பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண கலைஞன்

“யார்தான் சாக முடியும்? உடம்பு மண்ணுக்குப் போறது, சாவா? நினைவுகளுள்ள மனுஷர் என்னைக்குமே ஜீவிக்க முடியுமே… அதுதான் அமரத்துவம்.” – பிரபஞ்சன் (அமரத்துவம் சிறுகதையில்)

பிரபஞ்சன் 01ஓர் எழுத்தாளர் இறந்தவுடன் ஏற்படும் வெறுமையின் தவிப்பில் அவரது வாசகர்கள் பல சமயங்களில் மிக அதிகமாகவே அவ்வாளுமையைக் கொண்டாடித் தீர்த்துவிடுவதுண்டு. படைப்புகளின் எண்ணிக்கை, அந்த எழுத்தாளர் என்னவாக வாழ்ந்தார், நட்பில் அவர் காட்டிய நெருக்கம், இலக்கியத்தில் நேர்மை, சமரசமற்ற போக்கு, எளிமை என அனைத்துமே கலந்த நினைவுகள் உருவாக்கும் சமநிலையற்ற மனம், மிதமிஞ்சிய சொற்களால் அவரைப் போற்றத் துடிக்கும். இலக்கியவாதி கொண்டாடப்பட வேண்டியவன்தான். அதுவும் கடைசிக் காலம் வரை இலக்கியத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த பிரபஞ்சன் போன்ற ஆளுமைகள், இளம் தலைமுறையினருக்கு என்றுமே நல்லுதாரணங்கள். ஆனால் ஓர் இலக்கிய வாசகனின் கவனம் இலக்கியவாதியின் மரணத்திற்குப் பின்பும் அவரது படைப்பில்தான் குவிந்திருக்கும். அதன் வழியாக மட்டுமே அவன் அவரது ஆளுமையைத் தனக்குள் சமநிலையுடன் கட்டமைப்பவனாக இருக்கிறான்.

பிரபஞ்சனின் புனைவுலகம் மிக விரிவானது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏராளமான நாவல்கள், நாடகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் என எழுத்தாளராக அவரது உழைப்பு பிரமிக்கத்தக்கது. நான் அவரது ‘மானுடம் வெல்லும்’ நாவலை மட்டும் வாசித்திருக்கிறேன். ஜெயமோகன் தமிழில் சிறந்த பத்து நாவல்கள் வரிசையில் அதை இணைத்திருந்தபடியால் தேர்வு செய்ய எளிதாக இருந்தது. சிறுகதைகள் அவ்வாறு இல்லை. பிரபஞ்சனே நான் சந்தித்து பிரமித்த முதல் தீவிர எழுத்தாளர் என்பதால் தேர்வுகளற்று அவரது சிறுகதைகளை வாசித்திருந்தேன்.

எழுத்தாளர் பிரபஞ்சனை நான் முதலும் கடைசியுமாகச் சந்தித்தது 2005இல். அப்போது அஸ்ட்ரோ தனியார் தொலைக்காட்சியும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நாவல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதற்கான தமிழக நடுவர்களாகப் பிரபஞ்சனையும் திலீப்குமாரையும் அமர்த்தியிருந்தது. நாவல் பரிசளிப்பு விழாவுக்காக அவர்கள் இருவரும் வந்திருந்தனர். சிறப்பு வருகையாளர்களாக வைரமுத்துவும் சிவசங்கரியும் அழைக்கப்பட்டிருந்தனர். அதுவரை நான் பிரபஞ்சன் எனும் எழுத்தாளரைக் கேள்விப்பட்டதில்லை; வாசித்ததும் இல்லை. ஆனால் நான் ஒரு நாவல் எழுதியிருந்தேன். அதனால் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன்.

திலீப்குமாரின் மென்மையான பேச்சு அரங்கத்தினரை கொஞ்சம் அசௌகரியமாக்கியிருந்த சூழலில் அடுத்த பேச்சாளராகப் பிரபஞ்சன் வந்தார். கடகடவென சில சிறுகதைகளைச் சொல்ல ஆரம்பித்தார். செக்காவின் the death of a government clerk (தமிழில் தும்மல்) எனும் சிறுகதையை அவர் சொல்ல  ஆரம்பித்தபோது அரங்கம் கலகலப்பானது. கதையின் நாயகன் Chervyakov வின் மரணம் எனக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. பிரபஞ்சன் எது இலக்கியம் எனச் சொல்ல ஆரம்பித்தார். அக்கதை பூடகமாக எதைச் சொல்ல வருகிறது என்றும் வாசகனுக்குள் எவ்வாறு தன்னை செலுத்திக்கொள்கிறது என்றும் விவரித்தார். பின்னர் குல்ஸார் எழுதிய ‘ராவி நதியில்’  சிறுகதையைச் சொல்லி முடித்தபோது அரங்கில் நிசப்தம். நான் அக்கதைகளால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அதுவரை நான் வாசித்திருந்த எந்தக் கதைகளும் போலில்லை அவை. ரஷ்ய இலக்கியம், செக்காவ் எனும் சொற்களை அப்போதுதான் முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். அந்த மன எழுச்சி அடங்குவதற்குள் வைரமுத்து உரை தொடர்ந்தது. பிரபஞ்சனைக் காட்டிலும் தான் பெரும் ஆளுமை என நிரூபிக்க மேடையில் தன் வழக்கமான நாடக பாணி உடல் மொழியில் தனது நடிப்பை அரங்கேற்றிக்கொண்டிருந்தார்.

