விமர்சனம் ஏன் தேவையாகிறது: பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலை முன்வைத்து

ஒரு புனைவிலக்கியம் குறித்து விமர்சனம் எழுத பல காரணங்கள் உள்ளன. படைப்பின் நுண்தளத்தைச் சுட்டிக்காட்டி அதன் வழி அப்படைப்பைப் பொது வாசகர்கள் மேலும் தீவிரமாக அறியும் வழிகளை உருவாக்குவது; அதிகரித்து வரும் நூல் பிரசுரங்களுக்கு மத்தியில் மேம்பட்ட படைப்புகளை அடையாளம் காட்டுவது; தத்துவம், வரலாறு என ஒரு படைப்பில் தொய்ந்துள்ள பிற அறிவுசார் தகவல்களை உரையாடல்களாக மாற்றுவது; மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என கோட்பாட்டு ரீதியில் ஒரு படைப்பை அணுகிப் பார்ப்பது என அவற்றில் சிலவற்றைச் சொல்லலாம். இப்படி ஒரு பொருட்படுத்தத் தகுந்த படைப்பை வாசித்து அது குறித்த மனப்பதிவை எழுதும்போது அப்புனைவில் உள்ள எதிர்மறைகளையும் சுட்டுவது விமர்சனத்தின் இயல்புதான்.

இதில், விமர்சிக்கப்படக்கூடாத படைப்புகள் என சில உள்ளன. ஒரு படைப்பாளி தான் எழுதுவது ஜனரஞ்சகப் படைப்புதான்; அதன் வழி வாசகனை ஈர்ப்பது மட்டுமே தனது நோக்கம்; அதன் தேவை நூல் விற்பனை மட்டுமே எனும் கொள்கையில் இருக்கும் பட்சத்தில் அது குறித்து இலக்கிய விமர்சகன் பேச வேண்டிய அவசியம் இல்லை. கடைக்காரன் தான் விற்பது நொறுவை மட்டும்தான். அதன் நோக்கம் வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்துவதுதான். இதனால் தனக்கு ஆதாயம் கிடைக்கும் எனச் சொல்வானேயானால் உணவுப் பட்டியலில் அவனது நொறுவையை இணைத்து அதன் தரத்தை அளவிடுவது விமர்சகனின் மூடத்தனம். பொழுதுபோக மெல்லும் ஒரு பண்டத்தைப் பசி போக்கும் உணவோடு ஒப்பிடத்தேவையில்லை. அதுபோல வணிக இலக்கியங்களையும் நுகர்வுப் பண்டமாக அதன் இடத்தில் வைத்துவிடுதல் சிறந்தது. உலகில் எல்லாவகையான நுகர்வுப் பண்டங்களுக்கும் இடமிருப்பதுபோல ஜனரஞ்சக இலக்கியங்களுக்கும் அதற்கான வாசகர்கள் மத்தியில் இடமிருக்கும்.

ஆயினும் ஒரு புனைவை வாசித்த பிறகு அது குறித்த எதிர்மறை விமர்சனம்தான் மனதில் எழுகிறது என்றால் அதை எழுத்து வடிவில் முன்வைக்கும் முன் சில கேள்விகளை விமர்சகன் தனக்குத்தானே எழுப்பிக்கொள்ள வேண்டியதுள்ளது.

முதலாவது, அப்படைப்பு ஒரு மூத்த படைப்பாளியால் எழுதப்பட்டுள்ளதா? அவர் பெற்றிருக்கும் அங்கீகாரம் காரணமாக அப்படைப்பு வாசிக்கப்படாமலேயே இலக்கிய அந்தஸ்தைப் பெறக்கூடுமா? (எ.கா: ரெ.கார்த்திகேசு, கா.பெருமாள், எம்.ஏ.இளஞ்செல்வன்)

இரண்டாவது, ஏற்கனவே நல்ல படைப்புகளை எழுதிய ஒருவரால் எழுதப்பட்ட பலவீனமான படைப்பா? அவரது இலக்கிய செயல்பாட்டு ஆளுமையால் அப்படைப்புக்கு இயல்பாக இலக்கிய தகுதி வந்து சேர்கிறதா? (எ.கா: பெண் குதிரை, இராமனின் நிறங்கள்)

மூன்றாவது, புனைவுத்திறன் இல்லாமலேயே ஒரு படைப்பு எடுத்துக்கொள்ளப்பட்ட கருவின் அடிப்படையில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறதா? (சயாம் மரண இரயில், விடியல்)

இதுபோன்ற அடிப்படையில் உருவாகும் படைப்புகளை விமர்சனம் செய்வதும் இலக்கியத்துறையில் தீவிரமாக இயங்கும் ஒரு படைப்பாளியின் கடமைதான். காரணம், இந்தப் படைப்புகள் கல்விச் சூழலாலும் இயக்கங்களாலும் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு இலக்கிய வரலாற்றில் ஒரு தனியிடத்தைப் பெறுகின்றன. அந்த வரலாறு எவ்வித ஆய்வும் இன்றி தொடர்ந்து ஒப்புவிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகின்றன. இலக்கியம் என்பது ஒரு கலை வெளிப்பாடு என்பது குறித்த பிரக்ஞையற்று, புனைவில் பேசப்படும் கரு, எழுதியவர், உத்தி, வரலாற்று முக்கியத்துவம் எனும் அளவிலேயே அவை உள்வாங்கப்படுவதால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ‘மலேசியாவின் சிறந்த புனைவிலக்கியங்கள்’ என நாம் சேர்த்து வைத்துள்ள குப்பைகள் ஏராளம்.

