மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்

கோ.சாமலாயாவில் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர்) மொழிசார் வேர்களை ஆராயும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் இரு விடயங்கள்; (1) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை; (2) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை நூலகம். மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவும் அதன் நூலகமும் உருவாவதில் பலரும் பலவகைகளில் செயல்பட்டிருந்தாலும்கூட அக்காலப்பகுதியில் முதன்மை ஊடகமாக இருந்த தமிழ் முரசு அச்சு இதழ்வழி கோ. சாரங்கபாணி மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்நாட்டில் மிகப் பெரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்தது குறிப்பிடத் தக்கது. அதன் நீட்சியாக உலகெங்கிலுமிருந்து பலரும் இந்திய ஆய்வியல் துறையும் அதன் நூலகமும் உருவாக ஆற்றிய பங்களிப்புத் தமிழ் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். ஆயினும், பெருமளவு வாய்மொழி வரலாறாக மட்டுமே சுருங்கி நிற்கும் மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பிரிவு, அதன் நூலகம் தொடர்பான ஒட்டுமொத்த வரலாற்றுப் பார்வை மீள்பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

மலாயாப் பல்கலைக்கழகத்தினுடைய வரலாற்று ஏடுகளில் சிறுபகுதியாக மட்டுமே அறிக்கை வடிவில் பதிவாகியிருக்கும் தமிழ்ப் பிரிவின் தோற்றத்திற்குப் பின்னால் பதிவு செய்யப்படாத பல தனிமனிதர்களின், அமைப்புகளின், அச்சு ஊடகங்களின் பங்களிப்பு இருக்கவே செய்கிறது. இந்திய ஆய்வியல் துறை என நேரடி தளத்தில் இத்துறை தொடர்பான வரலாற்றினை ஆராய்ந்தவர் உமா விஸ்வநாதன் (2005/2006ஆம் ஆண்டில் மேற்கொண்ட இளங்கலை ஆய்வு). மிகச் சொற்பமான தகவல்களை முன்வைக்கும் இவ்வாய்வுக்குப்பின் வெளிவந்த பல ஆய்வுகள் ‘மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை’ என்பதாகப் பேசுமிடங்களில் உமா விஸ்வநாதன் ஆய்வைப் பிரதியெடுப்பதாகவே இருக்கின்றன. எம். இலியாஸ் (1997), தமிழவேள் சாரங்கபாணி எனும் நூலில் ‘பல்கலைக் கழகத்தில்’, ‘தமிழுக்கு நிதி’ எனும் தலைப்புகளில் இத்துறை தொடர்பான தமிழகம் சார்ந்த கண்ணோட்டங்களை முன்வைத்திருந்தார். அடுத்து, பாலபாஸ்கரன் 2016ஆம் ஆண்டு பதிப்பித்த நூலில் கூடுதல் வரலாற்றுத் தகவல்கள் இருப்பது சற்றே ஆறுதலானது.

அவ்வகையில் (1) மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; (2) மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை நூலகம் எனும் இவ்விரு உயர்க்கல்வி அமைப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரலாற்று ஆய்வுகளும் இதர வகை ஆய்வுகளும் தொட்டுப்பார்க்காத அல்லது மிக மேலோட்டமாகக் கோடிட்டுக்காட்டிச் சென்ற ஒரு பகுதியை ஆழ, அகலத்துடன் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இதனை, குறிப்பாகத் தமிழ் முரசு நாளிதழில் தொடர்ச்சியாக வெளிவந்த செய்திகளினூடாக இக்கட்டுரை கவனப்படுத்த முயன்றுள்ளது. 1953ஆம் ஆண்டு தொடங்கி 1959ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 132 நாட்கள் இந்திய ஆய்வியல் துறை தொடர்பான செய்திகள் தமிழ் முரசில் வெளிவந்துள்ளன. இந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 203 பிரசுரங்கள் கட்டுரை, செய்தி, அறிவிப்பு வடிவில் இந்நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்திய ஆய்வியல் துறை என அதிகாரப்பூர்வமாகப் பெயர்பெறும் முன்னர் ‘இந்திய இலாகா’, ‘தமிழ்ப் பிரிவு, ‘தமிழ்த் துறை’, ‘இந்தியத் துறை’ எனப் பல பெயர்களில் நாளிதழ்களிலும் பலதரப்பட்ட உரையாடல்களிலும் இவ்வுயர்க் கல்வி பிரிவு அழைக்கப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.

மலாயாப் பல்கலைக்கழக உருவாக்க வரலாறு

மலாயாவின் நிலப்பரப்பு ஒன்பது மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பாகவும், பினாங்கு, மலாக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று பிரிட்டிஷ் குடியேற்ற பகுதிகளின் கூட்டமைப்பாகவும் இருந்த போதே, 1949ஆம் ஆண்டு மலாயாப் பல்கைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மலாயாப் பல்கலைக்கழகம் ஆரம்ப காலக்கட்டத்தில் மருத்துவத்திற்கான உயர்க்கல்விக்கூடமாக மட்டுமே செயல்படத் தொடங்கியது. 1905ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, பின்னர் சில வருடங்கள் கழித்து கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி (King Edward VII College of Medicine) என்பதாக உருமாற்றம் கண்டது. இக்கல்லூரியில் டிப்ளோமா பயிலும் மாணவர்களின் டிப்ளோமா பட்டத்திற்கான மருத்துவ பதிவிற்கு பிரிட்டிஷ் மருத்துவ கழகம் (British Medical Council) அங்கீகாரம் வழங்கியது. மலாயாவில் மருத்துவ தொழிலுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான முக்கியத் தளமாக கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி அக்காலப்பகுதியில் விளங்கியது. இதன் அடிப்படையில் 1915-ஆம் ஆண்டு தொடங்கி இக்கல்லூரி தன் இருப்பைச் சிங்கப்பூரில் வெற்றிகரமாக நிறுவியது.

மறுநிலையில், 1928-ஆம் ஆண்டு சிங்கப்பூரிலேயே ராஃபிள்ஸ் கல்லூரி (Raffles College) எனும் பெயர் கொண்டு மற்றுமொரு உயர்க்கல்விக்கூடமும் திறக்கப்பட்டது. இக்கல்லூரியில் மருத்துவக் கல்வியுடன் சேர்த்துக் கூடுதலாகக் கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த படிப்புகளும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. சில ஆண்டுகளில் இந்தக் கல்லூரியைப் பல்கலைக்கழகமாக உருமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்படத் தொடங்கியது. அதன் அடிப்படையில் 1947ஆம் ஆண்டு சர் அலெக்சாண்டர் கார்-சாண்டர்ஸ் (Sir Alexander Carr-Saunders) தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அப்போதைய மலாயாவின் சூழலை ஆராய்ந்ததோடு மட்டுமில்லாமல் ராஃபிள்ஸ் கல்லூரி மற்றும் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி அதுவரை அடைந்திருந்த அடைவுநிலையும் ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவில் மலாயாப் பல்கலைக்கழகம் என்றதொரு சுயாதீன பல்கலைகழகம் உருவாவதில் எந்தத் தடையும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்துச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 7, 1949இல் மலாயாப் பல்கலைக்கழகம் அதிகாரப் பூர்வமாக சிங்கப்பூரில் செயல்படத் தொடங்கியது.

