பொன் கோகிலத்தின் குறுங்கதையும் தமிழ்ப்பள்ளிகளின் நிலையும்

சில தமிழ்ப்பள்ளிகள் முன்னாள் வானொலி அறிவிப்பாளர் பொன் கோகிலம் அவர்களைக் குறுங்கதை பட்டறை நடத்த அழைத்துள்ளதாக நண்பர்கள் சிலர் கூறினார்கள்.

எனக்கு அது அதிர்ச்சியான தகவல்தான்.

நான் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நடக்கும் மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பவன். என் பார்வைக்கு பொன் கோகிலத்தின் குறுங்கதைகள் இதுவரை பட்டதில்லை. அவர் எழுதியது ‘அகிலம் நீ’ என்ற ஒரு சிறுகதை தொகுப்புதான். என் பார்வையில் மலேசியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த ஆக பலவீனமான தொகுப்பு அது. அது குறித்து நானும் ஒரு விமர்சனம் எழுதியுள்ளேன்.

இணைப்பு: https://vallinam.com.my/navin/?p=5284

அதனால் என்ன… அதெல்லாம் சிக்கல் இல்லை.

சிலருக்கு ஒருவகை புனைவு வராவிட்டால் இன்னொரு புனைவு நன்றாக வரலாம். பொன் கோகிலம் அவர்கள் குறுங்கதை பட்டறை நடத்துகிறார் என்றால் நிச்சயம் அவர் குறுங்கதைகள் எழுதியிருக்கக் கூடும். அதை நான் வாசிக்க விரும்புகிறேன் அவ்வளவுதான்.

இதை நான் எழுத முக்கியக் காரணம் குறுங்கதை எனும் வடிவம் பாடத்திட்டத்தில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இலக்கியச் சூழலிலேயே அது இன்னமும் வளர்ந்து வரும் வடிவம்தான். பாடத்திட்டத்தில் இல்லாத ஓர் இலக்கிய வடிவத்தை மாணவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது அதில் தேர்ந்தவர்களை அழைத்து வருவது அவசியம். ஒருவேளை அத்துறையில் நிபுணத்துவம் இல்லாதவர்களை அழைத்து வந்து மாணவர்களிடம் அறிமுகம் செய்யும்போது தவறான கலை வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டால் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது கல்வி அமைச்சு விசாரணை நடத்தலாம். அதோடு அப்பணிக்காக அவருக்கு பணம் வழங்கப்பட்டிருந்தால் நிலை மேலும் சிக்கலாகும்.

பாடத்திட்டத்தில் இல்லாத ஓர் இலக்கிய வடிவத்தை, அத்துறையில் தன்னை நிரூபிக்காத ஒருவர் பணம் வாங்கி பயிற்சி கொடுக்கிறார் என யாராவது புகார் கொடுத்தால் தமிழ்ப்பள்ளிகளின் நிலை சிக்கலுக்குள்ளாகும். (இதைப் பொதுவாகவே சொல்கிறேன். இதற்கும் குறுங்கதை பட்டறைக்கும் தொடர்பில்லை)

2020 வரை பல பள்ளிகளுக்கு மாணவர் சிறுகதை பட்டறைக்காகச் சென்றிருப்பேன். மூன்று சிறுகதை தொகுப்பு போட்டிருந்தாலும் அன்றைய தேர்வு வாரியத்தின் அதிகாரி பி.எம்.மூர்த்தி அவர்களிடம் எனது சிலைட் அனைத்தையும் அனுப்பி அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதி செய்தப்பின்னரே பள்ளியில் காலடி வைப்பேன். இதைச் சொல்ல காரணம் உண்டு. தனிப்பட்ட முறையில் நான் எழுத்தாளனாக இருப்பது வேறு. ஆனால் பள்ளி மாணவர்களுக்கு ஒரு திறனை எடுத்துச் செல்லும்போது அதற்கான நிபுணரின் ஆலோசனை அவசியமாக உள்ளது.