மேற்கண்ட அம்சங்களைக் கடந்து ஒரு படைப்பைப் பொருட்படுத்தி விமர்சிக்க மற்றுமொரு காரணம் உண்டு.  எழுத்தாளனுக்கு ஏற்கனவே இருக்கின்ற பிற துறை சார்ந்த செல்வாக்கால், பிரபலங்களின் அறிமுகங்களால், வெகுசன ஊடக பலத்தால் ஓர் அசட்டுத்தனமான புனைவு முயற்சிக்கு இயல்பான வாசக கவனம் ஏற்படுத்தப்படும்போது அந்தப் புனைவின் தகுதி குறித்து விவாதிக்க விமர்சனம் தேவையாகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ எனும் சிறுகதைத் தொகுப்பு.

பொன்.கோகிலம் முன்னாள் வானொலி அறிவிப்பாளர். மலேசியாவின் முக்கிய மரபுக் கவிஞரான ‘தீப்பொறி’ பொன்னுசாமி அவர்களின் மகள். தற்போது ‘அகிலம் நீ’ எனும் பெண்களுக்கான அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க செயற்குழுவில் இடம்பெற்றுள்ளார். இவை அனைத்தும் இயல்பாகவே பொன்.கோகிலம் வெளியிட்ட ஒரு நூலுக்கு கவனத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளன. எனவே, இலக்கியச் சூழலில் இந்தத் தொகுப்புக்கு என்ன இடம் உண்டு என்பதைக் கறாரான முறையில் அணுக வேண்டியுள்ளது.

எந்த விமர்சனத்தின் நோக்கமும் அப்படைப்பை புனைந்த எழுத்தாளனுக்கு ஆலோசனை கூறுவதல்ல. அவனைச் சாடுவதும் அல்ல. தீர்ப்பு வழங்குவதும் அல்ல.

பொதுவாகவே இலக்கியம் அல்லாத ஒன்று அந்த அடையாளத்தைச் சூடிக்கொண்டு ஓர் இயக்க பலத்துடன் வெளியீடு காணும்போது இயல்பாகவே தனக்கான சந்தையை உருவாக்கிக்கொள்கிறது. அந்த கவனத்தைக்கொண்டு அடுத்தடுத்த முயற்சிகள் எழவே செய்யும். தொடர்ந்து ஜீவிக்க வெற்றுப் பாராட்டுகளும் மொண்ணையான மதிப்புரைகளும் போதுமானவை. எனவே விமர்சனங்கள் இலக்கிய அக்கறை இல்லாத ஒருவரை எவ்விதத்திலும் மாற்றாது. காரணம் மாற்றம் நிகழ கூடுதலான உழைப்பு தேவை. அந்த உழைப்பை வழங்காமல் எளிதாய் கிடைக்கும் இலக்கிய அந்தஸ்தை விட்டுவருவது சிரமம்தான். இத்தகைய சூழலில், விமர்சனம் வாசகர்கள் மத்தியில் அப்புனைவு குறித்த மற்றுமொரு அபிப்பிராயத்தை முன்வைக்கவே எழுதப்படுகிறது. அது பூசிக்கொண்டிருக்கும் எல்லா அரிதாரங்களையும் கலைத்து அதன் இடம் என்ன என்று சொல்லும் ஒரு தரப்பு இலக்கியச் சூழலில் தேவையாக உள்ளது.

அகிலம் நீ

‘அகிலம் நீ’ நூலில் எந்த இடத்திலும் அது சிறுகதைத் தொகுப்பு என அறிவிக்கப்படவிட்டாலும் பொன்.கோகிலத்தின் நேர்காணல்கள், நிகழ்ச்சி குறித்த  அறிவிப்புகள் போன்றவற்றில் சிறுகதை தொகுப்பென குறிப்பிடப்படுவதால் இந்நூலை ஒரு சிறுகதைத் தொகுப்பாகவே கருதி வாசிக்க வேண்டியிருந்தது. வாசித்து முடித்தபோது வேறெந்த கலைத்துறையிலாவது இத்தனை அபத்தம் நடக்குமா என்றே முதலில் தோன்றியது.

ஒரு நேர்க்கோட்டை வரைய திறனற்ற ஒருவர் ஓவியக் கண்காட்சி என தன் கிறுக்கல்களை வைத்தால் நாம் அதை அனுமதிப்போமா? குளியலறையில் தன் பாடல் நன்றாக ஒலிக்கிறது எனும் நம்பிக்கையில் பிரம்மாண்ட அரங்கில் இசைக்கச்சேரி செய்யும் தைரியம் யாருக்காவது வருமா? ஆனால் உலகில் எந்த மொழியில் உருவான இலக்கியங்களுக்கும் நிகரான படைப்பாளிகளைக்கொண்ட தமிழில், சிறுகதைக்கான எந்த அம்சமும் இல்லாமல் ஒரு தொகுப்பு வெளியீடு காணும்போது கொஞ்சம்கூட கூச்ச உணர்வற்று அதை அங்கீகரிப்பது அதன் குறைபாடுகளைச் சொல்லாமல் கள்ள மௌனம் கொள்வதும் எத்தனை இழிநிலை!

