இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்

NT_121216174822000000எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் இலங்கை,நவீன்எனும் குறிப்பை வாசித்தபோதே அதை ஒட்டிய சர்ச்சை எழும் என அறிந்ததுதான்.

ஒரு பயணக்குறிப்பு அதை வாசிக்கும் நபர்களின் தேடலில் / தேவையில் இருந்து உள்வாங்கப்படுகிறது. உண்மையில் என் பயணக்குறிப்புகள்  எதை ஒட்டியும் ஆழமான பதிவொன்றைச் செய்யவில்லை. அவை அப்போதைய எனது மனப்பதிவின் புகைப்படங்கள். ஜெயமோகன் பிரதானமாக ஒரு நிலத்தின் இலக்கியச் சூழலை அறிய விரும்புபவர். அவ்வகையில் என் கட்டுரை வழி அவர் முன் வைத்தது ஒரு கருதுகோள் மட்டுமே. அந்தக் கருதுகோளை தவறு என மறுக்கவும் உண்மை என நிறுவவும் ஆரோக்கியமான உரையாடல்கள் தேவையாக உள்ளன.

நான் இலங்கை இலக்கியச் சூழலை அவமதிக்கும் உள்நோக்கம் கொண்டு அப்பயணக்குறிப்பை எழுதவில்லை. ஆனால் இதை ஒட்டி எனக்குத் தனிப்பட்டு வந்த கடிதங்கள், இணையத்தில் வாசித்த குறிப்புகள், முகநூல் வசைகள் என பலவும் ஜெயமோகனின் கருதுகோளை உண்மை என நிறுவவே பெரும்பாடு படுவது நகைமுரண்.

ஜெயமோகன் தளத்தில் வந்த அனோஜனின் கடிதம் உள்ளிட்ட வேறு சில கட்டுரைகளையும் வாசித்தபோது அங்குள்ள தரமான பல வாசகர்களை நாங்கள் அடையாளம் காணவில்லை அல்லது சந்திக்கவில்லை எனப்புரிந்துகொள்ள முடிந்தது. இது முன்னமே ஊகித்ததுதான். அதற்கு இரு காரணங்களைச் சொல்லலாம்.

1. முதல் காரணம் அங்கு இதற்கு முன் சென்றுள்ள அ.மார்க்ஸ், எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியர் மருது போல கலை, இலக்கியம் அல்லது சிந்தனைப்பரப்பின் வெளிப்பாட்டில் எங்களில் யாரும் பெரிய முன்னெடுப்புகளைச் செய்திருக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் இலக்கியச்சூழலின் கவனத்தை ஈர்க்கும் பெரிய நாவல் முயற்சிகள் மலேசிய இளம் தலைமுறையினரிடமிருந்து எழவில்லை. வந்திருக்கும் ஒரு சில சிறுகதை தொகுப்புகளும் இலங்கை வரை எட்டியிருக்க வாய்ப்பில்லை. எனவே மலேசிய இலக்கியப்போக்குக் குறித்து ஆர்வத்தை தூண்டும் மனப்போக்குத் தரமான வாசகர் பரப்பில் இருக்காது.

2. நாங்கள் சென்ற நோக்கமே மலேசிய இலக்கியத்தை ‘வல்லினம் 100இன்’ வழி அறிமுகம் செய்வதுதான். ‘வல்லினம் 100’ வல்லினம் இணையத்தளத்தின் தொகுப்பு அல்ல. மலேசியாவின் சமகால இலக்கியத்தின் காத்திரமான முகத்தைக் காட்ட வேண்டும் எனும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தனித்த ஒரு முயற்சி. எனவே அக்களஞ்சியத்தை அறிமுகம் செய்து வைப்பதும் அதன் வழி மலேசிய இலக்கியம் குறித்த உரையாடலைத் தொடங்குவதும் நோக்கம். அதற்காக அங்கு அறிமுகத்தில் இருந்த நண்பர்கள் உதவியை நாடினோம். அவர்கள் வழியே மலேசிய நவீன இலக்கியத்தைக் கடந்த முயன்றோம். இந்த எங்கள் முயற்சிக்குத் தொடக்கம் முதலே பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், கணேசன் திலீப் குமார், தேவா, யோ.கர்ணன் போன்ற பலரும் நாங்கள் வந்த நோக்கம் அறிந்து அதன்படி இறுதிவரை துணை நின்றனர்.