மலாயாப் பல்கலைக்கழக நிர்வாக முறை இந்நாட்டின் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இந்நாட்டில் இயங்கும் இதர கல்விக்கூடங்களின் நிர்வாக முறைமைகளையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. கல்வி தொடர்பான செயல்திட்டங்கள் இப்பல்கலைக்கழகத்தின் உச்ச நிர்வாக அமைப்பில் இருந்த கல்வியாளர்கள் பொறுப்பிலும், நிதி மற்றும் பொது நிர்வாகக் கட்டுப்பாடு தொடர்பான விடயங்கள் கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கழகத்தின் (Council with both academic and lay representatives) கண்காணிப்பிலும் விடப்பட்டிருந்தது. தொடக்கக் கட்டமாகப் பல்கலைகழகத்தில் கலை, அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகிய புலங்கள் உருவாக்கப்பட்டு, 450 மாணவர்களைக் கொண்டு பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கியது. மருத்துவப் புலத்தில் பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டமும் மருந்தகம் கல்வியில் டிப்ளோமாவும், அறிவியல் புலத்தில் விலங்கியல் மற்றும் தாவரவியல் கல்வியும் அதனைத் தொடர்ந்து கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கலை புலத்தில் ஆங்கிலம், வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றுடன் பொருளாதாரம் தொடர்பான கல்வியும் போதிக்கப்பட்டன.

இப்படிச் சிறிது சிறிதாக இப்பல்கலைகழகத்தின் பாடத்திட்டங்களில் மேம்பாடு கொண்டு வரப்பட்ட நிலையில் உள்ளூரில் முதன்மை பயன்பாட்டில் இருக்கும் மூன்று மொழிகளாகிய மலாய், சீன, தமிழ் மொழிகளைக் கற்பிக்கும் துறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. 1949ஆம் ஆண்டு தொடங்கி 1957க்கு இடைப்பட்ட காலத்தில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மேற்குறிப்பிட்டிருந்த மொழிகளுக்கும், தத்துவம், புவியியல், பொறியியல், சட்டம், மேலும் ஒட்டுண்ணியியல், எலும்பியல் அறுவை சிகிச்சை, ‘சோசியல் மெடிசன்’ (social medicine) மற்றும் மருந்தியல் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் மருத்துவ பாடங்களுக்கும் துறைகள் உருவாக்கம் கண்டன. மேலும் கல்வியியல், பொது சுகாதாரம் மற்றும் சமூக நிர்வாகம் ஆகிய துறைகளின்கீழ் டிப்ளோமா கல்வி வசதிகளை உருவாக்கியது மட்டுமல்லாமல் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் தொடரவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால், பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது (Caine, 1958, May).

இதற்கிடையில், 1954ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அமைந்திருக்கும் பல்கலைக்கழக வளாகத்தைத் தவிர்த்துக் கோலாலம்பூரிலும் தனித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டது. பின்னர் 1962ஆம் ஆண்டு இவ்விரண்டும் தனித்தனி பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டன. சிங்கப்பூரில் அமைந்திருந்த வளாகம் சிங்கப்பூர் பல்கலைக்கழகமாக மாறியது. அதுவே பின்னர் நான்யாங் பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து இன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது. கோலாலம்பூரில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் மலாயாப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது (Wan, 2019, November, 20).

 

இந்தியப் பகுதி அமைக்க கோரிக்கை

பல்கலைக்கழக செனட் மற்றும் கவுன்சில் கூட்டுக் குழு அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்னுரிமை அளிக்கபட வேண்டிய கல்வி முன்னேற்றங்கள் குறித்துப் பரிந்துரைகளை வழங்கியது. பின், சில மாற்றங்களுடன் இந்தப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒரு பரிந்துரையாகத் தனி இந்தியத் துறை (Separate Department) அமைக்கப்பட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது (Annual Report of University of Malaya, 1953-1954, பக். 2).

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி தொடங்க வேண்டும் என்று கார் சாண்டர்ஸ் ஆணையம் முன்மொழிந்த பிறகு அumது தொடர்பான எந்த நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படவில்லை. 1951ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய இலாகா ஆரம்பிப்பது பற்றிய திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று 1953-ஆம் ஆண்டு சட்ட சபை அங்கத்தினரான சி. ஆர். தசரதராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். மலாயா வானொலி தமிழ் பகுதி, பொது உறவு இலாகா, குடிநுழைவுத்துறை, தொழிலாளர் இலாகா ஆகியவைகளுக்கு தமிழ்மொழியில் ஆற்றல் கொண்டவர்கள் தேவை என்பதால் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ், சமஸ்கிருதம், இந்திய சரித்திரம் ஆகியவற்றைச் சொல்லிக் கொடுக்கும் இலாகா அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனோடு கலை, புதைபொருள் ஆராய்ச்சி, அரசியல், மத்திய கால ஜோதிட சாஸ்திரம், இலக்கியம், கலைகள், கைத் தொழிகள் போன்ற பாடங்களும் போதிக்கப்பட வேண்டும் என்று சி. ஆர். தசரதராஜ் வலியுறுத்தினார் (தமிழ் முரசு, பிப்ரவரி, 05, 1953, பக். 08). 07ஆம் தேதி பிப்ரவரி 1953ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பதில் தாமதமானதற்கான காரணங்களைத் தமிழ்முரசு பத்திரிக்கை வெளியிட்டது. அவை :

மலாயாப் பல்கலைக்கழகமே ஆரம்ப நிலையில் இருந்து வருகிறது. மலாயாப் பல்கலைக்கழக நிர்மாணத்திற்குப் போதிய பணமும் இன்னும் சேரவில்லை. ஆதலால், பல்கலைக்கழக அதிகாரிகள் வெகு வேகமாய் ஓட முடியாத நிலை. இதற்கிடையில் மலாயா சீனர்கள் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க விரும்புகிறார்கள். சீனப் பகுதி அமைக்கப்படாமல் இருப்பது சீனர்களுக்கு அதிருப்தி அளித்திருக்கக்கூடும். அரசாங்க கல்வித் திட்டத்தில் ஆங்கிலத்திற்கும், மலாய்மொழிக்கும் பிரதானமளிக்கப்பட்டிருப்பது சீனர்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. இந்தியப் பகுதி குறித்து இந்தியர்களிடையே அபிப்பிராயப் பேதங்கள் உண்டு. மலாயாப் பல்கலைகழக நிர்மாணிப்பிற்கு அடிப்படையான கார் சாண்டர்ஸ் அறிக்கையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஒரு விரிவுரையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ் மொழி இந்திய மொழிகளில் ஒன்று; அதை மட்டும் பல்கலைக்கழகத்தில் இடம் பெறச்செய்வது அனைவருக்கும் திருப்தி அளிக்க மாட்டாது என்ற அபிப்பிராயம் இந்தியர்களிடையே எழுந்தது. சிலர் ஹிந்தி மொழியையும் மலையாள மொழியையும் சேர்க்க வேண்டும் என்று கோரினர். இறுதியாகத் தமிழ்மொழிக்குப் பிரதானமளிப்பதாக இந்தியர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

(தமிழ் முரசு, பிப்ரவரி, 07, 1953, பக். 04)

 

நீலகண்ட சாஸ்திரி வருகை

நீலகண்ட சாஸ்திரி

1953ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த சர் சிட்னி கெய்ன் பத்திரிகை சந்திப்புக் கூட்டத்தில் பேசுகையில், 4/2/1953 (புதன்கிழமை) நடத்தப்பட்ட பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் இந்தியப் பகுதி அமைப்பது குறித்து ஆலோசனை பெற பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரிக்கு இறுதி அழைப்பு விரைவில் அனுப்பவிருப்பது தொடர்பில் பேசப்பட்டதைக் குறிப்பிட்டிருந்தார் (தமிழ் முரசு, பிப்ரவரி, 06, 1953, பக். 08). இந்தியப் பகுதியில் உயர்நிலை படிப்பும், தென்கிழக்காசியாவில் இந்திய நாகரிகம் பரவிய வரலாறுகளையும், இந்தியக் கலை கலாச்சாரங்கள் பற்றிய விருத்தாக்கங்களையும் சொல்லிக் கொடுப்பது தகும் என்று கருதப்பட்டதால் இதற்கான பாட திட்டத்தைத் தயாரித்துக் கொடுக்கும் நோக்கத்தில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியை வரவழைக்க முடிவு செய்யப்பட்டது.

