‘பேய்ச்சி’ சர்ச்சை

பேய்ச்சி நாவல் குறித்து தமிழ் மலர் நாளிதழில் சிலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். வல்லினம் தரப்பில் இருந்து தமிழ் மலர் நாளிதழுக்கு அந்நாவல் குறித்த நேர்மறையான பார்வைகள் வழங்கப்பட்டும் அந்த நாளிதழின் தர்மத்தின்படி அவை பிரசுரிக்க மறுக்கப்பட்டன. எனவே பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு தரப்புகளின் இருந்து கருத்துகள் தொகுக்கப்பட்டு வல்லினத்தில் பதிவிடப்படுகிறது.

காழ்ப்பின் குரல்கள்

swami brammananda‘பேய்ச்சி’ நாவல் மீதான விமர்சனம் தனிமனித காழ்ப்புகளால் சிறுமையின் நஞ்சுகளால் உருவான சலசலப்பு மட்டுமே. தவிர, இதில் இலக்கிய ரசனை என எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. பொதுவாக, திராணியற்றவர்கள், சாதனையாளர்களை அல்லது பேராழுமைகளைச் சிறுமைப்படுத்துவது ஒருவித ஆளுமை பிறழ்வு. உள்ளீடு அற்றவர்கள் தன்னை கலகக்காரர்களாக பாவனை செய்துகொள்வது ஒருவகையான மனக்கோளாறுதான். இதுதான் இங்கு விமர்சனமாக ‘பேய்ச்சி’ நாவல் மீது வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி இதில் கருத்துகள் கூறியுள்ள கல்வியாளர்கள் தங்களைப் படைப்பிலக்கியவாதிகளாக மயங்குதல் அபத்தம். ஒரு சராசரி சாமன்யனோடு கைக்கோர்த்துக்கொண்டு ஒரு நல்ல படைப்பிலக்கியத்தைக் குறை கூறுவது நல்லிலக்கியத்துக்கு மாசு ஏற்படுத்தும் முயற்சி என இந்த நாவலை வாசித்தவன் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஒரு படைப்பிலக்கிய வாசகனாக கு.அழகிரிசாமி, ஜி.நாகராஜன், சீ.முத்துசாமி, ஜெயமோகன் போன்ற ஆளுமைகள் எழுதிய நாவல்களில் சொல்லாத காமம் அல்ல பேய்ச்சியில் இருப்பது. ஒரு நாவலுக்கு அழகு நவரசங்களும் கலந்திருப்பதுதான். கம்பன் பேசாத காமமா? ஓர் ஆன்மிகவாதியாக நான் ஆண்டாளில் திளைத்தவன். அவள் கூறும் காம ரசத்தை எந்த இலக்கியத்தில் சேர்ப்பது? இது மாணவர்களுக்கான நாவல் அல்ல. இலக்கிய ரசனை உள்ளவர்களுக்கானது. நாவல் என்பது கலை வடிவம். அதை அறிய அந்தக் கலையின் நுட்பங்களை அறிந்திருத்தல் அவசியம். மொழி அறிவதால் மட்டுமே கல்வியாளர்கள் இலக்கியத்தில் கருத்து சொல்லுவது ஆபாசம்.

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, தியான ஆசிரமம், கூலிம்.

உலக இலக்கியப் போக்கில் பேய்ச்சி நாவல்

vijayaletchumy UMபேய்ச்சி நாவல் குறித்து தமிழ் மலர் நாளிதழில் செய்திகள் வெளிவந்திருந்தன. இலக்கியத்தில் ‘நீதி இலக்கியம்’ என்பது ஒரு வகை மட்டும்தான். ஒட்டுமொத்த இலக்கிய வடிவமும் நீதி, ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும் என வாதிடுவது எத்தனை அறியாமை. Didactic literature (நீதி இலக்கியம்) என்பது நேரடியாகவும் மறைபொருளாகவும் நீதியையும் நற்பண்புகளையும் கூறும் இலக்கியவகையைச் சேரும். திருக்குறள், ஆத்திச்சூடி, பழமொழி போன்றவை தமிழ் நீதி இலக்கியங்களாக வரும். இவை அல்லாமல், ஓர் இலக்கிய வடிவம் ஏதாவது நீதியை முன்னிறுத்தும்போது அதையும் நீதி இலக்கியம் எனும் வகைப்பட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். தமிழ்மொழி மட்டுமல்ல, ஆங்கில, பிறமொழி இலக்கிய வடிவங்களிலும் இப்படியான வகைமைகள் உள்ளன. ஆனால், எழுதப்படுபவைகள் எல்லாமும் இப்படிதான் இருக்க வேண்டும் என்று கூறுவதும், அப்படியில்லாதவைகளை இலக்கியமே இல்லை என்று சொல்வதும் எழுதியவனின் தனிமனித ஒழுக்கத்தையும் தொழிலையும் இதனுள் தொடர்புப்படுத்திக் குறைத்து கூறுவதும் கல்வியாளர்களுக்கு உகந்த பண்பல்ல.