இந்த மெனக்கெடல்கள் தமிழகத்தில் உள்ள ஒரு எழுத்தாளர் சென்றிருந்தால் தேவைப்பட்டிருக்குமா என்றால் இல்லை. அதற்கும் இரண்டும் காரணங்கள் உள்ளன.

முதலாவது, பதிப்பகங்கள் வழி அங்குத் தமிழக எழுத்தாளர்களின் நூல்கள் எளிதில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அங்கு நாங்கள் செல்லும் முன்பே ஶ்ரீதர் ரங்கராஜ் மொழிப்பெயர்த்த ஹாருகி முரகாமியின் சிறுகதைகள் மொழிப்பெயர்ப்பு நூல் வாசகர் மத்தியின் சேர்ந்து அவரை அறிந்தும் வைத்திருந்தனர். மிக எளிதாக சிலர் அவரை அடையாளம் கண்டனர். இதுதான் பெரும் தொழில்துறையாகிவிட்ட தமிழகப் பதிப்பகங்களின் பலம்.

இரண்டாவது, யார் தரமான படைப்பாளி எனவும் எது தரமான படைப்பு எனவும் தொடர் உரையாடல்கள், விமர்சனங்கள் தமிழகத்தில் நடந்து அதன் வழி பொதுவாசகர் மனதில் உருவாகியிருக்கும் எளிய சித்திரம் மிக எளிதாக அவர்களுடன் இணைக்க உதவுகிறது. இதன் வழி எளிதாக வாசகர் சந்திப்புகள் சாத்தியமாகின்றன.

இவை இரண்டும் இல்லாமல் நாங்கள் அதுபோன்றதொரு வாசகர் பரப்பை எதிர்ப்பார்ப்பது தவறு என்று நன்கு அறிவோம். அதே சமயத்தில் மலேசியாவில் பதிப்பாகும் தரமான நூல்களைக் கொண்டுச்சேர்க்கும் பதிப்பகங்களும் இங்கு இல்லை.  மிஞ்சி இருக்கும் மரியாதையும் கெடுக்க எழுத்தாளர் சங்கம் ‘இலக்கியச் சுற்றுலா’ என்ற பெயரில் கடுமையாக உழைப்பது யாவரும் அறிந்தது. இந்தச் சூழலில்தான்  மேற்சொன்ன இரு சிக்கல்களை களைய இப்பயணத்தை வடிவமைத்தேன்.

இது எழுத்தாளனின் பணியா என்றால் இல்லை. ஆனால் இப்பணியை யாருமே செய்யாத பட்சத்தில்தான் நாங்கள் செய்துக்கொண்டிருக்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன் படைப்பிலக்கியம் படைப்பதோடு வேலை முடிந்தது என்ற மனநிலைதான் இருந்தது. ஆனால் ‘சென்சார்’ இல்லாமல் படைப்பிலக்கியத்தைப் பதிப்பிக்க நாளிதழ்கள்  தயங்கியபோது வல்லினம் அச்சு இதழ் உண்டானது. அவற்றை நூலாக்க பதிப்பகம் இல்லாதபோது வல்லினம் பதிப்பகம் உண்டானது. இங்குள்ள அமைப்புகளிடம் எழுத்தாளர்களை ஆவணப்படம் செய்து புதிய வரலாறுகளை கண்டடையும் அவசியம் குறித்து பேசியபோது ஆரோக்கியமான பதில் வராததால் அதையும் நாங்களே செய்தோம். முந்தைய இலக்கிய வரலாற்று ஆவணங்கள் குறித்த எந்த அக்கறையும் இல்லாத மந்தமான கூட்டத்துக்கு மத்தியில் ‘சடக்கு’ அகப்பக்கம் உருவானது. மலேசியாவில் இருக்கும் பிற இனத்தவர் மத்தியில் மலேசியத்தமிழ் படைப்புகள் சென்று சேர வேண்டும் என தரமானவற்றை மொழிப்பெயர்த்து நூலாக்கினோம். இப்படி ஒரு நாட்டில் இலக்கியச் சூழல் வளர என்னென்ன சாத்தியங்கள் உண்டோ அதை உள்வாங்கி என்னென்ன தடைகள் உண்டோ அதை  சரிபடுத்தியபடியேதான் சமகாலப் படைப்பிலக்கியத்தை முன்னகர்த்திச் செல்கிறோம். மரம் செழித்துவளர நிலத்தை முதலில் பதப்படுத்த வேண்டியுள்ளது. இப்பணியை இன்றுள்ள ஒரு தலைமுறை செய்து முடித்தால் மட்டுமே, தங்களை அதற்கு பணையம் வைத்தால் மட்டுமே அடுத்து அந்நிலத்தில் தரமான படைப்பிலக்கியங்கள் சாத்தியம்.  அப்படிதான் தமிழ் புழங்கும் பிற நாடுகளில் அறிமுகம் செய்யும் முயற்சியும் இலங்கை பயணமும்.

