ஒரு மசாலா அறிக்கைக்கு பதில்

replyமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டு சிறுகதை தேர்வு நிறுத்தப்படுகிறது என்ற எழுத்தாளர் சங்க செயலாளர் குணநாதனின் அறிக்கையைப் படிக்க நேர்ந்தது. சுரண்டலுக்குப் பின்பான எல்லாவித பாதுகாப்பு அம்சங்களைவிடவும் கழிவிரக்கத்தைத் தேடிக்கொள்வது பொதுவாகவே நடப்பில் உள்ள தப்பிக்கும் சூழல்தான். எழுத்தாளர் சங்கம், குணநாதன் மூலம் அதை மீண்டும் நிரூபித்துள்ளது.

நான் ஆசிரியராக இருந்து வழிநடத்தும் வல்லினம்.கோம் எனும் இணைய இதழில் வெளிவந்த தயாஜியின் கட்டுரையின் அடிப்படையில் இந்த அறிக்கை விடப்பட்டத்துள்ளதால், இப்பிரச்னைக்கு சட்ட ரீதியில் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கும் ‘வல்லினம் குழு’வைப் பிரதிநிதித்து சில கருத்துகளைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

முதலில், தயாஜியின் கட்டுரையின் சாரம் மிகத் தெளிவானது. ஒரு போட்டிக்குச் சிறுகதையை அனுப்பும் எழுத்தாளன் தனது முழு சம்மதத்துடன் அப்போட்டியை நடத்தும் குழுவினருக்குக் கதையை அனுப்புகிறான். அப்போட்டியை நடத்தும் அமைப்புக்கு தன் கதையை நூலாக்கவும் வேறு எந்தப் பத்திரிகைக்கைக்கு அனுப்பாமல் இருக்கவும் உறுதியளிக்கிறான். அதில் நேர்மையாகவும் இருக்கிறான். அனுப்பும் கதையை தான் யாருக்கு அனுப்புகிறேன் என்பதில் எழுத்தாளன் தெளிவாக இருக்கிறான். ஆனால், எழுத்தாளர் சங்க நிலைபாடு வேறு. அவர்கள் இதழ்களிலும் நாளிதழ்களிலும் வெளிவரும் சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதை நூலாகத் தொகுக்கின்றனர். நூலை விற்கவும் செய்கின்றனர்.

காலாண்டுச் சிறுகதை தேர்வு மிக நல்ல இலக்கிய முயற்சி. அதை யாரும் குறை சொல்ல முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை குறித்த விவாதங்கள் கூட இலக்கிய சர்ச்சை சார்ந்தவைதான். ஆனால், அக்கதைகள் நூலாக மாறும் போது அது குறித்த அனுமதியை எழுத்தாளர்களிடம் பெற வேண்டியது முக்கியம் என பதிப்புரிமை சட்டம் சொல்கிறது. அப்படியே பதிப்பித்தப் பின்னர் அதை பணத்துக்கு விற்பது திருட்டுக்குற்றத்துக்குச் சமமாகவும் கருதப்படுகிறது. உதாரணமாக நான் இந்நாட்டில் இலக்கியம் வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு தமிழக எழுத்தாளர்களின் நூல்களை இங்கு மறுபிரசுரம் செய்து விற்பதாக வைத்துக்கொள்வோம்… அதை திருட்டு என்பீர்களா? அல்லது இலக்கியச் சேவை என்பீர்களா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்நாட்டில் திருட்டு வி.சி.டி விற்பவர்கள்தான் மிகப்பெரிய கலை சேவை செய்கிறார்கள் குணநாதன்.

இந்த விடயத்தில் எழுத்தாளர் சங்கம் பேரரசு – விஜய் கூட்டணியில் வெளிவரும் மசாலா படங்கள் போல நடந்துகொள்வதுதான் மிகப்பெரிய நகைச்சுவை. இவர்கள் கூட்டணியில் விஜய் தனக்கு எதிராக வரும் தாக்குதல்களை எதிராளி பக்கம் திருப்பிவிடுவார். அது மசாலா படம் என்பதால் ஏதோ பார்த்து தொலைக்கிறோம். ஆனால் நீங்களும் அதே பார்முலாவைப் பயன்படுத்துவதன் மூலம் ஏன் உங்கள் மசாலாத்தனத்தை நிரூபிக்க முயல்கிறீர்கள். உங்கள் பலவீனத்தை ஒப்புக்கொள்ளும் நீங்கள் அந்த பலவீனத்தை மாற்றியமைக்க முயல்வதே முதிர்ச்சி. இனி வரப்போகும் திட்டங்களில் உங்கள் நியாயத்தை எடுத்துரைத்து எழுத்தாளர்களிடம் அனுமதி கடிதம் அனுப்புவதே நிபுணத்துவம். எழுத்தாளர்கள் மறுப்பு தெரிவுக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று முயற்சிகள் செய்வதே அறிவார்ந்த வழி. இதில் எதுவும் இல்லாமல் குழந்தை தனமாக, “நாங்க ஏன் தெரியுமா நிறுத்துறோம்… அவங்க எங்களை பயங்காட்டிட்டாங்க” எனக்கூறுவது உங்கள் பலவீனத்தையே காட்டுகிறது.

