்னிப்போட்டிருக்க தமிழ் ஆண்கள் தங்களது நீண்ட முடியை கொண்டையாக போட்டிருந்திருக்கிறார்கள்.  தமிழ் முஸ்லீம்களும், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்.

ஆற்றிலும் கிணத்திலும் குளித்துப் பழகிய மக்களுக்கு குழாயில் தண்ணீர் வரும் அறிவியல் பெரும் ஆச்சர்யத்தைக் கொடுக்க அங்கு குளிப்பதைப் பெரும் பேறாக எண்ணியிருக்கின்றனர். இதன் விளைவாக கூட்டம் பெருகி தள்ளுமுள்ளு ஏற்பட, குளிப்பதற்கு கட்டணம் விதிக்கப்பட்டு ஒரு காவலனும் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். நூலாசிரியரின் தந்தை இந்தக் காவல் வேலையைச் செய்ததால் ‘தண்ணீர்ப்பீலிக்காரர்’ (பீலி – பைப்) என்ற பெயர் வந்துள்ளது.

மனிதரால் (பெரும்பாலும் சீனர்களால்) இழுத்துச் செல்லப்படும் பேச்சாக்கள் மக்களின் பொதுப் போக்குவரத்தாக இருந்துள்ளன. சரக்குகளை எடுத்துவர மாட்டுவண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாட்டு வண்டித் தொழில் முழுமையாக தமிழர்கள் கையில் இருந்துள்ளது. சீனர்கள் அதிகமாய் வாழ்ந்த பகுதிகளில் குண்டர் கும்பல்கள் நிறைந்திருந்ததாக ஆசிரியர் எழுதியிருப்பதை வாசித்தபோது சீனாவில் உருவான ‘கொங்சி கெலாப்’ (குண்டர் கும்பல்) கலாச்சாரம், பதினெட்டாம் நூற்றாண்டின்இறுதியில் சீனர்களுடன் மலாயாவுக்குள் நுழைந்தது என்று கே.பாலமுருகனின் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’குறுநாவலில் படித்தது நினைவுக்கு வந்து போனது. கொள்ளை நோயான மலேரியா காய்ச்சல் வராமல் இருக்க ‘கொய்னா’ என்ற மருந்து கொடுக்கப்பட்டு பாட்டாளிகள் தோட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

சிவகங்கை சீமையிலிருந்து வந்து ஒரே கம்பத்தில் வாழ்ந்தாலும் அம்பலக்காரர்கள், தேவர்கள் என்று இரு பிரிவுகளாக வாழ்ந்திருக்கின்றனர். இந்தப் பிரிவுகளுக்கிடையே நடந்த ஒரு காதல் திருமணத்தையும் அக்காதல் தம்பதியின் மகளுக்குத் திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்களையும் படித்தபோது சுயசாதி தம்பட்டமும், சாதி வெறியும் இக்காலகட்டத்தில் மிகுந்திருந்ததை அறிய முடிகிறது.

நூலாசிரியரின் தந்தை அடைக்கன் ஓரளவுக்கு எழுதப் படிக்கத் தெரிந்த காரணத்தால் புராணிகராகவும், சோதிடம் பார்ப்பவராகவும், வாத்தியாராகவும், வைத்தியராகவும் இருந்துள்ளார். அவர் நடத்திய திண்ணைப் பள்ளியில் தமிழ்மொழி (அரிச்சுவடி), தமிழ்முறையிலான கணிதம் (எண்சுவடி) என்ற இரண்டே பாடப் புத்தகங்கள்தான் இருந்துள்ளன.

மலாயா வரலாற்றில் நடைபெற்ற பல அரசியல் நிகழ்வுகள் மக்களின் வாழ்க்கையை எந்தெந்த விதத்தில் பாதித்தன என்பதையும் ஆசிரியர் தவறாமல் பதிவு செய்திருக்கிறார். 1939 ஆம் ஆண்டில் கம்பத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கதர்த் துணியிலான சீருடை அணிந்து ‘கை ராட்டினமே கதர்ப்பூட்டினோமே’ என்ற பாடலுடன் கூடிய ஒயிலாட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தாக்கத்தை வெளிக்காட்டுகிறது. 1941ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நடத்திய கிள்ளான் கலகத்தையும் அதனை முன்னின்று நடத்திய ஆர்.எச்.நாதன் நூலாசிரியரின் கம்பத்துக்கு வந்து உரையாற்றியதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.

1942 முதல் 1945 ஆம் ஆண்டு வரை ஜப்பானியர் ஆட்சியாலும் சயாம் மரண ரயில் பாதையாலும் மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். ஆங்கிலேயருக்கு நண்பனாக இருந்த கம்யூனிசுக் கட்சி 1948 ஆம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக திரும்பி வன்முறையில் ஈடுபட மலாயா அரசு அவசர காலச் சட்டத்தைப் பிறப்பித்து பொதுமக்களுக்கான அடையாள அட்டை (IC) முறையை அறிவித்துள்ளது. 1969 ஆம் ஆண்டு மே மாதம் கோலாலம்பூரில் நடந்த இனக்கலவரத்தையும் அதன் விளைவாக பூமிப்புத்திரர்களான மலாய் மக்களின் உரிமைகள் காக்கப்பட்டு சிறுபான்மை இனமான தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானதையும் இந்நூல் பேசுகிறது.