என்னால் யார் படைப்பாளி என அக்கணமே முடிவு செய்ய முடிந்தது. இலக்கியம் மனதின் எப்பகுதியைத் தீண்டுகிறது என்றும் வார்த்தை ஜாலங்கள் எவ்வகையான சீண்டலை உண்டாக்குகிறது என்றும் தெளிவாகப் பகுத்துக்கொண்ட நிமிடங்கள் அவை. அந்தப் போட்டியில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் நடந்த மிகப் பெரிய நாவல் போட்டி என்பதால் மூத்த படைப்பாளிகள் பலர் அதில் பங்கெடுத்திருந்தனர். 24 வயது இளைஞன் ஒருவன் இரண்டாவது பரிசை எடுத்துச் சென்றது பலருக்கும் அதிர்ச்சி. மறுநாள் நான் நம்பிக்கையுடன் பிரபஞ்சனைச் சந்தித்துப் பேச அந்த எளிய வெற்றி ஒரு காரணமாக இருந்தது.

பிரபஞ்சன் அந்த நாவலை வாசித்திருந்தார். எனக்கு அந்த நாவலை நூலாகப் பதிப்பிக்கும் ஆர்வம் இருந்தது. அதை நூலாகப் பிரசுரிக்க வேண்டாம் என்றவர் நிறைய மேம்படுத்த வேண்டியுள்ளது என்றார். குறிப்பாக அந்த நாவலில் வரும் தாத்தாவின் கதாபாத்திரம் அளவுக்கு இளைஞனாக வருபவனின் கதாபாத்திர வார்ப்பு அமையவில்லை என்றார். “உங்கள் வயதுக்கு அவனைத்தானே இன்னும் நுட்பமாகச் சித்தரித்திருக்க வேண்டும். அதை செய்தால் நீங்கள் நூலாகப் பதிப்பிக்கலாம் என்றார்.” நான் மிகவும் சோர்ந்து போனேன்.

“ஒரு நாவலை எப்படி நல்ல நாவல் மோசமான நாவல் எனச் சொல்ல முடிகிறது உங்களால். உங்களுக்கு உவக்காத நாவல் வேறு ஒருவருக்கு பிடிக்கலாம் இல்லையா?” என்றேன்.

பிரபஞ்சன் நிதானமாகச் சொன்னார், “இருக்கலாம். ஆனால் ஒரு வாசகன் அதற்கு முன் என்ன வாசித்திருக்கிறான் என்பது முக்கியம். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்ற உலக பெரும் நாவலாசிரியர்களை கற்று ரசனையை உருவாக்கிக்கொண்ட ஒருவனுக்கும் ஜனரஞ்சகப் படைப்புகளை வாசித்துவிட்டு கருத்து சொல்பவனுக்கும் வித்தியாசம் உண்டு.”

நான் அவர் சொன்ன பெயர்களை உச்சரித்துப் பார்த்தேன். நாக்கு சுளுக்கிக்கொள்வதுபோல இருந்ததால் நமக்கெதற்கு அவருடன் தகராறு என சமாதானம் ஆகிவிட்டேன்.

அன்று இரவு நண்பர் சிவஞானம் வீட்டில் திலீப்குமாரும் பிரபஞ்சனும் தங்கினர். இரவில் சண்முகசிவாவுடன் நான்  அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பாசிப் பருப்பில் செய்த உருண்டையை அப்போது பிரபஞ்சன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மாவில் நனைத்து பொரித்த பாசிப் பருப்பு உருண்டை அது. அதை அப்படியே கடித்துச் சாப்பிட வேண்டும். அத்தனை காலம் மலேசியாவில் அப்படித்தான் அதைச் சாப்பிட்டும் வந்தனர். பிரபஞ்சன் அதை சாப்பிட புதிய முறையைக் கையாண்டு கொண்டிருந்தார். மிக அழகாக பாசிப் பயிரை சூழ்ந்திருந்த பொரித்த மாவை தோல் போல சுருள சுருளாக நீக்க ஆரம்பித்தார். அப்போது அவர் ஜெயகாந்தனைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததாக ஞாபகம். எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது பென்சிலைத் திருவுவதுபோல சுழன்று சுழன்று நேர்த்தியாக  அவர் உரித்தெடுக்கும் மாவை நான் ரசித்துக்கொண்டிருந்தேன். பாதி உரித்தபின் உள்ளே இருக்கும் பாசிப் பயிரை ஒவ்வொன்றாக நுனிவிரலால் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார். பாசிப்பயிர் உருண்டை அவர் கையில் மாதுளையானதாக உணர்ந்தேன். அவருக்கு பொரித்த உணவு ஒவ்வாது என நினைத்துக்கொண்டிருந்தபோது கடைசியாக எஞ்சியிருந்த பொரித்த மாவை நிதானமாகக் கடிக்கத் தொடங்கினார்.

