மலேசிய யோக முகாம் 2024 – கணேஷ் பாபு

லூனாஸ் மாரியம்மன் கோயில் முன்புறம்
லங்கேஷ் & ம.நவீன்

யோக ஆசிரியர் சௌந்தர்ஜி அவர்களுடன் இதற்கு முன் ஓரிரு முறை பேசியிருந்தாலும் அவரிடமிருந்து யோகம் கற்கும் வாய்ப்பு இப்போதுதான் வாய்த்தது. மலேசியாவில் யோக முகாம் என்று நவீன் அறிவித்ததும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொண்டேன். மே மாதம் 25,26, 27 ஆகிய தேதிகளில் இந்த யோக முகாம் கூலிம் பிரஹ்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெற்றது. சிங்கப்பூரில் இருந்து நான், லதா மற்றும் லங்கேஷ் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டோம்.

ஜார்ஜ் டவுன் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்பதற்காக இதற்கு முன் இருமுறை பினாங் வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பினாங் வரும்போதும் கூலிம் ஆசிரமத்தில் தங்கி இங்கு நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்திருக்கிறேன்.  இயற்கையானதொரு வனச்சூழலில் அமைந்திருக்கும் இந்த ஆசிரமத்தின் அழகும், சுத்தமும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பெருகி வரும் அமைதியும் மனதிற்குகந்தது. இந்த சிறுகுன்றின் உச்சியில் இருந்து பார்த்தால், தூரத்தில் தெரியும் நிலக்காட்சிகள் நமக்கு ஏதோ ஒன்றைச் சொல்வது போலிருக்கும். நிலத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா அல்லது இதுவரை வாழ்ந்துவிட்ட வாழ்க்கையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமா என்ற புகைமூட்டமானதொரு சிந்தனை மனதில் எழும்.

வெல்லஸ்லி லூனாஸ் மாரியம்மன் ஆலயம்

வெள்ளியன்று பின்மதியத்தில் பினாங்கிற்கு வந்ததும் நவீன் எங்களை அழைக்க வந்திருந்தார். பினாங் பாலத்தைக் கடந்ததும் அருகில் இருந்த ஒரு உணவகத்தில் உணவருந்தினோம். சிங்கப்பூரில் ஓர் இலக்கிய இதழைத் துவக்குவதில் உள்ள சிக்கல்களைக் குறித்துப் பேசினோம். இலக்கியப் பத்திரிகைகள் வெறும் பத்திரிகைகளாக எஞ்சிவிடாமல் அவை இலக்கிய இயக்கங்களாக மாறும்போதுதான் வெற்றியடைகின்றன என்று நவீன் சொன்னதை மனதில் குறித்துக்கொண்டேன்.

ம.நவீன் பயின்ற ஆரம்பத் தமிழ்ப்பள்ளி
(புதிய கட்டடம்)

தொடர்ந்து நவீன் அவரது சிறுவயதில் அவர் குடியிருந்த லுனாஸ் கம்பத்து வீடு, புத்தர் கோயில், லுனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப் பள்ளி, அதற்கு எதிரே இருந்த மாரியம்மன் கோயில், உணவகமாக மாறிவிட்ட பங்களா மற்றும் ரப்பர் புகைவீடு போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தார். பேச்சினூடே அவர் சிறுவயதில் பார்த்த லுனாஸ் இன்றில்லை என்றார். சொந்த ஊர் அடையும் மாற்றத்தை மனிதர்களால் தாங்கிக்கொள்ள  முடிவதில்லை. அதிலும் எழுத்தாளர்களால் அதைப் பதிவு செய்யாமல் இருக்கவே முடியாது. ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்கு எழுதிய முன்னுரையில் சுஜாதாவும் இதையே சொல்கிறார். இன்று புதிது புதிதாக முளைத்திருக்கும் மேம்பாலங்களும், என்னென்னவோ நகர்களும், அக்ரிலிக் பெயிண்ட் அடிக்கப்பட்ட கோபுரங்களும் என்னுடைய ஸ்ரீரங்கமல்ல என்கிறார். இன்னும் பின்னால் சென்று பார்த்தால், உ.வே.சாவும் தன்னுடைய ‘என் சரித்திரம்’ நூலில் இதைப் போன்ற ஒரு எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்ட இந்த ஊர் என்னுடைய உத்தமதானபுரமல்ல என்கிறார்.