சர்வமும் இந்திய மயமாய் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளால் இத்தகைய பாடத்திட்டத்திற்கு முதலில் ‘இண்டோலஜி’ (Indology) என்று பெயர் வழங்கப்பட்டது. இப்பெயரிடுவதன் மூலம் மாகாணப் பிரிவு, இனப் பிரிவு போன்றான சிக்கல்களும் குழப்பங்களும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வளவு விடயங்கள் அடங்கியுள்ள இப்பாடத்திட்டத்தைத் தயாரிப்பது எளிமையற்ற காரியம் என்பதால் இப்பொறுப்பை மேற்கொள்ள பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அழைக்கப்பட்டார். இவர் இந்தப் பொறுப்பை மேற்கொள்ள பணம் கேட்கக்கூடும் என்றும் அதனைக் கொடுக்க மலாயாப் பல்கலைக்கழகம் தயாராக இருக்குமா என்பது ஐயம் என தமிழ் முரசு நாளிதழ் செய்தி பதிவு செய்தது. இந்தியப் பகுதி உருவாக்கப்படுவதற்கு மலாயா இந்தியர்களிடமிருந்து குறைவான எண்ணிக்கையில் நிதி கிடைத்திருந்தாலும்கூட அது எதிர்காலத்தில் இந்தியப் பகுதி உருவாவதற்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது என்று தெரிவித்ததோடு, மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பதில்  இந்தியர்கள் ஆர்வங்கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கொடைகளின் வழியே நிரூபிக்க வேண்டும் என்றும் அந்நாளிதழ்வழி கேட்டுக் கொள்ளப்பட்டது (தமிழ் முரசு, பிப்ரவரி, 07, 1953, பக். 04).

23 மார்ச் 1953ஆம் ஆண்டு, விமானம் மூலம் நீலகண்ட சாஸ்திரி சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ளார். அவர் ஒரு மாத காலம் தங்கி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதியை உருவாக்குவது பற்றி ஆராய்வார் என்றும் இந்தியப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் என்று முதன் முதலில் சிபாரிசு செய்த கார்-சாண்டர்ஸ் கமிஷன் உடன் சாஸ்திரி பேசுவார் என்றும் கூறப்பட்டது. திரு. சாஸ்திரியாருடன் ‘ஆனந்த விகடன்’ உதவி ஆசிரியரும், புகழ் பெற்ற ‘துப்பறியும் சாம்பு’வின் சிருஷ்டி கர்த்தாவுமான திரு. ஆர். மகா தேவன் என்பவரும் வந்திருந்தார் (தமிழ் முரசு, மார்ச், 24, 1953, பக். 01). சாஸ்திரி கோலாலம்பூர், மலாக்கா, பினாங்கு ஆகிய இடங்களில் சொற்பொழிவாற்றினார்.

இந்தியப் பகுதி ஆரம்பிப்பதற்கான சூழ்நிலைகளையும், மக்கள் எண்ணத்தையும் சாஸ்திரி தமது சுற்றுப்பிரயாணத்தின் மூலம் அறிந்துக் கொண்டார். 1953ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைப்பெறும் கூட்டத்தில் சாஸ்திரி தனது கருத்துகளை எடுத்துக்கூறுவார் என்றும் கல்வி போர்டுடன் கலந்து ஆலோசித்த பிறகே சாஸ்திரி தனது இறுதி அறிக்கையைத் தயாரிக்க தொடங்குவார் என சொல்லப்பட்டது (தமிழ் முரசு, ஏப்ரல், 15, 1953, பக். 11). மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பது பற்றி ஆராய்ச்சி நடத்திய சாஸ்திரி நகல் அறிக்கையைப் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார். அவருடைய அறிக்கை 24 ஏப்ரல் 1953 அன்று பிரசுரமாகும் என்று சொல்லப்பட்டது. 24 ஏப்ரல் 1953 தேதியன்று பல்கலைகழக கல்வி போர்டுடன் கூட்டம் நடைப்பெற்று அதில் சாஸ்திரியின் அறிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது (தமிழ் முரசு, ஏப்ரல், 17, 1953, பக். 02).

11.4.1953 அன்று இந்திய எஜண்ட் திரு. ராமகிருஷ்ணராவுடன் மலாக்கா நாட்டுக் கோட்டைச் செட்டியார்களைச் சேர்ந்த சன்னியாசி மலைக் கோவிலுக்குப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் சென்று பேசியபோது மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்குத் தனி இடம் ஒதுக்க இயலாதென்றும் தமிழுக்கென்று கேட்டால் ஹிந்தி வேண்டும் என்று கிளர்ச்சி அதிகப்படுமென்றும், சமஸ்கிருதம், தமிழ் வகுப்புகள் ஏற்படுத்தி அதில் ஒருவர் பேராசிரியராகவும் மற்றவர் விரிவுரையாளராகவும் நியமிக்கப்படலாமென்று கூறியுள்ளார். மேலும், அதன் மூலம்தான் தமிழுக்கு ஆதரவு இருக்குமென்றும் மேற்கண்ட திட்டத்திற்கு எதிர்ப்பு ஏற்படுமானால் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.

இதனை அறிந்த தமிழ் முரசு பத்திரிகை மலாயாவில் வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினர் தமிழர்கள் என்றும் மலாயா என்ற பெயரே தமிழர்களின் தொடர்பால் உருவானது, அதுமட்டுமின்றி, தமிழர்களின் பண்பாடும் இந்நாட்டு மக்களின் பண்பாட்டோடு இரண்டறக் கலந்து சிறப்புற விளங்குகின்றது என்று கூறி பல்கலைகழகத்தில் தொடங்க இருக்கும் இந்தியப் பகுதி இங்கு வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினரான தமிழர்களின் எதிர்கால நலனுக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் வகையில் அமைவதே சிறந்தது எனும் நிலையில் இலக்கியமும் பண்பாடும்மிக்க தமிழ்ப் பகுதியும் இந்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறுமாறு நீலகண்ட சாஸ்திரி அறிவுரை அமைத்தல் வேண்டும் என சாஸ்திரியாரிடம் வேண்டுக்கோள் விடுத்தது தமிழ் முரசு பத்திரிக்கை (தமிழ் முரசு, ஏப்ரல், 22, 1953, பக். 08).