பின்னாளில் நான் அவரது அப்பாவின் வேட்டி சிறுகதையை வாசித்தபோது எனக்கு இந்தச் சம்பவமே நினைவுக்கு வந்தது. சிவப்புப் பட்டு வேட்டியை அணியும் அப்பாவைப் பற்றிய சித்திரம் அக்கதையை பலமுறை வாசிக்கத் தூண்டியது. அப்பா குளிக்க எடுத்துக்கொள்ளும் ஒரு மணி நேரம், குளித்து முடித்தபின் உடலில் சொட்டும் ஈரத்தை சூரியனும் அப்பாவும் மெல்ல மெல்ல அகற்றும் பாங்கு, அதுவரை கட்டியிருந்த கோவணத்தை ஈரத்தூசி பறக்க காயவைக்கும் நேர்த்தி, எல்லாம் முடிந்து நெருப்பைக் கட்டிக்கொண்டு வருவதுபோல சிவப்புப் பட்டுவேட்டியைக் கட்டிக்கொண்டு வெளிப்படும் அப்பாவை எழுத்துகள் வழியே பிரபஞ்சன் காண வைத்தார். மீசை முளைத்து அப்பா இல்லாத இன்னொரு காலத்தில் மகன் அந்த வேட்டியைக் கட்டிக்கொண்டு அமரும்போது மடிப்புகள் கிழிந்து வேட்டி இறக்கும். காலம் கடந்த வேட்டி என அம்மா சமாதானம் சொல்வார். பிரபஞ்சன் போலவே  உருண்டையின் மாவை உரிக்க முயன்று முடியாமல் பாசிப்பயிர் உதிர்ந்து போகும்போதெல்லாம் சிவப்புப் பட்டு வேட்டி கிழிந்துபோனது, காலத்தின் சிக்கல் மட்டுமல்ல எனச் சொல்லிக்கொள்வேன்.

அப்பாவின் வேட்டி பிரபஞ்சனின் மிகவும் சிலாகிக்கப்படும் சிறுகதைதான். இன்னும்பிரபஞ்சன் 02 சொல்லப்போனால் பல ஆண்டுகளாக எழுதியவர் அதுபோன்ற மிக அறிய கதைகளையே கொடுத்துள்ளார். ஆனால் அக்கதையில் உள்ள உயிர்ப்பான தருணங்கள் அவரது பிற கதைகளிலும் வருவதைக் காணலாம். உதாரணமாக பிரும்மம் சிறுகதை. பிரபஞ்சன் அற்புதமான கதைசொல்லி. போட்டி நடுவராக வந்து மலேசியாவில் அவர் இருந்த ஒரு வாரத்தில் அவருடனான ஒரு சந்திப்பை எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நானும் அதில் கலந்துகொண்டேன். பிரபஞ்சன் இரண்டு மணி நேரம் சில புனைவுகளை வாசித்துக்காட்டி விளக்கிக்கொண்டிருந்தார். ஆத்மாநாம் எனும் கவிஞர் பிரபஞ்சன் மூலமே எனக்கு அறிமுகம். ‘தரிசனம்’ எனும் கவிதையை அவர் வாசித்து முடித்து “அவ்வளவுதான்” என அந்த சந்திப்பை முடித்தபோது நாற்காலியில் இருந்து எழ தாமதமானது. கவிதையை அவர் சொன்ன விதம் அதன் கவித்துவமான இடைவெளியில் சஞ்சரிக்க வைத்தது. அந்த அரங்கில்தான் அவர் தனது பிரும்மம் சிறுகதையை வாசித்தார். அன்றுதான் நான் பிரபஞ்சனின் சிறுகதையை முதன் முதலாய் கேட்டேன்.

அக்கதையில் வரும் அப்பாவிடமும் ஒரு பட்டு வேஷ்டியும் பட்டுத் துண்டும் இருக்கும். ‘மஞ்சளும் இல்லாமல் பழுப்பும் இல்லாமல் இடைப்பட்டு விளங்கும் கரை, பச்சை வண்ணத்தில் கை அகலம் இருக்கும். வெயில் பட்டால் எரிவதுபோல் மினுங்கும்.’ என பிரபஞ்சன் அதை வர்ணித்திருப்பார். அப்பாவின் வேட்டி கதையில் வரும் சிவப்புப் பட்டு வேட்டியைப் போலவே இந்த வேட்டியும் அலமாரியை விட்டு அப்பா எடுக்கும்போதெல்லாம் கற்பூர வாசனையைப் பரவ விடுகிறது. விஷேச தினங்களில் கட்டும் அந்த வேட்டியைக் கட்டிக்கொண்டே அப்பா குடிபுகுந்த புதிய வீட்டில் வெறுமே இருந்த நிலத்தில் முருங்கை மரத்தை நடுவதாக வரும் காட்சிகள் எல்லாம் அபாரமானவை.

