பவா செல்லதுரையும் கூல் சுரேஷும்

‘பிக் பாஸில்’ பவா செல்லதுரை அவர்கள் கலந்துகொண்டபோது நான் என் முகநூலில் ஒரு பதிவு இட்டிருந்தேன். சினிமாவுடன் சம்பந்தப்பட்ட கூல் சுரேஷ் ‘பிக் பாஸ்’ செல்லும்போது யாருக்கும் தவறாகப் படவில்லை; இலக்கிய உலகில் அந்த இடத்தை வகிக்கும் பவா செல்லதுரை செல்வதில் என்ன தவறு எனக் கேட்டிருந்தேன். இதை நக்கலாகவெல்லாம் கேட்கவில்லை. என் மனதில் பவா செல்லதுரை அதற்கான இடத்தில் மட்டுமே அமர்ந்துள்ளார்.

இவை நெஞ்சு வலியால் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பவா செல்லதுரை என் முகநூலின் பதிவுக்குக் கீழே வெளியிட்ட கருத்துகள்.

  • அவங்களவிட நீ எந்த வகையிலடா ஒசத்தி மயிறு?
  • நீயெல்லாம் ஜெயமோகன் சொல்லிதாண்டா காலந்தள்ள முடியும். ஒரு வரி எழுத துப்பு வராது.
  • படிக்க முடியாத லட்சணத்துல இருக்கு உன் எழுத்து. படைப்பின்றது வெறும் கிராப்ட் இல்ல. இத உன் ஆசான்கிட்ட கேளு, அல்லது ஆசான் சொன்னதும் தூக்கி வச்சி ஆடறயே யுவன்கிட்ட கேளு.
  • எதுக்கு எழுத்தாளனை நேருல அழைக்கனும். வாசிச்சா மட்டும் போதாதா? எதுக்கு படைப்பாளிய வச்சி ஷோ காட்டணும்?
  • உன் பழைய ஆசான் இராஜேந்திரன் சார் கிட்டயாவது கேட்டு சொல்லு

பவா செல்லதுரை இலக்கியத்துக்காக வழங்கியுள்ள பங்களிப்புகளை நான் நன்றாகவே அறிவேன். பல எழுத்தாளர்களை விரிவான தளத்தில் அறிமுகம் செய்தவர். அவர்களின் நூல்களை விரிவான களங்களுக்குக் கொண்டுச் சென்றவர். குறிப்பிடத்தக்க சில சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றைக் குறித்து நானும் கட்டுரை எழுதியுள்ளேன். பதிப்பாளராகவும் செயல்பாட்டாளராகவும் பங்களிப்பை வழங்கியவர். அடையாளமற்று வருபவர்களிடம் அன்பு காட்டுபவர். இலக்கியத்தைக் கொண்டாட்டமாக நிகழ்த்துபவர். இப்படி ஏராளமாக என் மரியாதைக்குரிய நண்பர்கள் வழி அறிந்திருக்கிறேன். நான் இவற்றைப் பார்க்காவிட்டாலும் அவர்கள் சொற்கள் வழி முழுமையாக நம்பவும் செய்கிறேன்.

ஆனால் இவையெல்லாம் பழைய பவா செல்லதுரை.

ஈராண்டுக்கு முன்னர் இமையம் பவா செல்லதுரை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சொன்ன சொற்களை மேற்கோள் காட்டலாம். “94இல் நான் பார்த்த செல்லதுரைக்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அப்போது அவர் அசலான வாசகர், அதற்கு பின்னர் அவர் டுபாகூராகிவிட்டார். இலக்கிய அரசியல் செய்பவராகிவிட்டார்.” என்றார்.

இமையம் தன் விமர்சனத்தை மென்மையாக வைத்துள்ளார் என்றே சொல்லலாம். நான் அணுகி அறிந்த வரையில் பவா அவர்கள் இலக்கியத்தை அரைகுறையாகப் பேசி அடையாளம் தேடுபவர், அந்த அடையாளத்தின் வழி பிற சௌகரியங்களை அடைய முனைபவர். நான் செவிமடுத்த உண்மைகள் போலவே  நான் எதிர்கொண்ட அனுபவங்களும் உண்மையானது. அதை இவ்விடத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