தனிப்பட்ட முறையில் இப்பயணம் எனக்கு உற்சாகமானதாகவும் பல நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் கொடுத்தது. இலங்கையின் அரசியல் சூழலை ஓரளவு அறிய முடிந்ததோடு நாங்கள் திட்டமிட்டபடி பல தளங்களிலும் ‘வல்லினம் 100’ களஞ்சியத்தைச் சேர்த்தோம். இலங்கை நண்பர்கள் உதவியில்லை என்றால் இம்முயற்சிகள் சாத்தியமே இல்லை. ஆனால் முன்னறிமுகம் இருந்த நண்பர்களைக் கடந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் வழி இலங்கை இலக்கியச் சூழல் அரோக்கியமான திசையில் செல்லவில்லை என்ற எண்ணத்தையும் இப்பயணமே கொடுத்தது.

ஆம்! நிகழ்ச்சிகள் தோறும் பல தருணங்களில் மலேசிய இலக்கியச்  சூழலுடன் பொருத்திப்பார்த்தே  பயணங்களைத் தொடர்ந்தேன்.  மலேசியாவில் எவ்வளவு மெத்தனமாக இலக்கியச் சூழல் உள்ளதோ அதே அளவில் இலங்கையிலும் உள்ளதென்றே இருமுறை சென்ற அனுபவத்தில் உள்வாங்கிக்கொண்டேன். அதன் முதன்மையான காரணம் விமர்சனப்போக்கு இல்லாததும் தரமான படைப்புகளை முன்வைத்த உரையாடல்கள் இல்லாததுமே என்பது என் ஊகம்.

எனது முதல் இலங்கை பயணத்தில் செங்கை ஆழியானும் செ.கணேச லிங்கமுமே முக்கியப் படைப்பாளியாக புத்தகக் கடைகளில் காட்டப்பட்டார்கள். நான் கட்டுக்கட்டாக அவர்களை வாங்கி வந்து வாசித்தபோது அடைந்த ஏமாற்றத்தை இலக்கிய வாசகர்கள் அறிவர். எஸ்.பொவை ‘தீ’ நாவல் வழி முன்னமே அறிந்திருந்தேன். மு.தளையசிங்கம் என ஒருவர் இருப்பதை சுந்தர ராமசாமி வழியே அறிந்துகொள்ள முடிந்தது. (தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்). தொடர்ந்து ஜெயமோகனின் கட்டுரை வழி விரிவாக அவர் ஆளுமையை அறிந்தேன். (தத்துவமும் மெய்யியலும்) அவரை வாசிக்க வேண்டும் என முடிவெடுத்து அதுவும் இப்போதுதான் சாத்தியமானது. இம்முறை இலங்கை பயணத்தில் மு.பொன்னம்பலத்தின் தொகுப்பில் காலச்சுவடு பதிப்பகம் மூலம் வந்திருக்கும் ‘மு.தளையசிங்கம் படைப்புகள்’ எனும் மொத்தப்படைப்புகள் தொகுப்பை வாங்கினேன்.  இதை சொல்ல காரணம் உண்டு. ஒரு வாசகனான நான் தமிழ் இலக்கியம் புழங்கும் ஒரு மண்ணின் பிரதான கலைஞனைத் தேடி அடைவது தமிழகத்தில் இருக்கும் விமர்சகர்கள் வழி. தெளிவத்தை ஜோசப் எனும் ஒரு படைப்பாளியை அறிந்ததும் ‘குடை நிழல்’ நாவலை வாசித்ததும் விஷ்ணுபுரம் விருதுக்குப் பின்பே.

இந்தச் சூழல் எல்லாம் எனக்கு அசலாக மலேசிய இலக்கியச் சூழலையே நினைவு படுத்துகின்றன. எந்த விமர்சன போக்கும் இல்லாமல் பல விருதுகளின் மேல் ஏறி நிற்பவர்களால் எழுதப்படும் அனைத்துமே மலேசிய இலக்கியத்தின் ஆக்கம் என அடையாளப்படுத்துவது, தரமான படைப்பிலக்கியங்களை கள்ள மௌனத்தால் மூடி மறைப்பது, அப்படி கறாரான விமர்சனம் வைக்கும் ஒருவரை வசைப்பாடுவது அவரை முற்றும் முழுதாய் நிராகரிப்பது. இவை எல்லாமே இங்கு பார்த்து பார்த்து சலிப்படைந்த விடயங்கள். அதை கொஞ்சம் ஒப்பனை செய்து புலிகள் ஆதரவு எதிர்ப்பு எனும் அரசியலை உள் நுழைத்து இலங்கையில் பார்க்க முடிந்தது மட்டுமே வித்தியாசம்.