அப்பாவின் வேட்டி சிறுகதையில் வரும் நிதானமான தந்தைபோலவே சைக்கிள் சிறுகதையில் வரும் மாமா. சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சைக்கிள் சங்கிலியின் பல்லுக்கு எண்ணெய் விடுவது, கதம்ப சோப்பு போட்டுக் குளிப்பது, வெயில் பட்டால் எரிகிற மாதிரி மினுக்கும் சட்டை என அவர் உருவாக்கும் ஆண்கள் தங்கள் தோற்றத்தில் அதீத கவனம் செலுத்துபவர்கள். பிரபஞ்சனும் தன் தோற்றத்தின்மேல் அக்கறை கொண்டவர்தான். ஆனால் இக்கதையின் சாரம் முற்றிலும் வேறானது. மல்லாக்கொட்டை ஏற்றுமதி வியாபாரம் செய்யும் மாமா  ஆங்கிலேயர்களுடன் சினேகமாக இருக்கிறார். அப்போது நடந்துகொண்டிருந்த சுதந்திரப் போராட்டத்தையும் காந்தியையும் கிண்டல் செய்பவராகவும் இருக்கிறார். வெளிநாட்டு சைக்கிள், உடைகள், சோப்பு என அவற்றின் பெருமைகளைப் பேசுகிறார். ஒருமுறை திரௌபதி அம்மன் உற்சவத்தை அவர் பொறுப்பேற்று நடத்தும்போது அதில் இடம்பெறும் ‘கர்ணமோட்சம்’ கூத்தைப் பார்க்க சிறப்பு விருந்தினராக ஆங்கிலேய உயர் அதிகாரி அழைக்கப்படுகிறார். கூத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் அவர் மனைவியும் உடன்வர, இருக்கின்ற இரண்டு நாற்காலிகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாற்காலியைத் தேடிப்பிடித்து எடுத்து வந்து மாமா துரை மனைவியின் பக்கம் அதை இருத்தி அமரும்போதுதான் ஆங்கிலேயர்களுக்கு நிகராக அவர் அமர்வது துரை மனைவிக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. மாமா மனம் உடைந்து போகிறார். அடுத்த சனிக்கிழமை அந்த வெளிநாட்டு சைக்கிளை கதைசொல்லியான சிறுவனுக்குக் கொடுத்து விடுகிறார்

குளிப்பதில் பிரபஞ்சனுக்கு அலாதி பிரியம் என்றே நினைக்கிறேன். அப்பாவின் வேட்டி சிறுகதையில் ‘குளிப்பதென்பது அழுக்குபோக்கவா? அழுக்குப்போக குளிப்பது யார்?’ எனக் கேட்டிருப்பார். இதே வரிகளை அவரது கருணையினால்தான் சிறுகதையிலும் இருக்கும். கேசவன் என்ற இளைஞன் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு கொலைக் குற்றவாளி. இன்னும் சற்று நேரத்தில் கைது செய்யப்பட்டு  போலிஸால் கொடுமைக்கு உள்ளாகப்போகிறவன். ஆனால் அவன் குளத்தில் குளிக்கத் தொடங்கியபின் ஆனந்தமாக அதில் திளைக்கிறான். ‘குளத்தைவிட்டு வெளிவர யாருக்கு தோன்றும்? குளிப்பது அழுக்குப்போக்கவா? அழுக்குப்போக்க குளிக்க முடியுமா என்ன?’ என மீண்டும் அதே கேள்வி. நீர் உடலை குளிராக்கும் புத்துணர்ச்சியை அங்குலம் அங்குலமாக அவரால் விவரிக்க முடிந்துள்ளது.

கருணையினால்தான் சிறுகதையில் சுமதி என்ற தன் சினேகிதியை வல்லுறவு செய்த தண்டபாணியைக் கொல்கிறான் கேசவன். அவன் செய்யாத இரு கொலைப் பழிகள்  அவன் பேரில் உள்ளது. கேசவனைக் கைது செய்த போலிஸ்காரரான தேவாவின் உள்ளத்தில் அவனிடம் பேசப் பேச கருணை பிறக்கிறது. மறுநாள் விசாரிக்கப்போகும் அதிகாரி அவனைச் சித்திரவதை செய்வார் என நினைக்கும்போது மனம் கலங்குகிறது. குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும் அவனைத் தப்பிக்க வைப்பதும் சாத்தியமில்லை. அதிகாலையில் சுமதிக்குப் பிடித்த தங்க அரளி மரத்து பூக்களை அவன் பொறுக்கிக்கொண்டிருக்கும்போதே தேவாவினால் சுடப்பட்டு இறக்கிறான்.

சிறுகதையில் சொற்சிக்கனத்தின் அழகை பிரபஞ்சனிடம் பழகவேண்டும். இக்கதையில் கேசவனுக்கும் சுமதிக்குமான சினேகம் மிகக்குறைவாகவே சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அவளுக்குப் பிடித்த தங்க அரளி மரத்துப்பூக்களின் மேல் கேசவன் காட்டும் விருப்பமும் அப்பூக்களுக்கு மத்தியில் அவன் புன்னகை மாறாமல் செத்துக் கிடப்பதும் சுமதியைக் கதை முழுவதும் மணம் வீச வைக்கும் வரிகள். பெரும்பாலும் பிரபஞ்சன் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் கருணையை ஏந்தித் திரிபவர்களாகவே உள்ளனர். கொலை செய்த கேசவன் கூட கொலைக்குப் பிறகு ஒரு உயிரைக் கொல்ல தனக்கு என்ன உரிமை என்றே அழுகிறான். அவர் காட்டும் மனிதர்களால் எளிதாக யாரையும் மன்னிக்க முடிகிறது. ஒரு நிமிடம் மட்டுமே மனிதத்தில் இருந்து விலகி மீழ்பவர்களாக அவர்கள் வருகிறார்கள்.