பொன்.கோகிலத்தின் இந்தத் தொகுப்பில் சிறுகதை என மொத்தம் பத்து தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. பத்துவிதமான பறவைகளின் பெயர்களை முன்வைத்து எழுதப்பட்டவை அக்கதைகள். ஒவ்வொரு பறவையின் தன்மையும் ஒரு குறியீடாக மாற்றப்பட்டு கதை சொல்லப்படுகிறது. காதலனால் ஏமாற்றப்படும் காதலி, கணவனின் அதீத அன்பால் கஷ்டப்படும் மனைவி, சொரியாசிஸால் திருமணம் செய்யாத பெண், கடைக்கார அண்ணனின் தவறான தொடுதலை அறியாத சிறுமி, தன் கணவனின் குற்றத்தை ஏற்கும் மனைவி என பெண்கள் படும் துன்பங்கள்தான் இக்கதைகளின் கரு.

சிக்கல் என்னவென்றால் இதுபோன்ற கருவைக் கண்டாலே இந்நாட்டு வாசகர்கள் கிரங்கி விடுவார்கள் என்பதுதான். சிறுகதை என்பது நல்லுபதேசம் செய்யும் வடிவம் என அவர்களாக முடிவெடுத்து வைத்துள்ளது ஒரு காரணம். அதை அழுத்தமாக வாதாடவும் செய்வர். ‘கத வழியா நாலு நல்ல கருத்துங்கள சொல்ல வேண்டியதுதானே’ எனக் கேட்பவர்களே இங்கு அதிகம். அதிலும் பெண்கள் நலன் பேசும் ‘அகிலம் நீ’ போன்ற நூலைப் பெண்ணியப் படைப்பாக முன்னிறுத்திப் பேசுவதும் வழக்கமாகிவிட்டது. ஒரு வணிக சினிமாவின் அத்தனை அபத்தங்களையும் சகித்துக்கொண்டு அது முன்வைக்கும் தேய்வழக்கு சமூக கருத்துகளுக்காக ‘நல்ல படம்’ என்று சான்றிதழ் கொடுக்கும் பாமர மனநிலையையே இலக்கியத்திலும் அளவீடாக்கிக்கொள்ளும் வாசகர்கள் இங்கு அதிகம். ஆனால், இவர்களிடம் பதேர் பாஞ்சாலி, சிட்டி ஆப் காட், செவன் சமுராய் போன்ற உலகின் தலை சிறந்த திரைப்படங்கள் என்ன நற்கருத்துகளைச் சொல்கின்றன என்று கேட்டால் கோபப்படுவார்கள். துண்டுதுண்டான காட்சிகளைச் சொல்வார்கள். ஒட்டுமொத்தமான படத்தின் ஆன்மாவை அவர்களால் அணுகவே முடியாது. அதற்குக்காரணம் பயிற்சி இன்மை, மலினமான சினிமாக்கள் வழியே ரசனையை உருவாக்கிக்கொண்ட மனநிலை, கல்லூரியில் கொடுக்கும் சுருக்கப்பட்ட வடிவ புனைவுகள் அன்றி வேறெதையும் வாசிக்காத சோம்பல்நிலை, ஜனரஞ்சக இலக்கியம் வழி மட்டுமே மொழியின் சாத்தியம் அறிந்த போதாமை எனச் சொல்லலாம்.

எந்தக் கலையும் கருத்தைச் சொல்ல உருவாவதில்லை. ஒரு சிறந்த கலைஞன் தான் பார்த்த சமூகத்தைப் புனைவுகளின் வழி மீள் உருவாக்கம் செய்பவனாக இருக்கிறானேயன்றி ஏற்கனவே சொல்லப்பட்ட அறநெறிகளை மீள் பரிந்துரை செய்து அதைச்சுற்றிக் கதையெழுத மாட்டான். அது கலைஞனின் பணியுமல்ல. இங்கு இலக்கியம் தேர்வுக்கானதாக மாறியதால் அவை கருத்துகளாகச் சுருக்கப்பட்டன. அவர்களே வாசகர்களாக நம்பப்பட்டு அவர்களை நோக்கியே இலக்கியம் புனையப்பட்டது. இறுதியில் எழுத்தாளன் தன் போதாமையை மறைக்க ‘இங்க உள்ளவங்களுக்கு தீவிர இலக்கியமெல்லாம் வெளங்காது’ என்ற அபத்தமான கூற்று கடந்த காலங்களில் மறுபடி மறுபடி முன்வைக்கப்பட்டது.

