ICERD: ஒரு பின்னடைவு

icerdமொழி, இனம், மதம் என்ற ஏதோ ஓர் அடையாளத்தின் காரணமாகத் தன்னை தனித்து வெளிப்படுத்துவது மனித இயல்பாக இருந்தாலும் அதே அடையாளத்தைக் காரணமாக்கி மற்ற அடையாளங்களைச் சிறுமைப்படுத்துவதோ உரிமைகளைப் பறிப்பதோ மனித நாகரீக வளர்ச்சிக்கு எதிரானது.

நாகரீக சமூகம் என்பதன் முதன்மை அடையாளமாக  ‘மண்ணில் வாழும் எல்லா மனிதனும் சமம்’ என்னும் பரந்த நோக்கை நோக்கி மனிதனை நகர்த்தும் பெரும் பணியை அறிவுலகம் தொடர்ந்து செய்துவருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ என்று கணியன் பூங்குன்றன் முன்னெடுத்த பெரும் அறப்பணியின் நீட்சியை ஆன்மீகம்  தன் சாரம்சமாக்கிக் கொண்டுள்ளது. இன்று அப்பெரும் பொறுப்பை அரசியல் தலையீட்டின் வழியும் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை உலகம் உணர்ந்துள்ளது.  உலகில் பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்கும் பெரும் கனவுதிட்டத்தை  அரசியல்  சட்டங்களின் வழி  உறுதிபடுத்தும் முயற்சியே ICERD எனப்படும் ஐக்கிய நாட்டு சபை முன்னெடுக்கும் எல்லாவகையான மனித ஒதுக்கலுக்கும் எதிரான சாசனமாகும். ICERD சாசனம் ஐ.நாவால் 1969-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. பின்னர் தொடர் விவாதங்களின் வழி பல நாடுகளையும் உட்படுத்தியது. ICERD சாசனத்தின் செயல்பாடுகளை  CERD என்ற ஐ.நா அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சிறு இனக்குழுக்களாக வாழ்ந்து, பின்னர் பெரும் சமுதாயமாக மாறிய மனித இனம் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட பல்வேறு பிரிவுகளைத் தனித்த அடையாளங்களாக போற்றி பாதுகாத்து வந்துள்ளன. மொழி, இனம், சாதி, மதம் என்ற வேற்றுமைகளை அரசியலில் செலுத்தி ஏற்றதாழ்வுகளையும் சமூக அடுக்குகளையும் அமைத்துக் கொண்டு நிர்வாகம் செய்வது பழங்கால அரசாட்சி முறை. உலகம் முழுவதுமே மக்கள் தங்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை நிறுவிக் கொண்டு பகைமையோடும் பாகுபாட்டோடும்தான் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை  உலக வரலாறு மெய்ப்பிக்கிறது. கடந்த நூற்றாண்டுவரை நிறவேற்றுமையை மையப்படுத்திய ஒடுக்குமுறை ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மேலோங்கி இருந்தது. இன வேற்றுமையால் சீனா-ஜப்பான் போர் பல ஆண்டுகள் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டது. சாதியவாத ஒடுக்குமுறையையும் தீண்டாமையையும் எதிர்த்து இந்திய துணைகண்டத்தில் பல போராட்டங்கள் நடந்துள்ளன.

இன மத சாதிய பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் உச்சத்தை அடையும் போது பெரும் கலவரங்களும் இனப்படுகொலைகளும் நடந்து மனித உயிர்கள் பலியாகின்றன. பெரும்பான்மை மக்கள் சிறுபான்மைகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதும் நாட்டு வளங்களை தாங்களே பங்கிட்டுக் கொள்வதும் பாகுபாட்டு மனப்பான்மையின் வெளிப்பாடுகள்.   ஆகவே, இன மத பாலியல் ஒதுக்கலுக்கும் பாகுபாட்டுக்கும் எதிரான நடவடிக்கைகள் நாகரீக உலகில் அவசியமாகின்றன.