அயல் மண்ணில் இருக்கும் ஒரு வாசகனாக இலங்கை எழுத்தாளர்களை நோக்கி நான் கேட்பது உங்கள் தேசத்து படைப்பாளிகளை பரந்த சூழலில் அறிமுகம் செய்துவைக்க உங்களது முன்னெடுப்புகள் என்ன? ஒரு தேசத்தில் தரமான வாசகர்கள் இருந்தால் அவர்கள் வழிதான் தரமான இலக்கியங்கள் முன்னெடுக்கப்படுவது உண்மையென்றால் இலங்கையில் அவ்வாறு எழுத்தாளர்களை அவர்களின் தரமான ஆக்கங்களை முன்னெடுக்கும் வாசகர் குழாம் எங்கே?  இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஷோபாசக்தி, அ.முத்துலிங்கம், தேவகாந்தன், சயந்தன், அனோஜன் பாலகிருஷ்ணன், பொ. கருணாகரமூர்த்தி, நடேசன், சக்கரவர்த்தி, விமல் குழந்தைவேல், ஜீவமுரளி திருமாவளவன், சேரன், சுமதி ரூபன் போன்ற படைப்பாளிகள் குறித்த விரிவான உரையாடல்கள் இலங்கையில் நடந்துள்ளதா?  அல்லது இலங்கையிலேயே வசிக்கும் கருணாகரன் (வேட்டைத்தோப்பு), யோ. கர்ணன் சிறுகதை தொகுப்புகள், உமா வரதராஜன் (மூன்றாம் சிலுவை) தெளிவத்தை யோசப் படைப்புகள் போன்றவை குறித்து ஆக்ககரமான முன்னெடுப்புகளோ அவர்கள் படைப்புகள் குறித்த கருத்துரைகளோ எழுதப்பட்டுள்ளனவா? நான் சந்திக்காத அந்தத் தரமான வாசகர்கள் செய்த பணிகளைப் பட்டியலிட்டால் மேலும் இலங்கையின் சமகால இலக்கியத்தை அறிய உதவியாக இருக்கும்.