பள்ளிகளின் வழியாகவே கதைகளை வாசித்து, கல்லூரிகளில் கதைச் சுருக்கங்களை அறிந்து, கருத்துகளை மனனம் செய்து, ஐம்பது சொற்களுக்கு மிகாமல் புனைவின் சுருக்கத்தை எழுதிப் பழகி, கிளிப்பிள்ளைகளாக வளர்ந்துள்ள வாசகர்கள் மலிந்துள்ள சூழலில் ‘அகிலம் நீ’ போன்ற நூல்கள் சிறுகதை தொகுப்பாகக் குறிப்பிடப்படுவதெல்லாம் சாத்தியமான சூழல்தான். ஆனால் பல்வேறு தரப்புகளின் முயற்சியில் சிறுகதைகளின் கலைவடிவம் குறித்த அறிமுகம், விவாதங்களுக்கான முன்னெடுப்புகள் நடக்கும்போது வளர்ந்து வரும் தலைமுறையிடம் ‘இவை சிறுகதைகள் அல்ல, குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள்’ என மறுபடி மறுபடி சொல்லவேண்டியுள்ளது. இவை சிறுகதைகள் என்றால் ‘ஏமாற்ற நினைப்பவன் ஏமாறுவான்’ எனும் கருத்தைச் சொல்லும் காகமும் நரியும் கதை, ‘கிட்டாதாயின் வெட்டென மற’ எனும் கருத்தை வலியுறுத்தும் நரியும் திராட்சைப்பழமும் கதை போன்றவற்றையும் நாம் சிறுகதைகளாக அங்கீகரிக்கலாம் என எடுத்தியம்ப வேண்டியுள்ளது. அதன் மூலம் மட்டுமே தவறான சிறுகதை உதாரணங்களிடமிருந்து அவர்கள் புனைவு மனத்தைக் காப்பாற்ற முடியும்.

படைப்பும் விமர்சனமும்

பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலைப்போல ஏராளமான தொகுப்புகள் மலேசியத் தமிழிலக்கியச் சூழலில் வெளிவரவே செய்கின்றன. அவற்றைப் போற்றிப்புகழ நவீன இலக்கிய வாசிப்பு நுண்ணுணர்வற்ற கல்வியாளர்களும் உள்ளனர். மொழி தெரிவதாலேயே இவர்கள் தங்களுக்கு இலக்கியமும் தெரிவதாக நம்பிவிடுகின்றனர். இலக்கியம் என்பதை அறிவுத்துறைபோல அணுகும் அவர்கள், புனைவைக் கருத்துகளின் தொகுப்பாகப் புரிந்துகொள்கின்றனர். பிரேத பரிசோதனைபோல படைப்புகளைப் பிரித்தும் தொகுத்தும் அவற்றைப் பாராட்டுகின்றனர்.

நான் சிலம்பக்கலையைத் தீவிரமாகப் பழகிக்கொண்டிருந்த காலம் ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அடிக்கும் முறைகளைச் செய்துகாட்டி வெளியிலிருந்து வந்திருக்கும் பயிற்சியாளர்கள் அங்கீகரித்த பின்னரே அடுத்த அடுக்குக்குச் செல்ல முடியும். எங்கள் ஊரில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதிகம். அதனால் சிலம்பாட்ட சோதனை நடக்கும்போது ஏராளமான பெரியவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பர். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் கம்பு சண்டைகளைக் கண்டு ரசித்தவர்கள் என்னைக் ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ என்று வெகுவாகப் பாராட்டியதுண்டு. ஆனால் அந்தப் பாராட்டு நான் அடுத்த படிநிலைக்குச் செல்ல துளியும் உதவாது என்பதை அறிவேன். அவர்கள் கண்களுக்குத் தெரிவது கம்பின் சுழற்சியும் என் உடலசைவுமே தவிர அதிலுள்ள நுணுக்கமல்ல.

அதுபோலவே கர்நாடக சங்கீதம், பரதம் அறிந்த நண்பர்கள் சிலர் உள்ளனர். ஒருமுறை கல்யாணி ராகத்தின் ஆரோஹணம், அவரோஹனம் பாடப்படுவதைக் கேட்ட நண்பர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். ஏனென்று கேட்டபோது அந்த ராகத்தைக் கேட்கும்போது தனது தொண்டையில் அதிர்வு உண்டாகும் என்றும் சங்கீதம் பழகிய எல்லோருக்கும் அது உள்ளதுதான் என்றும் சொன்னார். எனக்குத் தொண்டையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நான் கேட்கும் சங்கீதத்தை வெளிப்படுத்தும் பாடகர் தனது தொண்டையில் அதிர்வை உண்டாக்குகிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அதுபோல எனக்கு நடனம் என்பதே சுத்தமாக வராது. சில நடன பாவனைகளை அதில் பயிற்சியுள்ள நண்பர்கள் வியக்கும்போது ‘இதெல்லாம் கஷ்டமா?’ என அப்பாவியாகக் கேட்பேன். அந்த பாவனை ஏன் கஷ்டமென்றும் அந்த ஒரு பாவனையைச் செய்ய அவர்கள் வேறு என்னவெல்லாம் பயிற்சியைக் கடந்து வந்திருக்கக் கூடுமென்றும் விளக்குவர்.