நவீன ஆட்சிமுறையின் அடிப்படை மக்களை சமநோக்குடன் நிர்வகிப்பதே. எல்லாருக்கும் எல்லா உரிமையும், சலுகையும் உண்டு என்பதே மக்களாட்சிமுறையின் சாராம்சம். இனத்தின் பெயரிலோ மதத்தின் பெயரிலோ சலுக்கைகள் கொடுக்கப்படுவதும் உரிமைகள் மறுக்கப்படுவதும் நவீன மக்களாட்சிமுறைக்கு எதிரானதுதான்.

அதே நேரம் பல்வேறு வரலாற்று காரணங்களின் அடிப்படையிலும் மரபுகள் காரணமாகவும்icerd2 சமூகங்களுக்கிடையே நிலவும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சரிகட்ட- எல்லா பிரிவு மக்களும் தங்களை மைய சமூக வளர்ச்சியில் இணைத்துக் கொள்ள- ஒடுக்கப்பட்ட அல்லது பின்தங்கிய சமூகங்களுக்குச் சிறப்பு சலுகைகளையும் ஒதுக்கீடுகளையும் சட்டரீதியாக கொடுப்பதும் ஜனநாயக ஆட்சியின் ஒரு பகுதிதான். அது அரசின் பரிவையும் புரிந்துணர்வையும் அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் சலுகையாகும். சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளால் பின்தள்ளப்பட்ட தரப்பை கைதூக்கி விடும் ஒரு முயற்சியாகவே இது அமைகிறது.  ஒட்டுமொத்த தேசமும் எதிர்காலத்தில் ஒரே நிரையில் நிற்க வேண்டும் எனும் தூரநோக்கு கொள்கைகளின் வெளிப்பாடாக ஏற்படுத்தப்படும் திட்டங்களின் வழி இச்சலுகைகள் அமல்படுத்தப்படுகின்றன. இந்தியா மற்றும் நேப்பாளம் போன்ற நாடுகளின்  இட ஒதுக்கீடு, மலேசியாவின் பூமிபுத்ரா தகுதி, பிரிட்டிஷ், கனடா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அமலில் இருக்கும் சிறப்பு சலுகைகள் ஆகியவற்றின் நோக்கம் கல்வி, பொருளாதாரம் போன்ற கூறுகளில் குறிப்பிட்ட இனக்குழுக்கள் பின் தங்கிவிடக் கூடாது என்பதுதான்.   சிறப்பு சலுகைகள் எந்த தரப்பு மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது என்பதைப் பொருத்தே அந்த அரசின் போக்கையும் அரசியல் நிலைபாட்டையும் நாம் முடிவு செய்யமுடியும்

மலேசியாவில், பெரும்பான்மை மக்களான பூமிபுத்ராக்களுக்கு மலாயா அரசியல் அமைப்பின் சட்ட விதி 153-ன் வழி சிறப்பு சலுகைகள் சட்டமாக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சொத்துடமை போன்ற பல்வேறு கூறுகளில் பூமிபுத்ராக்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. இச்சலுகைகள் சுதந்திரத்துக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வகுத்துக் கொடுத்த புதிய அரசியல் சாசனத்துக்கு மாற்றாக மலாய் சுதந்திர போராட்டவாதிகளால் பெரும் போராட்டத்திற்குப் பின் வகுக்கப்பட்டனவாகும்.

