பொன் கோகிலம், தமிழ் விக்கி, சில தெளிவுகள்

இன்று எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் பொன் கோகிலம் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு வரி இவ்வாறு அமைந்துள்ளது.

‘மூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மறைவிற்குப் பின்னர், மலேசிய எழுத்துச்சூழலில் புதிய அல்லது அறிமுக எழுத்தாளர்கள் உருவாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.’

இக்கருத்தை பொன் கோகிலம் அவர்கள் தன் முகநூலிலோ டிக்டாக்கிலோ பதிவு செய்து போட்டிருந்தால் நான் பதில் கொடுத்திருக்க மாட்டேன். தமிழில் அதிக வாசகர்களைக்கொண்ட ஜெயமோகன் தளத்தில் இக்கருத்து இடம்பெறும்போது அதன் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

பொன் கோகிலம் அவர்களின் கருத்துப்படி 20 ஆண்டுகள் என ஒரு கணக்கு எடுத்துக்கொண்டால் அவர் குறிப்பிடுவது 2004 முதல் என வைத்துக்கொள்ளலாம். அப்படியானால் 2004 முதல் புதிய எழுத்தாளர்கள் யாரும் மலேசியாவில் உருவாகவில்லை எனச் சொல்கிறார் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இன்று நான் சிறிய தொப்பையுடன் கொஞ்சம் ‘அங்கிள்’போல காட்சியளித்தாலும் 2006ஆம் ஆண்டில் இளைஞனாகத்தான் ‘காதல்’ எனும் இதழில் ஈடுபடத் தொடங்கினேன். என் தீவிர எழுத்து முயற்சியின் தொடக்கமாகவும் அதையே சொல்வேன். அந்தக் காலகட்டத்தில் சு.யுவராஜன், கே.பாலமுருகன், பா.அ.சிவம், வீ.அ.மணிமொழி, பூங்குழலி வீரன், அகிலன், மஹாத்மன் என ஓர் எழுத்தாளர் பட்டாளமே உருவானது.

தொடர்ந்து 2007இல் வல்லினம் அச்சு இதழ் வந்தது. அதிலும் யோகி, சந்துரு, சல்மா, கி.இ.உதயகுமார் என சிலர் எழுதத் தொடங்கினர். 2009இல் வல்லினம் இணைய இதழ் உருவானபோது ராஜம் ரஞ்சனி, நோவா, அ.பாண்டியன், சிவா பெரியண்ணன், விஜயலட்சுமி, கங்காதுரை, தயாஜி, சரவண தீர்த்தா போன்றவர்கள் எழுத வந்தனர். இவர்களை இவ்விதழ்கள் உருவாக்கின எனக் கூறமாட்டேன். அது எழுத்தாளர்களின் அகம் சார்ந்தது. அவர்கள் சொல்லாதவரை எந்தப் பதிப்பகமோ, இயக்கமோ தானாக முன்வந்து அவ்வாறு சொல்லுதல் அநாகரிகமானது. ஆனால் பலரும் இணைந்து செயல்படும் தளமாக அவ்விதழ்கள் செயல்பட்டு வந்தன; வருகின்றன. இதில், சிலரது முதல் நூல்கள் வெளிவர வல்லினம் பதிப்பகம் காரணியாகவும் அமைந்தது.

இது தவிர 2001இல் வெளிவரத் தொடங்கிய ‘தென்றல்’ போன்ற வெகுமக்கள் இதழிலும் பல புதிய எழுத்தாளர்கள் 2004க்குப் பிறகு உதயமாகவே செய்தனர். சுங்கைப்பட்டாணி கனகராஜா அவர்களை உதாரணமாகச் சொல்லலாம். நான் முரண்பட்ட கருத்து கொண்டுள்ள மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திலும் புதிய எழுத்தாளர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் உருவாகியே உள்ளனர். விஜயராணி போன்றவர்கள் அதற்கு உதாரணம். இதுதவிர எந்த இயக்கமும் குழுவும் சாராமல் சுயமாக எழுதி தங்களை நிறுவிக்கொண்டவர்களும் உள்ளனர். முனிஸ்வரன் குமார், நித்தியா வீரராகு என ஒரு பட்டியல் உண்டு.

இவர்கள் தவிர கடந்த பத்து ஆண்டுகளில் உருவான எழுத்தாளர்களாக அரவின் குமார், அபிராமி கணேசன், பவித்திரா, கி.கோகிலவாணி, சாலினி, ஆதித்தன் மகாமுனி, ஹரிராஸ்குமார், பரிமித்தா என ஒரு வரிசை உண்டு. இன்னும் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களாக வரக்கூடிய பட்டியலையும் என்னால் தர முடியும். சர்வின் செல்வா அதில் முதன்மையானவர்.

இந்த எழுத்தாளர்களின் படைப்புத் தரத்தின் அடிப்படையில் இப்பட்டியலைச் சொல்லவில்லை. இருபது ஆண்டுகளில் பல்வேறு களங்களில் இருந்து பல எழுத்தாளர்கள் உருவாகி வந்துள்ளதையே குறிப்பிட விரும்புகிறேன்.