அக்டோபர் 2018இல் மதுரையில் உள்ள பிரேம் நிவாஸ் மஹால் எனும் விடுதி மண்டபத்தில் நடந்த வல்லினத்தின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு பவா செல்லதுரையை அழைத்திருந்தோம். அதுவரை அவர் சொல்லும் கதைகளைக் கேட்டு மட்டுமே அவர் பேச்சில் ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்நிகழ்ச்சியில் அவரை கே.எஸ்.மணியத்தின் மொழிப்பெயர்க்கப்பட்ட சிறுகதை தொகுப்பு குறித்து பேச கேட்டுக்கொண்டோம். நிகழ்ச்சிக்கு முன்பாகவே யாவரும் ஜீவகரிகாலன் மூலம் டம்மி நூல் அவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அனுப்பப்பட்டிருந்தது. (இதை ஜீவாவிடம் உறுதி செய்தப்பிறகே சொல்கிறேன்)  நானும் பவாவைச் சிலமுறை அழைத்திருந்தேன். அவசியம் தொகுப்பை முழுமையாக வாசித்து வரும்படி கூறினேன். அந்நூல் கடும் உழைப்பில் உருவானது. தென்கிழக்காசியா முழுவதும் அறியப்பட்ட கே.எஸ்.மணியத்தை முதன்முறையாகத் தமிழில் அறிமுகம் செய்கிறோம் என்ற உற்சாகம் எங்களுக்கு இருந்தது. தொகுப்பில் உள்ள சிறுகதைகளை அவர் வாசித்து, அதில் சிலவற்றைச் சொல்வது அங்குள்ள இலக்கிய வாசகர்களுக்கு அந்தச் சிறுகதை தொகுப்புக் குறித்தும் கே.எஸ். மணியம் குறித்தும் விரிவான அறிமுகத்தை ஏற்படுத்தும் என நம்பியிருந்தோம்.

பவா நிகழ்ச்சிக்கு வாசிக்காமல்தான் வந்திருந்தார். “நான் வாசிக்காமல் ஒரு அரங்கில் ஏறவே மாட்டேன். கவலைப் படாதீர்கள் வாசித்துவிடுவேன்,” எனக் கூறியபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்திருந்தோம்.

நாங்கள் அங்கு இரண்டு அறைகள் போட்டிருந்தோம். அதில் ஓர் அறையைக் கொடுத்தால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசித்துவிடுவதாகவும் டம்மி நூலில் வாசிப்பது சிக்கலாக உள்ளது என்றும் கூறவே ஓரறையை அவருக்குக் கொடுத்தோம். கொஞ்ச நேரத்தில் தனக்கு அக்கதைகளை வாசிப்பதில் உள்ள சிக்கலைக் கூறியவர், அதை மொழிப்பெயர்த்த விஜயலட்சுமியிடமே கதைகளை விவரிக்கச் சொன்னார்.

இது எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்தப் பணியைச் செய்ய ஒப்புக்கொண்ட பிறகு அவர் கேட்டுக்கொண்ட தொகையையும் கொடுத்திருந்தோம். நாங்கள் அழைக்கும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மனநிறைவுடன் இருப்பதில் கவனமாக இருந்தோம். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் நேரம் என்பது பெருமதியானது. எனவே அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவதை நிபுணத்துவமாகவே வல்லினம் வழி கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் பவா அந்த நிபுணத்துவத்துடன் நடந்து கொள்ளாதது எங்களுக்குச் சங்கடமாக இருந்தது.

அந்தத் தொகுப்பில் இருந்த ஒரு கதையின் ஒரு சில பகுதியை மட்டும் சொன்னவர், தன் உரையை பொதுவாகப் பெண் எழுத்தாளர்கள் எனும் தலைப்புக்கு மாற்றி தன் வழக்கமான பேச்சுக்கு இழுத்துச் சென்றிருந்தார், கே.எஸ். மணியம் குறித்து ஒரு வரி சொல்லாதது எங்களுக்குச் சங்கடமானது.

நிகழ்ச்சி முடிந்து வல்லினம் நண்பர்களுடன் அவரிடம் சென்றேன். “நவம்பர் நடைபெற உள்ள வல்லினம் கலை இலக்கிய விழாவுக்கு இப்படி நூல்களை வாசிக்காமல் வராதீர்கள் சார்.” என்றேன். நவம்பருக்கு அவர் பெயரில் விமான டிக்கெட் போட்டுவிட்டதால் அவரை தவிர்க்க முடியாமல் தவித்தோம்.

“இப்படி நிச்சயம் நடக்காது. எல்லாவற்றையும் வாசித்துவிடுவேன்” என்றார். ஆனால் மலேசியாவுக்கும் தொகுப்புகளை வாசிக்காமல்தான் வந்தார். அதை கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் என் வீட்டில் அமர்ந்துகொண்டு கைகளை கழுத்தின் பின்னால் கட்டிக்கொண்டு சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது.  