ஒரு கலைத்துறையில் தேர்ந்தவரால் மட்டுமே அக்கலையை நுண்மையாக அணுகி, அதன் பின்னால் உள்ள பல அடுக்குகளைக் கவனிக்க முடிகிறது. கலை வெளிப்பாட்டின் அத்தனை பரிணாமத்தையும்  உள்வாங்கக் கூடியவனே அதன் தரம் குறித்து விவாதிப்பவனாகவும் இருக்கிறான். எளிய ரசிகனின் கண்களுக்குப் புலப்படாத பல மர்ம அடுக்குகள் அவன் கண்களுக்குத் தெரிகின்றன. இலக்கியம் எனும் கலையில் மட்டும் இத்தகைய நுண்ணுர்வும் திறன் கவனத்தில் கொள்ளப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இலக்கியம் என்பது மொழி சார்ந்ததாக இருப்பதால் பெரும்பாலும் கல்வியாளர்களும் மொழியியளார்களும் இலக்கியம் குறித்த கருத்தாக்கங்களை முன்வைப்பவர்களாக இருக்கிறார்கள்.  இலக்கியத்தை வெறுமனே மொழியியல் அடிப்படையில் அவர்கள் நோக்குவதால், கல்விப் புலத்தின் இலக்கியத் திறனாய்வுகளும் விமர்சனங்களும் கல்வியியல் அடிப்படையில் பட்டியலிடுவதாகவும் பாடுபொருள், உட்கருத்து, மெய்க்கருத்து என பிரித்து  புள்ளிகள் தருவதாகவும் உள்ளன. இலக்கியப் பாடங்களை இவர்களே படிப்பிக்கிறார்கள்.  அந்த ஒரு தகுதியைக்கொண்டே பெரும்பாலான பொது இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்றுவிடுகிறார்கள். இசை, நடனம் போன்ற கலைத்துறைகளில் இருப்பதைப்போல் அத்துறையிலேயே ஊறித் திளைத்த அனுபவசாலிகள், தமிழில் இலக்கிய ஆசான்களாக இருப்பது மிக மிக அரிது.

மேலும், நாளிதழ்களிலும் அமைப்புகளிலும் இலக்கியத்தின் செல்நெறிகள் குறித்த எவ்வித புரிதலும் இல்லாதவர்களே நிறைந்துள்ளனர். இலக்கியம் குறித்த மிகச்சரியான விமர்சனப் பார்வையை ஒரு படைப்பாளியால்தான் வைக்கமுடியும் என்பதில்லை. ஆனால் அதற்கு நிச்சயமாக மிக ஆழ்ந்த தொடர் வாசிப்பு அவசியம். நல்ல வாசிப்பு உள்ள ஒரு வாசகனால் ஒரு படைப்பின் ஆன்மாவை அடைந்து அதுகுறித்த தன் பார்வையை விமர்சனமாக வைக்க முடியும். ஆனால் இன்று விமர்சன மேடைகளை அலங்கரிக்கும் பலரின் வாசிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

‘ஐயா ஆகக்கடைசியாக நீங்க வாசித்த புனைவு நூல் எது?’ எனக்கேட்டால் அவர்கள் மாணவர்களாக இருந்தபோது வாசித்த நூலின் பெயரைக் குறிப்பிடுவர்.  அல்லது பு.பி, தி.ஜா என்று பொதுப்படையாக சில ஆளுமைகளின் பெயர்களை சொல்லிச் செல்பவர்களும் உண்டு. பலவீனமான எழுத்தாளர்களுக்கு இவர்களின் அருகாமையே சிறந்தது. பல வருடங்களுக்குப் பிறகு வெறும் சோற்றைப் பார்த்த ஒருவன் பசியுடன் அதை அள்ளித்தின்பதுபோல பல வருடங்களாக நல்ல புனைவை வாசிக்காத அவர்களுக்குக் கொடுக்கும் நூலெல்லாம் சிறந்ததாகவே இருக்கும்.

நான் கல்லூரியில் படிக்கும்போது சிலப்பதிகாரம் காட்டும் அறமென ‘அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம், உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும், ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்’ என்ற மூன்று கருத்துகளை மட்டுமே மனனம் செய்ய வைத்தனர். இந்த மூன்றும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் அறம் என அறியும் ஒருவனால் சிலப்பதிகாரத்தின் கலை நுட்பத்தை அறிய முடியுமா?

அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் எனும் கருத்து மொழிவழி கலையாக எப்படி உருவாகியுள்ளது என போதிக்கத்தான் இங்கு ஆள் இல்லை.

வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது

பாண்டியன் நீதி தவறாத மன்னன். அவன் செயலால் செங்கோலை வளைத்த வினையை இளங்கோவடிகள் ‘வல்வினை’ என்கிறார். ஆனால் அப்படி செங்கோலை வளைக்க விருந்த அத்தனை வலிமையான வினையை எதிர்கொண்டு தன் உயிரைத் தந்து செங்கோலை வளையாமல் நிமிர்த்துகிறான் பாண்டியன். சிலப்பதிகாரத்தில் இவ்விடத்தை உணரும் ஒருவன் அடையும் நிலையென்ன? வினை செயல்பட்ட வேகத்தைவிட மன்னனின் அறம் செயல்பட்ட வேகம் வாசகனுக்குக் கொடுப்பதென்ன? ஆம்! அதுதான் இலக்கியத்தின் இடம். அது அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் எனும் கருத்தைச் சொல்லவில்லை. நம்முன் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒவ்வொரு சொல்லையும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