ஏழு வயது முதல் இரப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டே தனது கல்வியைத் தொடர்ந்த நூலாசிரியர் தனது இருபதாவது வயதில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்திருக்கிறார்.தந்தைதான் தனது முதல் ஆசான் என்று கூறும் இவர் தனது தந்தை, அண்ணன் மூலமாக புராணங்களையும் காப்பியங்களையும்கதைகளாகவும் பாடல்களாகவும் கேட்டு வளர்ந்திருக்கிறார். இதனால் மொழி மீதும் இலக்கியத்தின் மீதும் இவருக்கு ஈடுபாடுஅதிகரித்துள்ளது. தனது பூர்வீகமான தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக 1951 ஆம் ஆண்டு ஜலகோபால் கப்பலில் சென்றிருக்கிறார்.தனது முப்பதாவது வயதில் திருமணம் செய்து கொண்ட நூலாசிரியர் ம.இ.காவில் இணைந்து பல ஆண்டுகள் அரசியல் பணியாற்றி இருக்கிறார்.பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தபோது குறுநாடகங்கள் பலவற்றை எழுதி மேடை ஏற்றியவர்.எழுத்து துறையில் நாடகங்கள், பாடல்கள் என்று தன் பயணத்தை தொடங்கியவர் பின்பு சிறுகதைகள், வரலாற்றுப் புனைவுகள் என்று முத்திரை பதித்துள்ளார்.

இந்நூலை வாசிக்கையில் முத்தம்மாள் பழனிசாமி அவர்களின் ‘நாடு விட்டு நாடு’ தன்வரலாறு நூலும் இணையாக மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.இரண்டு நூலாசிரியர்களும்ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் பிறந்தவர்கள். ஆசிரியர் பணி செய்தவர்கள். இருவரும் பணி ஓய்வுக்குப் பிறகுதான் தன்வரலாறு நூலை எழுதி உள்ளார்கள். இருவரது தந்தைகளும் சஞ்சிக்கூலிகளாககொங்கு வட்டாரம், சிவகங்கை சீமை என்ற இருவேறு நிலப்பரப்பிலிருந்து வந்திருந்தாலும் புலம் பெயர்ந்ததன் நோக்கம் பொருளாதார ரீதியில் குடும்பத்தை முன்னேற்றுவதற்காகவே இருந்துள்ளது. இப்படியாக ஒரு சில ஒற்றுமைகள் புலப்பட்டாலும் சில வேற்றுமைகளும் தென்படத்தான் செய்கின்றன.

ஒரு படைப்பாளியாக பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார் திரு அ.ரெங்கசாமி.‘நாடு விட்டு நாடு’திருமதி முத்தம்மாள் பழனிசாமியின் முதல் நூலாகும். கால அடிப்படையில் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் ‘சிவகங்கை தொடங்கி சங்காங் வரை’நூலிலிருந்து நான் லீனியர் முறையில் நிகழ்வுகளைச் சொல்வதன் வழி வேறுபடுகிறது ‘நாடு விட்டு நாடு’ நூல். தனது ஆசிரியர் பணி, அரசியல், கலை, இலக்கியச் செயல்பாடுகளைப் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ள திரு அ.ரெங்கசாமி திருமணத்திற்குப் பிறகான தனது குடும்ப வாழ்க்கையை இந்நூலுக்குள் கொண்டுவரவில்லை. திருமதி முத்தம்மாளோ தன்னுடைய ஆசிரியர் பணி, கணவர், பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என்று எதையும் விட்டுவைக்காமல் எழுதியிருக்கிறார்.

ஒரே பின்புலத்தில் எழுதப்பட்ட நூல்களை வாசிக்கையில் இதுபோன்ற ஒப்பீடுகள் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.ஆனால் ஒவ்வொரு  தன்வரலாறு நூலும் அதனளவில் வெவ்வேறு வாழ்க்கையை, நிலப்பரப்பை, மனிதர்களை, அவர்களின் வாழ்வியலை நேர்மையாகப் பதிவு செய்யும் பட்சத்தில்எதிர்காலத் தலைமுறையினருக்கு சிறந்த ஆவணமாக திகழும் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் பார்த்தால் ‘சிவகங்கை தொடங்கி சங்காங் வரை நூல்’மாடுகளை மேய்த்த ‘எருது மேய்க்கி’ தாத்தா, தண்ணீர்க் குழாயைக் காவல் காத்த ‘தண்ணீர்ப்பீலிக்காரர்’ அப்பா,‘ஆசிரியர்’ ‘எழுத்தாளர்’ மகன் என்ற மூன்று தலைமுறைகளின் கதையையும் மலாயா, தமிழ்நாடு என்ற இருவேறு நிலப்பரப்பின் வழியாக நூறு ஆண்டுகள் வாழ்க்கையையும் பேசுவதன் மூலம் முக்கிய ஆவணமாக தன்னை நிலைநாட்டிக்கொள்கிறது.

“பட்டது போதாதுன்னு திரும்பவும் அந்தப் பொணம் தின்னி, பினாங்கு சீமைக்குப் போகணுங்கிற ஆசை வரலாமா?” என்று தனது மகனைக் கேட்கிறார் முதல் தலைமுறையைச் சேர்ந்த கருப்பாயி (நூலாசிரியரின் தந்தை வழி பாட்டி). முதல்முறையாக தமிழ்நாட்டிற்கு வரும் நூலாசிரியர் “இந்தப் பாழாய்ப்போன நாட்டிற்கு ஏண்டா வந்தே?” என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த இருவரது கேள்விகளுக்கும் இந்நூலின் வழியாக பதில் சொல்லி புன்னகைக்கிறது வரலாறு.

1 கருத்து for “திறவுகோல்8: சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை

  1. August 11, 2017 at 8:54 am

    நூலின் மையத்தைத்தொட்ட ஆழமான பார்வை. அ.ரெவின் வாழ்க்கை வரலாற்று அம்சங்களை நினைவுகூரும் சுருக்கம். அருமை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...