ஒரு மனுஷி சிறுகதை ஒரு உதாரணம். பத்திரிகைகளுக்கு சினிமா நடிகைகளின் படங்களைக் கொடுக்கும் சேகருக்கு தேவையானபோது பணம் கிடைக்காததால் லாவண்யாவைத் தேடிப்போகிறான். அவளது உண்மையான பெயர் விஜயா. காதலனுடன் கோடம்பக்கம் ஓடிவந்தபோது அவன்தான் அவளைப் புகைப்படம் எடுத்து சினிமா இதழ்களுக்கு அனுப்புகிறான். இப்போது அவள் பாலியல் தொழிலாளி. அவளிடம் பணம் கிடைக்குமா எனத் தேடிச்செல்கிறான். எப்போதுமே நன்கு உபசரிப்பவள்தான் அவள். ஆனால் இம்முறை வருமானம் இல்லை. அவளும் பட்டினியாகத்தான் இருக்கிறாள். சேகர் ஒரு புதிய பத்திரிகைக்கு தேவையென அவளைப் பலவிதமாகப் படம் எடுக்கிறான். பின்னர் படத்தை பிரிண்ட் போட அவளிடமே பணம் கேட்கிறான். பணம் இல்லை என்றவள் அவனை உற்றுப் பார்த்து கடன் வாங்கி கொடுக்கிறாள். பணத்தை பெற்றுக்கொண்டு செல்பவனிடம் “படுத்துட்டுப் போறியா?” என்றும் கேட்கிறாள். பின்னர் கடன்கொடுத்த வரலட்சுமி அக்காவிடம் அவன் கொண்டு வந்திருந்த கேமராவில் பிலிம் இல்லாதது தனக்குத் தெரியும் என்கிறாள். ‘சோத்துக்காக நல்ல மனுஷன் பொய் சொல்றார். பாவம் அதான்’ என்கிறாள். இக்கதையில் அவள் சேகருக்கு ஐம்பது ரூபாய் கொடுக்க அதில் இருபது ரூபாயை அவளிடம் கொடுத்துவிட்டு முப்பதை மட்டும் எடுத்துச் செல்பவனாகவே சேகர் இருக்கிறான். ஒருவகையில் அது பிரபஞ்சனின் குணம் என்றே ஊகித்துக்கொள்கிறேன்.

பிரபஞ்சன் 03மலேசியாவில் சண்முகசிவா பிரபஞ்சனின் நெருக்கமான நண்பர். பெரும்பாலான இலக்கிய உரையாடல்களில் சண்முகசிவா பிரபஞ்சனின் யதார்த்தத்தில் உருவாகும் மேன்மையைப் பற்றி சொல்லாமல் இருந்ததில்லை. ஒரு விசித்திரமான சம்பவத்தை ஒருமுறை சொன்னார். சென்னையில் வெய்யில் பொசுக்கும் அவர் வீட்டுக்கு குளிர் சாதனம் பொறுத்திக்கொள்ள சண்முகசிவா பணம் கொடுத்தபோது மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக்கொண்டவர் மருத்துவமனையில் உடல் சுகம் இல்லாமல் இருந்தபோது பணம் வாங்க மறுத்துவிட்டாராம். “வேண்டாம் சிவா வேறு ஒருத்தர் பணம் கொடுத்துருக்காங்க. எங்கிட்ட இருக்கு” எனக்கூறித் தடுத்துவிட்டார் என்றார். ஒரு மனுஷியில் வரும் சேகர்தான் பிரபஞ்சன். தனது தேவைக்கு மேல் இருக்கும் பணத்தை அவர் வைத்துக்கொள்வதில்லை. அவ்வாறு அதிகமாக இருக்கும் பணத்தை உடனே செலவு செய்து தீர்த்துக்கட்டவே விரும்புபவராக இருந்துள்ளார். சேமிப்பது, அதைப் பெருக்குவது அவரது இயல்பே இல்லை என்றே தோன்றுகிறது. அவர் அணியும் தளர்வான உடைகள் அவர் மனதை அறிவதற்கான படிமம். அதிக பணம் மனிதனை இறுக்கமாக்குகிறது. பிரபஞ்சன் கிடைக்கும் பணத்தை உடனடியாகச் செலவு செய்து தன் மனதை தளர்வு செய்துக்கொண்டே இருந்துள்ளார்.