ஆங்கில அரசு முன்வைத்த மலேயன் யூனியன் (Malayan Union) திட்டத்தை  UMNO தன் போராட்டங்களின் வழி முறியடித்தது. மலேயன் யூனியன் என்பது சுதந்திர மலாயாவை அதன் மரபுகளில் இருந்து வெளியேற்றி சமநோக்குள்ள மக்களாட்சி நாடாக அமைக்கும் திட்டமாகும். எல்லா இனத்தவர்க்கும் குடியுரிமையும் சம தகுதியும் கொடுக்கும் மலேயன் யூனியன் திட்டத்தால்  மண்ணின் மைந்தர்களாக தங்களை உணர்ந்த மலாய்க்காரர்கள் தங்கள் உரிமைகளை குடியேறிகளிடம் இழக்க நேரிடும் என்று அஞ்சினர். பெருநகரங்களையும் வணிகத்தையும் தங்கள் பிடியில் வைத்திருக்கும் குடியேறிகள் குறிப்பாக சீனர்கள் பெரும்பான்மை மலாய்காரர்களைப் பொருளாதார அடிமையாக மாற்றக் கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. விவசாயத்தையும் பாரம்பரிய கம்பத்து வாழ்க்கையையும் தங்கள் வாழ்வியலாக கொண்டிருந்த மலாய்காரர்கள் இயல்பாகவே பொருளாதார தூரநோக்குகளற்று இருந்தது பெரும் முதலீட்டாளர்களாக மாறிக் கொண்டிருந்த சீனர்களுக்குச் சாதகமாக அமைந்தது. இந்தோனேசிய புரட்சி, பர்மா உள்நாட்டு கலவரம் போன்ற அண்டை நாடுகளின் அரசியல் நிலவரங்களில் இருந்து மலாய் இன அரசியல் தலைவர்கள் தங்கள் நிலைபாட்டை வகுத்துக் கொண்டனர்.

ஆகவே குடிமக்கள் சமநோக்குடைய மலேயன் யூனியன் (Malayan union)  திட்டத்தை எதிர்த்து மலாய்காரர்களை முதன்மை படுத்தும் மலாயா கூட்டமைப்பு அரசியல் சாசனம் (Federation of Malaya) அம்னோ தலைமையேற்ற அலியன்ஸ் கூட்டு கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.  அந்த கூட்டணியில் ம.சீ.ச வும் ம.இ.காவும் அங்கம் வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ரீட் ஆணையம் (Reid Commission) முன் மொழிந்த சில ஆலோசனைகளின் பேரில் மலாயாவின் அரசியல் சாசனத்தில் 153வது விதி இணைக்கப்பட்டது. மலாய்க்காரர்களின் முன்னுரிமையையும் நலனையும் மாட்சிமை தாங்கிய பேரரசரின் நேரடிப் பார்வையில் வைக்கும் விதமாக 153வது அரசியல் சாசன விதி வகைசெய்கிறது. குடியேறிகளுக்கு மலாயாவின் குடியுரிமை தகுதியை  (விதி 14–18) இளகுவாக்கியதற்கு நிகராக மலாய்க்காரர் சிறப்பு சலுகைகள் பேச்சுவார்த்தைகளின் வழி பெறப்பட்டதை ‘சமூக ஒப்பந்தம்’ (social contract) என்று சட்ட நிபுணர்கள் விளக்குகின்றனர்.  சமூக ஒப்பந்தம் என்பது ஒர் எழுதா சட்டமாக, அன்றைய பல்லின மக்களின் அடிப்படை தேவைகளை முன்வைத்த புரிந்துணர்வுடனும் தலைவர்களின் ஒப்புதலுடனும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘கொடுக்கல் வாங்கலாகும்’ (quid pro quo).

ரீட் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் மலாயா அரச சாசனத்தில் வகுக்கப்பட்ட சட்டவிதி 153 தொடக்கத்தில் மலாய்க்காரர்களின் உரிமைகளுக்கு பங்கம் ஏற்படாவண்ணம் பேரரசரின் பாதுகாப்பை கோரும் தளர்வான அம்சமாகவே இருந்தது. அதோடு ரீட் ஆணையத்தின்  ஆலோசனைபடி மலாய்க்காரர் சிறப்புரிமை என்பது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அம்சமாகும். மலாய்காரர்களின் பொருளாதார, கல்வி பலம், வேலை வாய்ப்பு, போன்ற அம்சங்கள் சிறப்பு சலுகைகளின் வழி மேம்படும் பட்சத்தில் அதன் செயல்திட்டங்கள் குறைக்கப்பட்டு எல்லா இனங்களுக்கும் சமதகுதியும் சம உரிமையும் கொடுக்கப்படவேண்டும் என்பதே ரீட் ஆணையம் முன்வைத்த ஆலோசனையாகும்.