அடுத்து, எல்லாக் காலங்களிலும் உலக வாசகர்களால் கொண்டாடப்படும் இலக்கியங்களும், விருது பெற்ற பல இலக்கியங்களும், பல மொழிகளில் தொடர்ந்து மொழிபெயர்ப்புக்கு உட்படுத்தப்படும் இலக்கியங்களும் மனிதனின் எதார்த்த வாழ்வை அதன் அசல் தன்மையுடன் பதிவு செய்திருப்பதாலேயே இன்றும் கவனம் பெற்று நிற்கின்றன. மலேசியாவில் கே.எஸ். மணியம், சாமாட் சைட், ஷக்னோன் அக்மாட் போன்ற புகழ் பெற்ற பல எழுத்தாளர்களும் இதற்கு சான்று. ஷக்னோன் அக்மாட்டின் ‘ஷிட்’ நாவல் மலம், மலம் வெளியேறும் உறுப்பு, வெளியேறும் முறை என்ற சொற்களைக் கொண்டு அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் விமர்சித்திருக்கும். இவர் இந்நாட்டில் தேசிய இலக்கியவாதி எனும் மலேசிய அரசின் விருது பெற்றவர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிறைநிலை பேராசிரியர். ஆசிய நாடுகளின் புலம்பெயர் இலக்கியங்களின் தலைமகராக கொண்டாடப்படும் கே.எஸ். மணியத்தின் சிறுகதைகள், நாடகம், ‘தி ரிட்டன்’ நாவல் போன்றவை தோட்டப்புற தமிழர்கள் குறிப்பாக பெண்கள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகளைச் சொல்லும்போது அசல்தன்மையைக் காட்ட அதற்குரிய சொற்களைப் பயன்படுத்தியிருப்பார். இவர் மலாயாப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியர். இப்படியாக, எழுத்தாளரும் ஆசிரியருமான எம்.ஏ. இளஞ்செல்வன் தொடங்கி மலேசிய எழுத்தாளர்களையும் பிரசுரிக்கப்பட்ட எத்தனையோ தமிழ் இலக்கியங்களையும் சான்றாக கூறமுடியும்.

மேலும், ஒரு நூலகராக தமிழ்மொழி மட்டுமல்லாமல் பிறமொழி இலக்கியங்களில் நிகழும் சமகால நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதானித்தபடியுள்ளேன். பன்னெடுங்காலமாக வாசிப்பின் தளங்களும் வகைமைகளும் விரிந்துள்ள சூழலில் இலக்கிய ஒழுக்கம், பண்பாடு என்று பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் குறுகிய வட்டத்துக்குள் தங்களது வாசிப்பையும் எழுத்தையும் வைத்துக் கொண்டு அதிலிருந்து உலகை அளக்கும் அறிவார்த்தமற்ற செயல் வருந்தத்தக்கது. ஒருவருக்கு தனது குழந்தைகள், தனது குடும்பம் என ஒரு வட்டத்துக்குள் வாசிப்புக்கான, எழுத்துக்கான நிபந்தனைகளை முன்வைக்க ஓரளவு உரிமையுள்ளது. ஆனால், பொதுத்தளத்தில் இப்படி எழுதக்கூடாது இது வாசிப்புக்கு உகந்ததல்ல என்று சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை. கூடவே, இலக்கியம் சார்ந்து பொத்தாம் பொதுவான கருத்தை முன்வைப்பதும் அது நாட்டு மக்களின் கருத்து என்பதுபோல் நாளிதழில் இவர்கள் பேசியிருக்கும் செயல்பாடும் வருந்தத்தக்கது.

பொது கவனத்துக்காக சிலவற்றை கூற விளைகிறேன். 2003ஆம் ஆண்டு ‘தி ரிட்டன்’ நாவல் எஸ்.பி.எம் ஆங்கில இலக்கியப் பாடபுத்தகமாக இருந்துள்ளது. இளங்கலைக் கல்வியின்போது மலாயாப் பல்கலைக்கழக மாணவியாக ‘ஆத்துக்குப் போகணும்’, ‘கருக்கு’ போன்ற நாவல்களை தமிழ் இலக்கியப் பாடங்களில் வாசித்து, தேர்வு எழுதியுள்ளதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இவை இரண்டுமே கடுமையான வட்டார வழக்குகளைக் கொண்டு புனையப்பட்ட நாவல்கள். நான் படித்த காலப்பகுதியில் என்னுடன் 97க்கும் மேற்ப்பட்ட இந்திய மாணவர்கள் இக்கதைகளை வாசித்திருப்போம். இது எங்கள் விரிவுரையாளர்களின் அகண்ட வாசிப்பையும் இன்றைய இளைஞர்கள்மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்பையும் காட்டுகிறது. இன்றைய இளைஞர்களும் வாசகர்களும் சிறுபிள்ளைகள் என்பதைப்போலவும் அவர்களின் கைப்பிடித்து வழிகாட்டிச் செல்லும் பொறுப்பு இவர்களுக்கு இருப்பது போலவும் நினைத்து மிகைகற்பனை உலகில் வாழ்வது முரண்.