சிலப்பதிகாரம் மட்டுமல்ல; நமது கல்வியும் இலக்கியத்தை அதன் நுண்மையான வடிவத்தில் அணுகிப் போதிக்காமல் கருத்துகளாகச் சுருக்கியே கொடுக்கின்றன. முறையான இலக்கிய வாசிப்புப் பயிற்சி இல்லாதவர்கள் மூச்சுத்திணறத் திணற மனனம் செய்த குறளையும் செய்யுளையும் ஒப்புவித்துத் தங்களின் இலக்கிய அறிவைப் பறைசாற்ற முயல்கின்றனர். தவறியும் இவர்கள் நவீன இலக்கியத்தின் பக்கம் வருவதில்லை. அவற்றை வாசித்து, புரிந்து, பொருளுணர, கடும் உழைப்புத் தேவையென அவர்கள் அறிவர். மரபிலக்கியங்களுக்கு ஏற்கனவே பொருள் எழுதப்பட்டுள்ளதால் அதை அப்படியே ஒப்புவிக்க எந்தச் சிரமமும் இல்லை. நவீன இலக்கியம் அவர்களுக்குச் சவாலாக உள்ளது. மரபிலக்கியம் போலவே அதை உள் சென்று அறிவதும் ஒரு பயிற்சியின் விளைவே என அறியாமல் அவற்றை விலக்கி வைக்கின்றனர். அல்லது தங்கள் முன்னறிவுக்கு ஏற்ப சுலபமாக மடித்துக்கொள்கின்றனர். பின்னர், மழுங்கிய மொழியில் கலைத்திறனற்ற ஒரு படைப்பு கையில் கிடைக்கும்போது அதை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடுகின்றனர். உண்மையில் அந்த உற்சாகம் தங்களுக்கும் இலக்கியம் புரிகிறது எனும் தாழ்வுணர்ச்சி அகலும் வெளிப்பாடுதான்.

மொழி புரிவதால் ஒருவருக்கு இலக்கியம் புரிகிறது என்று கொள்ளக்கூடாது. இலக்கியத்தில் உள்ள மொழிப் பயன்பாடு தனித்துவம் கொண்டது. இலக்கியம் மொழியைக் கருவியாகக் கொண்டே தன்னை நிகழ்த்திக்காட்டுகிறது. வண்ணம் ஓவியங்களில் நிகழ்வதுபோல, சத்தம் இசையில் நிகழ்வதுபோல, அசைவுகள் நடனத்தில் நிகழ்வதுபோல இலக்கியம் மொழியில் நிகழ்கிறது. இந்த அடிப்படையை அறியாதவர்கள் மட்டுமே ‘அத நேரடியா சொல்ல வேண்டியதுதானே’ என்றும் ‘எல்லாருக்கும் புரியுற மாதிரி சொல்லித்தொலைய வேண்டியதுதானே’ என்றும் கூறுவர்.

எல்லோருக்குமான இலக்கியம்

‘அகிலம் நீ’ தொகுப்பின் சாயல் கொண்ட கதைகள் எல்லோருக்கும் புரியும் விதமாக எளிமையாகச் சொல்லப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துகள் இன்னொரு வேடிக்கை.

‘எல்லோருக்கும் புரியற மாதிரி கதைகள்’ எனும் வாசகம் இலக்கியச்சூழலில் பிரபலம். எல்லோருக்கும் புரிந்த இலக்கியம் என எந்தக் காலத்தில் உருவாகியுள்ளது எனக்கேட்டால் பதில் வராது. சங்க கால இலக்கியமா? அறநெறி இலக்கியமா? பக்தி இலக்கியமா? எனக் கேட்கும்போது திருக்குறளின் பொருளைச் சொல்லும் கோமாளிகளைச் சந்தித்ததுண்டு. அல்லது பட்டிமன்றங்களுக்காக மனனம் செய்த செய்யுள்களை ஒப்புவிப்பவர்களைப் பரிதாபமாகக் கடக்கலாம்.

கொரோனா வந்தபோது ஆறு மாதங்களுக்கு கார் கடனைச் செலுத்த வேண்டாம் என ஓர் அறிக்கை வந்தது. அந்த அறிக்கை புரியாத பலரையும் நாம் சந்தித்திருப்போம். நன்கு கற்றவர்கள் தங்களுக்குப் புரியவில்லை என முகநூலில் புலம்பிக்கொண்டிருந்தனர். அறிக்கை என்பதே எல்லோருக்கும் புரியவேண்டும் எனத் தயாரிக்கப்படும் எளிய வடிவம். ஆனால் அதுகூட சிலருக்குப் புரியாமல் உள்ளது. இப்படியே நாளிதழ் செய்திகளை வாசித்து அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களும் ஜோசியக் குறிப்பை வாசித்துப் புரியாமைக்கு ஆட்படுபவர்களையும் சகஜமாக நம் வாழ்வில் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். இவை எல்லோருக்கும் புரிய வேண்டும் எனும் நோக்கத்தில் வெகுசன ஊடக மொழியில் உருவாகும் பனுவல்கள். அப்படியிருக்க இலக்கியம் எனும் தனித்த கலை வடிவம் மட்டும் எல்லோருக்கும் புரிய வேண்டும் எனும் கூப்பாடு ‘எனக்குப் புரியவில்லை’ எனும் பலவீனமான புலம்பலின் வேறொரு பிரதிபலிப்புதான்.