ஒரு நெகடிவ் அப்ரோச் சிறுகதையும் கேமரா சம்பந்தப்பட்டதுதான். வில்லியனூருக்கு பிரபஞ்சனை (கதையில் அவர் பெயர் அதுதான்) அழைக்கிறார் புகைப்படம் பிடிக்கும் தொழில் செய்யும் அவர் நண்பர். நண்பர் எழவு வீட்டில் புகைப்படம் எடுக்க அழைக்கப்பட்டிருக்கிறார். எனவே அப்படியே வில்லியனூர் கோயிலுக்குப் போகலாம் என்பது பிரபஞ்சன் திட்டம். புகைப்படம் பிடித்தபின் டெவலப் செய்து பார்த்தபோது படம் விழவில்லை எனத் தெரியவருகிறது. நண்பர் பதற்றமாகிறார்.  வேறு ஒருவரின் மரணப் படத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து எவ்வாறு நண்பர் சமாளிக்கிறார் என்பதுதான் கதை. இறந்தவர் மகனால் அது தன் தந்தை என நம்ப முடியாதபோது புகைப்பட நண்பர் பேசியே அவர் மனதை மாற்றுகிறார். ‘உயிர் போச்சுன்னு சொல்றோமே அப்படினா என்ன? முகம் மாறிடிச்சுன்னு அர்த்தம். ‘ எனச் சொல்லி அவனை நம்ப வைக்கிறார். பின்னர் நிதானமாகப் பிரபஞ்சனிடம் ‘யார் படமாக இருந்தால் என்ன? கண்ணை மூடினால் தெரியப்போவது அவனுடைய அப்பாதானே. கோயில் விக்கிரகம் எல்லாம் பாமரர்களுக்குத்தானே; படித்தவர்களுக்கு இல்ல’ எனச்சொல்வதாய் கதை முடியும்.

ஒரு நெகடிவ் அப்ரோச் சிறுகதையில் வரும் புகைப்படக்காரன் போல் சூழல்களால் பொய் சொல்பவர்களும் ஒரு மனுஷி கதையில் வரும் விஜயாவைப்போல அனைத்துக் குற்றங்களையும் மன்னிப்பவர்களும் அவரது பல சிறுகதைகளில் பல்வேறு கதாபாத்திரங்களாக வந்து வந்து போகின்றனர். அவர்களால் சமூகத்துக்குப் பெரிதாக தீங்கு ஒன்றும் இல்லை. அந்த நொடியில் அவர்கள் மாண்பை இழப்பது போலவே அந்த நொடியில் மனிதத்தையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.  அப்பாவு கணக்கில் 35 ரூபாய் எனும் சிறுகதையில் வரும் கதைசொல்லியும் அப்புவும் அப்படியானவர்கள்தான்.

பேருந்தில் பயணம் செய்யும் கதைசொல்லி அருகில் இருக்கும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் அப்பாவுவிடம் பேச்சுக் கொடுக்கிறான். பேருந்து நடத்துனரிடம் டிக்கெட் எடுக்கும்போது தன்னிடமிருந்த நூறு ரூபாய் நோட்டை நீட்டுகிறார் பெரியவர். சில்லரை இல்லை என நடத்துனர் சொல்லவும் கதைசொல்லி அவருக்காகக் கட்டணம் செலுத்துகிறான். மிஞ்சிய பயணத்தில் அப்பாவு தன்னைச் சூழ்ந்துள்ள வறுமையைச் சொல்கிறார். குடும்பத்தைப் பீடித்துள்ள தரித்திரியத்தைச் சொல்கிறார். அந்த நூறு ரூபாயும் தன் மனைவியின் தம்பியான ஆறுமுகத்திடம் கடன் வாங்கி வந்ததும் என்றும் ஒரு பத்து நாளைக்கு அதை வைத்து கஞ்சி குடிக்கலாம் என்றும் சொல்கிறார். இருவரும் இறங்கி ஒரு உணவகத்தில் உண்கின்றனர். அப்போதும் பெரியவர் ரூபாயை நீட்ட சில்லரை இல்லை என்றே பதில் வருகிறது. கதைசொல்லி தயங்காமல் இருவருக்கும் பணம் செலுத்துகிறான். ஒரு சிகரெட்டும் வாங்கிக் கொடுக்கிறான். பின்னர் பழம் வாங்கிக்கொண்டு அதில் கிடைக்கும் மீதத்தில் தனக்குச் செலவு செய்த பணத்தைக் கொடுப்பதாக அழைத்துச்சென்று நூறு ரூபாயை நீட்டுகிறார் அப்பாவு. இரவாகிவிட்டதால் கல்லாவின் பணம் அடுத்த நாள் முதலுக்குச் சென்றுவிட்டதாக பதில் வரவே அதற்கும் கதைசொல்லி பணம் செலுத்துகிறான். நெகிழ்ந்த பெரியவர் அவனை மறுநாள் வீட்டுக்கு வரச்சொல்லி முகவரியையும் சொல்கிறார். இரண்டு நாட்கள் கழித்து அப்பக்கம் செல்லும் கதைசொல்லி அப்பாவு வீட்டுக்கும் செல்கிறான். அப்பாவு சாரயக் கடையிலேயே விழுந்து கிடப்பவர் என்பது அவர் மனைவி சொல்லவும் தெரிகிறது. தனது தம்பி கொடுத்த ஐம்பது ரூபாயில் 25 ரூபாயைக் குடும்பத்துக்குக் கொடுத்துவிட்டு மீதம் 25 தீரும் வரை குடிப்பார் என்கிறார் அப்பாவியாக. கதைசொல்லி அக்குடும்பத்தை பீடித்துள்ள பசிப்பிணியைப் பார்க்கிறான். ஆறுமுகம் கொடுத்ததாகச் சொல்லி மேலும் ஒரு 10 ரூபாயை கொடுத்துவிட்டு போகிறான் .