விஜயலட்சுமி, நூலகர்

தொழிலும் கலையும்

muruganஆசிரியர் என்பது தொழில். ஒரு ஆசிரியருக்குத் தன் தொழிலைத்தாண்டிய பிற கலைகளில் ஆர்வம் இருக்கலாம். ஓவியராக, இசை கலைஞராக, விளையாட்டு வீரனாக என பல துறைகளில் ஆர்வம் இருக்கலாம். இந்தத் துறை ஆர்வத்தால் ஒருவர் செயல்படும்போது அவர் எந்த நேரமும் தன்னை ஆசிரியராக எண்ணி அதன் படி இயங்க வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக்கு வெளியே ஒருவர் தன்னை ஒரு கலையில் தொய்த்துக்கொள்வது அவர் தனிப்பட்ட உரிமை. இந்த உரிமையை ஒருவரின் தொழிலைக்காட்டி பறிப்பது தவறு. பேய்ச்சி நாவலை இலக்கிய விமர்சன அளவுகோளில் ஏற்கவும் புறக்கணிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் எழுதுபவரின் பின்புலத்தை ஆராய்ந்து அவரது தொழிலுடன் முடிச்சிடுவது கலையின் சுதந்திரத்திற்கு ஒவ்வாது. இந்நாடு கலைக்கான சுதந்திரம் கொண்ட நாடு. அவ்வகையில் பல தரப்பட்ட ஆக்கங்களை இங்கு வாங்கவும் வாசிக்கவும் முடிகிறது. ஆசிரியர் ஒருவர் எழுதியதால் அது மாணவர்கள் பிரதியாகும் என்பது அறியாமை.

ரெ.முருகன், தலைவர் சிலாங்கூர் இந்தியர் ஆசிரியர் சங்கம்

மரபும் நவீனமும்

kaபேய்ச்சி நாவலில் காட்டப்படும் 10 கெட்ட வார்த்தைகளை இன்னும் மிக தீவிரமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பதுதான் மரபும் இயல்பும். சங்க இலக்கியங்களில் 170 இடங்களில் முலை என்ற வார்த்தை வருகின்றன என்கிறது ஆய்வுகள். இவையன்றி ஏராளமான கூடல், முயங்கல் காட்சிகள் சங்கப்பாடல்களில் உள்ளன. நேரடி வர்ணனைகளாகவும் வருகின்றன. பெண்ணின் காமத்தை நேரடியாகப் பேசிய பாடல்களும் ஏராளம். தற்கால இலக்கியங்களை நாம் கண்ணோட்டமிட்டால் இன்னும் ஏராளமாக உள்ளது.

மேலும், சமுதாய சீர்திருருத்த பண்பு நலன்கள் என தேடினால், அதுவும் இருக்கவே செய்கின்றன.  மணியம் ஒரு சீனப்பெண்ணை வன்புணர்ச்சி செய்ததால் அதன் பின்னர் தன் மனைவியால் கொல்லப்படுட்டார். (குற்றம் செய்தவன் தண்டிக்கப்படுகிறான்) உண்மையில் வெட்டியானாக தன் வாழ்க்கையை விட்டு ஓடிவரும் ஒருவன் எப்படி தன்னை ஒரு சமூகத்தின் தலைவனாக உயர்த்திக்கொள்கிறான் என்றும் எல்லா நம்பிக்கையையும் இழந்த ஒரு தலித் பெண் எப்படி தன்னந்தனியாகக் கம்பத்தில் தனக்கான சமஸ்தானத்தை அமைத்துக்கொள்கிறாள் என்றும் சொல்லும் காட்சிகள் தீவிரமாக இடம்பெற்றுள்ளன. (இதனால் இளைஞர்கள் தன்னூக்கமே பெற முடியும்).சமூகம் கல்வி இல்லாமல் ஒற்றுமை இல்லாமல் இருந்தால் எப்படி பிறர் நம்மை கூறுபோட்டு கொல்வார்கள் என சாராயம் விற்கும் இரு சீனக் கடைக்காரர்கள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. (இதில் சமூக ஒற்றுமை கூறப்படுகிறது.) பெண்தன்மை கொண்ட ராமசாமிக்கு வாழ்க்கையில் அடைந்துள்ள சங்கடத்திலிருந்து மீண்டு, பெரிய நாட்டு மருத்துவராக உருவாகியுள்ளது அதுபோன்ற திருநங்கைகளுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் பகுதியும் உள்ளது.