புகை கூண்டாக இருந்து உணவகமாக மாறியுள்ள இடம்

நவீன், தான் சிறுவயதில் அச்சத்துடன் பார்த்த முனீஸ்வரன் கோயிலில் உள்ள சிலை புதைக்கப்பட்ட தகவலைச் சொல்லும்போது இதைத்தான் நினைத்துக்கொண்டேன். முனீஸ்வரன் சிலையைப் போலத்தான் பால்யமும். பால்யம் ஒருகட்டத்தில் மனதிற்குள் புதைந்து போய்விடுகிறது. ஆனால், புதைந்தபின்னர்தான் அது வீரியத்துடன் அகத்தில் மேலெழுகிறது. வாழ்வின் இறுதிவரை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது.

இருளத் துவங்கியதும் ஆசிரமம் சென்று சேர்ந்தோம். சௌந்தர்ஜி தன் மனைவியுடன் வந்திருந்தார். சுவாமிஜியைப் பார்த்ததும் மனது புத்துணர்வடைந்தது. ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும்போதும் அவருக்குள் இருக்கும் சிறுவனைத் தரிசிக்க முடிகிறது. சுறுசுறுப்பான, மகிழ்ச்சியான சிறுவன். சோர்வும், எதிர்மறை உணர்வும் இல்லாதவர். அவர் எப்போதும் அப்படியேதான் இருக்கிறார். நாம்தான் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

பிரம்ம வித்யாரண்யம்

அடுத்த நாள், மே 25 சனிக்கிழமை காலையில் யோக முகாம் துவங்கியது. முதல் வகுப்பில், சௌந்தர்ஜி யோகம் குறித்த அறிமுக உரையாற்றினார். அதன் பின், மரபார்ந்த யோக முறைகளுக்கும், மரபல்லாத யோக முறைகளுக்கும் இடையேயுள்ள அடிப்படை வித்தியாசங்களை விளக்கினார். அடிப்படையில், மரபார்ந்த யோகம் என்பது, எந்த பக்க விளைவுகளுமற்றது, ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது உபாதை நிரந்தரமாக நம் உடம்பை விட்டு நீங்க உதவி செய்வது, குறிப்பிட்ட உபாதை மீண்டும் நம் உடலைத் தாக்காதிருக்க உதவுவது. பஞ்ச கோசங்களையும் உள்ளடக்கியது. குறிப்பாக, முதல் மூன்று கோசங்களான அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோ மய கோசம் போன்றவைகளை ஒருங்கிணைத்துச் செய்யும் பயிற்சிகளை மரபார்ந்த யோகம் முன்வைக்கும் என்றார்.

அன்னமய கோசத்திற்கு ஆசனங்கள், பிராணமய கோசத்திற்குப்பிராணயாமப் பயிற்சிகள், மனோமய கோசத்திற்கு யோக நித்திரை போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டேன்.

பயிற்சியில்

ஒரு மனிதனின் முதல் இருபந்தைந்து வயது வரை இளமையும், இருபத்து ஐந்து வயதில் இருந்து ஐம்பது வயது வரை மத்திமமும், ஐம்பது வயதில் இருந்து இறுதிக் காலம் வரையிலான வயதை வீழ்ச்சி என்றும் வகைப்படுத்தி, இருபத்து ஐந்திலிருந்து ஐம்பது வயதுவரையிலான காலகட்டத்தில் உடற்பயிற்சிகள்,யோகம் போன்றவற்றைக் கடைப்பிடிக்கும்போது ஐம்பது வயதிற்குப் பிறகான Decay stage-இல் ஏற்படும் உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம் என்றார் சௌந்தர்ஜி.

முதல் நாளில்,‘யோக நித்ரா’ என்ற ப்ரத்யங்காரப் பயிற்சியில் துவங்கி,‘பிரம்மரி பிராணாயாமம்’ மற்றும் நின்றுகொண்டே செய்யும் செய்யும் ஆசனப் பயிற்சிகளான ‘தாடாசனம்’,‘ஹஸ்த உடாசனம்’,‘பாத ஹஸ்த ஆசனம்’,‘ஏகபாத பிரணாம் ஆசனம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தார்.

கலந்துகொண்டோர்

இரண்டாம் நாள் அமர்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் செய்யும் ஆசனங்களையும்,பிராணாயாமப் பயிற்சிகளையும் பயிற்றுவித்தார்.

