இலக்கியச் செயல்பாட்டில் கறார் தன்மையின் தேவை என்ன?

நவம்பர் 30 – டிசம்பர் 1 ஆகிய இருநாட்கள் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இலக்கிய முகாம் குறித்து என் முகநூலில் நேற்று (29.5.2024) நண்பகல் ஓர் அறிவிப்புச் செய்திருந்தேன். அதை வழிநடந்த இரண்டு தமிழக எழுத்தாளர்கள் வருவதைக் குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் பெயர்களை அறிவிக்கவில்லை.

கிட்டத்தட்ட 25 பேர் மட்டுமே இந்த முகாமில் கலந்துகொள்ளலாம் எனும் முடிவின் அடிப்படையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. சிலமணி நேரங்களில் 20 பேர் பதிவு செய்திருந்தனர். இதை ஒட்டி மாலையில் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அறிமுகமானவர்தான். சில வல்லினம் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். ‘நவம்பர் நடைபெற உள்ள இலக்கிய முகாமுக்கு ஏன் இப்போதே பதிவு? நவம்பர் மாதம் என்ன திட்டம் உள்ளதென தாமதமாகத்தானே எங்களுக்கே தெரியும். முன்னமே பதிவு செய்துவிட்டால் கடைசி நேரத்தில் சிக்கல் எழுந்தால் என்ன செய்வது?’ என்பதாக அவரது மின்னஞ்சல் பதிவு இருந்தது.

நான் அவருக்கு வழங்கிய பதில் பின்வருமாறு:

‘ஏற்கெனவே 20 பேர் பதிந்துவிட்டனர். இன்று இரவுக்குள் பதிவுகள் பூர்த்தியாகிவிடலாம். எனவே, உங்களுக்கு எந்த வேலையும் இல்லாதபோது, இறுதித் தேர்வாக இணையக்கூடிய இலக்கிய நிகழ்ச்சி ஒன்றிருந்தால் நீங்கள் அங்கு இணையலாம்.’

இந்தப் பதிலை எழுதி அனுப்பியபின் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. அவர் வயதுக்கு மரியாதையாகப் பேசியிருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

ஓர் இலக்கிய முகாம் குறித்த அறிவிப்பு வரும்போது அதற்கு முன்னுரிமை கொடுத்து, அதில் பங்கெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் வருபவரே இலக்கிய வாசகர்கள். அவர்கள் மேல் எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அப்படிப் பதிவு செய்த யாருக்குமே நவம்பரில் என்னென்ன வேலைகள், நெருக்கடிகள் ஏற்படும் எனத் தெரியாது. பங்கேற்பாளர்கள் மட்டுமல்ல, முகாமை வழிநடத்தும் தமிழக எழுத்தாளர்களுமே அப்போதையச் சூழலை முன் அனுமானிக்க இயலாது. ஆனால் எது வந்தாலும் இந்த முயற்சியில் இணைய வேண்டும் என முடிவெடுக்கிறார்கள் அல்லவா, அவர்கள் தரும் நேர்மறை சக்திதான் நான் தொடர்ந்து இயங்குவதற்கான ஊக்கி.

ஏன் அவரிடம் அவ்வளவு கடுமையாகப் பேசினேன் என யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் இப்படி அபத்தமாகப் பேசுபவர்களிடம் தடிப்பான சொற்களையே பயன்படுத்திவிடுகிறேன். அதற்குக் காரணம் உண்டு.

பொதுவாகவே, இலக்கியச் சூழலில் முன்னிலையில் நின்று செயல்படுபவர்கள் என்ன நடந்தாலும் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் இருக்கக் கடமைப்பட்டவர்கள்போல நடத்தப்படுவதுண்டு. இலக்கியத்தை முன்னெடுப்பவன் மற்றவர்களை அண்டிப்பிழைப்பவன், புத்தகத்தை காசாக்கப் பாடுபடுபவன், இலக்கிய நிகழ்ச்சி செய்வதே அவன் பிழைப்புக்கான வழிதான் என்பதாக பலரது மனதில் பதிந்துள்ளது. அதற்கு இந்நாட்டின் சில இலக்கியவாதிகளின் போக்குகளே காரணம்.

நான் கல்லூரியில் படித்தபோது ஈப்போ நகரில் புதுக்கவிதை மாநாடு ஒன்று நடந்தது. நானும் அதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன். மாநாட்டில் பேசிய டத்தின்ஶ்ரீ ஒருவர், ”இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்னிடம் இருபதாயிரம் ரிங்கிட் நன்கொடை கேட்கிறார். அரங்கில் கூட்டமே இல்லை… எப்படி அவ்வளவு பணம் கொடுப்பது?” எனக் கேட்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அசடு வழிய மேடையோரம் நின்றுக்கொண்டிருந்தார்.