கல்வி மேம்பாட்டுக் கழகம்

மரபிலக்கியப் புரிதல்

kumaranநான் இறைக்கவிஞர் சீனி நைனா முகமது அவர்களின் நேரடி மாணவன். மரபிலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் ஒப்பிட்டுவதே நகைமுரண். காரணம் மரபிலக்கியம் பா வடிவத்தில் சுருக்கிச் சொல்வது. எனவே அதில் மொழி நுட்பம் அதிகம். நவீன நாவல் விரித்துச்சொல்வது. அது இன்னும் இன்னும் என காட்சிகளை அகலப்படுத்தும்.

மரபிலக்கியங்கள் கொச்சைத் தன்மை அற்றவை, ஏற்க இயலா விடயங்கள் இல்லாதவை எனப் பேய்ச்சி நாவலுக்கு எதிர்வினை ஆற்றுபவர்களால் கூறப்படுகிறது. அது தவறு. தலைவன் தலைவியின் கூடல் இன்பம், கூடிப் பிரிதல், புணர்ச்சி மகிழ்தல், போன்றவற்றை வள்ளுவர் எழுதியுள்ளார். அவை உள்ளடக்கியே இன்று பள்ளிகளின் நூல்நிலையத்தில் உள்ள திருக்குறள்களைக் காணலாம்.

கம்பர் தனது இராமாயணத்தில் இராமன் அனுமனிடம் சீதையின் கொங்கைகள் கலசம் போலவும், அவளது ‘அல்குல்’, அதாவது பெண்ணுறுப்பு தங்கடல் போன்றும் இருக்கும் என்று சொல்வது போல் இயற்றிய இடம் உண்டு. அதுபோல சீவகன் என்னும் மண்ணுலக மன்மதன் தன் வாழ்நாளில் எட்டுப் பெண்டீரை வசீகரித்து நிகழ்த்தியக் கூத்து சீவக சிந்தாமணி. ஐவரோடு ஒருத்தி என்றும், பின் ஒருவனோடு ஓராண்டு வாழ்தல் என்று மகாபாரதம் காட்டுகிறது. பலரோடுக் கூடி பாண்டவர்களை ஈன்றக் கதையும், இயலாதக் கணவன் விளைத்தப் பயனால் முனிவனோடுக் கூடிப் பிள்ளைப் பெறுவதும் இங்குதான் நிகழ்கிறது.

எனவே இலக்கியம் அதன் கூறுமுறையை மாற்றியிருக்கிறதே அன்றி கூறுபொருளை அல்ல. இவற்றின் ஒருபகுதி ஆரம்பப் பாடம் முதல் கல்லூரி பாடம் வரை உண்டு. ஒருவேளை பேய்ச்சி தடை செய்யப்படுமாயின் இவை அனைத்தையும் கல்லூரியில் பாடத்திலிருந்து நிராகரிக்க வேண்டும்.

த.குமரன்,காவல்துறை அதிகாரி

எல்லா கதையும் எல்லோருக்குமானதல்ல

a.pandianபேய்ச்சி நாவலை மாணவர்களோடு இணைத்துப்பேசும் ஒரு போக்கு அபத்தமானது. எல்லாருக்குமான ஒரு பொதுத்தன்மை கொண்ட நூல் என்று எதுவும் இருக்க முடியாது. நாம் போற்றும் மரபு இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களும் காட்சிகளும் எல்லா வயதினருக்குமானது அல்ல.  கம்பராமாயணத்தின் பாடல்கள் முதல் திருக்குறள் வரை மாணவருக்கு ஏற்றவை எவை என்று அறிஞர்களே முடிவு செய்துதான் பாடநூலில் இணைக்கிறார்கள். மாணவர்கள் வாசிப்புக்குப் பொருந்தாதவை பல உள்ளன. அவர்களின் நோக்கம் மரபு இலக்கியம் குறித்த அறிமுகத்தை மாணவர்களுக்குக் கொடுப்பது மட்டுமே. படைப்பின் இலக்கியத் தரத்தை மதிப்பிடும் அளவுகோள் அது மாணவர் வாசிப்புக்கு ஏற்றதா என்பதல்ல.

படைப்புகள் படைப்பாளியின் தொழிலோடு பொருந்தி வருகின்றதா என்று ஆராய்ந்த பிறகுதான் அவற்றை மதிப்பிடுகிறோமா? உறவுகளில் ஏற்படும் பாலியல் சிக்கல்களை மிக நுட்பமாக எழுதி கடும் விமர்சனங்களை சந்தித்த தி ஜானகிராமன் ஓர் ஆசிரியர். பாலியல் விளிம்புநிலை மக்களின் வாழ்வை காத்திரமாக எழுதிய எழுத்தாளர் ஜி.நாகராஜன் ஒரு கணித விரிவுரையாளர். கோவேறு கழுதைகள் முதல் செல்லா நோட்டு வரை, அடித்தட்டு மக்களின் வாழ்வை அவர்களின் மொழியிலேயே எழுதி புனைவிலக்கியத்தில் முக்கிய இடம் வகிக்கும் எழுத்தாளர் இமையம் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர். நுண்வெளி கிரணங்கள் போன்ற நுட்பமான படைப்புகளை எழுதியிருக்கும் சு. வேணுகோபால் ஒரு கல்லூரி பேராசிரியர்.  பெண்ணின் பாலியல் சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குள்ளான கவிஞர் சுகிர்தராணி ஓர் ஆசிரியர். நம் நாட்டில் எம்.ஏ.இளஞ்செல்வன் பாலியல் சார்ந்த கதைகள் எழுதியவர்தான்.  அவரும் தலைமை ஆசிரியராகவே பணியாற்றினார். அதேபோல இன்னும் இப்படி பலநூறு உதாரணங்களை தமிழுக்கு வெளியிலும் காட்ட முடியும்.