நான் உடைந்து போயிருந்தேன். வல்லினத்திடம் பொருளாதார பலம் என பெரிதாக ஒன்றும் இல்லை. இதில் எல்லாருமே எவ்வித பிரதிபலன் பாராமல் உழைப்பவர்கள். ஒரு விழாவை ஏற்பாடு செய்வது கொண்டாட்டத்திற்காக அல்ல. ஒருவருட கடுமையான உழைப்பில் கிடைக்கும் பலனை இலக்கிய வாசகர்களிடம் பகிரும் தருணம் அது. வணிக இலக்கியத்தை மட்டுமே தமிழ் இலக்கியம் என நிறுவிக்கொண்டிருந்த அமைப்புகளுக்கு எதிரான இலக்கியச் செயல்பாடுதான் கலை இலக்கிய விழா. அவ்விழாவில் எந்த வாசிப்பும் இல்லாமல் வெறுமனே அவர் என்ன பேசப்போகிறார் எனக் குழப்பமாக இருந்தது.

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் “வாசித்து விடுங்கள் பவா. இன்று வெளியீடு காணும் நூல்கள் எங்களின் பலகால உழைப்பு,” எனச் சொல்லிக்கொண்டே இருந்தேன். “அதெல்லாம் வாசிச்சிடுவேன்,” என்றார். அவரது கவனமெல்லாம் பெட்டி நிறைய அவர் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்த நூல்களின் மேல்தான் இருந்தது. நாந்தான் அவர் எழுதிய நூல்களை எடுத்து வரும்படிக் கூறியிருந்தேன். வாசகர்களுக்கு தான் சந்தித்த எழுத்தாளன் படைப்பை அறிவது முக்கியம். ஆனால் அவர் வம்சி பதிப்பகத்தில் வந்த அத்தனை நூல்களையும் எடுத்து வந்திருந்தார். அவற்றை விற்று முடிக்கவேண்டும் எனக் கூறிக்கொண்டே இருந்தார்.

நிகழ்ச்சிக்கு முதல்நாள் சில சிறுகதை வாசித்து அது குறித்து என்னிடமும் அபிப்பிராயம் கேட்டும் கதைகளைத் தெளிவுப்படுத்திக்கொண்டார். அதுவே எனக்குச் சங்கடமாக இருந்தது. இதற்கிடையில் அவரை மலேசிய அரசாங்க வானொலிக்கு அழைத்துச் சென்றேன். அவர் வழியாகத் தமிழின் சிறந்த கதைகளை ‘அமுதே தமிழே’ எனும் நிகழ்ச்சியின் வழி அறிமுகம் செய்வதுதான் என் நோக்கம். அவரிடம் என் நோக்கத்தைக் கூறவும் தாராளமாக இயலும் என உற்சாகமாக உடன் வந்தார். அடுக்கடுக்காகச் சில கதைகளைக் கூறி வானொலியில் பதிவு செய்தப் பிறகு நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் “இதற்கு வழக்கமாகப் பணம் கொடுப்பீர்களா?” எனக் கேட்டார். அவரும் “மலேசியர்களுக்குக் கொடுப்போம். வெளிநாட்டவர்களுக்குக் கொடுப்பதில் ஏராளமான நெருக்கடிகள் உள்ளன” என்றார். “இப்போது நான் பேசியதற்கு பணம் தர மாட்டீர்களா ?” என்றார். “இல்லை. அது சாத்தியமாகாது,” என்றார். “பணத்தை நவீன் பெயரில் போட்டுவிட்டால் நான் அவரிடம் வாங்கிக்கொள்வேன்” என்றார். தயாரிப்பாளரும் அதற்கு சாத்தியமில்லாததைக் கூறினார்.

இதற்கிடையில் சு.வேணுகோபாலிடமும் பணம் கேட்கச் சொல்லி பவா விடாமல் வறுபுறுத்த அவர் சங்கடமாகி என்ன சொல்வதெனத் தெரியாமல் தவித்துக்கிடந்தார்.