சமூகம் என்பது பன்மைத்தன்மையானது. அதற்கேற்ப பண்பாடுகளும் அறங்களும் வேறுபடுகின்றன. எனவே எல்லோரும் ஏற்கும், எல்லோருக்கும் புரியும் இலக்கியமென்பது எப்போதும் சாத்தியமாகாது.  ‘அகிலம் நீ’ தொகுப்பு தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கெல்லாம் புரியுமென்றால் அதில் கதையென ஒன்றுமே இல்லையென்பதே அடிப்படைக் காரணம். எளிய சிக்கல், அதைத் தாங்க எளிய சூழல், அதன் வழி ஒரு கருத்து இதுவே அக்கதைகளின் அடிப்படை.

கதைகளின் கட்டுமானம்

மலேசிய நாவல்கள் குறித்து விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருக்கும்போது பேராசிரியர் ஒருவர் கேட்டார். ‘இந்த நாவல்கள் அதனதன் வகைமையில் அடங்கவில்லை எனச் சொல்ல நீங்கள் எந்த ஆய்வுகளை வாசித்தீர்கள்? எந்த முந்தைய ஆய்வு முடிவின் அடிப்படையில் இதையெல்லாம் சொல்கிறீர்கள்?’

உண்மையில் நான் எந்த ஆய்வுகளையும் வாசிக்கவில்லை. விமர்சனம் செய்யும் பொருட்டு இனி வாசிக்கப்போவதுமில்லை. ரசனை விமர்சனத்துக்கு அது தேவையுமில்லை. உலகில் தலைசிறந்த நாவல்களாகச் சொல்லப்பட்டவைகளை வாசிப்பதும், அவை ஏன் சிறந்தவை என அறிய அவற்றைக் குறித்து எழுதுவதும், அவ்வெழுத்தின் வழி அதன் அடியாழம் செல்வதும், அவற்றின் நுண்மைகளைக் கண்டடைவதும் ரசனை விமர்சகனாக இருக்க அடிப்படை பயிற்சி. அவ்வழியைத் தமிழில் உருவாக்கித்தந்த கா.ந.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் வரையிலான பட்டியலை நான் அவரிடம் சொன்னபோது அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது என்றார்.

கல்வியாளர்களின் திறனாய்வு முறை ஒரு வாகனத்தின் அனைத்து உபரிப் பாகங்களும் உள்ளதா என தன் கையேட்டில் உள்ளதுபோல ஒப்பிட்டு பார்ப்பதைப் போன்றது. அது தொழில்நுட்ப வல்லுனரின் பணி. நான்கு சக்கரங்கள், இருக்கைகள், ஸ்டேரிங், எஞ்சின் எல்லாம் உண்டென்றால் அது காரேதான் என எளிதாக முடிவுக்கு வந்துவிடலாம். காரணம் அதன் அளவுகோள்கள் இலக்கணங்களாக வகுக்கப்பட்டவை. ரசனை விமர்சகனின் பணி அதுவல்ல; உலகின் சிறந்த கார்களை ஓட்டிப் பார்த்துவிட்டு தான் இயக்கிக்கொண்டிருப்பதின் தரம் என்ன என்றும் அதன் இலகுத்தன்மையையும் இயங்குத்தன்மையையும் அரூபமாக இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் சொற்களாக வகுக்க முயல்வான். இந்த ரசனை அடிப்படையிலான பரிந்துரையில் மாற்றுக் கருத்துகளுக்கு எப்போதும் இடமுண்டு. அக்கருத்தை வைப்பவனின் அதற்கு முந்தைய அனுபவமும் வெளிபாடும் என்ன என்பது முக்கியமானது. ஆனால் நான்கு சங்கரங்களைப் பொருத்தியிருப்பதால் மாட்டு வண்டியை ‘மஸ்டா’ கார் என ஒரு ரசனை விமர்சகன் ஒருபோதும் சொல்ல மாட்டான்.

விமர்சனத்தை முன்வைத்தபிறகு மலேசிய சூழலில் மட்டுமே நடக்கும் கோமாளித்தனம் ஒன்றுண்டு. படைப்புகளை எழுதியவர்கள், ‘நீங்களெல்லாம் வேறு முகாம், எங்கள் பாணி வேறு வகையானவை, எனவே அதை வேறு முறையில் அளவிட வேண்டும்’ என்று ஒரு காரணம் சொல்லி மழுப்பலாகச் சிரிப்பர். அவர்கள் சொல்லிக்கொள்ளும் அந்த ‘வேறு பாணி’ படைப்புகளின் முன்னோடிப் புனைவுகள் தமிழில் ஏதேனும் உண்டா? தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அதன் இடம் என்ன? இன்று அவ்வாறான படைப்புகள் குறித்து எவ்வகையான மதிப்பீடு உண்டு? எனும் கேள்விகளை தங்களுக்குள்ளாகவேணும் கேட்டுக்கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். தங்கள் எழுத்துக் குவியல்கள் விமர்சிக்கப்படாமல் இருக்க, அரண் அமைக்கும் இவர்களால் இளம் வாசகர்களின் வளர்ச்சியும் விமர்சன மனமும் தட்டையாகவே நிலைக்கின்றன. இந்தப் போலி கும்பலில் இருந்தும் அழுத்தங்களிலிருந்தும் ஓர் இளம் படைப்பாளி மேலெழுந்து வருவது சாமானியமானதாக இல்லை.