பிரபஞ்சன் சிறுகதை உலகில் இயலாமையில் பொய் சொல்பவர்கள் மன்னிக்கப்படக்கூடியவர்கள். அவர்கள் மேலும் உதவிகள் பெறத் தகுதியும் கொண்டவர்களாகவே வருகின்றனர். தட்சணை எனும் கதையில் வரும் ஆசிரியரும் அவ்வாறானவர்தான். தன் மாணவனுக்கு அவனது அப்பா வாங்கிக்கொடுத்த பிரான்ஸ் தேசத்துப் பேனாவை ஆசிரியர் கொஞ்சம் நேரம் இரவல் வாங்கி பின்னர் தனது சட்டைப்பையில் வைத்துக்கொள்கிறார். மாணவனுக்கு எப்படி ஆசிரியரிடம் கேட்பது எனத் தயக்கம். அப்பா கண்டுபிடிப்பதற்குள் ஆசிரியர் இருக்கும் இடமெல்லாம் பிரசன்னமாகிச் சிரிக்கிறான். ஒரு சமயம் ஆசிரியர் அந்தப் பேனாவை தன் மகள் தனக்கான பரிசு என எடுத்துக்கொண்டாள் எனச் சொல்லவும் உடைந்து போகிறான். அப்பாவிடம் தவற்றை சொல்லி அழுகிறான். அப்பா “வாத்தியார் தெய்வம் மாதிரிப்பா. அவங்களுக்குக் கொடுப்பது கடமை” எனச் சொல்லி அவனைத் தேற்றுகிறார். இவ்வாறு எதன் பொருட்டும் யாரையும் மன்னித்துவிடலாம்; தவறுகளின்மேல் கொஞ்சம் கருணையை ஏற்றி அணுகலாம் என்பவையே அவரது சிறுகதைகளின் மையம். அதில் உச்சமான புனைவு மனசு.

மனசு சிறுகதையில் ஒரு புதுமணத் தம்பதிகள் புதுவீட்டுக்கு வருகின்றனர். பக்கத்து வீட்டில் உள்ள அஞ்சலை அக்காவுடன் புதுமணப்பெண் ரேணு நட்பாகிறாள். எல்லா விசயங்களிலும் உடன் இருக்கிறாள். அஞ்சலை சமையல் ரேணுவின் கணவனைப் பெரிதும் கவர்கிறது. ரேணு வெகுளியாக இருக்கிறாள். அஞ்சலை அவள் கணவனுக்கு தன் சமையல் ருசித்ததைப் பற்றிக் கேட்பதெல்லாம் அவளுக்குச் சிக்கலே இல்லை. ஒரு கிழவனுக்கு இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்பட்ட அஞ்சலையின் உடலின் வனப்பு ரேணுவைக் கவர்வதாகவே உள்ளது. அதை அவள் பாராட்டுகிறாள். ஆடி மாதத்துக்கு குடும்பத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட ரேணு நாற்பத்து ஐந்து நாட்களுக்குப் பின் திரும்புகிறாள். கணவனிடம் சில மாறுதல்களைப் பார்க்கிறாள். சலனம் இன்றி இருக்கிறான். கிளர்ச்சியின்றி அவளை அணுகுகிறான். மறுநாள் கணவனிடம் வீடு மாறலாம் என்கிறாள். குற்றம் உள்ள உள்ளம் என்பதால் தலைகுனிந்தபடியே பதில் வருகிறது. அஞ்சலையிடம் ஓரிரு சொற்கள் எரிந்து விழவும் அவளுக்கும் புரிந்துபோய் வீட்டுக்குச் சென்று விடுகிறாள். சிறுகதையின் இறுதியில் பிரபஞ்சன் சொல்லியிருப்பார், ‘ஆத்திரமாக இருந்தது. ஒரு நிமிஷம்தான். பின்னர் பாவமாக இருந்தது.’