எங்குமே உதிரி உதிரியாக நல்ல வாசகர்கள் இருக்கவே செய்வர். மாட்டுச்சானத்தில் மக்காத சோளப்பருக்கை இருப்பதில்லையா என்ன? இதை ஜெயமோகனும் அறியாமல் இருக்க மாட்டார். அதன் பொருட்டே அவர் தனிப்பட்ட சந்திப்புகளை நிகழ்த்த வேண்டும் என எழுதியுள்ளார். ஜெயமோகன் சொல்வது அந்த வாசகர்களின் செயலூக்கம் என்ன என்பதுதான். அந்த வாசகர்களின் ஒன்றினைவில் அந்நிலத்தின் எவ்வகையான புதிய முன்னெடுப்புகள் சாத்தியமாகியுள்ளன என்பதுதான். முந்தைய என் கட்டுரையில் கவிந்திருந்த கோபம் அதை ஒட்டியதே. குறைந்த பட்சம் உங்கள் நாட்டில் உள்ள தரமான நூல்களை வேறு நாடுகளுக்குக் கொண்டுச் செல்லும் எளிய பணியைக்கூட ஒழுங்காகச் செய்யாமல் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் செய்யும் பெரும் செயல்பாடுகளை ஒட்டிய கிண்டல் பேச்சு எழும்போது கொதிப்பெழுகிறது. அது விஷ்ணுபுரம் வட்டத்தினால், ஜெயமோகன் என்பதால் அல்ல. இந்த எள்ளல் அறிவியக்கத்தை நோக்கிய மூடர்களின் எள்ளல். அறிவுழைப்பில் எதிர்வினையாற்ற துப்பில்லாத இந்த எள்ளல்கள் எனக்கு ஒவ்வாது. ஒரு அரசு செய்ய வேண்டியதை தனி ஒரு எழுத்தாளனை மையமாகக் கொண்ட வாசக அமைப்பு சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கும்போது அந்த அமைப்பை தீண்டத்தகாத அமைப்பாக வர்ணிக்கும் அங்கிருக்கும் நான் சந்தித்த வாசகர்கள் உங்கள் நாட்டு படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு என்ன முயற்சி செய்துள்ளீர்கள் என மட்டுமே கேட்கத் தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்து பேராசிரியர் நுஃமான் மட்டுமே மலேசிய புத்தக நிறுவனத்துக்கும் (உமா பதிப்பகம்) இலங்கை பூபால சிங்கம் புத்தக நிறுவனத்துக்கும் இணைப்பை ஏற்படுத்தி இரு நாட்டுக்குமான புத்தக பகிர்வை ஏற்படுத்த முதற்கட்ட முயற்சியை மேற்கொண்டார். இங்குள்ள மலாய் கவிதைகளை மொழிப்பெயர்த்து இலங்கையில் அறிமுகம் செய்தார். இம்முறை அவர் துணையுடன் இந்தப்பயணத்தில் எங்கள் கண்களில் பட்ட 200க்கும் குறையாத இலங்கை நூல்களை மலேசியாவில் உள்ள பல்கலைக்கழக தமிழ் நூலகத்தில் சேர்த்துள்ளோம். ஓரளவு நல்ல சேமிப்பு. இனி அங்கிருந்து இலங்கை இலக்கிய அறிமுகங்கள் தொடங்கலாம். இதை செய்ய எழுத்தாளன் தேவையில்லை. அந்நாட்டில் இலக்கிய வாசகனாகச் சொல்லிக்கொண்டிருக்கும் யாரேனும் கொஞ்சம் முயன்றாலும் செய்திருக்கலாம். ஆக, அறிவுழைப்பில் எழுத்து, உரையாடல், விமர்சனங்கள் வழி படைப்புகளையும் முன்னெடுக்க முடியாத; உடல் உழைப்பில், இருக்கின்ற நூல்களை தமிழ் புழங்கும் தேசங்களில் பரவச்செய்யவும் முடியாமல் (அங்கு ஏதோ  இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும்) வாசகப் பரப்பு என்னதான் செய்கிறது? உங்கள் பணிதான் என்ன? அப்படி ஒன்றும் இல்லையென்றால் உங்கள் நாட்டு இலக்கியத்தை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ள ஒரு படைப்பாளி குறித்த வசைகளைப் பொழிய உங்களுக்கு என்ன அருகதை உண்டு?

மலேசியாவின் மூத்தபடைப்பாளிகள் போல மருந்துக்கும் தங்கள் நாட்டின் படைப்புகள் குறித்த உரையாடலை முன்வைக்காமல் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி என பெயர்களைச் சொல்வதன் மூலமாகத் தன்னை தீவிர வாசகனாகக் காட்டிக்கொள்ளும் போக்கைதானே அங்கும் பார்க்க முடிந்தது. கா.ந.சு தொடங்கி ஜெயமோகன் வரை தமிழக இலக்கியத்தின் செறிவான ஒரு பகுதியை பட்டியலிட்டு அதன் ஏற்பும் மறுப்பும் எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.  மலேசியாவில் – இலங்கையில் – சிங்கையில் எது நல்ல படைப்பு? ஏன் அது நல்ல படைப்பு? ஏன் அதைப்பற்றிய பேச்சு இல்லை. மொத்தமும் குப்பை என்றால் ஏன் அது குப்பை? அப்படியான வாசிப்பும் அதை ஒட்டிய முன்னெடுப்பும் விவாதமும் உண்டா? 10 வருடமாக இதே பணியாக இருக்கும் எனக்கும் இந்த சோம்பல்தனத்தின் தெனாவட்டுப் பேச்சை அறிய முடியாதா என்ன?

நிற்க, அப்படி ஒரு தீவிர வாசகனைத்தான் அதிஷ்டவசமாகக் கொழும்பில் சந்தித்தேன்.