சொற்பொழிவுக்காகச் சென்ற சாஸ்திரி ஆங்காங்கே ஆற்றிய உரைகளில் வெளிப்பட்ட கருத்துகள் இந்தியர்களிடம் சந்தேகத்தை எழுப்பி வந்ததால் 23 ஏப்ரல் 1953 அன்று தமிழ் முரசு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளிப்ட்டது. அதில், 1947ல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்த கார் சாண்டர்ஸ் ஆணையம் தமிழ்ப் படிப்பிற்காகத் தனி இலாகா அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து தெரிவித்த கருத்துகளை மீள்பிரசுரம் செய்தது. அதைச் சாஸ்திரிக்கும் மற்ற இந்தியர்களுக்கும் சமர்ப்பணம் என்பதாகத் தெரிவித்துத் தமிழ் படிப்பிற்கான இலாகா குறித்து கார் சாண்டர்ஸ் தெரிவித்த கருத்துகள் விரிவாக விளக்கப்படுத்தியது (தமிழ் முரசு, ஏப்ரல், 23, 1953, பக். 02).

WhatsApp Image 2020-06-30 at 21.54.56அதன் பிறகு, சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க 26.04.1953ல் தமிழர் பொதுக் கூட்டமொன்றில் பேச ஒப்புக் கொண்ட பேராசிரியர் சாஸ்திரி கடைசி நேரத்தில் நிகழ்கவுக்கு வர மறுத்தது தமிழர்களைக் கோபம் அடையச் செய்தது. அந்நிகழ்வு பொது கூட்டமாக மாற்றப்பட்டு சில விடயங்கள் பேசப்பட்டது.  இக்கூட்டத்திற்குத் தமிழ் மக்களின் சார்பில் திரு. சாரங்கபாணி தலைமை ஏற்று உரையாற்றினார். மலாயாப் பல்கலைகழக கல்வி போர்டு அங்கத்தினர் என்ற முறையில் இந்தியப் பகுதி அமைக்கப்படும் என்றும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்படும் என்றும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். முதலிடம் மறுக்கப்படுமானால் தமிழ் மக்கள் சார்பில் என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதைச் செய்வதாக உறுதியளித்தார். காரணம், தமிழ் ஒன்று மட்டுமே இந்த நாட்டுக்குப் பயன்படக்கூடியது இந்திய மொழி ஆகும். அரசாங்கமும் அதனை ஒப்புக் கொண்டது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தைத் தவிர மக்கள் மொழியாக அரசாங்கம் அங்கிகரித்து ஆதரவு காட்டும் மொழிகள் தமிழ், மலாய், சீனம் என்பதை யாரும் மறுக்கவியலாது என்றார். மலாயாப் பல்கலைக்கழகத்திற்குப் பொதுமக்களிடம் நிதி கேட்கப்பட்ட பொழுது முதன்முதலாகப் பணம் கொடுத்தது ஒரு தமிழ் இளைஞரே ஆவார்.  அதற்கு மதிப்பளிக்கும் வகையிலாவது பல்கலைக்கழக நிறுவாகம் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. சாஸ்திரி சொன்னதை ஏற்காமல் கூச்சல் போட்டால் மட்டும் போதாது. அனைவரும் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் முக்கியமாக இளைஞர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் (தமிழ் முரசு, ஏப்ரல், 27, 1953, பக். 02).

தன்மீது மலாயா மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று அறிந்த சாஸ்திரி தமது அறிக்கை வரும்வரை மலாயா இந்தியர்களைப் பொறுமை காக்க வேண்டும் என இந்திய அரசாங்க பிரதிநிதி காரியாலயம் மூலம் தான் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார். தன் சிபாரிசின் மூலம் இந்திய சமூகத்திற்குப் படிப்பு மொழியாக தமிழுக்குள்ள முக்கியத்துவத்தை என்னுடைய சிபாரிசுகள் எந்த வகையிலும் குறைக்கவில்லை என்பதை மலாயா இந்தியர்களுக்குப் பத்திரிக்கை மூலம் உறுதி கூற விரும்பியதாகச் சொல்லப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசு அறிக்கை வெளிவரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார் (தமிழ் முரசு, ஏப்ரல், 29, 1953, பக். 02). சாஸ்திரி இந்திய அரசாங்க பிரதிநிதி காரியாலயம் மூலம் வெளியிட்ட இந்தச் செய்தியில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி படிப்பு மொழியாக இருக்கும் என்பதை மறைமுகமாகத் தெரிவித்திருந்தது மலாயா இந்தியர்களையும் குறிப்பாக மலாயாத் தமிழர்களையும் திருப்திப் படுத்தும் என்று நம்புவதாக தமிழ் முரசு பத்திரிக்கையில் செய்தி வெளியானது (தமிழ் முரசு, ஏப்ரல், 30, 1953, பக். 04).

மலாயாவிலிருந்து நாடு திரும்பிய நீலகண்ட சாஸ்திரி பத்திரிகைகளுக்குத் தன்னுடைய மலாயா பயணம் குறித்த அனுபவத்தைப் பகிரும்போது நேர்மாறான தகவல்களைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தினமணி நிருபரிடம் மலாயாவில் தென் இந்தியாவில் உள்ள திராவிட கழகத்தைப் போன்று ‘தமிழ் பண்ணை’ என்ற இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய அபத்தமான கோரிக்கையின் விளைவாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1953ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த இந்திய பாஷைகள் இலாகா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் மட்டும்தான் போதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் எவ்வளவு சொல்லியும் பலன் ஏற்படவில்லை அதனால் தனது மலாயா விஜயம் தோல்வியுற்றதாக சாஸ்திரி தினமணி இதழுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், மலாயாவில் இந்தியர்களின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். பின், சென்னை ஆங்கில தினசரி “மெயில்” பத்திரிக்கையில் (17-05-1953) ஞாயிறு இதழில் மலாயா இந்தியர்கள் பெருந்தொகையினராக இருப்பினும் சீனர்களைப் போல் எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை என கூறியுள்ளார். மலாயாவில் வாழ்பவர்கள் தங்களுடைய குறுகிய தேசிய வாதங்களை விட்டு மலாயர்களுடன் ஒன்றுபட்டு மலாயன் தேசிய இனத்தை ஏற்பது நல்லது என்றும் பேட்டிக் கொடுத்துள்ளார் என்று தமிழ் முரசு பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, மே, 22, 1953, பக். 05).

மலாயாப் பல்கலைகழகத்தில் இந்தியப் பகுதி துவங்குவது பற்றி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் செய்திருந்த சிபாரிசுகளில் சிலவற்றையே பல்கலைக்கழகம் செனேட் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் துணை வேந்தர் சர் சிட்னி 25.05.1953 அன்று தெரிவித்தார். பின் செனேட் செய்த முடிவானது 17ஆம் தேதி பல்கலைக்கழக கவுன்சிலால் விவாதிக்கப்படும் என்றும் அதன் முடிவே இறுதியானது என்றும் கூறினார். சாஸ்திரி சென்னை பத்திரிகையில் இந்தியப் பகுதி ஆரம்பிக்க தாமதமானதற்கு இந்தியர்களின் அபத்தமான கோரிக்கைகளே காரணம் என்பதைத் துணை வேந்தர் முற்றிலுமாக மறுத்துத் தாமதத்திற்குப் பணப்பற்றாக் குறையும் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய போதிய கால அவகாசம் இல்லாமையுமே காரணம் எனத் தெளிவுப்படுத்தினார். பாடத் திட்டம் முடிவு செய்தல், மாணவர்களைத் தயார் செய்தல், மற்றும் ஒரு இலாகா தொடங்குவதற்கான செயல்களைச் செய்து முடிப்பது 1953ஆம் ஆண்டு இறுதியில் முடியாத காரியம் என்றும் போதிய நிதி இருந்தால் 1954ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியப் பகுதி இயங்கக் தொடங்கி விடும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். இந்தியப் பகுதிக்கு ஒரு வருடத்திற்கு குறைந்தது 75,000 வெள்ளி தேவைப்படுகிறது என்பதால் அரசாங்கமும் பொதுமக்களும் வேண்டிய நிதியைத் தர முன்வர வேண்டும் என்றார் (தமிழ் முரசு, மே, 26, 1953, பக். 02).