‘அகிலம் நீ’ தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்ததும், ஒரு சிறுகதைக்குரிய அடிப்படைகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாத, அது பற்றி அறிந்துகொள்ளும் மெனக்கெடலும் இல்லாத ஒருவரால் எழுதப்பட்ட கதைகள் என்று தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

‘கொத்தித்திரியுமந்த கோழி’ என்றொரு கதை. ஒரு பெண்ணுக்குக் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வருகிறது. அவள் பினாங்கில் விபத்து ஏற்படுத்தியதாகச் சொல்லி மிரட்டுகிறார்கள். இவள் பயந்து அழும்போது அவள் கணவன் வருகிறான். தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மீண்டும் காவல் நிலையத்தை அழைத்தால் அது ஒரு பணம் பறிக்கும் கும்பலின் அழைப்பு எனத் தெரிய வருகிறது. இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

இதைவிட சுவாரசியமாக நாளிதழ் செய்திகளில்கூட தகவல் கிடைக்கும். ஒரு பணமோசடியை முறியடித்த செய்தியைக் கூடுதல் சுவரஸ்ய தகவல்களுடன் அண்மையில்தான் புலனங்களிலும் பலரும் பரப்பிக்கொண்டிருந்தனர். பண மோசடி கும்பல் ஃபோனில் அழைத்து ஏமாந்தது என்பதெல்லாம் ஒரு கதையென சொல்ல எவ்வளவு தைரியம் வேண்டும். பொன்.கோகிலம் இந்த நூலில் சொல்லியுள்ள அனைத்துமே சம்பவங்கள்தான். சம்பவங்கள் என்றால் ஒருவள் இருந்தாள், அவள் இப்படியானாள் எனும் ஒற்றை வரி சம்பவம். பண நெருக்கடியில் உள்ள ஒரு பெண் ‘கம்பேனியன்’ எனும் தொழில் செய்கிறாள். பணக்காரர்களுடன் சந்திப்புகளில் உடன் இருக்க வேண்டும். அதன் வழி அவள் தன் கல்விச் செலவை ஈடுகட்டுகிறாள். ‘சொர்க்கப் பறவை’ எனும் இக்கதை அதிகபட்சம் நானூறு சொற்களைக் கொண்டது.

பொன்.கோகிலம் இந்தத் தொகுப்புக்காக அவசர அவசரமாகக் கதைகளை எழுதியிருக்க வேண்டும். பறவைகளின் பெயர்களைத் தலைப்பாக வைப்பதைப் புதுமையென நம்பி அவர் எழுதியுள்ள குட்டிக்கதைகளுக்குப் பொருந்தாத தலைப்புகளை வைத்துள்ளார். கதையின் தொடக்கத்திலேயே ‘இந்தப் பறவை எப்படிப்பட்டது’ என விளக்கம் கொடுத்துத் தொடங்குகிறார். அந்தத் தகவல்கள் சில சுவாரசியமாக உள்ளன. அதுபோல உள்பக்க வடிவமைப்பும் தாளின் தரமும் சிறப்பு. கதையைத் தவிர பிற அனைத்திலும் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார்.

எவ்வளவு முயன்றாலும் எந்த விமர்சகராலும் பொன்.கோகிலத்தின் படைப்புகள் நுழைந்து மேலும் அதிகமான கண்டடைவுகளைச் சொல்வது சாத்தியமே அல்ல. அவை சிகரெட்டில் இருந்து உதிர்ந்த சாம்பல் மட்டுமே. எவ்வளவு ஊதினாலும் அதில் தீப்பொறி கிளம்புவதில்லை. காற்றில் பறந்து கரைந்து காணாமல் போகக்கூடிய அபத்த முயற்சி அகிலம் நீ.

பொன்.கோகிலம் ‘அகிலம் நீ’ எனும் பெண்கள் அமைப்பின் மூலம் சமூகத்துக்குச் சேவையாற்றி வருகிறார். அது பாராட்டத்தக்கது. இன்றைய யுவதிகளின் வாழ்வு குறித்து அறிய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. இன்றைய பெற்றோர்கள் சொல்லத் தயங்கும் விடயங்கள் அவை. அந்தச் சிறுமிகளின் கலையறிவு வளர்ச்சியின் நன்மை கருதி ‘அகிலம் நீ’ தொகுப்பை வாங்குபவர்களிடம் இவை சிறுகதைகள் அல்ல; அறநெறி போதிக்கும் குட்டிக்கதைகள் எனத் தெளிவுபடுத்தினால் இலக்கிய உலகமும் அவருக்கு நன்றிக்கடனுடன் இருக்கும்.

(Visited 232 times, 1 visits today)