அ.பாண்டியன், எழுத்தாளர்

என் அனுபவத்தில் பேய்ச்சி

punithavathiஇலக்கியம் வாழ்க்கையைப் பிரதிநிதிக்க வேண்டும் என்பது இலக்கியத்தின் அடிப்படையான விதி. அந்த வகையில்தான் சங்க இலக்கியங்களைக் கொண்டு அன்றைய வாழ்க்கையை அனுமானிக்கிறோம். அவ்வகையில் பேய்ச்சி ஒரு காலகட்டத்தைக் காட்டும் நாவல். கதையில் அதிக கெட்ட வார்த்தைகள் ஆபாச வார்த்தைகள் நவீன் எழுதியிருப்பதாக ஓரு குற்றச்சாட்டு. தோட்டப்புறத்தில் இது மிக சர்வ சாதாரணமாக நடைபெற்றதை நாம் அனைவருமே பார்த்திருப்போம். பீலி சண்டையில் கோழிமுட்டைக் களவும் போகும் போது, திரைப்படம் பார்க்கும் இடம் பறிப்போகும் போது, பாரில் இரப்பர் பால் ஊற்றும் வரிசையில் ஏன் கோவிலில் பிரசாதம் வாங்கும் போதும்கூட யாரும் ‘இனிய உளவாக’ என்று திருக்குறளைப் பின்பற்றுவதில்லை. அதுதான் வாழ்வியல். அதைதான் நாவலாசிரியர் நாவலுக்குள் கொண்டு வந்துள்ளார். என்னளவில் இந்த நாவல் அப்பட்டமான ஒரு வாழ்வை காட்டுகிறது. மலேசியாவில் முக்கியமான நாவல் என்று சொல்லலாம்.

புனிதவதி, ஆசிரியர்

மொழியைத் தாண்டிய கலை

மொழியில் செயல்படும் இலக்கியம் என்பது மொழியைத் தாண்டியும்arvin செயல்படுகிறது. மொழியில் பொருளின் மூலமே தன்னுடைய சாத்தியத்தை வழங்கும் படைப்புகளுக்கு இடையில் அதைத் தாண்டிய தேடலின் மூலமும் தன்னைப் புரிந்து கொள்வதற்கான வெளியை வழங்கும் படைப்பே சிறந்ததாக இருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்கிறேன். அப்படியாகப் படித்து முடித்தவுடன் ஒரு தேடல், அலைவு ஏற்படுத்தும் படைப்புதான் ம.நவீனின் பேய்ச்சி. நாவல் முழுதும் இழையோடும் நுண்சித்தரிப்புகள் பெரும் அறிவுழைப்பு அனுபவத் தொகுப்புகளின் மூலமே சாத்தியப்பட்டிருக்கும். பாத்திரத்தை வாசகனோடு உலாவ விட பெரும் சாத்தியத்தை விவரிப்பில் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.  வெறுமனே ஒற்றை வரி சித்தரிப்புகளும் விவரிப்புகளும் வாசகனின் உள்ளத்தில் பாத்திரத்தை வார்த்துக் கொள்ள போதுமானதாக இல்லை. விரிவான சித்தரிப்புகளே பாத்திரத்தை உயிர்ப்பிக்க செய்கிறது. மேலும், பேய்ச்சி நாவல் மனித மனம் அறியாத சரடுகளைத் தொட்டுச் சென்று பேசுகிறது. அவ்வகையில் பேய்ச்சி மலேசிய இலக்கியத்துக்குப் பெருமை.

அரவின் குமார், எழுத்தாளர்

விளிம்புநிலை மனிதர்களுக்கான கலை

ilampurananஅனைத்து நிலைகளிலும் வலுவாக அமைந்திருந்த ஆதிக்கச் சமூகத்தின் காதல், களவு, கற்பு, கொடை, நட்பு, வாழ்க்கை முறைகளையே சங்க இலக்கியங்கள் பாடின. விளிம்புநிலை மனிதர்களின் மொழி, வலி, வாழ்க்கை பிறழ்வு, அவர்களின் உள்ளம், ஆசை, அசிங்கம், முரண்கள் எதுவுமே ஆழமாகப் பதிவாகவில்லை. ஆதிக்கச் சமூகத்தின் பக்கங்களில் மறைக்கப்பட்ட, பேசப்படாதவைகளைத் துணிந்து பேச முனைந்தன நவீன இலக்கியங்கள். நவீனத்தின் பேச்சு மிகத் தீவிரத்தன்மையோடு மரபு இலக்கியங்கள் மறைத்து வைத்திருந்த இடங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின. இருட்டில் மறைந்திருந்த பல மனித இயல்புகள் வெளிச்சம் கண்டன.