 

கார்- சாண்டர்ஸ் அறிக்கை

கார்-சாண்டர்ஸ் அறிக்கையில் மலாய், சீன மற்றும் தமிழ் ஆய்வு துறைகளை நிறுவுவதற்கான பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன. பிப்ரவரி, 1950இல், பல்கலைக்கழகத்தின் செனட் மூன்று தனித்தனி வாரியங்களை அமைத்து, அந்தப் பரிந்துரைகளைப் பரிசீலிக்கவும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கவும் இவ்வாரியங்கள் இயற்றப்பட்டன (Annual Report of University of Malaya, 1949-1950, பக். 13).

தமிழ் ஆய்வு வாரியம்

  • துணைவேந்தர்
  • The Rev. டாக்டர் டி.டி.செல்லியா.
  • திரு கே.ராமநாதன்.
  • திரு. ஜி. சாரங்கபாணி.
  • பேராசிரியர் என்.கே.சென்.
  • டாக்டர் சி.சுப்ரஹ்மண்யம்.
  • மாண்புமிகு டத்தோ ஈ. இ. சி. துரைசிங்கம்.
  • திரு. பி. ஹாரிசன்.

இந்த வாரியத்தில் செயலாற்றியவர்கள் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமின்றி வெளியே தகுதிவாய்ந்த  இது சார்ந்து நன்கு அறிவு உள்ளவர்களின் கருத்துகளளையும் வரவேற்றனர் (Annual Report of University of Malaya, 1949-1950, பக். 14).

23 ஏப்ரல் 1953 அன்று தமிழ் முரசு பத்திரிக்கையில் கார்-சாண்டர்ஸ்

அறிக்கை விரிவாக விளக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

‘மலாயாவின் பல்கலைக்கழகத்தில் அந்நாட்டின் பிரதான சமூகங்களின் மொழியும் கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட படிப்பு இருக்க வேண்டும் என்ற முறையில் மலாய் மொழிக்கும், சீன மொழிக்கும் இலாக்காக்கள் வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதே போல் மூன்றாவது பெரிய ஜனத்தொகையினரான இந்தியர்களுக்கு ஒரு இலாகா ஏற்படுத்துவதை ஆராய வேண்டும். மலாயாவில் சுமார் 6 லட்சம் இந்தியர்களில் பெரும் பகுதியினர் தென்னிந்திய அல்லது இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் ஆவர். மலாயாவில் உள்ள இந்தியர்களில் 70 சதவிதத்தினர் மலாயாவில் பிறந்தவர்கள். பின், அவர்கள் பலரின் வீட்டு மொழி தமிழ். எஸ்டேட் பாட சாலையில் போதனை மொழி தமிழாகவே உள்ளது. ஆனால், நிறைய பேர் முன்றாம் வகுப்புக்கு மேல் செல்வதில்லை. நகரங்களில் உள்ளவர்கள் ஆங்கில பாடசாலையையே நாடுகிறார்கள். தமிழ் மாணவர்களில் வெகு சிலரே தாய் மொழிக் கல்வியைத் தொடர்கிறார்கள். இருந்த போதிலும் மற்ற பாடங்களின் போதனை ஆங்கிலம் மூலமும் தமிழ்க் கல்வி தமிழின் வழியும் கொடுப்பதே கல்வி அதிகாரிகள் கருத்தாகும்.

1.தமிழ் கற்க ஆர்வம்: தமிழர்கள் பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய் மொழிக் கல்வி வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து தமிழ்க் கல்வி படிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.

2. தமிழ்ப் பகுதியால் கிட்டும் பயன்: மலாயாப் பல்கலைகழகத்தில் தமிழ் இலாகா அமைப்பது மாணவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று தமிழ் படிக்கும் செலவை இல்லாமலாக்கும். புதிய கல்வி திட்டத்தின்படி தமிழ் மொழியும் இலக்கியமும் செகண்டரி பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கப்படுமாதலால் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வர ஏதுவாகிறது. உத்தியோகத் துறையில் அந்தப் பள்ளிக்கூடங்களில் தமிழ் சொல்லிக் கொடுக்க, பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். இந்திய மொழிகளில் ஒன்றாவது சேர்க்கப்படவில்லையெனில் அது பூர்த்தியானதாயிருக்காது.

3.உடனடியாகப் பெருமளவில் தேவையிருக்கக் கூடிய ஒரேயொரு மொழி தமிழ்தான் : வளமையும் வலிமையும் நிறைந்த மொழி, பழமை வாய்ந்த, இன்னும் வாழும் ஒரு கலாச்சாரத்தினை அணுக வழிசெய்யும் ஏராள அற்புதமான இலக்கியங்களை உடையது அம்மொழி. ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் நூல்நிலையம் ஒன்றை அமைப்பது கடினமானதாயிராது. மேலும், தமிழ் இலாகா இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள தமிழ் இலாகாக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்க முடியும். ஆகவே, தமிழ் படிப்புக்கு ஒரு இடமளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் முடிவாகக் கூறுகிறோம். தமிழ்ப் படிப்புத் தமிழ் மொழியின் படிப்போடு நின்றுவிடாமல் திராவிட கலாச்சாரம் முழுதையும் தென்னிந்திய சரித்திரத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். என்றாலும் பேராசிரியர் ஒருவர் அவசியமென நாங்கள் கருதவில்லை. தற்பொழுது கிடைக்கக்கூடிய அபேட்சகர்களின் தகுதிகளுக்கு ஏற்ப சீனியர் விரிவுரையாளரோ, சாதாரண விரிவுரையாளரோ நியமிக்கப்படுவது போதுமானது.

4.கீழைநாட்டு மொழிகள் கற்பித்தல் : இந்த மூன்று கீழ்நாட்டு மொழிகளைக் கற்பிப்பதில் ஒரேவித பிரச்சனைகள் எழுவதால் அவற்றை ஒன்றாக ஆராய்வது நலம். அநேகமாகப் பல்கலைக்கழகத்திலுள்ள எல்லா மாணவர்களுக்கும் இந்த மொழிகளில் ஏதாவதொன்று தாய் மொழியாக இருக்கும். அதிக மாணவர்களுக்கு அவர்களுடைய வீட்டு மொழியில் அதிக ஞானமும் அம்மொழியின் இலக்கியத்தில் பரிச்சயமும் ஊட்ட பல்கலைக்கழகத்தின் புதிய சக்தி உருவாவது நலம் என்று நாங்கள் கருதுகிறோம். மாணவர்களுக்குத் தெரியாத ஒரு மொழியை முதன் முதலாகக் கற்கச் செய்வது இந்த இலாகாக்களின் நோக்கமாக இருக்காது. இந்தப் படிப்புகளுக்காக மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுமுன் அவர்களுக்குக் கொஞ்சமாவது அம்மொழியில் பரிச்சயம் இருக்க வேண்டும்.’

(தமிழ் முரசு, ஏப்ரல், 23, 1953, பக். 02).