இதில் நிபுணத்துவத்துடன் இத்தனை காலம் இலக்கியத்தை வளர்க்கும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திடமும், பல்கலைக்கழக அமைப்புகளிடமும் வேறு பூச்சி காட்டுகின்றீர்கள். அறிவார்ந்த தளத்தில் பயணிக்கும் அவர்களுக்கும் நிபுணத்துவம் அற்ற உங்களுக்குமான வித்தியாத்தை உணர்ந்ததாலேயே எந்த எழுத்தாளரும் அதற்கான எதிர்வினை ஆற்றவில்லை. ஆனால், அதே மசாலா பார்முலாவைப் பயன்படுத்தி நீங்கள் பிற எழுத்தாளர்களின் உணர்ச்சிகளையும் உசுப்ப ‘சகோதரத்துவம்’ என்றெல்லாம் கூறி முயல்வதும் திரைப்படங்களைத் தோற்கடித்துவிட்டது.

இந்த அறிக்கையின் வழி லாபகராமான விடயம் ஒன்றுதான். நீங்களே உங்கள் வாயால் சிலவற்றை ஒப்புக்கொண்டுள்ளீர்கள். முதலாவது, எந்தக் காலத்திலும் யாரிடமும் தங்கள் படைப்பை பதிப்பிக்க அனுமதி கேட்டதில்லை என பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள். இதன் மூலம் எங்கள் சட்ட நடவடிக்கைக்கு ஆதாரம் பலமாகியுள்ளது. அதாவது இம்முறை மட்டுமல்ல… கடந்த காலங்களிலும் நீங்கள் எத்தனை நூல்களை அச்சடித்தீர்கள் அதை எவ்வளவு விலைக்கு விற்றீர்கள். அதில் எவ்வளவு ராயல்டி கொடுத்தீர்கள் என தெளிவாக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டாகிறது.

இரண்டாவது, இந்த செயலை நிதி உதவியின் மூலமே செய்வதாக நீங்கள் ஒப்புக்கொள்வதால், நூலை விலைக்கு விற்கும் நோக்கம் தொடர்பாகவும் சந்தேகிக்க வைக்கிறீர்கள். நிதி உதவியுடன் நடத்தபடும் இந்நிகழ்விற்கு யார் யாரிடமெல்லாம் பணம் வாங்கினீர்கள். எவ்வளவு செலவானது. நூல் வெளியீட்டில் திரட்டும் பணமெல்லாம் எதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதோடு விற்காத நூல்களின் எண்ணிக்கையையும் காட்ட வேண்டிய கடப்பாட்டில் உள்ளீர்கள்.

தயாஜியோ அல்லது வல்லினம் குழுவினரோ நீங்கள் லட்சம் லட்சமாகச் சம்பாதிப்பதாவெல்லாம் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. எங்களின் கேள்வி அனுமதி இல்லாமல் தொகுக்கப்பட்ட நூல் எப்படி விலைக்கு விற்கப்படலாம். அந்த வெளியீட்டில் நீங்கள் வழங்கும் 300 வெள்ளி சன்மானம் அல்ல. எழுத்தாளர்களுக்கு வழங்க வேண்டிய ராயல்டியில் ஒரு பகுதி மட்டுமே. எனவே கடமையைச் சேவையாக மாற்றி நடிக்காதீர்கள் என்பதையே மீண்டும் வழியுறுத்துகிறோம்.

இதற்காக நீங்கள் இனி செய்யபோவதாக கதை விட்டுக்கொண்டிருக்கும் திட்டங்களை நிறுத்தி வைப்பதாகச் சொல்வதை உண்மை என்று எடுத்துக்கொண்டாலும் அந்த விலகலை வெறும் தப்பித்தல் அல்லது பலவீனத்துக்காக காட்டப்படும் காரணம் என மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.

இறுதியாக, எழுத்தாளர் சங்கம் இத்தனை திட்டங்களைக் கைவிடுவதற்கு பதிலாக, ஏன் இந்தப் பாதகமான செயல்களுக்குத் தலைமை வகிக்கும் ராஜேந்திரன் பதவி விலகக் கூடாது என்பதைச் சங்கம் யோசிக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...