நவீன இலக்கியத்தின் மொழி மிக அப்பட்டமாகக் கொச்சையாகக் கையாளப்படுகிறது. அது அருவருக்கத்தக்கதாக அமைந்துள்ளது. காமநெடி வீசுகிறது. இவை வாசகர்களின் நெறி பிறழ்வுக்கு அடிப்படையாகிவிடுகின்றன என்றெல்லாம் இலக்கியத்தின் அரிச்சுவடி தெரியாமல் கூறுகின்றனர். ஆதிக்கச் சமூகத்தின் பக்கங்களில் மறைக்கப்பட்ட, பேசப்படாதவைகளைத் துணிந்து பேச முனைந்தன நவீன இலக்கியங்கள். நவீனத்தின் பேச்சு மிகத் தீவிரத்தன்மையோடு மரபு இலக்கியங்கள் மறைத்து வைத்திருந்த இடங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின. இருட்டில் மறைந்திருந்த பல மனித இயல்புகள் வெளிச்சம் கண்டன.புனித இலக்கியங்களாகக் கொண்டாடப்படுகின்ற சங்க இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் இவர்கள் இன்று அருவருக்கின்ற கூறுகள் இருந்துள்ளன என்பதை இவர்கள் அறிவார்களா?

கி.இளம்பூரணன், எழுத்தாளர்

இலக்கியத்தில் கொச்சை சொற்கள்

kalaisegarஎனது சின்ன வயதில், என் கம்பத்தில் ‘நாத்த பேச்சி’ நாதன் என ஒருத்தர் இருந்தார். வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைகளாக கொட்டும். இன்று வரை மறக்க முடியாத ஒரு மனிதர் அவர்.

நானொரு கதை எழுதுகிறேன். நாதனின் கதாபாத்திரத்தை அக்கதையில் வைக்கிறேன். கதையை சும்மா சொல்லிச் செல்ல வேண்டுமென்றால் “நாதன் பயங்கரமாக/கொடூரமாக/தரவட்டமாக/ தாறுமாறாக கெட்ட வார்த்தை பேசுவார்” என்று எழுதலாம். ஒவ்வொரு வாசகருக்கும் வெவ்வேறு நாதன்கள் தெரிவார்கள். அது கதையாக இருக்காது.

கதையை வாசகரின் கண்முன் காட்ட வேண்டும் என்றால் நான் நாதனாக மாற வேண்டும். நாதன் போல வாழ வேண்டும். நாதன் போல பேச வேண்டும். அப்பத்தான் நான் அறிந்த ‘நாத்த பேச்சி’ நாதனை நீங்களும் உணர முடியும். கதை வலுவாகும்.

அப்படி நான் நாதனை அப்படியே எழுதிவிட்டால் நான் ‘நெறியற்றவன்’ என சொல்பவர்களுக்கும், அக்கதையை வாசிக்கும் பிள்ளைகள் சீரழிந்து விடுவார்கள் என கருதுபவர்களுக்கும் ஒரு விளக்கம் நான் நாதனை நேரில் பார்த்தவன், அவரின் கெட்ட வார்த்தைகளை காது கூடாக கேட்டவன், பாதிப்படைந்தவன் ஆனால் இதுவரை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த விரும்பாதவன். நான் நாதனையும் மதிக்கின்றவன்.

மகிழம்பூ கலைசேகர், எழுத்தாளர்

பேய்ச்சியில் சாதிய துவேஷமா?

pavitraஒரு நவீன இலக்கியவாதி ஒரு போதும் தன்னுடைய படைப்பில் ஜாதிகளை முன்னிறுத்த மாட்டான். பேய்ச்சி நாவலில் அது யதார்த்த கூறுகளின் அடிப்படையில் படைப்பாளியின் நுன்மையான அவதானிப்பால் அமைந்தது. தோட்ட மக்களின் உச்ச நிலை கோப வெளிபாடுகள் அப்படியான சொற்களில்தான் பெரும்பாலும் உதிர்ந்திருக்கின்றன. எழுத்தாளர் நவீன் இதுவரை தோட்டப்புறங்களில் நடக்கவே நடக்காத ஒன்றை தன்னுடைய கற்பனையில் கொண்டுவந்து எதையும் தானே உருவாக்கி எழுதவில்லை. மேலும் அப்படி அவர் குறிப்பிட்டிருக்கும் அந்தச் சமூகத்தினர் தங்களுக்குள்ளாகவே பேசும் வசனங்கள் அவை. மற்ற சமூகத்திலிருந்து ஒருவர் அப்படி இன்னொரு தரப்பைச் சொல்லியிருந்தால் மட்டுமே அது வசை என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கும். அல்லது பிறரை வசைப்பாட கோபத்தில் கூறினாலும் அது ஒரு சமூகத்தை அவமதிப்பதில் அடங்கும். ஆனால் இங்கு அப்படியில்லை. அது ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் காத்திரமான உரையாடல்.  யதார்த்தத்தைக் கொல்லாமை வேண்டும் என்பதற்காக அமையும் சூழல்கள் அவை. இப்படி எதிர்வினைகள் வருமென ஒரு படைப்பாளன் தன் வார்த்தைகளை முடக்க முற்படும்போது படைப்புகளின் யதார்த்நிலை செத்துவிடுகிறது.