இன்னொரு அனுபவத்தைச் சொல்லலாம். மாத இதழ் ஆசிரியர் ஒருவர் தனது ஒவ்வொரு தலையங்கத்திலும் டத்தோஶ்ரீ சாமிவேலுவைத் திட்டி எழுதுவார். பின்னர் தனது நூல் ஒன்றை வெளியீடு செய்யும்போது சாமிவேலுவையே தலைமை தாங்க அழைத்தார். நிகழ்ச்சியில் பேசிய சாமிவேலு, ”குறுந்தகவலாக இருந்தாலும் அதை நூறுமுறைக்கு மேல் அனுப்பி பெருந்தகவலாக மாற்றிய காரணத்தால் நான் இந்நூல் ஆசிரியரைச் சந்திக்கச் சம்மதித்தேன்,” என்றார். எழுத்தாளரைப் பார்த்தேன். ‘ஈ’ என இளித்துக் கொண்டிருந்தார். ஒரு பெரும் தொகை கொடுத்து எழுத்தாளரின் நூலை வாங்கிக்கொண்டார் டத்தோஶ்ரீ சாமிவேலு.

இப்படி எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லமுடியும். ஓர் எழுத்தாளனுக்குப் பணத் தேவை இருப்பது தவறல்ல. அது அனைவருக்குமே உள்ளது. ஆனால், பலரும் கூடியுள்ள இலக்கிய அவையில் தன் நிமிர்வை முறித்துப் போடும் தருணத்தை எதிர்கொள்ளும் ஒருவனால் அதற்கு மேலும் இலக்கியம் என ஒன்றைப் படைக்க முடியுமா? இப்படி நத்திப் பிழைக்கும் எழுத்தாளனைச் சதாசர்வகாலமும் எதிர்கொள்ளும் சமூகத்தின் மனநிலை அவன் தனக்குப் பணிந்து சேவகம் செய்ய வந்தவன் என்பதன்றி வேறெப்படியும் இருக்க வாய்ப்பில்லைதான்.

இந்த அவலங்கள் ஒருபுறம் என்றால் தமிழக எழுத்தாளர்களை வரவழைத்து தன் சுயலாபத்துக்காக அவர்களைச் சங்கடமாக்கும் நிலை அதைவிட கேவலமானது. ஓர் உதாரணம் சொல்லலாம்.

அண்மையில் கவிஞர் ஒருவர் மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்டார். இன்று தமிழில் எழுதக்கூடிய மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். அப்படிப்பட்ட ஆளுமையை இந்நாட்டில் சாதி மாநாடு நடத்தும் ஒரு சாதி சங்கத் தலைவருடன் அமரவைத்து அழகு பார்த்தது ஓர் இயக்கம். அந்த சாதி மாநாடுகள் குறித்து நானே விமர்சனங்கள் எழுதியதுண்டு. கவிஞருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் அவர் அங்கணமே எழுந்து வெளியேறியிருக்கக்கூடும். அந்நிகழ்ச்சிக்கு நன்கொடை கொடுக்கிறார் எனும் ஒரே காரணத்துக்காக சாதி இயக்கத் தலைவர் படத்துடன் கவிஞரின் படத்தையும் ஏற்பாட்டுக்குழு பதாகையில் போட்டதெல்லாம் நகைமுரண். நான் இங்கு கவிஞரைத் தவறு சொல்லவில்லை. அவரின் கவிதைகளை வாசிக்காத ஒருவர், அவர் அரசியலை அறியாத ஒருவர், அவரைக் கொண்டு தனது அடையாளத்துக்காக நிகழ்ச்சி செய்யும்போது ஏற்படும் குழறுபடிகள் இவை.

ஏற்பாட்டுக்குழுவின் அரசியலைத் தாண்டி பல இளம் கவிஞர்கள் பலனடைந்திருப்பார்கள் என ஒருவர் ஆசுவாசப்படலாம். ஆனால் அந்த அரசியலுக்குப் பின்னால் இருப்பது ஒருவரின் சுயநலம் என்பதையும் அதனால் நிகழும் சுரண்டலையும் உணர்ந்தால் இதுபோன்ற எளிய சமாதானங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்ற தெளிவுபிறக்கும்.

இன்னும் இதுபோன்ற அருவருப்புகள் தொடரும். இவை தொடரும்வரை படைப்பாளி என்பவன் அரசியல்வாதிகளிடமும் தனவந்தர்களிடமும் தலைதாழ்ந்து நிற்பவனாகவே மதிப்பிடப்படுவான். இலக்கிய நிகழ்ச்சியை முன்னெடுப்பவன் கூழைக் கும்பிடு போடவேண்டும் என்றே நிர்பந்திக்கப்படுவான்.