icerd3ஆயினும், மே 1969 இனக் கலவரமும் 1972-ல் மலாய்காரர் நிதிநிலை பற்றிய ஆய்வும் 153-வது சட்டபிரிவை திடப்படுத்தின. புதிய பொருளாதார கொள்கை (NEP), மாரா(MARA) போன்ற விரிவான திட்டங்களின் வழி பூமிபுத்ராக்களின் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இன்று அரசியல் விதி 153 மிகவும் உணர்ச்சிகரமான அரசியல் அம்சமாக மாறியுள்ளது.  பின் தள்ளப்படும் நிலையிலிருந்து ஒரு சமூகத்தைக் கைதூக்கிவிடும் முயற்சியாக இருந்த “பூமிபுத்ரா சிறப்பு முன்னுரிமை” இன்று சிறுபான்மை இனங்களின் வளர்ச்சியை தடுக்கும், இன பாகுபாடுகளை உருவாக்கும் ஒரு வலுவான திட்டமாக மறைமுகமாக பயன்படுகிறது என குறிப்பிட்ட சில தரப்பினரால் விமர்சிக்கப்படுகிறது. ஆயினும், வெளிப்படையாக விதி153-ஐ விமர்சிப்பதே சட்டத்தை மீறிய செயல் என்ற கருத்துகள் பரப்பப்படுகின்றன. அவ்வகை விமர்சனங்கள் அரச நித்தனையாகவும் இன பதற்றத்தை எழுப்புவதாகவும் எச்சரிக்கப்படுகிறது.  “பூமிபுத்ரா சிறப்பு சலுகை” என்பதை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வதை மலேசிய அரசியல் கட்சிகள் வழக்கமாக்கி இருக்கின்றன. தேர்தல் கால பிரச்சாரங்கள் இதற்கான தக்கசான்றுகள்.

இந்நிலையில் ICERD முன்வைக்கும்  பாகுபாடற்ற சமூகம் என்னும் நிலையை மலேசியாவில் அடைவது பெரும் சிக்கலாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் ICERD, மலேசியாவின் 153வது அரசானைக்கு எதிரானது என்று கூறுகின்றனர். கூர்ந்து கவனிக்கும் போது மலேயன் யூனியன் முன்வைத்த சமநோக்கு சமூகம் என்னும் கூறு ICERD-டிலும் சாரம்சமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் கடந்த அறுபது வருடங்களாக மலேசியர்களின் இனவாத மனநிலை கொஞ்சமும் முன்னகரவில்லை என்பதையும் இந்த சூழலில் இருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

மலேசியாவில் பூமிபுத்ரா சிறப்புரிமைகள் முக்கியத்துவம் பெரும் நிலையில்  ‘சமூக ஒப்பந்தத்தின்’ வழி பிற இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.  ஆகவே, ICERD இங்கு தேவையில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால்,  ICERD-ஐ ஏற்பதால் ‘பூமிபுத்ரா சிறப்பு சலுகை’ உண்மையில் பாதிப்புக்குள்ளாகுமா? என்ற கேள்விக்கு அரசியல் குழப்பவாதிகளே இதுவரை பதில் கூறிக் கொண்டிருக்கிறார்களேயன்றி சட்ட வல்லுனர்கள் அல்ல.  ICERD-ஐ ஏற்பதும் மறுப்பதும் சட்டவல்லுனர்கள் கலந்தாலோசித்து முடிவு செய்யவேண்டிய விடையமாகும். காரணம் ICERD சாசனம் உலக நாடுகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். ஆனால் மலேசியாவில் துரதஷ்டவசமாக, மக்கள் உணர்ச்சியுடன் விளயாடுவதில் தேர்ச்சிபெற்ற முன்றாம்தர அரசியல்வாதிகள் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்குப் பணிந்து ICERD-டை மலேசியா ஏற்காது என்று அரசு அறிவித்துள்ளது. ஆயினும் ICERD என்பது சமூக சமநோக்கின் அவசியத்தை உணர்ந்து உலகம் முன்னெடுத்த ஒரு திட்டமாகும். உள்நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு அப்பால், மலேசிய அரசு ICERD-ஐ மறுக்கும் நிலைபாட்டை முன்வைத்து உலகநாடுகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய இக்கட்டில் உள்ளது. இதுவரை ICERD-ஐ மறுக்கும் நாடுகளின் இனவாதப் போக்கை உலகம் அறிந்துள்ளது. இதுவரை நாம் இனவாத, மதவாத நாடுகள் என்று சாடும் பல நாடுகளும்கூட, உலக மாந்தநலம் நாடி ICERD சாசனத்தில் கையொப்பம் இட்டுள்ளன. சில நாடுகள் சிறப்பு விதிமுறைகளை அமைத்துக் கொண்டபின் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளன.   ஆனால் உலகில் அமைதியையும் இன மத நல்லினக்கத்தையும் தொடர்ந்து வழியுறுத்திவரும் மலேசியா ICERD-ஐ முற்றிலும் புறக்கணிக்கும் நிலையை இந்நாட்டு இனவாத அரசியல் கட்சிகள் உருவாக்கியிருக்கின்றன.