பிராணாயாமம் குறித்துப் பேசும்போது சௌந்தர்ஜி,அனைத்துத் துறைகளுக்கும் அடிப்படையான ஆதாரம் என்று ஒன்று இருக்கும். அதுபோல, யோகத்திற்கு அடிப்படையான ஆதாரம் என்பது பிராணனே என்றார். பிராணன் என்றால் பெரும்பாலோர் நினைப்பது போல மூச்சு அல்ல, பிராணன் என்றால் உயிராற்றல். உயிராற்றலைப் பெருக்கிக் கொள்வதே பிராணாயாமம் மற்றும் ஆசனங்களின் குறிக்கோள் என்றார். பிராணாயாமம் ஐந்தாயிரம் ஆண்டுகளாகப் பயிலப்பட்டுப் கொண்டிருக்கிறது என்றும், பிற்காலத்தில், யோகம் அதனைத் தன்னோடு இணைத்துக் கொண்டது என்றும் சௌந்தர்ஜி விளக்கினார். அபானன்,உதானன், சமானன் உள்ளிட்ட பஞ்ச பிராணன்களைக் குறித்தும் விளக்கினார்.மரபார்ந்த யோகக் கலையில் அடிப்படையில் 84 பயிற்சிகள்தாம் உள்ளன என்றும், அவற்றில் நமக்குத் தேவையான பத்து ஆசனங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வதே இந்த முகாமில் நாம் செய்யவேண்டியது என்றார்.

சுமாமி பிரம்மானந்த சரஸ்வதி உரை

மூன்றாம் நாளில், அதுவரைப் பயின்ற ஆசனங்களையும் மூச்சுப் பயிற்சிகளையும் மீண்டும் செய்து பார்த்தோம். இந்த யோக முகாமின் நோக்கம் என்பது இதில் கலந்து கொள்ளும் அனைவரையும் யோக சாதகர்களாக ஆக்க வேண்டும் என்பதே என்றார் சௌந்தர்ஜி. அந்த நோக்கம் நிறைவேறுவது நம் ஒவ்வொருவரின் கைகளில்தான் இருக்கிறது.

முதல் இரண்டு நாட்களில் மாலை வேளைகளில் சுவாமிஜி ஆன்மிக உரையாற்றினார். இனிய பக்திப் பாடல்களுடன் துவங்கிய இந்த அமர்வுகள், மனதைக் கவர்ந்தன. முதல் நாள், யோகம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்த கொண்டவர், அடுத்த நாள் ஞானம் குறித்துப் பேசினார். இந்த உரைகள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டவை அல்ல, அந்த இடத்தில் தான் சிந்திக்கும் கருத்துகளையே சுவாமிஜி முன்வைத்தார். அவர் ஒரு தேர்ந்த சிந்தனையாளர் மட்டுமல்ல, தேர்ந்த பேச்சாளர் என்பதும் இதன்மூலம் தெரிந்தது. அவரது நவீன இலக்கியப் பரிச்சயமும் இந்த உரைகளில் வெளிப்பட்டது. குறிப்பாக, இரண்டாம் நாள் உரையில், “மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்” என்ற ஜி.நாகராஜனின் வரி குறித்து மேலதிகமான வெளிச்சத்தைப் பாய்ச்சினார். ஜி. நாகராஜனின் ‘ஆண்மை’ என்ற கதையையும்,புதுமைப்பித்தனின் “வாடாமல்லிகை” என்ற கதை குறித்தும் பேசியவர், இந்த இரு கதைகள் தந்த வெளிச்சத்தில் “மனிதன் மகத்தான சல்லிப் பயல்” என்ற வரியின் பொருளை ஆராய்ந்தார். ஜி. நாகராஜனின் கதையில் வரும் மனிதன் மகத்தானவன் என்றும் புதுமைப்பித்தனின் கதையில் வரும் மனிதன் சல்லிப் பயல் மட்டுமே என்று சொல்லி, இந்த இரு கதைகளையும் இணைத்துப் பேசி இலக்கியம் மூலமாக வாழ்வின் சில அடிப்படைகளைச்சிறப்பாக விளக்கினார்.

லங்கேஷ், அ.பாண்டியனுடன் கட்டுரையாளர் கணேஷ் பாபு

முகாம் முடிந்ததும், அ.பாண்டியன் எங்களைப் பினாங் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். வழியில், நேரத் தட்டுப்பாடு காரணமாக, தண்ணீர்மலை முருகன் கோயிலின் அடிவாரத்தை மட்டும் தரிசித்துவிட்டு வந்தோம்.

மொத்தத்தில், இந்த யோக முகாம், யோக ஆசனங்கள் பற்றிய பயிற்சியுடன், ஆன்மிகம், இலக்கியம், ஊர் சுற்றல் ஆகியவையும் கலந்ததொரு முழுமை அனுபவத்தை வழங்கியது.

(Visited 183 times, 1 visits today)