எனக்கும் அந்நிலை சங்கடமாக இருந்தது. ஓர் உழைப்புக்குப் பணம் கேட்பதில் தவறே இல்லை. ஆனால் இந்த விவகாரங்களை முன்னமே பேசியிருக்க வேண்டும். பதிவு செய்தபிறகு இப்படிக் கேட்பது மன வருத்தத்தையே ஏற்படுத்தும். நான் அதற்கு முன்னர் வந்த எத்தனையோ எழுத்தாளர்களை வானொலிக்கு அழைத்துச் சென்றுள்ளேன். மலேசியாவில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரே வானொலி அது. அதன் வழியாக பயனடைவோர் நிறைய பேர் இருப்பார்கள். என் மனதில் பணம் குறித்த எண்ணம் இல்லை. அதனால் அது குறித்து கேட்கவில்லை. வானொலி வழி நல்ல இலக்கியங்களை பரவலாக்குவதே என் நோக்கமாக இருந்தது. வானொலி தயாரிப்பாளர் அது சாத்தியமில்லை எனச் சொல்லவும் “சரி” எனப் புறப்பட்டு விட்டார்.

நிகழ்ச்சியில் பவா பேசினார். தன் வழக்கப்படி அரைகுறையாக வாசித்ததை காட்டிக்கொள்ளாமல் இருக்க பல எழுத்தாளர்களைப் பற்றி பேசினார். “இந்தப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதில் எனக்கு நிறைய சங்கடங்கள் உள்ளது. என்னுடைய புத்தகங்களுக்கு நான் வெளியீட்டு விழாக்களை நடத்துவதில்லை என ஜெயகாந்தன் சொன்னார். நான் என் நூல்களை எடுத்து வந்தது காசுக்காக இல்லை. எனக்கு என் எழுத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஜெயகாந்தன் ஒருபோதும் தன் நூலை தன் கையில் எடுத்துச் செல்ல மாட்டார். இதெல்லாம் நாம் எழுத்தாளனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மேன்மை.” ஏறக்குறைய 40 நிமிட உரையில் 20 நிமிடங்கள் என்னென்னவோ பேசினார். அடுத்த 20 நிமிடங்களில் மூன்று சிறுகதை தொகுப்புகளைப் பற்றி பேசியபோது எங்கள் யாருடைய முகத்திலும் உற்சாகம் இல்லை.

தன் உரை முடிந்தபிறகு பவா புத்தக விற்பனையில் தீவிரம் காட்டத் தொடங்கினார். என் நண்பர்களை அனுப்பி தன் நூலை விற்க மேசை ஒன்றை போடும்படி வற்புறுத்திக்கொண்டே இருந்தார். நான் அதற்குச் சாத்தியமில்லை என்றேன். இது வல்லினம் வெளியிடும் 10 நூல்களுக்கான அரங்கு. இங்கு மற்ற நூல்களை விற்பனைக்கு வைக்க முடியாது எனப் பிடிவாதமாகக் கூறிவிட்டேன், உடனே பவா வெளியில் லிப்ட் அருகில் இருந்த மேசையில் புத்தகங்களை வைத்து விற்பனையைத் தொடக்கியிருந்தார். நிகழ்ச்சி முடிந்து புறப்படுபவர்களைப் பிடித்து நிறுத்தி நூல்கள் குறித்து விவரித்து சிறப்பான விற்பனை செய்தார்.

நிகழ்ச்சி முடிந்தபிறகு பொதுவாக எங்காவது உணவருந்தச் செல்வது வழக்கம். நான் பவாவிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லா பொருட்களையும் அடுக்கிச் சுத்தம் செய்துவிட்டு சாப்பிடச் சென்றோம். அந்த மேசையில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் அன்று சு.வேணுகோபாலின் உரை குறித்தே பேசத் தொடங்கினர். இது யாரும் திட்டமிடாதது. பொதுமக்களுக்கு பவாவின் உரை பிடித்திருக்கலாம். வல்லினத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவ்வுரை எவ்வளவு மேலோட்டமானது உழைப்பற்றது எனப் புரிந்தது. எங்கள் நோக்கம் பவாவினால் பலவீனமடைந்திருந்தது. இலக்கியத்தைக் கேளிக்கை நிகழ்ச்சி போல எவ்வித தயாரிப்பும் இல்லாமல் நடத்தும் ஓர் அங்கமாகவே பவாவின் உரையை நாங்கள் உணர்ந்தோம்.

எல்லோரும் சு.வேணுகோபால் உரையைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கவும் பிக் பாஸில் செய்தது போலவே பவா தனக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி அறைக்குச் சென்றார். நாங்கள் யாரும் அவரைத் தடுக்கவில்லை.