மலாயாத் தமிழ் மக்களின் வேண்டுகோள்

மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தரைத் தலைவராய் கொண்ட இந்தியப்WhatsApp Image 2020-06-30 at 21.55.18 பகுதி அமைப்பதற்கான சபையானது தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதியைத் துரிதமாய் நிறுவ வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளது. இந்தியப் பகுதி அமைப்பதைச் சுணக்குகிற பிரச்சனைகளில் ஒன்றான இந்தியப் பகுதிக்கு ஒரு தலைவரை நியமிப்பது பற்றி பல்கலைக்கழக அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதையும் திரு. கா. இராமநாதன் தெரிவித்தார். எனினும் பாடத்திட்டம் குறித்த சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் நன்யாங் பல்கலைக்கழகம் உருவாகிக் கொண்டிருப்பதால் இந்தியப் பகுதியை அமைக்க வேண்டியது அவசியமாகிவிட்டது என்பதையும் கூறியுள்ளார் (தமிழ் முரசு, ஜூன், 04, 1954, பக். 02). காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசப்பட்ட பல சர்ச்சைக்குரிய விடயங்களில் நெடுநாளைக்கு முன்னரே அமைக்கப் பட்டிருக்க வேண்டிய இந்தியப் பகுதி அமைப்பதை இனியும் தாமதிக்காமல் சீக்கிரம் அமைக்கும்படி சர்க்காரை (அரசாங்கத்தை) வற்புறுத்துவதென இக்கமிட்டி தீர்மானித்திருந்தது (தமிழ் முரசு, ஜூன், 05, 1954, பக். 02).

இந்தியப் பகுதி நிறுவ பண நெருக்கடி

மலாயாப் பல்கலைகழகத்தில் சீன, மலாய் பகுதிகள் 1953ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும், ஆனால், இந்தியப் பகுதி 1954ஆம் ஆண்டு அக்டோபரில்தான் தொடங்க இயலும் என்று துணை வேந்தர் சர் சிட்னி கெயின் 24 ஏப்ரல் 1953 அன்று பத்திரிகையாளரிடையே அறிவித்தார். தேவையான பணம் மற்றும் மற்ற ஏற்பாடுகள் ஆகியவைப் பூர்த்தியடைந்துவிட்டால் 1954 அக்டோபரில் இந்தியப் பகுதி இயங்கத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கார்-ஸாண்டர்ஸ் கமிஷன் சிபாரிசின் அடிப்படையிலேயே சீனப் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது என்றும் அதே அடிப்படையில் இந்தியப் பகுதியும் ஏற்படுத்தலாம் என்றார். இதனால் கார்-சாண்டர்ஸ் சிபாரிசு முழுதுமோ அல்லது பேராசிரியர் சாஸ்திரியாரின் சிபாரிசுகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் என்று பொருள் அல்ல. பேராசிரியர் சாஸ்திரியின் சிபாரிசு பற்றி பொதுமக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை ஆராய்ந்த பிறகே பல்கலைக்கழகம் இந்தியப் பகுதி பற்றி முடிவு செய்யும் என்று சர் சிட்னி கெய்ன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். சாஸ்திரி சொன்ன சிபாரிசு இருக்குமானால் பல்கலைக்கழகமும் கல்வி போர்டும் அதனை ஏற்குமா என்று தமிழ் முரசு ஆசிரியர் கேட்டதற்கு அத்தகைய மாறுபாடு இருக்காது என்றும் அப்படி எழுந்தால் கல்வி போர்டு அது பற்றி முடிவு செய்யும் என்றும் பதிலளித்தார். தற்போது பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கும் நிதி மிகவும் சொற்பம் என்பதால் பணம் பற்றாக்குறையால் இந்தியப் பகுதி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் (தமிழ் முரசு, ஏப்ரல், 25, 1953, பக். 08).

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி தொடங்க 15 லட்சம் வைப்புநிதி இருந்தாலே சாத்தியம் என 03.12.1953 அன்று துணை வேந்தர் தெரிவித்தார். இவ்வளவு பணத்தைப் பொதுஜன நன்கொடை வழி திரட்ட முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது என்றும் தற்போது பல்கலைக்கழகத்தின் பண நெருக்கடியினால் நன்கொடையின்றி இந்தியப் பகுதி அமைப்பது முடியாத காரியம் என்றும் தெரிவித்தார் (தமிழ் முரசு, டிசம்பர், 04, 1953, பக். 02). அரசாங்கம் பணம் ஒதுக்குமாயின், மலாயா பல்கலைக்கழகம் மூன்று புதிய பகுதிகளை ஆரம்பிப்பதுடன், மேலும் மூன்று பகுதிகளை விரிவாக்கும் என செய்தி வெளியானது. அந்த மூன்று புதிய பகுதிகளில் விவசாயப் பகுதி, சட்டப் பகுதியுடன் சேர்த்து இந்தியப் பகுதியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது (தமிழ் முரசு, பிப்ரவரி, 23, 1954, பக். 04).

18.10.1954 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துக் கொண்ட துணை வேந்தர் சர் சிட்னி கெயின் பல காலமாகப் பல காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு வந்த இந்தியப் பகுதி அமைப்பது குறித்து இறுதியாக மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாண்டு விஸ்தரிப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார். அடுத்து அமல் செய்ய முடிவு செய்திருக்கும் 4 திட்டங்களில் அநேகமாக இந்தியப் பகுதி அமைப்பதும் ஒன்றாகும் என்றார். இந்தியப் பகுதி மலாயாப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படுமானால் வருடாந்திர செலவுக்கு வேண்டிய தொகை 70 ஆயிரம் வெள்ளியாக இருக்கலாம் என்றும் அத்தொகை மலாய், சீன இலாகாக்களின் தேவையுடன் ஒப்பிடுகையில் குறைவு என்றும் குறிப்பிட்டிருந்தார் (தமிழ் முரசு, அக்டோபர், 17, 1954, பக். 12).

19.01.1955 அன்று பெடரல் சட்டசபைக் கூட்டத்தில் திரு. கே. ராமநாதனின் கேள்விக்குப் பதிலளித்த துணை வேந்தர் சர் சிட்னி கெயின் 1959ம் வருட இறுதிக்குள் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதியை அமைத்துவிடலாமென பல்கலைக்கழகம் பெரிதும் நம்புவதாகக் கூறினார். அரசு வழங்கும் மானியங்களும் கிடைக்கப் பெறும் நன்கொடைகளும் இப்பொழுது போதிய அளவில் இல்லை என்றாலும் இத்திட்டம் பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட விஸ்தரிப்புத் திட்டம் என்பதால் உறுதியாகத் தமிழ்ப் பகுதி அமைக்கப்படும் எனக் கூறினார் (தமிழ் முரசு, ஜனவரி, 20, 1955, பக். 01).