ஆக, பொன் கோகிலம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளதைப்போல இருபது ஆண்டுகளாக எழுத்தாளர்கள் உருவாகவே இல்லை என்பது முற்றிலும் தவறான தகவல். இருபது ஆண்டுகளாக மலேசியாவில் உருவான அத்தனை எழுத்தாளர்களின் இருப்பையும் தன் அறிதல் போதாமையால் அவமதிக்கிறார் என்றே புரிந்துகொள்ளலாம்.

உண்மை நிலை இப்படி இருக்கும்போது விமர்சனத்தால் புதிய எழுத்தாளர்கள் எழுத வருவதில்லை எனும் அவரது கருத்தும் பலவீனமாகி உதிர்கிறது. பொன் கோகிலம் அவர்கள் அப்படிச் சொல்ல முகாந்திரம் ஏதும் இல்லை. ஆனால் இக்கருத்தை சிலகாலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறார். அப்படிச் சொல்வதன் மூலம் அதை உண்மையாக்கப் பார்க்கிறார். விமர்சனத்துக்கு பயந்துதான் எழுத வரவில்லை என எழுத்தாளர்கள் சொல்வார்களானால் அந்தப் பட்டியலை அவரே வெளியிடலாம்.

உண்மையில் எந்த நல்ல எழுத்தாளனும் விமர்சனத்தைக் கண்டு பின்வாங்க மாட்டார்கள். யார் என்ன விமர்சனம் முன்வைத்தாலும் நல்ல எழுத்தாளன் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பான். சீ. முத்துசாமியின் ‘மலைக்காடு’ நாவல் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பிறகுதான் ‘ஆழம்’ நாவலை வெளியிட்டார். கோ. புண்ணியவானின் முந்தைய இரு நாவல்களும் விமர்சிக்கப்பட்ட பிறகு வந்ததுதான் ‘கையறு’. கோ. முனியாண்டியின் ‘இராமனின் நிறங்கள்’ விமர்சனத்திற்கு உள்ளான பின்னர் சிறுகதை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். கே. பாலமுருகனின் நீல நிறக்கண்கள் விமர்சிக்கப்பட்ட பின்னர் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. இன்னும் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

எழுத்தும் இலக்கியமும்தான் ஒருவரை ஆதாரமாக இயக்குகிறது என்றால் எந்த விமர்சனமும் யாரையும் முடக்குவதில்லை. பொன் கோகிலம் அவர்கள் தன் காணொலியில் காட்டியதுபோல புத்தகமே போட்டு பக்கம் பக்கமாக விமர்சித்தாலும் ஓர் அடிகூட தொடங்கிய பணியில் இருந்து எழுத்தாளன் பின் வாங்குவதில்லை.

பொன் கோகிலம் 2020இல் ஒரு சிறுகதை நூலை வெளியிட்டார். அதை ஒட்டி வந்த விமர்சனங்களால் மனமுடைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக தான் எதுவும் எழுதவில்லை என்பதைதான் ஒருவேளை அப்படிச் சொல்ல வருகிறாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒரு நூலை வெளியிட்டு சில காலம் எதையும் எழுதாமல் இருப்பது ஒரு பின்னடைவும் அல்ல. இன்று எழுதாதவர் நாளை எழுதலாம். எனவே அவர் மனதில் வைத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் எந்த எழுத்தாளரும் அவரவருக்கான ஊக்கம் வரும்போது எழுதவே செய்வார்கள்.

பொன் கோகிலம் நூல் குறித்து நான் 2020 இல் எழுதிய விமர்சனம்:

விமர்சனம் ஏன் தேவையாக உள்ளது: பொன் கோகிலத்தின் அகிலம் நீ நூலை முன்வைத்து

முதலில் ஜெயமோகன் தளத்தில் வந்த இந்தச் சர்ச்சை உருவான காரணத்தை ஆராய வேண்டியுள்ளது.

பொன் கோகிலம் அவர்கள் தான் பதிப்பித்த நூல்களில் பின்வருமாறு குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

‘காப்புரிமைச் சட்டத்தின்படி, இந்நூலின் குறுங்கதைகள், குறிப்புகள், என எந்தப் பகுதியையும் பதிப்பாளரின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, மறு வெளியீடு, மொழிபெயர்ப்பு, மின் அச்சு ஊடகங்களில் கையாளுதல் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டா.
விமர்சனங்களுக்கும் பதிப்பாளரின் முன் அனுமதியைப் பெறுவது அவசியமாகும் ’