மறுநாள் காலையில் பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபாலை பசியாறைக்கு அழைத்துச் சென்ற நண்பர் அ.பாண்டியன் என்னைத் தனியாக அழைத்து “பவா என்ன சொன்னாலும் விவாதம் செய்யாதீர்கள். அவர் நம் விருந்தினர். அவர் மனம் சோர்ந்து இருக்கிறார். விவாதம் அவரை நோயாளியாக்கும்” என்றார். பொதுவாகப் பாண்டியன் சொன்னால் நான் கேட்டுக்கொள்வேன். அவர் என்னைப் போல அவசரக்குடுக்கை இல்லை. “சரி” என்றேன்.

நான், பவா மற்றும் சு.வேணுகோபால் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். எங்களுடன் சிங்கை விஜிப்பிரியாவும் இருந்தார்.

பவா என் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

குற்றம் 1: நிகழ்ச்சியின்போது சத்தமிட்டுக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து நான் கடுமையாகப் பேசி அவர்களை அரங்கைவிட்டு வெளியேறச் சொன்னேன்.

குற்றம் 2: மின்னல் வானொலியில் தான் கதைகள் சொன்னதற்குப் பணம் வேண்டும். இல்லையென்றால் அதை ஒலிபரப்பக்கூடாது.

குற்றம் 3: நிகழ்ச்சியை நான் முறையாக வடிவமைக்கவில்லை.

குற்றம் 4: அவரது நூல்களை விற்க நான் மண்டபத்தின் உள்ளே இடம் ஒதுக்கவில்லை.

நான் பவா செல்லதுரையிடம் ஒவ்வொன்றாக விளக்கினேன்.

விளக்கம் 1: முதல் பேச்சாளர் பேசிக்கொண்டிருந்தபோது சத்தமிட்ட பலர் ஆசிரியர்கள். இதுவே ஒரு அமைச்சர் முன்னிருக்கையில் இருந்தால் ஒரு சத்தம் வராது. எழுத்தாளன் என்றால் இளக்காரம் என்றேன். சு.வேணுகோபால் அவர்களும் “ஜெயமோகன்கூட தன் அரங்கில் சத்தமிட்டால் இதைத்தான் செய்வார் பவா,” என்றார்.

“அது ஜெயமோகன். அவர் சொல்லலாம்.” என்றார் பவா.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நிகழ்ச்சியைப் பல சிரமத்துக்கிடையில் நடத்தும்போது அதற்கு இடையூறு கொடுப்பவர்களை வெளியேறச் சொல்வதில் என்ன தகுதி வேண்டியுள்ளது. அது கலை இலக்கிய விழா 10. அதுவரை ஒன்பது விழாக்கள் செய்துள்ளேன். ஒருபோதும் அரங்கு ஒழுங்கு குலைப்பவர்களை நான் அனுமதித்ததில்லை. அதன்பிறகு நான் அதை விவாதமாக்கவில்லை.

விளக்கம் 2: குரல் பதிவு செய்தப்பிறகு அதை ஒலிபரப்ப வேண்டாம் எனச் சொல்வது அநாகரீகம். இருந்தாலும் அவர் பிடிவாதமாக இருந்ததால் வானொலி தரப்பில் சொல்லிவிடுகிறேன் என ஒப்புக்கொண்டேன்.

விளக்கம் 3: பொதுவாகவே வல்லினம் நிகழ்ச்சியைத்தான் மலேசியாவின் இலக்கிய நிகழ்ச்சிகளில் செறிவானது என்பார்கள். ஆனால் பவா இன்னும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளவர்.எனவே அவர் சொன்னபோது நான் மௌனம் காத்தேன். ஒன்றில் குறை உள்ளதென்றால் அதை ஆராய்ந்து மேம்படுத்திக்கொள்வதுதானே சரியாக இருக்க முடியும்.

விளக்கம் 4: தமிழகத்தில் ஓர் எழுத்தாளர் நூல் வெளியிட்டவுடன் அதை வாசகர்கள் சென்று வாங்க ஏராளமான புத்தகக் கடைகள் உள்ளன. பல வட்டாரங்களில் அப்படிச் சிறிய சிறிய புத்தகக் கடைகளைப் பார்த்துள்ளேன். மலேசியாவில் அப்படி எதுவும் இல்லை. இந்த நிகழ்ச்சி ஒன்று மட்டும்தான் எங்கள் நூல்களை வாசகர்களுக்குக் கொண்டுச் சேர்க்கும் அரங்கு. இந்த நிகழ்ச்சிக்கு மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வாசகர்கள் வருகிறார்கள். அவர்களிடம் இருப்பது சொற்பமான பணம். அந்த வாசகர்களிடம்தான் நாங்கள் அவ்வருடம் வெளியிட்டுள்ள பத்து நூல்களைக் கொண்டுச் சேர்க்க வேண்டும். அவ்விடத்தில் தமிழகத்தில் பிரபலமான அத்தனை எழுத்தாளர்களின் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டால் எங்கள் படைப்பை வாசகர்கள் வாங்குவது பாதிக்கும். மலேசியவில் இருக்கும் மிகச்சில புத்தகக் கடைகளிலும் தமிழக நூல்களே முதன்மையாக இருக்கும்.  