சதா தேவகாந்தனின் கனவுச்சிறைதான் தமிழிலேயே சிறந்த நாவல் எனப் பேசிக்கொண்டே இருந்தார். மலேசியா வந்து இரண்டு வாரத்திற்குப் பின்பும் அவரது வல்லினம் வருகையைக் கிண்டலடித்திருக்கும் அவரது வலைப்பதிவில் தேவகாந்தனின் கனவுச்சிறை சிறந்த நாவல் என்ற குறிப்பும் இருந்தது. அவர் இணையத்தளத்தில் புகுந்து ஆராய்ந்தேன். அதை மீறி அது ஏன் சிறந்த நாவல் என ஒரு பதிவை அவரால் விரிவாக எழுதமுடியவில்லை. இந்த மெத்தனம்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தைக் கொன்றது. இந்த அசட்டுப்பேச்சுகளை உதிர்ப்பவர்கள்தானே பின்னர் அந்நாட்டின் படைப்பாளிகளாகி விடுகிறார்கள். தங்கள் இலக்கியச் சூழலைத் தற்காத்து கேலியான ஒரு மொண்ணைக்குறிப்பை எழுதியதால் அவர் இலங்கை இலக்கியத்தில் கவனிக்கப்படும் எழுத்தாளராகிவிடுவார் இல்லையா.

தனது படைப்பிலக்கியம் மட்டும் இல்லாமல், ஒரு நாட்டின் இலக்கியச் சூழல் வளர வேண்டும் என நினைப்பவன் முதலில் தனக்கு முன் நிகழ்ந்த சாதனைகளை அறிந்திருக்க வேண்டும். சமகாலத்தைய நல்ல முயற்சிகளை உள் அரசியல் நோக்கங்கள் இன்றி முன்னெடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து மலேசியாவில் பிழைக்க வந்த கூலித்தொழிலாளர்களின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நாங்களே எங்களை மலேசியப்படைப்பாளிகள் என்றும் எங்களுக்கான தனி அடையாளமும் வாழ்வும் உள்ளது என்றும் அதன் வழியே எங்கள் வரலாற்றையும் அரசியலையும் கட்டமைக்கிறோம் என்றும் கூறும்போது தனித்த இலக்கிய மரபுள்ள ஒரு தேசம் இன்னமும் தமிழக இலக்கியத்தை முன்வைத்தும் அங்கு நடக்கும் அரசியல் சலசலப்புகளை எவ்வித விமர்சனமும் இல்லாமல் தங்கள் தேசத்தில் சுமந்தலைவது அபத்தமான செயல்பாடுகள்.

இந்த சர்ச்சையை ஒட்டி வந்த எதிர்வினைகளில் மலர்ச்செல்வனது கட்டுரையே இறுதி நம்பிக்கையையும் இழக்க வைத்தது. மட்டக்களப்பில் வந்திருந்த மூத்தவர்களுக்கு இளையவர்களிடம் ஆலோசனை சொல்வதில் அவ்வளவு உற்சாகம் இருந்த சூழலில் மலர்ச்செல்வனின் கட்டுரையே என்னை அதிகம் கவர்ந்தது என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திலீப்பிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் எழுதிய குறிப்பில் பொலனறுவையில் நாங்கள் உல்லாசத்தை தவிர்த்திருந்தால் நிகழ்ச்சிக்குச் சரியான நேரத்திற்கு வந்திருக்கலாம் என்றும் ‘punctuality’ தேவை என அவரும் ஆலோசனை சொல்லியுள்ளது அம்மண்ணின் சிறப்பே மொக்கைத்தனமாக ஆலோசனை சொல்வதுதான் என உணர்த்தியது. பொலனறுவையில் இருந்து நண்பகலுக்கெல்லாம் தங்கும் விடுதிக்கு வந்துவிட்டதையும் அதன் பின் திலீப்பின் ஆலோசனைப்படியே புறப்பாடுகள் நடந்ததையும் கேட்டிருந்தால் அவரே சொல்லியிருக்கக் கூடும். இந்த அறிவுரையைச் சொல்வதற்கு ஒரு கட்டுரை எழுதியவர் ஈழத்தின் சமகால இலக்கியங்கள் குறித்து விரிவாகப் பதிவிடலாம்.

இறுதியாக, பல நண்பர்கள் சொன்னதுபோல இலங்கையில் நல்ல வாசகர்கள் இருக்கிறார்கள். மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அந்த வாசகர்களை இணைத்து உருவாகக்கூடிய முன்னெடுப்புகளின் விசை எங்குள்ளது? அந்தத் திரண்ட சக்தி சமகால இலங்கை இலக்கியச் சூழலுக்கு என்ன செய்தது? ஷோபா சக்தி, சயந்தன், என யார் பெயரைச் சொன்னால் வசைக்கவும் நிராகரிக்கவும் முடிகின்ற அந்த வாசகத் திரட்சி யாரை  தமிழ் எனும் மொழியில் புழங்கும் என் போன்ற அயலக வாசகர்களுக்குக் காட்டப்போகிறது?

 

1 கருத்து for “இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...