எந்தக் கலைச் சூழலிலும் ஒரு படைப்பாளி தான் வெளியிட்ட படைப்பில் ‘படைப்பை விமர்சிக்கும் முன் பதிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும்’ என அச்சிட்டு வெளியிட்டதில்லை. பலகோடி செலவு செய்து வெளியிடும் சினிமா தயாரிப்பாளர்கூட இப்படியான அறிவிப்புகளைச் செய்வதில்லை. பொன் கோகிலம் அவர்கள் தான் வெளியிட்ட நூலுக்கு இப்படியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலில் இந்த வரி ‘காப்புரிமை சட்டத்தின்படி’ எனும் பத்தியில் ஒரு இடைவெளிவிட்டு வருகிறது. உண்மையில் காப்புரிமை சட்டம் அப்படி எதுவும் சொல்வதில்லை. எனவே, அதை எந்த விமர்சகனும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவ்வரியை வாசிக்கும் ஒருவருக்கு இது காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையிலானது எனும் குழப்பம் வரலாம். அத்தனை நாசுக்காக அவ்வரி கையாளப்பட்டுள்ளது.

இலக்கியச் சூழலுக்கு விரோதமான இவ்வரியைக் குறிப்பிட்டே தமிழ் விக்கியில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பொதுவாக பதிப்பகம் என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தில் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை. எழுத்தாளர்களுக்கு ராயல்டி வழங்கினீர்களா? கூட்டுறவு சங்கத்தில் நூல்களுக்காகப் பெற்ற சில ஆயிரங்களை எழுத்தாளர்களுக்குக் கொடுத்தீர்களா? எழுத்தாளர்கள் நூலை மறுபதிப்பு செய்யும் உரிமை அவர்களுக்கு இல்லாதபடி உரிமையை பதிப்பகமே வைத்துக்கொண்டதா? போன்றவையெல்லாம் மற்றவர்களுக்கு அவசியமற்ற கேள்விகள். பதிப்பகமும் எழுத்தாளரும் செய்துகொள்ளும் உடன்படிக்கையில் யாரும் தலையிட முடியாது.

ஆனால் பதிப்பாளரான பொன் கோகிலம் நூலில் அச்சிட்டிருந்தது நாட்டின் அடிப்படை சட்ட விதிக்கே எதிரானது. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ‘freedom of speech, assembly and association’ எனும் அடிப்படையில் தடை செய்யப்படாத எந்த நூல் குறித்தும் யாருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு, அதை அப்படியான குறிப்புகள் கொடுத்தெல்லாம் தடுக்க முடியாது.

பொதுவாக இங்குள்ள வாசகர்களிடம் சட்டம் குறித்த தெளிவு இல்லாததால் இதுபோன்ற மிரட்டல்களைக் கண்டு பயப்படுவது உண்டு. இந்நாட்டில் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு. அதன் சாரத்தை அறிந்துகொண்டாலே எந்தக் குழப்பமும் நிகழாது. எனவே பொன் கோகிலம் பதிப்பித்த புத்தகத்தில் உள்ள குறிப்பு நாட்டின் பேச்சுரிமை சட்ட விதிகளுக்கு எதிராக உள்ளதாலும் இப்படி ஓர் அதிசயம் தமிழ்ச் சூழலில் அதுவரை நிகழாததாலும் தமிழ் விக்கியில் அதுகுறித்து பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவே பொன் கோகிலம் அவர்கள் இக்கடிதம் எழுதக் காரணமாகவும் அமைந்தது.

தமிழ் விக்கியில் அவர் நீக்கச் சொன்ன மற்றுமொரு சர்ச்சை, குறுங்கதை பயிலரங்கு தொடர்பானது. அது குறித்து நான் முன்பே விரிவாகவே எழுதிவிட்டேன்.

பொன் கோகிலத்தின் குறுங்கதையும் தமிழ்ப்பள்ளிகளின் நிலையும்

நிச்சயம் பொன் கோகிலம் அவர்கள் தான் எழுதியுள்ள குறுங்கதைகளைப் பிரசுரிப்பார் என்றே எதிர்பார்க்கிறேன். பள்ளிகளில் குறிப்பிட்ட ஒரு கலைப்படைப்பு குறித்து பட்டறை நடத்துபவர், அதில் புலமையுடன் இருப்பார் எனும் நம்பிக்கையில் எளிய வாசகனாக வைத்துள்ள விண்ணப்பம் அது. அவ்வளவுதான்.

ஜெயமோகன் அவர்கள் மிகவும் மேன்மையாக இந்தச் சிக்கலை அணுகியுள்ளார். குறிப்பாக ‘உங்கள் செயல்பாடுகளிலுள்ள நம்பிக்கை, ஈடுபாடு மேல் மதிப்பு எனக்கு உண்டு.’ எனச் சொல்லி வாழ்த்தியுள்ளார். பொதுவாகவே ஜெயமோகன் செயலூக்கம் கொண்டவர்கள் மேல் அக்கறை காட்டுவார். எனவேதான் செயல்பாடுகளில் நம்பிக்கை உண்டு என வாழ்த்தாமல் தன் செயல்பாடுகளின் மேல் பொன் கோகிலம் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை வாழ்த்துகிறார்.

நாமும் வாழ்த்தலாம்.

(Visited 1,195 times, 1 visits today)