வல்லினம் போன்ற சிறிய பதிப்பகம் 10 நூல்களை ஒரே நேரத்தில் பதிப்பிப்பது சாதாரண காரியமல்ல. மேலும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் 20% ராயல்டியை நூல் விற்பனைக்கு முன்னமே வல்லினம் கொடுத்துவிடும். எழுத்தாளர்களை கௌரவமாக நடத்தவேண்டும். மலேசியா எழுத்தாளனின் படைப்பு உரிய வாசகர்களிடம் சென்று சேர வேண்டும். இதற்கு பணம் அவசியம். அந்தப் பணத்தை நாங்கள் அரசியவாதிகளிடம் கேட்டுப்பெறுவதில்லை. எங்கள் உழைப்பால் மட்டுமே இதுபோன்ற நிகழ்ச்சிகளும் முன்னெடுப்புகளும் சாத்தியம். எனவே அவர் கொண்டு வந்திருந்த தமிழக நூல்களை அங்கு வைத்து விற்பனைச் செய்வதைத் தவிர்த்தேன். இதை இன்னும் விளக்கமாகவே அவரிடம் கூறினேன்.

பவா அதை ஏற்கவில்லை. உண்மையில் அவரது அத்தனைக் கோபமும் நூல் விற்பனை சுற்றியே இருந்தது. முதலில் சொன்ன மூன்றும் ஒரு பாவனைதான். “வாசகனுக்கு எது வேணுமோ அத வாங்கிக்குவான். நீங்க அத லிமிட் பண்ணாதீங்க,” என்றார். என் சார்பாக விஜிப்பிரியாவும் விளக்கம் கொடுத்தார். அவர் தமிழகத்தில் இருந்து சிங்கை வந்தவர். எனவே அவரால் தமிழகச் சூழலோடு மலேசியச் சூழலை ஒப்பீடு செய்ய முடிந்தது.

அந்த விளக்கங்கள் எதையும் பவா ஏற்கவில்லை. என்னால் தன் நூல் விற்பனை பாதித்ததாகக் கோபம் மட்டுமே இருந்தது.

உரையாடலின் இறுதியில் தனக்கு மாரடைப்பு வரும் அளவுக்கு டென்ஷன் இருப்பதாகவும் எனவே தமிழகத்துக்கு உடனடியாகத் திரும்ப தான் விரும்புவதாகவும் கூறினார். சு. வேணுகோபாலையும் தனது ஒத்துழையாமை போராட்டத்தில் பங்குபெற அழைத்தார். இருவருமாகச் சேர்ந்து ஊர் திரும்பலாம் என சு.வேணுகோபால் வறுபுறுத்தப்பட்டார். ஆனால் சு.வேணுகோபால் வந்த பணியை முடிக்காமல் திரும்பக்கூடாது என பவாவுக்கு ஆலோசனைக் கூறினார்.

சு.வேணுகோபால் பவாவின் பேச்சுக்கு இணங்காததால் அவர் தனியாகவே தன் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கினார்.

எங்களை நம்பி வந்த விருந்தினரை கோலாலம்பூரில் வைத்து வதைக்காமல் சரவண தீர்த்தாவுடன் மலாக்காவுக்கு அனுப்பி வைத்தேன். பவா புறப்படும்வரை இறுக்கமாகவே இருந்தார். அதற்கு இரு காரணங்கள். முதலாவது, அவர் உரை குறித்து வல்லினம் குழுவில் ஒருவரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவ்வுரை எங்கள் அளவில் ஏமாற்றமானது. இரண்டாவது, தன் நூலை விற்க மேசை ஒதுக்காதது.

மலாக்காவில் தனது சில நாட்களைக் கழித்த பவாவும் சு. வேணுகோபாலும் மீண்டும் கெடாவுக்குச் சென்றனர். அங்கு கூலிம் நவீன இலக்கியக் களம் மற்றும் வல்லினம் இணைவில் நடைபெற்ற இலக்கிய முகாமில் கலந்துகொண்டனர். இனி அங்கு நடந்தவைகளை அதில் சம்பந்தவர்களின் அனுமதி பெற்று எழுதுகிறேன்.