பவித்தாரா, எழுத்தாளர்

ஆய்வுக்கு உகந்த நூல்

ம.நவீன் அவர்களின் இந்தப் பேய்ச்சி நாவல் வரலாற்று ஆவணங்களைப்atittan magamuni பத்திரப்படுத்தியுள்ள ஆவணம்.  மனிதர்களின் சொற்களை; அந்தந்த காலக்கட்டங்களில் திரிந்த வட்டார வழக்குகளை, உணர்வு மேலோங்கிய நிலைகளில், உணர்ச்சி வசப்படும் தருணங்களில், என அத்துனையையும் ஒளிவு மறைவு இல்லாமல் அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்திருப்பது நாவலாசிரியரின் தனிச்சிறப்பு. அடிமட்ட பாமர மக்களின் வாழ்க்கை முறையை அப்படியே, எந்த பலுக்கலும் இல்லாமல், ஒழுக்கம் வேண்டி நீக்காமலும், எதிர்காலத்து வாசகனுக்கு இலகுவாக புரியும்படி எளிய நடையில் இருப்பதால் பரம்பரையைப் பற்றி தெரிந்து கொள்ள வசதியாய் இருக்கும்படி எழுதியுள்ளார். நான் அறிவியல், வரலாறு, மூலிகை மருத்துவம், போமோ, சமயம் என பல வெளிப்பாடு அடங்கிய ஆய்வு தொகுப்பாக இந்த நாவலைப் பார்க்கிறேன். நாளையே லுனாஸ் குறித்து ஆய்வு செய்வோருக்கு இந்நூல் ஒரு மூலமாக இருக்கும்.

ஆதித்தன் மகாமுனி, எழுத்தாளர்

பேய்ச்சி மாணவர் நாவலா?

kogilavaniஇண்டர்லோக் நாவல் மாணவர்களின் பாட நூலில் இருந்து தடை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன் அந்த நாவல் பல ஆண்டுகளாக வாசிப்பில் இருந்த ஒன்றுதான். மாணவர்களுக்கான பிரதியாக மாறும்போது மட்டுமே அது செறிவாக்கத்திற்கு உள்ளாகி இருக்க வேண்டும் என எதிர்ப்புக்குரல் எழுகிறது. அதுபோல மலேசியாவில் எழுதப்பட்ட லட்சியப்பயணம் எனும் நாவல் பாட நூலாகத் தேர்வு செய்யப்பட்டபோது அது மாணவர்களுக்கு ஏற்ப திருத்தப்பட்டு பதிப்பிக்கப்பட்டதை நாம் அறிவோம். இதன் வழி மாணவர்களுக்கான இலக்கியப் பிரதி என்றால் அது அவர்களுக்கேற்ப திருத்தப்பட்டு வழங்கப்படுவது புலனாகிறது. நிலை இப்படி இருக்க பொதுவாசிப்புக்கு உள்ள பேய்ச்சி நாவலை மாணவர்களுக்கானது எனும் வகையில் இட்டுக்கட்டி பேசுவது அறிவார்த்தமல்ல. நான் பேய்ச்சி நாவலை முழுமையாக வாசித்துள்ளேன் என்ற வகையில் அதில் உள்ள சொல்லாடல்கள் அனைத்தும் தோட்டப்புறங்களில் பேசப்பட்டவையே. நேர்க்கூற்று அயற்கூற்று என இலக்கணத்தில் உண்டு. நேர்க்கூற்று என்பது ஒரு கதாபாத்திரம் எப்படி பேசியதோ அப்படியே ஒப்புவிப்பது. அயற்கூற்று என்பது ஒருவர் சொல்வதை கதாசிரியர் அவர் மொழியில் சொல்வது. நாவலில் குறை சொல்லப்படும் வசனங்கள் நேர்க்கூற்று வாக்கியங்கள். எனவே அது அவ்வாறு இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆங்கிலம், மலாய் என அனைத்து இலக்கியங்களிலும் அவ்வாறே உள்ளன.

