இதழும் இயக்கமும் எழுத்தாளனும்

ஜூன் 18இல் எழுதிய கட்டுரை குறித்து சில நண்பர்களிடம் இருந்து கேள்விகள் வந்தன. “அதெப்பாடி… இதழ்களும் இயக்கங்களும் ஒருவரை எழுத வைத்து கஷ்டப்பட்டு எழுத்தாளராக உருவாக்குகின்றன. ஆனால் தன்னை யார் உருவாக்கினார் என எழுத்தாளர்தான் முடிவு செய்வாரா? அப்படியானால் அந்த எழுத்தாளர் தனது அரசியல் நிலைபாட்டிற்கு ஏற்ப எதையும் மாற்றிச் சொல்லக்கூடும் அல்லவா? ஒருவேளை ஓர் எழுத்தாளர் வாயையே திறக்கவில்லை என்றால், ஆய்வாளர்கள் அவர் எழுதிய படைப்புகளைக் கொண்டே அதை முடிவு செய்யலாம் அல்லவா?”

கிட்டத்தட்ட இப்படியான கேள்விகள்தான். நான் என் மொழியில் அவற்றைத் தொகுத்துக்கொடுத்திருக்கிறேன். உண்மையில் எனக்கு இந்தக் கேள்விகள் ஆச்சரியமாக இருந்தது. ஒட்டுமொத்த கட்டுரையில் குறிப்பிட்ட அந்த வரி மட்டும் சிலரை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. அந்தக் கட்டுரையின் சாரத்திற்கும் அவ்வரிக்கும் நேரடியாகத் தொடர்பும் இல்லை.

இதை ஒட்டி சில விளக்கங்கள் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

இதழ், இயக்கம், பத்திரிகைகள் போன்றவை ஒருவர் எழுதுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கின்றன. ஆனால், அதனால் எல்லாம் ஒருவர் எழுத்தாளராக உருவாகிவிடுவதில்லை.

இப்படி வைத்துக்கொள்ளலாம், கல்லூரி காலங்களில் பல்கலைக்கழக அளவில் நடக்கும் போட்டிகளில் நாம் பங்கெடுத்திருப்போம். உதாரணமாகப் பேரவைக் கதைகளையே எடுத்துக்கொள்ளலாம். பேரவைக் கதைகள் போட்டியில் ஒருவர் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றால் பேரவை கதையினால் எழுத்தாளராக உருவானதாகிவிடுமா? அப்படிச் சொல்ல மாட்டோம் அல்லவா? ஏன்?

என் அனுபவத்தை சொல்லியே இதை விளக்க வேண்டியுள்ளது. நான் எழுதத் தொடங்கியது சூரியன், நயனம், வானம்பாடி போன்ற வெகுமக்கள் இதழில்தான். மக்கள் ஓசை, ஞாயிறு நண்பன் போன்றவற்றிலும் எனது படைப்புகள் வந்துள்ளன. மன்னனின் என் படைப்புகள் வராத மாதம் என ஒன்றில்லை. அதில் கார்ட்டூன் வரைந்துள்ளேன், பேய்க்கதைகளுக்கு ஓவியம் வரைந்துள்ளேன், நகைச்சுவை கதைகள் எழுதியுள்ளேன், நேர்காணல்கள் எடுத்துள்ளேன். அதுபோல எழுதத் தொடங்கிய காலத்திலேயே எம்.ஏ.இளஞ்செல்வன், கோ.புண்ணியவான் போன்ற எழுத்தாளர்களுடன் இலக்கியம் குறித்து உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். ஆனால் நான் என்னை எழுத்தாளனாக வடிவமைத்துக்கொள்ள உதவியது டாக்டர் மா. சண்முகசிவாதான்.