ICERD-ல் கையொப்பம் இடாத நாடுகளை கவனித்தால் அவற்றின் இனவாதபோக்கை மலேசியாவுடன் எவ்வகையிலும் ஒப்பிடமுடியாது என்பது தெளிவாகும்.  95% நாடுகள் (176 நாடுகள்) அசலாகவோ, சில மாற்றங்களுடனோ கையெழுத்திட்டிருக்கும் ICERD ஒப்பந்தத்தை மலேசிய அரசு முற்றாக நிராகரிப்பது உலக அளவில் பெரும் விவாதங்களை உருவாக்கும். இது “நாங்கள் எங்கள் நாட்டில் மனித பேதங்களை முழுமையாக செயல்படுத்துவோம்” என்று உலகுக்கு வெளிப்படையாக  செய்யும் அறிவிப்பாகும். மாந்த மேன்மைக்கான மேடையில் நாம் இல்லை என்பது நாட்டின்  அவப்பெயருக்கு காரணமாகும். கடந்த அறுபது ஆண்டுகளாக மலேசியா உலக அளவில் கூறிவரும் இன, மத சுதந்திரம் குறித்த நேர்மை கேள்விக்குள்ளாகும்.

உண்மையில் போதுமான விவாதங்களும் கலந்தாய்வுகளும் இல்லாமலேயே, அரசியல் சந்தர்ப்பவாதிகளின் அடாவடிகளுக்கு அஞ்சியே ICERD-ஐ அரசு நிராகரித்துள்ளது. இது அனைத்துலகரீதியில் மலேசியாவுக்கு ஒரு பின்னடைவு.  ‘மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவரும் சமம்’ என உலகுக்கு உரக்க அறிவிப்பு செய்யும் உண்ணத பணிக்கு மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாடே தடையாக இருப்பது முரண் என்பதோடு மலேசியர்களின் பிற்போக்கு சிந்தனையையும் உலகுக்கு அறிவித்துக் கொள்கிறது.

மேற்கோள் சுட்டிகள்

https://en.wikipedia.org/wiki/Article_153_of_the_Constitution_of_Malaysia
http://www.kptg.gov.my/sites/default/files/article/perlembagaanpersekutuan.pdf
http://www.catholiclawyersmalaysia.org/sites/default/files/Reid%20Commission%20Report%201957.pdf
https://en.wikipedia.org/wiki/Social_contract_(Malaysia)
https://prezi.com/yp-maof41yg8/social-contract-in-malaysia/
https://malaysiadateline.com/wawancara-apa-makna-sebenar-retifikasi-icerd/

1 கருத்து for “ICERD: ஒரு பின்னடைவு

  1. penniamselvakumariselvakumari0020
    January 17, 2019 at 6:41 pm

    கட்டுரை சிறப்பு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...