பிரியா, வடிவமைப்பாளர்

ஆஸ்திரிலியாவில் இருந்து ஒரு எதிர்வினை

நண்பர் நவீனின் “பேய்ச்சி” நாவல் குறித்த பதிவொன்றை இன்று காலைteivegan காணக்கிடைத்தது. நாவலை தடைசெய்யவேண்டும் என்று மலேசியாவில் சிலர் கொடி தூக்கியிருப்பதாக அறிய முடிந்தது. சர்ச்சைக்குரிய நாவல் என்று அவர்கள் காரணம் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் புத்திஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள் சிலர் இவ்வாறு பிரதிகளை சர்ச்சைக்குரியதாக அறிவிப்பது, அவற்றை புறக்கணிப்பது, எழுதியவர்களை பார்த்து குரோனா வைரஸ் பீடித்தவர்போல பயந்தடித்து ஓடுவது போன்ற பண்பியல்புகளை வெளிகாட்டுவதற்குப் பின்னால் ஒரு பாரம்பரியம் உள்ளது. இதன் தொடர்ச்சிதான் பேய்ச்சிக்கு எதிரான கலகத்துக்கும் முக்கியகாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பேய்ச்சியை நிராகரிப்பது என்று முடிவெடுப்பவர்கள், தாங்கள் ஏன் நிராகரிக்கிறோம் என்ற கூட்டு நிலைப்பாட்டினை – சகல வினைப்புள்ளிகளுடனும் – ஒரு எதிர்ப்பிரதியின் வழியாக இதனை செய்யமாட்டார்கள். அந்த ஜனநாயக வழியை தப்பித்தவறியும் தேர்ந்தெடுத்துவிடமாட்டார்கள். ஏனென்றால், அது அறிவுத்தளத்தில் நின்று முன்னெடுக்கப்படவேண்டிய காரியம். அதற்கு வாசிப்பு, எழுத்து போன்ற கடினமான பணிகளை முதலீடு செய்யவேண்டும். ஆக, நாவலின் மீது ஏறி நின்று, வசதியான ஒரு பக்கத்தை தேர்ந்தெடுத்து அதில் ஒண்டுக்கு அடித்துவிட்டுப்போவது இலகுவான காரியம். கூடவே, அவர்களுக்குத் திருப்தி தரக்கூடியதும் ஆகும். ஆகவே, அதனைத்தான் ஆர்வத்தேடு முயற்சிசெய்துகொண்டிருப்பார்கள்.

அச்சமில்லை அச்சமில்லைக்கு அப்பால் செல்லாத பாரதியார், என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாமுக்கு அப்பால் போகாத வள்ளுவர் போன்றவர்கள் இப்படிப்பட்ட தமிழ் விற்பனர்களின் ஆயுள் சந்தா செலுத்திய தோழமைகளாக இருந்துகொண்டிருப்பார்கள்.

இவர்களின் கண்களிலோ கைகளிலோ தீவிர இலக்கியம் அகப்பட்டால் உடனே தொடர்ச்சியான சளி, இருமல், கண்களை திறக்கமுடியாதளவு தலையிடி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுகின்றன. ஏனென்றால், அது இவர்கள் வாழ்நாளில் கண்டிராத ஒன்று. தங்களது சட்டைப்பையில் வைத்திருக்கும் பாரதியாருக்கும் வள்ளுவருக்கும் தெரியாத ஒன்று. எல்லாவற்றையும்விட, இனி இவர்கள் தேடிப்பிடித்து படித்தாலும்கூட, விளங்கிக்கொள்ளமுடியாத ஒன்று. உடனே தங்களை மீறிய தமிழுக்கு தண்டனை எழுதிவிடுவார்கள். அதனை எழுதியவரை ஊருக்கு வெளியில் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். இதன் நீட்சிதான் இன்று பேய்ச்சிக்கு நடப்பதாக உணர்கிறேன்.

பா.தெய்வீகன், எழுத்தாளர். ஆஸ்திரிலியா

4 comments for “‘பேய்ச்சி’ சர்ச்சை

  1. sriviji
    March 3, 2020 at 5:20 pm

    இங்கு தொகுத்து வழங்கப்பட்ட அனைத்து கருத்துகளையும் திரு.நவீன் அகப்பக்கத்தில் முழுமையான கட்டுரைகளாக நான் வாசித்து ரசித்தவைதான். அனைத்தும் கடும் விமர்சனமாக வந்திருப்பினும் வாசகருக்கு சுவைக் கூட்டியதாக இருந்தன. அதிலும் அ. பாண்டியன், பா.தெய்வீகன் மற்றும் கலைசேகர் அவர்களின் கட்டுரைகள் வாய்விட்டுச் சிரிக்கவைத்தன. இங்கு சுவாமி அவர்களின் கருத்து முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது அனைத்திற்கும் சிறப்பு. சுவாமி அவர்களின் சேவை மென்மேலும் தொடர/வளர எனது மனபூர்வ பிரார்த்தனைகள். வணங்குகிறேன் ஆசானே..

    ஸ்ரீவிஜி.

  2. PV. Nathan
    May 1, 2020 at 11:41 am

    A very good place, to publish the real facts of real creaters here.. As it known as the VALLINAM…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...