 

சமஸ்கிருத புத்தகங்கள் நன்கொடை

தமிழ் பகுதிக்கு 70 சமஸ்கிருத புத்தகங்களும் 6,000 ரூபாயும் இந்திய அரசு பரிசாக அளிக்க முன்வந்திருப்பதாக இந்தியக் கமிஷனர் திரு.ஆர்.கே.தாண்டன் 6.02.1955ல் தெரிவித்தார். மேலும், தமிழ்ப் பகுதிக்கு இந்தியக்கலை, பண்பாடு, தத்துவம் இவற்றின் மீது எழுதப்பட்ட இன்னும் பல புத்தகங்களையும் இந்திய அரசு அளிக்க இருப்பதை அறிவித்தார். 70 சமஸ்கிருத புத்தகங்களையும் மற்றும் 86 இந்திய வரைப் படங்களையும் அன்று பிற்பகல் 2 மணி முதல் 2.15 வரை பூகோளப்பகுதி அறையில் நிகழ்ந்த நிகழ்வில் திரு. தாண்டன் அவர்களிடமிருந்து பல்கலைக்கழக துணை வேந்தர் சார் சிட்னி பெற்றுக் கொண்டார். துணை வேந்தருடன் சேர்ந்து இந்தியக் கமிஷனர் அலுவலக அதிகாரிகள், பேராசிரியர்கள், கே. எம். ஆர். மேனன் ஆகியோரும் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். திரு. தாண்டன் அந்நிகழ்வில் ஆற்றிய உரையில் இந்தப் புத்தகம் இந்தியாவையும் மலாயாவையும் இணைக்கும் என்று கூறி, வழங்கவிருக்கும் அடையாள உதவியைப் பற்றி குறிப்பிட்டதோடு தமிழ்ப் பகுதி துவங்கிய பின் இன்னும் பல இந்தியப் புத்தகங்களைத் தர இருக்கிறது பற்றியும் பேசினார். கொடுக்கப்பட்ட 70 புத்தகங்களும் திருவனந்தபுரம் சமஸ்கிருத ஒரியண்டல் லைப்ரரி பதிப்பகத்தினரது என்றும் மைசூர், திருவனந்தபுரம் சமஸ்கிருத வரிசையில் பிரசுரிக்கப்பட்ட இந்தியத் தத்துவம், இலக்கியம் பற்றி இயம்புவன என்றும் குறிப்பிடப்பட்டது.

பார்ப்பனிய நம்பிக்கை, சைவம், ஆதிவேதாந்தம், மலபாரில் சடங்கு முறைகள், சைவத் தத்துவம், ஆயுர்வேதம், ராமாயணம் ஆகியவைப் பற்றி கொடுக்கப்பட்ட 70 புத்தகங்களும் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டவை. 70 புத்தகங்களில் ஒரு சிலவற்றுக்கு மட்டும் ஆங்கிலத்தில் பெயர் போட்டிருந்தது. மற்றவையெல்லாம் புத்தக அட்டையில் இருந்து அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்ததால் புத்தகங்களைப் பார்வையிட வந்த மாணவர்கள் தங்களால் ஒரு வார்த்தையைக் கூட படிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். இந்திய அரசு புத்தகங்கள் கொடுக்க முன் வந்தது நல்ல எண்ணம் ஆனால், தமிழ்ப் பகுதிக்கும் சமஸ்கிருதம் படிக்க இயலாத மாணவர்களுக்கும் சமஸ்கிருத புத்தகங்களை வழங்கியிருப்பது குறித்து அங்கு இருந்த ‘தமிழ் முரசு’, ‘இந்தியர் டெய்லி மேயில்’ நிருபர்களிடம் மாணவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். மாணவர்கள் தெரிவித்த கருத்துகள் வழி பல்கலைக்கழகத்தில் மொத்தமாக ஐந்து தமிழ் புத்தகங்களே உள்ளதாகவும் அவற்றில் இரண்டு அகராதிகள் என்றும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மேலும் கூறுகையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதால் தமிழ்ப் புத்தகங்களுக்கே தேவைகள் அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அந்நிகழ்வில் கூடியிருந்த இந்தியர்களின் கூட்டத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழக இந்திய பேராசிரியரால் கொடுக்கப்பட்ட 70 புத்தகங்களில் ஒன்றின் பெயரை மட்டுமே படித்துக் காட்ட முடிந்தது என்பதையும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர் (தமிழ் முரசு, பிப்ரவரி, 17, 1955, பக். 07).

சமஸ்கிருத புத்தகங்களைப் பல்கலைக்கழக தமிழ்ப் பகுதிக்குக் கொடுத்தது தொடர்பாகப் பல மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்ததைக் குறித்து மலாயாவில் உள்ள இந்தியக் கமிஷனர் திரு. ஆர். கே. தாண்டன் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அதில் முதன்மையாகத் தமிழ்ப் பகுதிக்கு சமஸ்கிருத புத்தகங்கள் வழங்கியது சரிதான் என்றும் அதனை மக்கள் குறுகிய ‘மாகாண மனப்பான்மை’ கொண்டு குறைகூறுவதற்கு வருந்துவதாக திரு. ஆர். கே. தாண்டன் கூறினார். மேலும் பேசிய, திரு. தாண்டன் இந்திய அரசு சமஸ்கிருத புத்தகங்களை மலாயாப் பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்தது பல்கலைக்கழகத்திற்குக் காட்டும் நல்லெண்ணம், கூட்டுறவு ஆகியவற்றின் அறிகுறியாகும் என்றார். பின், சமஸ்கிருதம் லத்தின் போன்று உலகத்தில் மிக மிக பழைய மொழிகளில் ஒன்று என்றும் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிநிதிப்பதும் அதுவே என்றும் கருத்துரைத்தார். எனவே அதனைக் கட்டாயம் மிகக் கவனமாக ஆழ்ந்து படிப்பதற்கே சமஸ்கிருதம் புத்தகங்கள் கொடுக்கப்படுள்ளது என்று கூறினார். இதனை, ‘திரு. ஆர். கே. தாண்டன் சப்பைக் கட்டு கட்டுகிறார்’ என்று தமிழ் முரசு செய்தியாக்கியது (தமிழ் முரசு, பிப்ரவரி, 21, 1955, பக். 07).

…… தொடரும் (தமிழ் எங்கள் உயிர் நிதித் திட்டம்)

 

மேற்கோள் பட்டியல்

Annual Report of University of Malaya (1949-1950). (1950). University of Malaya: Singapore.

Annual Report of University of Malaya (1953-1954). (1954). University of Malaya: Singapore.

Caine, S. (1958). The University Of Malaya. Journal of the Royal Society of Arts, 106(5022), 442-454. Retrieved from www.jstor.org/stable/41368645

Wan, C.D. (2019). The Universities And University Colleges Act In Malaysia: History, Contexts And Development. Kajian Malaysia, 37(2), 1–20. Retrieved from, https://doi.org/10.21315km2019.37.2.1

இந்தியப் பகுதியை விரைவில் நிறுவும்படி காங்ரஸ் கோரிக்கை கமிட்டி கூட்டத்தில் பல விஷயம் சர்ச்சை. (1954, 05 ஜூன்). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19540605-2HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19540605-2&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19540605-2&nid=tamilmurasu”nid=tamilmurasu

இந்தியப் பகுதியை விரைவில் நிறுவும்படி காங்ரஸ் கோரிக்கை கமிட்டி கூட்டத்தில் பல விஷயம் சர்ச்சை மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதி இன்னும் 2 ஆண்டில் துவங்கலாம் துனை வேந்தர் சர் சிட்னி தெரிவித்த நம்பிக்கை போதிய நிதியின்மையால்தான் காலதாமதமானது என்று கூறினார். (1954, 17 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19541017-12HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19541017-12&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19541017-12&nid=tamilmurasu”nid=tamilmurasu

உமா விஸ்வநாதன். (2005/2006). மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை : ஓர் ஆய்வு (பதிப்பிக்கப்படாத இளங்கலை ஆய்வேடு). இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர்.