ஒருவேளை பொன் கோகிலமும் அப்படி குறுங்கதை எழுத்தாளர்களின் ஆலோசனை பெற்று பட்டறையை வடிவமைத்திருந்தால் அது பாராட்டுக்குறியது. அவர் யாரிடம் ஆலோசனைப் பெற்றார் என தாராளமாகத் தெரிவிக்கலாம். நாளையே ஏதும் சிக்கலாகி, அமைச்சில் உள்ளவர்கள் பட்டறையின் உள்ளடக்கம் சார்ந்து விசாரணை செய்யும்போது ஆலோசனை வழங்கியவரும் உறுதுணையாக வரக்கூடும். பொன் கோகிலம் அவர்களுக்குக் கைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் ஒன்றைச் சேர்க்கும்போது சரியானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிகளே நமது இளம் தலைமுறையை நசுக்குகிறது எனப் பொருள். பொன் கோகிலத்தின் இந்தச் செயல்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் எழுதப்படுவதை நான் வாசிக்கிறேன். யாருமே குறிப்பிட்டவரின் பெயரைச் சொல்ல மறுக்கின்றனர். அதில் என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. நாம் பட்டறை நடத்துபவரின் குறுங்கதை ஆற்றலை அறிய விரும்புகிறோம். தமிழ்ப்பள்ளிகள் நலனில் அக்கறை காட்டுகிறோம். அது ஒருபோதும் தவறாகாது. ஒருவேளை பொன் கோகிலத்திடம் அவ்வாற்றல் இருக்கும்போது, நம் பார்வைக்குப் படாமல் அவர் குறுங்கதைகள் எழுதியிருக்கும்போது அவர் நிச்சயம் தன் பணியைத் தொடரலாம். நாம் அதை வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். அவரைப் பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம்.

உண்மையில் தமிழ்ப்பள்ளிகள், மாணவர்கள் நலனில் எப்போதுமே கூடுதல் அக்கறைக் காட்டுபவை. இதுபோன்ற நிலை அவர்கள் பார்வைக்கு வராமல் இருக்கும்போது தவறுகள் தொடர்ந்து நிகழும். பின்னர் தமிழ்ப்பள்ளிகளைக் குறை கூறும் கூட்டம் ஒன்று பின் தொடரும். தமிழ்ப்பள்ளிகளின் பெயருக்கு அவமானம் நிகழ்வது அதில் பயின்று வளர்ந்த நம் ஒவ்வொருவருக்கும் நிகழ்வது போன்றதுதான்.

எனவே தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களைச் சந்திக்க யார் அழைக்கப்பட்டாலும் அதன் பணித்தியத் தலைவர் அவரது ஆளுமையை அறிவது அவசியம். புகழ் பெற்றவர், ஊடக கவனம் பெற்றவர் என்பதற்காக அழைப்பது நமது குழந்தைகளை நாமே வஞ்சிக்கிறோம் எனப் பொருள். எத்தனையோ திறமையான ஆசிரியர்கள் நம் மத்தியில் உள்ளனர். அவர்களை பயன்படுத்திக்கொள்வோம்.

உலகில் உள்ள அத்தனை திறன்களும் நமது மாணவர்களுக்கு வந்து சேர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மலையேற்றம் குறித்து பயிற்சி வழங்க மலையேறியவரைத்தானே அழைக்க வேண்டும். மரத்தில் ஏறி பழம் திருடுபவர் பொருந்துவாரா என்ன?

குறிப்பு: உவமைக்கும் முதன்மைக் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை.

குறிப்பு 2: இது பொறாமையால் எழுதப்பட்ட பதிவு என திரிக்கப்படலாம். நான் இதுவரை ஒரு குறுங்கதை கூட எழுதியதில்லை. எனவே எனக்கு அந்தப் பட்டறையெல்லாம் எடுக்கும் எண்ணமோ தகுதியோ இல்லை.

குறிப்பு 3: கட்டுரைக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை

(Visited 100 times, 1 visits today)