கூலிமிலும் பவா செல்லதுரை தனது நூல்களை விற்பதிலேயே ஆர்வம் காட்டினார். ரூபாய்க்கு 30-40 காசு விலையில் நூல்களின் விலையை உயர்த்தி 100 ரூபாய் புத்தகத்தை 40 ரிங்கிட் வரை விலை போட்டு விற்றார். அது ஏறக்குறைய 500 ரிங்கிட். நிகழ்ச்சிக்குப் பொறுப்பாளரான திரு.குமாரசாமி அவ்வளவு விலை வைத்தால் வாசகர்கள் வாங்க மாட்டார்கள் என அறிவுறுத்தியும் பவா கேட்கவில்லை. குமாரசாமி ஒரு கல்லூரி விரிவுரையாளர். எனவே தனது மாணவர்களை நூல் விற்பனைக்குப் பொறுப்பாகப் போட்டிருந்தார். நூல்கள் விற்பனை ஆகாததால் விலையைக் குறைத்துக்கொடுக்க பவா சம்மதிக்கவும் ரூபாய்க்கு 15 காசு எனும் விலையில் நூல்கள் விற்கப்பட்டன. அதே மேசையில் சு. வேணுகோபாலின் நூல்களும் விற்பனையாயின. இறுதியில் இருவரின் நூல்களும் விற்கப்பட்ட தொகை முறையாகப் பிரிக்கப்பட்டு ஒரு கடித உரையில் இட்டு வழங்கப்பட்டன.

திடீரென கோபமடைந்த பவா செல்லதுரை தன் அறைக்குத் திரும்பினார். ஒரு மாணவனை ஏவி குமாரசாமியை அழைத்து வரும்படிக் கூறினார். குமாரசாமி அங்குச் சென்றபோது “என்னா மயிரு கணக்கு பண்ணியிருக்கீங்க?” எனக் குமாரசாமியிடம் சத்தமிட்டார் பவா. குமாரசாமி அதை எதிர்ப்பார்க்கவில்லை. அவர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் விரிவுரையாளர். அங்கு நடக்கும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்.  சற்று முன்னர் ஏதோ ஒரு நாடோடி எழுத்தாளன் போல பேசிய பவா செல்லதுரையா அது எனக் குழம்பினார். கணக்கு சரியாகவே உள்ளது என அவர் எவ்வளவு கூறியும் தனக்கு அது போதாது என்றும் சு. வேணுகோபால் பணத்தில் தனக்குச் சேர வேண்டிய ஒரு பகுதி சிக்கியுள்ளதாகவும் பவா சத்தமிட்டார். மேலும் “உங்கள் மாணவர்கள்தான் பணத்தைத் திருடியிருப்பார்கள்,” எனச் சொல்லவும் குமாரசாமிக்குத் தாங்க முடியாமல் போனது.

நேராக சு.வேணுகோபாலிடம் சென்றார். பணத்தில் உள்ள சிக்கலைச் சொல்லவும் சு. வேணுகோபால் தன் பாக்கெட்டில் இருந்த அந்தப் பண உரையை அப்படியே எடுத்து குமாரசாமி கையில் கொடுத்தவர், “இதில் எவ்வளவு வேண்டுமோ தயக்கமில்லாமல் அவ்வளவையும் எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றார். நெகிழ்ந்த குமாரசாமி தனது பணத்தில் நூறு ரிங்கிட்டை சேர்த்து பவாவிடம் கொடுக்கவும்தான் சகஜ நிலைக்குத் திரும்பினார்.

இது தவிர அங்கு நடந்தவைகள் குறித்து பேசுவது இங்கு சரியாகாது. முதல் காரணம் அதில் நான் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. இரண்டாவது அது குறித்து சொல்லும்போது அதற்கு சாட்சியாக இருந்தவர்களின் பெயர்களையும் சொல்ல வேண்டியதாகும். ஆனால் நவீன இலக்கியக் களம் மீண்டும் பவா செல்லதுரையை அழைக்கக் கூடாது எனும் முடிவுக்கு வந்திருந்ததை மட்டும் அறிவேன். அதற்கு அவர் அங்கு நடந்துக்கொண்டதுதான் காரணம்.

நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபிறகு ஒட்டியிருந்த கசப்பு தீரும் முன்னர் பவா செல்லதுரை இன்னொரு அதிர்ச்சிகரமான காரியத்தைச் செய்தார். எங்கள் காமிரா மேனின் கைப்பேசி எண்களை வாங்கிக்கொண்டு தனது உரைகளை மின்னஞ்சல் செய்யும் கேட்டிருக்கிறார். தான் சுவாமியிடம் சொல்லிவிட்டதாகவும். அவர் ஒப்புக்கொண்டார் எனவும் கூற காமிரா மேன் செல்வமும் என்னிடமோ நவீன இலக்கியக் களத்தின் பிற ஒருங்கிணைப்பாளர்களிடமோ கேட்காமல் அனுப்பிவிட்டார். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் பதிவு செய்தக் காணொலி தமிழக இலக்கிய சேனலில் வந்தபோது அதிர்ச்சியடைந்தோம். அந்த வீடியோ பதிவுக்கு நாங்கள் கணிசமான தொகையைச் செலவிட்டிருந்தோம். சுவாமி அன்பானவர். அவர் அமரும் இருக்கையில் யாராவது அமர கேட்டால் கூட கொடுத்துவிடுபவர். அப்படி ஒருவர் பரபரப்பாக இருக்கும்போது எதையோ கேட்டு அதை அனுமதி என பிடுங்கிக்கொண்டதெல்லாம் எங்களைக் கடுமையாகவே பாதித்தது. ஆனால், அந்த இலக்கிய சேனல்மீது நல்ல அபிப்பிராயம் உண்டு என்பதாலும் அவர்கள் வழியாக தமிழகத்தின் சமகால இலக்கியச் சூழலை அறிய முடிவதாலும் அதைப் பெரிது படுத்தவில்லை.

கசப்பை மௌனமாகவே கடந்தோம்.

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர் என் நண்பர்கள் பலரும் பவாவின் காணொலிகளைக் கேட்கவே கசக்கிறது என்றார்கள். ஆனால் நான் அதற்குப் பிறகுதான் அவர் என்ன பேசுகிறார் எனக் கேட்க ஆரம்பித்தேன். இரண்டு நிகழ்ச்சிகளிலும் நூல்களை முறையாக வாசிக்காமல் கலந்துகொள்ளும் ஒருவர் எப்படி சிறுகதைகள் சொல்கிறார் என ஆராய்ந்தபோதுதான் அவர் சொல்லும் கதைகளில் உள்ள குளறுபடிகள் புரிய ஆரம்பித்தன. வாசிக்காமல் செவி வழியாக மட்டுமே கேட்கும் ஒருவர், தான் அடையாத நுட்பங்களை சரிகட்ட நிகழ்த்தும் பாவைகள்தான் பவா செல்லதுரை சொல்லும் கதைகள்.

இப்போது சொல்லுங்கள்,

எப்படி கூல் சுரேஷ் ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் கூச்சலிட்டு அதன் வழி அடையாளம் பெற்று நடிகராக மாறுகிறாரோ அப்படித்தான் பவா சமீபகாலமாக இலக்கியவாதிக்கான அந்தஸ்தை அடைகிறார் என்பது என் அவதானிப்பு. அவர் தொடக்கக்கால இலக்கியச் செயல்பாடுகளை நான் மதிக்கிறேன். ஆனால் இன்று அவர் பணத்துக்கும் புகழுக்கும் பின்னால் ஓடுகிறார் என்பதை என் அனுபவம் வழி சொல்ல எனக்கு உரிமை உண்டு அல்லவா? இதில் சம்பந்தப்பட்ட அத்தனைப் பேரும் வாழும்போதே அவர்களைச் சாட்சியாக்கியே சொல்கிறேன். நான் சொல்வதில் பொய்யோ மிகையோ இருந்தால் அவர்களே சுட்டிக்காட்டட்டும். ஆனால் பவா போன்ற ஒரு பொய்யர் சொல்லும் மாற்றுக்கருத்துக்கெல்லாம் நான் எதிர்வினையாற்றபோவது இல்லை.

முகநூலில் அவர் கேட்ட அத்தனைக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உண்டு. அவரிடமே கூட அதற்கான பதில்கள் இருக்கும். பவாவை நான் விமர்சிப்பதாகக் கூறுபவர்கள், உங்களுக்கு இது நிகழ்ந்தால் அவரை என்னவாக மதிப்பிடுவீர்கள். இலக்கியச் சூழலில் எத்தனையோ பேர் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்க கதையைத் தப்பும் தவறுமாகச் சொல்லும் ஒருவர் இலக்கியவாதியாக அடையாளம் காட்டப்படும்போது அவர் இடம் என்னவென்று சொல்வதில் தவறென்ன இருக்க முடியும்? எல்லாவற்றையும் மீறி உண்மையைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்.

(Visited 14,130 times, 1 visits today)