பிரபஞ்சன் மலேசியாவிற்கு வந்தது எழுத்தாளர் சங்கம் மற்றும் ஆஸ்ட்ரோ ஏற்பாட்டில். எழுத்தாளர் சங்கம் மூலம் மலேசியா வரும் தமிழ் எழுத்தாளர்களுக்கு உபசரிப்பில் குறைவிருக்காது. நிகழ்ச்சி முடிவடைந்தபின் சங்கத்துக்கு நெருக்கமான அரசியல்வாதிகள், வணிகர்களுடன் விருந்துபசரிப்புகள் நடக்கும். அதில் அவரவர் தத்தம் சிறப்புகளைச் சொல்லிக்கொள்வார்கள். தமிழக விருந்தினர்கள் அதைக்கேட்டு மகிழலாம். எழுத்தாளர்களுக்கும் அவ்வப்போது பேச வாய்ப்பு கிடைக்கும். அப்போது மறக்காமல் சங்கத்தைப் புகழலாம். திறமை இருந்தால் ஏதாவது வணிகத்தொடர்பை உருவாக்கிக்கொள்ளலாம். இந்த உபசரிப்பு அவர்கள் இருக்கும் நாள்வரை தொடரும். பிரபஞ்சன் அந்த உபசரிப்புகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. அது ஏற்பாட்டுக் குழுவினரை அவமதிப்பதுபோல இருக்கலாம் என திலீப்குமார் வருந்தினார். ஆனால் பிரபஞ்சன், “சண்முகசிவாவும் சிவஞானமும் நம்முடன் இருக்கும்போது வேறு எந்த வாசகரை நாம் மலேசியாவில் பார்க்கப் போகிறோம்” எனத் தொலைக்காட்சி மற்றும் சங்கத்தின் அழைப்புகளை மறுத்துவிட்டார். இலக்கிய வாசகர்களுடன் இருப்பதில்தான் அவருக்கு உற்சாகம் இருந்தது.

இன்று பிரபஞ்சன் சிறுகதைகளை வாசிக்கும்போது அவற்றில் சில பத்தி எழுத்துகள் போல தோன்றுகின்றன. பெரும்பாலான சிறுகதைகள் எளிய திருப்பங்களைக் கொண்ட சுவாரசியமான கதைகள் எனக் கூறவே தோன்றுகிறது. மானுடத்தின் எண்ணற்ற கதவுகளில் மிகச் சிலவற்றை மட்டுமே அவர் திறந்து பார்த்துள்ளாரோ என்ற ஐயமும் எழுகிறது. அவற்றை மீண்டும் மீண்டும் திறந்து பார்க்க அவர் ஆவல் கொண்டிருக்கலாம். ஆனால் இலக்கியத்திற்குள் நுழையும் புதிய வாசகனுக்கு நிச்சயம் அவரது சிறுகதைகள் புதிய திறப்புகளைக் கொடுக்கும். அவரது சிறிய எளிய வாக்கியங்களில் உள்ள சொற்தேர்வும் அதைக்கொண்டு அவர் விசாலமாக உருவாக்கும் காட்சிகளும் புதிய எழுத்தாளர்கள் கற்க வேண்டிய ஒன்று. யதார்த்தத்தை அழுத்திச்சொல்லி அதை அங்கதமாக்கும் வித்தை சோர்வடையாத வாசிப்புக்கு யாரையும் ஈர்க்கும். பிரச்சாரமற்ற முற்போக்கின் குரலை இளம் வாசகர்கள் பிரபஞ்சனிடம் இருந்து கற்கலாம். செறிவான, மரபான ஒரு சிறுகதை வடிவத்துக்கான ஆசிரியராக அவர் என்றும் தமிழ் இலக்கியச் சூழலில் இருப்பார்.

2017இல் சங்க இலக்கியம் குறித்த கலந்துரையாடலுக்காக மலேசியாவுக்கு அவரை அழைக்க அணுகியபோது என்னை நினைவில் வைத்திருந்தார். அம்ருதாவில் எனது ‘உலகின் நாக்கு’ தொடரை வாசித்ததாகக் கூறினார். ஜூன் மாதத்திற்குள் உடல் நலம் முற்றிலும் குணமாகிவிடும், வந்துவிடலாம் என்றார். அவர் ஊகங்கள் தவறிக்கொண்டிருந்தன. ஒருவேளை அவர் வந்திருந்தால் ‘நீங்கள் சொன்னதுபோல பல சிறுகதைகளை வாசித்தப்பின் உங்கள் சிறுகதைகள் சாதாரணமானவையாகத் தோன்றுகின்றன. ஆனாலும் நீங்கள் அசாதாரணமான ஆளுமை’ எனச் சொல்லியிருப்பேன்.

5 comments for “பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண கலைஞன்

  1. January 1, 2019 at 9:06 am

    சிறப்பான அஞ்சலி! புத்தாண்டின் தொடக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான காலைப்பொழுதை அளித்த கட்டுரை!!

  2. Jeevan
    January 3, 2019 at 12:27 pm

    நவீன்.. சிறப்பான அஞ்சலி …

  3. January 6, 2019 at 3:03 pm

    நவீன் , பிரபஞ்சனின் அஞ்சலி கட்டுரை என்றல்லாமல், அவரது சிறுகதைகள் பற்றிய நல்ல ஆய்வும் , ஆழமும் நிறைந்த கட்டுரை. அமெரிக்காவில் வசிக்கும் நான், தமிழகம் சென்றால், எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை சந்தித்து , உரையாடிவிட்டு வருவது வழக்கம். நான் நேரில் சந்திக்க வாய்ப்பே கொடுக்காமல் சென்றவிட்ட இன்னொரு படைப்பாளி.

  4. January 24, 2019 at 9:12 am

    நல்ல திறனாய்வு.நிறைகளைக் கூறுபவருக்கு
    குறைகளைக் குறிப்பிடும் கடமை உண்டு.
    இறப்பு யாரையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்
    ஆக்கிவிடா து–குறிப்பாக எழுத்தாளரை.

Leave a Reply to Jeevan Cancel reply