சமஸ்கிருத புத்தகங்கள் கொடுத்தது சரிதான்’ சப்பைக் கட்டு கட்டிப் பேசுகிறார் தாண்டன் இந்தியாவிலேயே மிகமிகப் பழையமொழி சமஸ்கிருதம் தானாம் ‘இந்திய தேசக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதும் சமஸ்கிருதம் தாமே’ – திரு.தாண்டம். (1955, 21 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550221-7HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550221-7&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550221-7&nid=tamilmurasu”nid=tamilmurasu

சாஸ்திரி அறிக்கை தயார். (1953, 17 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530417-2HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530417-2&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530417-2&nid=tamilmurasu”nid=tamilmurasu

சாஸ்திரி சிபாரிசில் பெரும் பகுதி ‘அரோகரா’ செனேட் அங்கீகாரம் பற்றி துணைவேந்தர் தமிழர் மீது சாஸ்திரி சுமத்திய அண்டப்புளுகும் அம்பலம். (1953, 26 மே). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530526-2HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530526-2&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530526-2&nid=tamilmurasu”nid=tamilmurasu

சாஸ்திரி புளுகு மூட்டை மலாயா இந்தியர்கள் பற்றி இல்லாததும் பொல்லாததும் ‘அபத்தமான கோரிக்கை’யால் இந்திய இலாகா ஒத்திவைக்கப்பட்டதாம்!. (1953, 22 மே). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530522-5HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530522-5&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530522-5&nid=tamilmurasu”nid=tamilmurasu

சாஸ்திரி பொறுத்திருந்து பாக்கச் சொல்லுகிறார் தம் சிபார்சில் அபிப்பிராய பேதத்திற்கிடமிருக்காதாம். (1953, 29 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530429-2HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530429-2&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530429-2&nid=tamilmurasu”nid=tamilmurasu

சாஸ்திரி வேண்டுகோள். (1953, 30 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530430-4HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530430-4&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530430-4&nid=tamilmurasu”nid=tamilmurasu

சாஸ்திரிக்கு சமர்ப்பணம் – கார்-சாண்ரஸ் கருத்து. (1953, 23 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530423-2HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530423-2&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530423-2&nid=tamilmurasu”nid=tamilmurasu

தமிழா, சமஸ்கிருதமா? : மக்கள் கருத்து மதிக்கப்படும். பல்கலைக்கழக அதிபர் சர் சிட்னி உறுதி மொழி “சாஸ்திரி சிபாரிசை அப்படியே ஏற்க வேண்டுமென்பதில்லை” இந்தியப் பகுதி 1954 கடைசியில் ஆரம்பமாக சாதியமிருக்கிறது. (1953, 25 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530425-8HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530425-8&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530425-8&nid=tamilmurasu”nid=tamilmurasu

தமிழுக்குத் தனிஸ்தானம் கிடையாது’ ‘சமஸ்கிருதம், தமிழ் இரண்டையும் ஏற்றாலன்றி இந்தியப் பகுதியே இராது’ மலாக்காவில் சாஸ்திரி பேச்சு. (1953, 22 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530422-8HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530422-8&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530422-8&nid=tamilmurasu”nid=tamilmurasu

தமிழ்ப்பகுதி நிறுவுவது பணம் கிடைப்பதைப் பொறுத்தது. (1953, 04 டிசம்பர்). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19531204-2HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19531204-2&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19531204-2&nid=tamilmurasu”nid=tamilmurasu

நீலகண்ட சாஸ்தியார் போக்கிற்கு சிங்கப்பூர் தமிழர்கள் கண்டனம் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு முதலிடம் தந்தாக வேண்டுமென வற்புறுத்தல் ‘தமிழர் ஒன்றுபட்டால் எல்லோரும் மதிப்பார்கள் ; இல்லையேல். (1953, 27 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530427-2HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530427-2&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530427-2&nid=tamilmurasu”nid=tamilmurasu

நீலகண்ட சாஸ்திரியார் வந்து சேர்ந்தார் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதி பற்றி ஆலோசனை. (1953, 24 மார்ச்). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530324-1HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530324-1&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530324-1&nid=tamilmurasu”nid=tamilmurasu

பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி நீலகண்ட சாஸ்திரி ஆலோசனை கூற வருவார். (1953, 06 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530206-8HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530206-8&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530206-8&nid=tamilmurasu”nid=tamilmurasu

பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி. (1953, 07  பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530207-4HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530207-4&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530207-4&nid=tamilmurasu”nid=tamilmurasu

பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதியைத் துரிதமாய் நிறுவுக கோலாலம்பூர் இந்தியர்கள் கோரிக்கை. (1954, 04 ஜூன்). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19540604-2HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19540604-2&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19540604-2&nid=tamilmurasu”nid=tamilmurasu

பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அடுத்த வாரத்தில் இறுதி ஆலோசனை. (1953, 15 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 11. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530415-11HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530415-11&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19530415-11&nid=tamilmurasu”nid=tamilmurasu

பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பகுதி 1959 இறுதிக்குள் அமைக்கப்படுமாம். (1955, 20 ஜனவரி). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550120-1HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550120-1&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550120-1&nid=tamilmurasu”nid=tamilmurasu

பாலபாஸ்கரன். (2016). கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் : இன்றைய பார்வை. ஈரோடு: சிகரம் ஆப்செட்.

புதிய பகுதிகள் அமைக்க பல்கலைக்கழக சிரத்தை கூடுதலாக மான்யம் அளிக்க கோரிக்கை இந்த ஆண்டு பற்றாக்குறை 6 லட்சம் வெள்ளி. (1954, 23 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19540223-4HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19540223-4&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19540223-4&nid=tamilmurasu”nid=tamilmurasu

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப்பகுதிக்கு சமஸ்கிருத புத்தகங்கள் நன்கொடை! இந்திய சர்கார் சார்பில் தாண்டன் பல்கலைக்கழகத்தினரிடம் கொடுத்தார் ஒன்றல்ல, பத்தல்ல : 70 சமஸ்கிருத நூல்கள்! பெயர்க்கூடப் படிப்பாரில்லை!. (1955, 17 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550217-7HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550217-7&nid=tamilmurasu”&HYPERLINK “https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550217-7&nid=tamilmurasu”nid=tamilmurasu

 

5 comments for “மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்

  1. Aravin Kumar
    July 1, 2020 at 6:03 pm

    நிலகண்ட சாஸ்திரி,தமிழ் எங்கள் உயிர் நிதியம், கோ.சாரங்கபாணி என இங்கொன்றும் அங்கொன்றுமாய்த் தொட்டுச் சொல்லப்பட்டு வந்த உதிரி வரலாற்றின் முழுமையான சித்திரம்..நன்று

  2. Jeya
    July 3, 2020 at 1:28 am

    Very informative and well written article. Thank you publish the article. This is right way to go forward. Vallinam should start to publish this kind of well written research articles.
    Jeya

  3. கங்கா
    July 3, 2020 at 11:52 am

    சகோதரி அபிராமி கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். இக்கட்டுரைக்காக உங்களுக்கு அதிகம் மெனக்கெடல் இருந்திருக்கும் என்பதை அறிவேன். எப்பேற்பட்ட வரலாற்றுப் பின்புலத்தௌ கொண்டிருக்கும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் படித்த, படித்துக்கொண்டிருக்கும், படிக்கப் போகும் வருங்கால மாணாக்கள் அனைவரும் வாசித்தால் கூடுதல் சிறப்பு.

  4. Capt.A.Athavan
    July 13, 2020 at 10:26 pm

    Good to read and know

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...