இப்படி நான் சொல்வதால், உடனே, இங்கு நன்கொடை வாங்குவது பெரும் குற்றமெனவும் அரசியல்வாதிகள் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது பாவமெனவும் நான் சொன்னதாகத் திரிக்கப்படவும் வாய்ப்புண்டு.

நன்கொடையாளர்களாலேயே இந்நாட்டில் பல நல்ல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சிறுபான்மையினரது பல்வேறு கல்வி, கலை, இலக்கியச் செயல்பாடுகள் நன்கொடையினால்தான் சாத்தியமாகின்றன. இதில், நன்கொடை என்பது சமூகத்தில் நடக்கும் அறிவார்ந்த செயல்பாட்டிற்கு தனிமனிதர்கள், அமைப்புகளின் பங்களிப்பு. ஆனால், அந்தப் பங்களிப்புக்காக ஒருவரை இலக்கிய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கச் சொல்வது எங்ஙணம் முறையாக இருக்க முடியும்? அதுபோல ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எவருக்கும் அனுமதி உண்டு. ஆனால், அதில் முதன்மையானவன் எழுத்தாளனாகத்தானே இருக்க முடியும்.

நண்பர் அனுப்பிய மின்னஞ்சலின் சாரம் எளிமையானதுதான். இறுதி நேரச் சங்கடங்கள் நிகழும்போது அதை தவிர்ப்பதற்கான ஆலோசனையாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எதன்பொருட்டும் இலக்கியத்தின் மீதிருக்கும் தீவிரத்தை குறைத்துக்கொள்வதில்லை எனும் மனநிலையில் உருவாகும் புதிய தலைமுறைக்கு இந்த ஆலோசனைகளெல்லாம் ஏற்பானதல்ல என்றே நினைக்கிறேன்.

நண்பர்கள் பலரும் அறிவார்கள். 2023இல் நடந்த ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின்போதும் 2024இல் நடந்த வல்லினம் விமர்சன முகாமின் போதும் நான் கடுமையான உடல் நலக்குறைவானால் பாதிக்கப்பட்டிருந்தேன். நிகழ்ச்சியைத் தவிர மற்ற நேரங்களில் வெளியே வரவில்லை. முதல் நிகழ்ச்சியில் ‘கோவிட்’. இரண்டாவது நிகழ்ச்சியில் ‘இன்ஃபுளுவன்ஸா’ பாதிப்புகள் ஏற்பட்டதை தாமதாகமாகவே கண்டுபிடித்தோம். கடுமையான உடல்வலி, தலைவலி, காய்ச்சல் என எல்லாவற்றையும் மீறி அனைத்து அங்கத்திலும் பங்கெடுத்தேன்.

பிறருக்கு எதை வலியுறுத்துகிறேனோ அதை நான் கடைப்பிடிப்பவனாகவே இருக்கிறேன். என் தெய்வம் என்பது இலக்கியம் மட்டும்தான். அது என்னை ஒருபோதும் கைவிடாது என நம்பியே எதிலும் இறங்குகிறேன். வேறு பணிகள் ஒன்றும் இல்லாதபோது இறுதிநாளில் வந்து ஒட்டிக்கொள்கிறேன் எனும் மனநிலை அந்தத் தெய்வத்தை அவமதிப்பது போன்றது. எனவே என் நிலைப்பாட்டில் நான் கறாராக இருக்கிறேன்.

முறையாகத் தெரிவிக்காமல் சில அரங்குகளில் மட்டும் முகம் காட்டுபவர்கள், முழுமையாகப் பங்கெடுக்க முடியாமல் உரிய காரணமின்றி பாதியில் புறப்படுபவர்கள், தன்விருப்பப்படி செயல்படுபவர்கள் என யாராக இருந்தாலும் வல்லினம் முகாம்களில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை. (பொது நிகழ்ச்சிகளில் இந்தக் கட்டுப்பாடுகளை நான் வைத்திருப்பதில்லை.)

இலக்கியச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை என் நிலைப்பாடு ஒன்றுதான். ஒருவர் தான் வேலை செய்யும் பணியிடத்தில், கற்கும் கல்லூரியில் நேர நிர்வகிப்பைக் கடைப்பிடிக்க முடியுமென்றால் இலக்கியத்திலும் அதைப் பின்பற்ற வேண்டும். கலை எனும் தளத்தில் காட்டப்படும் மெத்தனங்களுக்கு பதில்சொல்ல என்னிடத்தில் இனிய முகம் இல்லை. நான் எழுதுவதால் மட்டுமே எழுத்தாளன். இலக்கியச் செயல்பாடுகள் ஒரு நாட்டின் இலக்கியச் சூழலை மாற்றி அமைப்பதற்கான முனைப்பு மட்டுமே. அதை உணர்பவர்கள் உடன் இணைந்திருப்பதே மகிழ்ச்சி.

(Visited 365 times, 1 visits today)