சண்முகசிவாவிடம் நான் எனக்கிருந்த கேள்விகளுக்குப் பதில்களைத் தேடிச் சென்றேன். கேள்விகளின் அடிப்படை சாரம் என்ன தெரியுமா? ஒருவன் வணிக எழுத்தாளனாக இருப்பதில் என்ன தவறு என்பதுதான். சண்முகசிவா என் கேள்விகள் அனைத்திற்கும் பதிலைச் சொன்னார். என்னைச் சிந்திக்கச் செய்தார். எம்.ஏ.நுஃமான், சுந்தர ராமசாமி போன்றவர்களை வாசிக்கக் கொடுத்தார். வாசித்ததை ஒட்டி அவருடன் விவாதிக்க சுதந்திரம் கொடுத்தார். நான் என்னை உருவாக்கிக்கொண்டது சண்முக சிவாவிடம் விவாதித்துதான். எனவே அவருக்கு முன் நான் சந்தித்தவர்கள் எனது இலக்கிய நண்பர்கள்தான். சண்முகசிவாவுக்கு மட்டுமே ஆசிரியர் எனும் இடத்தைக் கொடுப்பேன்.

நான் மிகவும் அந்தரங்கமாகவே அதை அறிந்தேன். அவர் எனக்குள் என்ன மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார் என்பது எனக்குத் தாமதமாகவே புரிந்தது. அதுபோல அதற்கு முன் நான் எழுதிய இதழ்கள் என் படைப்பு பிரசுரிமாக இடம் கொடுத்தன. ‘காதல்’ இதழில்தான் என் படைப்புகளை ஒட்டிய விவாதம் நண்பர்கள் சூழலில் உருவானது. அப்போது நான் கடுமையான விமர்சனங்களை எதிர்க்கொண்டேன். இலக்கியம் என்ற ஒன்றை தேடிப்பயின்றது காதல் இதழ் காலத்தில்தான். அதன் வழியாகவே நான் என்னை எழுத்தாளனாக அடையாளம் கண்டேன்.

இன்றைய சூழலில் இலக்கிய இயக்கத்தையோ இலக்கிய இதழையும் நடத்துவது மிக எளிது. ஆனால் அந்தப் படைப்பாளிகளுடன் உரையாடி அவர்களை வளர்தெடுக்க மெனக்கெடல்கள் அவசியம். அதற்கு முன்னர் அதை முன்னெடுப்பவருக்கு இலக்கியம் குறித்த புரிதல் இருக்க வேண்டும். இவ்வாறான இடைவிடாத உரையாடல் வழியாக உருவாகும் எழுத்தியக்கமே ஓர் இலக்கியச் சூழலில் மாற்றத்தை உருவாக்கும். எனவேதான் ஒருவர் பல்வேறு தளங்களில் எழுதியிருந்தாலும் தீவிரமும் விவாதங்களும் குவிமையமாக இருக்கும் இடத்திலிருந்து தாங்கள் எழுத்தாளனென உருவானதாக அறிகிறார்கள்; அறிவிக்கிறார்கள். மாறாக, பரிசுகளும் பாராட்டுகளும் விருதுகளும் குவிந்துள்ள தளத்தில் இருந்து யாரேனும் தன்னைத் தீவிரமான படைப்பாளியென அறிந்துகொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

எழுத்தாளர் சங்கம், நான் உள்ளிட்ட சிலர் எழுத்தாளர் சங்கம் வழியாக உருவானதாக அவ்வப்போது சொல்லிக்கொள்வதுண்டு. எந்த இதழும் இயக்கமும் அவ்வாறு அறிவிப்பது அடிப்படை இல்லாதது. பொதுவாகவே இளைஞர்களுக்குத் தங்களை வெளிபடுத்திக்கொள்வதில் தீராத ஆர்வம் இருக்கும். தங்கள் குரலை, இலக்கியம் குறித்த தங்கள் பார்வையைப் பகிர களம் தேவையாக இருக்கும். அப்போது கிடைக்கும் வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். அது அவ்வயதின் ஆர்வத்தின் வெளிபாடு. அது அவர்கள் நீண்ட பயணத்தில் ஒரு நிலையம் மட்டுமே.

வல்லினத்தையும் நான் அவ்வாறே கருதுவேன். அதில் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகியிருந்தாலும் வல்லினம் வழியாகத்தான் அவர்கள் தங்களை எழுத்தாளர்களாக அறிந்தார்களா என்பதை அவர்களே சொல்ல வேண்டும். அப்படி ஒருவர் சொல்லாமல் போவதிலும் பிழை ஒன்றும் இல்லை. ஆனால் இயக்கமும் இதழும் தானாக முன்வந்து அப்படி அறிவித்துக்கொள்வது அபத்தமானது.

(Visited 179 times, 4 visits today)