மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய மோசடி!

malaysia.tamil.writers.associationகடந்த 15.08.2013 ஆம் நாள் மக்கள் ஓசையில் வெளிவந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அறியாமைகள், இயலாமைகள் குறித்த அதன் செயலாளர் ஆ. குணநாதனின் அறிக்கையைப் படித்தோம். இத்தனைநாள் எழுத்தாளர்களின் காப்பிரைட் சட்டத்திட்டங்கள் குறித்து அறியாமல் இருந்தது சங்கத்தின் மிகப்பெரிய குற்றமாகும். 5 ஆண்டுகளாக வருடாந்திர சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பு போடும் செயல்பாட்டில் தன்னை ஈடுப்படுத்தி வந்த எழுத்தாளர் சங்கத்திற்கு எப்படி இது குறித்து தெரியாமல் போக வாய்ப்புண்டு? 

அப்படியென்றால் இத்தனை வருடங்கள் காப்பிரைட் / எழுத்தாளர்களின் உரிமம் குறித்த சிக்கல்களையும் அதன் சட்டவிரோதங்களையும் அறியாமல்தான் செயல்பட்டார்கள் என்றால் அந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்று அதன் நடப்பு தலைவர் அவர்களும் செயலாளரும் உடனே பதவி விலகுவார்களா? சட்டச்சிக்கல்கள் குறித்து எழுத்தாளர் சங்கம் அறிந்தவுடன் என்ன செய்திருக்கலாம்? உடனே தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு இனி அன்பளிக்கு என்றில்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக்கு காப்பிரைட் பணம் கொடுக்கப்படும் என்றல்லவா அவர்கள் அறிவித்திருக்க வேண்டும்? அதுதானே ஒரு சங்கத்தின் மிக முக்கியமான கடப்பாடு. அதைவிடுத்து, சகோதரமனத்துடன்தான் செய்தோம், ஓர் அன்பின் காரணமாகத்தான் செய்தோம் என்கிற பம்மாத்தும் மலுப்பலும் எதற்கு? பொதுவான மலேசியத் தமிழ் எழுத்தாளர்களைப் பிரதிநிதிக்கும் சங்கத்திடம் மக்கள் அன்பையோ சகோதரத்துவமனபான்மையையோ எதிர்பார்ப்பதில்லை. சங்கம் தனது நேர்மையான செயல்திட்டங்களையும் கடப்பாடுகளையும் கொண்டிருத்தலே அவசியம்.

தோல்வியை ஒப்புக்கொள்ளல்

ஒரே ஒரு சட்டச்சிக்கலுக்குப் பயந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கம் தனது அனைத்து இலக்கிய நடவடிக்கைகளையும் கைவிட்டுள்ளது. ஒரு சமூகத்தின் இலக்கிய சங்கமாக இருக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கம் இலக்கியம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிடுவதன் மூலம் தொடர்ந்து அடுத்த என்னவெல்லாம் செய்யவுள்ளது என அறிய ஆவலாக இருக்கின்றது. புதுக்கவிதை ஆய்வு, சிறுகதை தேர்வு எனச் சங்கத்தின் கடப்பாடுகளை அதன் இழப்பதன் மூலம் இனி என்ன செய்வதாகத் திட்டம்? அப்படியொன்றுமில்லையென்றால் பிறகு ஏன் மலேசியவிற்கு ஓர் இலக்கிய இயக்கம் வேண்டும்? அதன் அவசியம் இப்பொழுது என்ன? உடனே சங்கத்தையும் களைப்பதுதானே உத்தமம்? அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்திவிட்டு இனி என்ன கலந்துரையாடல்கள் அல்லது தீர்மானங்கள் எடுக்க வேண்டியுள்ளது? மலேசியாவே நீங்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளை அறியும்படி வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு இனியும் என்ன அனைத்தையும் மீண்டும் ஆலோசிப்பதாக அறிக்கை?

மலேசியப் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் நடத்தும் இலக்கியப் போட்டிகள்

குணநாதனின் அறிக்கையில் மற்றுமொரு விசயம் பல்கலைக்கழகங்கள் நடத்தும் இலக்கியப் போட்டிகள்/ தொகுப்புப் பிரசுரித்தல் தொடர்பான எச்சரிக்கை. பல்கலைக்கழகங்கள் இனி தொடர்ந்து தங்களின் இலக்கிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கம் கேட்டுக்கொள்வதில்தான் பயங்கரமான வேடிக்கை அடங்கியுள்ளது. மலாயாப்பல்கலைக்கழகமும் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமும் நடத்தும் இலக்கியப் போட்டிகள் தொடர்பான விதிமுறைகளில் ஒன்று அப்போட்டியில் வெற்றிப்பெறும் படைப்பாளர்களின் சிறுகதைகள் புத்தகமாக அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படும் என்பதாகும். அதனை முழுமையாக ஏற்றுக்கொண்ட பிறகே ஒரு படைப்பாளன் அப்போட்டிக்குத் தன் கதைகளை அனுப்புகின்றான்.

பிறகெப்படி தமிழ் எழுத்தாளர் இயக்கம் தங்களின் நடவடிக்கைகளை மிகச்சரியாகச் செய்யும் பல்கலைக்கழகங்களை நோக்கி இப்படியொரு ஆலோசனையைப் பிறப்பிக்க முடியும்? மலேசியப் பல்கலைக்கழகங்கள் உடனே இதைக் குறித்து மறுப்புத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆனால், மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கம் வருடாந்திர கதை தேர்வுகளை மலேசியத் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரமான கதைகளைத் தேர்ந்தெடுத்துப் புத்தகமாக அச்சிடுகின்றது. அப்படி அவர்கள் செய்கையில் சம்பந்தப்பட்ட படைப்பாளரிடம் இது குறித்து எந்த முன்னறிவிப்பும் செய்ததில்லை. ஒருவேளை அக்கதை பிரசுரமான பத்திரிகைகளுக்கு இது தொடர்பாக அவர்கள் கடிதம் எழுதி படைப்பாளர்களைத் தொடர்புக்கொள்ளவும் முயன்றதில்லை. இப்படிச் செய்யாமல் கதைகளைப் புத்தகமாக்கி அதை விற்பது மிகப்பெரிய திருட்டுக் குற்றமாகும். இது தொடர்பாக வழக்குத் தொடுக்கவும் நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

அனுமதியில்லாமல் எங்கள் சிறுகதைகளை அச்சாக்கி அதை வெளியீடும் செய்து பணம் திரட்டிய எழுத்தாளர் சங்கம் கடந்த காலங்களிலும் நிகழ்ந்தே இதே தவறுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இல்லாத பட்சத்தில் நாங்கள் எங்கள் புகாரை அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுச் செல்வதை தவிர வேறு வழியில்லை.

– கே. பாலமுருகன், அ. பாண்டியன், தயாஜி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...